“உறவின் ரணங்கள்!” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

தமிழ்ச் சிறுகதை இன்று: புனைவெழுத்தின் புதிய சாத்தியங்கள் - சுனில் கிருஷ்ணனின் சிறுகதைகள் - தமிழினி

சில சமயங்களில் மட்டுமே டாக்டர் இவ்வாறு செய்வதுண்டு. நோயாளியைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே என்னை அழைத்துக் குறிப்பிட்ட நபரைப் பார்க்கச் சொல்வதுண்டு. அன்றும் அங்கு உட்கார்ந்திருந்த இளம் பெண்ணை காண்பித்து, “இவ மித்ரா, உன்னைப் பார்க்கச் சொல்லி இருக்கிறேன். நீ ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கர் என்றதையும் தான். இரண்டு வருஷமா. ஆன்ட்டி கன்வல்ஸன்டஸ் (Anticonvulsants) எடுத்துண்டு இருக்கா.” மித்ரா பக்கத்தில் இருப்பவரைக் காண்பித்து “மித்ராவின் அம்மா, வசந்தா” என்றார். அம்மா அலங்காரத்துடன் பளிச்சென்று இருந்தாள். மித்ரா மிகச் சாதாரணமாக! நாளைக் குறித்துக் கொடுத்தேன்.

குறித்த நேரத்திற்கு மித்ராவுடன் அலங்காரமாக வசந்தாவும் வந்தாள். முதல் முறை என்பதாலும் மித்ராவின் இன்னல்கள் என்னவென்று தெரியாததாலும், குடும்பத்தினரையும் பார்க்க வேண்டும் என்பதாலும் அனுமதித்தேன்.

வசந்தா துவங்கினாள். முப்பத்து நான்கு வயது இல்லத்தரசி, டப்பர்வேர் பொருட்கள் விற்பனை. மித்ராவை நன்றாகப் பார்த்துக் கொள்வதாகவும், சில மாதங்களாக ஆன்ட்டி கண்வல்ஸண்ட்ஸை மித்ரா நேரத்திற்கு எடுத்துக் கொள்வதில்லை என்றும் கூறினாள். அதனால் போன மாதம் மறுபடியும் ஒரு முறை வலிப்பு வந்தது, அப்படி வரும்போது மித்ரா ஒரே இடத்தைப் பார்த்தபடி இருப்பாள் என்றாள்.

மித்ராவை அருவருப்பாகப் பார்த்து, டாக்டர் வலிப்பைப் பற்றித் தெளிவுபடுத்தியதை, தனக்குப் புரிந்ததை விவரித்தாள். மூளை நரம்புகளின் இடையே தகவல் பரிமாற்றம் செய்வதற்கு இயல்பாகவே உடலில் மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகும். அபரிமிதமாக உற்பத்தியானால் மின் புயல் போலாகி, உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, வலிப்பாகச் சில நிமிடங்களுக்குத் தோன்றும். மித்ரா கல்லூரியில் சேரும் போது ‌இது ஆரம்பித்தது என்றாள். தானும், மித்ராவின் அப்பா ரகுவும், டாக்டர் சொன்னபடிச் செய்வதாகவும் சொன்னாள். மித்ராவை எந்த வேலையையும் செய்ய விடுவதில்லை என்றாள். இருவரின்  உடல்மொழி உறவில் பாசம் இல்லாததைக் காட்டியது.

ஒரு நிமிட இடைவேளை கொடுத்து, வசந்தாவிடம் மித்ராவைத் தனியாகப் பார்க்க வேண்டும் என எடுத்துச் சொல்லி வெளியே உட்காரப் பரிந்துரைத்தேன்.

அம்மா வெளியேறியதும்,  கண்கள் தளும்பி இருந்த மித்ராவிடம் அவள் பகிர்வதைத் தேவையின்றி யாரிடமும் சொல்ல மாட்டேன் என்ற எங்கள் தொழில் தர்மத்தை விளக்கினேன். இன்னல்களின் விவரிப்பைக் கேட்கும் போது, மூன்றாம் மனிதரிடம் பகிரப் பலருக்கு சங்கோஜமாக இருக்கும். மித்ராவைத் தன் இன்னல்களை முழுமையாகப் பகிரப் பரிந்துரைத்தேன்.

சில நிமிடங்களுக்குப் பின், டாக்டர் வலிப்பு குணமாகும் வரை கூறிய எச்சரிக்கைகள்: நீச்சல், வண்டி ஓட்டுவது, நெருப்பு அருகே போகக்கூடாது என்பதையெல்லாம் கடைப்பிடிக்கிறேன் என்றாள். ஆரம்பத்திலிருந்து ஆன்ட்டி கண்வல்ஸண்ட்ஸ் சாப்பிடுவது தன் பொறுப்பாகத் தான் இருந்தது. ஆறு மாதமாக, அம்மா அதைத் தன் பொறுப்பாக்கினாளாம்.

மாத்திரை விவரங்களை விரிவாக விளக்கச் சொன்னேன். மாத்திரையைத் தவறாமல் எடுப்பது மிக அவசியம் என  மித்ரா அறிந்திருந்தாள். வசந்தா பொறுப்பேற்ற பின் மாத்திரைகள் தவறான நேரத்தில் கொடுக்கப்பட்டது. தாமதமாகிறதே என அம்மாவிடம் சொன்னால் கோபிப்பாளாம்.  டாக்டரிடமோ மித்ரா மாத்திரை எடுத்துக்கொள்ள மறுப்பதாகச் சொல்லிவிடுவாளாம். டாக்டர் மித்ராவிடம் அப்படிச் செய்யாதே எனச் சொல்வாராம்.

வசந்தாவைப் பார்ப்பது முக்கியமென அவளுடன் ஸெஷன்களைத் தொடங்கினேன். தனக்குக் கல்லூரிப் படிப்பு வராததால் இரண்டாவது ஆண்டிலேயே நிறுத்திக் கொண்டாள். திருமணமாகிவிடும் என எதிர்பார்த்தாள். ஆகவில்லை. வரன்கள் அமையாததால் உறவினர்கள் பேச்சு அதிகரித்தது. முப்பது வயதானது. குழந்தை மித்ராவுடன் இருந்த ரகு இரண்டாம் தாரமாக ஏற்றுக் கொண்டான். தனக்கு வரப் போகிறவன் இப்படி- அப்படி இருக்க வேண்டும் என நினைத்திருந்தபடி ரகு இல்லை. வழுக்கை, கரு நிறம், வசந்தாவின் காதுவரை உயரமுள்ள, அமைதியானவன். வசந்தா ஒப்புக்கொண்டதோ ரகுவின் வசதி, சொத்து, சம்பளம், சேமிப்பு தகவல்களை அறிந்ததும். மனதில் ஏக்கம் இருந்து கொண்டிருந்தது. மித்ராவுடன் பற்று வளராததால் அவளை பாரமாகக் கருதினாள்.

இதை அறிந்திருந்த ரகு மித்ராவை பார்த்துக் கொண்டான். கடந்த எட்டு மாதங்களாக வேலை பொறுப்புகள் அதிகரித்தது. வசந்தாவை டாக்டரிடம் மித்ராவை அழைத்துச் செல்ல விண்ணப்பித்தான்.

டாக்டரிடம் போகும் போதெல்லாம் அம்மா புதுப் புடவை, கூடுதலான அலங்காரத்துடன் வருவதும் தேவையில்லாத சந்தேகங்கள் கேட்பதும் தர்மசங்கடமாக இருந்தது என்றாள் மித்ரா. அப்பாவிடம் சொல்லலாம் என்றால் அவர்கள் உறவு அதுபோல் இல்லை. வீட்டிற்கு வந்ததும் மித்ராவை அறையிலிருந்து “படி”, “படி, டி.வி. பார்க்கக் கூடாது” என்பாளாம் வசந்தா.

மித்ராவுடன் ஸெஷனைத் தொடங்கினேன். மித்ராவிடம் கவிதை கட்டுரை எழுதும், வண்ணங்கள் தீட்டும் திறன்கள் இருந்தன. தன் எண்ணங்களை எழுதிச் சித்தரித்து, வண்ணங்கள் தீட்டுவதைச் செய்ய வேண்டும் என முடிவானது. விளைவு, கல்லூரி ஆண்டு இதழிற்கு எழுதியது பிரசுரமானது! மகிழ்ச்சியில் பொங்கினாள்.

வசந்தாவுடனும் ஸெஷனைத் தொடர்ந்தேன். தன்னைப் பற்றி விவரிக்க மறுபடி மறுபடி டாக்டரைச் சந்திக்க மனம் ஏங்கியது, அவரிடம் ஈர்ப்பு உருவானதை விவரித்தாள். மித்ரா நன்றானால் டாக்டரைப் பார்க்கக் காரணம் இல்லாமல் போய்விடுமோ எனத் தவித்தாள். ரகுவையோ பிடிக்கவில்லை. மற்றொருவனைப் பார்க்க மனம் வில்லங்கமாக யோசித்தது. மாத்திரையைத் தாமதித்தால் டாக்டரைப் பார்க்கலாம்! செய்தாள்.

அச் செயலினால் ஏற்படும் விபரீத பாதிப்பைப் புரிய வைக்கப் பல ஸெஷன்கள் எடுத்தன. கட்டுரைகள், ஆய்வுப் படங்கள் படிக்க, வசந்தா மனம் குறுகுறுத்தது.

தன் மன நிலையை வெளிப்படுத்தினால் டாக்டர் தன் மேல் பரிதாபப் படுவார் என நினைத்தாள். அன்று நான் வருவதற்கு முன்பே வசந்தா வந்து டாக்டரைச் சந்தித்து, மனதில் தோன்றியதை வெளிப்படுத்த, நான் வரும்வரை வெளியே உட்காரச் சொன்னார். டாக்டர் நன்கு அறிந்ததுதான், என்னிடம் சொல்வதைப் பகிர்வதில்லை என்று. வந்ததுமே விவரத்தை அறிந்தேன். வசந்தாவும் ஸெஷனில் பகிர்ந்தாள், டாக்டரைத் தன் பக்கம் இழுக்கவே அலங்காரங்கள் செய்திருந்தும், அவர் மித்ராவை ஆசுவாசப்படுத்திப் பேசியது பொறாமையைத் தூண்டியது.

தன் சுய மரியாதையைத் தவிக்க விடுவது வரும் சந்திப்புகளில் வெளியானது. ஏக்கங்கள், எதிர்பார்ப்புகளைப் பல தரப்பில் ஆராய்ந்தோம். ஐந்து மாதங்களுக்குப் பிறகு ரகுவின் பங்களிப்பு தேவைப்பட அவனிடம் பகிர்ந்தேன்.

ரகு ஆரம்பித்தது வசந்தாவின்மேல் தனக்கு இருக்கும் விருப்பத்தைப் பற்றி. மித்ரா பிறந்த மறுநாளே முதல் மனைவி இவனுடன் வாக்குவாதம் செய்தாள். ஆண் குழந்தைக்கு ஏங்கினாள். ஆண்களிடமிருந்தே பெண்பால்-ஆண்பால் அணு வருவதால் ரகுவால்தான் பெண் பிறந்தது, ஏமாற்றம் என்று இவர்களை விட்டுச் சென்றாள்.

கைக்குழந்தை இருந்ததால் மறுமணத்திற்குப் பெண் கிடைக்காததால் மித்ராவை வெறுத்தான். பல தேடலுக்குப் பின்னரே வசந்தாவின் வரன் வந்தது. சுதந்திரம் வேண்டும், தான் இளம் வயதானவள், வெளியே செல்லும் போதெல்லாம் மித்ராவை அழைத்துச் செல்லக் கூடாது என்று வசந்தா இட்ட நிபந்தனைகளை எல்லாம் மித்ராவைப் பிடிக்காததால் ரகு ஒப்புக்கொண்டான். வெளிப்படையாக, மித்ராவின் கல்யாணத்திற்குப் பிறகு அவள் வீட்டிற்கு வரத் தேவை இருக்காது என ரகு கருதினான்.

அவசரமாக வெளிநாட்டில் வேலை என்று ரகு சென்றான்.

வசந்தா-மித்ரா உறவில் ரணங்களால் விரிசல் இருந்தது! மித்ராவால் யாரிடமும் சொல்ல முடியவில்லை.

ஸெஷன்களில் இவற்றுக்குத் தீர்வு காண, மாத்திரைப் பொறுப்பாளி மித்ரா மட்டுமே என்று வலியுறுத்த, மாற்றங்களைக் காண முடிந்தது. ஆறு மாதங்களாக மித்ரா வலிப்பு வராமல் இருந்தாள்.

இந்த சூழ்நிலையில் மித்ரா தனது கல்லூரியில் மாணவர்களைத் தேர்ந்து எடுக்கும் நிறுவனங்கள் வருவதாகச் சொன்னாள். ஒரு நாள் மாலை என்னைச் சந்திக்க நேரம் குறித்துக் கொண்டவள், பிறகு. வர இயலவில்லை எனத் தகவல் சொன்னாள். இவ்வாறு செய்தது முதல் முறை.

அவள் வராததற்குக் காரணம், கல்லூரியில் நடந்த ப்ளேஸ்மென்டிற்காக நிர்வாகத்திலிருந்து வந்தவர்கள் இன்னொருவர் வரக் காத்திருந்ததில் நேரமாகிவிட்டது.

மறுநாள் மித்ரா மூவருடன் வந்தாள்.‌ டாக்டரிடம் பேசிவிட்டு, என்னையும் சந்திக்க வந்தார்கள்.‌

வந்தவர்களை மித்ரா அறிமுகம் செய்தாள், கிருஷ்ணா, அவனுடைய தாயார் ரமா, மற்றும் தந்தை ராகவ் என. இவளைப் பெண் பார்க்க வந்தவர்களாம். மித்ராவைப் பிடித்து விட்டதாம்.

அன்று கல்லூரியில் நடந்ததும் தெளிவாயிற்று. மாணவர்களைத் தேர்வு செய்ய வந்தவர்களின் டீம் லீட் கிருஷ்ணா! வந்த பிறகே மித்ரா அங்கு இருப்பதை அறிந்தான். தான் அவளுடைய நேர்காணலில் இருப்பது நெறிமுறை ஆகுமா என மேல் அதிகாரிகளிடம் பேசினான். கிருஷ்ணா மித்ராவைப் பெண் பார்க்கப் போவதின் விவரம் அறிந்ததும் வேறொருவரை அனுப்பி வைத்தார்கள்.

நேர்காணலில் மித்ரா வெளிப்படையாக, நேர்மையாக  தனக்கு வலிப்பு இருப்பதாகவும், மாத்திரை தவறாமல் சாப்பிட்டுவதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் விளக்கினாள். எடுத்திருந்த மதிப்பெண்கள், ஓ.ஜீ.பீ.ஏ, டாக்டரின் சான்றிதழ் பார்த்துப் பாராட்டினார்கள்.

பெண் பார்க்க வருவதை அவர்கள் வர அரைமணி நேரத்திற்கு முன்பு தான் வசந்தா மித்ராவிடம் சொன்னாள். வந்தவர்களிடம் மித்ரா வலிப்பு பற்றித் தானே பகிர்ந்து கொண்டாள். மறுநாள் டாக்டரையும் என்னையும் சந்திக்கப் பரிந்துரைத்தாள்.

சந்தேகங்களைத் தெளிவு செய்ய டாக்டர் இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாது என்று உறுதியாகக் கூறினார். வேலை, பொறுப்பு எடுப்பதைத் தெளிவுபடுத்த, திருப்தி ஆனார்கள். வெளியேறும் போது ரமா மித்ராவின் கரத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டு போனது இதமான உறவைக் காட்டியது!

மறுநாள், மித்ராவுடன் ராகவ், ரமா  கிருஷ்ணா என்னைப் பார்க்க வந்தார்கள். முன்பு போல ரமா கையில் மித்ராவின் கரம்! திருமணத்தை எந்த அளவிற்கு முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் வைப்பதாகச் சொன்னார்கள். இனியும் மித்ரா இந்த நச்சு சூழலில் இருப்பதை அவர்கள் விருப்பப் படவில்லை. இந்தத் தருணத்தில், ரமா, மித்ரா அனுமதி கேட்டு உள்ளே வந்தார்கள்.

கல்யாணத்திற்காக ரகு வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாகவும், மீண்டும் திரும்புவதாகவும் மித்ரா கூறினாள். ஆக, வசந்தா ரகு மேற்கொண்டு ஸெஷன்களுக்கு வருவது சாத்தியம் இல்லை. மித்ராவைச் சம்பந்தப்பட்டவை, எதற்காக முயல?

மித்ரா உறவில், சூழலில் இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்க, இந்த மூவருமே வரப்பிரசாதமே! எடுத்த எடுப்பிலேயே அக்கறை ஆசையாக இருப்பதினால் பல ரணங்களுக்கு மருந்தாகிவிடும் என நம்பினேன்.‌

தலைத் தீபாவளி புகுந்த வீட்டில் கொண்டாடி குடும்பத்தினருடன் வந்தாள் மித்ரா. நினைத்தது போல் அவ்வாறே வாழ்க்கை பூத்துக்குலுங்கியது! டாக்டரிடம் தனது நிலையை ரெவ்யூ செய்ய வந்திருந்தாள். இப்போதெல்லாம் வலிப்பு வருவதில்லை. பரிசோதனைகள் சரியாக இருந்தது. மாத்திரையைக் குறைக்கும் கட்டம் வந்துவிட்டதாக டாக்டர் சொன்னார். குடும்பமே மகிழ்ச்சி அடைந்தது!

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

 1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
 2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
 3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
 4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
 5. எனது நாடு – செப்டம்பர் 2020
 6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
 7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
 8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
 9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
 10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
 11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
 12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
 13. ஜன கண மன ! – ஜனவரி 2021
 14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
 15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
 16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
 17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
 18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
 19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
 20. வேப்ப மரம் !    – ஏப்ரல் 2021
 21. பஸ்ஸில் போகலாம்   – மே  2021   
 22. சிட்டுக் குருவி – மே   2021  
 23. ஆகாய விமானம் – ஜூன் 2021
 24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
 25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
 26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021
 27. தா தீ தோம் நம் !          – ஆகஸ்ட் 2021
 28. விளையாடலாம் !           – ஆகஸ்ட் 2021
 29. மழையே வா ! – செப்டம்பர் 2021
 30. பாரதிக்கு பாப்பா சொன்னது ! – செப்டம்பர் 2021
 31. தோட்டம் போடலாமா ?   – அக்டோபர் 2021
 32. வள்ளுவர் தாத்தா !   – அக்டோபர் 2021
 33. தமிழ் ! – நவம்பர் 2021
 34. பாப்பாவுக்கு பப்பாளி ! – நவம்பர் 2021
 35. கைக்கடிகாரம் ! – டிசம்பர் 2021
 36. ஓடுது பார் ! – டிசம்பர் 2021
 37. கவிஞன் ஆவேன் ! – ஜனவரி 2022
 38. என்ன செய்யப் போகிறாய் ? – ஜனவரி 2022
 39. பார் பார் மெட்ரோ பார் ! – பிப்ரவரி 2022
 40. நேதாஜி ! நேதாஜி ! – பிப்ரவரி 2022
 41. என்ன மரம் ! – மார்ச் 2022
 42. சைக்கிள் ! – மார்ச் 2022
 43. காந்தி தாத்தா – ஏப்ரல் 2022
 44. சிறகுகள் இருந்தால்…… – ஏப்ரல் 2022
 45. தோட்டத்தில் காய்கறி – மே 2022
 46. இந்தியாவும் தமிழ்நாடும் ! – மே 2022
 47. மழை வருது ! – ஜூன் 2022
 48. சுற்றிப் பார்க்கலாமா ? – ஜூன் 2022
 49. என் சித்திரம் ! – ஜூலை 2022
 50. தஞ்சாவூரு பொம்மை ! – ஜூலை 2022
 51. பூங்கா ! – ஆகஸ்ட் 2022
 52. பூரி வேணும் ! – ஆகஸ்ட் 2022

 

          பூனையாரே !

பூனையாரே ! பூனையாரே !

எங்கே போறீங்க ?

புலியைப் போல பதுங்கி பதுங்கி

எங்கே போறீங்க ?

 

காலை நக்கும் பூனையாரே !

எங்கே போறீங்க ?

பாலைத் தேடி இங்குமங்கும்

எங்கே போறீங்க?

 

மீசை துடிக்க முழிச்சுக்கிட்டு

எங்கே போறீங்க?

உடம்பை நெளிச்சு வளைச்சுக்கிட்டு

எங்கே போறீங்க?

 

கருப்பு வெள்ளை குட்டிகளே !

எங்கே போறீங்க?

குடும்ப சகிதமாய் நீங்கள்

எங்கே போறீங்க?

 

கதவு பின்னால் காத்திருந்து

எங்கே போறீங்க?

ஜன்னல் வழியே எம்பிக் குதித்து

எங்கே போறீங்க?

 

குறும்புக்கார பூனையாரே !

எங்கே போறீங்க?

கூட என்னை சேர்த்துக்குங்க –

கொஞ்சம் நில்லுங்க !

 

எதைச் செய்தாலும்……..

எதைச் செய்தாலும் நன்றாகச் செய் என

என்னிடம் சொன்னாள் அம்மா.

முதல் தடவையே முழுதாகச் செய் என

அறிவுரை சொன்னார் அப்பா.

 

எல்லாரிடமும் அன்பு செலுத்து என்று

அன்பாய் சொன்னாள் பாட்டி.

பெரியவர்களிடம் மரியாதை வேண்டும் என

வழிகாட்டினார் என் தாத்தா.

 

இறைவனை எண்ணி எல்லாம் செய்தால்

நல்லது என்றார் ஆசிரியர்.

இளமையிலேயே கல்வியைக் கற்றால்

உயர்வாய் என்றார் ஆசிரியை.

 

இவர்கள் சொல்வதை நானும் கேட்பேன் !

வெற்றிகள் நானும் பெற்றிடுவேன் !

நல்ல வழியில் நடந்து நான் போவேன் !

பெருமைப்படும் விதம் வாழ்ந்திடுவேன் !

 

அங்கே ஓடும் நதி – பானுமதி

Woman by the river Painting by Asu Berdikova | Saatchi Art

வானம்செம்மை நிறம் பூண்டு அதையும் மாற்றிக் கொண்டது. தயங்குவது போல் நடித்து மெல்லக் காலடிகள் வைத்து இருள் தேவதை வானில் நுழைந்தாள். அவளின் கம்பீர யௌவனத்தைக் கலைக்கக் கூடாதென்று சில விண்மீன்கள் தமக்குள் முணுக் முணுக்கென்று பேசியபடியே எட்டிப்பார்த்தன. ஆர்வம் தாளாது மற்ற வான்பூக்களும் தாங்களும் இந்த இரகசியப் பேச்சில் சிறிது சிறிதாக இணைந்து கொண்டன. வைர ஊசிகளென மின்னிய அவற்றை அவள் உடல் முழுதும் ஏற்றுக் கொண்டாள். அவளின் கருமை படரப் படர அவைகளின் ஒளிச்சிதறல்கள் நீலம் இறைக்கும் பூக்களாய் மிளிர்ந்தன. கண்ணிற்கு எட்டும் திசையெங்கும், அவள் மேனியில் நகைகளென, சிற்பச் செதுக்கல்களென, எழில் சிற்பங்களென, உருவ நிழல்களெனக் காட்சிகள் சொல்லித் தீர்வதில்லை.

அவைகளை வான் நதியில் அங்குள்ளோர் மிதக்கவிட்ட தீப ஒளித் துணுக்குகள் என்று கூட நான் நினைத்தேன். கடல் நின்ற குமரியின் மூக்குத்தி கடலின் அலைகளில் பயணித்து வானின் பரந்த விரிப்பில் சிறிதும், பெரிதுமாய் மின்ன, அவள் மாட்சிமையைப் போற்றிப் பாடிய மென்குரல் கவிதைகளை காற்று அள்ளி எடுத்து வந்து என் காதுகளில் பாடியது.

‘ஆகாயக் கனவுகளே, வானதியின் சொல்லோ, அல்ல

இரவு விசும்பின் முகவரிகளோ நீங்கள்?

உறவின் விதிர்ப்புகளால் மனிதம் தவிக்கிறது

சிறிதும் பெரிதுமாய் சுமந்து  அலைகிறது

அரிதைப் பெறுவதற்கு ஆயிரம் யோசிக்கிறது

பிறந்த காலையிலும் கவலை

மயக்கும் மாலையிலும் தவிப்பு

இரவின் மடிகளிலும் பதைப்பு

இயல்பாய் இருக்க மறந்து ‘

சாம்பல் நிறக் குன்றுகளின் அந்தப் புறத்தில் ஒடும் நதியின் ஓசைகளை நானறிவேன். தொடர் குன்றின் ஒரு எல்லையிலிருந்து ஒரு சிணுங்கலென அவள் வெளிப்படுவதை நான் கேட்டதாகச் சொல்லி விட்டு, இரவின் பகுப்புகள், அதிகாலை நோக்கி விரைவதை அவளால் தடுக்க முடியுமா எனத்தான் கேட்டேன்.

சிறு பாறைகளை அணுகி அடித்து அவள் சிரித்தாள்.

அவன் பரவத் தொடங்கினான் என் மீது..

அல்லது மாற்றாக ஒளி தன்னை முற்றாக இருளிடம் ஒப்படைப்பதையாவது? தன்னைத் தானே உமிழ்வதும், விழுங்குவதுமான இந்த விளையாட்டில், நீ தோன்றித் தோன்றி, நானென்று நானென்று, நம்பி ஏமாறுவதற்கு ஏற்ற நியதிகள் உன்னால் விலக்க முடியாத விலங்குகள் என்றாவது பதில் சொன்னாலென்ன?

எங்கே உன் கவனம்?” என்றான். உன்னைத்தான் கேட்கிறேன்.

கருமையிலிருந்து சாம்பல் பூக்கத் தொடங்கிவிட்டது இப்போதே. பொல்லென்று வெளுக்கையில் சாயங்கள்  மாற்றி விளையாடும், உன் காலின் கீழ் .

‘நல்லது’ என நான் சொன்ன போது அவளும் நகைப்பொலியுடன் நடந்தாள்

எதற்கு என்ன பதில்?” என அவன் கேட்டான்.

எனக்கு அவன் கேள்வியே ஒரு பொருட்டல்ல என நான் நினைப்பதை அவள் இரகசிய ஒலிக் குறிப்பில் உணர்த்தினாள்.

அவன் பார்வை மிகச் சுத்தமாகக் கேள்விக் குறியைக் காட்டியது. மற்றவர்கள், பயந்து அகல்வது என் கண்களின் மேல் நடந்தல்லவா என்று என்னுள் எண்ணம் கிளைத்தது. ஆனால், சலசலக்கும் நதியின் ஓசையில் அது அடங்கி அடங்கி எழுகிறது.

கைகளை இறுகப் பற்றி அவன் வாழ்த்து சொல்கையில் கூழாங்கற்களின் மீது ஏறி விளையாடும் நதியின் குரலில் நான் சிரித்தேன். முதலை வந்த நதியின் நிழல் ஒரு கோடென அவன் முகத்தில் வந்து போனது.

நம்மைப் பிரிப்பதற்கான சதி இது.” என்றான்.

சுலபமாக மாற்றல் கொடுத்திருக்கலாமே என்ற என் எண்ணத்தின் வெளிச்ச மொழியாக அவள் கரையோர அலைகளில் வெள்ளி ஜரிகை வந்தது.

உன் மௌனத்தின் அர்த்தம் எனக்கும் புரியும்.”

‘எனக்கு மூச்சு முட்டுகிறது, கொஞ்சம் இறங்கேன்’ என்று சொல்ல நினைக்கையில் அவள் புரண்டு படுத்து நெளிவது காட்சியில் விரிந்தது.

என்ன தீர்மானித்திருக்கிறாய்? “.

அவள் ஆழ் சுழலின் அமைதி என்பது போல் நான் இருந்தேன்.

எனக்குத் தெரியும், என்னை விட்டு நீ போகமாட்டாய். “

அவள் மீது ஓடும் நீர்த்துளி ஒவ்வொன்றும் புதியது என நான் அறிவேன்.

 

நாளைக்கு ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸ் போகலாம். திருமணப் பதிவிற்கு என்ன வேண்டுமோ அதைச் செய்ய ஆரம்பிக்கலாம்.

அவள் மேனியில் மிதக்கும் தீபங்களென என் கண்கள் மின்னியது.

பதில் சொல்என அவன் என் தோளை உலுக்கிய போது ஆழ் பாறையில் மோதும் தோணியென சுழன்றது என் உடல்.

திருமணத்திற்குத் தேவையென்ன என்ற என் கேள்வியில் அவன் ஆயுதமற்ற கோழையைப் போல் பரிதவித்தான்.

அவள் வட்டச் சுழல்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நானே மேரேஜ் என்கிறேன். உனக்குக் கேவலமாக இருக்கிறதா?”

அவள் கரையோரத்துத் தவளைகள் பாடும் கொக்கரிப்பினைக் கேட்டேன். பின்னர் சொன்னேன். ‘வானம் கரைத்த நீலமென நாம் பார்த்த ஆற்றின் பெருக்கை நினைவில் கொள். எக்காலத்திலும் நான் மனைவி என்றாவதில்லை எனச் சொன்னேன், நீயும் ஒத்துக்கொண்டாய்.’

பிதற்றல்; உன் நதி வந்து சாட்சி சொல்லுமா என்ன?” என்றான்.

அவள் தன் மீது கலக்கும் மாசுகளைப் பார்த்திருந்தாள்; ஆனாலும் ஓடினாள்.

‘நான் ப்ரமோஷனை ஒத்துக் கொண்டு போகப் போகிறேன்’ என்றேன் நிதானமாக.

அவள் மெதுவே சிறு பாய்ச்சலென முன்னேகினாள்.

கம் அகெய்ன். என்ன ஒரு துணிச்சல்? எனக்குக் கிடைக்காததை நீ பெற்றுவிட்ட ஆணவமா? என்னை நாளைக்கு ஆஃபீஸில் மதிப்பார்களா?”

‘என் ப்ரமோஷனுக்கும், உன் மதிப்பிற்கும் என்ன சம்பந்தம்? அப்படியே இருந்தாலும், எனக்குக் கிடைத்தது, உனக்குக் கிடைக்கவில்லை என்பதை மாற்றமுடியுமா என்ன?’

இந்த என் கேள்விக்கு அவள் அலைக்கரங்கள் தாளம் கொட்டுவதைக் கேட்டேன்.

நதியற்ற ஊர்களில் கூட நான் நதியைக் கேட்பதுண்டு. ஒரு கரையிலிருந்து மறு கரைமரம் நோக்கி சிறகுகள் அசைத்து புள்ளினங்கள் பறப்பதை நான் வகுப்பறைகளிலிருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். எல்லா வகுப்புகளும் எனக்குப் பிடித்திருந்தன. தமிழாசிரியர் நடத்திய செங்கால் நாரையின் கால்களில் நான் தென்திசைக் குமரிக்கடலின் நீர் அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ‘சத்தி முத்தி வாவியுள் தங்கி’ என்று படிக்கையில் குளிர் பொய்கைக் கரைகளில், சிறகு உதறும் நீர்த்துளிகளில் நனைந்தேன். ‘கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்’ என்ற தொடருடன் இசைச் சங்கிலியின் நீர் பாய நெடு மனம் பணியக் கேட்டேன். நான் பயணித்துக் கொண்டிருந்தேன் என்னுள்ளே இருந்த ஆற்றுடன்.

ஆய்வக வகுப்புகளில் மல்லாத்தி அறையப்பட்ட தவளைகளை அறுத்து பகுக்கும் போதே அவை நின்ற ஏரிகளை, குளங்களை, கிணறுகளை, ஆறுகளைச் சேர்த்தே எண்ணுவேன்.

ஆற்று நீர் ஏத்தங்களை, மதகின் கதவுகளைத் தட்டும் நீர்க்கரங்களை, அவை திறக்கையில் பாய்ந்து வரும் ஓசைகளைக் கேட்டுக்கொண்டேதான் இயற்பியலில், அதிர்வுகள் பற்றிப் படித்தேன்.

என்னுள் தங்கியவளை சக களத்தி எனச் சொல்லலாமோ என வியந்தேன். ஈரமற்ற, குட்டைகள் கூட இடம் பெறாத இந்த மனிதனுடன் கூடி வாழ நான் தேர்ந்தெடுத்ததே கூட நான் கேட்டுக் கொண்டேயிருந்த நதியின் மொழியால்தான்.

நாங்கள் பழகத் தொடங்கிய போது அவனுக்கு மழையின் ஈரம் மிகப் பிடித்திருந்தது. சூல் கொண்ட மேகங்கள் கனிந்து பொழியும் பொழுதை அவன் கணித்து கவிதைக் கணங்களில் இருப்பான். ஆனால், அவை இன்று கணிதக் கணங்களாய் மாறியுள்ளது தான் புதிராக இருக்கிறது.

உனக்கு அறிவு போதாது.”

நான் மெதுவாகச் சிரித்தேன்.

அவள் காதோடு கேட்கும் ஒரு பாடலைப் பாடினாள்.

மண்ணில் காலூன்றாமல் விண்ணில் எழ முடியாது.”

‘உள்ளிழுக்கும் புதை மணலுக்கும் இது பொருந்துமா?’ என்றேன்.

தன் மேனியில் அவள் அனுமதிக்கும் நிழற் சித்திரங்களை, மாறி வரும் கோலங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தர்க்கங்கள் வாழ்வாவதில்லை.”

‘இருக்கலாம்; எனக்கு நான் உண்மையாக இருப்பது முக்கியம்’ என்றேன்.

சொல், ஏன் நான் முக்கியமில்லை?”

ஓடும் மீன் ஓட உறு மீனும் வரப்போவதில்லை என அறிந்தவள் போல் அவள் கொக்கினைப் பார்த்தாள்.

‘எனக்கு எதுவுமே முக்கியமில்லை; மனிதர்கள் எனக்கு சலிப்பைத் தருகிறார்கள்.’ என்றேன்.

வாழும் அனைவரும் முட்டாள்கள், நீ மட்டும் தான் விலக்கு.”

நீர்க்களிம்பேறிய அந்தப் பாறையை இடமும், புறமும், மேலும் கீழுமாக அவள் சுற்றிச் சென்றாள்.

‘ஒரு விதத்தில் ஒத்துக்கொள்கிறேன். நான் விலக்கு என்பதை மட்டும்.’

அதில் என்ன பெருமை இருக்கிறது?”

‘ஒன்றுமில்லை; சற்று விடுதலை அதிகமாகக் கிடைக்கும்.’

தான்தோன்றியாய் வாழும் பெண்களுக்கு சமூக மதிப்பீடு என்ன என்று தெரியுமா? எத்தனை இழிவு தெரியுமா?”

நீர்க்களிம்புப் பாறையை அவள் மழைக்கரங்களைக் கொண்டு ஓங்கி அடித்தாள்.

‘அது என்னை பாதிக்காது’ என்றேன்.

உன் அம்மாவைப் போல் தான் நீ இருப்பாய். உன் அப்பா குமைந்து குமைந்து செத்ததுபோல் நான் சாக மாட்டேன்.”

வாலைச் சுழற்றி ஓங்கி நீரிலடித்து கரை ஒதுங்கும் முதலையைப் பார்த்தேன்.

நானாவது நதியைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்; ஆனால், அம்மா கேட்டது கடலல்லவா? அவளைப் பித்து என்று சொன்னவர்களைப் பார்த்து வலம்புரிச் சங்கில் அவள் கடலின் சீற்றத்தை அல்லவா ஊதினாள்?

‘என் அப்பா, அம்மாவின் கணவன் மட்டுமே; நீ எனக்கு அது கூட இல்லை’ என்றேன்.

பூவும், இளந்தளிரும், சருகுமாகச் சுமந்து கொண்டு அவள் ஓடினாள்.

அதற்குத்தான் பதிவுத் திருமணம் செய்யலாம் என்கிறேன்.”

‘நான் பந்தங்களில் சிக்காதவள். மூலைகள் இல்லாத வட்டம்; கோட்டுக்குள் ஆடாத ஆட்டம்.’

மலையில் தொடங்கி மேடு பள்ளமெனப் பயணித்து அருவியாய் வீழ்ந்து, ஆறாய் நடந்து, வரும் போக்கில் எந்தத் துணையாறையும் ஏற்று நான்ஒரு நதி.

காற்றின் இசையை ஏற்று அவள் சப்தமிட்டாள்.

நதி கூட கடலில் கலக்கிறது.”

‘அத்தனை அனுபவங்களுக்குப் பிறகு அது நடந்தால் நடக்கட்டும்; இல்லை வற்றிப் போய்விடட்டும்.’

நான் கணங்களில் வாழ்பவள் என்று அவள் சொல்வது எனக்குக் கேட்டது.

வெறும் வாய்ப்பேச்சு.”

இல்லை, உள்ளே குமைந்து பொங்கியவள்; அவன் தலை மீதிருந்தோ, பாதத் திறப்பிலிருந்தோ வெளிப்பட்டு ஓடுவாள். அவளை நீ அறியவே முடியாது. நீ அணை கட்டுவாய், தேக்குவாய்; அவள் கட்டுடைப்பாள், தன் வழி ஏகுவாள். மரணமும் அவளது சிரிப்பே. வட்டக் காலத்தின் சுழற்சி அவள். எங்கும் ஓடும் நதி. அவளை அணுகி கேட்டுப் பார். புரிந்த பிறகு சொல்.

 

 

 

 

ஜப்பான்  பார்க்கலாமா-1   – மீனாக்ஷி பாலகணேஷ்

          சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று நான்கைந்து தினங்களுக்கு  ஜப்பான் செல்ல வாய்ப்புக் கிட்டியது. நான்கு தினங்களில் என்னதைப் பெரிதாகப் பார்த்து விட முடியும் என்று மனது எண்ணினாலும், ‘நம் வயதில் தினப்படி காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக அலைய முடியாது அப்பா,’ எனும் எண்ணமும் எழுந்தது. ‘சரி, முடிந்ததைப் பார்க்கலாமே,’ எனக் கிளம்பியாயிற்று.

          வழக்கமான ஹோட்டல்களுக்குப் பதிலாக, ஒரு சிறிய அபார்ட்மென்ட் (AIR BNB) வாடகைக்குக் கிடைத்தது. புதுமையான அனுபவம்! இணையதளம் மூலமாகத்தான் பதிவு செய்தோம். ஒரு சின்ன ஹால், சமையலறை, பாத்திரங்கள், ஃப்ரிஜ், பாத்ரூம், படுக்கையறையில் மெத்தைகள் தரையில் தான்! நம்மூரில் தரையில் படுக்க எத்தனை அலட்டல் செய்வோம்!

          எனக்கோ முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சை செய்த கால்! தரையில் அமரவே முடியாது. பின் எப்படி படுப்பது? எண்ணித் துணிக கருமம் என்று துணிந்து வந்தாயிற்று.  பின் எண்ணுவது இழுக்கல்லவா? தினம் இரவு ஒருவிதமான சர்க்கஸ் செய்து படுக்கையில் விழுவதும் பின் காலையில் வேறுவிதமான பிரயத்தனம் செய்து எழுவதுமாக இருந்தது. கவலை எதற்கு? தினம் காலையில் கையைப் பிடித்து இழுத்து எழுப்பக் கணவர் (கை கொடுக்க தெய்வம்!) தயாராக இருந்தார். ஆனால் நம் சுய கௌரவம் இடம் தரவில்லையே! எப்படியோ சமாளித்தேன் என்று சொல்ல வேண்டும்.

          மேலும் இங்கு நமக்கு அவர்கள் வைக்கும் இன்னொரு சின்ன வேண்டுகோள்- அதாவது காலணிகளை அபார்ட்மென்டினுள் நுழைந்ததுமே, வெளியிலேயே கழற்றி வைத்து விட வேண்டும். வீட்டினுள் அணிந்து கொண்டு போகக் கூடாது என்பது தான் அது. ‘யாராவது பார்க்கப் போகிறார்களா என்ன’ என்று யாருமே இந்த வேண்டுகோளைப் புறக்கணிப்பதில்லை. நுழைந்ததும் காலணிகளைக் கழற்றி வைத்து விட்டு அவர்கள் வைத்துள்ள மென்மையான துணிச் செருப்புகளை அணிந்து கொண்டு விடுவோம்.

          சமையலறையில் சமைக்க வசதி இருந்தது. ஆனால் எங்களுக்கு நேரம் தான் இல்லை. தேநீர் (அவசர முறையில் தான்! ஜப்பானிய முறையில் அல்ல) தயாரித்துக் கொள்வதுடன் சரி. கொண்டு போன MTR- ரவை உப்புமா, அவல் உப்புமா பாக்கெட்டுகளை வெந்நீர்  ஊற்றித் தயார் செய்து டப்பாவில் எடுத்துக் கொண்டு தன் வெளியே கிளம்பினேன்.

          டெம்புரா (Tempura) எனும் ஒரு பதார்த்தம் மிகவும் பிரசித்தம். மதிய உணவு சமயம் எல்லாரும் இதை ஒரு கை பார்க்கிறார்கள். எண்ணையில் நீச்சலடித்து வறுபட்ட மீன் முதலான சமாச்சாரங்கள். ஆனாலும் ஒரு பிரபல உணவகத்தில் காய்கறிகளைப் போட்டும் தயார் செய்திருந்தனர். அதனுடன் சாப்பிட என்னவெல்லாமோ ‘ஸாஸ்’ வகையறாக்கள். சும்மா சொல்லக் கூடாது; நன்றாகவே நம்மூர் பஜ்ஜி மாதிரி இருந்தது. இருந்தாலும் எத்தனை தான் சாப்பிடுவது? எண்ணைப் பதார்த்தம் அல்லவா? சத்தம் போடாமல் கொஞ்சம் வெள்ளை சாதம் (white rice) ஆர்டர் செய்து, கையோடு கொண்டு போயிருந்த புளியோதரைப் பவுடரை அதில் கலந்து (யாரும் ஆட்சேபிக்கும் முன்- வெளி உணவுக்கு அனுமதி இல்லை!) ஐந்தாறு வாய்கள் சாப்பிட்டதும் தான் திருப்தி ஆயிற்று.

          அன்று ஒரே மழை! நல்ல வேளையாக அன்று நாங்கள் பார்க்க வேண்டியவை எல்லாமே கட்டிடங்களுக்குள் தான். டோக்கியோவின் ஐந்து நட்சத்திர இம்பீரியல் ஹோட்டலில் ஜப்பானின் பிரபலமான, கலாச்சாரப் பெருமை வாய்ந்த ‘தேநீர் உபசாரச் சடங்கி’னைக் (Tea ceremony) கண்டு அதில் பங்கு கொள்ளச் சென்றோம் (!?).

          இதைப்பற்றி ஒரு அறிமுகம் தேவை!

          தேநீர்ச் சடங்கு என்பது, ‘விருந்தினரும் அவரை உபசரிப்பவரும் தினசரி வாழ்க்கையின் பழகிப்போன சுவையற்ற நடப்புகளிலிருந்தும் வழக்கமான பரபரப்புகளிலிருந்தும் விலகி நின்று, சிறிது அவகாசம் எடுத்துக் கொண்டு, சம்பிரதாயமானதும் மிகவும் நாகரிகமானதுமாகக் கருதப்படும் இந்த நிகழ்வில் பங்கெடுத்து, அதன் மூலம், ஆன்மீக ரீதியான ஒருவகை மனநிலையை அனுபவிப்பது,’ என்பதாகும். வாழ்வின் முறையற்ற மன அழுத்தங்களிலிருந்து விடுபட இது ஒரு வடிகால் போன்றதாம். இத்தகைய ஒரு எண்ணத்தைத் தழுவி, முழுமையானதும், சிக்கலானதுமான ரசிகத்தன்மை நிறைந்த இந்தச் சடங்கு உருவாக்கப்பட்டது என்கிறார்கள்.

          இது 1500-களில் நடைமுறைக்கு வந்ததாம். ஜப்பானியர்கள் சீனர்களிடமிருந்து பசுமையான தேநீர் (Green tea) அருந்துதலை தங்கள் வழக்கமாக ஏற்றுக் கொண்டதை அடுத்து ஜென் புத்த (Zen Buddha) மதத்தின் நம்பிக்கையாக இந்தத் தேநீர் சடங்கு உருவாயிற்று. 1521-1591 வரை வாழ்ந்த சென் நோ ரிக்யு (Sen no Rikyu) என்பவர் ஜப்பானின் தேநீர் சடங்கைத் துவக்கி வைத்த முக்கியமான ஒருவராவார்.

          சம்பிரதாயமான தேநீர் சடங்கானது, தேநீர் என ஒரு பானத்தை அருந்துவது மட்டுமல்ல; அது ஆன்மீக பூர்வமான ஒரு அனுபவம் – அது ஒற்றுமை, மற்றவர் மேல் மரியாதை, தூய்மை, அமைதியான மனநிலை இவை அனைத்தும் சேர்ந்த கலவையான ஒருவிதமான அனுபவம்.

          நான் முன்பே இதைப்பற்றிப் படித்து சிறிது அறிந்திருந்ததால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் போய்ச் சேர்ந்தேன். எப்படி முழங்காலிட்டு அமர்வது என்பது தான் பெரிய யோசனை. ஆனால் தற்காலத்தில் தரையில் அமர இயலாத வெளிநாட்டு (அமெரிக்க, ஐரோப்பிய) யாத்திரீகர்களுக்கு, பின் வரிசையில் நாற்காலிகள் போடப்பட்டிருக்கும் என அறிந்ததும் சிறிது நிம்மதியாயிற்று.

          தேநீர்ச் சடங்கை நடத்துபவர் முன்கூட்டியே, எல்லாவற்றையும் தயார் செய்து கொள்ள வேண்டும். அவருடைய கை, கால் அசைவுகள் எல்லாமே ஒரு ஒழுங்கிற்கு உட்பட்டதாக இருப்பது முக்கியம். இதற்காகவே அந்நாட்களில் தனிப்பட்ட தேநீர் இல்லங்கள் அமைக்கப் பட்டிருந்தன. ஆனாலும், வீடுகளிலும், வெளியிடங்களிலும், தோட்டங்களிலும் கூட இதனை நிகழ்த்தலாம். எளிமையாகத் தோற்றமளிக்கும் இந்தத் தேநீர் இல்லங்கள், விலையுயர்ந்த மரவேலைப்பாடுகள், கற்கள், காகிதங்கள், கதவுகள் எனப் பலவற்றைக் கொண்டிருக்கும். பருவ காலங்களுக்கேற்ப, ஒரு பகுதியில், இகபானா (Ikebana) என்னும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, ஒரு படம், தொங்க விடப்பட்டிருக்கும். சுகியா (Sukiya) முறைப்படி பகுக்கப்பட்ட மூன்று Ulagam Sutrum Valiban - JungleKey.in Imageபாகங்களைக் கொண்டது இந்தத் தேநீர் இல்லம்.

          விருந்தினர்கள் கற்கள் பதிக்கப்பட்ட ஒரு வளைவான பாதையில் நடந்து, தேநீர் இல்லத்தின் வாயிலை அடைய வேண்டும். குறுகிய வாயிலினுள் குனிந்து தான் நுழைய முடியும். நம்மை விருந்தோம்புபவர், பாரம்பரிய உடையணிந்து (கிமோனோ- Kimono) குனிந்து வணங்கி வரவேற்பார். எல்லாரும் வரிசையாக ஒரு பக்கம் டடாமி பாய்கள் (tatami mats) விரித்த தரையில் அமர்ந்த பின் (நல்ல வேளை, எனக்கு ஒரு சிறு மர முக்காலி கொடுத்தார்கள்!), விருந்தோம்புபவர் அனைவருக்கும் ஒரு விதமான கோணத்தில் மடிக்கப்பட்ட காகிதத்தில் வைத்து பச்சை நிற பீன்ஸ் கொண்டு செய்யப்பட்ட ஒருவிதமான அல்வாவை (Green bean pudding) உண்ண வழங்கினார். எடுத்து உண்பதற்கு ஒரு சிறு குச்சியும் கூடத் தரப்பட்டது.

          பின்பு அவர் தேநீர் தயாரிப்பில் முனைந்தார். எங்களுக்கு அதற்குண்டான சாமக்கிரியைகளை ஒவ்வொன்றாகக் காண்பித்தார்- தேநீர்க் கிண்ணங்கள், தேயிலைத்தூளை எடுக்கும் கரண்டி, அதனை நீரில் கலக்கும் ஸ்ப்ரிங் (whisk) போன்ற கரண்டி- பின் அவற்றை நளினமான அமைதியான அசைவுகளுடன், அழகாகச் சுத்தம் செய்தார். ஒவ்வொரு கிண்ணம் தேநீருக்கும் மூன்று கரண்டிகள் ‘மட்சா பச்சைத் தேயிலைப் பொடி’யை  (Matcha green tea powder) அளந்து போட்டார். வெந்நீரை ஊற்றி ஸ்ப்ரிங் போன்ற கரண்டியால் அதனைக் கலந்தார். இன்னும் நீரை ஊற்றிக் குடிக்கும் பக்குவத்திற்குக் கொண்டு வந்து நமக்குக் குடிக்கத் தருகிறார்.

          இதனித் தரப்பட்ட உடனே எல்லாம் குடித்து விடக் கூடாது. முதலில் அந்தப் பீங்கான் தேநீர்க் கிண்ணத்தின் வடிவமைப்பையும், அதில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்கள், முதலியனவற்றையும் பார்த்து நமது ரசிப்பையும் ஆமோதிப்பையும் தெரிவிக்க வேண்டும். பின்பு சிறிது சிறிதாகத் தேநீரை (பச்சை நிற ஸூப்பை!) அருந்த வேண்டும்! நாங்கள் உடனே கஷாயம் குடிப்பது போலக் குடித்தோம். பழக்கம் இல்லையானால் குடிப்பது கடினம் தான். ஆனால் வீணாக்கினால் விருந்தோம்புபவர் மனது வருந்துமோ என எண்ணிக் குடித்து விட்டோம்!

          3-4 மணி நேரம் நடப்பதாகக் கூறப்படும் இந்தச் சடங்கு, இங்கு 30 நிமிடங்களிலேயே முடிந்து விட்டதால், நிறைய சம்பிரதாயங்கள் குறுக்கப் பட்டோ, மறக்கப்பட்டோ (மறுக்கப்பட்டோ?) விட்டன! பின்பு, இந்தக் கிண்ணங்களை அவர் நம்மிடமிருந்து வாங்கி, நிதானமாகக் கழுவி வைப்பதும் ஒரு கலை! அப்போது அதைக் காண நம்மை இருக்கச் சொல்லவில்லை!!

          தேநீர் அருந்தி முடித்த பின்பு, விருந்தினர்கள் திரும்பக் குனிந்து வணங்கி விட்டு வெளியே செல்ல வேண்டும். ஒரு வயதான அம்மையார் இவ்விதம் தேநீரைத் தயாரித்து எங்களுக்கு வழங்கினார். வெளியே செல்லும் போது அணிந்து கொள்ள வாகாக எனது காலணிகளைத் திருப்பி நேராக வைத்தார். எனது உள்ளம் பதறி விட்டது. நான், “எங்கள் கலாச்சாரப்படி, ஒருவர் காலணியை மற்றவர், எடுத்துக் கொடுக்கக் கூடாது, அவ்வாறு நான் எதிர்பார்ப்பது  மரியாதை ஆகாது,” எனக் கூறிப் புரிய வைத்தேன்.

          மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்ற ஒரு நிகழ்வு, சுமாராகவே இருந்ததால் எங்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தான். எல்லாமே பணத்திற்காக ஓடும் இந்த அவசர உலகில், இந்த ஆன்மீக உணர்வு ததும்புவதாகக் கூறப்படும், அமைதி நிறைந்த தேநீர்ச் சடங்கும் குறுக்கப்பட்டு, அவசர கதியில் நடத்தப்பட்டதைக் கண்டு வருத்தம் தான் மேலிட்டது.

          இந்த உணர்வுடனே நாங்கள் அடுத்த நிகழ்ச்சியான கபுகி (Kabuki) என்னும் ஜப்பானிய இசை நாடகத்தைக் காணச் சென்றோம்.

 

(நன்றி – தாரகை மின்னிதழ்)

 

                                                                                       (தொடரும்)

 

 

 

 

_

 

கண்ணன் கதையமுது -11 – தில்லை வேந்தன்

No photo description available.

( கண்ணன் பிறந்து மூன்று மாதம் ஆன பிறகு அதைக் கோகுலத்தில் கொண்டாடும் நேரத்தில், அவனைக் கொல்லக்  கம்சன் அனுப்பிய சகடாசுரன் வருகிறான்)

                         கோகுலக் காட்சிகள்

மூன்று மாதக் குழந்தையான கண்ணன் குப்புறத்திக் கொள்ளல்

 

செப்புயர் மூன்று திங்கள்

      சென்றபின் குழந்தைக் கண்ணன்

குப்புறத் திரும்பும் போதும்

     குளிர்தரை தவழும் போதும்

கப்பிய அழகில் உள்ளம்

     களித்தவக்  கோகு லத்தார்

இப்புவிப் பிறவிப் பேற்றை

     எளிதினில் அடைந்தார் ஆங்கே!

 

                                கவிக்கூற்று   

 (கவிஞர்,தன்னை யசோதையாகக் கற்பனை செய்து பாடியவை )       

Krishan's mother telling bedtime stories to Krishna. | Krishna painting, Bal krishna, Lord krishna images

                   

          1)    விளையாட அம்புலியை அழைத்தல்

(குழந்தைக் கண்ணன் தவழ்ந்து போய் நிலவைக் காட்டுகிறான்.

அவனோடு விளையாட வருமாறு  அம்புலியை அழைத்தல் )

 

தவழ்ந்து தவழ்ந்து சிறுகுட்டன்

     தரையில் புழுதி அளைகின்றான்

அவிழ்ந்த வெள்ளை  விண்மலராய்

     அழகு தோன்றும் அம்புலியே

கவிழ்ந்து கொண்டு கைகாட்டிக்

     கண்ணன் அழைத்தல் காணாயோ

குவிந்த முகிலின் கூட்டத்தைக்

      கொஞ்சம்  விலக்கி வாராயோ

 

குழலை யாழை ஒத்திருக்கும்

     குதலைச் சொல்லால் அழைக்கின்றான்

அழவும் அவனை விடுவாயோ

     அங்கே நின்று கெடுவாயோ

முழவு மேளம் வரிசங்கம்

      முழங்க ஆடல் பாடலென

விழவு மன்னும் கோகுலத்தில்

     விரும்பி ஆட  உடனேவா

          ( குதலை  – மழலை,)

 

குழந்தை என்று மதியாமல்

       குளிர்ந்த முகிலுள் உறங்குதியோ

செழுந்த ளிர்க்கை நீட்டியுனைச்

      சிரித்து மகிழ அழைக்குமவன்

எழந்து வெகுண்டால் பாய்ந்துன்னை

     இழுத்துப் பற்றிக் கொடுவருவான்

விழுந்த  மதியாய்  ஆகாமல்

     விரும்பும் மதியாய் விளையாடு

 

மழலை மிழற்றும் கிண்கிணியின்

     வளரும் ஓசை செவிமடுத்து

நழுவி இறங்கும் உன்வரவால்

     நகைத்துக் கண்ணன் மகிழ்வானேல்

முழவை வான இடியொலிக்கும்

     மூடும் முகிலை மினல்கிழிக்கும்

உழவும் சிறக்க மழைபிறக்கும்

     ஊரும் உலகும் நனிசெழிக்கும்

 

 2)குழந்தையின் தளர்நடை கண்டு மகிழ்தல்

 

காலின் சதங்கை மணியொலிக்கக்

     களிற்றின் கன்றாய் அசைந்துசெலும்

ஆலின் இலையாய் குறுநடையாய்

     ஆடல் வெல்லும்  அணிநடையாய்

பாலின் கடலில் பாம்பணைமேல்

      படுத்துக் கிடந்த  பரந்தாமா

சால அழகுத் தடம்பதிக்கும்

      தளிரே மயக்கும் தளர்நடையாய்!

 

                     3)  நீராட்டல்

உடல் அழுக்கு நீங்க நீராடச் சொல்லல்

 

 காராடும் வண்ணா உன்றன்

      களைத்தவுடல் முழுதும் பூழி

ஊரோடி உண்ட ளைந்த

      உறிவெண்ணெய் நாறும் மேனி

தாராடும் தேய்வை மார்பில்

      தரையுருண்டு  சேர்ந்த சேறு

நீராட  வேண்டும் வாராய் 

      நிற்பாயே ஓட வேண்டா!

 

     (காராடும் – கருமை தங்கும்)

                ( பூழி ,-  புழுதி)              

                 (தார் மாலை)

       (தேய்வை,- சந்தனக் குழம்பு)

 

 

இளம் பெண்கள் கேலி பேசுவர் என்று கூறுதல்

நிற்பரே  கூட்ட  மாக

       நின்னுடல் புழுதி கண்டு

பொற்றொடி சிறிய பெண்கள்

      புறத்திலே கேலி  பேசி.

இற்புறம் போக வேண்டா

      இன்றுநீ ராட வாவா

பொற்புறு சுவைசேர் அப்பம்

      புசிக்கலாம் குளித்து விட்டு!

 

 ( பொற்றொடி- பொன்வளையல்)

  ( இற்புறம் – வீட்டை விட்டு வெளியே)

 

கண்ணன் ஜன்ம நட்சத்திர விழா

 

பேரைச் சொல்ல வந்தபிள்ளை

     பிறந்த நாள்மீன் சிறப்பாக

ஊரை அழைத்துக்  கொண்டாடி

     உவகை அடைந்தாள் யசோதையன்னை.

ஓர  மாகத்   தோட்டத்தில்

      உயர்ந்த வண்டி ஒன்றின்கீழ்ச்

சீராய் அமைந்த தொட்டிலிலே

      சின்ன மகனை  உறங்கவைத்தாள்!

 

  (பிறந்த நாள்மீன் – ஜன்ம நட்சத்திரம்)

              (நாள்மீன்- நட்சத்திரம்)

 

     கம்சன் சகடாசுரனை ஏவுதல்

 

குழந்தைக் கண்ணன்  அரக்கியுயிர்

     குடித்த செய்தி கேட்டவுடன்

செழுந்தீச் சினத்தால் ஆத்திரத்தால்

     சிந்தை மிகுந்த அச்சத்தால்

உழந்தான் கம்சன், சக்கரத்தின்

     உருவம் எடுத்துப் பெருங்கொலைகள்

விழைந்து புரியும்  கொடியவனை

     விரைவாய் உடனே வரச்சொன்னான்.

    

சக்கரத்தான் தனைக்கொல்லச் சகடத்தான் துணைகொள்ள

அக்கணத்தில் முடிவெடுத்த அரக்கனவன்  ஆணையிடக்

கொக்கரித்து வந்தடைந்தான் குழந்தையுயிர் போக்குதற்குத்

தக்கதொரு வழியுண்டு  தவறாமல் முடிப்பனென்றான்

    (சக்கரத்தான் — சக்கரப் படை கொண்ட கண்ணன்)

                            ( சகடத்தான் – சகடாசுரன்)

 கோகுலம் வந்த சகடாசுரன் வண்டிச் சக்கரத்துள் புகுதல்

enter image description here

 

விருந்தினர் பேண மங்கை

      விழைவுடன் சென்றாள். வஞ்சப்

பருந்தென அரக்கன் வந்தான்

      பாலகன் உறங்கக் கண்டான்.

குருந்தினைக் கோழிக் குஞ்சாய்க்

      கொல்லவே எண்ணி அங்குப்     

பொருந்தியே வண்டிக் காலுள்

      புகுந்தவன் மறைந்து கொண்டான்

 

                 ( மங்கை – யசோதை,)

                 (குருந்து – குழந்தை)  

    ( வண்டிக் காலுள் – வண்டிச் சக்கரத்துள்)

 

(தொடரும்)

 

 

 

 

 

 

ஆரணங்கா அல்லது ஆக்ரோஷப் புலியா ? – தமிழில் கமலா முரளி

மூலக்கதை : ப்ரான்க் ஸ்டாக்டன்              தமிழில் : கமலா முரளி

 

The Lady, or the Tiger? Study Guide

 

Amazon.com: The Lady, or the Tiger? eBook : Frank R. Stockton: Kindle Store

[ ஒரு கதவுக்குப் பின்னே கொலைப்பசியுடன் காத்திருக்கும் புலி. மற்றொரு கதவுக்குப் பின்னாலோ மனம் மயக்கும் அழகி ]

முன்னொரு காலத்தில் , விசித்திர குணங்கள் கொண்ட, மிருகத்தனம் பொருந்திய மன்னன் ஒருவன் இருந்தான். எந்த அளவுக்கு மிகச் சிறந்த மனவுறுதியும், பிடிவாதமும் கொண்டு இருந்தானோ அந்த அளவுக்கு கடுமையான , மோசமான கற்பனையும் கொடுரமும் நிறைந்தவன் அவன்.

ஒவ்வொரு நாளும் அவன் தர்பாரில் நியாய ஆலோசனை நடக்கும்.அவனும் அவனுமே அந்த ஆலோசனையில் பங்கு பெறுவர் ! ‘அவனாகிய’, ‘அவர்கள்’ எடுக்கும் முடிவுகள் உடனடியாக அமல் படுத்தப்படும். ஏனெனில், அவன் தானே மாட்சிமை பொருந்திய, சகல அதிகாரங்களும் கொண்ட மன்னன் !

ஒரு சில மக்கள் மன்னனின் செயல்கள் விசித்திரமாக, கொடுரமாக இருக்கிறதே எனச் சொல்வதுண்டு ! அவர்களும் மிக மிக மென்மையாகத் தான் சொல்லுவர்  ! அவர்கள் சொல்வது எவர் காதுகளுக்கும் கேட்காது.

குறிப்பாக பொது மைதான அரங்க நிகழ்வு குறித்து இந்த மன்னனின் கருத்து அலாதியானது. பிற நாடுகளில், பொது மைதானத்தில் வீர விளையாட்டுகள் நடைபெறும். மக்கள் கண்டு மகிழ்வர். மதயானைகளுடனும், சிறுத்தை, சிங்கம், புலி போன்ற மிருகங்களுடனும், வீரமிகு இளைஞர்கள் சண்டை செய்வதும் முக்கிய நாட்களில் நடக்கும்.

ஆனால், இந்நாட்டிலோ, இந்த மன்னன், இந்த பொது மைதான அரங்கைக் கூட விசித்திரமாகத் தான் உபயோகித்தான். குற்றவாளிகளைத் தண்டிக்கும், நிரபராதிகளை கௌரவிக்கும் வினோத நிகழ்ச்சி !

ஒருவன் மேல் குற்றம் சாட்டப்படுகிறது. அந்தக் குற்றம் மன்னனின் தனிக் கவனத்தைக் கவர்ந்துள்ளது என்றால்,தனி அறிவிப்பு வெளியிடப்படும் – நாட்டில் உள்ள மக்கள் அனைவருக்குமான அறிவிப்பு. எந்த நாளில் குற்றம் சாட்டப்பட்டவன் விசாரிக்கப்படுவான் என்பது பற்றிய அறிவிப்பு ! அந்நாளில் நாட்டு மக்கள் அனைவரும் அரங்கில் கூட வேண்டும் என்பதும் அறிவிக்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட நாளில் மைதானத்தில் திரள் திரளாக மக்கள் கூடுவர். குடிமக்கள் நிறைந்த அரங்கத்தில்,மந்திரிமார் புடை சூழ மன்னவன் நுழைந்து, மக்களின் உற்சாக வரவேற்பில் மகிழ்வுற்று, ஓங்கி நிற்கும் தன் சிம்மாசனத்தில் அமர்வான். மந்திரிகளும் அரசவையைச் சார்ந்தவர்களும் தத்தம் இருக்கையில் அமர்வர்.

மன்னனின் சமிஞ்ஞை கிடைத்ததும், குற்றம் சாட்டப்பட்ட மனிதன் அரங்கத்துள் வருவான். மன்னவனின் சிம்மாசனத்தின் எதிர்புறத்தில் இரண்டு கதவுகள் இருக்கும்.அடுத்தடுத்து அமைந்திருக்கும் இரு கதவங்களும் ஒரே அச்சில் வார்த்தாற் போல் ஒரே மாதிரியாக இருக்கும்.

குற்றம் சாட்டப்பட்டவன் அந்த இரு கதவுகளுக்கு அருகே சென்று, ஏதேனும் ஒரு கதவைத் தேர்ந்தெடுத்து திறக்க வேண்டும். அவன் விருப்பம் தான் ! இரண்டில் எதை வேண்டுமானாலும் திறக்கலாம்.எந்தக் கதவைத் திறக்கலாம் என்பதற்கு யாரும் அவனுக்கு உதவ மாட்டார்கள்.

அந்த இரு கதவுகளின் ஒன்றின் பின்னால் ஆக்ரோஷமான கொலைவெறியுடன் கூடிய புலி இருக்கும். அந்தக் கதவை அவன் திறந்து விட்டால், புலி சீறிப் பாய்ந்து, அவனைச் சின்னா பின்னமாக்கி, அடித்துக் கிழித்து எறியும். அது அவன் செய்த குற்றத்துக்குத் தண்டனையாகக் கருதப்படும். இரும்பு மணிகளின் சத்தத்துடன், சோகக் கதறல்களுடனும் ஒரு கோரமான நிகழ்வைக் கண்டதனால், நெஞ்சை அடைக்கும் பீதியுடன் மக்கள் தலையைக் குனிந்தபடி வெளியேறுவர்.

ஆனால், குற்றம் சாட்டப்பட்டவன் இன்னொரு கதவைத் திறந்து விட்டால், அங்கே அவன் வயதுக்கும் தகுதிக்கும் ஏற்ற பெண்ணொருத்தி காத்திருப்பாள். மன்னவன் கைகளைத் தட்ட உடனடியாக மதகுரு அங்கே வந்துவிடுவார். அம்மனிதனுக்கும் அப்பெண்ணுக்கும் உடனடி விவாகம் அங்கே ! அப்போதே ! பொது அரங்கில் ! எல்லோர் முன்னிலையில் ! இன்னிசை முழங்கும், மக்கள் கூட்டம் உற்சாகமாய் குரல் கொடுத்து, மணமக்கள் வரும் பாதையில் மலர் தூவுவர்.

அம்மனிதன் முன்பே மணமுடித்தவனா ? அவன் குடும்பம் என்ன ? வேரு யாரையாவது மணமுடிக்க விரும்புகிறானா ? – இந்தக் கேள்விகளைப் பற்றி ஆணையிட்ட மன்னனுக்குக் கவலையில்லை.

சிறை பிடிக்கப்பட்டவன் குற்றமுள்ளவன் என்றால், தண்டனையாக, புலியின் பிடியில் அகப்பட்டுச் சாக வேண்டும். நிரபராதி என்றால், அதற்குப் பரிசாகத் திருமணம். இதுவே மன்னனின் விசித்திரமான குருரமான நீதி வழங்கும் முறை !

மன்னன் இந்த நீதி வழங்குதலை மிக நியாயமானது எனக் கருதினான். இதில் எந்த பாரபட்சமும் இல்லை ! தெளிவான தீர்ப்பு ! எந்தக் கதவுக்குப் பின் என்ன இருக்கும் என்பது பரம ரகசியம் ! ராஜ ரகசியம் !

குற்றம் சாட்டப்பட்டவனுக்கு எந்தக் கதவைத் திறக்க வேண்டும் என்பதற்கு எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. உறுதியான கதவுகள் மற்றும் இரும்புத்திரைகள் கொண்ட அந்த கதவுகளுக்குப் பின் என்ன இருக்கிறது என்பதை அவனால் அறியவே முடியாது.

சுதந்திரமாக,சுயாதீனமாக அவன் எடுக்கும் முடிவின் படி அவனாகவே ஒரு கதவைத் திறக்கிறான்.

“ஆரணங்கோ … ஆக்ரோஷப் புலியோ… அதை அவன் விதி முடிவு செய்யும்.

 

மக்களும் இந்த தீர்ப்பு வழங்கும் முறையை சற்று ரசித்தனர் என்றே சொல்ல வேண்டும். என்ன நடக்கும் என்று யாராலும் யூகிக்க முடியாது – கதவு திறக்கும் வரை ! கோரமான கொலையா அல்லது கோலாகலமான கல்யாணமா ?  யாருக்கும் தெரியாது !

அந்தக் காட்டுமிராண்டி ராஜாவுக்கு ஒரு அழகிய மகள் இருந்தாள். தந்தையைப் போலவே துடிப்புள்ள, அதீத கற்பனையுள்ள , மிருக வெறித்தனம் உள்ள பெண். தன் மகள் மீது உயிரையே வைத்திருந்தான் மன்னன். அவளோ, தன் தந்தையின் சொற்படி நடப்பதில்லை. முக்கியமாக, தன் மனம் விரும்பிய மணாளனைத் தேர்ந்தெடுக்க நினைத்தாள் ! மன்னனின் விருப்பத்துக்கு மாறாக ! அவள் காதலனை, அவர்கள் காதலை மன்னன் ஏற்கவில்லை.

 

அந்த இளைஞன் மன்னனின் அடிமைகளில் ஒருவன். வீரமும் அழகும் பொருந்தியவன். அடிமை மீது இளவரசிக்கு ஆழமான காதல் !

அவர்களது காதல், சில மாதங்களை எவ்வித பிரச்சினையும் இன்றி கடந்தது. ஆயினும், மன்னன் அனைத்து விவரங்களையும் அறிந்தவுடன், அந்தக் கட்டழகனைச் சிறையில் தள்ளிவிட்டான். பொது மைதான அரங்கத்தில் ‘தீர்ப்பு வழங்கும் நாள்’ அறிவிக்கப்பட்டது.

எல்லா வழக்குகளையும் விட, இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது.- மன்னனுக்கும் , மக்களுக்கும் !- இதுவரை எந்த அடிமையும் இளவரசியைக் காதலித்ததில்லையே !

மிக மிக ஆக்ரோஷமான புலியைத் தேடி வர ஆட்கள் அனுப்பப்பட்டனர். அது போலவே, கட்டிளங்காளைகேற்ற வனப்பு மிகுந்த அழகியும் தேர்ந்தேடுக்கப்பட்டாள். அந்தச் சிறந்த ஆணழகனைப் புலி  அடிக்காவிட்டால், அவன் மணக்க வேண்டிய பெண் பேரழகியாக இருக்க வேண்டுமே ! அலசி ஆராய்ந்து ஒரு பேரழகியும் தெரிவு செய்யப்பட்டாள்.

அவனது குற்றம் என்ன என்று நாடே அறிந்திருந்தது. இளவரசியின் மீது காதல் ! தன் காதலை அந்த இளைஞன் பகிரங்கமாகவே அறிவித்திருந்தான். ஆனால், மன்னன் அதைக் குற்றமாகக் கருதினான். பொதுத் தீர்ப்பாக அரங்கத்தில் நடக்கும் நிகழ்வின் நடுநிலைத்தன்மை பற்றி மன்னனுக்கு மாறாத நம்பிக்கை ! பிரியம் ! பெருமை ! மேலும், அந்த இளைஞன் புலியால் கொல்லப்படுவான் அல்லது வேறொரு அழகியைத் திருமணம் செய்து கொள்வான். இரு வழிகளிலும், அவன் இளவரசி வாழ்வில் இருந்து வெளியேற வேண்டியது தான்.

நிர்ணயித்த நாளும் வந்தது. அரங்கில் வரலாறு காணாத கூட்டம் இடிபாடுகள், நெரிசல்கள். உள்ளே வர இயலாமல், அரங்கின் வெளியேயும் மக்கள் வெள்ளம், என்ன நடக்கிறது என்பதை அறிய முண்டியடுத்துக் கொண்டு… ! மன்னனும் அரங்கத்துக்குள் வந்தாயிற்று. அரசவைப் பரிவாரங்கள் இருக்கைகளில் அமர்ந்தாயிற்று. மன்னனின் உத்தரவு கிடைத்ததும், இளவரசியின் காதலன், அரங்கத்துக்குள் வந்தான்.

அடிமையா ? இல்லவே இல்லை . ஆணழகன். இளமையும் வீரமும் பொருந்திய கட்டழகன் ! என்ன துர்ப்பாக்கியம் ! இந்த அரங்கத்தில் நிற்கிறானே ! சில நொடிகளில் அவன் வாழ்வு முடிந்திடுமோ? மைதானத்தில் அவன் நடந்த அழகில் அரங்கமே சொக்கியது.

மன்னனின் சிம்மாசனத்துக்கு எதிரில் வந்து வணக்கத்தைச் சொன்ன அவன் கண்கள், அவன் முழுக்கவனம், மன்னன் அருகில் இருந்த இளவரசியின் மீது இருந்தது.

பல வாரங்களாக இளவரசி வேறெந்த நினைவுமின்றி, இந்த பொது அரங்க தீர்ப்பு நாளைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தாள். யோசித்து, யோசித்து, இதுவரை இந்நாட்டில் யாரும் செய்யாத ஒன்றை இளவரசி செய்திருந்தாள்.

ஆம் ! பரம ரகசியத்தை … ராஜ ரகசியத்தை அவள் தெரிந்து கொண்டுவிட்டாள். அவளுக்குத் தெரியும், அந்த இரு கதவுகளில் எந்தக் கதவுக்குப் பின் என்ன இருக்கும் என்பது ! ‘இளவரசி என்ற அதிகாரமும், அவள் தந்த பொன்னும் அவளுக்கு அந்த ரகசியத்தைத் தந்துவிட்டது.

எந்தக் கதவின் பின்னால் ஓர் ஆரணங்கு இருக்கிறாள் என்ற ரகசியம் மட்டுமல்ல, அந்த அழகி யார் என்ற உண்மை கூட இளவரசிக்குத் தெரியும். அரண்மனையின் அழகிகளில் அவளும் ஒருத்தி ! இளவரசிக்கு அவள் மேல் வெறுப்பு இருந்தது.

தனது காதலனாகிய அந்தக் கட்டழகு இளைஞனை, அந்த அழகி அடிக்கடி பார்க்கிறாள், ஏன், தன் காதலனின் கண்கள் கூட அந்த அழகியை நோக்குகிறதோ என அவள் சில வேளைகளில் நினைத்துண்டு .

ஒருமுறை இருவரும் பேசிக்கொண்டிருப்பதைக் கூட பார்த்திருக்கிறாள். ஒன்றுமில்லா விஷயமாகவும் இருக்கலாம். “பற்றிக்” கொள்ளும் விஷயமாகவும் இருக்கலாமே ? யாருக்குத் தெரியும் ? இன்று அவள் தான் ஒரு கதவின் பின்னால் நிற்கிறாள்.

அரங்கில், அந்தக் கட்டழகன், இளவரசியின் காதலன், இளவரசியை நோக்க, அவனது மின்னல் பார்வை அவள் முகத்தை ஆராய்ந்தது. “ அவளுக்குத் தெரிந்துவிட்டது—கனவுகளின் ரகசியம்” என்பதை உணர்ந்தான்.  

காதலர்களுக்கே உரித்தான ப்ரத்யேக ஊரறியா கண் ஜாடை !

“எது ?”

நேரம் கடத்த முடியாது. உடனடியாகப் பதில் வேண்டும்.

அந்த அரை நொடி வேளையில், இளவரசியின் கை சற்றே உயர்ந்து, வலது திசைப் பக்கம் வளைந்ததை, பரபரப்பான, திகிலான சூழலில், மதி மயங்கிய அனைவரும் கவனிக்கவேயில்லை ! அவள் காதலனுக்கு மட்டும் அவள் ‘பதில்’ புரிந்தது.

தனது நடையில் எந்தவித தயக்கமுமின்றி, இளைஞன் கம்பீரமாக நடந்து, வலது பக்கத்துக் கதவைத் திறந்தான்.

கதையின் திருப்பம் – முடிவு என்ன ? – ஆக்ரோஷமான புலியா – ஆரணங்கா ?

_ இதைப் பற்றிச் சிந்திப்பதும் ஒரு முடிவு எடுப்பதும் மிகக் கடினம் தான் . மனித மனத்தின் இயல்புகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்வது கடினம் அல்லவா ?

 

 

_ சிந்தித்துப் பாருங்களேன் !

மன்னனின் மகள் ! விசித்திரமான, குரூர எண்ணங்கள் உள்ள மன்னனின் மகள் ! அதே குணங்கள் அவளுக்கும் உண்டு !

அவள் மனதிலோ அந்த ஆரணங்கைப் பற்றிய வெறுப்பு ! தனக்குக் கிடைக்காத தன் காதலன், இன்னொருத்தியுடன், அதுவும் இந்த அழகியை மணமுடிப்பதை இளவரசி மனம் ஏற்குமா ?

புலியின் கதவு திறக்கப்பட்டு, புலியும் காதலனும் மைதானத்தில் புரண்டு, புரண்டு, புலி அந்த ஆணழகனைப் பிய்த்து எறிவதை மனக்கண்ணில் பார்த்து, பார்த்து, முகத்தை மூடிக்கொண்டு, “ இல்லை, இல்லை”, “கொடுரம்” என இளவரசி பலமுறை “ஐயகோ” என அழுதிருக்கிறாள். தாங்க முடியாத் துயரம் அல்லவா அது ! தன் அன்புக் காதலன் மடிவதை மனம் தாங்குமா ? அவனது காதல் ”குற்றம் ” எனக் கருதப் படுமோ ? மன்னனாகிய தந்தை எக்களிப்பாரோ ?

அந்த ஆரணங்கு இருக்கும் கதவைத் திறந்தால், தன் காதலன் மகிழ்வுறுவானோ ! மதகுரு திருமணத்தை நடத்தி வைக்க, மக்கள் உற்சாகமாகக் கூச்சலிட, தான் மட்டும் இலவு காத்த கிளியாக அமர நேருமோ?

 

_ இதையெல்லாம் நினைத்து தவித்துப் போயிருக்கிறாள் இளவரசி.

அந்தப் பொது அரங்கில், தன் காதலன் “ரகசிய சம்பாஷணையில்”, கண் அசைவில், “எந்தக் கதவு ?” எனத் தன்னைக் கேட்பான் என்பதை அவள் அறிந்திருந்தாள். அதற்கு என்ன பதில் கூற வேண்டுமெனவும் அவள் முடிவும் செய்து வைத்திருந்தாள்.

குழப்பமின்றி, தயக்கமின்றி அரை நொடியில் தன் பதிலைத் தந்துவிட்டாள். காதலனும் அவள் சொன்னக் கதவைத் திறப்பதற்கு எந்த வித சலனமும் இன்றிச் செல்கின்றான்….

வாசகர்களே ! நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்  ! அந்தக் கட்டழகன் கதவைத் திறந்ததும், வெளியே வந்தது…

“ஆரணங்கா ? ஆக்ரோஷப்புலியா ?”

                                       

 

 

 

குட்டீஸ் லூட்டீஸ் – கொஞ்சம் சிரித்து வையுங்க பாஸ் – சிவமால்

Himanshul Bansal, 24, Dies Racing Superbike In Delhi, Accident Caught On Camera

 

அதுவும் சரிதானே…!

‘நான் ஆன மட்டும் சொன்னேன் என் நண்பன் சாரதியிடம் அவன் பார்த்து வைத்திருந்த பையன் வேண்டாம். என்னுடைய மாமா பையனுக்கு அவன் பெண்ணைக் கட்டிக் கொடுன்னு.. அவன் கேட்கலே.. இப்போ அந்த மாப்பிளைப் பையன் ஒரு ஆக்ஸிடன்ட்லே போய்ட்டானாம். என் மாமா
பையனைக் கட்டிட்டிருந்தா அந்தப் பெண் நல்லா இருந்திருப்பா பாவம்’ என்றேன் என் மனைவியிடம் ஆதங்கத்தோடு.

அருகில் இருந்த மிதிலா, ‘அப்பா.. அந்த அக்காக்கு இது மாதிரி ஆகணும்னு விதிச்சிருக்கு. அதனாலே அந்த அங்கிள் ஆக்ஸிடன்ட்லே போய்ட்டாரு… இப்போ உங்க மாமா பையனுக்கு கட்டிக் கொடுத்திருந்தா உங்க மாமா பையனுக்கு இந்தக் கதி ஏற்பட்டிருக்கலாம்.. எதெது எப்படி எப்படி நடக்-
கணுமோ அதது அப்படி அப்படி நடக்கும்பா..’என்றாள் பெரிய மனுஷித்தனமாக.

நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி இருந்தது எனக்கு.

அதுவும் சரிதானே..!!

 

————————————————————————————

‘தொட்டுக் கொள்ள…!!’

மனைவி : அட ராமா.. அப்பளாத்தைப் பொரித்து பை மிஸ்டேக் யூஷ¤வலா போடற டப்பாவுலே போடாம வேறே புதிய டப்பாவுலே போட்டு வெச்சிருக்கேனே.. என்னங்க மதியம் சாப்பாட்டுக்கு என்னத்த தொட்டுட்டு சாப்பிட்டீங்க

கணவன் : லஞ்ச் அவர்லே நீ ·போன் பண்ணி என்ன சொன்னே.. ‘சாதம் குக்கருக்குள்ளே இருக்கு. குழம்பு ·ப்ரிட்ஜ்லே இருக்கு. தொட்டுக்க..
மறக்காம கிச்சன் ஷெல்·ப்லே உள்ள அப்பளா டப்பாவை எடுத்து வெச்சுக்கங்க’ன்னு சொன்னியா.. அப்பளா டப்பாவை எடுத்துப்
பார்த்தேன்.. அதிலே அப்பளாம் இல்லே.. ஒரு வேளை அப்பளா டப்பாவை அப்படியே தொட்டுட்டு சாப்பிடுங்க’ன்னு சொன்னியாக்கும்னு ஒரு கையாலே அப்பளா டப்பாவைத் தொட்டுண்டு இன்னொரு கையாலே எப்படியோ சாப்பிட்டு முடிச்சேன்..

மனைவி : !!!

 

————————————————————————————

சரித்திரம் பேசுகிறது – யாரோ

Rajendra Cholan being blessed by his father,Gangaikanda Cholapuram,1014AD

ராஜேந்திரன்

 

புலிக்குப் பிறந்தது என்ன?
புலிதான்.
இந்தப்புலியும் பாய்ந்தது.
இந்தியாவை வென்றது।
கடல் கடந்தும் வென்றது.!
சென்ற இடங்களெல்லாம் புலிக்கொடி நாட்டியது।
ராஜராஜன் பதினாறு அடி பாய்ந்தான்.
ராஜேந்திரன் முப்பத்திரண்டு அடி பாய்ந்தான்.
ராஜராஜன் செய்தது இமாலயச் சாதனை.
ராஜேந்திரனும் அதே போல சாதனைகள் செய்தான்.
அவன் சரித்திரத்தைப்பற்றிப் பேசலாமா நேயர்களே?
பொன்னியின் செல்வனுக்கும், வானதிக்கும் பிறந்தவன் ராஜேந்திரன்.
ராஜராஜன் தன் மகனுக்கு மதுராந்தகன் என்று தனது சிற்றப்பன் பெயரை வைத்தான். தாத்தா சுந்தர சோழர் போலவே, அவன் அழகில் மன்மதன் போல இருந்தான். 1012 வருடத்தில் ராஜராஜன் ஆட்சியின் இறுதிக்காலத்தில், மதுராந்தகன் இளவரசுப்பட்டம் கட்டப்பெற்றான். அப்பொழுது அவனுக்கு ‘ராஜேந்திரன்’ என்ற பட்டாபிஷேகப் பெயர் வழங்கப்பட்டது. ராஜேந்திரன், ராஜராஜனுடன் சேர்ந்து நாட்டின் ஆட்சியை நிர்வாகம் செய்தான்.

வருடம்: 1014.

ராஜராஜன், புகழுடன் பிறந்து, புகழுடன் வளர்ந்து, புகழுடன் காலமானான். ராஜேந்திரன் மன்னனாகப் பட்டாபிஷேகம் செய்து கொண்டான். பதவி ஏற்ற எட்டாம் ஆண்டில், தனது மூத்த மகன் ராஜாதிராஜனை யுவராஜாகப் பட்டமளித்து, நாட்டு ஆட்சியைப் பகிர்ந்து கொண்டான்.

ராஜேந்திரன் படையெடுத்து வென்ற இடங்களைப்பற்றிப் பேசுவது என்பது சில அத்தியாயங்களில் அடங்காது. ஈழம், பாண்டிய நாடு, சேர நாடு, மேலைச்சாளுக்கிய நாடு, வட நாடு, வங்காளம், மற்றும் கடல் கடந்து ஸ்ரீவிஜயம் வரை அவன் வென்ற இடங்கள் எண்ணிலடங்காது. பொன்னியின் செல்வன் கதையில் குடந்தை சோதிடர் சொன்னது போல -வானதியின் மகன் சென்ற இடங்களெல்லாம் புலிக் கொடி பறந்தது.

ராஜேந்திரனின் மெய்கீர்த்தி – பெரிய மெய்கீர்த்தி. மெய்கீர்த்தியில் ராஜேந்திர சோழன் போரிட்டு ஜெயித்த நாடுகளின் பட்டியல் இருக்கிறது. என்னென்ன நாடுகள் என்று தெரிந்துகொள்வதற்கே ஒரு ஆய்வு தேவை..

ராஜேந்திரன் ஆட்சிக்கு வந்த மூன்றாம் வருடம்:
ராஜேந்திரன் வென்ற இடங்களைப் பட்டியல் போடுவோம்.

Rajendra Chola I |

 • கிருஷ்ணா-துங்கபத்ரா ஆறுகளுக்கு இடைப்பட்ட ‘இடைதுறை நாடு’ (இன்றைய ராய்ச்சூர் மாவட்டம்)
 • வனவாசிப் பன்னீராயிரம்: மைசூருக்கு வடமேற்குப் பகுதி.
 • கொள்ளிப்பாக்கை: இன்றைய ஹைதராபாத்துக்கு வடக்கே குல்பாக் என்ற ஊர்.
 • மண்ணைக்கடக்கம்: சாளுக்கியரின் தலைநகரமான மானியகேடா
 • ஈழ நாடு
 • பாண்டிய நாடு
 • சேர நாடு
 • வட நாடு
 • வங்காளம்
 • ஸ்ரீவிஜயம்

முதலில் ஈழ நாட்டு வெற்றியை சற்று விளக்கிவிடுவோமா?

ஆட்சிக்கு வந்த மூன்றாம் வருடம்:
ராஜராஜன் காலத்தில் தோற்று ஓடிய சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தன் ரோகண நாட்டில் ஒளிந்திருந்தான். பிறகு படைபெருக்கி, ராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழர் மீது படையெடுத்து, தான் இழந்த ஈழப்பகுதிகளை மீட்க முயன்றான். ராஜேந்திரன் ஈழம் மீது படையெடுத்தான். வென்றான். சிங்கள மன்னருக்கு வழிவழியாக வந்த முடியையும், அன்னவர் தேவியாராது அழகிய முடியையும் (முடி என்றால் தவறாக நினைக்க வேண்டாம்!! அது கிரீடம் தான்!!) கொண்டு வந்தான்.

நூறு வருடத்துக்கு முன், பாண்டிய மன்னன் மூன்றாம் ராஜசிம்மன், பாண்டியரின் மணி முடியையும், இந்திரன் ஆரத்தையும் ஈழமன்னரிடம் அடைக்கலாமாகக் கொடுத்து வைத்திருந்தான். அப்பொழுது, பராந்தகசோழன், அந்த மணி முடியையும், இந்திரன் ஆரத்தையும் ஈழத்திலிருந்து கொண்டு வருவதற்காகவே படையெடுத்துச் சென்றான். கிடைக்காமல் ஏமாற்றமடைந்தான். அதன் பிறகு வந்த எல்லா சோழர்களும் ஈழத்தில் அதைத் தேடி கிடைக்காமல் சோர்ந்தனர். பொன்னியின் செல்வனின் கதையிலும் அந்த தேடல் நடந்திருந்தது. ராஜராஜ சோழனுக்கும் கிடைக்கவில்லை. ராஜேந்திரன் அவற்றைக் கைப்பற்றினான்.
சோழர் கல்வெட்டுகள் சோழர் பெருமையாக கூறும்.
அதுபோல ஈழத்தின் மகாவம்சம் என்ற நூல் சிங்களப் பெருமையைப் போற்றிக் கூறும். ஒரே வெற்றியை இரு தரப்பும் தங்கள் பாணியிலும் கூறுவர். சரி.. கொஞ்சம் மகாவம்சம் ராஜேந்திரன் படையெடுப்பைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?

“ராஜேந்திரனின் படைவீரர்கள் ஈழநாட்டின் பல இடங்களில் கொள்ளையிட்டு, பொன்னும், மணியும், அணிகலன்களும், பல பொற்படிமங்களும் கவர்ந்தனர். மேலும் போரில் சோழ வீரர்கள் புறங்காட்டி ஓடி ஒளிந்து, சிங்கள வேந்தனை உடன்படிக்கை செய்துகொள்வதற்கு அழைப்பது போல வருவித்துச் சிறைப்பிடித்து, அப்பொருட்களோடு சோழ நாட்டுக்கு அனுப்பி விட்டனர்.”

இது மகாவம்சத்தின் கூற்று.
இதைப்படிக்கும் தமிழ் வாசகர்கள் கோபம் கொள்ளவேண்டாம்.
நான் சதாசிவப்பண்டாரத்தார் எழுதியதைத் தான் சொல்கிறேன்.
சோழர் கல்வெட்டுகள் சோழரின் வீர வெற்றியைத்தான் குறிக்கிறது.

சரி.. நாம் தொடர்வோம்.
ஈழவெற்றிக்குப் பிறகு, சிங்கள மன்னன் ஐந்தாம் மகிந்தன், சிறைப் பிடிக்கப்பட்டு, சோழ நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டான். சோழ நாட்டில், பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து 1029 வருடத்தில் மாண்டான். ஈழ நாடு முழுவதும் சோழர் வசப்பட்டது.

மகாவம்சம் மேலும் சொல்கிறது (ஆஹா ..மறுபடியும் மகாவம்சமா? வாசகர்களே, சற்று சாந்தமாகப் படியுங்கள்).
மகிந்தன் மகன் காசிபனை ஈழத்து மக்கள் மறைவாக வளர்த்து வந்தனர். அவன் தந்தை மகிந்தன் 1029ல் சோழநாட்டில் இறந்த போது, ஈழ மக்கள் காசிபனை மன்னனாக முடி சூட்டினர். காசிபனும் படைதிரட்டி ஆறு மாதம் சோழப்படைகளுடன் போர் செய்து, ஈழத்தின் தென் கிழக்கில் இருக்கும் ரோகண நாட்டைக் கைப்பற்றினான், விக்கிரமபாகு என்ற பட்டப்பெயருடன் 12 வருடம் ஆட்சி செலுத்தினான்.
இதைச் சொல்வது மகா வம்சம்.

ஈழக்கதை முடிந்தது. இன்னும் எத்தனையோ போர்கள் பற்றியும் அந்த வெற்றிகளைப் பற்றியும் எழுதவேண்டும்.

நான் காத்திருக்கிறேன்.
நீங்களும் காத்திருங்கள்!

 

அதிசய உலகம் -அறிவுஜீவி

‘என் மருந்து என்னிடம்’

Seeing Wonder Through the Eyes of Science - WSJ

‘தலை வலிக்கிறதா?

ஸ்ட்ரெஸ்-ஆ?

அமாய்யா  ஆமாம் .. 

ஆஸ்பிரினை எடுத்துக்கொள்ளுங்கள்!

தலைவலி போய்விட்டதா?’

இது சினிமா ஆரம்பிக்கும் முன் வரும் விளம்பரம் அல்ல.

ஆஸ்பிரின் அல்லது அசட்டைல்சலிசைலிக் அமிலம் (acetylsalicylic acid)) என்பது ஒரு மருந்து. இது பொதுவாக வலிநீக்கியாகவும், காய்ச்சலடக்கியாகவும், வீக்கமடக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

சரி! உங்களுக்கு ஆஸ்பிரின் கிடைத்தது.
அதனால் உங்கள் வலி போயிற்று!

ஆனால் மற்ற உயிரினங்கள், தங்களுக்கு அழுத்தம் (ஸ்ட்ரெஸ்) வந்தால் என்ன செய்யும்?

உதாரணத்துக்கு, ஒரு தாவரம் என்ன செய்யும்?

சரி .. நேரடியாகவே கேட்கிறேன்.

‘தாவரங்கள் தங்களுக்கு ஸ்ட்ரெஸ் வந்தால், ஆஸ்பிரினுக்கு எங்கே போகும்?’

‘ஒரு பைத்தியக்கார டாக்டருக்குப் பைத்தியம் பிடித்தால் அந்த பைத்தியக்கார டாக்டர் எந்த பைத்தியக்கார ..’ என்று வரும் நகைச்சுவை உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

மேலும், என்னை ஒருமாதிரியாக நீங்கள் பார்ப்பது வேறு என் மனக்கண்ணில் விரிகிறது.
‘இப்படி லூசுத்தனமான கற்பனை ஏன்?’ என்றும் நீங்கள் கேட்கலாம். ஆனால் இது இயற்கையில் ஒரு அதிசயம்!

‘தாவரங்கள் தங்கள் உபாதைகளுக்குத் தேவையான ஆஸ்பிரினைத் தாங்களே தயாரித்துக்கொள்ளும்!’

‘இந்த ஆட்டத்துக்கு நான் வரல’ என்று தப்பிக்க முயற்சிக்க வேண்டாம்.

இதைச் சொன்னது நான் அல்ல!

இதைச் சொல்வது உயிரியல் ஆராய்ச்சி!

‘Nature’ என்ற உலகப் பிரசித்தி பெற்ற அறிவியல் பத்திரிகையில் வந்த ஆய்வுக்கட்டுரை சொல்வது இது.

கலிபோர்னியா பல்கலைக்கழகம் உயரியல் ஆய்வாளர் ‘வான் டி வென்’ சொல்வது:
“தாவரங்கள் அழுத்தத்துக்கும், ‘வலி’க்கும் உதவும் பொருட்டு, தாங்களே தங்கள் வலிநிவாராணிகளை உருவாக்கி, உபயோகப்படுத்திக் கொள்கிறது” என்கிறார்.

இயற்கை தான் உயிரினங்களின் தற்காப்புக்கு எத்தனை அம்சங்களைத் தந்திருக்கிறது?

இது ஒரு அதிசய உலகம்!

REFERENCE: 
https://www.sciencealert.com/these-stressed-out-plants-can-self-medicate-by-producing-their-own-aspirin

மன் கீ பாத்! – ரேவதி பாலு

Woman Dentist at Work with Patient Stock Photo - Image of clean, hygiene: 69985394

பல்லாண்டு வாழ்க! என்று மனதிற்குள் வாழ்த்தியபடியே உள்ளே நுழைந்தேன். பல் டாக்டராச்சே! அப்படித்தானே வாழ்த்த வேண்டும்.

இன்று மகத்தான நாள் என்பதால் கூட ஒருவரை கட்டாயம் அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்று ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தார்கள். என் கணவரை கட்டாயப்படுத்தி என்னுடன் இழுத்துக் கொண்டு போனேன். அவருக்கு ஆஸ்பத்திரி என்றாலே அலர்ஜி. ரத்தத்தைப் பார்த்தால் மயக்கம் வந்து விடும். இங்கேயும் ரத்தம் வரும். ஆனால் உங்களால் பார்க்க முடியாது என்றெல்லாம் சமாதானம் சொல்லி அழைத்து வந்து டாக்டருக்கு பின்பக்கம் ஒரு சோஃபாவில் உட்கார்ந்தார். அங்கேயிருந்து பார்த்தால் என்ன நடக்கிறதென்று தெரியும்.

இன்று முக்கியமான நாள். ‘ரூட் கெனால்’ என்று சொல்லப்படும் பல்லின் வேர் சிகிச்சை எனக்கு செய்யப் போகிறார்கள், இரண்டு அடுத்தடுத்த பல்லுக்கு. அதற்கு நடுவே ஒரு சின்ன இடைவெளி இருக்கிறது. அதை இரண்டு முறை பில்லிங் முறையில் நிரப்பியாயிற்று. ஒன்றும் பலிக்கவில்லை. நிற்கமாட்டேன் என்கிறது. அவ்வப்போது விழுந்து விடுகிறது. டாக்டர் இந்த சிகிச்சை பற்றி மிகச் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் சொன்னார். பல் சொத்தையானது அஸ்திவாரம் வரை சென்று விட்டால் அதை சரி செய்ய இந்த ‘ரூட் கெனால்’ சிகிச்சை செய்வார்கள். பல் கூழ் வரை ‘டிரில்’ செய்து பல்லில் இருக்கும் சொத்தை, சீழ் ஆகியவற்றை அகற்றிவிட்டு, அங்குள்ள நரம்பையும் வெட்டிவிடுவார்களாம்.

“அப்போ பல் செத்துப் போய் விடுமே டாக்டர்!” என்று வெகுளித்தனமாகக் கேட்டேன் நான். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு கணம் முழித்த டாக்டர் சுதாரித்துக் கொண்டு, “அதனாலென்ன? அந்தப் பல்லைத் தான் காப்பாற்றி விடுகிறோமே?” என்றார்.

‘செத்த பல்லுக்கு காரியங்கள் செய்து அனுப்பி வைக்காமல், காப்பாற்றுவாராமே?’ என் மைண்ட் வாய்ஸ் தான் – என்று இகழ்ச்சியுடன் அவரைப் பார்த்தேன். அவருக்கு அது கேட்டு விட்டதோ?

‘அம்மா! உங்களுக்கெல்லாம் சிகிச்சை செய்யணும்னா, நான் இன்னோருமுறை டாக்டருக்குப் படித்து விட்டு வந்தால் தான் உண்டு!’ இது டாக்டருடைய மைண்ட் வாய்ஸ். அவர் முகபாவத்திலிருந்து நான் புரிந்து கொண்டது.

‘இந்த முறையாவது சரியாகப் படித்து விட்டு வாருங்கள்!’ இது கீழ் உதடை சுழித்து நான் என் மைண்ட் வாய்ஸில் பதிலளித்தது.

டாக்டர் மரத்துப் போகப் போடப்படும் ஊசி போடும் முன்பே சொல்லி விட்டார். இந்த மருந்து வேலை செய்ய ஆரம்பித்தால் உங்களால் பேச முடியாது. ஏதாவது சொல்ல வேண்டுமானால் கையை தூக்குங்கள் என்று. அதைச் சொல்லும்போது அவர் சந்தோஷமாக சொன்னது போல எனக்கு ஒரு பிரமை. சற்று நேரம் இந்த அம்மா நம்மைக் கேள்வி கேட்டுக் குடையமாட்டார்களேயென்ற சந்தோஷம்.

நரம்பை அறுத்து பல்லின் உயிர் போய் விட்டாலும் அந்த இடத்தை நன்கு சுத்தப்படுத்தி குழியை நிரப்பிவிட்டு மேலே ஒரு மூடியைப் போட்டு விடுவார்களாம். ஈறிலேயே ஊசி போட்டு அந்த இடத்தை மரக்க வைத்தார். வாயை நன்றாகத் திறந்து வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டு டாக்டர் வேறு வேலையாக உள்ளே சென்று விட்டார்.

சுபாவத்திலேயே எல்லோருக்கும் ஓயாமல் அறிவுரைகள், ஐடியாக்கள் சொல்லும் வழக்கமுள்ள என் கணவருக்கு அந்த நேரத்தில் என்னிடம் நிறைய பேச வேண்டும் என்னும் துடிப்பு ஏற்பட்டது. முக்கியமாக நான் அங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி. கையை ஆட்டி ஆக்ஷன் செய்து சப்தம் வராமல் உதடுகளை மட்டும் அசைத்து எனக்கு ஏதோ புரிய வைக்க முயன்றார்.

ஆஸ்பத்திரியில் சப்தம் போடக் கூடாது என்பதாலும், என்னால் பேச முடியாததாலும் அங்கே ஒரு ‘மன் கீ பாத்’ செஷன், அதாங்க ‘மைண்ட் வாய்ஸ் செஷன்’, ஆரம்பித்தது.

மூட முடியாமல் திறந்த வாயுடன் இருந்த எனக்கு உதட்டை சுழித்து, “நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை” என்று கூட பாவனையாக சொல்ல முடியவில்லை. கையை விரித்து கீழும் மேலும் அசைத்து என் நிலைமையை சொன்னேன்.

அதற்குள் உள்ளே போன டாக்டர் வந்து விட்டார். “ஊம்! இன்னும் பெரிசா… இன்னும் பெரிசா….” என்று வாயை அகலப் பிளக்க வைத்தார். சர்க்கஸில் சிங்கத்தின் வாய்க்குள் புகும் நிபுணரின் நினைப்பு தான் எனக்கு வந்தது.

அப்புறம் ஆரம்பித்தது தான் கொடுமை. ஏதோ கூர்மையான இன்ஸ்ட்ருமெண்ட்டை உள்ளே விட்டு ராவும் வேலை ஆரம்பித்தது. நாக்கை வேறு மிகக் கஷ்டப்பட்டு ஒரு பக்கமாகவே வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. மூடவே முடியாத வாய்! ஒரு பக்கமாக நாக்கு! நான் எப்படி இருக்கேன்னு கண்ணாடியில் பார்க்கலாமான்னு ஒரு நெனைப்பு வேறு மனதில் ஓடிற்று. டாக்டர் அசந்தர்ப்பமாக என்னைப் பார்த்து பெரிதாக ஒரு புன்னகை பூத்தார்.

“உங்களுக்கு க்ரௌன் வைக்கப் போறோமே!” என்றார் பெருமிதமாக. எனக்கு சத்தியமாக ஒன்றும் புரியவில்லை. நான் எந்த அழகிப் போட்டியிலும் கலந்து கொள்ள வில்லையே, அப்படியிருக்க ஒரு கிரீடம் எனக்கு எப்படி சாத்தியம்? என்ற கேள்வி என் அகல விரிந்த கண்களில் வியப்பாகத் தொக்கி நிற்க, அதைக் கண்டு பிடித்த என் கணவர், ‘இப்படியெல்லாம் வேற உனக்கு ஆசையா?’ என்று மைண்ட் வாய்ஸ் ஒலிக்க, ஏளனமாக முகத்தில் ஒரு பாவம் காட்டினார்.

வாய் முழுவதும், கன்னங்கள், உதடு, நாக்கு என்று எல்லாமே மரத்துப் போக நல்ல வேளை அந்த நேரத்தில் வலி தெரியவில்லை. ஆனால் உள்ளே பெரிய ஆபரேஷன் நடந்து கொண்டிருந்தது. கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்த நான் அவ்வப்போது, அந்த ராவுகிற வேலையை வெளியே இருந்து செய்கிறாரா அல்லது வாயின் உள்ளேயே வந்து விட்டாரா என்ற சந்தேகத்திற்கு மட்டும் கண்களைத் திறந்து பார்த்தேன். ஒரு அரைமணி ராவு ராவென்று ராவி விட்டு பெருமூச்சு விட்டு நிமிர்ந்த டாக்டர், “இன்னும் கொஞ்ச நேரந்தான். முடிந்து விடும்!” என்றார் என்னைப் பார்த்து ஆறுதலாக. திரும்ப ஒரு முறை உள்ளே போனார். நான் தொய்ந்து போய் சேரில் சாய்ந்தேன்.

திரும்ப உற்சாகமாக வந்த டாக்டர், “உங்க பல்லில ஒரு இடைவெளி இருக்கு இல்லே? அதனால அதையும் சேர்த்து ஒரு பிரிட்ஜ் கட்டிடலாம்னு நினைக்கிறேன்.”

எனக்கு சஸ்பென்ஸ் தாங்கவில்லை. மொதல்ல கிரௌன் என்றார், இப்போ பிரிட்ஜ் என்கிறார். திரும்ப வேடிக்கையாக மனதில் ஒரு எண்ணம். இந்த பிரிட்ஜை திறந்து வைக்க யாரைக் கூப்பிடலாம்? மந்திரி லெவல்ல யாரையாவது கூப்பிடலாமா? வாயை மூட முடியாததால் கண்களில் மட்டும் தெரிந்த என் எண்ணத்தைப் புரிந்து கொண்ட என் கணவர் வாயை இகழ்ச்சியாக வைத்துக் கொண்டு முஷ்டியை கீழ் நோக்கி குத்தி ‘ஆசையைப் பார்த்தியா இவளுக்கு?’ என்று மைண்ட் வாய்ஸில் பேசினார். நான் முடிந்த மட்டும், மூட முடியாத வாயைக் கோணி, மூக்கை விடைத்து, கண்களை அகல விரித்து என் கோபத்தைக் காட்டினேன்.

ஒரு வழியாக ‘ரூட் கெனால்’ முடிந்து அடுத்த நாள் ‘பிரிட்ஜுக்கு’ அளவெடுத்து ரெண்டு நாட்களில் ‘பிரிட்ஜ்’ கட்டி முடித்து விட்டார் டாக்டர்.

“முறுக்கு மட்டும் சாப்பிடாதீங்கம்மா! ஹார்டா எதையும் கடிக்கக் கூடாது கொஞ்ச நாளைக்கு. வேற என்ன வேணாலும் சாப்பிடலாம்!” என்று என் சந்தேகங்களுக்கு டாக்டர் விடை சொல்லிக் கொண்டிருந்தபோது அன்று நல்ல வேளை என் கணவர் வராததால்,

“இவ கிட்டே போய் சொன்னீங்களே! நல்லா தினமும் நொறுக்குத் தீனி தின்னு தின்னு பழக்கம். அதைப் போய் விட முடியுமா என்ன?” என்ற நேரடி டயலாக்கை கேட்க வேண்டிய அவசியம் டாக்டருக்கு இல்லாது போயிற்று.

 

கடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

சிறப்பாசிரியரின் பூபாள நினைவுகள்!

“சார்,  நீங்க சிறப்பாசிரியரா இருந்து பூபாளம் கீதம் 20 இதழைத் தயாரிக்க வேண்டும்” என்று ஆர்க்கே மூலம் ஆசிரியர் குழு கேட்டுக்கொண்ட போது, எந்த சிந்தனையும் இல்லாமல் (எப்போதுதான் இருந்திருக்கிறது?) ‘சரி’ என்றேன்!

ஆசிரியர் தெரியும், அதென்ன சிறப்பு ஆசிரியர்? “ஒண்ணுமில்ல சார். நாங்களும் உங்க கூடவே எல்லா உதவியும் செய்வோம். ஆர்டிகிள் செலக்ட் செய்வது, ஏதாவது புதியதாய்த் தோன்றினால் சேர்ப்பது இப்படி உங்கள் விருப்பப்படி, பூபாளத்தின் முகம் மாறாமல் இதழைத் தயாரிக்க வேண்டும்” என்றார்கள். குருவித் தலையில் பனங்காய் என்று நினைத்தபடி, ஒத்துக்கொண்டேன். 

நாற்பது ஆண்டுகளுக்கு முன் யுவன் சந்திரசேகர் பூபாளம் இதழ் ஒன்றிற்கு (கையெழுத்துப் பத்திரிகை) சிறப்பாசிரியராய் இருந்திருக்கிறார் என்றார்கள்! யுவனின் உயரம் நான் அறிவேன். அவரது ‘நினைவுதிர்காலம்’ நாவல் வித்தியாசமாக இருக்கும். இப்போதும் மணற்கேணி, தலைப்பில்லாதவை போன்ற புதினங்கள், வித்தியாசமாக இரண்டு, இரண்டரைப் பக்கங்களில் ஒரு சாப்டர் என்பதாக எழுதியிருப்பார். ஒவ்வொரு சாப்டரையும், தனித்தனியாகவும் வாசிக்கலாம், ஒரு தொடராகவும் வாசிக்கலாம்! அவரது சிறுகதை ஒன்றை பூபாளத்திற்குக் கேட்கலாம் என்று அவரைத் தொடர்பு கொண்டு, ‘தலைப்பில்லாதவை’ போன்ற ஒரு கதை வேண்டும் என்றேன். மதுரை பூபாள நினைவுகளை அசை போட்டார். ‘தயாராக ஏதும் சிறுகதை இல்லாததால், கவிதை பற்றிய ஒரு கட்டுரை தரட்டுமா?’ என்றார். பிடிவாதமாக ஒரு சிறுகதைதான் வேண்டும் என்று சொல்லி, இரண்டு வாரத்தில் கொடுக்கும்படி கேட்டேன். ‘பார்க்கிறேன்’ என்றவர் சரியாக இரண்டாம் வாரம் ‘தீனனின் கனவுகள்…’ கதையை அனுப்பி வைத்தார். விபரம் சொல்லிக் கேட்டவுடன் கதைகளை உடனுக்குடன் அனுப்பி வைத்த ஸிந்துஜா, அழகிய சிங்கர், கிரிஜா ராகவன், இந்திரநீலன் சுரேஷ், மரு.முருகுசுந்தரம் ஆகியோரின் கமிட்மெண்ட் என்னை வியக்கவைத்தது! 

ஆவநாழியில் மாதம் தவறாமல் மொழிபெயர்ப்புக் கதைகளை எழுதிவரும் அனுராதா கிருஷ்ணசாமியிடம், ‘சின்னதாக, ‘சுருக்’ கென்றிருக்க வேண்டும். தேவை ஒரு மொழிபெயர்ப்புக் கதை’ என்றேன்! மலையாளத்திலிருந்து (மூலம்:அஷிதா) தமிழுக்கு ‘சட்’டென்று கொண்டுவந்திருக்கும் கதை ‘அம்மா என்னிடம் சொன்ன பொய்கள்’. 

கவிதைகளை ரசிப்பேன். சில கவிதைகளில் மறைந்துள்ள படிமங்கள் எனக்குப் புரிவதில்லை. கவிதை எழுதுபவரை விட, அதை வாசித்துப் புதுப் புதுப் பார்வைகளில் அவற்றை விவரித்து சுவை சேர்ப்பவர்கள் என்னை என்றும் ஆச்சரியப்படுத்துபவர்கள்! ஆகையால் ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்த கவிதைளில் சிலவற்றை நான் தேர்வு செய்து என் சிறப்பாசிரியர் கெளரவத்தைக் காத்துக்கொண்டேன்! நானறிந்த சில கவிஞர்களிடம் – ஆர்.வத்சலா, வித்யா மனோகர், மீ.விஸ்வநாதன் போன்றோரிடம் – கவிதை கேட்க, உடனே நல்ல கவிதைகளாகக் கொடுத்துவிட்டார்கள்…. பின்னே, எனக்கே புரிகிறதே, நல்ல கவிதைகள்தான்! ஞானக்கூத்தன், க.நா.சு., எஸ்.வைதீஸ்வரன் போன்றவர்களின் கவிதைகளில் எனக்குப் பிடித்த சில கவிதைகளையும், ஹைக்கூ பற்றி நான் எழுதிய பத்தியையும் சேர்ப்பதில் எனக்கு எந்த மனத்தடையும் இல்லை!

அனுபவப் பதிவுகள் என்றுமே எனக்கு சுவாரஸ்யமானவை! பெரும் ஆளுமைகளுடன் பழகிய அனுபவங்களை எழுதித்தர முடியுமா என்று மூத்த எழுத்தாளர்கள் சிலரை அணுகினேன்!  நேற்று எழுத வந்தவன், ஒரு சிறுபத்திரிகைக்கு ஒரு முறை மட்டுமே ஆசிரியராக இருக்கப்போகிறவன் என்றெல்லாம் ஆராயாமல், உடனே எழுதிக்கொடுத்த மாலன், சுப்ர பாலன், பொன்னேசன், ரகுநாதன் ஜெயராமன் ஆகியோருக்கும், சிறுகதை இலக்கியம் பற்றிய கட்டுரை எழுதிய திருமதி காந்தலட்சுமி சந்திரமெளலி, பக்தி இலக்கியக் கட்டுரை எழுதிய ஆர்.வெங்கடசுப்ரமணியன் ஆகியோருக்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றிகள் பலப்பல!

பூபாளம் இதழைக் கொடுக்கச் சென்றபோது, மாலன் உடனே இதழைப் பார்த்துத் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தது, எனக்கு நிறைவாக இருந்தது. அன்று அவர் சி.சு.செல்லப்பாவுடனான தன் அனுபவங்களைச் சொன்னபோது, அவரிடம் இரண்டு கட்டுரைகளாகக் கேட்டிருக்கலாமோ என்று தோன்றியது! 

பெரும் எழுத்தாளர்களின் வாரிசுகள் – அவர்களும் எழுத்தாளர்களாக இருப்பது என்பது அரிது – தம் தந்தையைப் பற்றி, எழுத்தாளர் என்ற பிம்பத்துக்குப் பின்னால் இருக்கும் மனிதரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது வாசகர்களுக்கு ஒரு நல்ல செய்தியாகவும், வாழ்க்கைகுறித்த புரிதலாகவும் இருக்கும் என எண்ணினேன்; மலர்ந்தன ‘அப்பா கட்டுரைகள்’. அமெரிக்காவிலிருந்து வாட்ஸ் ஆப்பில் கட்டுரை அனுப்பிய உமா சங்கரி (தி.ஜா. வின் புதல்வி), ஓசூரிலிருந்து லா.ச.ரா.சப்தரிஷி (லா.ச.ரா. மகன்), சென்னையிலிருந்து தி.ராமகிருஷ்ணன் (அசோகமித்திரன் மகன்), காந்தி, அண்ணாதுரை (கண்ணதாசன் புதல்வர்கள்), லேனா (தமிழ்வாணன் மகன்), தாரிணி (கோமல் சுவாமிநாதன் புதல்வி) ஆகியோரின் உடனடி பங்களிப்பு மறக்க முடியாதது. இவர்கள் எல்லோருமே போன் செய்து, ‘கட்டுரை’ சரியாக வந்துள்ளதா?’ என்று கேட்டுக்கொண்டார்கள் – பத்திரிகை ஆசிரியரின் பொறுப்பையும், எழுத்தாளர்களின் பொறுப்பையும் ஒரே சமயத்தில் உணர்ந்த தருணம் அது!

சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டிருந்த அவரது இரண்டு கட்டுரைத் தொகுப்புகளை வாசித்து, மலைத்துப் போயிருந்தேன் நான். அவரது கதைகள், கட்டுரைகளை சொல்வனத்தில் வாசித்திருக்கிறேன். பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட என் ‘பஜகோவிந்தம்’ சிறுகதையை என்னை போனில் அழைத்து வாழ்த்தி மகிழ்ந்தவர் எழுத்தாளர் வ.ஶ்ரீநிவாசன். அவரது நேர்காணல் (கேள்விகளை அனுப்பி, பதில்களை வாட்ஸ் ஆப்பில் பெற்றுக்கொண்டேன் – “வாட்ஸ் ஆப் காணல்”!) சுவாரஸ்யம் மட்டுமல்ல, அடர்த்தியானதும் கூட. 

எத்தனையோ அலுவல்களுக்கிடையில் கேட்டவுடன் அட்டைப்படம் வரைந்தனுப்பிய ஜீவா அவர்களுக்கு நான் என்ன பெரிதாகச் செய்துவிட முடியும்? 

‘மனதில் பதிந்த சுவடுகள்’ தேர்ந்தெடுப்பதில் உதவியதுடன், கதை ஒன்றையும் கொடுத்து, என்னை ஊக்குவித்த ஸிந்துஜா அவர்களுக்கு நன்றி.

அர்ஜுன் கிருஷ்ணா வின் ஓவியம் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது, ஆசிரியர் குழு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்த ‘பின்னட்டை’ ஓவியம் சிறுபத்திரிகையின் முகமாக அமைந்துள்ளது! 

புத்தகத்தை வடிவமைத்த சரவணன், அச்சிடுவதில் உதவிய குவிகம் கிருபானந்தன் ஆகியோருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.

இது ஓர் அனுபவம், மனம் மிகவும் மகிழ்ந்த அனுபவம்! 

திட்டமிட்டு, படைப்புகளைத் தேர்வு செய்து, பின்னர் உண்மைகளைச் சரிபார்த்து, ஒற்றுப்பிழைகளை நீக்கி, படங்கள், ஓவியங்கள் எனச் சேர்த்து, வாசகர்களின் ரசனையை உயர்த்தும் படியான ஒரு இதழைக் கொண்டுவருவதுதான் ஒரு பத்திரிகை ஆசிரியரின் பணி என்கிறது கூகிள் சாமி! இதில் எதுவும் தெரியாமல், ஒரு இலக்கியச் சிறு பத்திரிகை (இது ஒரு பல்சுவவை இதழ் – சிறுபத்திரிகை மாதிரி இல்லை என்றார் ஒரு நண்பர்) ஆசிரியராக இரண்டு மாதம் சுற்றி வந்தது ஓர் அனுபவப் பாடம். உடனிருந்து என்னை ஊக்குவித்து, எல்லாப் பணிகளையும் செய்து, பூபாளத்தை உயர்த்திப் பிடித்திருக்கும் அந்த நான்கு பேருக்கு – ஆர்க்கே, ஹரி, மதுவந்தி, சுரேஷ் – என் நன்றியும் வாழ்த்துகளும்!