பாமினி

Bahmani kingdom

முன்கதை: சரித்திரம்… அது வடக்கே சந்திரகுப்தர் முதல் ஹர்ஷர் வரை கதை சொன்ன பின்… தென்னகத்தில் பல்லவர், சேர, சோழ, பாண்டியரின் கதைகளைச் சொல்லி… பிறகு வடக்கே சென்று முகம்மதியர்களின் ஆட்சியைப் பேசியது. இன்னும் பல சாம்ராஜ்யங்கள் வரவிருக்கின்றன. அழியவிருக்கின்றன. அனைத்து கதைகளையும் அனுபவிக்க, நாம் சரித்திரத்தில் சற்று முன்னும் பின்னும் சென்றுதான் வரவேண்டும். இந்தியாவை மொகலாயர்கள் என்ற ஒரு பெரிய புயல் தாக்கப்போகிறது. அதனால், நாட்டின் கலையும், வாழ்வும் மாறப்போகிறது. ஆனால், அதற்கு முன் தென்னிந்தியாவின் முக்கிய நிகழ்வுகள் சொல்லப்படவேண்டும்.

சொல்வோம்…

மாலிக்காபூரின் படையெடுப்புக்குப் பின், தோற்றுப் போன தக்காணத்து மன்னர் குலங்கள் பற்றி ஓரிரு வார்த்தைகள்… தமிழகத்தில் மன்னர்கள் வலியிழந்து, சக்தியற்றுப் போயினர். வலியிழந்த மற்ற மூன்று வம்சங்கள்: தேவகிரியை ஆண்ட யாதவ குலம், வாரங்கலைத் தலைநகராகக் கொண்ட காகதியர் குலம், துவார சமுத்திரத்திலிருந்து ஆண்ட ஹொய்சாள வமிசம். இந்தச் சூழ்நிலையில் இரண்டு புத்தம் புதிய ராஜ்யங்கள் உருவாகின. பாமினி ராஜ்யமும், விஜயநகரப் பேரரசும். பாமினிப் பேரரசைப்பற்றி முதலில் பேசுவோம். அது 1316ல் தோன்றி 1347க்குள் பேரரசாயிற்று. இரண்டு நூற்றாண்டு வாழ்ந்தது.

அலாவுதீன் ஹசன் பாமன்ஷா (1347-1358):

அன்று தக்காணம் டெல்லி சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. முஹம்மது பின் துக்ளக்கின் அடக்குமுறையான ஆட்சிக்கு எதிராக, தக்காணத்தில் கிளர்ச்சிகள் வெடித்தன. இக்கிளர்ச்சிகளின் விளைவாக, ஹாசன் கங்கு (அல்லது அலாவுதீன் ஹசன் பாமன் ஷா) என்பவனால் கி.பி. 1347 இல் பாமினி அரசு தோற்றுவிக்கப்பட்டது. இவன் கதை சுருக்கமாக இதோ:

டெல்லி சுல்தானகத்தின் பிடியிலிருந்து விடுபட்டு, தக்காணத்தில் ஒரு புதிய சாம்ராஜ்யம் உருவான சுவாரசியமான வரலாறு இது! துக்ளக் ஆட்சியில் தளபதியாக இருந்த ஹசன் கங்கு (ஜஃபர் கான்), டெல்லி சுல்தான் படைகளைத் தோற்கடித்து இமாத்-உல்-முல்க்கை (சுல்தானின் ஆளுனர்) கொன்றான். டெல்லி சுல்தானின் முற்றுகையை முறியடித்த கிளர்ச்சியாளர்கள், ஆகஸ்ட் 3, 1347 அன்று இவனை ஒருமனதாகத் தங்கள் அரசனாகத் தேர்ந்தெடுத்தனர். ‘அலாவுதீன் பகமன் ஷா’ என்ற பெயரில் பாமினி வம்சத்தைத் தோற்றுவித்து, குல்பர்காவை (ஹசனாபாத்) தலைநகராக மாற்றி நாணயங்களை வெளியிட்டான். தனது அரசை பலப்படுத்தி, நிர்வாக அமைப்புகளை சீரமைத்தான். வாரங்கல்லின் கிழக்குப் பகுதி மற்றும் ஒரிசா ஆட்சியாளர்களுக்கு எதிராக பாமன்ஷா தன் போராட்டத்தைத் தொடங்கினான். 11 ஆண்டுகள் பாமன்ஷா தன் அரசியல் எதிரிகளை அடக்கி ஆட்சி செய்தான். பல போர்களில் அவன் வெற்றிபெற்றான். இவன் தான் பெற்ற வெற்றிகளை நினைவுகூறும் வகையில் தன் நாணயங்களில் தன்னுடைய பெயரை ‘இரண்டாம் அலெக்சாண்டர்’ என்று பொறித்துக்கொண்டான்.

முஹம்மது ஷா I (1358-1375):

இவனது ஆட்சியில், நிர்வாகம் பலப்படுத்தப்பட்டது. விஜயநகர அரசுடன் நீண்டகாலப் போர்களை அவன் மேற்கொண்டான். அவற்றில் பல ரெய்ச்சூர் ஆற்றிடைப் பகுதியோடு தொடர்புடையதாகும். இருதரப்பிலும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டாலும் யாரும் அப்பகுதியை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. 1363இல் வாரங்கல் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினான். வாரங்கல் போர் நஷ்டஈட்டை வாரி வழங்கியது. கொள்ளையோ கொள்ளை! கோல்கொண்டா கோட்டை அவன் வசமானது. அங்கிருந்த கருவூலங்கள், ரத்தினக்கற்கள் பாமினி அரசின் வசமாயின. அங்கிருந்த ரத்தினச் சிம்மாசனம் பாமினி அரசின் சிம்மாசனமாயிற்று. தலைநகரம் குல்பர்காவிலிருந்து 1429இல் பீடாருக்கு  மாற்றப்பட்டது. 

பெரோஸ் ஷா பாமினி (1397-1422):

கலை மற்றும் இலக்கியத்திற்கு ஆதரவளித்த ஒரு பண்பட்ட ஆட்சியாளன். இவனுடைய ஆட்சியில் கல்வி வளர்ச்சி அடைந்தது.

அஹ்மத் ஷா வாலி (1422-1436):

தலைநகரை குல்பர்காவிலிருந்து பிதாருக்கு மாற்றினான். இவனது ஆட்சியில் மதம் மற்றும் சூஃபிசம் செழித்தன.

முஹம்மது ஷா III (1463-1482):

இவனது சிறந்த அமைச்சராக விளங்கிய முகமது கவான் சிறந்த அரசியல் இராஜதந்திரி. பாமினி அரசின் பொற்காலமாக இவர்களின் ஆட்சி கருதப்பட்டது. முகமது கவான் ஒரு சிறந்த பிரதம மந்திரியாகவும், படைத்தளபதியாகவும், நிர்வாகியாகவும் திகழ்ந்தான். இவன் பாமினி அரசை அதன் உச்சநிலைக்கு கொண்டு சென்றான். கவானின் வளர்ச்சியால் பொறாமை கொண்ட மற்றப் பிரபுக்கள், கவான் சுல்தானுக்கு எதிராக சதி செய்கிறான் என்னும் போலிக் கடிதத்தை தயாரித்து சுல்தானின் கைகளில் கிடைக்குமாறு செய்தனர். ஏற்கனவே கவான் தன் மீது ஆதிக்கம் செலுத்துவதாக எண்ணிக்கொண்டிருந்த சுல்தான் அவன்மீது அதிருப்தி கொண்டான். சுல்தானுடன் இருந்த விரிசலைச் சரி செய்ய கவான் அவனிடம் மன்னிப்பு கோரினான். ஆனால், சுல்தான் மன்னிக்கத் தயாராக இல்லை. அரசனுக்கெதிராகச் செயல்பட்டதாக கவான் கொல்லப்பட்டான். அவன் இறந்த பிறகு உண்மை தெரிந்த சுல்தான் சோகமடைந்தான். சுல்தான் மூன்றாம் முகம்மதுவின் ஆட்சியின் வீழ்ச்சிக்கு கவானின் மறைவு காரணமாயிற்று.

கி.பி. 1527: பாமினி அரசின் வீழ்ச்சி:

மூன்றாம் முகம்மது இறந்தபின், பாமினி அரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. அதன்பின் அவரது வம்சத்தைச் சார்ந்த 5 மன்னர்கள் ஆட்சி செய்தனர். பாமினி அரசு சிதைந்து, ஐந்து தக்காண சுல்தானகங்கள் உருவாயின: பிஜப்பூர் சுல்தானகம் (ஆதில் ஷாஹி); கோல்கொண்டா சுல்தானகம் (குதுப் ஷாஹி); அஹ்மத்நகர் சுல்தானகம் (நிஜாம் ஷாஹி); பீடார் சுல்தானகம் (பரித் ஷாஹி); பெரார் சுல்தானகம் (இமாத் ஷாஹி). இதில், முதலில் நான்கு சுதந்திர அரசுகளானது (பீஜப்பூர், அகமது நகர், பெரார், கோல்கொண்டா). அதன்பின் ஐந்தாவதாக பீடார் உருவாக்கப்பட்டது. பிற்காலத்தில் பீஜப்பூர் சுல்தானகம் வலிமையான அரசானது. பீடார், பெரார் போன்றவை அதில் இணைக்கப்பட்டன. அதே நேரத்தில் அகமது நகர், கோல்கொண்டா போன்றவை சுதந்திர அரசுகளாயின. ஆனால் பொது எதிரியான விஜயநகர அரசை எதிர்க்கும் வகையில் ஐந்து தக்காண சுல்தானகங்களும் இணைந்து 1565இல் தலைக்கோட்டைப் போரில் (ராக்சஷி தங்கடி போர்) விஜயநகர அரசைத் தோற்கடித்தன. ஆனால் தலைக்கோட்டைப் போருக்குப் பின் விரைவில், தக்காண சுல்தானியங்கள், முகலாய அரசுடன் இணைக்கப்பட்டன.

இப்படியாக பாமினி ஆட்சி செய்கையில், மற்றொரு சாம்ராஜ்யம் அருகிலேயே உருவாகியது. அது விஜயநகரப் பேரரசு. அதைப்பற்றி சரித்திரம் விரைவில் பேசும்.