தமிழ்த் திரை உலகின் முதல் படமான காளிதாஸிற்கு(1931) அனைத்துப் பாடல்களையும் எழுதியதால், தமிழ்த் திரை உலகின் முதல் கவிஞர் என்ற பெருமை கொண்டவர் – மதுரகவி பாஸ்கரதாஸ்.
காந்தியடிகள் மதுரை வந்தபோது, இவர் பாடிய பாடலைக் கேட்டு , கை தட்டி ரசித்தாராம். இவருடன் தான், தமிழ் சினிமாப் பாடல் வரலாறு தொடங்குகிறது. 10 படங்களில், சுமார் 200 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். நாடகங்களுக்கும் சேர்த்து, இவரின் 700 பாடல்கள் வரை இருக்கின்றன.
அன்றைய நெல்லை மாவட்டம் நாகலாபுரத்தில் பிறந்த இவர், கவிதை கற்கவில்லை. ஆனால் சிறு வயதினிலே பாடல் புனைய தொடங்கிவிட்டார். தேசிய இயக்கத்தின் தாக்கத்தில், விடுதலைப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.
வெள்ளைச்சாமி என்பது இவரது இயற்பெயர். இளவதிலேயே மதுரையில் தனது பாட்டி வீடு சென்று வசித்தார். அங்கு நாடகக் கலைஞராய் மலர்ந்தார். ராமனாதபுரம் சேதுபதி மன்னர் இவரைத் தனது அரசவையில் பாடவைத்து “முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாசு” என்ற பெயரைச் சூட்டினார். இதில் பாஸ்கரன் என்பது பாஸ்கர சேதுபதி மன்னரைக் குறிக்கும்.
தமிழ்த் திரைஉலகில், இவரைப் பார்த்துத்தான், பல தாசர்கள் உருவானார்கள் – பாரதிதாசன, கம்பதாசன், ராமதாசன், வாணி தாசன், கண்ணதாசன, என பட்டியல் தொடர்ந்தது.
நாடக மேடைகளில் இவரின் தேசபக்தி பாடல்கள் நிறைய ஒலித்தன. இன்னும் கூறப் போனால், பாரதிக்குப் பின், தேசியப் பாடல்கள் நிறைய எழுதியவர் இவர்.
இவர் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் கைவரப்பெற்றவராக இருந்துள்ளார். இதனால் திரைக்கதை, உரையாடல், பாடல்களை எழுதுபவராகவும், நாடக நடிகராகவும், நடிப்பு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இத்துடன் கிராமிய நாட்டுப்புறப் பாடல்களைச் சேகரிப்பவராகவும், புதிய இசையுருக்களை அமைத்தவராகவும் உள்ளார்.
என் பாட்டெல்லாம் காங்கிரஸ் வட்டத்துடன் சரி. பாஸ்கரதாஸ் பாடல்கள் ஊரெங்கும் பரவி உள்ளது. அவர் மீசையை முறுக்கி எழுந்து வந்தாள், சபையே எழுந்து வரவேற்கும் என்றும் கூறுவார் கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள்.
வீர ரசத்துடன், நவரசமும் சொட்டும் பாடல்கள் தந்தவர் – மதுர கீதங்களைத் தந்தவர், மதுரகவி என்பார் கவிஞர் சிலோன் விஜயேந்திரன்.
வெட்கம் கெட்ட வெள்ளை கொக்குகளா
விரட்டி அடித்தும் வாரீகளா என வெள்ளையனை எதிர்த்தும்,
வளையல் வாங்கலையோ வளையல்
ஒரு மாசில்லாத இந்து சுதேசி வளையல், என சுதேசியை ஆதரித்தும், பல பாடல்கள் எழுதி இருக்கிறார்.
சாதிச் சண்டை சமயச் சண்டை
சற்றும் ஓயவில்லை
சாராயங்கள் குடிப்போர் சண்டை
தாங்க முடியாத தொல்லை
என்ற வரிகள் இன்றைக்கும் பொருந்துகிறது.
சகுந்தலா, ராஜா தேசிங்கு (1934,1936 படங்கள்) படங்களில் இவர் பாடல்கள் எழுதினார். 1935ல், போஜராஜன் படத்தில் 45 பாடல்கள் எழுதினார். அன்றைய சங்கீத வித்வான், முத்தையா பாகவதர் பாடினார்.
பாடல்களில் ஹாஸ்யமும் எழுதி உள்ளார்.
புருஷர்களை நம்பலாமா
வெறும் போக புகலும் சொல்லிப்
பூவையரை மயக்கும்
கரும்பு போல பேசுவார்.
காணாவிடம் ஏசுவார்
குறும்பாய் முகஸ்துதி கொட்டிக் கூசுவார்.
உஷா கல்யாணம் படத்தில்,
மானே மதுரக்கிளயே – மாமணித்தேனே
மாணிக்கமே மடமானே
நறு மலரணை தனில் வருவாய்
முத்தம் தருவாய் – வாடினேன் நானும்
நெஞ்சக் கவலையற கிளியே
நீயோர் குதலை சொல்வாய் ,
என்று எழுதுவார்.
ஒடோடிப் பாடுபட்டு உழைத்தேன
ஓகோ பேய்ப் பிழைப்பு பிழைத்தேன்
காசெல்லாம் யார்க்கோ போகுது
யோசிக்கத் துக்கமாகுது கடவுளே
என்று தொழிலாளியின் துயரத்தைப் பாடுவார்.
இவர் எழுதிய பாடலை சந்திரஹாசன் என்ற படத்தில், கவிக்குயில் எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள பாடி உள்ளார்கள்,
தேசியத்தில் பாரதியைப் போலவே இருந்திருக்கிறார். 1919ல் பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி எழுதிய பாடலுக்காக, 3 முறை சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்.
பக்தி, தேசியம், சீர்திருத்தம், காதல் என எல்லாத் தலைப்புகளையும் பாடல்களில் கையாண்டுள்ளார். இவர் பாடல்களை கே பீ சுந்தராம்பாள், கிட்டப்பா, விஸ்வநாத தாஸ், அரியக்குடி, எம் எஸ் சுப்புலட்சுமி என்று பல மேதைகள் பாடி இருக்கிறார்கள்.
இந்திய தேசமெங்கும் விடுதலைப்போர் முரசம் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் தம் நாடகப் புனைவுவெளியை ஏகாதிபத்திய எதிர்ப்புக் களமாக்கியவர் மதுரகவி பாஸ்கரதாஸ். சமூக விளிம்பில் வாழும் யாசகர்கள் கூட அவரது பாடல்களை பாடித் திரிந்து பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ் என்றழைக்கப்பட்டார்.
அவரது படைப்புக்கள் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டன. தமிழ் நாடகக் கலையின் ஆன்மா எந்தவகை மனிதர்களால் உருவானதென்பதையும் நாடகக் கலைஞர்களின் பேதமற்ற உறவும் வாழ்வும் எவ்விதம் செயல்பாடுகளானது, எளிய மனிதர்களுக்குள் உலவிய கலையின் உத்வேகமும் அர்பணிப்பும் எத்தகையது என்பதை அவரின் நாட்குறிப்புகள் பேசுகின்றன.
காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட பாஸ்கரதாசு கதராடையையே அணிந்தார். கடைசி வரை பிரித்தானிய ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாய் நின்றுள்ளார். ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாடல்களை எழுத மேடையில் பாடியதற்காக 29 முறை கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பாடல்களைப் பாடிய விஸ்வநாததாஸ், காதர்பாட்சா போன்ற கலைஞர்களும் அக்காலத்தில் காவலர்களால் மேடையில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தக்காலத்தில் நாடக உலகிற்கும், திரை உலகிற்கும் விடுதலை உணர்வை அளித்து, ஒரு பாலமாக விளங்கினார், என்பார் ஆராய்ச்சியாளர் வாமனன் அவர்கள்.
தேசப்பற்றும், சமூக பிரக்நையும் கொண்டு, இமயமாகத் திகழ்ந்த இந்தக் கவிஞரின வீட்டின் பெயர் – தமிழகம்.
பாஸ்கர தாஸ் பத்து திரைப்படங்களுக்கு திரைப்பாடல்களை எழுதியுள்ளார்.
- காளிதாஸ் – 1931
- வள்ளி திருமணம் – 1933
- போஜராஜன் – 1935
- சந்திரஹாசன் – 1936
- ராஜா தேசிங்கு – 1936
- உஷா கல்யாணம் – 1936
- தேவதாஸ் – 1937
- சதி அகல்யா – 1936
- ராஜசேகரன் – 1937
- கோதையின் காதல் – 1941
- நவீன தெனாலிராமன் – 1941
அடுத்த மாதம் மற்றொரு கவிஞருடன் சந்திப்போம். நன்றி
,