திரைக்கவிதை -அதிசய ராகம்

பாடல்: அதிசய ராகம் ஆனந்த ராகம்
திரைப்படம்: அபூர்வ ராகங்கள்
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1975

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம் – அந்த
மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திரலோகத்து சக்கரவாகம்

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

பின்னிய கூந்தல் கருநிற நாகம்
பெண்மையில் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் – அந்த
தேவதை கிடைத்தால் அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறு புறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

 

இன்னும் சில படைப்பாளிகள் – புதிய தொடர் – எஸ் கே என்

 

இரண்டு வருடங்கள் இடைவெளிக்குப் பின்னர் இன்னும் சில படைப்பாளிகள் பற்றி எழுதத் தொடங்குகிறேன். இதுவரை எழுதப்பட்ட படைப்பாளிகள் புத்தகமாக வெளிவந்தபிறகு நண்பர்கள் சில கேள்விகள் கேட்டார்கள். புதுமைப்பித்தன் போன்ற சில முக்கியமான எழுத்தாளர்கள் அதில் இல்லையே…  பெண் எழுத்தாளர்கள் குறைவாக இருக்கிறதே … தவிர, அந்த அந்த எழுத்தாளர்களின் ஆகச் சிறந்த கதையாக தேர்ந்தெடுக்கப்பட்டனவா என்றெல்லாம்  கேட்டார்கள்.

யார் யார் கதைளைப்பற்றி எழுதவேண்டும் என்றோ, யாருக்குப் பிறகு யார் என்கிற வரிசை குறித்தோ முன்கூட்டிய  தீர்மானம்  எதுவும் இன்றி எழுதப்பட்டவை. அவ்வப்போது படித்து வந்த கதைகள் அல்லது எப்போதோ படித்து நினைவில் இருந்த கதைகள் என ஒரு கதம்பமாய் எழுதப்பட்டவை. ரசனை சார்ந்த கட்டுரைகள் என்பதைத் தவிர எந்தத் தர, தள அளவுகோலும் பயன்படுத்தவில்லை. அவ்வாறு ஒரு அளவுகோல் தயாரிக்கும் நோக்கமோ, அதிகாரமோ, திறமையோ, எண்ணமோ  எதுவும் இல்லை. இந்தப் புரிதலில் இன்னும் சில படைப்பாளிகள் என இந்த ‘கலந்து கட்டி’ தொடர் ஆரம்பிக்கிறேன்.

க நா சு

க.நா.சு என்று அறியப்படும் க.நா.சுப்ரமணியன் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். பலர் இவரை விமரிசகராகவே அறிவார்கள். இவர் எழுதிக் குவித்த படைப்புகள் ஏராளம். எழுதியவற்றைப் போல பலமடங்கு படித்தவர். விமர்சனக் கலை, உலக இலக்கியம், இந்திய இலக்கியம் ஆகியவற்றைப்பற்றிய புத்தகங்கள் குறிப்படத்தக்கன. புதினம், குறுநாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்ற பறந்து பட்ட எழுத்தாற்றல் கொண்டவர். ஒரு புத்தகத்தை முழுவதும் படித்து மூடி வைத்துவிட்டு மொழிபெயர்ப்பை செய்துவிடக்கூடிய ஆற்றல் உள்ளவர் என்று சொல்வர்கள்.

நீண்ட நாவல்கள் எழுதுவது தேவையில்லை என்ற கருத்து கொண்டவர். இருநூறு பக்கங்களில் சொல்ல முடியாத கதையினை  ஆயிரம் பக்கங்களிலும் சொல்லமுடியாது என்கிறார். சிறுகதை என்பது அளவைப் பொறுத்ததல்ல. சொல்ல விரும்பிய ஒரே  ஒரு விஷயத்தை நயம்பட சொல்வதே சிறுகதையாகும் என்கிற கருத்து கொண்டவர். மொழிபெயர்ப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 

இவரது ‘தர்மம்’ என்கிற   சின்னஞ்சிறு சிறுகதை. 

“இது என்னையா இது? தர்மம் ஆறணா என்று ஒரு கணக்கு எழுதி வைத்திருக்கிறீரே? எத்தனை நாளாய்ப் புண்ணியம் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறீர்?” என்று கேட்டேன் நான்-

என்று தொடங்குகிறது.

இவரது பல சிறுகதைகள் குறுநாவல்கள் போல கதைசொல்லியாக எழுத்தாளர் கதாபாத்திரமாகவே வருகிறார்.

இவரது நண்பரான புத்தக விற்பனையாளர் காசு விஷயத்தில் மிகவும் கெட்டி. விற்பனையிலும் கொடுக்கவேண்டிய கமிஷனிலும் கரார். கோவில் குளம் என்றோ ஏழைகளிடம் பரிதாபத்தாலோ தர்மம் செய்ய விரும்பாதவர். அவர் கணக்கில் தர்மம் என்று எழுதிவைத்திருந்தது அவர் நண்பர் கதைசொல்லிக்கு வேடிக்கையாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கிறது.

புத்தக விற்பனையாளர் பதிலளிக்குமுன் சில பள்ளி ஆசிரியர்கள் வருகிறார்கள். அவர்கள் விற்ற புத்தகங்களுக்கு கொடுக்கவேண்டிய ‘கமிஷன்’ பைசா பைசாவாக பேரம் செய்யப்படுகிறது. இதில் வேறு கமிஷனா என்று நண்பர் ஆச்சரியப்பட, அப்படித்தான் என்று சலித்துக்கொள்கிறார் விற்பனையாளர்.

பேச்சு மீண்டும் ‘ஆறணா தர்மம்’ குறித்து திரும்புகிறது. விற்கவேண்டிய புத்தகங்களைப் பள்ளியில் ஆசிரியர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் திரும்பும்போது வெளியில் ஒரு மாணவி தூணில் சாய்ந்துகொண்டு பரிதாபகரமாக அழுதுகொண்டு இருந்திருக்கிறாள். விற்பனையாளர் விசாரிக்கிறார்.

அவள் விசித்துக்கொன்டே ‘அப்பாரு வூட்லே இல்லே! பொஸ்தகம் வாங்க ஆயா காசு தராது. பொஸ்தகம் எல்லாம் வித்தப் போயிடும் அப்பாரு வரதுக்குள்ளே.. ம்.. ம்!’ என்று சொல்லிற்று.

புத்தகம் அப்படி விற்றுப் போகாது. அப்படியே விற்றுப் போய்விட்டாலும் தான் வைத்திருந்து தருவதாக கூறுகிறார் விற்பனையாளர். குழந்தை அழுவதை நிறுத்தவில்லை. புஸ்தகத்தை வாங்கிப் படிக்குமோ படிக்காதோ இப்போதே புதுப் புஸ்தகம் வாங்க ஆசைப்படுகிறாள் என்று தெரிகிறது.  

“..இந்தப் பச்சைக் குழந்தைகளின் ஆர்வத்தைக் கொண்டுதானே நான் காசு பண்ண வேண்டியிருந்ததென்று எனக்கே வெட்கமாயிருந்தது..” என்கிறார் அவர்.

உபாத்தியாயரிடமிருந்து அவளுக்கு வேண்டிய புத்தகங்களை வாங்கித் தருவதில் ஒரு சங்கடம். அந்த ஆசிரியரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். எவ்வளவு காசு வேண்டும் என்று கேட்டு ஆறணா கொடுத்துவிட்டு வந்துவிடுகிறார் அந்த விற்பனையாளர்.  

இதை அவர் தமக்கு இயற்கையான குரலில் சொல்லவில்லை. அப்படி செய்துவிட்டு வந்தது பற்றி அவருக்கே வெட்கமாயிருந்தது போல கதைசொல்லிக்குத் தோன்றுகிறது.  

அப்போது ஒரு சிறுமி உள்ளே வருகிறாள். விற்பனையாளரிடம் ஆறணா கொடுத்துவிட்டு, “அப்பாரு வந்த வொடனே வாங்கிட்டு வந்துட்டேன். பாக்கி பொஸ்தகம் நாளைக்கு வாங்கிக்கலாம்னுது அப்பா” என்கிறாள்.

ஆறணா பெரிதல்ல அந்தப் பெண்ணின் குதூகலம் உண்மையிலேயே பெரிசுதான் என்று எனக்குத் தோன்றியதால் நான் என் நண்பரை அப்போது மேலும் கேலி செய்ய ஆரம்பிக்கவில்லை.

என்று முடிக்கறார் கநாசு.

ஒரு சிறு சம்பவம் பணத்தில் கெட்டியானாலும் மனிதாபிமானம் மிக்க அந்த விற்பனையாளர், ஒரு குழந்தை உள்ளம் என்று ஒரு அழகிய கதையினை படைக்கிறார் கநாசு.

இவரது படைப்புகள் அரசுடமை ஆக்கப்பட்டு விட்டதால் பெரும்பாலான பதிப்பகங்கள் இவரது நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரை தொகுப்புகள் என  வெளியிட்டுள்ளன.  

மேலே சொன்ன தர்மம் கதையும் இன்னும் சில சிறுகதைகளும் கீழ்கண்ட இணைப்பில்

க நா சு சிறுகதைகள்

 

 

“அழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Image result for சிறுகதை

சம்யுக்தா பரபரப்புடன் தொலைப்பேசியில் என்னைக் கூப்பிட்டு  அவசரமாக தன் மகள் புனிதாவை அழைத்து வர அனுமதி கேட்டாள். அவள் வீட்டிற்குப் பக்கத்தில் என்னைப் பார்த்த ஒருவர் பரிந்துரை செய்ததாகத் தெரிவித்தாள். முக்கியமாக மருந்து இல்லாத சிகிச்சை என்பதைக் கேள்விப் பட்டதாகக் கூறினாள். எங்கள் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் துறையில் இவ்வாறே செயல் படுவோம் என விளக்கம் அளித்து, என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

சம்யுக்தாவின் குடும்பம், ஓய்வு பெற்றிருந்த மாமியார், மாமனார் ரத்தினம், வங்கியில் வேலை செய்யும் கணவன் மகாலிங்கம், ஆர்க்கிடெக்சர் பனியில் ஒரே மகள் புனிதா. இவள் இல்லத்தரசி. வீட்டின் சகலமும் பார்த்துக் கொள்பவள். அதனால்தான் மகள் உங்களைப் பார்க்க நானே நேரம் குறிக்கிறேன் என்று விளக்கினாள். இன்றைய காலகட்டத்தில் இது அதிசயம் அல்ல, தாயாரோ தந்தையோ தன் வேலைக்குப் போகும் பிள்ளைகளுக்கு ஆயிரம் பொறுப்புக்கு மத்தியில் இதற்கெல்லாம் நேரம் இருக்காது என்று அப்பாயின்ட்மென்ட் கேட்பது. பிள்ளைகளுக்கு எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்து கொடுப்பதில் இந்தத் தூது வேலை செய்வதும் அடங்கும்.

எதற்காகப் புனிதா என்னைப் பார்க்க வர வேண்டும் என்பதற்கும் சம்யுக்தா விவரமாக எடுத்துச் சொன்னாள். புனிதா பிறந்ததும் அவள் மாமனார் ரத்தினம், தெளிவாக சம்யுக்தாவிடம் சொன்னது, “எக்காரணத்திற்கும் பிறந்த மகாலட்சுமியைக் கண்களில் துளிகூட கண்ணீர் வரக்கூடாது. அதுக்கு நீ மட்டுமே பொறுப்பு” என்றார். இதைச் சாத்தியம் ஆக்க சம்யுக்தா தான் என்னென்னவோ செய்தேன், செய்கிறேன்  என்றாள்.

எனக்குப் புரிய வைக்க சில நிகழ்வுகளை விவரித்தாள். புனிதா நர்ஸரி படித்தவரை ரத்தினமும், மாமியாரும் குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு தான் போக வேண்டும் என்றே வற்புறுத்தினார்கள். சம்யுக்தா அலட்டிக்கொள்ளாமல் அந்த பதினைந்து  நிமிடத்திற்குப் புனிதா இடுப்பில், கையில் அவள் பை என்று கூட்டிக் கொண்டு போவாள். புனிதா மேல் வகுப்புகள் போன பிறகு, பள்ளியிலிருந்து பல முறை வீட்டிற்கு புனிதாவை அழைத்து வரச் சொல்வார்கள், அவளுக்குத் தன் நண்பர்களுடன் வரப் பிடிக்கவில்லை என்பதால்! வீட்டில் என்ன செய்து கொண்டு இருந்தாலும் அதை அப்படியே விட்டு விட்டுப் போக வீட்டின் பெரியவர்கள் வலியுறுத்திச் சொல்லி, இருபது நிமிடத்தில் திரும்பி வரச் சொல்வார்கள். பள்ளிக்கூடம் போகவே பதினைந்து நிமிடமாகும்.

புனிதாவுடன் அவள் வகுப்பு தோழி சண்டை போட்டு விட்டால் ரத்தினம் உடனே போய்விடுவார். அவர், எக்காரணத்தினால் ஆயிற்று என்பதைக் கேட்க மாட்டார், கடினமாக மற்றவர்களைக் கண்டித்து வருவார். வகுப்பு தோழிகள் அவளிடம் தயங்கி, ஜாக்கிரதையாகப் பழகினார்கள்.

புதிதாகச் சேர்ந்த ரமாவுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தாள். ஒரு நாள் புனிதா அவளைக் கிள்ளி, பிறாண்டி விட்டு, அவள் அலற,  பிறகு அழுது மன்னிப்பு கேட்டாள். மிக வெட்கம் ஆகியது. இதற்குப் பிறகு தோழி இருந்தாலும் அதில் தோழமை இல்லை.

ரத்தினம் சொன்னதைக் கடைப்பிடிக்க, புனிதாவின் எல்லா தேவைகளையும் அம்மாவே செய்து கொடுத்து வந்ததால் காலேஜ் சேர்ந்ததும் புனிதா தடுமாறினாள். ரெக்கார்ட் புத்தகத்தை அம்மாவையே எழுத வைத்தாள். எழுதியதை நக்கல் செய்வாள். தாத்தா பாட்டி கணவரும் புனிதாவுடன் சேர்ந்து நகைப்பார்கள்.

வேலைக்குச் சேர்ந்ததும் டீமுடன் ஒத்துப்போக முடியாமல் தவித்தாள். புனிதாவின் வற்புறுத்தலால் சம்யுக்தா அதைச் சரிசெய்ய அவளுடன் வேலை செய்பவர்களுடன் பேசிப் பார்த்தாள். அவர்கள் இதை விசித்திரமாகப் பார்த்தார்கள். நண்பர்கள் வளர்த்துக் கொள்ளக் கஷ்டப் பட்டாள்.

இப்போது புனிதாவிற்கு வயது இருபத்தி ஆறு, அம்மாதான் நேரம் குறிக்க அழைத்தாள். அடுத்த நாள் வரச் சொன்னேன். வந்தாள்.

சம்யுக்தா வந்தாள். புனிதா வர நேரமாகும் என்றாள். அரை மணிநேரம் காத்திருந்தும் வரவில்லை என்பதால் சம்யுக்தாவிடம் விவரங்களைச் சேகரித்தேன். சம்யுக்தா பொறியியல் படித்த பட்டதாரி. புனிதா பிறப்பதற்கு முன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள். வேலைக்குப் போவதற்கு முன் சமையல் செய்து, மேஜையில் வைப்பாள். மாமியார் தனக்கும், ரத்தினத்திற்கும் பரிமாறி விடுவாள், மற்ற வேலைக்குச் சுமதி என்றவள் வருவாள். குழந்தை பிறந்த பின் வீட்டினர் சொன்னதால் சம்யுக்தா வேலையை ராஜினாமா செய்தாள்.

சொன்னதைச் செய்வது சம்யுக்தாவுடைய பழக்கம். எல்லோரையும் அனுசரித்துச் செல்பவள். பல வருடங்களாக அவள் புனிதாவை கண்டிக்க முயன்றதுண்டு, ஆனால் “இல்லை” என்று சொன்னால் வீட்டில் எல்லோரும் அவளைத் திட்டுவதால் புனிதாவை ஒன்றும் சொல்லவோ சரி செய்யவோ முடியவில்லை. வருத்தப் பட்டாள், வேதனை தந்தது என்றாள்.

ஸெஷன் முடியும் வரை புனிதா வரவில்லை. அடுத்த முறை புனிதா வருவதற்கு நாள் குறித்து விட்டு சம்யுக்தா சென்றாள். இரண்டாவது முறையும் சம்யுக்தா வந்துவிட்டாள், புனிதா கொஞ்சம் தாமதமாக வருவாள் என்றாள். வரவில்லை.

இதைப் பற்றி சம்யுக்தாவை விளக்கச் சொன்னேன். இதிலிருந்து அவர்களைப் புரிந்து கொள்ளவும் முயன்றேன். புனிதா ஏன் வரவில்லை என்பதை எடுத்துக் கொண்டோம். என்னை ஆலோசிக்க வேண்டும் எனக் கேட்டது புனிதா தான். வரவேண்டிய அன்று காலை சம்யுக்தா அவளை அலுவலகத்திலிருந்து நேராக வரப் பரிந்துரை செய்தாள். புனிதா திரும்பத் திரும்ப அம்மாவை அலுவலகம் வந்து தன்னை அழைத்துச் செல்லச் சொன்னாள். சம்யுக்தா நேராக வந்து விட்டாள் என்று தெரிந்ததும் புனிதாவிற்கு கோபம், வர மறுத்து விட்டாள். வீடு திரும்பிய பின்னர் சம்யுக்தா இதை அறிந்தாள்.

இரண்டாம் முறையும் புனிதா வராதபடி நேர்ந்தது. புனிதா தன் அம்மாவைப் பழி வாங்குவதாக எண்ணி வராமல் இருந்தாள். சம்யுக்தா தன் அணுகுமுறையை மாற்றி  செயல் படும் நேரம் வந்துவிட்டது என்று எனக்குத் தோன்றியதால், அவளுடன் ஆரம்பித்தேன். சம்யுக்தாவின் ஒழுக்கமும் அடக்கமும் மாற்றல் கொண்டு வருவதற்கு உதவின.

சம்யுக்தா, மூன்றே ஸெஷனில் இதைப் புரிந்து கொண்டாள். பார்த்துப் பார்த்துச் செய்வதால் புனிதாவிற்கு உணர்வுகளை வெளிப்படுத்துவது, சமூகத் திறன், கட்டுப்பாடு என்று பல திறன்கள் ஊனமாக இருந்தன. இவற்றை வளர்க்கச் சந்தர்ப்பம் தராததால் எப்படி அணுக வேண்டும் என்பது தெரியாத தவிப்பின் விளைவுகள், கிள்ளுவது, ஆக்ரோஷப் படுவது, இஷ்டப் படி நடப்பது.

சம்யுக்தாவை புனிதா தன் வாழ்க்கையில் எந்தெந்த சந்தர்ப்பங்களைச் சந்தித்தாள், அதை யார் அவளுக்காகக் கையாண்டார்கள், அதைப் புனிதா தானே செய்திருக்க முடிந்து இருக்குமா என்பதைக் குறித்து வரப் பரிந்துரைத்தேன். நீண்ட பட்டியலும் விளக்கமும் வந்தன. சிலவற்றை எடுத்துக் கொண்டு, அதை எவ்வாறு சம்யுக்தா தன் மகளிடம் அதைச் செய்ய வைத்திருக்கலாம் என்பதையும், எப்படி வீட்டில் உள்ள பெரியவர்களின் ஒத்துழைப்பு சேர்த்துக் கொண்டு இருக்க முடியும் என்பதையும் பல கோணங்களில் ஆலோசித்தோம்.

தான் இதை மேலும் புரிந்து கொள்ள இன்னொரு செஷன் வேண்டும் என்று நேரம் குறித்துக் கொண்டு மறுபடி வந்தாள். இந்த இடைவேளையில் சம்யுக்தாவை ஓரிரு முறை புனிதாவிடம் மாறி செயல்பட முயலச் சொன்னேன். மற்றவர்களின் எதிர்வினைகள் என்னவென்று குறித்து வரச்சொன்னேன். சம்யுக்தாவிடம் சொன்னால் செய்வாள், செய்தாள்.

இந்த நான்கு வாரக் காலகட்டத்தில் சம்யுக்தா திரும்ப புது மனோதிடம் பெற்றது போல் இருந்தது என்றாள். இந்நாள் வரை தன்னால் முடியும், பெரியவர்களிடம் விளக்கிச் சொல்ல முடியும் என்று பார்க்காமல், எதைச் சொன்னாலும் தலையை ஆட்டிக் கொண்டு இருந்தேன் என்று தன் நிலைமையை வர்ணித்தாள். மேற்கொண்டு எப்படி நன்றாக அணுக முடியும் என்பதைப் பற்றி உரையாடினோம்.

சொல் பேச்சைக் கேட்பது அவசியம். அவரவர் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு, தன் மகளிடம் இது இல்லை என்பதை உணர்ந்தாள்.

இத்துடன் இன்னொன்றையும் புரிந்து கொண்டாள், அவள் மாமனார் சொன்னது “அழ வைக்கக் கூடாது” என்று. இதைக் கொஞ்சம் மாற்றிப் போட்டுப் பார்க்கத் துணிந்தால். அவர் சொன்னது குழந்தை வாழும் சூழலை இதமாக வைக்க வேண்டுமென்று. அதைச் செய்தேனா? இன்னும் இரண்டு ஸெஷன்களுக்கு உரையாடினோம். சம்யுக்தா தன்னை சுதாரித்து வந்தாள். இவளுடைய மாற்றத்தைப் பார்த்து, ரத்தினம் வந்து என்னைச் சந்தித்து, விவரங்களைப் பகிர, அவரும் புரிந்து கொண்டார்.

அவர்தான் புனிதாவை என்னை ஆலோசிக்கச் சொன்னாராம். அவருக்கு அப்பொழுது தான் அவள் நேரம் குறித்து விட்டு பின்பு வராதது தெரிந்தது. புனிதாவை கண்டித்தார். புனிதாவிற்கு தூக்கி வாரிப் போட்டது.

அம்மாவுடன் அடுத்த நாள் வந்துவிட்டாள். தான் வராதது சம்யுக்தாவினால் தான் என்றாள். தன்னை கூட்டிக் கொண்டு வராததால் இப்படி ஆனது என்று விளக்கினாள். இதைச் சொல்கையில், பக்கத்தில் உட்கார்ந்திருந்த அம்மாவைப் பல்லைக் கருகருக கடித்துப் பார்த்து, முழங்கையால் இடித்துச் சொன்னாள். சம்யுக்தா வலி என்றோ, செய்யாதே என்றோ சொல்லவில்லை.

புனிதா தனக்கு ஆபீஸில் எதுவும் பிடிக்கவில்லை என்றாள். டீம் ஹெட் அவள் மற்றவர்களுடன் கலந்து பேசாமல் வேலை செய்வதைக் கண்டித்ததாகச் சொன்னாள். இந்த வேலையை விட்டு விட்டு, பாட்டுக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றாள். இதற்கு காரணமே திறன்களின் குறைபாடு. தைரியம் ஊசலாடியது.

எதை முயன்றாலும் கடினமாகத் தோன்றியது. தான் அழகாக இல்லை என்று கருதினாள். இந்த இரண்டையும் எடுத்துக் கொண்டோம். அவள் முயற்சிக்கும் விதங்களைப் பட்டியலிட்டோம். கூடவே ஒன்றைச் செய்யத் தெரியவில்லை என்றால் அதன் அணுகுமுறைகளை எண்ண ஆரம்பித்தோம்.  இதிலிருந்து அவள் எவ்வளவு, ஏன் தட்டுத் தடுமாறுகிறாள் என்பதைப் பார்க்க, புனிதாவிற்கு தன் அம்மாவை எல்லாம் செய்ய வைத்தது, உதவி கேட்காதது தெளிவாகத் தெரிந்தது.

இதுவரை புனிதாவைப் பொறுத்தவரை உதவி கேட்பதைத் கேவலமாகக் கருதினாள். சிறுவயதிலிருந்தே தாத்தா அல்லது சம்யுக்தா தேவைகளை முன்கூட்டியே தெரிந்து பூர்த்தி செய்ததால் உதவி கேட்கும் சூழ்நிலை எழவில்லை.

படிப்பில் சுட்டி. அம்மா ஏதாவது செய்யாவிட்டால் பரீட்சையில் மார்க் வராமல் செய்து கொள்வாள்- தன்னைத் தானே புண்படுத்திக் கொள்ளும் விதம். கர்வம் இருந்தது, “எனக்குப் புரியவில்லை” என்று ஏற்றுக்கொள்ள மறுத்தாள். இப்போதுதான், இப்படித்தான் கேட்க வேண்டும் என்பது தெரியாமல் போனது. வேலையிலும் இதே நடந்தது. பலருடன் கலந்து செய்ய முடியாமல் தவித்தாள்.

கலந்து ஆலோசனை செய்ததில் புனிதா புரிந்து கொண்டாள், கேட்பதற்கு, முயல்வதற்கு  முன்னாலேயே கைமேல் கிடைத்த பலனால் லோ ஃரஸ்ட்ரேஷன் டாலரன்ஸ் (low frustration tolerance) தனக்கு வந்துள்ளது என்று. பொறுக்க, காக்க, இரண்டையும் கற்றுக் கொள்ளவில்லை. கோபம், ஆத்திரமடைந்த நேரங்களை ஏன்-என்ன என்று குறித்து வரச்சொன்னேன்.

இதைப் புரிந்ததும் அவளுடைய பொறாமை உணர்வைப் பற்றிப் பேசத் தொடங்கினாள். பள்ளி வயதில் தன் சினேகிதியைத் துன்புறுத்தியதும் பொறாமையில். அவள் வகுப்பில் சேர்ந்த புது மாணவியுடன் சிரித்துப் பேசிய போது, புனிதா அவள் தன்னை விட்டு விலகிவிடுவாள் என்று அஞ்சி, அடித்து விட்டாள். பொறாமையினால் பத்தாவது வகுப்பு தோழியுடனும், இப்போது அம்மாவுடனும் மனஸ்தாபம் ஏற்பட்டதை விவரித்தாள்.

பல உதாரணங்களை அலசி ஆராய்ந்து பார்க்க, ஒப்பிடுவதாலும் அத்துடன் ஒட்டிய எதிர்பார்ப்பினாலும் இப்படி நேர்ந்தது. சம்பவங்கள், விளைவுகளைப் பற்றிப் பேசினோம்.

புனிதா அவள் வீட்டின் ஒரே குழந்தை. தாத்தா பாட்டி, என்று எல்லோருடைய வாழ்க்கையும் இவளைச் சுற்றி இருந்தது. வீட்டின் மையமாக இருந்தாள். வீட்டில் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு தரவேண்டும் எனத் தெரியாத அளவிற்கு அவளுக்குச் சலுகை கொடுத்திருந்தார்கள்.

இங்கு இருமுறை வராமல் தட்டச் செய்ததை ஒப்பிடுகையில் புரிந்து கொண்டாள். வராமல், அம்மாவை வஞ்சகம் தீர்த்துக் கொண்டது, என்னைக் காக்க வைத்தது, சமூக திறன் குறைபாடும் நாகரிகம் இல்லாததையும் காட்டுகிறது என்று புரியப் பல ஸெஷன்கள் ஆயின.

புனிதாவின் சமூக-உணர்வு திறன்கள் குறைபாட்டை ஆழ்ந்து ஆராய, தான் ஒற்றைக் குழந்தை என்பதால் பல சலுகைகள் கிடைத்தது.  அம்மாவை இன்றும் ஏன் இந்த அளவிற்குக் காயப்படுத்தினாள் என்பதையும் ஆராய்ந்தோம்.

 

சமீப காலமாக சம்யுக்தா பேச்சு, நடந்தது கொள்ளும் விதத்தினால் அவர்களுக்கு மரியாதை தரத் தோன்றுகிறது என்றாள். அதுமட்டுமின்றி சம்யுக்தாவைக் கிள்ள மனம் விடவில்லை என்றாள். தன் உணர்வை அடையாளம் கண்டு கொள்ள, அவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றம் ஏற்பட்டன. இப்படி மேலும் பல விதமாக மாற்றி அமைத்துக் கொள்ள மேலும் உறுதியானாள்.

 

 

 

 

 

 

குவிகம் பொக்கிஷம் – சோற்றுக்கணக்கு -ஜெயமோகன்

Image result for கெத்தேல் சாகிப்Image result for கெத்தேல் சாகிப்

கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக்காலத்தில் அவரது சாப்பாட்டுக்கடை இருந்தது. அறுபது எழுபதுகளில் அங்கே சாப்பிடாதவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்தால் அவர்கள் சைவச் சாப்பாட்டுக்காரர்களாக இருப்பார்கள்.

எழுபத்திஎட்டில் கெத்தேல் சாகிப் சாவது வரை கடை நடந்தது. இப்போதும் மகன் பல இடங்களில் கடையை நடத்துகிறார். அதே இடத்தில் அவரது உறவினர்கள் கடை நடத்துகிறார்கள். இப்போதும் அங்கே மீன்கறிக்கும் கோழிக்குழம்புக்கும் அதே சுவைதான். இப்போது முபாரக் ஓட்டல் என்று பெயர். இன்றும் கூட்டம்கூட்டமாக வந்து காத்துக்கிடந்து சாப்பிடுகிறார்கள். முபாரக் ஓட்டலில் சாப்பிட்டால்தான் திருவனந்தபுரம் வந்ததாகவே ஆகும் என நம்பும் அசைவப்பிரியர்கள் கேரளம் முழுக்க உண்டு. ஆனால் கெத்தேல் சாகிப் சோற்றுக்கடை வேறு ஒரு விஷயம், சொன்னால்தான் புரியும்.

இன்றுகூட முபாரக் ஓட்டல் ஒரு சந்துக்குள் தகரக்கூரை போட்ட கொட்டகையாகவே இருக்கிறது. அன்றெல்லாம் அது ஓலை வேய்ந்த பதினைந்தடிக்கு எட்டடி கொட்டகை. மூங்கிலை கட்டி செய்த பெஞ்சு. மூங்கிலால் ஆன மேஜை. கொட்டகை நான்குபக்கமும் திறந்து கிடக்கும். வெயில்காலத்துக்கு சிலுசிலுவென காற்றோட்டமாக இருந்தாலும் மழையில் நன்றாகவே சாரலடிக்கும். கேரளத்தில் மழைக்காலம்தானே அதிகம். இருந்தாலும் கெத்தேல் சாகிபின் ஓட்டலில் எந்நேரமும் கூட்டமிருக்கும்.

எந்நேரம் என்றா சொன்னேன்? அவர் எங்கே எந்நேரமும் கடை திறந்து வைத்திருக்கிறார்? மதியம் பன்னிரண்டு மணிக்கு திறப்பார். மூன்றுமணிக்கெல்லாம் மூடிவிடுவார். அதன்ப்பின்பு சாயங்காலம் ஏழுமணிக்கு திறந்து ராத்திரி பத்து மணிக்கு மூடிவிடுவார். காலை பதினோரு மணிக்கே கடையின் முன்னால் ஒட்டுத்திண்ணையிலும் எதிர்ப்பக்கம் ரஹ்மத்விலாஸ் என்ற தையல்கடையிலும் கரு.பழ.அருணாச்சலம் செட்டியார் அண்ட் சன்ஸ் மொத்தப்பலசரக்கு வணிகம் கடையின் குடோனின் வாசலிலும் ஆட்கள் காத்து நிற்பார்கள். பாதிப்பேர் மாத்ருபூமியோ கேரளகௌமுதியோ வாங்கிவந்து வாசிப்பார்கள். கெ.பாலகிருஷ்ணனின் சூடான அரசியல் கட்டுரைகளைப்பற்றி விவாதம் நடக்கும். சமயங்களும் வாக்கேற்றமும் உண்டு.

எல்லாம் சாகிப் கடையை திறப்பதற்கு அறிகுறியாக வாசலில் தொங்கவிடப்பட்டிருக்கும் சாக்குப்படுதாவை மேலே தூக்கி சுருட்டி வைப்பதுவரைதான். கூட்டம் கூட்டமாக உள்ளே போய் உட்கார்ந்துவிடுவார்கள். கெத்தேல் சாகிப் ராட்சதன் போல இருப்பார். ஏழடி உயரம். தூண்தூணாக கைகால்கள். அம்மைத்தழும்பு நிறைந்த பெரிய முகம். ஒரு கண் அம்மைபோட்டு கலங்கி சோழி போல இருக்கும். இன்னொரு கண் சிறிதாக சிவப்பாகத் தீக்கங்கு போல. தலையில் வெள்ளை வலைத்தொப்பி. மீசையில்லாத வட்டத்தாடிக்கு மருதாணி போட்டு சிவப்பாக்கியிருப்பார். இடுப்பில் கட்டம்போட்ட லுங்கி அதன்மேல் பட்டையான பச்சைபெல்ட். மலையாளியானாலும் கெத்தேல் சாகிப்புக்கு மலையாளம் பேசவராது. அரபிமலையாளம்தான். அவரது குரலையே அதிகம் கேட்க முடியாது. கேட்டாலும் ஓரிரு சொற்றொடர்கள் மட்டுமே. ‘பரீன்’ என்று அவர் கனத்த குரலில் சொல்லி உள்ளே சென்றால் ஆட்கள் பெஞ்சுகளில் நிறைந்துவிடுவார்கள்.

அழைக்கவே வேண்டியதில்லை. உள்ளே இருந்து கோழிக்குழம்பும், பொரித்த கோழியும், கொஞ்சுவறுவலும், கரிமீன் பொள்ளலும், மத்திக்கூட்டும் எல்லாம் கலந்து மணம் ஏற்கனவே அழைத்துக்கொண்டிருக்கும். நானும் இத்தனை நாள் சாப்பிடாத ஓட்டல் இல்லை. கெத்தேல் சாகிபின் சாப்பாட்டு மணம் எப்போதுமே வந்ததில்லை. வாசுதேவன் நாயர் ‘அதுக்கு ஒரு கணக்கு இருக்குடே. சரக்கு வாங்கிறது ஒருத்தன், வைக்கிறது இன்னொருத்தன்னா எப்பவுமே சாப்பாட்டிலே ருசியும் மணமும் அமையாது. கெத்தேல் சாகிப்பு மீனும் கோழியும் மட்டுமில்ல அரிசியும் மளிகையும் எல்லாம் அவரே போயி நிண்ணு பாத்துத்தான் வாங்குவார். குவாலிட்டியிலே ஒரு எள்ளிடை வித்தியாசம் இருந்தா வாங்க மாட்டார். கொஞ்சு அவருக்குன்னு சிறையின்கீழ் காயலிலே இருந்து வரும். பாப்பீன்னு ஒரு மாப்பிளை புடிச்சு வலையோட அதுகளை தண்ணிக்குள்ளேயே போட்டு இழுத்துக்கிட்டு தோணி துழைஞ்சு வருவான். அப்டியே தூக்கி அப்டியே சமைக்க கொண்டுபோவாரு சாகிப்பு.. மக்கா நேர்மையா இருந்தா அதுக்குண்டான ருசி தன்னால வரும் பாத்துக்கோ’

என்ன செய்வாரோ, அவர் கடையில் சாப்பிட்ட பதினைந்தாண்டுகளில் ஒருநாள்கூட ஒரு சாப்பாட்டுப்பொருள்கூட மிகச்சிறந்த ருசி என்ற நிலையில் இருந்து கீழே வந்ததே இல்லை. அதை எப்படிச் சொல்லி விளக்குவதென்றே தெரியவில்லை. நேர்மை மட்டுமல்ல. கணக்கும்கூடத்தான். சாகிப் கடையில் குழம்பும் பொரியலும் எப்போதும் நேராக அடுப்பில் இருந்து சூடாக கிளம்பி வரும். வரும் கூட்டத்தை முன்னரே கணித்து அதற்கேற்ப அடுப்பில் ஏற்றிக்கொண்டிருப்பார். அவரும் அவரது பீபியும் இரு பையன்களும் இரண்டு உதவியாளர்களும்தான் சமையல். அவர்கள் அனைவரும் சாகிப்புக்கு கட்டுப்பட்டவர்கள். அவர் மூக்காலேயே ருசி கண்டுபிடிப்பார். ஆனால் இதெல்லாம் சும்மா சொல்வதுதான். அங்கே ஒரு தேவதை குடிகொண்டிருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.சரி, தேவதை இல்லை, ஜின். அரேபியாவில் இருந்து வந்த ஜின் அல்ல, மலபாரில் ஏதோ கிராமத்தில் பிறந்து கல்லாயிப்புழையின் தண்ணீர் குடித்த ஜின்.

கெத்தேல் சாகிப்பின் பூர்வீகம் மலபாரில். யூசஃபலி கேச்சேரி எழுதிய ‘கல்லாயி புழ ஒரு மணவாட்டி’ என்ற பாட்டு ஒலிக்கக் கேட்டபோது அவரது மகன் ‘ஞம்ம பாப்பான்றே பொழயல்லே’ என்றார். மற்றபடி அவரைப்பற்றி தெரியாது. அவர் பேசுவதேயில்லை. அவரை யாராவது மனவசியம் செய்து பேசவைத்தால்தான் உண்டு. பஞ்சம்பிழைக்க வந்த குடும்பம். சிறுவயதிலேயே சாகிப் தெருவுக்கு வந்துவிட்டார். இருபது வயதுவரை கையில் பெரிய கெட்டிலுடன் டீ சுமந்து விற்றுக்கொண்டிருந்தார். அந்தப்பெயர் அப்படி வந்ததுதான். அதன்பின் சாலையோரத்தில் மீன் பொரித்து விற்க ஆரம்பித்தார். மெல்ல சப்பாட்டுக்கடை. ’கெத்தேல் சாகிபின் கையால் குடிச்ச சாயாவுக்கு பிறகு இன்னைக்கு வரை நல்ல சாயா குடிச்சதில்லே’ என்று அனந்தன் நாயர் ஒருமுறை சொன்னார். சாட்சாத் கௌமுதி பாலகிருஷ்ணனே சாகிப் கையால் டீ குடிக்கக் கழக்கூட்டத்தில் இருந்து சாலை பஜாருக்கு வருவார் என்றார்கள்.

சாகிப்புக்கு ஒரு குறையும் இல்லை. அம்பலமுக்கில் பெரிய வீடு. கூட்டுக்குடும்பம். நகரில் ஏழெட்டுக் கடைகள். மூன்று பெண்களை கட்டிக்கொடுத்துவிட்டார். மூன்று ’புதியாப்ள’களுக்கும் ஆளுக்கொரு கடை வைத்து கொடுத்திருந்தார். எல்லாம் ஓட்டலில் சம்பாதித்தது என்று சொன்னால் ஆச்சரியப்படமாட்டீர்கள். ஆனால் அவரது வியாபாரமுறையைச் சொன்னால் ஆச்சரியப்படத்தான் செய்வீர்கள். சாகிப் சாப்பாட்டுக்குக் காசு வாங்குவதில்லை. டீ விற்ற காலம் முதலே உள்ள பழக்கம். கடையின் முன்னால் ஒரு மூலையில் சிறிய தட்டியால் மறைக்கப்பட்டு ஒரு தகர டப்பா உண்டியல் வைக்கப்பட்டிருக்கும். சாப்பிட்டு விட்டுப் போகிறவர்கள் அதில் எவ்வளவு வேண்டுமானாலும் போடலாம். யாரும் பார்க்கப்போவதில்லை. போடாமலும் போகலாம். எத்தனை நாள் போடாமல் போனாலும், எவ்வளவு சாப்பிட்டாலும் கெத்தேல் சாகிப் அதை கவனிக்கவே மாட்டார்.

தெருவில் சட்டைபோடாமல் காக்கி நிக்கரும் வட்டத்தொப்பியுமாக அலைந்த டீப்பையனாக இருக்கும்போதே கெத்தேல் சாகிப் அப்படித்தான். ஒரு சின்ன டப்பா அவர் அருகே இருக்கும், அதில் விரும்பினால் காசு போட்டால் போதும். விலைகேட்கக் கூடாது, சொல்லவும் மாட்டார். ஆரம்பத்தில் சில சண்டியர்களும் தெருப்பொறுக்கிகளும் வம்பு செய்திருக்கிறார்கள். அதில் காகிதங்களை மடித்து போட்டிருக்கிறார்கள். அந்த டப்பாவையே தூக்கிக்கொண்டு போயிருக்கிறார்கள். மாதக்கணக்கில் வருடக்கணக்கில் சும்மா டீ குடித்திருக்கிறார்கள். கெத்தேல் சாகிப்புக்கு அவர்களின் முகம் கூட நினைவிருப்பது போல தெரியாது.

ஒரே ஒருமுறை கெத்தேல் சாகிப் ஒருவனை அறைந்தார். வெளியூர்க்காரி ஒருத்தி, சாலையில் மல்லி மிளகு சீரகம் புடைத்து கூலி வாங்கும் ஏழைப்பெண், எங்கோ தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்து பஞ்சம்பிழைக்க வந்தவள், டீ குடித்துக்கொண்டிருந்தாள். அன்று புகழ்பெற்ற சட்டம்பி கரமன கொச்சுகுட்டன்பிள்ளை ஒரு டீக்குச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணை பார்த்தார். என்ன நினைத்தாரோ அந்தப் பெண்ணின் முலையைப் பிடித்துக் கசக்க ஆரம்பித்தார். அவள் அலற ஆரம்பித்ததும் உற்சாகவெறி ஏறி அவளை அப்படியே தூக்கிக் கொண்டு ஓரத்துச் சந்துக்குள் செல்லமுயன்றார். கெத்தேல் சாகிப் ஒன்றுமெ சொல்லாமல் எழுந்து கொச்சுகுட்டன்பிள்ளையை ஓங்கி ஓர் அறை விட்டார். சாலைமுழுக்க அந்தச் சத்தம் கேட்டிருக்கும். குட்டன்பிள்ளை காதும் மூக்கும் வாயும் ரத்தமாக ஒழுக அப்படியே விழுந்து பிணம் போல கிடந்தார். கெத்தேல் சாகிப் ஒன்றும் நடக்காதது போல மேற்கொண்டு டீ விற்க ஆரம்பித்தார்.

குட்டன்பிள்ளையை அவரது ஆட்கள் தூக்கிக் கொண்டு சென்றார்கள். பதினெட்டு நாட்கள் ஆஸ்பத்திரியில் கிடந்தவர் பின்னர் எழுந்து நடமாடவே இல்லை. காது கேட்காமலாகியது. தலை எந்நேரமும் நடுங்கிக் கொண்டிருக்கும். அடிக்கடி வலிப்பு வந்தது. ஏழு மாசம் கழித்து கரமனை ஆற்றில் குளிக்கையில் வலிப்பு வந்து ஆற்றுக்குள் போனவரை ஊதிப்போன சடலமாகத்தான் எடுக்க முடிந்தது. ஒரு மாப்பிள்ளை எப்படி குலநாயரை அடிக்கலாம் என்று கிளம்பி வந்த கும்பலை சாலை மகாதேவர் கோயில் டிரஸ்டி அனந்தன் நாயர் ‘போயி சோலி மயிரை பாருங்கடே. நியாயத்த விட்டு களிச்சா சிலசமயம் துலுக்கன் கையாலே சாவணும்னு இருக்கும், சிலசமயம் எறும்பு கடிச்சும் சாவு வரும்…’ என்று சொல்லிவிட்டார். அவர் சொன்னபின்னர் சாலை பஜாரில் மறு பேச்சு இல்லை.

நான் முதன்முதலாக கெத்தேல் சாகிப் கடைக்குச் சாப்பிட வந்தது அறுபத்தியெட்டில். என் சொந்த ஊர் கன்னியாகுமரி பக்கம் ஒசரவிளை. அப்பாவுக்கு கோட்டாற்றில் ஒரு ரைஸ்மில்லில் கணக்குப்பிள்ளை வேலை. நான் நன்றாக படித்தேன். பதினொன்று ஜெயித்ததும் காலேஜில் சேர்க்க வேண்டும் என்றார்கள். அப்பாவின் சம்பாத்தியத்தில் அதை நினைத்துக்கூட பார்த்திருக்கக் கூடாது. ஆனால் சொந்தத்தில் ஒரு மாமா திருவனந்தபுரம் பேட்டையில் இருந்தார். ஒரு சுமாரான அச்சகம் வைத்திருந்தார். அவர் மனைவிக்குத் தாழக்குடி. எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றுதான். அப்பா என்னை கைபிடித்துக் கூட்டிக்கொண்டு பஸ் ஏறி தம்பானூரில் இறங்கி பேட்டை வரை நடத்திக் கொண்டுசென்றார். நான் பார்த்த முதல் நகரம். தலையில் வைத்த தேங்காயெண்ணை முகத்தில் வியர்வையுடன் சேர்ந்து வழிய கணுக்கால்மேலே ஏறிய ஒற்றைவேட்டியும் பானைக்குள் சுருக்கி வைத்த சட்டையும் செருப்பில்லாத கால்களுமாக பிரமை பிடித்து நடந்து போனேன்.

மாமாவுக்கு வேறு வழி இல்லை. அவரைச் சின்ன வயதில் அப்பா தூக்கி வளர்த்திருக்கிறார். யூனிவர்சிட்டி காலேஜில் ஆங்கில இலக்கியம் படிக்க சேர்ந்துகொண்டேன். அப்பா மனநிறைவுடன் கிளம்பிச் சென்றார். ஒரு ரூபாயை என் கையில் வைத்து ‘வச்சுக்கோ, செலவு செய்யாதே. எல்லாம் மாமன் பாத்து செய்வான்’ என்று சொன்னார். ’இந்தா சுப்பம்மா, உனக்கு இவன் இனிமே மருமோன் மட்டுமில்ல. மகனுமாக்கும்’ என்று கிளம்பினார். மாமனுக்கு மனம் இருந்ததா என்பது எனக்கு இன்றும் சந்தேகம்தான். மாமிக்கு கொஞ்சம்கூட மனமில்லை என்பது அன்றைக்குச் சாயங்காலம் சாப்பிடும்போதே தெரிந்தது. எல்லாரும் அப்பளம் பொரியல் சாம்பாருடன் சாப்பிடும்போது என்னை அழைக்கவில்லை. சாப்பிட்டு முடித்தபின்னர் அடுப்படியில் ஒரு அலுமினிய பாத்திரத்தில் எனக்கு தண்ணீர்விட்ட சோறு அதிலேயே விடப்பட்ட குழம்புடன் இருந்தது.

அவமானங்களும் பட்டினியும் எனக்குப் பழக்கம்தான். எல்லாவற்றையும் பொறுத்துப்போனேன். பொறுத்துப்போகப்போக அவை அதிகமாக ஆயின. வீட்டில் எல்லா வேலைகளையும் நானே செய்ய வேண்டும். கிணற்றில் இருந்து குடம்குடமாக தண்ணீர் பிடித்து வைக்க வேண்டும். வீட்டை தினமும் கூட்டிப்பெருக்கவேண்டும். அவளுடைய இரு பெண்களையும் பள்ளிக்கூடம் கொண்டுசென்று விடவேண்டும். மூத்தவள் ராமலட்சுமி எட்டாம் கிளாஸ். அவளுக்கு கணக்குச் சொல்லிக்கொடுத்து அவள் வீட்டுப்பாடத்தையும் செய்துகொடுக்கவேண்டும். இரவு சமையலறையை கழுவிவிட்டு படுக்கவேண்டும். இவ்வளவுக்கும் எனக்கு அவர்கள் கொடுத்தது திண்ணையில் ஓரு இடம். இரண்டுவேளை ஊறிய சோறும் ஊறுகாயும். எந்நேரமும் மாமி அதிருப்தியுடன் இருந்தாள். வீட்டுக்கு வரும் ஒவ்வொருவரிடமும் என்னைப்பற்றி புலம்பினாள். நான் உண்ணும் சோற்றால் அவர்கள் கடனாளி ஆகிக்கொண்டிருப்பதாகச் சொன்னாள். நான் புத்தகத்தை விரிப்பதைப்பார்த்தாலே அவளுக்கு வெறி கிளம்பி கத்த ஆரம்பிப்பாள்.

நான் எதையும் அப்பாவுக்கு எழுதவில்லை. அங்கே வீட்டில் இன்னும் இரு தம்பிகளும் ஒரு தங்கையும் இருந்தார்கள். பாதிநாள் ரைஸ்மில்லில் அரிசி புடைப்பவர்கள் பாற்றிக் கழித்து போடும் கருப்பு கலந்த குருணைஅரிசியை கஞ்சியாகக் காய்ச்சித்தான் குடிப்போம். ஓடைக்கரையில் வளரும் கொடுப்பைக்கீரை குழம்பைத்தான் என் நினைவு தெரிந்த நாள்முதல் தினமும் சாப்பிட்டு வந்தேன். தேங்காய்கூட இல்லாமல் கீரையை வேகவைத்து பச்சைமிளகாய் புளி போட்டு கடைந்து வைத்த குழம்பு. பலசமயம் பசிவேகத்தில் அந்த மணமே வாயில் நீரூறச் செய்யும். என்றாவது ஒருநாள் அம்மா துணிந்து நாலணாவுக்கு மத்திச்சாளை வாங்கினால் அன்றெல்லாம் வீடெங்கும் மணமாக இருக்கும். அன்றுமட்டும் நல்ல அரிசியில் சோறும் சமைப்பாள். நாள் முழுக்க தியானம் போல மத்திக்குழம்பு நினைப்புதான் இருக்கும். எத்தனை முயன்றாலும் மனதை வேறெங்கும் செலுத்த முடியாது. அம்மா கடைசியில் சட்டியில் ஒட்டிய குழம்பில் கொஞ்சம் சோற்றைப் போட்டு துடைத்து பிசைந்து வாயில் போடப்போனால் அதிலும் பங்கு கேட்டு தம்பி போய் கையை நீட்டுவான்.

கல்லூரிக்கு ஃபீஸ் கொடுக்க வேண்டியிருந்தது. பலமுறை சுற்றி வளைத்து மாமாவிடம் சொன்னேன். கடைசியில் நேரடியாகவே கேட்டேன். ‘உங்கப்பாவுக்கு எழுதிக்கேளு…இங்க தங்கி சாப்பிடத்தான் நான் சொல்லியிருக்கேன்…’ என்றார். அப்பாவுக்கு எழுதுவதில் அர்த்தமே இல்லை என்று தெரியும். ஒருவாரம் கழித்து என்னை காலேஜில் இருந்து நின்றுவிடச் சொல்லிவிட்டார்கள். ஃபீஸ் கட்டியபிறகு வந்தால் போதும் என்றார்கள். நான் பித்துப்பிடித்தவன் போல அலைந்தேன். தம்பானூர் ரயில் நிலையத்திற்குச் சென்று நாளெல்லாம் இரும்புச்சத்தத்தைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். விதவிதமாக ஆயிரம் முறை தண்டவாளத்தில் விழுந்து செத்தேன். அப்போதுதான் என்னுடன் படித்த குமாரபிள்ளை என்ற மாணவன் ஒரு வழி சொன்னான். என்னை அவனே கூட்டிக்கொண்டு சென்று சாலையில் கெ.நாகராஜப் பணிக்கர் அரிசி மண்டியில் மூட்டைக்கணக்கு எழுதும் வேலைக்குச் சேர்த்து விட்டான். சாயங்காலம் ஐந்து மணிக்கு வந்தால்போதும். இரவு பன்னிரண்டு மணிவரை கணக்கு எழுதவேண்டும். ஒருநாளுக்கு ஒரு ரூபாய் சம்பளம். நாற்பது ரூபாய் அட்வான்ஸ்காகக் கொடுத்தார். அதைக்கொண்டு சென்று ஃபீஸ் கட்டினேன்.

தினமும் வீடு சென்று சேர ஒருமணி இரண்டுமணி ஆகும். காலையில் ஏழுமணிக்குத்தான் எழுந்திருப்பேன். காலேஜ் இடைவெளிகளில் வாசித்தால்தான் உண்டு. ஆனாலும் நான் நல்ல மாணவனாக இருந்தேன். வகுப்புகளில் கூர்ந்து கவனிக்கும் வழக்கம் எனக்கிருந்தது. நேரம்தான் போதவில்லை. யூனிவர்சிட்டி காலேஜில் இருந்து செகரட்டரியேட் வழியாக குறுக்காகப் பாய்ந்து, கரமனை வழியாக சாலை பஜாருக்கு போக முக்கால்மணி நேரமாகிவிடும். சண்முகம்பிள்ளை கடைசி கிளாஸ் எடுத்தாரென்றால் நாலரை மணிவரை கொண்டு போவார். நான் போவதற்கு தாமதமானால் பரமசிவம் கணக்கு பார்க்க வந்து அமர்ந்துவிடுவான். அதன்பின் போனாலும் பிரயோசனமில்லை. வாரத்தில் நான்குநாட்கள்தான் சரக்கு வரும். அதில் ஒருநாள் போனால் வாரத்தில் கால்பங்கு வருமானம் இல்லாமலானதுபோல.

முதல் மாசம் எனக்கு பணமே தரப்படவில்லை. வரவேண்டிய பதினைந்து ரூபாயையும் பணிக்கர் முன்பணத்தில் வரவு வைத்துவிட்டார். நான் காலை எழுந்ததும் மாமி என் முன்னால் ஒரு நோட்டுப்புத்தகத்தை கொண்டு வைத்துவிட்டு போனாள். புரட்டிப்பார்த்தேன். பழைய நோட்டு. நான் வந்த நாள்முதல் சாப்பிட்ட ஒவ்வொருவேளைக்கும் கணக்கு எழுதப்பட்டிருந்தது. ஒருவேளைக்கு இரண்டணா கணக்குப் போட்டு மொத்தம் நாற்பத்தெட்டு ரூபாய் என் பற்றில் இருந்தது. எனக்கு தலை சுற்றியது. மெதுவாக சமையலறைக்குப் போய் ‘என்ன மாமி இது?’ என்றேன். ‘ஆ, சோறு சும்மா போடுவாளா? நீ இப்ப சம்பாரிக்கிறேல்ல? குடுத்தாத்தான் உனக்கும் மரியாத. எனக்கும் மரியாத’ என்றாள். ‘கணக்கு தப்பா இருந்தா சொல்லு, பாப்பம். நான் அப்பமே இருந்து ஒரு நாள் விடாம எழுதிட்டுதான் வாறேன்’

நான் கண்கலங்கி தொண்டை அடைத்து பேசாமல் நின்றேன். பின்பு ‘நான் இப்டீன்னு நினைக்கலை மாமி…எனக்கு அவ்ளவொண்ணும் கெடைக்காது. ஃபீஸ் கட்டணும். புக்கு வாங்கணும்…’ என்றேன். ‘இந்த பாரு, நான் உனக்கு என்னத்துக்கு சும்மா சோறு போடணும்? எனக்கு ரெண்டு பெண்மக்கள் இருக்கு. நாளைக்கு அதுகளை ஒருத்தன்கிட்ட அனுப்பணுமானா பணமும் நகையுமா எண்ணி வைக்கணும் பாத்துக்கோ. கணக்கு கணக்கா இருந்தா உனக்கும் மரியாத. எனக்கும் மரியாத’ நான் மெல்லிய குரலில் ‘இப்ப எங்கிட்ட பணமில்லை மாமி. நான் கொஞ்சம் கொஞ்சமா குடுத்திடறேன்’ என்றேன். ‘குடுப்பேன்னு எப்டி நம்பறது?’ என்றாள். நான் ஒன்றும் சொல்லவில்லை. அன்று மாலையே நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். நேராக பணிக்கரின் குடோனிலேயே வந்து தங்கிவிட்டேன். பணிக்கருக்கும் இலவசமாக வாட்ச்மேன் கிடைத்த சந்தோஷம். மாமி என் முக்கியமான புத்தகங்களை பணத்துக்கு அடகாக பிடித்து வைத்துக்கொண்டாள்.

சாலையில் நான் சந்தோஷமாகவே இருந்தேன். கரமனை ஆற்றில் குளியல். அங்கேயே எலிசாம்மா இட்லிக்கடையில் நான்கு இட்லி. நேராக காலேஜ். மதியம் சாப்பிடுவதில்லை. சாயங்காலம் வேலைமுடிந்தபின்னர் ஒரு பொறை அல்லது டீ குடித்துவிட்டு படுத்துவிடுவேன். கணக்கில் ஒருவேளை உணவுதான். எந்நேரமும் பசி இருந்துகொண்டே இருக்கும். எதை யோசித்தாலும் சாப்பாட்டு நினைவில் வந்து முடியும். குண்டான ஒருவரை பார்த்தால் கண்ணை எடுக்கவே முடியாது. எவ்ளவு சாப்பிடுவார் என்ற நினைப்புதான். சாலைமகாதேவர்கோயில் வழியாகச் செல்லும்போது பாயச வாசனை வந்தால் நுழைந்துவிடுவேன். இலைக்கீற்றில் வைத்து தரப்படும் பாயசமும் பழமும் ஒருநாள் இட்லி செலவை மிச்சப்படுத்திவிடும். சாஸ்தாவுக்கு சுண்டல், இசக்கியம்மைக்கு மஞ்சள்சோறு என அடிக்கடி ஏதாவது கிடைக்காமலிருக்காது. ஆனாலும் எனக்கு பணம் போதவில்லை. முன்பணத்தை அடைத்து முடிப்பதற்குள் அடுத்த காலேஜ் ஃபீஸுக்கு கேட்டுவிட்டார்கள். இதைத்தவிர மாதம் ஐந்துரூபாய் வீதம் சேர்த்து கொண்டுபோய் மாமிக்கு கொடுத்தேன். பரீட்சைக்கு முன்னாலேயே புத்தகங்களை மீட்டாகவேண்டும்.

நான் மெலிந்து கண்கள் குழிந்து நடமாட முடியாதவனாக ஆனேன். கணக்கு போட்டுக்கொண்டிருக்கும்போது சட்டென்று கிர்ர் என்று எங்கோ சுற்றிச்சுழன்று ஆழத்துக்குப் போய் மீண்டு வருவேன். வாயில் எந்நேரமும் ஒரு கசப்பு. கைகால்களில் ஒரு நடுக்கம். பேட்டை வரை காலேஜுக்கு நடப்பதற்கு ஒருமணிநேரம் ஆகியது. என் கனவெல்லாம் சோறு. ஒருநாள் சாலையில் ஒரு நாய் அடிபட்டு செத்துக்கிடந்தது. அந்த நாயின் கறியை எடுத்துக்கொண்டுபோய் குடோன் பின்பக்கம் கல்லடுப்பு கூட்டி சுட்டு தின்பதைப்பற்றி கற்பனை செய்தேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எச்சில் ஊறி சட்டையில் வழிந்து விட்டது அன்று.

அப்போதுதான் கூலி நாராயணன் சொன்னான், கெத்தேல் சாகிப் ஓட்டலைப்பற்றி. பணம் கொடுக்கவேண்டாம் என்பது எனக்கு நம்பமுடியாததாக இருந்தது. பலரிடம் கேட்டேன், உண்மைதான் என்றார்கள். இருந்தால் கொடுத்தால்போதுமாம். எனக்கு தைரியம் வரவில்லை. ஆனால் கெத்தேல் சாகிப் ஓட்டலைப்பற்றிய நினைப்பு எந்நேரமும் மனதில் ஓடியது. நாலைந்துமுறை ஓட்டலுக்கு வெளியே சென்று நின்று பார்த்துவிட்டு பேசாமல் வந்தேன். அந்த நறுமணம் என்னை கிறுக்காக்கியது. நான் பொரித்த மீனை வாழ்க்கையிலேயே இருமுறைதான் சாப்பிட்டிருக்கிறேன். இருமுறையும் சொந்தத்தில் ஒரு பண்ணையார் வீட்டில்தான். ஒருவாரம் கழித்து மூன்று ரூபாய் திரண்ட பின் அந்தப் பணத்துடன் கெத்தேல் சாகிப் ஓட்டலுக்குச் சென்றேன்.

சாகிப் ஓட்டலை திறப்பது வரை எனக்கு உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. ஏதோ திருட்டுத்தனம் செய்ய வந்தவனைப்போல உணர்ந்தேன். கும்பலோடு உள்ளே போய் ஓரமாக யாருமே கவனிக்காதது போல அமர்ந்துகொண்டேன். ஒரே சத்தம். சாகிப் புயல்வேகத்தில் சோறு பரிமாறிக்கொண்டிருந்தார். கவிழ்க்கப்பட்ட தாமரை இலையில்தான் சாப்பாடு. ஆவி பறக்கும் சிவப்புச் சம்பாச் சோற்றை பெரிய சிப்பலால் அள்ளி கொட்டி அதன்மேல் சிவந்த மீன் கறியை ஊற்றினார். சிலருக்கு கோழிக்குழம்பு. சிலருக்கு வறுத்தகோழிக்குழம்பு. அவர் எவரையுமே கவனிக்கவில்லை என்றுதான் பட்டது. அதன் பிறகு கவனித்தேன், அவருக்கு எல்லாரையுமே தெரியும். பலரிடம் அவர் எதையுமே கேட்பதில்லை. அவரே மீனையும் கறியையும் வைத்தார். ஆனால் யாரிடமும் உபச்சாரமாக ஏதும் சொல்லவில்லை. அவரே பரிமாறினார். இரண்டாம்முறை குழம்பு பரிமாற மட்டும் ஒரு பையன் இருந்தான்.

என்னருகே வந்தவர் என்னை ஏறிட்டுப் பார்த்தார். ‘எந்தா புள்ளேச்சன், புத்தனா வந்நதா?’ என்றார். என்னை வெள்ளாளன் என்று எப்படி கவனித்தார் என்று வியந்து பேசாமல் இருந்தேன். சோற்றைக் கொட்டி அதன் மேல் குழம்பை ஊற்றினார். ஒரு பெரிய பொரித்த சிக்கன் கால். இரண்டு துண்டு பொரித்த மீன். ‘தின்னு’ என்று உறுமியபின் திரும்பிவிட்டார். அதற்கு எப்படியும் மூன்று ரூபாய்க்குமேல் ஆகிவிடும். என் கைகால்கள் பதற ஆரம்பித்தன. சோறு தொண்டையில் அடைத்தது. சட்டென்று திரும்பிய சாகிப் ‘நிங்ங அவிடே எந்து எடுக்கிணு? தின்னீன் பிள்ளேச்சா’ என்று ஒரு பயங்கர அதட்டல் போட்டார். அள்ளி அள்ளி சாப்பிட்டேன். அந்த ருசி என் உடம்பெல்லாம் பரவியது. ருசி ! கடவுளே, அப்படி ஒன்று உலகில் இருப்பதையே மறந்து விட்டேனே. என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டி வாய் வரைக்கும் வழிந்தது.

ஒரு சின்ன கிண்டியில் உருகிய நெய்போன்ற ஒன்றுடன் கெத்தேல் சாகிப் என்னருகே வந்தார். என் சோற்றில் அதைக்கொட்டி இன்னும் கொஞ்சம் குழம்பு விட்டு ‘கொழச்சு திந்நோ ஹம்க்கே…மீன்கொழுப்பாணு’ என்றார். ஆற்றுமீனின் கொழுப்பு அது. அதன் செவிள்பகுதியில் இருந்து மஞ்சளாக வெட்டி வெளியே எடுப்பார்கள். கறிக்கு அது தனி ருசியைக் கொடுத்தது. அதிகமாகச் சாப்பிட்டு பழக்கமில்லாததனால் ஒரு கட்டத்தில் என் வயிறு அடைத்துக்கொண்டது. சட்டென்று இன்னும் இரு சிப்பல் சோற்றை என் இலையில் கொட்டினார் சாகிப். ‘அய்யோ வேண்டாம்’ என்று தடுக்கப்போன என் கையில் அந்த தட்டாலேயே கணீர் என்று அறைந்து ‘சோறு வச்சா தடுக்குந்நோ? எரப்பாளி..தின்னுடா இபிலீஸே ’ என்றார். உண்மையிலேயே கையில் வலி தெறித்தது. எழுந்திருந்தால் சாகிப் அடித்துவிடுவார் என்று அவரது ரத்தக் கண்களைக் கண்டபோது தோன்றியது. சோற்றை மிச்சம் வைப்பது சாகிப்புக்குப் பிடிக்காது என்று தெரியும். உண்டு முடித்தபோது என்னால் எழ முடியவில்லை. பெஞ்சை பற்றிக்கொண்டு நடந்து இலையை போட்டு கை கழுவினேன்.

அந்த பெட்டியை நெருங்கியபோது என் கால்கள் நடுங்கின. எங்கோ ஏதோ கோணத்தில் கெத்தேல் சாகிப் பார்த்துக்கொண்டுதான் இருப்பார் என்று தோன்றியது. ஆனால் அவர் வேறு ஆட்களை கவனித்துக்கொண்டிருந்தார். பலர் பணம் போடாமல் போனார்கள் என்பதை கவனித்தேன். சிலர் போட்டபோதும் சாதாரணமாகத்தான் இருந்தார்கள். நான் கை நடுங்க மூன்று ரூபாயை எடுத்து உள்ளே போட்டேன். ஏதோ ஒரு குரல் கேட்கும் என முதுகெல்லாம் காதாக , கண்ணாக இருந்தேன். மெல்ல வெளியே வந்தபோது என் உடலே கனமிழக்க ஆரம்பித்தது. சாலை எங்கும் குளிர்ந்த காற்று வீசுவதுபோல் இருந்தது. என் உடம்பு புல்லரித்துக்கொண்டே இருக்க எவரையும் எதையும் உணராமல் பிரமையில் நடந்துகொண்டிருந்தேன்.

நாலைந்து நாள் நான் அப்பகுதிக்கே செல்லவில்லை. மீண்டும் இரண்டு ரூபாய் சேர்ந்தபோது துணிவு பெற்று கெத்தேல் சாகிபு கடைக்குச் சென்றேன். அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார் என்பது அதேபோல கொழுப்பைக் கொண்டுவந்து ஊற்றியபோதுதான் தெரிந்தது. அதே அதட்டல், அதே வசை. அதேபோல உடல்வெடிக்கும் அளவுக்கு சாப்பாடு. இம்முறை பணத்தை நிதானமாகவே போட்டேன். மீண்டும் மூன்றுநாட்கள் கழித்து சென்றபோது என் கையில் ஏழு ரூபாய் இருந்தது. அன்றுமாலை நான் அதை மாமிக்குக் கொண்டு கொடுக்கவேண்டும். அதில் இரண்டு ரூபாய்க்குச் சாப்பிடலாம் என நினைத்தேன். இரண்டணாவுக்கு மேல் சாப்பிடுவதென்பது என்னைப்பொறுத்தவரை ஊதாரித்தனத்தின் உச்சம். ஆனால் ருசி என்னை விடவில்லை. அந்நாட்களில் என் கனவுகளில்கூட கெத்தேல் சாகிப் ஓட்டலின் மீன்குழம்பும் கோழிப்பொரியலும்தான் வந்துகொண்டிருந்தன. ஏன் , நோட்டுப்புத்தகத்தின் பின்பக்கம் ஒரு கவிதைகூட எழுதி வைத்திருந்தேன். உட்கார்ந்து சாப்பிட்டு எழுந்து சென்றபோது பணம் போடாவிட்டால் என்ன என்ற எண்ணம் வந்தது

அந்த நினைப்பே வயிற்றை அதிரச்செய்தது. மேற்கொண்டு சாப்பிடவே முடியவில்லை. பந்தை தண்ணீரில் முக்குவதுபோல சோற்றை தொண்டையில் அழுத்தவேண்டியிருந்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. எழுந்து கைகழுவி விட்டு கனத்த குளிர்ந்த கால்களை தூக்கி வைத்து நடந்தேன். சிறுநீர் முட்டுகிறதா, தலை சுழல்கிறதா, மார்பு அடைக்கிறதா ஒன்றும் புரியவில்லை. பேசாமல் பணத்தை போட்டுவிடலாம் என்று தோன்றியது. மெல்ல நடந்து உண்டியல் அருகே வந்தேன். அதை தாண்டிச்செல்ல முடியவில்லை. காதுகளில் ஒரு இரைச்சல். சட்டென்று ஏழு ரூபாயையும் அப்படியே தூக்கி உள்ளே போட்டு விட்டு வெளியே வந்தேன். வெளிக்காற்று பட்டதும்தான் என்ன செய்திருக்கிறேன் என்று புரிந்தது. அரைமாத சம்பாத்தியம் அப்படியே போய்விட்டது. எத்தனை பாக்கிகள். கல்லூரி ஃபீஸ் கட்ட எட்டு நாட்கள்தான் இருந்தன. என்ன செய்துவிட்டேன். முட்டாள்தனத்தின் உச்சம்.

மனம் உருகி கண்ணீர் வந்துகொண்டே இருந்தது. ,மிக நெருங்கிய ஒரு மரணம் போல. மிகப்பெரிய ஏமாற்றம் போல. கடைக்குச் சென்று அமர்ந்தேன். இரவுவரை உடம்பையும் மனத்தையும் முழுக்க பிடுங்கிக்கொள்ளும் வேலை இருந்ததனால் தப்பித்தேன். இல்லாவிட்டால் அந்த வெறியில் ஏதாவது தண்டவாளத்தில்கூட தலைவைத்திருப்பேன். அன்றிரவு தோன்றியது, ஏன் அழவேண்டும்? அந்த பணம் தீர்வது வரை கெத்தேல் சாகிப் ஓட்டலில் சாப்பிட்டால் போயிற்று. அந்நினைப்பு அளித்த ஆறுதலுடன் தூங்கிவிட்டேன்.

மறுநாள் மதியம் வரைத்தான் காலேஜ். நேராக வந்து கெத்தேல் சாகிப் ஓட்டலில் அமர்ந்து நிதானமாக ருசித்து சாப்பிட்டேன். அவர் கொண்டு வந்து வைத்துக்கோண்டே இருந்தார். கொஞ்சம் இடைவெளி விட்டால்கூட எழப்போகிறேன் என நினைத்து ‘டேய், வாரித்தின்னுடா, ஹிமாறே’ என்றார். சாப்பிட்டுவிட்டு கைகழுவி பேசாமல் நடந்தபோது உள்ளே கெத்தேல் சாகிப் கேட்டால் சொல்லவேண்டிய காரணங்களை சொற்களாக்கி வைத்துக்கொண்டிருந்தேன். அவர் கவனிக்கவே இல்லை. வெளியே வந்தபோது ஏமாற்றமாக இருந்தது. சட்டென்று அவர் மேல் எரிச்சல் வந்தது. பெரிய புடுங்கி என்று நினைப்பு. தர்மத்துக்கு கட்டுப்பட்டு எல்லாரும் பணம் போடுவதனால் இவன் பெரிய தர்மவானாக தோற்றமளிக்கிறான். ரம்சானுக்கு சக்காத்து கொடுப்பவர்கள் பணத்தைக் கொண்டுவந்து உண்டியலிலே போடுவதனால் பிழைக்கிறான். சும்மாவா கொடுக்கிறான்? இப்படி கிடைத்த பணம்தானே வீடும் சொத்துமாக ஆகியிருக்கிறது? போடாவிட்டால் எதுவரை பொறுப்பான். பார்ப்போமே. அந்த எரிச்சல் எதனால் என்று தெரியவில்லை. ஆனால் உடம்பு முழுகக் ஒரு தினவுபோல அது இருந்துகொண்டே இருந்தது.

அந்த எரிச்சலுடன்தான் மறுநாள் சென்று அமர்ந்தேன். கெத்தேல் சாகிப் கேட்கமாட்டார் என நான் அறிவேன். ஆனால் அவர் பார்வையில் நடத்தையில் ஒரு சிறிய மாற்றம் தெரிந்தால்கூட அன்றுடன் அங்கே செல்வதை நிறுத்திவிடவேண்டும் என நினைத்துக்கொண்டேன். கொஞ்சம் அதிகமாக உபசரித்தால்கூட அவருக்கு கணக்கு இருக்கிறது, கவனிக்கிறார் என்றுதானே அர்த்தம். ஆனால் கெத்தேல் சாகிப் அவரது வழக்கமான அதே வேகத்துடன் பரிமாறிக்கொண்டிருந்தா. கொழுப்பு ஊற்றினார். ‘கோழி தின்னு பிள்ளேச்சா’ என்று ஒரு அரைக்கோழியை வைத்தார். பின்னர் மீன் வைத்தார். அவர் இந்த உலகில்தான் இருக்கிறாரா? உண்மையிலேயே இது ஒரு மாப்பிளைதானா இல்லை ஏதாவது ஜின்னா? பயமாகக்கூட இருந்தது. கடைசியாகச் சோறு போட்டு சாப்பிடப்போனபோது கெத்தேல் சாகிப் கறி பொரித்த மிளகாய்க்காரத்தின் தூளையும் கொஞ்சம் கருகிய கோழிக்காலையும் கொண்டு வைத்தார். நான் அதை விரும்பிச் சாப்பிடுவதை வெளியே காட்டிக்கொள்ளக்கூடாது என எப்போதும் முயல்வேன். ஆனால் அவருக்கு தெரிந்திருந்தது ஆச்சரியமளிக்கவில்லை.

அந்த காரத்தை சோற்றில் போட்டுப்பிசைந்தபோது சட்டென்று மனம் ததும்பி விட்டது. கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என் வாழ்நாளில் எவருமே எனக்கு பரிந்து சோறிட்டதில்லை. ஆழாக்கு அரிசியைக் கஞ்சி வைக்கும் அம்மாவுக்கு அந்த கடுகடுப்பும் வசைகளும் சாபங்களும் இல்லாவிட்டால் எல்லாருக்கும் பங்கு வைக்கவே முடியாது. நான் நிறைந்து சாப்பிடவேண்டும் என எண்ணும் முதல் மனிதர். எனக்கு கணக்கு பார்க்காமல் சாப்பாடு போடும் முதல் கை. அன்னமிட்ட கை என்கிறார்களே, அந்திமக் கணம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை என்கிறார்களே. தாயத்துகட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட இந்த கரடிக்கரமல்லவா என் தாயின் கை? அதன்பின் நான் கெத்தேல் சாகிப்புக்கு பணமே கொடுத்ததில்லை. செலவென நினைத்து கொடுக்காமலிருக்கவில்லை என்று என் நெஞ்சை தொட்டுச் சொல்ல முடியும். அது என் அம்மாவின் சோறு என்பதனால்தான் கொடுக்கவில்லை. ஒன்றிரண்டல்ல முழுசாக ஐந்து வருடம் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை.

தினமும் ஒருவேளை அங்கே சாப்பிடுவேன். மாலை அல்லது மதியம். அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது. மேற்கொண்டு ஒரு நான்கு இட்லி போதும். என் கைகால்கள் உரம் வைத்தன. கன்னம் பளபளத்தது. மீசை தடித்தது. குரல் கனத்தது. நடையில் மிடுக்கும் பேச்சில் கண்டிப்பும் சிரிப்பில் தன்னம்பிக்கையும் வந்தன. கடையில் என் இடம் கிட்டத்தட்ட மானேஜருக்கு நிகரானதாக ஆகியது. சரக்குகளை வரவு வைத்து தேவைக்கு ஏற்ப எடுத்து கொடுப்பது முழுக்க என்பொறுப்புதான். படிப்புச்செலவுபோக ஊருக்கும் மாதம் தோறும் பணம் அனுப்பினேன். நான் பீஏ யை முதல்வகுப்பில் முதலிடத்தில் வென்றபின் யூனிவர்சிட்டி கல்லூரியிலேயே எம்ஏ படிக்கச் சேர்ந்தேன். சாலையில் அருணாச்சலம்நாடார் கடைமேல் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக்கொண்டேன். ஒரு நல்ல சைக்கிள் வாங்கிக்கொண்டேன்.

ஒவ்வொரு நாளும் கெத்தேல் சாகிப்பின் கையால் சாப்பிட்டேன். மெதுவாக பேச்சு குறைந்து அவர் என்னை பார்க்கிறாரா என்ற சந்தேகம்கூட வர ஆரம்பித்தது. ஆனால் என் இலைமேல் அவரது கனத்த கைகள் உணவுடன் நீளும்போது தெரியும் அது அன்பே உருவான அம்மாவின் கை என்று. நான் அவர் மடியில் பிறந்து அவரிடம் முலையுண்டவன் என்று. தம்பி சந்திரன் பதினொன்று முடித்துவிட்டு டிரைவிங் லைசன்ஸ் எடுத்து அரசு போக்குவரத்துக் கழகத்தில் சேர்ந்தபோது வீட்டுக் கஷ்டம் குறைந்தது. நான் அவ்வப்போது வீட்டுக்குப் போவேன். அம்மா நல்ல அரிசி வாங்கி மீன்குழம்பு வைத்து அவளே பரிமாறுவாள். ஆனால் எத்தனையோ காலமாக நீண்டு நின்ற வறுமை. அவளுக்கு பரிமாறத்தெரியாது. ஒரு கண் எப்போதும் பானையில் இருக்கும் சோறையும் சட்டியில் இருக்கும் குழம்பையும் கணக்குபோடுவதை தவிர்க்க தெரியாது. அகப்பையில் அவள் சோறோ குழம்போ அள்ளினால் அரைவாசி திரும்ப கொட்டிவிடுவாள். இன்னும் கொஞ்சம் குழம்பு என்றால் அவளுடைய அகப்பை சில சொட்டுகள் தான் அள்ளும். கையோ மனமோ குறுகிவிட்டது. சாளைப்புளிமுளமும் சம்பா அரிசி சோறும் அவள் அள்ளி வைக்கையில் நான் நாலாவது உருண்டைச் சோறில் வயிறு அடைத்த உணர்வை அடைவேன். அந்த சோற்றை அள்ளி வாயில் போடுவதே சலிப்பாக தெரியும். பலவீனமாக ’சாப்பிடுடா’ என்பாள் அம்மா. தலையசைத்து முகம் கழுவிக்கொள்வேன்.

எம்.ஏ யில் பல்கலைக்கழகத்தில் இரண்டாமிடத்தில் வந்தேன். உடனே அதே யூனிவர்சிட்டி கல்லூரியில் விரிவுரையாளராக வேலை கிடைத்தது. ஆணை கைக்கு வந்த அன்று மதியம் நேராக கெத்தேல் சாகிப் கடைக்குத்தான் போனேன். கடை திறக்கவில்லை. நான் பின்பக்கம் சென்றேன். சாக்குப்படுதாவை விலக்கிப் பார்த்தேன். பெரிய உருளியில் கெத்தேல்சாகிப் மீன்குழம்பை கிண்டிக்கொண்டிருந்தார். முகமும் கைகளும் சிந்தனையும் எல்லாம் குழம்பில் இருந்தன. அது ஒரு தொழுகை போல. அவரை கூப்பிடுவது சரியல்ல என்று தோன்றியது. திரும்பி விட்டேன். மதியம் கெத்தேல் சாகிப் என் இலைக்கு சோறு போடும்போது நிமிர்ந்து அவர் முகத்தைப்பார்த்தேன். அதில் எனக்கான எந்த பார்வையும் இல்லை. சொல்லவேண்டாம் என்று தோன்றியது. அந்தச் செய்திக்கு அவரிடம் எந்த அர்த்தமும் இல்லை.

சாயங்காலம் ஊருக்குச் சென்றேன். அம்மா மகிழ்ச்சி அடைந்தாளா என்றே தெரியவில்லை. எதையும் கவலையாகவே காட்டும் முக அமைப்பு அவளுக்கு. அப்பா மட்டும் ‘என்னடா குடுப்பான்?’ என்றார். ‘அது கெடைக்கும்…’ என்றேன் சாதாரணமாக. ‘ என்ன, எரநூறு குடுப்பானா?’ என்றார் . நான் அந்த கேள்வியில் இருந்த அற்பத்தனம் மிக்க குமாஸ்தாவைக் கண்டுகொண்டு சீண்டப்பட்டேன்.’ அலவன்ஸோட சேத்து எழுநூறு ரூபா…’ என்றேன். அப்பாவின் கண்களில் ஒரு கணம் மின்னி மறைந்த வன்மத்தை இறுதிக்கணம் வரை மறக்கமுடியாது. மாதம் இருபது ரூபாய்க்குமேல் சம்பளமே வாங்காமல் ஓய்வுபெற்றவர் அவர். தம்பிதான் உண்மையான உற்சாகத்துடன் துள்ளினான். ‘நீ இங்கிலீஷிலேதானே கிளாஸ் எடுக்கணும்…உனக்கு அப்டீன்னா நல்லா இங்கிலீஷ் பேசத்தெரியும் இல்ல? துரை மாதிரி பேசுவே இல்ல?’ என்று ததும்பிக்கொண்டே இருந்தான். அம்மா கோபத்துடன் ‘துள்ளுறது சரி, உள்ள பணத்தை சேத்து கீழ உள்ள கொமருகளை கரையேத்துற வழியப்பாருங்க’ என்றாள்.

தார்மிகமான ஒரு காரணத்தை கண்டுகொண்டபின் அவளுடைய ஆங்காரம் அவ்வழியாக வெளிவர ஆரம்பித்தது. ‘துள்ளினவள்லாம் எங்க கெடக்கான்னு கண்டேல்ல? தாழக்குடிக்காரிய அன்னைக்கு சம்முவம் கல்யாணத்திலே பாத்தேன். பூஞ்சம்புடிச்ச கருவாடு கணக்காட்டுல்லா இருந்தா…என்னா ஆட்டம் ஆடினா பாவி…சாமி நிண்ணு குடுக்கும்லா?’ என்றாள். ’ஏட்டி, நீ என்ன பேசுகே? இந்நா நிக்கானே உனக்க மவன், அவ போட்ட சோத்திலேல்லா படிச்சு ஆளானான்? நண்ணி வேணும் பாத்துக்க. நண்ணி வேணும்…’ என்றார் அப்பா. ‘என்ன நண்ணி? இம்பிடு சோறும் கொளம்பும் போட்டா. அதுக்கு உள்ளத கணக்கு போட்டு அவ மூஞ்சியிலே விட்டெறிஞ்சா போருமே…இல்லேண்ணா நாளைக்குப்பின்ன வேற கணக்கோட வந்து நிப்பா வாசலிலே, எளவெடுத்த சிறுக்கி’ அம்ம சொன்னாள் . அப்பா ‘சீ ஊத்த வாய மூடுடீ’ என்று சீறி எழ சண்டை எழுந்தது

மறுநாள் தாழக்குடிக்குப் போனேன். மாமா இறந்து இரண்டு வருடங்களாகிவிட்டிருந்தது. திடீரென்று ஒரு காய்ச்சல். நான்தான் ஆஸ்பத்திரியில் கூடவே இருந்தேன். ஈறில் ஏற்பட்ட காயம் வழி இதயம் வரை பாக்டீரியா சென்று விட்டது. மூன்றாம்நாள் இரவில் போய்விட்டார். காடாத்து முடிந்து அச்சகக் கணக்குகளைப்பார்த்தோம். இரண்டாயிரம் ரூபாய் வரை கடன் இருந்தது. கட்டிட உரிமையாளர் அச்சகத்தை காலிசெய்யவேண்டும் என்று சொன்னார். இயந்திரங்களை விற்று கடனை அடைத்தபின் மாமி எஞ்சிய மூவாயிரம் ரூபாய் பணத்துடன் தாழக்குடிக்கே வந்துவிட்டாள். அவள் வீட்டு பங்குக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. ஒரு வீட்டை ஒத்திக்கு எடுத்துக் கொண்டாள். ராமலட்சுமி பதினொன்றுக்கு மேல் படிக்கவில்லை. சின்னவள் எட்டாம் வகுப்பு. மாமி ஆடிப்போய்விட்டாள். நாள்செல்ல நாள்செல்ல பணம் கரைந்து அந்த பீதி முகத்தில் படிந்து அவள் மெலிந்து வறண்டு நிழல்போல ஆவதைக் கண்டேன். ஊருக்கு வரும்போது சென்று பார்த்து மரியாதைக்காக கொஞ்சம் பேசிவிட்டு மேஜையில் ஒரு பத்து ரூபாய் வைத்துவிட்டு வருவேன்.

வீட்டில் மாமி இல்லை. ராமலட்சுமி மட்டும்தான் இருந்தாள். அவளும் கொஞ்சம் புகைபடிந்ததுபோலத்தான் இருந்தாள். ஒரு அங்கணமும் திண்ணையும் சமையல்சாய்ப்பும் மட்டும்தான் வீடு. சுருட்டப்பட்ட பாய்கள் கொடியில் தொங்கின. தரை சாணிமெழுகப்பட்டிருந்தது. சிறிய மேஜை மேல் ராணிமுத்து நாவல். ராமலட்சுமி கொல்லைப்பக்கம் வழியாக வெளியே போய் பக்கத்துவீட்டில் இருந்து சீனியோ டீத்தூளோ வாங்கி வந்து எனக்கு கறுப்புடீ போட்டுக்கொடுத்தாள். மேஜை மேல் டம்ளரை வைத்துவிட்டு கதவருகே சென்று பாதி உடல் மறைய நின்றுகொண்டாள். நான் அவள் வகிடை மட்டும்தான் பார்த்தேன். அவள் சூட்டிகையான பெண். ஆனால் கணக்கு மட்டும் வரவே வராது. திருவனந்தபுரத்தில் அவளுக்கு கூட்டு வட்டியை மட்டும் நான் இருபதுநாளுக்குமேல் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவள் வேறு யாரோ ஆக இருந்தாள்.

பத்து நிமிடம் கழித்து எழுந்துகொண்டேன். ‘வாறேன்’ என்றேன். ‘அம்மை வந்திருவா’ என்றாள் மெல்லிய குரலில். ‘இல்ல வாறேன்…’ என்றபின் மேஜையில் ஒரு ஐம்பது ரூபாய் தாளை எடுத்து வைத்துவிட்டு வெளியே வந்தேன். ஊடுவழியில் நடக்கும்போது எதிரே மாமி வருவதைக் கண்டேன். அழுக்கு சேலையை சும்மாடாக சுற்றி வைத்து அதில் ஒரு நார்ப்பெட்டியை வைத்திருந்தாள். என்னை சாதாரணமாக பார்த்து அரைக்கணம் கழித்தே புரிந்துகொண்டாள். ‘அய்யோ மக்கா’ என்றாள். பெட்டியை நான் பிடித்து இறக்கி வைத்தேன். அதில் தவிடு இருந்தது. எங்கோ கூலிக்கு நெல்குற்ற போகிறாள். தவிடுதான் கூலி. அதை விற்கக் கொண்டுபோகிறாள் போல.‘வீட்டுக்கு வா மக்கா’ என்று கையை பிடித்தாள். ‘இல்ல. நான் போகணும். இண்ணைக்கே திருவனந்தபுரம் போறேன்…’ என்றபின் ‘வேல கெடைச்சிருக்கு…காலேஜிலே’ என்றேன். அவளுக்கு அது சரியாக புரியவில்லை. வறுமை மூளையை உரசி உரசி மழுங்கடித்துவிடுகிறது.

சட்டென்று புரிந்துகொண்டு ‘அய்யோ…என் மக்கா.. நல்லா இரு…நல்லா இருடே’ என்று என் கையை மீண்டும் பற்றிக்கொண்டாள். ‘உனக்கொரு வேலை கிடைச்சபிறவு கேக்கலாம்னு இருந்தேன். கேக்க எனக்கு நாதியில்லே மக்கா. இந்நான்னு தர என் கையிலே கால்சக்கரம் இல்லை. பாத்தியா, கண்டவனுக்கு நெல்லுக்குத்தி குடுத்து கஞ்சிகுடிக்கிறோம்… தவிடு விக்கலேன்னா அந்திப்பசிக்கு பச்சத்தவிடையாக்கும் திங்கிறது மக்கா…ஆனா நல்ல காலத்திலே நான் உனக்கு சோறு போட்டிருக்கேன். என் கையாலே கஞ்சியும் பற்றும் குடிச்சுத்தான் நீ ஆளானே. எட்டுமாசம் தினம் ரெண்டு வேளைன்னாக்கூட அஞ்ஞூறு வேளை நான் உனக்கு சோறும் கறியும் வெளம்பியிருக்கேன் பாத்துக்கோ. அதெல்லாம் உனக்க அம்மைக்கு இப்ப தெரியாது. அந்த நண்ணி அவளுக்கில்லேண்ணாலும் உனக்கிருக்கும்… மக்கா ராமலெச்சுமிக்கு உன்னை விட்டா ஆருமில்லே. சவத்துக்கு ராத்திரியும் பகலும் உனக்க நினைப்பாக்கும்…அவளுக்கு ஒரு சீவிதம் குடு ராசா…திண்ண சோத்துக்கு நண்ணி காட்டேல்லேண்ணா அதுக்குண்டான கணக்க நீ சென்மசென்மாந்தரமா தீக்கணும் பாத்துக்கோ’

அவளிடம் விடைபெற்று பஸ்ஸில் ஏறியபோது வேப்பங்காய் உதட்டில் பட்டது போலக் கசந்தது. வாயே கசப்பது போல பஸ்ஸில் இருந்து துப்பிக்கொண்டே வந்தேன். நேராகத் திருவனந்தபுரம் வந்தேன். வேலைக்குச் சேர்ந்து அந்த புதிய பொறுப்பின் பரபரப்பிலும் மிதப்பிலும் மூழ்காமல் இருந்திருந்தால் அந்தக்கசப்பை உடம்பெங்கும் நிறைத்து வைத்திருப்பேன். முதல்மாதச் சம்பளம் வாங்கியதும் அம்மாவுக்குப் பணம் அனுப்பியிருந்தேன். அம்மா பதில் கடிதத்தில் ’சுப்பம்மா வந்து உன் அப்பாகிட்டே பேசியிருக்காள். உங்க அப்பாவுக்கும் அரை மனசுதான். அது நமக்கு வேண்டாம் கேட்டியா? அவங்க செய்ததுக்கு நூறோ ஆயிரமோ அந்தக்குட்டி கல்யாணத்துக்கு குடுத்திருவோம். நாம யாருக்கும் சோத்துக்கடன் வச்சமாதிரி வேண்டாம். இப்பம் நல்ல எடங்களிலே கேக்கிறாங்க. நல்லாச் செய்வாங்க. பூதப்பாண்டியிலே இருந்து ஒரு தரம் வந்திருக்கு. பாக்கட்டுமா’ என்று கேட்டிருந்தாள். இரவெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். சலித்துப்போய் தூங்கிவிட்டேன். காலையில் மனம் தெளிவாக இருந்தது. அம்மாவுக்கு ‘பாரு. பொண்ணு கொஞ்சம் படிச்சவளா இருக்கணும்’ என்று எழுதிப் போட்டேன்.

முதல் மாதமே கேண்டீன் சாமிநாத அய்யர் நடத்திய இருபதாயிரம் ரூபாய் சீட்டு ஒன்றில் சேர்ந்திருந்தேன். மாதம் ஐநூறு ரூபாய் தவணை வரும். அதை நாலாயிரம் ரூபாய் தள்ளி ஏலத்தில் எடுத்தேன். பதினாறாயிரம் ரூபாய் மொத்தமாக மாத்ருபூமி நாளிதழ்தாளில் சுருட்டி கையில் கொடுத்துவிட்டார். எல்லாமே நூறு ரூபாய்க்கட்டுகள். அத்தனை பணத்தை நான் என் கையால் தொட்டதில்லை. ஒருவிதமான திகில் கைகளைக் கூச வைத்தது. அறையில் கொண்டு வந்து வைத்து அந்த நோட்டுக்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். இத்தனை பணத்தை என் கையால் நான் சம்பாதிப்பேன் என எப்போதும் எண்ணியதில்லை. அதைவைத்து திருவனந்தபுரத்தில் புறநகரில் ஒரு சிறிய வீட்டைக்கூட வாங்கிவிடமுடியும். கொஞ்ச நேரத்தில் அந்தப்பணம் என் கைக்கும் மனதுக்கும் பழகிப்போன விந்தையை நினைத்துப் புன்னகைத்துக்கொண்டேன்.

மதிய நேரம் கெத்தேல் சாகிப் கடைக்குப்போனேன். கடை திறந்ததும் உள்ளே சென்று உண்டியலில் பணத்தை போட ஆரம்பித்தேன். பெட்டி நிறைந்ததும் கெத்தேல் சாகிபிடம் வேறு பெட்டி கேட்டேன் .’டா அமீதே பெட்டி மாற்றெடா’ என்றார். பையன் பெட்டியை மாற்றிவைத்ததும் மீண்டும் போட்டேன். மொத்தப்பணத்தையும் போட்டபின் கைகழுவிவிட்டு வந்து அமர்ந்தேன். கெத்தேல் சாகிப் இலைபோட்டு எனக்குபிரியமான கொஞ்சு பொரியலை வைத்தார். சோறு போட்டு குழம்பு ஊற்றினார். அவரிடம் எந்த மாறுதலும் இருக்காதென்று எனக்கு நன்றாக தெரிந்திருந்தது. ஒரு சொல் இல்லை. அப்பால் இரு பையன்கள் ஒண்டியது போல அமர்ந்திருந்தார்கள். வெளிறிய நாயர் பையன்கள். சத்தற்ற பூசணம்பூத்த சருமம். வெளுத்த கண்கள். கெத்தேல் சாகிப் அள்ளி வைத்த கறியை முட்டி முட்டி தின்றுகொண்டிருந்தார்கள். கெத்தேல் சாகிப் இன்னொரு துண்டு கறியை ஒருவனுக்கு வைக்க அவன் ‘அய்யோ வேண்டா’ என்று எழுந்தே விட்டான். கெத்தேல் சாகிப் ‘தின்னுடா எரப்பாளிடே மோனே’ என்று அவன் மண்டையில் ஓர் அடி போட்டார். பலமான அடி அவன் பயந்து அப்படியே அமர்ந்துவிட்டான். கண்ணில் காரத்தூள் விழுந்ததோ என்னவோ, அழுதுகொண்டே சாப்பிட்டான்.

கெத்தேல் சாகிப் மாறி மாறி கோழியும் குழம்பும் மீனும் கொஞ்சுமாக பரிமாறிக்கொண்டிருந்தார். நான் எதிர்பார்த்தது அவரது கண்களின் ஒரு பார்வையை. நானும் ஒரு ஆளாகிவிட்டேன் என்று என் தாய்க்கு தெரியவேண்டாமா இல்லையா? அனால் அவரது கண்கள் வழக்கம்போல என்னை சந்திக்கவேயில்லை. மீண்டும் மீன்கொண்டுவைக்கும்போது கனத்த கரடிக்கரங்களைப் பார்த்தேன். அவை மட்டும்தான் எனக்குரியவைபோல. அவை என் வயிற்றை மட்டுமே அளவெடுக்கும்போல.

அன்று ஊருக்கு கிளம்பிச்சென்றேன். ராமலட்சுமியை அடுத்த ஆவணியில் திருமணம்செய்து கூட்டிவந்தேன்

சரித்திரம் பேசுகிறது – ” யாரோ” – ஹர்ஷவர்த்தனன்-2

 

ஹர்ஷவர்த்தனன்-2

Image result for harsha rajyasri kannoj

 

தானேஸ்வரம் கண்ணீரில் தத்தளித்தது.

கவியரசர் பாணர் ராஜ்யவர்த்தனனுக்கும் செய்தி அனுப்பினார்.

அந்த நேரத்தில் ராஜ்யவர்த்தன் ஹூணர்களைப் போரில் வென்று அவர்களை அடியோடு அழித்திருந்தான்.

இனி இந்திய சரித்திரத்தில் ‘ஹூணர்’ என்ற பெயர் வராதபடி செய்தான்.

தானேஸ்வரம் திரும்புமுன் வெற்றியைக் கொண்டாட படைவீரர்களுடன் விருந்திற்கும், கேளிக்கைக்கும் ஏற்பாடு செய்திருந்தான்.

அந்த கோலாகலத்தில் இடி விழுந்தது.. அது பாணரின் ஓலை வடிவில் வந்தது..தந்தையின் மரணச்செய்தியைச்  சுமந்து வந்தது.

தந்தை மீது பாசம், மதிப்பு, நட்பு எல்லாம் கொண்டவன் ராஜ்யவர்த்தன்.  இடிந்தே போனான். காற்று வேகக் குதிரையில் தானேஸ்வரம் வந்தான்.

ஹர்ஷன் அழுதான்.

சில விஷயங்கள் சொல்லப்படாததால் நன்மை பயக்கிறது. 

ஹர்ஷன் – தந்தை தன்னை அரசனாக்க எண்ணியதை அண்ணனிடம் கூறவில்லை.

ராஜ்யவர்த்தனின் மனமோ சோகத்தில் வெறுத்து விட்டது.

“ஹர்ஷா… உனக்கு வயது பதினாறு… ஆயினும் அரசனாகக் கூடிய எல்லாத் தகுதிகளும் உனக்கு உள்ளது. நீயே  அரசனாகி விடு. எனக்கு அரசனாவதைவிட இறையருள் நாடி துறவு செல்லவே ஆசைப்படுகிறேன். தந்தையின் மறைவு என்னை மிகவும் பாதித்துவிட்டது”

 ஹர்ஷன் அழுதான்.

“அண்ணா! நீயே அரசன். தந்தைக்குப் பின் நீயே என் தந்தை.”

ராஜ்யவர்த்தன் ஒருவாறு தேறினான்.

மறுநாளே முடி சூடினான்.

மகுடம் தலை மேல் ஏறியவுடன்…சேதி வந்தது..

நேரம் சரியில்லை என்றால் …கேட்ட செய்திகள் சேர்ந்தே வரும்..

மாளவ மன்னன் தேவகுப்தன் மௌகாரியைத் தாக்கி கிரகவர்மனைக் கொன்று – ராஜ்யஸ்ரீயை சிறையெடுத்த செய்தி தான் அது.

ராஜ்யவர்த்தன் கொதித்தெழுந்தான்.

ராஜ்யவர்த்தன் :“ஹர்ஷா… நான் படைகளுடன் இன்றே புறப்பட்டு தேவகுப்தனைக் கொன்று அக்காவை சிறை மீட்டு வருகிறேன்”

ஹர்ஷன்: “நானும் வருகிறேன்”

ராஜ்யவர்த்தன்: “கூடாது.. நீ இங்கே இருந்து ஆட்சியைப பார்த்துக்கொள்..”

சில சமயம் ..உள் மனது.. நடக்கப்போவதை .. வாய் வழியாக சொல்லி விடும்

ராஜ்யவர்த்தன் :“மேலும் ..போரில் எனக்கு ஏதாவது ஆகி விட்டால் .. நாட்டுக்கு நீ தான் கதி”

ஹர்ஷன்:“அண்ணா! உனக்கு என்றுமே வெற்றிதான்..அக்காவை உடனடியாக மீட்க வேண்டும். வீரம் என்றுமே வெல்லும். ஆயினும் அது விவேகத்துடன் செயல்பட வேண்டும். அதுமட்டுமல்லாது – கூட்டணிகள் என்றும் பலம் சேர்க்கும். யசோதர்மன் –குப்தர் கூட்டணி – அந்நாளில் ஹூணர்களை எப்படி வென்றது – என்பதைத் தாங்கள் நன்கு அறிவீர்கள்..”

ஹர்ஷனின் அறிவுக்கூர்மையையும் – அவனது சரித்திர அறிவும் – யுத்த அறிவையும் கண்டு வியந்த

ராஜ்யவர்த்தன் : “ஹர்ஷா … உன் மனதில் உள்ளதைக் கூறு.” – என்றான்.

ஹர்ஷன் தொடர்ந்தான்:

“காமருபத்தின் (இந்நாள் அஸ்ஸாம்) மன்னன் பாஸ்கரவர்மனை அறிவீர்களா?”

ராஜ்யவர்த்தன் திகைத்தான்.

“நமது அக்கா ராஜஸ்ரீயின் திருமணத்திற்கு வந்த பாஸ்கரவர்மனை பார்த்திருக்கிறேன்..ஆனால் பரிச்சயம் பெரியதாக ஒன்றுமில்லை”

ஹர்ஷன் : “அண்ணா … அக்காவின் கல்யாண விழாவில் பாஸ்கரவர்மனை நான் சந்தித்தேன்… என்னை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. காமரூபம் வரும்படி என்னை அழைத்தான்..நம் குடும்பம் அனைவரையும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. தேவகுப்தனுக்கு எதிராக படையுதவி கேட்டு – நாம் பாஸ்கரவர்மனிடம் கூட்டு சேரவேண்டும். அவன் கிழக்கிலிருந்து தாக்க – நீங்கள் வடக்கிலிருந்து தாக்க – தேவகுப்தன் தப்ப முடியாது”  

ராஜ்யவர்த்தன் அசந்து போனான்..

“உத்தமம்.. அப்படியே செய்வோம்”

புறா வழி ஓலை பாஸ்கரவர்மனிடம் சென்றது. அவனும் படையுடன் புறப்பட்டான்.

பத்தாயிரம் குதிரை வீரர்கள் கொண்ட படையுடன் ராஜ்யவர்த்தனனும் துரிதமாகச் சென்றான்.

– கன்னோசி நோக்கிப் புறப்பட்டான்.

 

கன்னோசி:

ராஜ்யஸ்ரீ – அரண்மனை சிறையில் காவலில் இருந்ததாள்.

காவலர்கள் அனைவரும் மாளவத்து வீரர்கள்.

அதில் ஒருவனது மனைவி கன்னோசி நகரத்தவள்..பெயர் ரதி.

ராஜ்யஸ்ரீயின் தோழி அவள் – பணிப்பெண்ணாக இருந்தவள்.

தலைவியின் துயர் கண்டு – ரதி துடித்தாள்..

அவளது கணவன் சிறையில் காவலனானப் பணிபுரிந்தான். கணவன் துணையால் அரசி ராஜ்யஸ்ரீயை இரவோடு இரவாக – சுரங்கப்பாதை வழியாக நகரின் எல்லைக்கு கொண்டு வந்தாள்.

“மகாராணி… உங்கள் நிலை கண்டு என் குலை நடுங்குகிறது..இந்தக் குதிரையில் ஏறி தெற்கு நோக்கி சென்று தங்களைக் காத்துக்கொள்ளுங்கள். நகரம் வழியாகச் செல்லாமல் – காட்டு வழியில் சென்று

விடுங்கள். விந்தியக் காடுகளில் உங்களுக்கு இந்த தேவகுப்தனால் ஆபத்து இருக்காது. விரைவில் உங்களைத் தேடி உங்கள் தம்பியர் வருவர். அவர்களுக்கு நான் சொல்லி அனுப்புவேன்  ” – பணிப்பெண் ரதி நடுங்கும் குரலில் கூறினாள்.

“ரதி…உன் உதவி – சீதைக்கு அனுமன் செய்ததை விட குறைந்தது அல்ல” – ராஜ்யஸ்ரீ குதிரையில் ஏறி – விந்தியக்காடு நோக்கி நெடும் பயணம் தொடங்கினாள்.

அரண்மனையில் சிறையிலிருந்து ராஜ்யஸ்ரீ காணாமல் போனதை அறிந்த தேவகுப்தன் திகைத்தான்.

மந்திரி சபையைக் கூட்டினான்.

மந்திரி சொன்னான்:

“மன்னா ! இப்பொழுது நாம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ராஜ்யஸ்ரீ காணாமல் போனதும் ஒரு வகையில் நல்லதுக்குத்தான். நாமே அவளை விடுவித்து விட்டதாக அறிவித்துவிடுவோம். பின்னர் ராஜ்யவர்த்தனன் – நம்மை தாக்குவதற்கு பதில் ராஜ்யஸ்ரீயைத் தேடத் தொடங்குவான். நாம் பொறுத்திருப்போம்”

தேவகுப்தனுக்கு மந்திரியின் யோசனை பிடித்தது.

காமரூபத்தின் பாஸ்கரவர்மனின் படைகள் – ராஜ்யவர்த்தனின் படைகள் இரண்டும் ஒரே சமயம் தேவகுப்தனைத் தாக்கின. வங்காளத்தின் கெளட ராஜ்யத்தின் மன்னான் சசாங்கன் தேவகுப்தனுடன் கூட்டு சேர்ந்திருந்தான். தேவகுப்தன் போரில் கொல்லப்பட்டான்.மாளவப்படைகள் சிதறி ஓடின. சசாங்கன் ராஜ்யவர்த்தனனை சந்தித்தான்.

சசாங்கன்:  ராஜ்யவர்த்தனா! நான் தேவகுப்தனின் நண்பன் தான். ஆனால் ராஜ்யஸ்ரீயை சிறையெடுக்க வேண்டாம் என்று தேவகுப்தனிடம் கூறினேன். அவன் சிறைவைத்ததை அறிந்து – அவனிடம் பேசி அவளை விடுவித்தேன். அவள் சென்ற இடம் தெரியவில்லை. அது தெரிந்த சில பேர்களை நான் இன்று இரவு என் மாளிகைக்கு அழைத்து வருகிறேன். நீ இன்று மாலை எனது விடுதிக்கு வந்தால் அவர்களுடன் பேசலாம்” – என்றான்.

வஞ்சகர்களுக்கு பொய்யும்-சதியும் பெரும் பொழுதுபோக்கோ?  

ராஜ்யவர்த்தனுக்கு – அக்காவை கண்டு பிடிக்கும் அவசரம்.

சசாங்கன்:”மேலும் இந்தப்போர் முடிவுக்கு வர நாம் உடன்படிக்கை செய்து கொள்வோம். இன்றிரவு”

வலைகளில் சிங்கமும் சிக்குவதுண்டே!

அன்றிரவு..ராஜ்யவர்த்தன் நயவஞ்சகமாகப் படுகொலை செய்யப்பட்டான்..

பொன்னியின் செல்வன் கதையின் ஆதித்தகரிகாலனின்அகால மரணம் போல.

தானேஸ்வரம் மீண்டும் கண்ணீர்க்கடலில் மூழ்கியது.

ராஜ்யவர்த்தனன் மறைவு ஹர்ஷனை ஆட்டிவிட்டது.

அவனது  தலை வேகமாக ஆடியது..

அவன் அணிந்திருந்த ஆபரணங்களிருந்து மாணிக்கப்பரல்கள் சிதறி – நெருப்புத் துண்டுகள் போல் தெறித்தன.  உதடுகள் துடிப்பதை நிறுத்தவில்லை. அவை அனைத்து அரசர்களது இரத்தத்தை உறிஞ்சத் துடிப்பது போலத் துடித்தது. சிவந்த கண்கள் எரிமலையை ஒத்தது. உடலெங்கும் வேர்வை மழையானது.

கை கால்கள் வீரத்தில் துடித்தது.

ஹர்ஷன்: “அந்த துரோகி சசாங்கன் அழிய வேண்டும். ஆனால் முதலில் அக்காவைக் காக்க வேண்டும்”.

உடனே புறப்பட முடிவு செய்தான்.

மந்திரிகள் : “ஹர்ஷா! நீ உடனடியாக முடிசூட வேண்டும். பின் படையெடுத்துப் போகலாம்”

ஹர்ஷன் அன்றே மன்னனாக மகுடம் சூடினான். உடனே புறப்பட்டான்.

ஒற்றர்கள் மூலம் ராஜ்யஸ்ரீயின் பணிப்பெண் ரதியின் உதவியால் ராஜ்யஸ்ரீ விந்தியமலைக் காட்டில் இருப்பதை அறிந்தான். மத்திய இந்தியாவின் காட்டில் அவனது படைவீரர்கள் வலை போட்டுத் தேடினர். காட்டில் வசித்த விவசாயிகள் அறுவடை செய்து கொண்டிருந்த காலம் அது. சிலர் மரம் வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்கள் யாருக்கும் இளவரசியின் இருப்பிடம் தெரியவில்லை. ஒரு கிராமத்தில் புத்த பிக்ஷுக்கள் மற்றும் சன்யாசிகள் இருந்தனர். அவர்களிடம் ஹர்ஷன் விசாரித்தான். அவர்கள் கூற்றுப்படி அருகாமையில் சில பெண்கள் சமீபத்தில் அங்கு வந்தனராம்  – பரதேசி போல உள்ளனராம்  – உடலில் காயங்களுடன் பித்தர்கள் போல அவர்கள் திரிகின்றனராம். 

ராஜ்யஸ்ரீ- அந்த அடர்ந்த காட்டில் – திக்கற்ற பாவையாக – அலைந்து திரிந்தாள்.

பித்துப் பிடித்தவள் போல் ஆனாள்.

இரவுகள் இரக்கமற்றிருந்தது.

சந்திரனை மேகங்கள் கைது செய்த நேரமது.

ராஜ்யஸ்ரீக்கு வாழ்வது தேவையா என்று தோன்றியது.

காட்டில் ஒரு சிறிய கோவிலில் தீபம் எரிந்தது.

புத்தரின் ஆலயம்.

‘ஆஹா… புத்தர் ஆலயத்தில் .. எனக்கு இன்று இவ்வுலகிலிருந்து விடுதலை’ – வாழ்க்கையின் ஓரத்திற்கு வந்துவிட்டாள். காய்ந்த கட்டைகளை அடுக்கி – தீபத்தின் நெருப்பில் பற்றவைத்தாள்.

புத்தரைத் தியானித்தாள்: “தந்தையை  இழந்தேன்.. கணவனை இழந்தேன்…தம்பி பிரபாகரனையும் இழந்தேன்… உன் திருவடியில் எனது  உயிரையும் இழக்க சித்தமானேன்.என்னை ஏற்றுக்கொள்வீரே”

எரியும் தழல் ..‘வா… அருகில் வா… தா… உயிரைத் தா… “ – என்பது போல் நெளிந்துச் சிவந்தது.

புத்தரின் முகம் புன்முறுவலில் இருந்தது..

அந்நேரம் அருகில் ஆள் நடமாட்டம் அரவம் கேட்டது …

சசாங்கனின் படைவீரர்கள் தன்னைக் கண்டு பிடித்து விட்டனரோ?- என்ற கவலை ஒரு கணம்..

மறுகணமே..சாகத் துணிந்தவள் நான்.. எனக்கு வேறென்ன பயம்?

நெருப்பில் விழப்போனாள்.

படைவீரர்களின் முன்னிலையில் ஹர்ஷன் குதிரையில் வந்தான்.

அக்கா அனலில் விழவிருந்த நிலை பார்த்தான்.

‘அக்கா…’ – என்று கதறினான்.

ராஜ்யஸ்ரீ : ‘ஹர்ஷா! நீயா!’

சில நேரங்களில் சில உண்மைக்காட்சிகள் ‘கதை’களை விஞ்சி நிற்கும்.

விதி தங்கள் குடும்பத்தை எப்படி ஆட்டி விட்டது என்று பேசி இருவரும் கண்ணீரில் குளித்தனர்.

அதே விதி தங்கள் இருவரையும் சேர்த்தது குறித்து ஆனந்தக் கண்ணீரில் பேசிக் கொண்டனர்

அப்பேர்ப்பட்ட செண்டிமெண்ட் தருணம் அது.

ராஜ்யஸ்ரீ: “ஹர்ஷா! நான் காணாத துன்பங்கள் இல்லை. இனி எனக்கு சுகவாழ்வு வேண்டாம்.. கருணை பிரான் புத்தரின் பக்தையாக – ஒரு புத்த பிக்ஷுணியாக என் காலத்தைக் கழிக்க ஆசைப்படுகிறேன்..”

ஹர்ஷன்:” அக்கா அதை நான் அனுமதிக்க முடியாது” – அதை ஒரு தம்பியாகச் சொல்வதை விட ஒரு மன்னனாகச் சொல்வது போல் தோன்றியது. பாசம் இருந்தாலும் அரசியல் அவனது எண்ணங்களைப் பேச வைத்தது.

‘ராஜ்யஸ்ரீயை வைத்துத்தான் கன்னோசியை வெல்ல முடியும்..ஆளவும் முடியும்”- அரசியலை நன்கு அறிந்தவன் ஹர்ஷன்.

ஹர்ஷன் ராஜ்யஸ்ரீயுடன் கன்னோசி அடைந்தான்.

சசாங்கன் கன்னோசியில் இருந்தான்.

ஹர்ஷன் படைகளின் தாக்குதலில் சசாங்கன் தப்பி ஓடினான்.

ஓடிய சசாங்கன் தன் நாடு (வங்காளம்) – செல்லுமுன் புத்தகயாவை அடைந்தான்.

தன் மதத்தில் – வெறி கொண்ட – அவன் உன்மத்தம் கொண்டிருந்தான்.

சரித்திரத்தில் இடம் பெறுமாறு ஒரு பாதகச் செயல் செய்தான்.

புத்தரின் மகாபோதி கோவிலிலிருந்த போதிமரம் வானுயுர்ந்து அமைதி காத்தது.

புத்தருக்கு அமைதியையும் ஞானத்தையும் தந்த அதே போதிமரம் … சசாங்கனுக்கு வெறியை ஊட்டியதோ?

அதை முழுதுமாக வெட்டிச் சாய்த்தான்..

வங்காளத்திலிருந்த புத்த ஸ்தூபிகளை உடைத்துத் தீர்த்தான்.

சமயவெறி!

ஹர்ஷன் உடனே கன்னோசியைத் தன் தலைநகராக்கினான்.

அடுத்து, வாலாபியைச் சேர்ந்த இரண்டாம் துருவசேனருக்கு எதிராகப் போரிட்டு அவரைத் தோற்கடித்தான். இரண்டாம் துருவசேனர் கப்பம்கட்டும் சிற்றரசரானான்.

சசாங்கனைத் துரத்தியடித்தாலும் – அவனை முழுவதுமாக வெல்ல முடியவில்லை.

சசாங்கன் வங்காளத்தில் ஆட்சி தொடர்ந்தது.

ஹர்ஷன் வட இந்தியாவின் வலிமைமிக்க தலைவரானான்!

தனக்கு பலம் உள்ளது என்று அறிந்தால் தோள்கள் தானாகவே தினவெடுக்கும்…

ஹர்ஷனுக்கும் தினவெடுத்தது.

நர்மதா ஆற்றுக்குத் தெற்கே மேலைச்சாளுக்கியநாட்டில் வாதாபி நகரம் செல்வக் களஞ்சியமாக இருந்தது.

அதன் மன்னன் இரண்டாம் புலிகேசி.

வருடம் கி பி 618:

ஹர்ஷன் – புலிகேசிக்கு ஓலை அனுப்பினான்:

‘இந்தியாவின் மாபெரும் சக்கரவர்த்தியான ஹர்ஷனுக்குக் கப்பம் கட்டும் மன்னனாகி அடங்கினால் உனது  நாடு பிழைக்கும் –இல்லையேல் எங்கள் யானைகள் புலி(கேசி)யை நசிக்கிவிடும்’

புலிகேசி பதில் ஓலை அனுப்பினான்:

“புலிகளும் உண்டு – யானைகளும் உண்டு இங்கே! நர்மதையைத் தாண்டினால் உனது யானைகள் எமது  யானைக்கு பலியாகும்”

ஹர்ஷன் தனது படையெடுப்பை நடத்தினான்.

இருவரும் சொன்னபடி யானைப்படைகளே இருபுறத்திலும் பிரதானமாக இருந்தது.

நர்மதை ஆற்றங்கரையில் நடந்தது கோர யுத்தம்.

யானைகள் – யானைகளைத் தாக்க – ஆறு சிவந்தது..

புலிகேசி நர்மதா நதியின் தென் பகுதியில் தனது யானைப்படைகளைத் திறமையாகப் பிரித்து வைத்திருந்தான்.   திடீரென்று பலத் திசைகளில் புலிகேசியின் யானைகள் தாக்கவே – ஹர்ஷனின் யானைகள் நிலை குலைந்தன. ஒரே நாளில் ஹர்ஷனது யானைகளில் பெரும்பகுதி அழிந்தது.

தோல்வியே கண்டிராத ஹர்ஷன் இதை எதிர்பார்க்கவில்லை.

அரசியல் விவேகம் நிறைந்த ஹர்ஷன் – புலிகேசியை சந்தித்து – உடன்படிக்கைக்கு வந்தான்.

‘இந்த நர்மதா நதி நமக்கு எல்லைக்கோடு.. இதைத் தாண்டி நானும் வரமாட்டேன்… நீயும் வரக்கூடாது’- அது ‘வின்னர் வடிவேல்’ ஸ்டைலில் சொல்லப்பட்டதோ என்னவோ? – யாரறிவர்?

நேபாளம் ஹர்ஷனின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டது. காஷ்மீர் ஆட்சியாளர் கப்பம் செலுத்தி வந்தார். அஸ்ஸாம் ஆட்சியாளரான பாஸ்கரரவிவர்மனுடன் ஹர்ஷன் இணக்கமான உறவைக் கொண்டிருந்தான். கலிங்கத்தின்மீது படையெடுத்து வெற்றி கொண்டதே ஹர்ஷனது இறுதியான போர் நடவடிக்கையாகும்.

தொடக்கத்தில் சிறந்த சிவபக்தராக இருந்த ஹர்ஷன்-பின்னர் ராஜ்யஸ்ரீயின் அறிவுரையால் ஹீனயான புத்த சமயத்தை பின்பற்றத் தொடங்கினான். யுவான் சுவாங் என்னும் சீன யாத்திரிகர் அவனை மகாயான புத்த சமயத்திற்கு மாற்றினார். ஹர்ஷர் தனது ஆட்சிக் காலத்தின் முடிவில் சீனப் பயணி யுவான் சுவாங்கை கௌரவிப்பதற்காக கன்னோசி நகரில் ஒரு சமயப் பேரவையைக் கூட்டினார். அதற்கு, அனைத்து சமயப் பிரிவுகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தார். இருபது அரசர்களும், நாளந்தா பல்கலைக்கழகத்திலிருந்து ஆயிரம் அறிஞர்களும், மூன்றாயிரம் ஹீனயான, மகாயான பிரிவினரும், மூன்றாயிரம் சமண மற்றும் பிராமண சமயத்தவரும் பேரவைக்கு வந்திருந்தனர். தொடர்ந்து இருபத்திமூன்று நாட்கள் பேரவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகாயான கோட்பாட்டின் மதிப்புகளையும், மற்ற கோட்பாடுகளைவிட அது உயர்ந்தது என்பதையும் யுவான்சுவாங் விளக்கிக் கூறினார். இருப்பினும் வன்முறைகளும் பந்தலுக்கு தீவைத்த நிகழ்ச்சிகளும் பேரவை நடவடிக்கைகளை மாசுபடுத்தின.

சமயமும் வன்முறையும் என்றும் சேர்ந்தே இருப்பது – என்ன ஒரு சாபக்கேடோ?

ஹர்ஷரது உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட்டது. ஆனால், விரைவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். பேரவையின் இறுதி நாளன்று யுவான் சுவாங்கிற்கு விலை மதிப்புமிக்க பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பிரயாகை என்றழைக்கப்படும் அலகாபாத்தில் நடைபெற்ற மாநாடு – ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஹர்ஷர் கூட்டும் மாநாடு ஆகும். அனைத்து சமயப் பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கும் ஹர்ஷர் தனது ஏராளமான செல்வத்தை ஹர்ஷர் வாரி வழங்கினார். கருவூலம் காலியான நிலையில் தனது உடைகள், அணிகலன்கள் அனைத்தையும்கூட ஹர்ஷர் தானமாக வழங்கினார் என்று யுவான் சுவாங் சொல்கிறார்.

நாற்பத்தொரு வருடம் ஆட்சி!

இங்கு சுபம் என்று போட்டு இந்தக் கதையை முடித்து விடலாம் தான்.. இருப்பினும் காலம் ஒவ்வொரு சரித்திர ஏட்டிலும் முடிவில் திருப்பங்களை எழுதி வைக்கிறது.

ஹர்ஷன் துர்காவதியை மணந்திருந்தான். இருவருக்கும் வாக்கியவர்த்தனன், கல்யாணவர்த்தனன்- என்று இரு மகன்கள். இருவரையும் ஒரே நாள் – ஹர்ஷனின் முதல் மந்திரி அருணாஷ்வா – கொலை செய்தான்..

ஹர்ஷன் மனமொடிந்தான். கி பி 647ல் – அவன் இறந்தபோது ..அந்த பெரும் ராஜ்யத்தை ஆள – ஒரு வாரிசும் இல்லை.. ராஜ்ஜியம் சிதைந்து போனது..

சரித்திரம் சற்றே கண்ணிர் சிந்தி விட்டு .. அடுத்த கதை சொல்ல வருகிறது…

சரித்திரம் நதி போல … யாருக்கும் அது காத்திருப்பதில்லை. ஓடிக்கொண்டே இருக்கும்…

அடுத்த நாயகன் யாரோ?

பார்ப்போம் விரைவில்.

 

அம்மா கை உணவு (18) – வடை வருது

Image result for vadaiImage result for vadaiImage result for வடை மாலை

Image result for ரச வடைImage result for தயிர் வடை

அம்மா கை உணவு (18)

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 

கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .

இட்லி மகிமை – ஏப்ரல் 2018

தோசை ஒரு தொடர்கதை – மே 2018

அடைந்திடு சீசேம் – ஜூன் 2018

ரசமாயம் – ஜூலை 2018

போளி புராணம் – ஆகஸ்ட் 2018

அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18

கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018   

கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018

சேவை செய்வோம் – டிசம்பர் 2018

பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019

பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019

வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019

பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019

ஊறுகாய் உற்சாகம் – மே 2019

பூரி ப்ரேயர் – ஜூன் 2019

இனிக்கும் வரிகள் – ஜூலை 2019

  வடை வருது ! வடை வருது !

 

உடலுக்கு நல்லதென்று இட்லி தின்னப் போனேன் !

எண்ணெய் இல்லா பண்டமென்று எண்ணிக்கொண்டு சென்றேன் !

வடையைக் கண்ட பின்னர் என் மனதில் மாற்றம் கொண்டேன் !

எடை, எண்ணெய் எல்லாம் விட்டு வடையில் கையை வைத்தேன் !

 

வாசம் பிடித்தால் போதும் எனக்கு வடை மேல் ஆசை கூடும் !

வாடைகாற்று தாங்கிடுவேன் இந்த வடைக்காற்று வாட்டும் !

மூக்கைத் துளைக்கும் வடையே என் மூளை கூட துளைக்கும் !

நாக்கை வெளியே இழுத்து என்னை ஆசை கொள்ள செய்யும் !

 

உளுந்து வடை போதும் நான் உலகம் சுற்ற வேண்டாம் !

மசால் வடை போதும் எனக்கு மற்ற சுகம் வேண்டாம் !

தின்ன தின்ன திகட்டாத சின்ன சின்ன வடையே !

டோனட்டை எள்ளி விடும் எங்கள் நாட்டு வடையே !

 

மொறு மொறுவென வடையினையே அம்மா செய்து தருவாள் !

விண்டு விட்டால் உள்ளே அது மெது மெதுவென இருக்கும் !

என்ன விந்தை இதுவென்று இறைவன் கூட திகைப்பான் !

நாள் கிழமை என்றால் அவனும் நாக்கை நீட்டி வருவான் !

 

வெறும் வடையே போதுமென்று நானும் நினைக்கையிலே !

சாம்பார் வடை ரசவடையென வெரைட்டி காட்டும் வடையே !

மோர்க் குழம்பு வடை கூட உப்புரப்பாய் இருக்கும் !

தயிர் வடையில் முடிந்தால் தான் என் ஆத்மா சாந்தி அடையும் !

 

வாழ்க்கையே உனக்கு விடை கொடுக்க நான் ரெடி !

வடையை மட்டும் விட மாட்டேன் கடைசி வரை ஒரு கடி !

ஒன்றிரண்டு மூணு நாலு முடிவில்லாத வடையடா !

அன்னை காட்டும் அன்பு போல திகட்டிடாத சுவையடா !      

 .

         

இன்றைய எழுத்தாளர் – ஜெயமோகன் அவர்கள்

Image result for ஜெயமோகன்

திரு ஜெயமோகன் அவர்களின் வலைப்பூவிலிருந்து தன்னைப்பற்றி அவரே கூறும் வரிகள்: 

 

தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெய்துகொண்டர்.

நான் , ஜெயமோகன், பிறந்தது 1962 ஏப்ரல் 22 ஆம்தேதி. சித்திரை மாதம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஜாதகம் முதலியவற்றில் நம்பிக்கை இல்லை. ஆகவே நட்சத்திரம் தெரியவில்லை. பிறந்தது அருமனை அரசு மருத்துவமனையில். அதன் பின் ஒன்றாம் வகுப்புவரை பத்மநாபபுரத்தில் குடியிருந்தோம். இரண்டாம் வகுப்பு முடிய கன்யாகுமரி அருகே கொட்டாரம் ஊரில். படிப்பு கொட்டாரம் அரசு தொடக்கப்பள்ளியில். பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது அப்பள்ளி. அதன் பின் முழுக்கோடு அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தேன். அப்போது ராஜு சார் அங்கே தலைமையசிரியராக இருந்தார். என் அப்பாவின் நண்பர். நான் பள்ளிக்கு வெளியே அதிகம் படிக்க காரணமாக அமைந்தவர். முழுக்கோடு பள்ளி அருகே குடியிருந்தோம். ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றுவரை அருமனை [நெடியசாலை] அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அங்கே சத்தியநேசன் சார் என் இலக்கிய ஆர்வத்துக்கு பெரிதும் காரணமாக அமைந்தார். 1978 ல் பள்ளிப்படிப்பு முடிந்தது

சிறுவயதில் முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நூலகம், அருமனை அரசு நூலகம் ஆகியவை நான் அதிகம் பயன்படுத்திய நூலகங்களாக இருந்தன. அதன்பின்னர் திருவட்டாறு ஸ்ரீ சித்ரா நூலகம். அங்குதான் மலையாள நாவல்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. பள்ளிநாட்களிலேயே எழுத ஆரம்பித்தேன். முதல்கதை ரத்னபாலா என்ற சிறுவர் இதழில் வெளிவந்ததாக நினைவு. இக்காலகட்டத்தில் குமுதம் விகடன் கல்கி இதழ்களில் பலபெயர்களில் கதைகள் வெளிவந்தன. ‘பாரிவள்ளல்’ என்ற குமுதம் உதவியாசிரியர் எனக்கு ஊக்கமூட்டி கடிதங்கள் எழுதினார்.

புகுமுக வகுப்பு மார்த்தாண்டம் [இப்போது நேசமணி நினைவு] கிறித்தவக் கல்லூரியில். வணிகவியல் துறை. 1979ல். ஆர்தர் ஜெ ஹாரீஸ் முதல்வராக இருந்தார். ஐசக் அருமை ராசன் தமிழ்த்துறையில் இருந்தார். இருவரும் அக்கால ஆதர்சங்கள். 1980ல் நாகர்கோயில் பயோனியர் குமாரசாமிக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்தேன். அப்போது ஆர்தர் டேவிஸ் முதல்வராக இருந்த காலம். டாக்டர் மனோகரன் வணிகவியல் துறைத்தலைவர். 1982ல் கல்லூரிப்படிப்பை முடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினேன்.

என் உயிர் நண்பனாக இருந்த ராதாகிருஷ்ணனின் தற்கொலை என்னை அமைதியிழக்கச் செய்தது. இக்காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் வேரூன்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பினால் ஆன்மீக நூல்களில் நாட்டம் ஏற்பட்டது. ஆகவே துறவியாக வேண்டுமென்ற கனவு உருவாகியது. இருவருடங்கள் பலவாறாக அலைந்திருக்கிறேன். திருவண்ணாமலை, பழனி, காசி ஆகிய ஊர்களில் இருந்திருக்கிறேன். பல சில்லறைவேலைகள் செய்திருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ் தொடர்பும் இக்காலகட்டத்தில் அவ்வப்போது இருந்தது.

1984ல் கேரளத்தில் காஸர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். தொழிற்சங்கத்தின் பெரிய கம்யூனில் தங்கியிருந்தேன். இடதுசாரி இயக்கங்களில் ஆர்வமும் பங்களிப்பும் ஏற்பட்ட காலம். அங்கிருந்த நூலகங்களில் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்தேன். இலக்கிய, கோட்பாட்டு விவாதங்களில் ஈடுபடும் பக்குவம் ஏற்பட்டது. இக்காலகட்டத்தில் பெற்றோரின் தற்கொலையால் நிம்மதியிழந்து தீவிரமாக அலைச்சலுக்கு ஆளானேன்.

1985ல் சுந்தர ராமசாமி அறிமுகமானார். என்னை இலக்கியத்துக்குள் ஆற்றுப்படுத்தினார். எழுதலாம் என்று சொல்லி ஊக்கமூட்டினார். எழுத்துக்கள் அதிகமும் அவருக்கே அனுப்பபட்டன. ஒரு மனநோயாளிக்குரிய தீவிரத்துடன் எழுதினேன்.’கைதி’ என்ற கவிதை 1987ல் கட்டைக்காடு ராஜகோபாலன் நடத்திவந்த ‘கொல்லிப்பாவை’ இதழில் வெளியாயிற்று. 1987 ல் கணையாழியில் ‘நதி’ அசோகமித்திரனின் சிறு குறிப்புடன் வெளியாயிற்று. அது ஒரு தொடக்கம். தொடர்ந்து நிகழ் இதழில் ‘படுகை’ ‘போதி’ முதலிய கதைகள் வந்து கவனிக்கப்பட்டன. இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா ஆகியோர் இக்கதைகளைப்பறி குறிப்பிட்டிருந்தார்கள்

1987ல் காஸர்கோடு வந்து என்னைச் சந்தித்து என்னுடன் தங்கியிருந்த கோணங்கி தமிழில் முதன்மையான செவ்வியல் தன்மை கொண்ட படைப்பாளியாக நான் வருவேன் என என்னிடம் சொன்னது அப்போது வெறும் மனக்குழப்பங்களுடன் மட்டுமே இருந்த எனக்கு பெரும் ஊக்கமாக இருந்தது. இக்காலகட்டத்தில் கோவை ‘ஞானி’யுடன் தொடர்பு ஏற்பட்டது. இலக்கியத்தின் சமூகப்பொறுப்பு பற்றிய பிரக்ஞையை அவரிடமிருந்தே பெற்றேன்.

1987ல்தான் ஆற்றூர் ரவிவர்மாவும் அறிமுகமானார். சுந்தர ராமசாமியின் இல்லத்தில். அது நீண்ட நட்பாக மாறி தொடர்கிறது. சுந்தர ராமசாமி, ஆற்றூர் இருவரும் வழிகாட்டிகளாகவும் நலம்விரும்பிகளாகவும் இருந்தார்கள். 1988 ல் குற்றாலம் இலக்கியப் பட்டறையில் யுவன் சந்திரசேகர் அறிமுகமானான். ஒரு நெடுங்கால நட்பாக அது அக்கனமே உருவாகியது. 1993ல்தான் நித்ய சைதன்ய யதியுடன் உறவு ஏற்பட்டது. அது 1997ல் அவர் மறைவதுவரை தீவிரமாக நீடித்தது.

1988ல் எழுதிய ரப்பர் நாவலை 1990ல் அகிலன் நினைவுப்போட்டிக்காக சுருக்கி அனுப்பினேன். அதற்கு விருது கிடைத்தது. தாகம் [தமிழ் புத்தகாலயம்] அதை வெளியிட்டது. அகிலன் கண்ணன் அதன் பதிப்பாசிரியர். அந்த வெளியீட்டு விழாவில் தமிழ் நாவல்களின் வடிவம் [தமிழ் நாவல்கள் தொடர்கதைகள் அல்லது குறுநாவல்களாக உள்ளன. நாவல்களுக்கு சிக்கலான ஊடுபிரதித்தன்மையும் தரிசன தளமும் தேவை] பற்றிய என் பேச்சு பல வருடம் நீண்ட விவாதங்களை உருவாக்கியது. அதன் நீட்சியாகவே 1992ல் நாவல் என்ற நூலை எழுதினேன்.

1988 நவம்பரில் பணி நிரந்தரம். 1989ல் தமிழ்நாட்டுக்கு மாற்றலாகி தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஊரில் தொலைபேசி நிலையத்தில் வேலைபார்த்தேன். 1990 வரை பாலக்கோடு. அதன் பின்னர் தருமபுரி தொலைபேசி நிலையம். 1997ல் நாகர்கோயிலுக்கு மாற்றலாகி வந்தேன். 1998 முதல் தக்கலை தொலைபேசி நிலைய ஊழியர். அலுவலக உதவியாளர் பணி. 2000 வரை பத்மநாப புரத்தில் குடியிருந்தேன். 2000த்தில் நாகர்கோயில் பார்வதிபுரத்தில் சொந்த வீடு கட்டி குடிவந்தேன்.

1990ல் அருண்மொழி நங்கையை வாசகியாக அறிமுகம் செய்துகொண்டேன். அவள் அப்போது மதுரை வேளாண்மைக் கல்லூரியில் வேளாண்மை இளங்கலை படித்துக் கொண்டிருந்தாள். காதலித்து 1991 ஆகஸ்ட் எட்டாம் தேதி மணம் புரிந்துகொண்டேன். அருண்மொழி நங்கையின் அப்பா பெயர் ஆர்.சற்குணம் பிள்ளை. புதுக்கோட்டை- பட்டுக்கோட்டை வழியில் உள்ள திருவோணம் ஊரைச் சேர்ந்தவர். அவரது தந்தைபெயர் எஸ்.ராமச்சந்திரம்பிள்ளை. ராமச்சந்திரம்பிள்ளை ஆசிரியராக இருந்தவர், நல்லாசிரியர் விருது பெற்றவர். அருண்மொழி நங்கையின் அப்பாவும் ஆசிரியர். முதுகலைப்பட்டம் பெற்றவர். இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். திராவிட இயக்கத்திலும் ஜெயகாந்தன் எழுத்துக்களிலும் ஒரேசமயம் ஈடுபாடு கொண்டவர். என் ‘சங்க சித்திரங்கள்’ நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்

அருண்மொழிநங்கையின் அம்மா பெயர் சரோஜா. அவரது சொந்த ஊர் திருவாரூர் அருகே புள்ளமங்கலம். அருண்மொழியின் தாய்வழித்தாதா கார்த்திகேயம் பிள்ளை. பாட்டி, லட்சுமி அம்மாள். அருண்மொழியின் அம்மா ஆரம்பபள்ளி ஆசிரியையாக இருந்து ஓய்வுபெற்றார். இப்போது திருவாரூரில் வசிக்கிறார்கள். அருண்மொழி நங்கைக்கு ஒரு சகோதரர், லெனின் கண்ணன்.

என் உடன்பிறந்தார் இருவர். அண்ணா பி.பாலசங்கர் என்னை விட ஒருவயது மூத்தவர். நேசமணி போக்குவரத்துக் கழகம் கன்யாகுமரியில் பணியாற்றுகிறார். திருவட்டாறில் சொந்த வீட்டில் குடியிருந்தவர் இப்போது நாகர்கோயிலில் இருக்கிறார். அவருக்கு இரு குழந்தைகள். 15 வயதான சரத் மற்றும் பத்துவயதான சரண்யா

என் தங்கை பி.விஜயலட்சுமி என்னைவிட இருவயது இளையவள். அவள் கணவர் எஸ்.சுகுமாரன் நாயர் திருவனந்தபுரம் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். இரு குழந்தைகள். 20 வயதான சுஜிதா 18 வயதான கண்ணன். எனக்கு இரு பிள்ளைகள். 15 வயதான ஜெ. அஜிதன். 11 வயதான ஜெ. சைதன்யா.

1998 முதல் 2004 வரை ‘சொல் புதிது’ என்ற சிற்றிதழை நண்பர்களுடன் இணைந்து நடத்தியிருக்கிறேன். முதலில் சூத்ரதாரி [எம்.கோபால கிருஷ்ணன்] ஆசிரியராக இருந்தார். பின்னர் சரவணன் 1978 ஆசிரியராக இருந்தார். இறுதி இதழ்களில் நண்பர் சதக்கத்துல்லா ஹஸனீ ஆசிரியராக இருந்தார்.

1994 முதல் தொடர்ச்சியாக ஊட்டி நாராயண குருகுலத்தில் இலக்கிய சந்திப்புகளை நடத்தி வருகிறேன். குற்றாலம் ஒகேனேக்கல் ஆகிய இடங்களிலும் ஊட்டியிலுமாக நிகழ்ந்த தமிழ்-மலையாள இலக்கிய சந்திப்புகள் விரிவான இலக்கிய உரையாடல்களுக்கு அடித்தளமிட்டன.

எப்போதும் இலக்கியத்துக்கு வெளியே நட்பும் தொடர்புகளும் உண்டு. பேராசிரியர் அ.கா.பெருமாள், எம்.வேத சகாயகுமார், தெ.வெ.ஜெகதீசன் போன்றவர்கள் அடிக்கடி சந்திக்கும் தமிழறிஞர்கள். வரலாற்றாய்விலும் பழந்தமிழாய்விலும் தொடர்ச்சியான ஆர்வம் உண்டு.

2009 இல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்ற அமைப்பு வாசகர்களால் உருவாக்கபப்ட்டது. இலக்கியக்கூட்டங்கள் நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது, வருடம்தோறும் இலக்கியவிருது வழங்குவது ஆகியவை இதன் செயல்பாடுகள். கெ அரங்கசாமி பொறுப்பேற்று நடத்துகிறார்.

கோபிகைப்பாடல் – தில்லைவேந்தன்

Image result for கோபிகை கிருஷ்ணா

 

கொடிய பாம்பின்மேல் – கண்ணா
     குதித்த கால்களை
மடியில் கிடத்தியே – கண்ணா
     வருடிக் கொடுக்கவோ
image
காற்று மழையுமாய் – கண்ணா
     கலங்க வைத்ததே
ஏற்ற குடையென  – கண்ணா
     எடுத்தாய் மலையினை.
ஆயர் குலத்தினில் – கண்ணா
     அன்று பிறந்தனை
வேயின் குழலினால் – கண்ணா
     விந்தை புரிந்தனை.
மாய அரக்கர்கள் –  கண்ணா
     மாயச் செய்தனை
தூய அன்பர்கள்- கண்ணா
     சூழ்ந்து வாழ்த்தினர்.
மறைந்து போயினை – கண்ணா
     வடிவு  கரந்தனை
உறைந்து நிற்கிறோம் – கண்ணா
     ஓடி வா   இங்கு.
ஏய்க்கப் பார்க்கிறாய் – கண்ணா
     எங்கோ செல்கிறாய்
வாய்க்கும் கோபியர் – உள்ளம்
     வாட்டிக் கொல்கிறாய்.
காக்க வந்தவன் – கண்ணா
     கலங்க வைப்பதா
ஏக்கம் தீர்க்க வா – கண்ணா
     இன்பம் சேர்க்க வா.
வெண்ணெய் தயிருமே – கண்ணா
     விரும்பி அளிக்கிறோம்
உன்னைத் தந்திடு – கண்ணா
     உள்ளம்   வந்திடு.
                               

கவிஞர் மகுடேஸ்வரன் -சொல்லேர் உழவு – நக்கீரன்

 

கவிஞர் மகுடேஸ்வரன் அவர்கள் தமிழ் மொழி தலைசிறந்த நிபுணராக பவனி வருகிறார். தமிழைப்  பிழையின்றி மக்கள் எழுதவேண்டும் என்பதற்காக அவர் எடுத்துவரும் முயற்சிகளை எப்படிப் பாராட்டினாலும் தகும். 

நக்கீரன் இதழில் அவர் எழுதும் சொல்லேர் உழவு என்ற கட்டுரைத் தொடர் தமிழ் தெரிந்த அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. 

அந்தத் தொடரிலிருந்து சில பகுதிகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். 

 

நன்றி : மகுடேஸ்வரன் ( சொல்லேர் உழவு – நக்கீரன் )


 

கடலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களை வீரமாமுனிவரின் சதுரகராதி கூறுகிறது. அத்தி, அப்பு, அம்பரம், அம்புராசி, அம்போதி, அரி, அருணவம், அலை, அளக்கர், ஆர்கலி, ஆழி, உத்தி, உந்தி, உப்பு, உவரி, உவர், ஓதம், கலி, கார்கோள், குரவை, சக்கரம், சமுத்திரம், சல்தி, சலநதி, சலராதி, சாகரம், சிந்து, தெண்டிரை, நதிபதி, நரலை, நீராழி, நேமி, யயோத்தி, பரப்பு, பரவை, பாராவாரம், புணரி, பெருநீர், பௌவம், மகராலயம், மகோத்தி, முந்நீர், வாரம் வாரணம், வாரி, வாரிதி, வாருணம், வீரை, வெள்ளம், வேலாவலயம், வேலை.

கடல் என்னும் ஒரு பொருளுக்கு நம் மொழியில் வழங்கப்பட்ட சொற்கள் இவை. இவற்றுள் சில பிறமொழிச் சொற்களாகவும் இருக்கலாம். ஆனாலும் கடல் என்றதும் இச்சொற்களில் பல நமக்கு நினைவுக்கு வரவில்லை என்றால் நமக்குச் சொல்லறிவு போதவில்லை என்பதே பொருள்.

 


பெண்கள் தங்கள் கூந்தலை ஐந்து வகைகளாக முடிப்பதற்கும் ஐம்பால் என்று பெயர். இது சங்க காலக் குறிப்பு. ஒரு பெண் தன் கூந்தலை ஐந்து வகைகளாக முடியிடுகிறாள். முடி, கொண்டை, குழல், சுருள், பனிச்சை என்பனவே அவ்வைந்து வகைகளாம்.

முடி என்பது என்ன ? மலையின் உச்சிப் பகுதியை முடி என்கிறோம். அதுபோல ஒரு பெண் தன் கூந்தலை மலையின் முடியைப்போலத் தன் தலையுச்சியில் வைத்து முடிவது முடி எனப்படும். கொண்டை என்பது நமக்குத் தெரியும். கூந்தலைச் சுருட்டி இடப்பக்கமோ வலப்பக்கமோ திரளாகத் தொகுத்துக்கொள்வது. கூந்தலை மலர்ச்சரங்களோடு வைத்துப் பின்னிச் செருகினால் அதற்குச் சுருள் என்று பெயர். கூந்தலை அள்ளி முடிந்தால் அதற்குக் குழல் என்று பெயர். கூந்தலைச் சடையாகப் பின்னிக்கொண்டால் அதற்குப் பெயர் பனிச்சை. இத்தகைய ஐவகைக் கூந்தல் முடிமுறைகளையும் ஐம்பால் என்கின்றனர்.


வழுக்கும் தன்மையால்தான் வழலைக்கட்டிகள், எண்ணெய்கள் ஆகியவற்றின் இயல்புகளை வழுவழுப்பு என்கிறோம். சிலர் அதனையும் வழவழப்பு என்று தவறாகக் கூறுவார்கள்.


முயல் + சி = முயற்சி,

பயில் + சி = பயிற்சி.

முயல் என்ற வினைவேரிலிருந்து முயற்சி என்ற பெயர்ச்சொல் தோன்றிய பிறகு அதனை வினைச்சொல்லாக்க முடியுமா ? சிலர் முயற்சித்தான் என்று எழுதுகிறார்கள். அது பெரும்பிழை. வேண்டுமானால் ‘முயற்சி செய்தான்’ என்று எழுதலாம். பயில் என்ற வினைவேரிலிருந்து பயிற்சி என்ற தொழிற்பெயர் தோன்றிய பிறகு பயிற்சித்தான் என்று எழுத இயலுமா ? இயலாது. நமக்கு முயல், பயில் என்னும் வினைவேர்கள் இருக்கின்றன. அவை முயன்றான், பயின்றான் என்று தெள்ளத் தெளிவான வினைமுற்றுகளாகும். மொழியின் இவ்வியற்கை தெரியாதவர்கள்தாம் முயற்சித்தான் என்று எழுதுவார்கள்.


துணைக்கால் – கா சா தா

கொம்புக்கால் – ஊ, கௌ, சௌ

மடக்கு ஏறுகீற்றுக் கால் – ணூ, தூ, நூ

ஒற்றைக்கொம்பு – கெ, நெ, செ

இரட்டைக்கொம்பு – கே, நே, சே

இணைக்கொம்பு/சங்கிலிக்கொம்பு – கை, சை, நை

சாய்வுக்கீற்று – ஏ

இறங்கு கீற்று – பு, சு, வு

மடக்கு ஏறு கீற்று – ணு, து, நு

பின்வளைகீற்று – கூ

மேல்விலங்கு – கி, தி, பி

கீழ்விலங்கு – மு, ரு, கு

இறங்குகீற்றுக் கீழ்விலங்குச் சுழி – சூ, பூ

மேல்விலங்குச் சுழி – கீ, தீ, ரீ

கீழ்விலங்குச் சுழி – மூ ரூ

பிறைச்சுழி – ஆ


ஒருநாள், ஒருவேளை, ஒருமுறை, ஒருவிதம், ஒருவகை, ஒருதலை போன்றவை பிரியாமல் பொருளுணர்த்தும் தொடர்கள் ஆகிவிட்டன. அவற்றைச் சேர்த்தே எழுத வேண்டும். அரிதாக எங்கேனும் எண்ணுப் பொருளில், இன்றியமையாமையை உணர்த்தும் பொருளில் வந்தால் மட்டும் பிரித்தெழுத வேண்டும்.


நேயம் நேசம் ஆன பிறகு நேசித்தான் என்று எழுதினார்கள். ‘நேசி’ என்று கவிதையில் கெஞ்சினார்கள். நேசித்தான் என்ற சொல்லை அதன் தூய வடிவத்திற்கு மாற்றினால் ஞேயித்தான் என்று வருகிறது. நேசி என்ற ஏவல் வினையை ஆக்க முடிந்தமையால் அதனை ‘நேசிப்பு’ என்று தொழிற்பெயராக்க முனைந்தார்கள். நேசித்தான், வாசித்தான், பூஜித்தான், பிரகாசித்தது, ஜொலித்தது, தீர்மானித்தான் என எழுதுகிறீர்கள் என்றால் நீங்கள் பிற்காலத்தில் தோன்றிய பிழை வழக்குகளை அடியொற்றுகிறீர்கள் என்று பொருள். ஏனென்றால் ஒரு சொல்லின் வேர் வேறாக இருக்கையில் அதன் பிழை வழக்குகளை அறியாமல் எடுத்தாள்கிறோம். ஞேயம் என்பதனை நேயம் என்று பயன்படுத்துவதுதான் வரம்பு. அதனை நேசம், நேசித்தான், நேசிப்பு, நேசன் எனல் பிழை வழக்குகள் ஆகும்.


ஆண்பாற்கும் பெண்பாற்கும் தனித்தனி விகுதிகள் இருக்கின்றன. விகுதி என்பது ஒரு சொல்லின் பின்னொட்டு. இறுதிப்பகுதி. ஒருவன் என்பதில் ஒரு என்பது ஒருமையை, ஒற்றைத்தன்மையைக் குறிக்கிறது. அன் என்பது பின்னொட்டாகச் சேர்ந்த விகுதி. இங்கே அன் என்பது ஆண்பால் விகுதி. ஒருவன் என்னும்போது ஓர் ஆணைக் குறிக்கிறது. ஒருவன் என்பதற்குப் பெண்பால் ஒருத்தி. ஒருவள் என்று சிலர் பிழையாக எழுதுகின்றனர். அள் என்பதும் பெண்பால் விகுதிதான். ஆனால், எல்லாவிடங்களிலும் அள் விகுதி வருவதில்லை. குறவன் குறத்தி, உழவன் உழத்தி, ஒருவன் ஒருத்தி… இப்படித்தான் வரவேண்டும்.

அன், ஆன் ஆண்பால் விகுதிகள் என்றால் அள், ஆள் பெண்பால் விகுதிகள்.

மணமகன் மணமகள், வெறுங்கையன் வெறுங்கையள், பிறன் பிறள், அவன் அவள் என்னுமிடங்களில் அன், அள் விகுதிகள் இருபாற்கும் முறையே வருகின்றன. அடியான் அடியாள், ஆண்டான் ஆண்டாள் ஆகிய இடங்களில் ஆன் ஆள் விகுதிகள் இருபாற்கும் வருகின்றன.

தோழன் தோழி, அரசன் அரசி, கூனன் கூனி, குமரன் குமரி, கிழவன் கிழவி, காதலன் காதலி ஆகிய இடங்களில் இ என்ற விகுதி பெண்பாற்கு வந்தது. காதலி, காதலள், காதலாள் என்று பலவாறும் சொல்லத் தகுந்த இடங்களும் இருக்கின்றன. ஐகார விகுதி பெறும் பெண்பாற்பெயர்களும் இருக்கின்றன. ஆசிரியன் ஆசிரியை, ஐயன் ஐயை.

ஆண்பால் பெண்பால் சொற்கள் இவ்வாறு இணையாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. தொடர்பே இல்லாமலும் இருக்கலாம். ஆண் என்பதற்குப் பெண் என்பதே தொடர்பில்லாத சொல்தானே ? அடூஉ மகடூஉ என்பன முறையே ஆண் பெண்ணைக் குறிக்கும் தூய தமிழ் வழக்காகும். தந்தை தாய், பாணன் பாடினி. கன்னிக்குக் காளை என்பது ஆண்பால்.

ஆன்றோன், சான்றோன், அண்ணல், செம்மல், அமைச்சன் போன்ற சொற்களுக்குப் பெண்பால் இல்லை. பேதை பெதும்பை அரிவை தெரிவை போன்ற சொற்களுக்கு ஆண்பால் இல்லை.


கல் + வி = கல்வி, கேள் + வி = கேள்வி என்றாகின்றன. அவ்வாறே தோல் + வி = தோல்வி என்று ஆகியிருக்கிறது. இங்கே தோல் என்பது வினைவேர். தோற்பாயாக என்று ஏவுகிறது. கட்டளையிடுகிறது.

வெல் என்பதை அடிக்கடி பயன்படுத்தியதைப்போல தோல் என்பதனை எங்கேனும் ஏவற்பொருளில் பயன்படுத்தியிருக்கிறோமா ? இல்லை. தோல் என்னும் வினைவேரின் வழியாகத்தான் தோற்றான், தோற்கிறான், தோற்பான் போன்ற வினைமுற்றுகள் தோன்றுகின்றன. தோல் என்று சொல்லுவது கெடுசொல் என்று நம் பண்பாடு விலக்கியிருக்கலாம்

 

காஷ்மீர்

 

370   370   370  370 

 

காஷ்மீர் பியூடிபியுல் காஷ்மீர் ! காஷ்மீர் ஒண்டர்புல்  காஷ்மீர் !

இந்த பூலோக சொர்க்கம் இனி  அனைவருக்கும் சொந்தம்!

Image result for beauty of kashmir

 

  அன்பே சிவம் – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

Image result for அன்பே சிவம்

அன்பு உணர்வில்தான்

அகிலமும் சுழல்கிறது

இயற்கையும் செயற்கையும்

கைகோர்த்து செல்கிறது!

 

அன்பு என்னும் சொல்

காட்டிய நல்ல பாதையில்

நம்மவர் வாழ்க்கையே

ஓடிக் கொண்டேயிருக்கிறது!

 

Image result for அன்பே சிவம்

 

மதங்களும் சாதிகளும்

அன்பு என்னும் மென்மலரை

மனதில் தாங்கிக் கொண்டுதான்

ஒற்றுமையே மலர்கிறது!

 

அன்பு என்னும் உணர்வு

ஓரிடத்தில் விதைத்தால்

ஓராயிரம் இடத்தில்

முளைத்துக் கொண்டே

உலகில் வலம் வரும்!

 

 

அன்பு என்னும் ஊற்று

வன்முறைக்கு விடைகொடுக்கும்

அனைத்து உயிரிலும்

சுரந்து கொண்டேயிருக்கும்!

 

அன்பு வேறு சிவம் வேறு

ஆர்ப்பரிப்பர் அறிவிலார்

அன்பே சிவம் என்பர்

அறிந்த ஆன்மீக அன்பர்கள்!

                                                        

அன்பே சிவம் .. அன்பே சிவம் .

 

 

எமபுரிப்பட்டணம் -எஸ் எஸ்

 

Surya - God of Sun by molee

சூரியதேவனின் மகிழ்ச்சிக்கோர் எல்லையே இல்லை.

” ஆஹா !மூன்று குழந்தைகள் ! ! நான் பெற்ற பேறு தான் என்ன? நல்ல செய்தி சொன்ன கருடனுக்கு என்ன பரிசு தருவது ? ” என்று ஒருகணம் யோசித்தான். பிறகு கருடரைப் பார்த்து ,

“கருடரே! இனிய செய்தி சொன்ன உங்களுக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும். ஆனால் சர்வ வல்லமை படைத்த விஷ்ணு பகவானையே தன் முதுகில் தூக்கிவரும் வலிமையையும் திறமையும் படைத்த உங்களுக்கு நான் என்ன செய்ய முடியும்? உயரத்தில் பறக்கும்போது சிறகுகளை அசைக்காமல் பறக்கும் திறமை பறவைகளில் உங்கள் ஒருவருக்குத்தான் உண்டு. அப்படி உயரத்தில் நீங்களோ உங்கள் சந்ததியினரோ பறக்கும்போது இனி என் கிரணங்களால் உங்களுக்கு எந்தவித துன்பங்களும் நேராது. உங்கள் கண்களால் என்னை எப்போது பார்த்தாலும் என் வெளிச்சம் உங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியே தரும்” என்று கூற கருடனும் அவரை வணங்கி விரைவில் சென்றான்.

” அருணா ! நான் இப்போதே ஸந்த்யாவைப் பார்க்கவேண்டும்! தேரை அவ்வண்ணம் செலுத்து ” என்று உத்தரவிட்டான்.

Image result for sons of suryadev

அங்கே ஸந்த்யா சூரியதேவனின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். மூன்று இரத்தினங்களைப் பெற்ற மகிழ்ச்சி அவள் முகத்தில் தெரிந்தது. அந்த சமயத்தில் அவளுக்குத் தன தந்தை விஸ்வகர்மாவின் நினைவு வந்தது. இந்த மூன்று குழந்தைகளை அழிக்க முயன்றாரே என்று அவர்மீது வந்த கோபம் இந்தக் குழந்தைகளின் பிஞ்சு முகங்களைப் பார்க்கும்போது மாறியது. தந்தைக்கும் தாய்க்கும் இந்த நல்ல சேதியைச் சொல்லி அவர்களது ஆசிகளையும் பெறவேண்டும் என்று தோன்றியது. திருமணத்தின் போதும் அதற்குப் பிறகும் அவர்களைச் சூரிய மண்டலத்திற்கே வரவிடாமல் செய்தது குறித்து அவள் இப்போது மனம் வருந்தினாள். குழந்தைகளைப் பெற்றபிறகுதான் பெற்றோர்கள் மீது பக்தியும் பாசமும் பெண்களுக்கு உண்டாகிறது என்பதை உணர்ந்து கொண்டாள். ஆனால் சூரியதேவனுக்கு விஸ்வகர்மா மீது இன்னும் கோபம் இருப்பதை அவள் உணர்ந்தாள். ஸந்த்யாவை விரும்பிய ஒரே காரணத்திற்காகத் தன்னை மயக்க நிலையில் வைத்து ஓர் அடிமையைப்போல் மாற்ற நினைத்த விஸ்வகர்மாவை அவன் எப்போதும் மன்னிக்கத் தயாராயில்லை. அதிலும் குழந்தைகளை அழிக்கும் அளவிற்குப் போன அவரை சூரியதேவன் ஏறெடுத்தும் பார்க்க விரும்பியதில்லை.

ஆனால் இந்த நல்ல நாளில் சூரியதேவனிடம் இதமாகப்பேசி தந்தையையும் தாயையும் அழைப்பதற்கு அனுமதி வாங்கிவிடவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். அந்த சமயத்தில் மகாருத்ரபிரும்மன் நினைவு வந்தது. மும்மூர்த்திகளின் அம்சங்கள் ஒன்று சேர்ந்து வரவேண்டும் என்றுதானே தந்தை விரும்பினார். அவை தனித்தனியாக மூன்று குழந்தைகளாக வந்ததாகவே அவள் எண்ணினாள். இருப்பினும் அந்தக் குழந்தைகள் பிறந்த உடனே தன்னுடைய சக்திகள் எல்லாம் மறைந்துவிட்டது போல உணர்ந்தாள். இது இயற்கையாக எல்லாப் பெண்களுக்கும் தோன்றுகின்ற ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். சூரியதேவனுக்கு இனி நம்மீது அன்பு இருக்குமா இல்லை குழந்தைகளைப் பராமரிக்கும் மகிழ்ச்சியில் தன்னை மறந்துவிடுவானோ என்றெல்லாம் எண்ணி ஒருவித மயக்க நிலையிலிருந்தாள் ஸந்த்யா.

சூரியன் அருகில் வந்துவிட்டான் என்பதை அவள் உணரும்போதே சூரியதேவன் அவள் அருகில் வந்து நின்றான். முத்துக்கள் போலப் பிரகாசிக்கும் அந்தக் குழந்தைகளைக் கையில் எடுத்துக் கொஞ்சுவதற்கு முன் அந்த முத்துக்களைப் பெற்றுக் கொடுத்த ஸந்த்யாவிற்கு நன்றி சொல்லும் வண்ணம் அவன் உள்ளத்தில் பொங்கும் உவகையெல்லாம் சேர்த்து அவள் இதழில் தன் இதழ்களைப் பொருத்தி ஆசையுடன் அவள் பொன்னுடலை வருடிக் கொடுத்தான். ஸந்த்யாவிற்கு அந்த சுகம் வேண்டியிருந்தது. அவன் கையில் மூன்று குழந்தைகளையும் ஆசையுடன் எடுத்துக் கொடுத்தாள். தன் குழந்தைகள்  மூவரையும் பார்க்கப் பார்க்க அவனுக்கு உள்ளத்தில் மகிழ்ச்சி அலை பரவிக்கொண்டேயிருந்தது. அதிலும் ஒரு அழகான பெண்குழந்தையும் இருப்பதைப்பார்த்து அவன் துள்ளிக்குதித்தான். அந்த மூன்று பிஞ்சு உடல்களையும் மெல்ல வருடிக்கொடுத்தான். இளஞ்சூரியனின் பொன்னிற கிரணங்கள் அந்தக் குழந்தைகளின் மேனியில் படும்போது அதுவும் அந்தக் கிரணங்கள் தந்தையிடமிருந்து வருவது குறித்து அந்த சிசுக்கள் மூன்றும் சிலிர்த்துக்கொண்டன.

” ஸந்த்யா ! இவர்கள் மூன்று பெரும் சாமானிய குழந்தைகள் அல்ல. உலகையே ஆளும் சூரியதேவனின் குழந்தைகள். யாரும் அடையாத அடையமுடியாத புகழை இந்த மூன்று பேரும் அடையவேண்டும். இவர்களில் முதல் குழந்தை எது?” என்று கேட்டான்.

” இதோ ! மகாவிஷ்ணு போலக் காட்சியளிக்கிறானே இவன்தான் தங்களின் முத்த மகன். அதோ காலை உதைத்து உதைத்துச் சிரிக்கிறானே அவனும் இப்போதே தவழ்ந்து தவழ்ந்து ஓடுபவள் போல் இருக்கும் அழகுப் பெண்ணும் இரட்டையர்களாக ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டே பிறந்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள்? ” என்று கேட்டாள் ஸந்த்யா .

” பொறு ! ஸந்த்யா! நம்மைப் படைத்துக் காத்துக்கொண்டிருக்கும் பிரும்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கே குழந்தைகளை ஆசிர்வதிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெயர் வைப்பதற்கென்றே இன்னும் ஒருவர் வர இருக்கிறார் .”

“நம்மைவிட- மும்மூர்த்திகளைவிட அதிக அதிகாரம் படைத்தவர் யார் அவர் ?’ என்ற சந்தியாவின் குரலில் சற்று கோபமும் துளிர்த்தது.

“இதோ அனைவரும் வந்துவிட்டார்கள்” என்று சூரியதேவன் கூறவும் தம்பதி சமேதராய் மும்மூர்த்திகளும் அங்கே எழுந்தருளினார்கள். அவர்களுக்குப் பின்னே மற்ற தேவர்களும் ரிஷிகளும் வந்தனர். கடைசியாகத் தயங்கிக்கொண்டே விஸ்வகர்மா தன் மனைவியுடன் வந்தபோதுதான் ஸந்த்யாவிற்குச் சூரியதேவன் கூறியதன் அர்த்தமே விளங்கிற்று. தன் விருப்பத்தை அறிந்து பழைய கோபத்தையெல்லாம் மறந்து தன்னுடைய பெற்றோர்களையும் அழைத்த சூரியனின் பெருந்தன்மையை நினைத்து கண்களாலே அவனுக்கு நன்றி கூறினாள்.

“சூரியதேவா! அழகும் ஆற்றலும் நிறைந்த குழந்தைகள் இந்த தேவ உலகத்தில் அவதரித்தது நாங்கள் மூவரும் மிக மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களுக்கு எங்களின் பூரண நல்லாசிகளைத் தருவதற்காகவே நாங்கள் மூவரும் வந்துள்ளோம்” என்று மும்மூர்த்திகள் சார்பில் படைப்பின் அதிபதி பிரும்மா கூற மற்றவர்களும் அதை அப்படியே வழி மொழிந்தார்கள்.

மகாவிஷ்ணு விஸ்வகர்மாவைப்ப்பார்த்து, ” ஏன் தயங்கி நிற்கிறீர்கள்? உங்கள் பேரக் குழந்தைகளைக் காணும் பெருமையும் பேர் வைக்கும் உரிமையும் தங்களுக்குத் தான் உண்டு” என்று சொல்லவும் அனைவரையும் கைகூப்பிக்கொண்டே கண்களில் நீர்வழிய விஸ்வகர்மாவும் அவரது துணைவியும் முன்னே வந்தனர்.

ஸந்த்யாவின் தாய் கண்ணில் நீர் வழிய ஸந்த்யாவை அணைத்துக் கொள்ளும்போதே விஸ்வகர்மா மூத்த குழந்தையை எடுத்து உச்சிமுகர்ந்து பிரம்மாவிடம் கொடுத்து ” படைப்புக்கு அதிபதியே! சூரிய-ஸந்த்யாவின் மூத்த குமாரனுக்கு மனு என்று நாமகரணம் சூட்டி, தங்கள் ஆசியினை வழங்கும்படி வேண்டிக்கொள்கிறேன்” என்று கேட்டுக்கொண்டார்.

” விஸ்வகர்மா! நீர் புத்திசாலி என்பதில் சந்தேகமேயில்லை! சரியாகத்தான் பேர் வைத்திருக்கிறீர்கள்.! சூரிய குலத்தின் மூத்த புத்திரன் வைவஸ்வத மனு என்கிற சிரார்த்ததேவன் இவன் . மனிதக்குலத்திற்கே முதலாவது ஆதி மனிதனாக இருக்கப்போகிறான். இவனது பிள்ளை இக்ஷ்வாகு ஒரு புதிய பரம்பரையையே உருவாக்குவான். மகாவிஷ்ணு அவர்களே! நீங்கள் இப்போதே இவன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.” என்று சிரித்துக் கொண்டே ஆசிகள் வழங்கினார்.

விஷ்ணுவும் மனதுக்குள் ராம அவதாரத்தின் போது இந்த மனுவின் வம்சத்தில் உதிக்கப்போவதை எண்ணி மனுவின் கால்களைத் தொட்டு வணங்கினார்.

அதற்குள் சிவன் இரண்டாவது மகனைக் கையில் எடுத்துக்கொண்டு ” ஆஹா! இவன் கரங்களையும் சலனமற்ற பார்வையையும் பார்க்கும்போது இவன் தர்மத்திற்கு அதிபதியாக இருந்து பூவுலகின் பாரம் தீர்க்க உதவுவான் என்ற நம்பிக்கை உண்டாகிறது. இவன் எனது சீடன். இவன் யாருக்கும் பயப்படமாட்டான். இவனைக்கண்டு பூலோகத்தில் அனைவரும் நடுங்குவர். அப்படிப்பட்டவனுக்குப் பொருத்தமான பேரைச் சொல்லுங்கள் விஸ்வகர்மா அவர்களே!” என்று சிவபெருமான் கூறினார். ” இந்தப் பாலகனுக்கு எமன் என்ற பெயரைச் சூட்டலாம் என்றிருக்கிறேன்” என்று விஸ்வகர்மா கூறிக்கொண்டே அனைவரையும் பார்க்க ” ஆஹா! பொருத்தமான பெயர். அத்துடன் தர்ம ராஜா என்றப்பட்டத்தையும் சேர்த்து எமதர்மராஜன் என்று கூறுங்கள்” என்கிறார் பரமேஸ்வரன்.

கடைக்குட்டியான பெண்குழந்தையை ஒரு பூவை எடுப்பதுபோல கையில் எடுத்த விஸ்வகர்மா ,” இவளை எமி என்கிற யமுனா என்ற பெயரில் அழைக்க விழைகிறேன்” என்று கூறி மகாவிஷ்ணுவிடம் குழந்தையைக் கொடுத்தார். அவளைக் கையில் வாங்கிக்கொண்ட மகாவிஷ்ணு, ” யமுனா! அவளைப்போலவே பெயரும் அழகாக இருக்கிறது” இவள்! நதியைப் போன்ற பொறுமையின் சிகரமாக விளங்கப்போகிறாள். பாருங்கள் இவளது கால்கள் ஓரிடத்திலும் நிற்காமல் அலைபாய்கிறது எனது பூரண ஆசிகள் இவளுக்கு உண்டு! ” என்று கூறி பின்னர் கிருஷ்ணாவதாரத்தில் யமுனா நதி தீரத்தில் விளையாடப்போவதை எண்ணிப் புன்சிரிப்பு கொண்டார்.

மும்மூர்த்திகளும் விடைபெற்றுச்சென்றபின் விஸ்வகர்மா கண்ணீருடன் தன்னை வணங்கிய ஸந்த்யாவின் முகத்தை நிமிர்த்தி கண்ணீரைத் துடைத்தார். அப்போது அவள் இதழோரம் இருந்த சிவப்புத் திட்டைக் கவனித்துத் திடுக்கிட்டார். சூரியனின் வெப்பத்தைத்தாங்கும் சக்தி அவளிடமிருந்து போய்விட்டது என்பதை உணர்ந்து கொண்டார். அவளுக்கு எப்படி உதவுவது என்று புரியாமல் தடுமாறினார் விஸ்வகர்மா.

(தொடரும்)

Image result for dindigul leoni

நடுவர் சாலமன் பாப்பையா பேசினார்:

“கேட்டுக்கிடீங்களா ! என்னமா பேசிட்டாங்க பாரதி பாஸ்கர்! ஆவங்களுக்குச் சோறு ஆக்கத் தெரியுதோ இல்லையோ ,அதைப்பத்திக் கவலை இல்லே!  ஆக்கலில் சிறந்ததுவேறொன்றும் இல்லேன்னு அக்குவேறு ஆணிவேறா அடிச்சுப்  பேசிட்டு  உக்காந்திருக்காங்க !  அரசியலைக் கொஞ்சம் கொறைச்சுக்கங்க அம்மா! இல்லேன்னா மீம்ஸ் போட்டே நம்மை வறுத்து எடுத்திடுவாங்க! ஆக்கலுக்கு அடுத்தது காத்தல் பற்றித் தான் பேசணும் அதுதான் விவாதமேடை வழக்கம். ஆனா இது கீழ் சபை இல்லை மேல் சபை  இங்கே கொஞ்சம் வித்தியாசமா நடந்துக்கலாம். அதுக்கு சட்டம் இடங்கொடுக்குது.  அது மட்டுமில்ல  எல்லா பட்டிமன்றத்தில் ராஜா  கடைசியில பேசறதை ஒரு வழக்கமா வைச்சுக்கிட்டிருக்கோம். அதனால ஆக்கலுக்குப் பிறகு அழித்தல் தான் எல்லாவற்றிலும் சிறந்தது என்று பேச திண்டுக்கல் லியோனி அவர்களை அழைக்கிறேன்.

“அனைவருக்கும் வணக்கம். முதல்ல நம்மை என் இந்த மேடைக்கு கூப்பிட்டாங்கன்னு யோசிச்சேன். நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கருடபுராணத்தைப்பத்தியும்  நெருப்பு ஆற்றைப்  பத்தியும் எமபுரிப்பட்டணத்தைப்பத்தியும்  பேஸ்புக்கில ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன். அதில வந்த வினை நம்மளை நேரா இந்தக் கூட்டத்துக்கு வரச்சொல்லி ஆப்பு அடிச்சுட்டாங்க! முதல்ல வரவேண்டாமின்னுதான்  நினைச்சேன். அப்புறம் ஒரு யோசனை ! எப்படியிருந்தாலும் என்னிக்கிருந்தாலும் எல்லோரும் இங்கே வந்துதான் ஆகணும். என்ன, கொஞ்சம் முன்னப்பின்ன வருவோம்.  அப்படி வந்தா திரும்பப் போகமுடியாது. இப்ப போகமுடியும்னு நினைக்கிறேன்!

எதுக்கும் இருக்கட்டுமேன்னு வீட்டில சொல்லிகிட்டே வந்துட்டேன்.

அத்தைக்கேட்டுட்டு எங்க அத்தைப் பாட்டி ” என்னப்பெத்த ராசா! நீ திரும்பிவருவியோ இல்லையோ தெரியலை  ! எதுக்கும் நீ போறதுக்கு முன்னாடி  நாங்க ஒப்பாரி வைச்சிடறோம். அதைக்  கேட்டுட்டு சந்தோஷமா போய்வா ராசா”  அப்படின்னு ஆரம்பிச்சுட்டாங்க! ”  அதை ஒட்டுக்கேட்ட எந்தப் படுபாவியோ பேஸ்புக்கில ஸ்டேட்டஸ் போட்டுட்டான். என்னன்னு விவரம் புரியாமே ஆயிரம்பேர் லைக் போட்டுட்டானுக. 

“நான் இன்னும் சாகலைன்னு”   நானே ஒரு ஸ்டேட்டஸ் போட்டா யாரும் நம்பமாட்டேங்கிறாங்க ! அந்தச்  செய்தியை மாத்த நான் ரொம்ப கஷ்டப்படவேண்டியதாச்சு. ஒருத்தரு தப்பான சேதியை ஆக்கிப்போட்டுங்கான்ன அதை அழிக்கறது எவ்வளவு  முக்கியம் அப்படின்னு புரியுதா?

இப்போ சொல்லுங்க ஆக்கறது முக்கியமா ? அழிக்கறது முக்கியமா?

நம்ம கோயமுத்தூரில் ஒரு படிக்காத விஞ்ஞானி இருந்தார், ஜி  டி நாயுடு ஐயா ! அவர் ஒரு பெரிய மண்டபத்திலே  தான் கண்டுபிடிச்ச பொருள்களையெல்லாம் கொஞ்சநாள் வைச்சுட்டு அப்பறம் எல்லாத்தையும் உடைச்சு போட்டுட்டாராம். கேட்டா , ‘கன்ஸ்ட்ரக்ஷன் பார் டிஸ்ட்ரக்க்ஷன் –   டிஸ்ட்ரக்க்ஷன் பார் கன்ஸ்ட்ரக்ஷன்’  என்று சொல்லுவார்.

பாரதி அம்மா வேற ‘ஆணியே புடுங்கவேண்டாம்’ அப்படியெல்லாம் பேசிட்டு  போயிட்டாங்க! நீங்க  ஆணிய அடிங்க ! நாங்க அதை புடுங்குறோம். நீங்க ஆக்கல் ; நாங்க அழித்தல்;  நீங்க அடிச்சதெல்லாம் தேவையில்லாத ஆணி !

அப்புறம் ஜனத்தொகைக்கு வருவோம்.

‘நாட்டில் உற்பத்தியாய் பெருக்கு என்றால் வீட்டில் உற்பத்தியைப் பெருக்குகின்றார்கள்” என்று கலைஞர் ஐயா சொன்னார் அல்லவா? அப்படி மக்கள் எல்லாரும் ராத்திரி பகலா உழைச்சு ஆக்கல் பணியில் கண்ணும் கருத்துமா இருந்து  ஜனத்தொகையைப் பெருக்குறாங்கன்னு வைச்சுப்போம். என்ன ஆகும் இந்த உலகம்? வெடிச்சுறாது?  அதுக்குத்தான் தேவை அழித்தல்

இதைத்தான் நம்ம கவிஞர் கண்ணதாசன் ஐயா அழகா சொல்லிப்புட்டார்.

” வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது? “

இதைவிட அழித்தலுக்கு எவன்யா சர்டிபிகேட் கொடுக்கமுடியும்?

” கூக்குரலாலே கிடைக்காது,  கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது அந்த  கோட்டைக்குப் போனால் திரும்பாது “

எந்த கோட்டை?

இந்த எமபுரிப்பட்டணத்தைத்தான் சொல்றார்.

பார்வையாளர்களின் கைதட்டல் காதைப்  பிளந்தது

இன்னொரு சமாச்சாரம். பாரதி அம்மா பேசும்போது ரஜினி சாரை தேவையில்லாம இழுத்தாங்க!  அவரு இப்பத்தான் ஆக்ஷன் எல்லாம் நிறுத்திப்போட்டு அரசியலுக்கு வரலாமா அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சிருக்காரு.  இந்த நேரம்பார்த்து அவர் ஆக்ஷன் ஹீரோ அப்படின்னு சொன்னிங்கன்னா திரும்பவும் பேட்டை பராக்குன்னு  பேட்டை, 3.0, கண்ணம்மாபேட்ட அப்படின்னு நடிக்கப் போயிடுவாரு . உண்மையில சொல்லப்போனா அவர் படத்தை எடுத்த புரட்யூசர்கள் கோடி கோடியா போட்டு பணத்தை அழிக்கலேன்னா படம் இவ்வளவு சூப்பரா வருமா?

முட்டை ஓடு அழிந்தால்தான்  குஞ்சு பிறக்கும்.

சிலேட்டை அழிச்சாதான் புதுசா எழுதமுடியும் .

பழையன கழிந்தால்தான் புதியன பிறக்கும் . 

படத்தை அழிச்சாத்தான் சரியா வரையமுடியும் .

கோழியை அழிச்சாதான் குருமா பண்ணமுடியும் 

நேற்று என்ற ஒன்று இன்று அழிந்தால் தான் நாளை என்ற ஒன்று பிறக்கும்

தின்ற  சோறு கழிவாய் அழிந்தால்தான் புதுச்சோறு திண்ணமுடியும்

விறகு எரிந்து அழிந்தால்தான் சோறு பொங்கும் 

நான் முடித்தால் தான் அடுத்து ராஜா பேசமுடியும் 

ஆகவே அழிவே முக்கியம் என்று கூறி அழிந்து போகிறேன். நன்றி 

(தொடரும்) 

 

உன்னை விரும்பு – எஸ் எஸ் ராஜன்

Image result for self love

ஜென் கதைகள் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் ஜென் பழக்கங்கள்? அதில் ஒன்று இப்போது நாம் பார்க்கப்போகிறோம்.

அதுதான் நாம் அதிகம் மறந்துவிட்ட ‘ உன்னை விரும்பு ‘ என்ற பழக்கம் !

நம்மை நாமே பாதுகாக்கச் சத்தான உணவை உண்ணுதல், தியானம் செய்தல், சந்தடியிலிருந்து சற்று விலகியிருத்தல் போன்ற பல முயற்சியில் ஈடுபடுகிறோம்.

இவை உண்மையில் தற்காப்புக்கு முக்கியமான அம்சங்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், அதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது.

அதுதான் நம் மீது நாமே செலுத்தும் அக்கறை.

நம்மை நாமே விரும்பும் வழக்கம் !

அப்படியானால் என்ன என்பதே நமக்குத் தெரியாமல் போய்விட்டது.

ஆனால் ஜென் சொல்கிறார் ! ( லியோ பாபாதா) இதை நாம் தினந்தோறும் செய்யவேண்டுமாம்!

தினமும் எட்டு முறை தண்ணீர் குடிப்பது போல இந்த ‘உன்னை விரும்பு ‘ என்கிற பயிற்சியையும் எட்டு முறை செய்யவேண்டுமாம்!

அது சரி! ‘உன்னை விரும்பு ‘ என்றால் என்ன? ‘சுய விருப்பம் ‘ என்ற சொல்கிற பாலுணர்வு அல்ல .

அப்புறம்?

நாம் யாரையாவது காதலிக்கும்போது மனதில் பொங்கி எழுமே காதல் உணர்வுகள்! அந்த உணர்வுகளை உங்கள் மீதே படரவிடுங்கள்! அதுதான் நம்மை நாமே விரும்புவது !

அது எப்படி முடியும் என்று கேட்கலாம்.

நாம் நம்மீது அடிக்கடி கோபப்படுகிறோம். நம்மை நாமே திட்டிக்கொள்கிறோம். நாம் எதற்குமே லாயக்கில்லை என்று அலுத்துக்கொள்கிறோம். இவை அனைத்தும் நமக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய சமாச்சாரங்கள்!

இவ்வளவு உணர்ச்சிகளை நம் மீது காட்டும் நம்மால் ஏன் நம்மையே விரும்ப முடியாது?

இது ஏன் நமக்குத் தேவை?

நம்மில் பலருக்கு மனதளவில் காயங்களும் மன அழுத்தங்களும் இருக்கின்றன.

பலருக்கு என்ன , எல்லோருக்கும் இருக்கின்றன.

நம்மீது நாம் கோபம் கொள்கிறோம், ஏமாற்றம் அடைகிறோம், போதாது என்று எண்ணுகிறோம்.

இது நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வாக இருக்கிறது.

நம்மை நாமே மதிப்பதில்லை.; மாறாகத் தூற்றுகிறோம்.

நாம் எதற்கும் ஏற்றவர் இல்லை என்று என்ற நமது ஆழமான எண்ணத்தைத் தினமும் உறுதிப்படுத்துகிறோம்.

‘என்ன மனிதன் நான்? அளவில்லாமல் சாப்பிடுகிறேன், குடிக்கிறேன், குளறுபடி செய்கிறேன், காணொளி பார்க்கிறேன், கேம்ஸ் விளையாடுகிறேன், உருப்படியாக எதையும் செய்யாமல் குட்டிச்சுவராய்ப் போகிறேன் ‘ என்றெல்லாம் நம் மீது நாம் ஆத்திரப்படுகிறோம்.

மொத்தத்தில் நமக்கு நம்மைச் சுத்தமாகப் பிடிப்பதில்லை.

இது நம் வாழ்வை மிகவும் பாதிக்கிறது. இந்த எண்ணம் நம்மை மகிழ்ச்சி அற்றவர்களாக , உறவுகளை மதிக்காதவராக, கவனமில்லாதவராக, தள்ளிப்போடுபவர்களாக மாற்றுகிறது. அதை மாற்ற நாம் கன்னாபின்னாவென்று சாப்பிடுவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறோம்.

அதற்குப் பதில் நமக்கு நாமே அன்பு செலுத்த ஆரம்பித்தால் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் ஆறி அவலாகப் போய்விடும். நமது கஷ்டங்களைச் சமாளிக்கும் திறன் நமக்குத் தன்னால் வந்துவிடும்.

ஆகவே ‘உன்னை விரும்பு ‘ என்பது எல்லோரும் மறந்துவிட்ட முக்கியமான தேவை என்பதை நாம் உணரவேண்டும்.

எப்படி நமக்கு நாமே அன்பு செலுத்துவது ?

‘உன்னை விரும்பு’ என்ற ஸ்டிக்கரை நம் கண்ணில் படுகிற இடங்களில் எல்லாம் ஒட்டி வைக்கவேண்டும். – தொலைக்காட்சி, பிரிட்ஜ், மடிக்கணினி, கண்ணாடி, கார், மேஜை, போன்ற இடங்களில் கட்டாயம் வைக்கவேண்டும்.

முதலில் இது கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும் நாளடைவில் பழகிப் போய்விடும்.

அந்த ஸ்டிக்கரைப் பார்க்கும்போதெல்லாம் நீங்கள் இந்த மூன்றையும் மறக்காமல் செய்யவேண்டும் :

உங்கள் வாழ்வில் ஏற்பட்ட மன அழுத்தம், சோகம், கோபம், ஆத்திரம், எரிச்சல் சில வினாடிகள் மனதளவில் எண்ணிப் பாருங்கள். அதை உங்கள் உடலில் உண்மையாகவே உணருங்கள். சில வினாடிகள் தான்.

இப்போது உங்கள் மீது உங்கள் அன்பைப் பொழியுங்கள். முட்டாள்தனமாகத் தோன்றினாலும் கவலைப்படாமல் செய்யுங்கள். வேறொருவர் மீது உங்கள் அன்பைக் காட்டுவது போலவே உங்கள் மீது அன்பைக் காட்டுங்கள். உங்களுக்குப் பிடித்த , பிள்ளைகள், அப்பா, அம்மா, மனைவி, காதலி, நண்பர் ஆகியோர் துன்பப்படும்போது அவர்கள் மீது எப்படி அன்பு செலுத்தி அவர்கள் கஷ்டத்தைப் போக்க எப்படி முயலுவீர்களோ அதைப் போல உங்கள் மீதே அனுதாபத்துடன் கூடிய அன்பைச் செலுத்துங்கள்.

உங்கள் மீது நீங்கள் செலுத்தும் அன்பு , துன்பத்தைப் போக்க வந்த ஒரு மருந்து என்று எண்ணிக்கொள்ளுங்கள். அந்த அன்பு என்ற வழவழப்பான களிம்பு உங்கள் உடலை மனதை இதமாக நீவி விடுவதை உணருங்கள். இந்த அன்பிற்குத் தான் நீங்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது அப்போது உங்களுக்குப் புரியவரும்.

இது மிகவும் சுலபமானது. ஒரு சில நிமிடங்கள் போதும்.

ஒன்று, உங்கள் துன்பத்தையும் வலியையும் உணருங்கள்; இரண்டு, உங்கள் மீது அன்பைச் செலுத்துங்கள்; மூன்று, அந்த அன்பே வலி நிவாரணி என்று உணருங்கள்.

இதைத் தினமும் குறைந்தது 8 முறை , முடிந்தால் 12 முறை செய்யுங்கள்.

இந்த அன்புதான் உங்களுக்குத் தேவை. அதை உங்களுக்குத் தர என்றைக்கும் தயங்காதீர்கள்!

இதுதான் ‘உன்னை விரும்பு ‘ என்று சொல்வதன் அர்த்தம்.

மாரடைப்புக்கு முதலில் செய்ய வேண்டிய முதலுதவி !

இதயம் திடிரென்று இயங்காமல் நின்றுவிடும் அந்த ஆபத்தான சூழ்நிலையில் நாம் அந்த நபருக்குச் செய்யவேண்டிய  முக்கியமான முதலுதவி என்ன? 

விஜய் சேதுபதி ,சத்யராஜ் இருவரும் விளக்கும்  இந்தக் காணொளியைப்  பார்த்து நாம் மற்றவர்களுக்கு உதவுவோம். 

 

CPR

CPR – or Cardiopulmonary Resuscitation – is an emergency lifesaving procedure performed when the heart stops beating. Immediate CPR can double or triple chances of survival after cardiac arrest

 

குட்டீஸ் லூட்டீஸ்: விக்கெட் கீப்பர்.! — சிவமால்

Image result for WICKET KEEPER DHONI STUMPING

‘டப்.. ‘

கிரிக்கெட் ரசிகர்களின் ஆரவாரக் கூச்சலினால் அந்த
ஸ்டேடியமே அதிர்ந்தது..

‘ப்யூட்டிஃபுல் ஸ்டம்பிங் பை தி விக்கெட் கீப்பர்..
பாட்ஸ்மான் அவுட்…’ என்று அடித் தொண்டையிலிருந்து
கத்தினார் வர்ணனையாளர்.

பார்வையாளர்கள் காலரியில் என் பத்து வயது மகளுடன்

அமர்ந்திருந்த என் முகத்திலும் ரசிகர்ளின் சந்தோஷமும்

பரவசமும் தொற்றிக் கொண்டது.

என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மிதிலா,
‘என்னப்பா… இந்த ரெஃப்ரிக்கு ஒண்ணுமே தெரியலே..
விக்கெட் விழாம பார்த்துக்க வேண்டிய விக்கெட் கீப்பர்..
அவரே ஸ்டம்ப் பண்ணுவாராம்.. ரெஃபரி, பாட்ஸ்மானுக்கு
அவுட் கொடுப்பாராம்.. விக்கெட் கீப்பருக்கு அல்லவா
அவுட் கொடுத்திருக்கணும்… ‘ என்று பெரிதாக எல்லோ-
ருக்கும் கேட்கும்படி சொன்னாள்.

பக்கத்திலிருந்த பார்வையாளர்களெல்லாம் ‘சரிதானே’
என்று கூறியபடி சிரித்தார்கள். என்னாலும் அவர்கள்
சிரிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

 

கடைசிப்பத்து – என் செல்வராஜ்

ஐந்தாம்   பத்து

சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன். அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த தொகுப்புக்காகத் தகவல்களை திரட்டும்போதுதான் இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கிறது என்பது புரிகிறது. இணையத்தில் எல்லாம் இருக்கிறது என்பர். அப்படியெல்லாம் இல்லை என்பது நன்றாக புரிகிறது. பல எழுத்தாளர்களைப்பற்றிய தகவல் இணையத்தில் இல்லாமல் இருப்பதை பெரும் குறையாகவே நினைக்கிறேன். இந்த கட்டுரை அந்த குறையை சிறிதளவாவது குறைக்கும் என்பது என் எண்ணம். இன்னும் இதில் இல்லாத சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை வேறொரு கட்டுரையில் காணலாம். –

-என். செல்வராஜ்

கல்கி

இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. இவரது சிவகாமியின் சபதம் மற்றொரு புகழ் பெற்ற வரலாற்று நாவல்.கல்கியின் சிறுகதைகள் முழு தொகுப்பாக இரண்டு தொகுதிகளாக திருமகள் நிலையம் வெளியிட்டுள்ளது.சமூகப் புதினமான ‘அலைஓசை’ ஆகியவையும் பெரும் வரவேற்பைப் பெற்றன. கல்கி இறந்த பின் அவரின் அலையோசை நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கல்கியினால் சிறுகதை தமிழ் மண்ணில் இரண்டறக் கலந்தது. அந்த அஸ்திவாரத்தின் மீதே சிறுகதை கட்டியெழுப்பப்பட்டு சிகரமும் அமைக்கப்பட்டது. சிறந்த சிறுகதை கேதாரியின் தாயார்

சி சு செல்லப்பா

சி.சு.செல்லப்பா ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், “சுதந்திர தாகம்” போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர். சுதந்திரச் சங்கு” இதழில் எழுதத் தொடங்கிய செல்லப்பாவுக்கு “மணிக்கொடி” இதழ் கை கொடுத்தது. “சரசாவின் பொம்மை” என்னும் சிறுகதை சிறந்த எழுத்தாளர் என்ற தகுதியை அளித்தது. சிறுகதை எழுத்தாளராக இருந்த சி.சு.செல்லப்பா விமர்சனக் கலையில் ஈடுபடலானார். விமர்சனத்துக்காகத் தனி இதழ் தொடங்க எண்ணினார். பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவத்தால் தன் கொள்கைகளை வலியுறுத்த “எழுத்து” என்ற இதழைத் தொடங்கினார்.நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். இவரின் சிறந்த சிறுகதைகள் சரஸாவின் பொம்மை, மூடி இருந்தது

நீல பத்மநாபன்

நீல பத்மநாபன் என்னும் நீலகண்டப்பிள்ளை பத்மநாபன் , தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது விருது பெற்றுள்ளார்.இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள் முழு தொகுப்பாக வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நீல பத்மநாபனது இரண்டு மிக முக்கியமான, அதிகமாகப் பேசப்பட்ட நாவல்கள் தலைமுறைகள், பள்ளிகொண்டபுரம். புதிய தமிழ் இலக்கிய வரலாறு என்னும் மூன்று தொகுதிகளைக் கொண்ட நூலை சாகித்ய அக்காடமிக்காக நீல பத்மநாபனும் சிற்பி பாலசுப்ரமணியனும் இணைந்து பதிப்பித்துள்ளனர். இந்த நூலின் மூன்றாம் தொகுதி புத்திலக்கியத்தில் தொடங்கி புலம்பெயர்ந்தோர் இலக்கியம் வரையிலான வரலாற்றை சொல்கிறது. இவரது சிறுகதை நகுலன் தொகுத்த குருஷேத்திரம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் கடிகாரம், ஜின்னின் மணம், சண்டையும் சமாதானமும்

க நா சுப்ரமணியம்

வலங்கைமானில் பிறந்த க.நா.சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாக தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட, க.நா.சு தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார்.ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். “பொய்த்தேவு” புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1986ம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. க.நா. சுப்ரமணியத்தையே தமிழ் விமர்சன மரபின் முதல் சிகரமாகக் கொள்ள வேண்டும். தமிழின் தலைசிறந்த படைப்பாளிகளின் பட்டியலைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுக் கொண்டிருந்தார். பட்டியலில் அவ்வப்போது இணங்கான முடிகிற முரண்பாடுகள் அவர் பார்வையைத் துலக்குவனவாக அமையவில்லை. ஆனால், அவர் இனங்காட்டிய இலக்கியப் படைப்புகள் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளாக ஏற்கப்பட்டன. மயன் என்ற பெயரில் கவிதைகளை அவர் எழுதிவந்தது பிரசித்தம். ‘படித்திருக்கிறீர்களா’ சுதேசமித்திரன் வாரப் பதிப்பில் வந்த தொடர். இது மிகச்சிறப்பான தொடர் கட்டுரை. இவரின் சிறந்த சிறுகதை சாவித்திரி

வாஸந்தி

பங்கஜம் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் மற்றும் வரலாறு துறைகளில் பட்டம் பெற்றவர்.இந்தியா டுடே தமிழ் பதிப்பின் ஆசிரியராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி துணிச்சலான பத்திரிக்கையாளர் என்று முத்திரை பதித்தவர். இவர் எழுதிய “வாஸந்தி சிறுகதைகள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.பஞ்சாப், இலங்கை, ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சனைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் முறையே மெளனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் ஆகியவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாப் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான ’ஆகாச வீடுகள்’ இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது. சமூக, மனித உளவியல் கூறுகளை வெகு இயல்பாக எழுத்தில் கையாண்டவர். இவரின் சிறந்த சிறுகதை தேடல்,

சிவசங்கரி

சிவசங்கரி தமிழக எழுத்தாளர். நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து “இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு” என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.இவரது முதல் சிறுகதை “அவர்கள் பேசட்டும்” – குழந்தையில்லாத இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை, 1968 இல் கல்கியில் பிரசுரமாகி, எழுத்துலகில் பிரவேசித்தவர். இரண்டாவது சிறுகதை “உனக்குத் தெரியுமா?” – ஒரு குடிகாரனைப் பற்றிய கதை, `ஆனந்த விகடன்’ பத்திரிகையில் பிரசுரமானது. அதன்பின் பல சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், வெளிநாட்டு அனுபவங்கள், கட்டுரைத் தொடர்கள் என எழுதியிருக்கிறார். சிவசங்கரியின் சிறுகதைகள் இரண்டு தொகுதிகளாக வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நெஞ்சில் நிற்பவை என்ற சிறுகதை தொகுப்பை சிவசங்கரி தொகுத்து வானதி பதிப்பகம் வெளியிட்டது. இதில் 60 எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்துள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் வைராக்கியம், பொழுது , செப்டிக்

மேலாண்மை பொன்னுச்சாமி

விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்தவர் பொன்னுசாமி. மேலாண்மை பொன்னுசாமி சிறுகதை, மற்றும் புதின எழுத்தாளர். இவர் எழுதிய மின்சாரப்பூ என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் 2007 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருதைப் பெற்றது.அவருடைய அரும்புகள், உயிரைவிடவும், சிபிகள் போல தமிழில் குறிப்பிடத்தக்க பல கதைகளை தந்திருக்கிறார்.அவருடைய முற்றுகை நாவலில் கையாண்ட பிரச்னை மிக முக்கியமானது.அவருடைய படைப்புகள் அத்தனையும் ஒரு மானாவாரி கரிசல்காட்டு விவசாயியின் குரலில் சொல்லப்பட்ட கதைகள்தாம். சம்சாரியின் மனதோடு பேசிய கதைகள் தமிழில் மிக மிக அரிது.அப்படியான அரிய கதைகளைத் தந்தவர் மேலாண்மை.கரிசல் பூமி தந்த சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். கரிசல் பூமி மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாகவும், உயிரோட்டமாகவும் எழுதுவதில் தலை சிறந்தவர். இவருடைய மானாவரிப்பூ 33 சிறந்த சிறுகதைகள் அடங்கிய தொகுப்புக்கு சி.பா. ஆதித்தனார் இலக்கிய விருது கிடைத்துள்ளது. இவரின் சிறந்த சிறுகதை அரும்பு

ஜி நாகராஜன்

1950 முதலே சிறுகதைகள் எழுதியிருக்கிறார். 1957ல் ஜனசக்தி மாத இதழில் “அணுயுகம்” என்ற கதையை எழுதியதும் புகழ் பெற்றார். பித்தன் பட்டறை என்ற பதிப்பகம் வழியாக “குறத்திமுடுக்கு” என்ற குறுநாவலை வெளியிட்டார். “நாளை மற்றும் ஒரு நாளே” இவரது புகழ் பெற்ற நூல். ஜி. நாகராஜன் சிறுகதை எழுத்தாளர். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.இவருடைய மொத்தப் படைப்புகளையும் தொகுத்து “ஜி.நாகராஜன் ஆக்கங்கள் என்ற பெயரில் காலச்சுவடு பதிப்பகம் முழு படைப்புக்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது. ஜி.நாகராஜனின் கதை உலகம் என்பது சமூகத்தால் கண்டுகொள்ளப்படாத தகுந்த அங்கீகாரமில்லாத நகரத்தின் இடுக்குகளில் வாழும் விளிம்புநிலை மக்கள் சார்ந்தது. தமிழ்ப் புனைவுகள் அதுவரை கண்டிராத ஓர் உலகத்தை தம் கதைகளின் வாயிலாகக் கட்டமைத்தார்.நாகராஜனின் சிறுகதைகளைவிட அவருடைய இரு நாவல்களும் அதிகமாக கவனிக்கப்பட்டவை. அவருடைய இரண்டு நாவல்களுக்கும் இணையான ஒரு சிறுகதை, “கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா’ என்ற கதை. இதுகாறும் நம்பப்பட்டு வந்த ஒழுக்கத்தையும் அதன் விதிகளையும் அதன் எல்லைவரை சென்று தன் கதைகளின் மூலமாகத் தகர்த்தெறிந்தவர் ஜி.நாகராஜன். இவரின் சிறந்த சிறுகதைகள் ஆண்மை , இளிந்த ஜாதி, தீராக்குறை, டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேஷ்டி அணிந்த மனிதரும்

பா செயப்பிரகாசம்

பா. செயப்பிரகாசம் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். குறிப்பாகச் சிறுகதைகளில் இவரது பங்களிப்பு தனித்துவமானது. ஒரு ஜெருசலேம், காடு ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. மனஓசை இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்துள்ளார். சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் எழுதியுள்ளார்.அன்று தொடங்கி இன்று வரை மொழி, தேசியம், வர்க்கம், சாதி, பாலியல் என்று எதுவானாலும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே சார்ந்து போதல் என்ற உண்மைக் கலைஞனுக்கே உரிதான உளவியலைச் சிந்திச் சிதறவிடாமல் தக்க வைத்துக் கொண்டு வருகிறார். ஏறத்தாழ பத்து ஆண்டுகள் மன ஓசை இதழை நடத்துவதற்காக தனது படைப்பாக்க மனநிலையையே தாரை வார்த்திருக்கிறார். பா.செயப்பிரகாசம் கதைகள் முழுமையான தொகுப்பு எனும் இப்புத்தகம் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாகும். சந்தியா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது.“ஜே. பி. என நண்பர்களால் அழைக்கப்படும் பா.செயப்பிரகாசம் 1941இல் பிறந்தவர். எழுபதுகளின் புகழ் பெற்ற இலக்கியப் போக்குகளில் ஒன்றான கரிசல் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான சிறுகதைக் கலைஞர்களுள் ஒருவர். வானம் பார்த்த பூமியான கரிசல் காட்டு வாழ்வின் துயரார்ந்த பகுதிகளைக் கவித்துவம் ததும்பும் தன் படைப்பு மொழியில் ‘உந்திக்கொடியோடும் உதிரச்சேற்றோடும்’ முன்வைத்த பா.செ., தொடக்கத்தில் தன் சொந்தப் பெயரிலும் பிறகு சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் சிறுகதைகள் எழுதியவர் மறைந்த கரிசல் படைப்பாளி வீர.வேலுச்சாமி அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் தேடிச் சேகரித்து ஒரே தொகுப்பாக தோழர் பா.செயப்பிரகாசம் ‘மண்ணின் குரல்’ என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். இவரின் சிறந்த சிறுகதைகள் ஒரு ஜெருசலேம், அம்பலக்காரர் வீடு, கரிசலின் இருள்கள், இருளுக்கு அழைப்பவர்கள், தாலியில் பூச்சூடியவர்கள்

கோபிகிருஷ்ணன்

விளிம்பு நிலை மனிதர்கள்,கீழ்த்தட்டு மனிதர்கள்,நடுத்தர வர்க்கம்,அதிகாரங்களுக்குப் பழகிய இயந்திரமயமாகிப்போன மனிதர்கள் என இவரது கதைமாந்தர்கள் இயலாமையின் உச்சத்திலிருந்து சமூகத்தின் போலி மதீப்பீடுகளை விசாரணைக்குள்ளாக்குபவர்கள்.உளவியல் சிக்கல்கள்,அக மனதின் விசாரங்கள் என இவரது துறை சார்ந்த செறிவான உள்ளீடுகளையும் இவரது படைப்பில் காணலாம்.வாழ்வின் மீது மறைமுகமாகப் படிந்துபோயிருக்கும் குரூரத்தினை தனது அடையாளமாகவே ஏற்றுக் கொள்ளும் வாழ்வின் உச்சகட்ட இயலாமைகளை மிகவும் புதுமையான ஒரு நடையில் நமக்கு அறிமுகப்படுத்துவதாகவே இவரது கதைகள் இருக்கின்றன.மதுரையில் பிறந்த கோபிகிருஷ்ணன் உளவியல் துறையிலும்,சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஆத்மன் ஆலோசனை மையம் என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.எந்த ஒரு வடிவிலும் குரூரத்தை தாங்கிக் கொள்ளாத மனநிலையே இவருக்கு வாய்த்திருக்கிறது. மனநிலை பிறழ்வு மையங்களில் ஆலோசகராக இருந்த நாட்களில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி ‘உள்ளிருந்து சில குரல்கள்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். இவரது படைப்புக்களின் முழு தொகுப்பை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் காணி நிலம் வேண்டும், புயல், மொழி அதிர்ச்சி

அகல்யா -திகில் குறும்படம்

ஒண்ணாம் நம்பர் திகில் படம். அருமையான கதை 

நல்ல நடிப்பு 

சும்மாவா ஒண்ணரைக்கோடி மக்கள் பார்த்திருக்கிறார்கள் ?

கபாலி ஹிரோயின் ராதிகா ஆப்தே நடித்த சிறப்பான குறும்படம்.

பார்த்து ரசியுங்கள்! 

R P ராஜநாயஹம் வலைப்பூ

My Photo ஆர் பி ராஜநாயகம்

ராஜநாயஹம் கறுப்பு வெள்ளைக் கால தமிழ் திரையுலகின் ஒரு நடமாடும் ஆவணக்காப்பகம். அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள சுவாரஸ்யமான திரைக்குறிப்புகள் தனித்து நூலாக வரவேண்டியவை.’ என எஸ்.ராமகிருஷ்ணன் வெப்சைட்டில் எழுதினார்

வித்தியாசமாக  இருக்கிறது இவரது வலைப்பூ.  (http://rprajanayahem.blogspot.com)

திரைப்படம், நடிகர்கள், மற்றும் இலக்கியத்தின் பல கோணங்களை இவர் அலசி ஆராய்ந்திருக்கிறார்.

 

தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்களின் ஒருவரான மௌனி பற்றி அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்: 

 

மிகவும் அழகான அர்த்தமுள்ள அதிக விஷயதானம் உள்ள பதிவு.

அதனை இங்கு மீள் பதிவு செய்ய  இதன்முலம் அவரது அனுமதியைக் கேட்டுக்கொள்கிறேன். 

————————————————————————————————————————

அழியாச்சுடர் மௌனி

Image result for மௌனி

சிறுகதைத்தளத்தில் மட்டுமே சிக்கனமாக இயங்கிய படைப்பாளி.குறைந்த அளவில் 24 சிறுகதைகள்.மௌனி என்ற புனைபெயர் கூட இவராக வைத்துக் கொண்டதல்ல.கதைகளுக்கு தலைப்பு கூட இவர் வைத்ததில்லை.

தமிழில் எழுதியவர் தான் மௌனி,என்றாலும் ’தமிழில் என்ன இருக்கு’ என்று தடாலடியாக பேசுபவர்களுக்கு முன்னோடி.

பாஞ்சாலி சபதம் ஆவேசத்தில் எழுதப்பட்டதால் அது இலக்கியமல்ல என்றார்.புதுமைப்பித்தனையும் உதட்டைப்பிதுக்கி அலட்சியப்படுத்தினார்.லா.ச.ராவை ஒரு பாரா கூட படிக்க முடியவில்லை-தி.ஜானகிராமனிடம் sex பற்றி ஒரு obsession இருக்கிறது.-ஜெயகாந்தன் கதை படித்தது ஒன்று கூட நினைவில் நிற்கவில்லை- சுந்தர ராமசாமியிடம் ஒரு higher order of literary cleverness இருக்கு.ஆனா his cleverness kills the art.

மௌனியின் கதைகள் குறித்தும் எப்போதுமே இரண்டு கட்சிகள் உண்டு.

     1.”மிக மேன்மையான படைப்பாளி”

  1. ”சும்மா பம்மாத்து செய்தவர்”

இப்போது எப்படியோ, விசித்திரமோ,இயல்போ கல்வித்துறைப் பண்டிதர்கள் பலரும் மௌனியை அறியாதிருந்தார்கள்.

தமிழவன் ஒரு கருத்தரங்கத்தில் மௌனி பெயரை குறிப்பிட்டபோது ஒரு பேராசிரியர் தமிழ் இலக்கியத்தில் மௌனி என்ற எழுத்தாளரே கிடையாது என்று சாதித்தாராம்.

எனக்கும் இப்படி ஒரு அனுபவம்.’மௌனியை படித்திருக்கிறீர்களா?”என்று நான் கேட்டபோது ஒரு பேராசிரியர் ரொம்ப யோசித்து,நெற்றியை தடவி குழம்பி சொன்னார்

‘படித்திருப்பேன்…எவ்வளவோ படிக்கிறேன்..மௌனி படிக்காமலா இருந்திருப்பேன்?’

மௌனியை அந்த பேராசிரியர் படிக்கவேயில்லை என்பதில் ஐயமில்லை.

ஆர்.எஸ் மணி என்ற மௌனி நிறையப் பேசுகிற சுபாவம் உள்ளவர்.

சிதம்பரம் கோவிலை திருநீறுப்பட்டையுடன் வலம் வந்தவர்,சங்கராச்சாரியாரை தாண்டி ரமணரையும் ஜேகேயையும் வள்ளலாரையும் மதிக்கமுடியாதவர் என்ற தகவலை பிரமிள் தருகிறார்.

பிரமிளை வீட்டுக்குள் அழைத்துச் செல்லாமல் திண்ணையில் வைத்து மௌனி சாப்பாடு போட்டார்.பிரமிளோ மௌனியுடைய சனாதனத்துக்கு  தத்துவ முலாம் பூசினார்.

அக்ரஹாரத்து அதிசயமனிதர் வ.ரா.வை சந்திக்க கு.ப.ராவுடன் மௌனி செல்கிறார்.

”பூணூலை கழட்டி அந்த ஆணியில் மாட்டு” என்கிறார் வ.ரா

.உடனடியாக மௌனியின் பதில்” I would rather cut my cocks and put it there!”

இந்த ’பதில்’ பிரமிளுக்கு ஜாதீய நோக்கத்தை மீறிய கவித்துவமாக தெரிகிறது.

சொந்த வாழ்க்கையில் சந்தித்த புத்திர சோகங்கள் உள்ளிட்ட சொல்லொணா துயரங்கள் மௌனியை சநாதனியை மாற்றிவிட்டது என்பது ஒரு IRONY. சில ஞானிகள் சொந்த வாழ்க்கை சோகங்களினால் பகுத்தறிவு வாதிகளாக மாறியிருக்கிறார்கள்.

இளமையில் வைதீக சூழ்நிலையில் பிறந்து அடக்குமுறைகளுக்கு எதிராக மௌனி நிகழ்த்திய மீறல்- தேவிடியா வீட்டுக்கு சென்றது-சினிமா பிரபல சகோதரிகள் வரலட்சுமி,பானுமதியோடு ஏற்படுத்திக்கொண்ட தொடர்பு.

இந்த மீறலை ஏன் பூணூல் விஷயத்தில் செய்ய முடியவில்லை என்று கேட்பவர்கள் கேட்பார்கள்.

எழுத்தாளன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் உபதேசம் செய்ய எவ்வளவு பேர் புறப்பட்டாலும் மௌனி என்ற கலைஞன் உருவாகவே செய்கிறான். டி.ஹெச்.லாரன்ஸ்’படைப்பை நம்பு.படைப்பாளியைப்  பாராதே’என்று ஏன் சொல்லவேண்டும்.

புதுமைப்பித்தன் ‘மௌனி சிறுகதையின் திருமூலர்’என்றார்.க.நா.சு எப்போதும் மௌனி பற்றி பிரமாதமாக எழுதியவர, தி.ஜா,கரிச்சான்குஞ்சு இருவரும் மௌனியின் ரசிகர்கள்.சுந்தர ராமசாமி’மௌனி சாதித்து விட்டார்.நாங்களெல்லாம் முயற்சி செய்கிறோம்’ என்றார்.

மௌனியை glamourize செய்த பெருமை ஜெயகாந்தனுக்குத் தான் உண்டு. தான் எப்போதும் எழுதுவதற்காக உட்காரும்போது மௌனியின் ‘மாறுதல்’ என்ற கதையைப் படித்து விட்டுத்தான் எழுதுவதாக சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.ஒரு பிரபல பத்திரிக்கை பல எழுத்தாளர்களிடம் தங்களை மிகவும் பாதித்த கதைகளைப் பற்றிக் கேட்டு வெளியிட்ட போது தி.ஜானகிராமன் அவர்கள் ந.பிச்சமூர்த்தியின் “அடகு” கதையைக் குறிப்பிட்டு அதை வெளியிடச் செய்தார்.அப்போது ஜெயகாந்தன் தன்னை மிகவும் பாதித்த கதையென்று சொல்லி மௌனியின் “மாறுதல்” அந்தப்பத்திரிக்கையில் பிரசுரமாகியிருந்தது.

பின்னாளில் ஜெயகாந்தன் கதைகள் பற்றி மௌனி அலட்சியமாக பதிலளித்த பிறகு ஒரு வேடிக்கை நடந்தது. மௌனியின் ‘மாறுதல்’கதையைத் தான் எப்போதும் எழுத ஆரம்பிக்கும் முன் படித்த விஷயமானது பல் விளக்குவது போல,குளிப்பது போல ஒரு சாதாரண habitual action மட்டும் தான்.மற்றபடி மௌனியின் கதையில் inspiration எல்லாம் தனக்கு இல்லை.மௌனி கதை பற்றி உயர்வான அபிப்ராயமும் கிடையாது என்று தடாலடியாக ஜெயகாந்தன் பதிலடி கொடுத்து விட்டார்.

கு.அழகிரிசாமி “மௌனி செய்வது பம்மாத்து தான்” என்று க.நா.சு விடம் சண்டை பிடிப்பார்.மௌனி கதைகளுக்கான முன்னுரையில் க.நா.சு மறைமுகமாக அழகிரிசாமியை மூக்கறையன் என்றும் இவர் போன்றவர்களுக்கு கண்ணும் காதும் இருக்கிறதா என்றும் கூட சந்தேகம் தெரிவித்திருந்தார்.

எம்.வி.வெங்கட்ராமிடம் மௌனி “ ஒரு கதை எழுதினேன்.விகடனுக்கும் குமுதத்துக்கும் அனுப்பினேன்,திருப்பி அனுப்பி விட்டார்கள்’ என்று வருத்தப்பட்டாராம்.’விகடனுக்கும் குமுதத்துக்கும் ஏன் சார் அனுப்பினீர்கள்?’ என்று வியப்புடன் கேட்டதற்கு’அவை தானே பிரபலமாக இருக்கின்றன.அதிகப்பணமும் தருவார்களே!” என்று மௌனி வெகுளியாக பதிலளித்தாராம்.

மௌனிக்கு அபின் பழக்கம் இருந்தது போல பொய் பேசும் பழக்கமும் இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எம்.வி,வியின் “என் இலக்கிய நண்பர்கள்” நூலைப் படிக்கும்போது ஏற்படவே செய்கிறது.

மௌனியின் கதைகள் சில வெங்கட்ராமால் பல தடவை திருத்தம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.இலக்கண அமைதியோ தெளிவோ மௌனியிடம் இருக்காதாம். ’மனக்கோலம்’ கதையை திருத்தம் செய்து ’தேனீ’’யில் படித்த போது அக்கதையின் படைப்பாளி தானே என்பது போன்ற பெருமிதம் வெங்கட்ராமிற்கு ஏற்பட்டிருக்கிறது.மணிக்கொடியில் அவர் எழுதிய கதைகளின் தமிழும் இப்படித்தானா? என்று பி.எஸ்.ராமையாவிடம் கேட்டதற்கு ’ஒரு மாதிரியாகத்தான் இருக்கும்,நாங்கள் திருத்தி வெளியிட்டோம்’என்று சொன்னாராம்.

ஆல்பர்ட் ஃப்ராங்க்ளீன் என்ற அமெரிக்கன் மௌனியை’கருமேகங்களுக்கிடையில் ஒரு மின்னல்’ என்று பாராட்டி நியூயார்க்கர் பத்திரிக்கையில் இரண்டு சிறுகதைகளை மொழிபெயர்த்து பிரசுரமானது.

பெங்குவின் பதிப்பகம் சிறந்த உலகச்சிறுகதைகளில் ஒன்றாக ,மௌனியின் ‘ சாவில் பிறந்த சிருஷ்டி’ கதையை வெளியிட்டது.

ஒரு பேட்டியில் கர்நாடக சங்கீத உலகின் பீஷ்மர் செம்மங்குடி சீனிவாசய்யர் “ மௌனி என்ற பெயரில் கதை எழுதிண்டிருந்தானே மணி! அவன் என்னோட கஸின் தான்!” என்று சந்தோஷமாக சொல்லியிருந்தார்.

இது கூட மௌனியை கௌரவப்படுத்துகிற விஷயம் தான்!

 ——————————————————————————————————————

இடைவெளி சம்பத்

இடைவெளி நாவல் எழுதிய  எஸ்.சம்பத் நாராயணன் 42வயதில் மூளை ரத்தநாளச்சேதத்துக்கு ஆளாகி 1984 ல் மறைந்து விட்டார் . தன் எழுத்துக்களில் முதன் முதலாக புத்தகவடிவம் பெற்ற ‘ இடைவெளி ‘ நாவலை முழு புத்தகமாய்ப் பார்ப்பதற்கு முன்னர் மறைந்து விட்டார்.தன் திறமைகளுக்குரிய கவனிப்பு தனக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இவருக்கும் இருந்தது . ‘அம்மாவுக்கு ‘ நாவல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆதவனும் சம்பத்தும் கல்லூரியில் இந்திராபார்த்தசாரதியின் மாணவர்கள். இந்திரா பார்த்தசாரதி பள்ளியில் படிக்கும்போது தி.ஜானகிராமனின் மாணவர.
சம்பத் மறைந்து மூன்றே வருடத்தில் 45வயதில் 1987ல் ஆதவன் மறைந்தார். தி.ஜாவுக்கும் 1982 ல் 62வயது தான். சாகிற வயசா ?

இடைவெளி – சாவு பற்றிய சம்பத்தின் ஆழ்ந்த தவம். ‘ சாவு என்னை ஈர்த்தவிதம் -‘ கடைசியாக எல்லாம் போய்விடுகிறது . இதற்கு என்ன செய்வது? தற்கொலைத்தனமான இந்த எண்ணம் எனக்கு ஒரு மகத்தான உண்மையை உணர்த்தி விட்டது. இடைவெளி நாவல் – ஒரு ஆன்மாவின் கைதேர்ந்த அறிவின் சத்திய சோதனை. விவரிக்கமுடியாத சிக்கல்களைக் கொண்ட பிரபஞ்சம், ஏதோ ஒரு கனிவில், மனிதனிடம் காட்டும் ஞானப் பிச்சை. ‘

சம்பத் அவரே சொல்வது போல அடிப்படை விஷயங்களில் உழல்பவர்.

சாவு என்பது இடைவெளி . வெற்றி எல்லை தெரியாமல் ஓடும் குதிரை.
எதிராளி தோற்றுப்போனால் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால் சாவிடம் மட்டும் ஏன் இந்த வெறி போகவே இல்லை . இது நாள் வரை தன்னுடைய தன்மையை மரணம் உணர்த்திக்கொள்ளாமலே இருந்திருக்கிறது. குறைந்த பட்சம் அதற்கு ‘ போர் ‘ அடிக்கவில்லை. எப்போதுமே ஜெயிப்பது விடலைத்தனமான காரியம் இல்லையா?

காந்தி முழத்துண்டுடன் நின்று குண்டுகளை வெறும் மார்பில் வாங்கிக் கொண்டார் . காந்தி வெறும் உடம்புடன் நின்றது தான் அவருடைய அத்தனை கால தற்காப்புக்கும் காரணம். வெறும் உடம்பில் சுடுவது என்பது அவ்வளவு ஈசியான காரியமா ? வெறும் உடம்போடு எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன் என்ற மனிதனை !

கம்யுனிஸ்ட் கடவுளை நம்பினா அவன் சமுதாயத்துக்கே பயங்கரமானவன் .

இப்படி இடைவெளி நாவலில் படித்த விஷயங்கள் இன்றும்
மறக்கமுடியவில்லை .

டெல்லியிலேயே வளர்ந்த சம்பத் சென்னைக்கு வந்த பின் மவுண்ட் ரோடு குறித்து சில வார்த்தை சொல்கிறார் :’ மவுண்ட் ரோடு – மதராசின் கனாட் ப்ளேஸ்.இதுவும் இதனுடைய மூஞ்சிகளும் ! எப்படி ,எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம் . வளர்ந்த நிலையில் இங்கு இருக்கக்கூடாது .

இந்த நாவல் பற்றி சொல்ல சம்பத் நாவலில் ஒரு இடத்தில் எழுதும் வார்த்தைகளையே சுட்ட வேண்டியுள்ளது .” எண்ண ஓட்டங்களுக்கு, பெரிய எண்ண ஓட்டங்களுக்கு ஒரு பூ மணப்பின் குணம் உண்டு . அதை யாருமே அசட்டை செய்து விட முடியாது .”

பூமியில் விளைவது எல்லாமே மனிதனுக்கு சொந்தம், எல்லாமே எல்லோருக்கும் சொந்தம் என்ற காலம் வராதா என பகல் கனவு கண்ட சம்பத்.

சம்பத் தின் இடைவெளி நாவல் நூறு பக்கங்கள் தான் . நாவலில் வாமன அவதாரம்! க்ரியா வெளியிட்ட இந்த நாவல் (August,1984) அதன் பிறகு இன்னும் மறுபிரசுரம் செய்யப்படவே இல்லை.

அந்த காலத்தில் டெல்லியில் சம்பத் ஆயிரம் பக்கங்களுக்கு ஒரு நாவல் எழுதி கையெழுத்துப் பிரதியாக இ . பா.விடம் படிக்க கொடுத்திருக்கிறார் . சில நாளில் இ .பா படித்தவுடன் அவர் வீட்டிற்கு போகிறார் . இ .பா நாவல் பற்றி ” Rambling ஆ இருக்குடா . நல்லா எடிட் பண்ணனும் .” என்று வெராண்டாவில் சொல்லிவிட்டு வீட்டினுள்ளே போயிருக்கிறார் . சம்பத் ஆயிரம் பக்க நாவலின் கையெழுத்துப் பிரதியை நெருப்பு வைத்துக்கொளுத்தி விட்டார்!” டே டே .. ஏண்டா ” இபா பதறிப் போய்க்கேட்டிருக்கிறார். ” குருநாதருக்கு பிடிக்காத நாவல் இனி எதற்கு ?” என்று சாவகாசமாக சம்பத் சொன்னாராம்.

இன்று சம்பத் எழுதி வாசகர்களுக்கு இந்த இடைவெளி நாவல் தான் மிஞ்சியிருக்கிறது. கணையாழியில் அருமையான இரண்டு குறுநாவல்கள் எழுதினார். ” சாமியார் ஜூவிற்கு போகிறார் ” அடுத்து ” பணம் பத்தும் செய்யும் ” என்ற குறுநாவல் .
கசடதபற வில் ‘கோடுகள் ‘ என்ற சிறுகதை . ‘ இடைவெளி ‘ என்ற தலைப்பிலேயே கூட ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் . அவர் சிறுகதையொன்றில் திஜாவின் மூத்த மகன் சாகேத ராமன் ஒரு பாத்திரமாக வந்திருக்கிறார் .

ஜி . நாகராஜனின் படைப்புக்கள் தொகுக்கப்பட்டது போல சம்பத்தின் படைப்புகளும் தொகுக்கப்பட்டால் நல்லது .ரொம்ப சொற்பமாகத்தான் எழுதினார் . அவர் மொத்தப்படைப்புகளும் கூட ஒரு சிறு நூல் அளவுக்குத்தான் வ

Read more at http://rprajanayahem.blogspot.com/2009/10/blog-post_21.html#YgMskso81w6w5Ql0.99 


Read more at http://rprajanayahem.blogspot.com/2012/10/blog-post_7.html#CxrLCMxUoOU5Xfdf.99

UNDO MY SAD

Image result for undo song

 

 

நம் மனதை அப்படியே உருக்கும் பாடல்! 

முதலில்  வரிகளை படித்துக்கொண்டே கீழே இருக்கும் வீடியோவில்  பாட்டைக்  கேளுங்கள்!

பிறகு  வீடியோவை முழுவதுமாகப்  பாருங்கள் !

நீங்கள்  ஒரு  புதிய உலகத்திற்கு எடுத்துச் செல்வதை உணருவீர்கள்!

Sanna Nielsen – Undo (OFFICIAL VIDEO) – YouTube

 

Undo” is a song by Swedish singer Sanna Nielsen. The track was written and composed by Fredrik KempeDavid Kreuger, Hamed “K-One” Pirouzpanah. It premiered on 8 February 2014, as part of the second semi-final in Melodifestivalen 2014. The song successfully progressed to the final.

Lyrics

Silent, I can’t wait here silent
Working up a storm inside my head
Nothing, I just stood for nothing
So I fell for everything you said

Hear the rumble
Hear my voice

Silent, I can’t wait here silent
Gotta make a change and make some noise

Undo my sad
Undo what hurts so bad
Undo my pain
Gonna get out, through the rain
I know that I am over you
At last I know what I should do
Undo my sad

Trouble, baby I’m in trouble
Everytime I look into your eyes
Save me, oh I’m gonna save me
Far away from all the crazy lies

Hear the rumble
Hear my voice

Undo my sad
Undo what hurts so bad
Undo my pain
Gonna get out, through the rain
I know that I am over you
At last I know what I should do
Undo my sad

Songwriters: David Bengt Kreuger / Fredrik Lars Kempe / Hamed Pirouzpanah
Undo lyrics © Warner Chappell Music, Inc, Universal Music Publishing Group

தமிழம்

பொள்ளாச்சி  நடேசன் என்ற தமிழ் அறிஞர்  குழந்தைகளுக்குத்  தமிழைச்  சொல்லிக்கொடுக்கப்  புது வழியைக் கண்டு பிடித்துள்ளார்.  அதன்படி,   32 அட்டைகளில் 30 நாட்களில் தமிழை தமிழ் தெரியாத எவருக்கும் கற்றுக்கொடுக்க முடியும்.  

விவரங்களுக்கு அவரது கீழ்க்கண்ட   இணைய தளத்தில் பாருங்கள்: 

http://www.thamizham.net/

அந்த அட்டைகளை பயன்படுத்தும் முறையையும் இந்தக் காணொளியில் கூறியிருக்கிறார். 

 

 

அதுமட்டுமல்லாமல், தமிழைப் பிழையின்றி எழுதவும் பேசவும் ஒரு கல்விமுறையைத் தயாரித்து அதனை 30 பாடங்களில்  அடக்கி, 30 நாட்களில் மின்னஞ்சல் மூலமாக தினம் ஒரு பாடமாக அனுப்பியும் தருகிறார். 

மேற்கண்ட எல்லாப் பாடங்களையும் அவரது இணையதளத்திலிருந்து  இலவசமாக தரவிரக்கம் செய்துகொள்ளலாம். 

இவரது ஆரம்பத் தமிழ் கற்பிக்கும் முறை மூலம்  அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் உலகில் பல இடங்களில்  தமிழ் கற்பிக்கப்பட்டு வருகிறது. 

குவிகமும் அவருடன் இணைந்து தமிழைத் தமிழ் தெரியாதவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க ஒரு நல்ல திட்டம் தீட்டி வருகிறது. அது பற்றிய விவரங்கள் பின்னர் வெளிவரும். 

 

நிழல் நிஜமானால்….! — நித்யா சங்கர்

Image result for bengali actors fighting

 

‘கங்கிராஜுலேஷன்ஸ்’ என்று பெருமகிழ்ச்சியோடு வரவேற்றாள் காயத்ரி.

ஆபீஸிலிருந்து அலுப்போடு அப்போதுதான் வீட்டிற்குள் நுழைந்த நான் கேள்விக் குறியோடு அவளை நோக்கினேன். அவளது மகிழ்ச்சி சிறிது சிறிதாக என்னையும் தொற்றிக் கொண்டது.

‘நீங்க ஸென்ட்ரல் மினிஸ்ட்ரி ஆஃப் ஃபாமிலி வெல்ஃபேருக்கு நாடகப் போட்டிக்காக ஒரு நாடகம் அனுப்பியிருந்தீங்கயில்லையா… அதுக்கு ஃபர்ஸ்ட் ப்ரைஸ் கிடைச்சிருக்கு.  அந்த நாடகத்தை டி.வி. ஸீரியலா எடுக்கப் போறாங்களாம். அதிலே உங்களை நடிக்கவும் கூப்பிட்டிருக்காங்க..’

‘ஓஹோ… அப்படியா…! ‘ என்று ஆனந்தத்தோடு குதித்தேன். காயத்ரியைக் கட்டி அணைத்தேன்.

ஸீரியல் படப் பிடிப்பு வெகு வேகமாக நடந்தது. டி.வி. யிலும் ஒளி பரப்பானது. ஆயிரக் கணக்கான பாராட்டுக்
கடிதங்கள்.

‘ஸூப்பர் ஸ்டாரையும், உலக நாயகனையும் சாப்பிட்டு விட்டார் பாஸ்கர் தத்ரூபமான நடிப்பின் மூலம். அவர் நடிக்கவா செய்தார்.. அந்தப்பாத்திரமாக வாழ்ந்தல்லவா காட்டி விட்டார்…’ என்றெல்லாம் பத்திரிகைகளின் பறைசாற்றல்.

திரைப்பட இயக்குனர் திலகம் வீடு தேடி வந்து தன்படத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டு போனார். தமிழ்த்திரைப் படத்தின் நம்பர் 1 நடிகையுடன் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு… ஆபீஸிலே பெர்மிஷன் வாங்கிக்கொண்டு நடித்துக் கொடுத்தேன்.

என் அதிர்ஷ்டம்… படம் வெள்ளி விழா கொண்டாடியது.

அங்குதான் வம்பும் ஆரம்பம் ஆனது!

ஞாயிற்றுக் கிழமை.

ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். வாசலில் நிழலாட, நிமிர்ந்து பார்த்தேன்.

கழுத்திலே கர்ச்சீப்பைக் கட்டிக் கொண்டு, பெரிய மீசையொடு வாட்டசாட்டமாக நின்றிருந்தான் அவன்.

‘யார் வேணும்..’ என்றேன்.

‘என்ன வாத்யாரே.. அசலை அசலாவே காட்டறியாமே..அசல் அடி எப்படி இருக்கும்னு பார்த்திருக்கியா..? எங்க தலைவர் பிரதாப் சந்தருக்கு போட்டியா வரணும்னு நெனப்பா…? அப்படி ஏதாவது இருந்தா அதை அப்படியே மறந்துடு… உன்னோடு, உன் சம்சாரத்தோடு உயிரும் உங்க உடம்புலே இருக்காது. இனி ஏதாவது சினிமாவுக்கு கான்ட்ராக்ட் போட்டே… அவ்வளவுதான் ஜாக்கிரதை..’

‘அண்ணாச்சி.. அப்படியெல்லாம் எனக்கு ஐடியாவேகிடையாது.. உங்க தலைவரைப் பார்த்து நான் பேச முடியுமா’

ஒரு நிமிடம் யோசித்தவன்..,’ஓகே.. சரி.. வா..’ என்றான்.

நான் உடைகளை மாற்றிக் கொண்டு அவனுடன் புறப்பட்டேன்.

‘ஓ… மிஸ்டர் பாஸ்கர்… எங்கே இப்படி..’ என்றான் பிரதாப்சந்தர், ஒரு கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்ட புன்னகையோடு.

நாலு அடியாட்கள், வீரப்பன் மீசையோடு பாய ரெடியாகநின்று கொண்டிருந்தார்கள்.

‘உங்க ஆள் எல்லாத்தையும் விவரமாக சொன்னார்…’

‘அப்படியா.. என்ன முடிவு பண்ணினீங்க..?’

‘மிஸ்டர் பிரதாப் சந்தர்.. நான் ஒரு நல்ல இன்ஸ்டிடியூஷன்லே நல்ல வேலையிலே இருக்கேன்… எனக்கு இந்த நடிப்புத்தொழிலிலே இருக்கணும்னு அவசியம் இல்லே…’

‘பின்னே எதுக்குங்க உங்களுக்கு இந்த வேலை..? எல்லாத்தையும் கடாசிட்டுப் போக வேண்டியதுதானே..”

‘மிஸ்டர் பிரதாப்.. இங்கே பாருங்க.. எனக்கு ஐம்பது லட்சம்ரூபாய் கடனாயிடுத்து.. வேலையிலே கிடைக்கிற சம்பளத்தை வெச்சுட்டு வாழ்க்கை பூரா அடச்சிட்டிருந்தாலும் கடன் தீரும் என்கிற நம்பிக்கை இல்லே… சினிமாவிலே நடிச்சா நல்ல காசு தருவாங்க… ஒரு நாலஞ்சு படத்துலே நடிச்சு வரபணத்துலே கடனை அடச்சிட்டு ரிடயராய் என் வேலையை ஒழுங்கா பார்த்துட்டு இருந்துடறாகத்தான் என் ப்ளான்..’

‘ஓ.. ஐ ஸீ… ஒண்ணு பண்ணுங்க.. நீங்க நாலஞ்சு படத்துலேஆக்ட் பண்ணினீங்கன்னா நான் இருக்கிற இடம் தெரியாம போயிடுவேன்.. அதனாலே அந்த ஐம்பது லட்சத்தை நான்இப்பவே உங்களுக்குக் கொடுத்துட்டேன்னா…”

ஒரு நிமிடம் யோசித்தேன்.. சுற்றி நின்ற கிங்கரர்களையும்பார்த்தேன்.. இவர்களை எதிர்த்துக்கிட்டு குப்பை கொட்டது ரொம்ப கஷ்டம்.. வரதை அள்ளிக்கிட்டு போறதுதான் புத்திசாலித்தனம்..

‘அப்புறம் என்ன..? கான்ட்ராக்ட்லே ஸைன் பண்ணறதா?எனக்குப் பைத்தியமா என்ன..?

‘ஓகே… ‘ என்றவன் உள்ளே போய் ஒரு ப்ரீஃப் கேஸிலேபணத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து என்னிடம் நீட்டினான்.

ஆசையோடு வாங்கினேன்.. வீட்டிற்கு வந்தேன்..

‘காயத்ரி… நமக்கு விடிவு காலம் வந்திடுத்து.. இந்தப் பணத்தை வெச்சு கடனையெல்லாம் அடச்சு நிம்மதியாய் இருக்கலாம்… ஓ… கமான்.. ‘ என்று இரைந்தேன்.

‘என்னாச்சு உங்களுக்கு..? தூக்கத்துலே ஏன் இப்படிக் கத்தறீங்க…?’ என்று காயத்ரி உலுக்கி எழுப்ப, எழுந்து மலங்கமலங்க விழித்தேன்.

கண்ட கனவை அப்படியே கூறினேன்.

‘அடப் பாவமே… வீடு கட்டிய கடனையெல்லாம் எப்படி அடைக்கப் போறோம்னு பேசிட்டிருந்தோமா.. அதை நெனச்சிட்டு அப்படியே படுத்திட்டீங்க போலிருக்கு.. உங்க மனசும் எண்ணங்களும். கற்பனைகளும், கொடி கட்டிப்பறக்க பெரிய நடிகனாயிட்டீங்க… ‘ என்று சொன்னவாறு சிரிக்க ஆரம்பித்தாள்.

‘நிழல் நிஜமாகக் கூடாதா..’ என்று பல்லைக் கடித்துக் கொண்டு அசட்டுச் சிரிப்போடு உட்கார்ந்திருந்தேன்.

 

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

Image result for தமிழ்வாணன்தமிழ்வாணன் – பன்முக வித்தகர்!

தமிழ் வளர்த்த சான்றோர் 59 வது நிகழ்வில், வ.வே.சு அவர்கள் உரையாடியது லேனா தமிழ்வாணனுடன் – பேசப் பட்ட சான்றோர் திரு தமிழ்வாணன் அவர்கள்! ‘துணிவே துணை’, ‘Master of all subjects’ போன்ற வரிகளுக்குச் சொந்தக்காரர், சுதந்திர இந்தியாவில், எளிய தமிழ் மக்களிடையே, பொது அறிவு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர். 52 வயதில், 500 புத்தகங்களை எழுதியவர். தனக்காகத் தனி பிரசுரம் ஆரம்பித்தவர். 

இன்றைய அறுபது வயது இளைஞர்கள் எல்லோரும் முகமலர்ச்சியுடன் சொல்வது “ நான் தமிழ்வாணனின் தீவிர வாசகன் / கி” . அறுபதுகளிலேயே ஆறு லட்சம் பிரதிகள் கண்டது கல்கண்டு! சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த துணுக்குச் செய்திகள், அரசியல், சினிமா, மருத்துவம் (இயற்கை வைத்தியம்), ஆன்மீகம், ஜோதிடம், உலகப் பார்வை, கட்டுரைகள், துப்பறியும் நாவல்கள், பாலியல் விழிப்புணர்வு என ஒரு பரந்துபட்ட வாசிப்பு அனுபவத்தையும், பொது அறிவையும், 32 பக்கங்களில்  தாங்கிவரும் ‘கல்கண்டு’, முற்றிலும் தமிழ்வாணன் என்ற தனிமனிதனின் சிந்தனையிலும், உழைப்பிலும் உருவான வார மலர்!

ஜிப்பா, வேட்டி, ஜோல்னாப்பை என்ற எழுத்தாளர்களின் பழமையான உடைகளை மாற்றி, தன் எழுத்துக்களைப் போலவே புதுமையாக, பேண்ட், சர்ட், கருப்புக் கண்ணாடி, ஆங்கிலேயரைப் போன்ற தொப்பி என அணிந்து வலம் வந்தவர். எங்கிருந்தும் போஸ்ட் கார்டில் வெறும் தொப்பியும், கருப்புக் கண்ணாடியும் வரைந்து அனுப்பினால், அந்தக் கார்டு சென்னை தியாகராய நகர் மணிமேகலைப் பிரசுரம் வந்தடைந்து விடும் என்பது, தமிழ்வாணனின் உடை நாகரீகத்தின் அங்கீகாரம்!

கலைக்காக வாழ்பவன் ‘கலைவாணன்’, இசைக்காக வாழ்பவன் ‘இசைவாணன்’, தமிழுக்காக வாழ்பவன் ‘தமிழ்வாணன்’ எனப் பொருள் சொல்லி, இராமநாதனாக இருந்தவருக்குத் ‘தமிழ்வாணன்’ எனப் பெயர் சூட்டியவர், தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள்! 

‘கற்கண்டு’ என்பதுதானே சரியான தமிழ் – ‘கல்கண்டு’ எனப் பிழையாகப் பெயர் சூட்டியிருக்கிறாறே என்று கேள்வி எழுப்பிய தமிழ் ஆர்வலர்களிடம், மு.வ. அவர்கள், ‘தமிழில் பிழை செய்ய மாட்டார் தமிழ்வாணன்; அவரையே கேட்டு வாருங்கள்’ என்று சொல்லி அனுப்புகிறார். தமிழ்வாணன் கொடுத்த விளக்கம் முற்றிலும் வித்தியாசனமானது! ‘கல்’ என்றால் ‘படி’, ‘கண்டு’ என்றால் ‘பார்த்து’ – கல்கண்டு என்றால் ’பார்த்துப் படி’ என்றுதான் சொன்னேனே தவிர, இது கற்கண்டு என நான் சொல்லவில்லையே என்றராம்!

‘எழுத்து என்பது பொழுதுபோக்கிற்கு அல்ல, வாழ்க்கைக்குப் பயன்பட’ என்பதில் உறுதியாய் இருந்தவர் தமிழ்வாணன். 46 ல் ‘அணில்’ அண்ணாவாகக் குழந்தைகளுக்கு எழுதியவர் (ஜில் ஜில் பதிப்பகம்)! கருத்துச் சிந்தனைகளையும், வாழ்வு முன்னேற்ற சிந்தனைகளையும் கொடுத்தவர், குழந்தைகள் வளர வளர அவர்களுக்கான எழுத்துக்களிலும் வயதிற்கேற்ற முன்னேற்றக் கருத்துக்களைக் கொடுத்து, அவர்கள் சிந்தனா சக்தியையும் வளர்த்தவர்! 

‘நூறு ஆண்டுகள் வாழ்வதெப்படி’ என்ற நூலை எழுதியவர், 51 ஆண்டுகளே வாழ்ந்தாலும், 100 ஆண்டுகள் வாழ்பவர்கள் செய்யும் சாதனைகளைப் படைத்தவர் தமிழ்வாணன். ஜோதிடம், நாடகம், திரைப்படம், மருந்து, பல்பொடி தயாரிப்பு என பல்துறைகளிலும் இறங்கி, உழைத்து உயர்ந்தவர். சக எழுத்தாளர்கள் சைக்கிளுக்குக்கூட வழியற்ற காலத்தில், காரில் பவனி வந்தவர் தமிழ்வாணன்!

அரசியலில் புகழின் உச்சத்தில், அசைக்கமுடியாத இடத்தில் இருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ம.பொ.சி போன்றவர்களுடன் நட்புடன் இருந்தாலும், கொள்கைகளில் தவறு கண்டபோது, துணிந்து அவர்களை எதிர்க்கவும் செய்தார். அவருடைய கேள்வி பதில்களைப் படித்தாலே புரியும் அவருக்குத் துணை, ‘துணிவு’ மட்டுமே என்று! உதாரணத்துக்கு ஒன்று: 

‘ஜனநாயக ஆட்சி என்பது என்ன?’

‘ஓர் ஊரில் மொத்தம் 100 பேர்கள். இந்த 100 பேர்களுள் 49 பேர்கள் அறிவாளிகள்; 51 பேர்கள் மூடர்கள், என்றாலும் அந்த 49 பேர்களையும் இந்த 51 பேர்கள்தாம் ஆள வேண்டும். இதுதான் ஜனநாயக ஆட்சி! அறிவு உள்ளவர்களைக்கூட, அறிவில்லாதவர்கள் ஆள ஜனநாயகத்தில் இடம் உண்டு!

முதன் முதலில் எம் ஜி ஆருக்கு ‘மக்கள் திலகம்’ என்ற பட்டம் கொடுத்தவர் தமிழ்வாணன் – பின்னர் தமிழக அரசியல், திரை உலகங்களில் ஏராளமான திலகங்கள்! 

நன்றி மறவாதவர் தமிழ்வாணன் – முதலில் ஒரு பிரசுரம் துவக்கத் தன் நகைகளைக் கொடுத்த தன் மனைவியின் பெயரிலேயே ‘மணிமேகலைப் பிரசுரம்’!   

தேன்மொழி, மணிமொழி, நல்ல நாயகம், பூவேந்தன், அமுதா,வெற்றிவேலன், நெடியோன், சொல்லழகன், மலர்விழி எனத் தமிழ்ப் பெயர்களையே தன் கதாபாத்திரங்களுக்குச் சூட்டிய தமிழ்வாணன், துப்பறியும் கதாநாயகனுக்கு  ‘சங்கர்லால்’ எனப் பெயரிட்டதேன்? என்ற கேள்விக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான செய்தி இருக்கிறது. ‘சர் ஆர்தர் கானண்டாயலின் படைப்பான ஷெர்லாக்ஹோம்ஸ் போல ஒரு துப்பறியும் கதாபாத்திரத்தை நீங்களும் ஏன் உருவாக்கக் கூடாது?’ என்ற யோசனையை, கேரள வாசகர் ஒருவர் கூற, ‘இது ஒரு மில்லியன் டாலர் யோசனை’ என மகிழ்ந்து, ‘சங்கர்லால்’ துப்பறிகிறார் எனத் தொடர்கள் எழுதினார் – யோசனை சொன்ன வாசகரின் பெயர் ‘சங்கர்லால்’! தமிழ்வாணனின் நன்றியுணர்வின் வெளிப்பாடு இது.

தேநீர் (தேன் போல் இனிக்கின்ற நீர், தேயிலையிலிருந்து வந்த நீர்), காரோட்டி, மயிரிழை என்பதற்கு பதில் நாகரீகமான நூலிழை, என தமிழ் வார்த்தைகளை பழக்கத்திற்குக் கொண்டுவந்தார்! மொழி வெறியைத் தூண்டுவதாகவோ, கெட்ட செய்திகளையோ எழுதுவதைத் தவிர்த்தவர். ‘ரிக்‌ஷா’ – மனித சக்தியால் ஓடும் வாகனம் (ஜப்பானிய மொழி), ‘தோசை’ – புளித்த தோய்ந்த மாவில் செய்தது – ‘தோயை’ என்பது ‘தோசை’ என மருவியது- இது போன்ற பல விளக்கங்கள் தமிழ்வாணன் அறிமுகம் செய்திருக்கிறார்.

ஒரு தேனியைப்போல், கன்னிமாரா நூலகம், நியூஸ் வீக், டைம்ஸ், டிட்பிட்ஸ், அமெரிகன் நூலகம் என பல இடங்களிலிருந்தும் செய்திகளைச் சேகரித்து, எளிமையாய் மொழிபெயர்த்து, எல்லோரும் ரசித்து, வாசித்துப் பயன்பெறும் படி,  தன் கல்கண்டில் வெளியிட்டவர் தமிழ்வாணன்!

முதன் முதலாகத் தன்னையே கதாநாயகனாக வைத்து எழுதியவர்! ‘ராகி’ ஓவியருடன் படக்கதைகளுக்கு உயிரூட்டியவர்!

தன்னுடைய மூன்று விரோதிகளாக அவர் குறிப்பிடுபவர்கள்: 1. என் நேரத்தை வீணாக்குபவன். 2.கைமாற்று கேட்பவன். 3.என்னை நேரில் புகழ்பவன்! தேவையில்லாமல் ‘சும்மா’ பார்க்க வருபவர்களைத் தவிர்க்க அவர் தரும் அறிவுரை -“கையில் ஒரு ரசீது புத்தகம் வைத்துக்கொண்டு, நன்கொடை கேளுங்கள்!”.

தமிழ்வாணனின் கேள்வி பதில்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல – துணிவானவை, தூரப் பார்வை கொண்டவை, சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பவை! உங்களை ஒரு பத்திரிகை தாக்கி எழுதுகிறதே, நீங்கள் ஏன் திருப்பித் தாக்குவதில்லை? என்ற கேள்விக்கு, ‘நாய் நம்மைக் கடிக்கலாம். ஆனால், நாம் நாயைத் திருப்பிக் கடிக்கலாமா? நான் கட்சி சார்பற்றவன். எது உண்மையோ அதை மட்டுமே நாட்டிற்குச் சொல்லுகிறேன்.’ என்று பதில் சொல்கிறார். கேள்வி: “திருக்குறளில் பிடித்த குறள்கள் எத்தனை?” அவர் பதில் “1330”.  மன அமைதி எப்போது கிடைக்கும் ? “ஒரு வேலையைச் சிறப்பாக செய்து முடிப்பதில் கிடைக்கும்!”

1948 முதல் 1977 வரை, 29 ஆண்டுகள், தன் எழுதுக்களையே தன் சொத்தாக எண்ணி, மறையும் வரை கல்கண்டு ஆசிரியராகத் துணிவையே துணையாகக் கொண்டு வாழ்ந்தவர் தமிழ்வாணன்.

அசோகமித்திரன் தன் இரங்கலில், “ அவரது மறைவில் தமிழ் பத்திரிகை உலகம் ஒரு ஒருநிமிடம் ஸ்தம்பித்துப் போனது. இன்னொரு எம்ஜிஆர் சாத்தியமாகாதது போல், இன்னொரு தமிழ்வாணனும் சாத்தியமில்லை “ என்று எழுதுகிறார்.  உண்மைதான்!

(தமிழ் வளர்த்த சான்றோர் நிகழ்வில் தமிழ்வாணன் பற்றி வ வே சு வும், லேனா தமிழ்வாணனும் உரையாடியதிலிருந்து)