எம் வி வெங்கட்ராம் நூற்றாண்டு விழா

வாழ்க நீ எம்மான் !

 

 

எம் வி வெங்கட்ராம்

(நன்றி: அடவி இதழின் எம் வி வெங்கட்ராம் சிறப்பிதழ் )

திரு கல்யாணராமன் அவர்கள் எம் வி வெங்கட்ராம் பற்றிப் பேசிய காணொளி:

 

 

 

திரு ரவி சுப்பிரமணியன் அவர்கள் எம் வி வெங்கட்ராம் பற்றி எழுதியது 

கலக்கத்திலும் கனிவை கைமாற்றிவிட்டுப் போன கலைஞன்-ரவிசுப்ரமணியன்

வலையேற்றியது: RAMPRASATH | நேரம்: 7:12 AM | வகை: எம்.வி. வெங்கட்ராம், கட்டுரை, ரவிசுப்ரமணியன் 

( நன்றி: அழியாச்சுடர்கள்)

வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படாத சோகம் போல, வேறு எதுவும் இருக்கமுடியாது நல்ல கலைஞர்களுக்கு. கலைக்காய் சமூகத்திற்காய் தன் வாழ்வின் பெரும்பகுதியை  கரைத்துக் கொள்கிற தேர்ந்த படைப்பாளிகளை உரிய காலத்தில் கௌரவிக்காது மௌனம் காத்து இறும்பூதெய்தும் பெருமை கொண்டது நம் செம்மொழிச் சமூகம். அதற்காக அவன் பதிலுக்கு மௌனம் காப்பதில்லை.

“கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்றும் அறிவுமிலார்…” என்பதை அவன் அறிந்தவனாகையால் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சதா இழைஇழையாய் தன் படைப்பின் நெசவை அவன் தொடர்ந்தபடி இருக்கிறான். ஆடைகளைப் பயன்படுத்தும் நாம் நெய்தவனைப்பற்றி யோசித்ததே இல்லை. ஆனாலும் மிகச் சிலரின் காதுகளுக்கு தறியின் இடதும் வலதுமாய் ஒடி ஒடி நூல் இழைக்கும் நெளியின் ஒலி கேட்கிறது. அப்படித்தான் எனக்கும் தேனுகாவுக்கும் அது கேட்டது. அந்த சப்தம் தந்த உறுத்தலால் தான் தொண்ணூற்றி ஓராம் ஆண்டின் இறுதியில் கரிச்சான்குஞ்சு மற்றும் எம்.வி.வி ஆகியோரது புத்தகங்களே இப்போது அச்சில் இல்லாமல் இருக்கிறது அவற்றை நாம் கொண்டு வர ஏற்பாடு செய்ய  வேண்டுமென்றும் அவர்களுக்காக கருத்தரங்கள் நடந்த வேண்டுமென்றும் சந்திக்கும் போதெல்லாம் பேசி பேசி திட்டமிட்டுக் கொண்டே இருந்தோம்.  அப்போது தொண்ணூற்றி இரண்டில் திடீரென கரிச்சான்குஞ்சு இறந்து விட்டார். பதற்றமாக இருந்தது. ஏதோ செய்ய தவறிவிட்டோம் என்பது போலவான ஒரு மனச்சங்கடம். உடனே கரிச்சான்குஞ்சுவின் வெளிவராத “காலத்தின் குரல்” என்ற புத்தகத்தை நண்பர் “புதிய நம்பிக்கை” பொன் விஜயன் மூலமாக வெளிக்கொண்டு வந்தோம். அப்போது அதில் பொதியவெற்பனும் கடைசியில் சேர்ந்துகொண்டார். கருத்தரங்கம் நடத்த முடியாத நாங்கள் கரிச்சான்குஞ்சுக்கான இரங்கல் கூட்டத்தை நடத்தினோம். அப்போது அவர் படத்தை திறந்து வைத்து அப்புத்தகத்தையும் வெளியிட்டார் எம்.வி.வி.
கும்பகோணம் காந்திபூங்கா எதிரில் உள்ள ஜனரஞ்சனி ஹாலின் கீழ்புற சிறிய அரங்கில் அந்த கூட்டம் நடைபெற்றது. அந்த நாளின் மதியத்தில் எம்.வி.வியின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கையும் நடத்தினோம். அசோகமித்திரன், கோவை ஞானி, கோமல்சாமிநாதன் ம.ராஜேந்திரன், மாலன், ப்ரகாஷ், மார்க்ஸ் போன்ற எழுத்தாளர்கள் அதில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எம்.வி.வி. அந்த கூட்டத்தில் பேசிய இறுதி உரையின் கடைசி வரிகள் ரொம்பவும் நெகிழ்வானது, “நான் கல்லாப்பெட்டியை மூடிவிட்டேன். விளக்கையும் அணைத்தாயிற்று. என் கடையை கட்டி பூட்டி விட்டேன். சூடமும் கொளுத்தியாகிவிட்டது. அதுவும் கொஞ்ச நேரத்தில் அணையும். இப்போது நான் என் குருநாதனின் (அதாவது முருகனின்) சொல்லுக்குக் காத்திருக்கிறேன்”. அதாவது இரண்டாயிரம் ஆண்டு நிகழப்போகிற தன் மரணத்திற்கு கிட்டத்தட்ட அவர் தொண்ணூற்றி இரண்டிலேயே தயாரான ஒரு மனநிலையில் இருந்தார். அவரது இந்த வார்த்தைகள் இவரது புத்தகங்களையும் தாமதமில்லாது உடனே கொண்டு வந்து விட வேண்டுமென எங்களைத் தூண்டியது.
பொதிய வெற்பனிடம் அப்போது அது பற்றி பேச அவர் எம்.வி.வியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை ”இனி புதிதாய்” – என்ற தலைப்பில் ஒரு புத்தமாக கொண்டு வந்தார்.

வெளியிடப்படாத அவரின் காதுகள் நாவலின் கையெழுத்து பிரதி சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகத்தில்  ஏழாண்டுகள் ஆக இருந்து கடைசியில் காணாமலே போய்விட்டது. எங்களுக்கும் எம்.வி.வி.க்கும் மிகச்சிறந்த நண்பராக இருந்த ஆசிரியர் கலியமூர்த்தியின் சலியாத தேடுதலால், அது மறுபடி கைக்கு கிடைத்தது. அதனை நான்

 

அன்னம் பதிப்பகம் மீராவிடம் கொண்டு போய்ச் சேர்த்தேன். அவரும் ஒரு ஆறுமாதகாலத்துக்குப் பின் அதைப் படித்துப் பார்த்து அதன் தரமும் மேன்மையும் உணர்ந்து அதனை வெளியிட்டார். அந்நாவலுக்கான பொருத்தமான ஜாக்ஸன் போலக்கின் ஒவியத்தை அட்டைப்படமாக வடிவமைத்து தந்தார் தேனுகா. எங்களுக்கு இதல்லாம் சந்தோஷமான காரியங்களாக இருந்தது.

சவுத் ஏஷியன் பதிப்பகம் வழியாக “என் இலக்கிய நண்பர்கள்” – என்ற எம்.வி.வியின் கட்டுரை தொகுதியை கொண்டுவந்தோம். அதன் முன்னுரையில் கூட எங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார் எம்.வி.வி. இன்றும் காலச்சுவடு வழியாக சரிச்சான்குஞ்சு எம்.வி.வி. புத்தகங்களை கொண்டு வர நானும் தேனுகாவும் முன் முயற்சி எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்து கொண்டுமிருக்கிறோம்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர்களில் ஒருவர் எம்.வி.வி என்பதற்கு அவரது ”பைத்தியக்காரப் பிள்ளையே” – சான்று என்று அசோக மித்திரானால் குறிப்பிடப்பட்ட எம்.வி.வி. வெளியில் வர இயலாத அவரது இறுதிகாலங்களில் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் சந்திக்க ஏங்கியவாறே இருந்தார். அதை உணர்ந்த நாங்கள் எந்த எழுத்தாளர் கும்பகோணத்துக்கு வந்தாலும் அவர்களை அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதை வழக்கமாய் கொண்டிருந்தோம். அப்படித்தான் ஞானக்கூத்தன், எஸ்.வைதீஸ்வரன், பிரபஞ்சன், அசோகமித்ரன், இந்திரா பார்த்தசாரதி, கோபிகிருஷ்ணன், வண்ணநிலவன், மீரா, திலகவதி, கோமல் சாமிநாதன் போன்ற பலரையும் நான் அவர் வீட்டுக்கு அழைத்து சென்றவாறு இருந்தேன். நானும் தேனுகாவும் சராசரியாய் வாரம் ஒரு முறை அவரை பார்ப்பவர்களாக இருந்தோம். அவரோடு பயணம் செய்யும் வாய்ப்புகளும் எங்களுக்கு அமைந்தது.

அவர் வீட்டை விட்டு வெளியே சைக்கிளில் சுற்றிய காலம் என்ற ஒன்று இருந்தது. அதற்குபின் எண்பதுகளின் துவக்கத்தில் கும்பகோணம் காந்தி பார்க்கின் திறந்த வெளியிலும் ஜனரஞ்சனி ஹாலின் சா துஷேஷய்யா நூலகத்திலும் நாங்கள் சிறுசிறு கூட்டங்களை நடத்தி அதில் எம்.வி.வியையும் கரிச்சான்குஞ்சுயையும் பேசவைப்போம். தங்கள் எழுத்துலக அனுபவங்களை அவர்கள் எங்களுக்கு கதை கதையாக சொல்வார்கள். இருவருமே வயசு வித்யாசமின்றி எல்லோரிடமும் இணக்கமாக பழகக்கூடியவர்கள். சில சமயம் அசட்டுத்தனமாக நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் நிதானமாக பதில் சொல்வார்கள். சமயத்தில் ” வக்காள ஒழிகளா..” என்பது போன்ற வார்த்தைகள் கரிச்சான்குஞ்சு வாயிலிருந்து சகஜமாக வரும். எம்.வி.வியிடமிருந்து அப்படி கேட்க முடியாது. கரிச்சான்குஞ்சுவிடமிருந்து பரவசமும் குழந்தைத்தனமும், குதூகலமும், சிரிப்பும் பார்ப்பவர்களை உடனே தொற்றிக் கொள்ளும். எம்.வி.வி. எப்போதும் நிதானமாக இருப்பார். எல்லாவற்றையும் கடந்த ஒரு ஞானியின் புன்னகையோடு சலனமின்றி இருப்பார் பல சமயம். கரிச்சான்குஞ்சு வாய்விட்டு எதிராளியின் மேலேகூட சமயத்தில் தட்டி  சிரிப்பார். எம்.வி.வியின் சிரிப்பு அடக்கமாக கட்டுக்குள் இருக்கும்.

வறுமையும் லௌகீக சிரமங்களும் மனஅழுத்தமும் இருக்கும் போதும் கூட எம்.வி.வி. ஒரு மெல்லிய புன்னகையோட இருந்திருக்கிறார். எந்த கஷ்டத்திலும் நண்பர்களிடம் அவர் கடன் வாங்கியதில்லை. நம் கஷ்டங்களுக்கு நாமே பொறுப்பு. அத வெளில சொல்லவும் கூடாது. அதுக்கு இன்னொருத்தரை குற்றவாளி ஆக்கவும் கூடாது. நாமதான் தாங்கணும், பல்கடிச்சு தாங்கணும் என்பார். அவர் அவரது இந்த வார்த்தைகளுக்கு தக்கவே அவர் வாழ்ந்தார்.

வீட்டிலிருந்தபடியே தினமும் கொஞ்சம் கைகால் நீட்டி உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, தியானம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். பூஜை அறையில் தினமும் சாமி கும்பிடும் வழக்கமும் இருந்தது. அதுபோலவே தினமும் முகச்சவரம் செய்து கொள்வதில் கவனமாக இருப்பார். புதிய புதிய சட்டைகளை அணிந்து கொள்வார். பவுடர் பூசிக்கொள்வார். முகம் எப்போதும் தேஜஸ்ஸாக இருக்கும். கணக்காக வாரிய தலைமுடி. திருநீறும் குங்குமமும் துலங்கும் நெற்றி. வெற்றிலை காவி ஏறிய பற்கள். பன்னீர் புகையிலை வாசம். தாம்பூலம் தளும்பும் இதழ்களின் கனிந்த சிரிப்பு. பார்த்தடவுடன் ஒரு மரியாதை தோன்றும் விதமாகவே அவர் எப்போதும் இருப்பார். பனியனோடு வீட்டில் அமர்ந்து இருக்கும் போதுகூட. ஒரு தத்துவ ஞானியின் பிரசன்னம்போல இருக்கும் அவரது இருப்பு.
“ திருக்கண்டேன் பொன்மேனிக்கண்டேன், திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று…..”
அவர் தோற்றம் இந்த பேயாழ்வாரின் இந்த பாசுரத்தை எனக்கு நினைவூட்டும் சில சமயம். அதீத வறுமையிலும் செம்மாந்து புன்னகைத்த எம்.வி.வி. அந்த எழுத்தின் மூலமே அதை அடைந்தார் என்பதுதான் துயரம்.

பெரும் பட்டுஜரிகை வியாபாரியான அவர் வியாபாரத்தையும் மறந்து எழுதத்துவங்குகிறார். தேனி என்ற  இலக்கிய பத்திரிக்கையை துவங்கி முதலீடு போட்டு, தானே ஆசிரியராக இருந்து நடத்துகிறார். உதவி ஆசிரியர் அவரது அத்யந்த நண்பன் கரிச்சான்குஞ்சு. பேப்பர்காரனுக்கு பிரஸ்காரனுக்கு பைண்டிங் பண்றவனுக்கு நாம் கடன் சொல்ல முடியுமா? பணம் இல்லன்னு சொல்ல முடியுமா? எழுத்தாளன் மட்டுமென்ன விதிவிலக்கு என்று, நாற்பதுகளில்  தேனியில் எழுதியவர்களுக்கு இருநூறு ரூபாய் சன்மானம் தந்துள்ளார். இவ்வளவு பணம் வருகிறதே என்று இரண்டு பெயரில் அதில் எழுதிய எழுத்தாளர்களும் உண்டு என்பது இதில் இன்னொரு சுவாரஸ்யம். அந்தகாலத்தில் கிட்டத்தட்ட அந்த ஒரு வருஷத்தில் முப்பதாயிரம் ரூபாய் இந்த பத்திரிக்கையால் நஷ்ட்டம் அடைந்துள்ளார் எம்.வி.வி. இந்த காலமதிப்பில் அது எத்தனைலட்சம் என கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

அந்த பத்திரிக்கை நடத்தியதன் மூலம் அவர் பெற்ற அனுபவங்கள் ஒரு தனி நாவலுக்குரியது என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார். மௌனியின் கதை ஒருமுறை பிரசுரத்திற்கு வந்ததாகவும் அதில் ஏகப்பட்ட கிராமர் மிஸ்டேக். கமா, புல்ஸ்டாப் ஏதுமில்லை கிளாரிட்டி இல்லை. ஆனால், எல்லாவற்றையும் மீறி, நெளிநெளிகோடுகளால் ஆன, நுட்பமான வேலைப்பாடு கூடிய, மனச்சித்திரங்கள் அவை என்று சிலாகித்துச் சொல்வார். அந்த தேனி பத்திரிக்கைகாக பேப்பர்கூட வாங்கத்தெரியாமல் பேல் கணக்கில் ஆர்டர் கொடுக்க அது வீட்டில் வந்து இறங்கியுள்ளது. ஒரு நாள் அந்த பத்திரிக்கைக்காக பேப்பர் நறுக்க பேலை உருட்ட, அது வாசல் வரை ஓடி பரந்து விரிந்து கிடந்திருக்கிறது. அந்த நேரத்தில் இவரிடம் ஜரிகை வாங்க வந்த குஜராத் சேட், அந்த பேப்பரின் மேல் நடந்து இவரை வந்து அடைகிறார். இந்த பித்து உள்ள உன்னால் இனி வியாபாரம் சரியாக செய்ய முடியாது என்று, அன்றே அவருடனான எல்லா வியாபார உறவுகளையும் முறித்துக்கொள்கிறார். பின், மெல்ல ஷீணமடைந்து முடிவுக்கு வருகிறது அவரது வியாபாரம். அதன் பின்னான வறுமையும் மன அவசங்களும் அவரை வாழ்நாள் முழுக்க தொடர்ந்து வந்திருக்கிறது. இருபத்திஏழு வருஷங்கள் அவரது காதுகளில் நாரசமான விநோதமான ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. அதனோடுதான் நான் வாழ்ந்தேன் கடைசியில் என் குருநாதன் முருகன் திருவருளால்தான் அந்த துயரங்களிலிருந்து மீண்டேன் என்று சொன்னார். காதுக்குள் யாரோ அமர்ந்திருப்பது போலவும் திட்டுவது போலவும் சிரிப்பது போலவும் அழைப்பது போலவுமான, அமானுஷ்ய குரல்கள் அவரை ஆட்டிப்படைத்திருக்கிறது. அந்த அனுபவத்தின் வழியே அவர் கண்டடைந்த நாவல்தான் சாகித்ய அகாடமி விருது பெற்ற காதுகள் நாவல்.

அந்த நாவலை பல எழுத்தாளர்களால்கூட சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. மருத்துவர்கள் இது ஒரு ஹாடிட்ரி ஹல்யூசினேஷன் சார்ந்த நாவல் என்று வகைப்படுத்தி அதுபற்றிய விஷயங்களைச் சொன்ன பிறகே அந்த நாவல் குறித்து பலருக்கும் புரிந்தது.
சிறுகதை நாவல் குறுநாவல் கட்டுரை மொழி பெயர்ப்பு குழந்தை இலக்கியம். நாடகம் என இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதிக்குவித்த எம்.வி.வி. தனது வாழ்நாளில் சராசரியாக அவரே சொன்னபடி ஒரு நாளைக்கு முப்பது பக்கங்கள் எழுதியுள்ளார். இவ்வளவு எழுதிய எம்.வி.விக்கு அவரது கடைசி பத்து ஆண்டுகளில் ரைட்டர்ஸ்கிராம்ப் வந்து கையெழுத்துகூட போட இயலாமல் ஆனது.

என்ன ரவி எம்.வி.வி. கையெழுத்து இப்படி இருக்கு என்று கேட்ட மீராவுக்கு நான் எழுதிய பதில் கடிதத்தில் இப்படி எழுதியிருந்தேன்.
எழுதி எழுதிச் சோர்ந்த விரல்கள்
இப்போது கையெழுத்திடவும் நடுங்குகிறது
இ.சி.ஜி. கிராப் போல. என்று

பட்டாடை நெய்யும் சௌராஷ்ட்டிரர்கள் சமூகத்தில் பிறந்த அவரது வாழ்வில் பட்டின் மினுமினுப்பு ஒரு போதும் இருந்ததில்லை. அவரது பால்ய காலத்தின் சில வருஷங்கள் தவிர. அந்த பால்யகாலத்திலும் அவருக்கு இன்னொரு அவஸ்தை நிகழ்ந்தது. தனது சொந்த அப்பா அம்மாவால் அவரது தாய்மாமனுக்கு சிறுவயதிலேயே தத்து கொடுக்கப்பட்டவர் எம்.வி.வி. மாமாவை அப்பா என்றும் அத்தையை அம்மா என்றும் அழைக்க நிர்பந்திக்கப்படுகிறார். அவரது அத்தை இவ்வளவு செலவு பண்ணி உன்னை தத்துஎடுத்தேனே அம்மா என்று கூப்பிட மாட்டேன் என்கிறாயே அம்மா என்று கூப்பிடு என்று சொல்லி தண்டிக்கிறார். வாய் அம்மா என்றாலும் மனம் ஒட்டாமல் தத்தளிக்கிறார் வெங்கட்ராம். அவரது மன அழுத்தத்தில் துவக்கப்புள்ளி இது என்று சொல்லலாம்.

இவ்வளவுக்கு மத்தியில் சுவாரஸ்யமான பல அடுக்குகளை கொண்டது அவரது வாழ்க்கை. அப்பா அம்மா வீட்டில் வறுமை. தத்துப்போன வீட்டில் கோடிஸ்வர வாழ்க்கை. பதிமூன்று வயதில் எழுத்ததுவங்கியது. பதினாறு வயதில் மணிக்கொடியில் சிட்டுக்குருவி என்ற கதை பிரசுரம். பி.ஏ. பொருளாதாரம் படிக்கும்போதே தி.ஜானகிராமன் இவரை குருபோல வியந்து பார்த்து நட்பாக்கி கொள்வது. இந்தி விஷாரத் படிப்பில் தேர்ச்சி. ஆங்கில இலக்கிய புலமை. இளம் வயது திருமணம். பட்டு ஜவுளி ஜரிகை வியாபாரம். நாற்பத்தெட்டில் தேனி பத்திரிக்கை துவங்கியது. பத்திரிக்கையில் நஷ்டம், அதனால் வியாபாரத்தில் நஷ்டம். அடியாட்களை வைத்துக்கொண்டு ரவுடியாக சிலகாலம். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கவுன்சிலர் பதவிக்கு நின்று தோற்றது ஒரு நேரம். பல பெண்களாலும் காதலிக்கப்பட்ட வசீகரனாக இருந்தது ஒரு காலம். இந்த அனுபவங்களும் கூட இல்லாவிட்டால் எழுத்தை தவிர என்னதான் மிஞ்சியிருக்கும் என் வாழ்வில் என்பார் எம்.வி.வி.
கரிச்சான்குஞ்சு கவனிக்கப்படாதது போலவான ஒரு விஷயம் எம்.வி.விக்கு முழுவதுமாக நேர்ந்து விடவில்லை. ”என்னய்யா இந்த ஊரை இப்படிக்கொண்டாடுதேய்யா அவரை” – என்று லா.ச.ரா. குறிப்பிடும்படி ஆனது அந்திமக்காலங்களில் அவர் மீது குவிந்த கவனம்.
அவர் சௌராஷ்ட்டிர மொழியில் எழுதி இன்னும் வெளிவராத புத்தகம் மீ காய் கரு. தமிழில் அதன் அர்த்தம் நான் என்ன செய்யட்டும்.

கடைசியாக வந்த அவரது புத்தகம் எம்.வி.வியின் கணிசமான கதைகள் அடங்கிய சிறுகதை தொகுப்பு. அதை மிகுந்த பிரியத்தோடும் பொருளாதார சிரமத்தோடும் பாவைச்சந்திரன் வெளியிட்டார். அதில் பிழைகள் திருத்தும்வரை பார்வை சரியாக இருந்தது எம்.வி.விக்கு. அந்த புத்தகம் முழுமைப்பெற்று வரும் போது அதைப்பற்றி அவரது காதில் சத்தமாக கத்தி சொல்ல வேண்டியிருந்தது. அட்டைப்படத்தில் சிரித்தபடி இருக்கும் அவரது புகைப்படத்தை தன் கைகளால் மட்டுமே தடவிப்பார்த்துக் கொள்ள முடிந்தது அவருக்கு.
கேட்காத காதுகளோடும் பார்க்க முடியாத குளுக்கோமா விழிகளோடும் பிறழ்வான மனக்கொதிப்பில் மேலெழும்பும் குமிழிகளோடும் அவஸ்தை மிகுந்ததாக இருந்தது அவரது கடைசி வருட வாழ்க்கை. இயன்ற வரையில் நினைவுதப்பாமல் இருந்த வரையில் எல்லா கஷ்டங்களையும் மீறி கைமாறு கருதாமல் அவர் சதா நமக்காக ஏதோ நெய்து கொண்டே இருந்தார். தன் நடுங்கும் விரல்களால்.

எம்.வி.வெங்கட்ராம் (மே 18, 1920 – ஜனவரி 14, 2000) தமிழ் சிறுகதை இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கிய தமிழக எழுத்தாளர். 16வது வயதில் முதன் முதலில் இவர் எழுதிய “சிட்டுக்குருவி” என்ற சிறுகதை மணிக்கொடியில் வெளியானது. 1993 ஆம் ஆண்டில் இவர் எழுதிய “காதுகள்” என்ற புதினத்திற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. “விக்ரஹவிநாசன்’ என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார்.

பொருளடக்கம்
1 வாழ்க்கைக் குறிப்பு
2 எழுதிய நூல்கள்
2.1 புதினங்கள்
2.2 சிறுகதைத் தொகுதிகள்
2.3 குறுநாவல்கள்
2.4 கட்டுரைத் தொகுப்புகள்
3 விருதுகள்
4 வெளி இணைப்புகள்

வாழ்க்கைக் குறிப்பு

1920 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் சௌராஷ்டிரக் குடும்பத்தில் வீரய்யர்-சீதை அம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் வெங்கட்ராம். ஐந்தாம் வயதில் தாய்மாமன் வெங்கடாசலம்-சரஸ்வதி குடும்பத்தினர் இவரைத் தத்து எடுத்துக் கொண்டனர். பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் எடுத்தவர். தொடக்கத்தில் பட்டுச் சரிகை வணிகம் செய்து கொண்டு மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதினார். 1941-1946 காலப்பகுதியில், கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் அடிக்கடி எழுதி வந்தார். 1965-1970 காலகட்டத்தில் தனது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். 1948 இல் “தேனீ” என்ற இலக்கிய இதழைச் சில காலம் நடத்தினார். ‘தேனீ ‘ இதழில் மௌனி போன்ற எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் பதிப்பித்திருக்கிறார். அவரது வீடு இலக்கியவாதிகளின் சந்திப்புவெளியாக எப்போதும் இருந்து வந்தது. இவரது சிறுகதைகள் முழுத்தொகுப்பாக எம்.வி.வெங்கட்ராம் கதைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கின்றன.

பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்துக்காக அறுபது சிறுநூல்களை எழுதினார். நாட்டுக்கு உழைத்த நல்லவர் என்ற வரிசையில் தேசபதர்களைப்பற்றிய பள்ளிமாணவர்களுக்கான் நூல்கள் இவை. மொத்தக்கூலிக்காக இவற்றை எம்.வி.வெங்கட்ராம் எழுதினார். இப்போது நாற்பதுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வந்துள்ளன

மனைவி ருக்மணி அம்மாள், 4 மகன்கள், 3 மகள்களுடன் பெரிய குடும்பம் இவரது. 1952-53-களில் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.2000-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி அவர் மறைந்தார்

எழுதிய நூல்கள்

புதினங்கள்

நித்தியகன்னி
இருட்டு
உயிரின் யாத்திரை
அரும்பு
ஒரு பெண் போராடுகிறாள்
வேள்வித் தீ
காதுகள்
சிறுகதைத் தொகுதிகள்
குயிலி (1964)
மாளிகை வாசம் (1964)
வரவும் செலவும் (1964)
மோகினி (1965)
உறங்காத கண்கள்(1968)
அகலிகை முதலிய அழகிகள் (1969)
இனி புதிதாய் (1992)
எம்.வி. வெங்கட்ராம் சிறுகதைகள் (1992)
முத்துக்கள் பத்து (2007)
பனிமுடி மீது கண்ணகி

குறுநாவல்கள்

நானும் உன்னோடு மற்றும் 6 குறுநாவல்கள்

கட்டுரைத் தொகுப்புகள்

என் இலக்கிய நண்பர்கள்
நாட்டுக்கு உழைத்த நல்லவர் (40-க்கும் மேற்பட்ட நூல்கள்)

ஆனந்த விகடனில் 1970களில் “நஞ்சு” என்ற தொடர் நாவலை எழுதினார். “பாலம்” என்ற இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தபோது அதில் அதில் “காதுகள்’ நாவலை எழுதினார். 1993-ஆம் ஆண்டு “காதுகள்’ புதினத்துக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. “வேள்வித்தீ” என்ற புதினம் சௌராட்டிர நெசவாளர்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்தது.

விருதுகள்
சாகித்திய அகாதமி விருது (காதுகள், 1993)
தமிழக அரசு விருது (எம்.வி. வெங்கட்ராம் கதைகள்)
சித்த சூரி ரத்ன விருது
லில்லி தேவசிகாமணி விருது
சாந்தோம் விருது
புதுமைப்பித்தன் சாதனை விருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.