மழலையெனும் பருவத்தில் மார்பூட்டும் தாய்க்காகக்
குதலைமொழி பேசுகின்ற குழந்தையது காத்திருக்கும்!
விடலையாம் பருவத்தில் விளையாடுந் துணைக்காக
வீதியிலே நட்புக்கு விழிதேடிக் காத்திருக்கும்!
இளமையெனும் பருவத்தில் இனிதான இணைக்காக
இமையிரண்டும் மூடாமல் இதயந்தான் காத்திருக்கும்!
திருமணத்துப் பருவத்தில் தேடிவந்த உறவொன்று
ஒருமனதாய் ஒன்றிவிட உள்ளந்தான் காத்திருக்கும்!
காத்திருக்கும் நேரமெலாம் கண்ணிரண்டும் பூத்திருக்கும்
பூத்திருக்கும் நீள்விழியில் நீர்முத்துக் கோர்த்திருக்கும்!
காதினிலே நெஞ்சத்தின் துடிப்போசை கேட்டிருக்கும்
ஓசையிலே உயிர்பாடும் ஆசையெனும் பாட்டிருக்கும்!
கால்களிலே அசைவின்றிக் கட்டையென மரத்திருக்கும்
காலமது ஓடுவதைக் கவனமது மறந்திருக்கும்!
காலமெலாம் அன்புக்குக் காத்திருக்கும் மானிடரைக்
காலனவன் காத்திருந்து கவர்ந்திழுக்கும் மாயமென்ன..?