“ உங்க அம்மா இருக்காளே… விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை கூட பண்ண மாட்டேன்னு முரண்டு பண்ணறா. வீட்டுல பெரியவா, குழந்தைகள் யாரும் இல்லையாம், கொழுக்கட்டை செஞ்சா சாப்பிட ஆளு இல்லையாம், நின்னா ரொம்ப முட்டி வலிக்கறதாம், அதனால கொழுக்கட்டை பண்ண மாட்டாளாம். சதுர்த்தி அன்னிக்கு சாதம் வடிச்சு, ஒரு பாயசம் வெப்பாளாம், மத்தது எல்லாம் பக்கத்து தெரு கேட்டரிங் மாமி சமைக்கிறது தானாம், கொழுக்கட்டை உட்பட… ஏற்கனவே வாரத்துக்கு ரெண்டு நாள் எடுப்பு சாப்பாடுதான் இப்போ எல்லாம், இந்த முறை இன்னும் விசேஷம்… உங்க அம்மா கிட்ட நீ சொல்லக் கூடாதா அனு,” என்று அலைபேசியில் புலம்பினார் நாராயணன் அவரது திருமணமான மகள் அனுஷாவிடம்.
“உங்க ரெண்டு பேருக்கும் இதே வேலையா போச்சு, எப்போப்பாரு சண்டை. நீ அம்மா மேல வண்டி குத்தம் சொல்லற, அம்மா உன் மேல அத்தனை குறை சொல்றா… உங்க சண்டையை சமாதானப்படுத்த குறுக்க நான். சரி நான் அம்மா கிட்ட பேசறேன், ஆனா, நீயும் கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கோ என்ன!” என்ற அனுஷாவிற்கு அப்பா அம்மாவின் சண்டையை நாட்டாமை செய்வது இப்போது பெரும் பொறுப்பாகிவிட்டது.
“ இந்த முறை நான் கண்டிப்பா கொழுக்கட்டை பண்ண மாட்டேன். அவராச்சு, நானாச்சு… என்ன நினைச்சுண்டு இருக்கார் மனசுல? கல்யாணம் ஆகி முப்பத்தி அஞ்சு வருஷம் ஆச்சு, இன்னும் எங்கம்மா நூறு கொழுக்கட்டை அப்படி சொடுக்கு போடறதுக்குள்ள பண்ணிடுவான்னு ஜம்பம் அடிச்சுண்டு இருக்கார். நான் பண்ணாத கொழுக்கட்டையா? ஒரு வார்த்தை, ஜெயா உன்னைப்போல பூ மாதிரி யாரால கொழுக்கட்டை பண்ண முடியுமுன்னு சொல்லியிருப்பாரா அந்த மனுஷன்? போன வருஷம் சீட்டாடர ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் கூட்டிண்டு வந்து காபி, வடை, கொழுகட்டை, அப்பம்ன்னு வீட்ல ஒரே அமளி, ஒரு ஹெல்ப் பண்ணல… என்னால முடியல அனு. காலெல்லாம் கெஞ்சறது.
வாங்கோ ரகு வீட்டுக்கு போய் சதுர்த்தி கொண்டாடலாம்னு கூப்பிட்டா , மருமகள் கொஞ்சமா எல்லாம் பண்ணறான்னு அங்க சண்டை போடறார்! இப்போ எல்லாம் யாரு அனு நிறைய சாப்பிடறா? எல்லாரும் டயட், இன்டர்மிட்டெண்ட் ஃபாஸ்டிங், லோ கார்ப்ஸ், ஹை ஃபைபர்னு பேசறா. ரகு தான் டயட்ல இருக்கான்னா, அவன் பொண்ணும் ஒண்ணும் சாப்பிட மாட்டேங்கருது… இந்த வருஷம் பிள்ளையாருக்கு மாமியோட கொழுக்கட்டை தான், நான் டிசைடு பண்ணிட்டேன்,” என்றார் திட்டவட்டமாக அனுஷாவின் தாயார் ஜெயா.
சற்று யோசித்த அனுஷா அப்பாவை அழைத்தாள், “ அப்பா, அம்மா கிட்ட பேசினேன்… அம்மா சொல்றதும் ஒரு விதத்துல நியாயம் தான். ஆமா, எப்பவோ செத்துப்போன பாட்டி புராணத்த ஏன் இன்னும் அம்மா கிட்ட பேசற நீ?”
“எங்க அம்மாவ பத்தி நான் பேசக்கூடாதா? நாங்க பத்து பசங்க, எப்படி சமைப்போ தெரியுமா அவ?”
“அய்யோ அப்பா, பாட்டி ஒரு கிரேட் குக், யாரும் அத மறுக்கல… ஆனா, அம்மாவும் குட் குக் தான் பா. எல்லாருக்கும் வாழ்கையில் தேவை கொஞ்சம் பாராட்டு. அம்மாவ தட்டி குடுத்து வேலை வாங்க கத்துக்கோ நீ. அவங்கள நீ கட்டாயப்படுத்தினா அவங்க அப்படி தான் பேசுவாங்க. ஆனா, அம்மாவும் அந்த காலத்து மனுஷி தான். இந்த பண்டிகைக்கு செய்யறது எல்லாம் அவங்க இரத்ததுல ஊறிப்போயிருக்கு. பிள்ளையாருக்கு கொழுக்கட்டை செய்யாம இந்த ஜெனரேஷன் பெண்கள் மாதிரி அவங்களால நிச்சயம் இருக்க முடியாது…
நீ விட்டுப்புடி. பூஜைக்கு தேவையான சாமான் எல்லாம் வாங்கிப்போடு, அம்மா கிட்ட உன்னால முடிஞ்சத பண்ணு, எதுவா இருந்தாலும எனக்கு பரவாயில்லன்னு சொல்லு. அம்மாவே பண்ணிடுவா. அப்படி இந்த பண்டிகைக்கு பண்ணலியா, ஏதோ முடியலன்னு விட்டுடு… அடுத்தடுத்த பண்டிகைக்கு அம்மாவே பண்ணிடுவா. முடிஞ்சா அம்மாவ கொஞ்சம் பாராட்டு… “ என்று அனுஷா சொல்லிக்கொண்டே போக, மறுமுனையில் ஒரே நிசப்தம்.
“அப்பா, கோவமா? என்ன சத்தமே காணும்?”
“இல்ல அனு, கேட்டுண்டு தான் இருக்கேன்… நான் முயற்சி பண்ணறேன்… குறைந்தபட்சம் அவள கத்தாம இருக்க பார்க்கறேன். சரி, உனக்கும் பண்டிகைக்கு நிறைய வேலை இருக்கும்… நாளைக்கு பூஜை முடிஞ்ச உடனே கூப்பிடறேன்,” என்று அழைப்பை முடித்தார் நாராயணன்.
சதுர்த்தி அன்று அவள் வீட்டு வேலையே அவளுக்கு சரியாக இருக்க, அப்பா அம்மாவின் சண்டையை பற்றி மறந்தே போனாள் அனுஷா. மாலையில் மீதமிருந்த வடை மாவில் அவள் வடை போட்டுக்கொண்டிருந்த போது,
“என்ன மாப்பிள்ளை, சதுர்த்தி நன்னா நடந்துதா?” என்று கேட்டபடியே நுழைந்தார் நாராயணன்.
அப்பாவின் குரல் கேட்டதும் அடுப்பை சின்னதாக வைத்துவிட்டு கூடத்திற்கு ஓடி வந்தாள் அனுஷா. அங்கே அம்மாவும் அப்பாவும் சோஃபாவில் ஜோடியாக அமர்ந்திருந்தனர்.
“அனு, இந்தா கொழுக்கட்டை, இன்னிக்கு உங்க அம்மா ஜமாய்ச்சுட்டா… பஞ்சாட்டம் அத்தனை கொழுக்கட்டை நிமிஷமா பண்ணிட்டா. கார்த்தால சீக்கிரமா எழுந்துண்டு, ஒன்பது மணிக்குள்ள சமையல் ஓவர். அபார்ட்மெண்ட்ல எல்லாருக்கும் குடுத்து, இப்போ உனக்கும் எடுத்துண்டு வந்திருக்கோம். ” என்று சிரித்தபடியே கொழுக்கட்டை நிறைந்த ஒரு டப்பாவை அனுஷாவிடம் கொடுத்தார் நாராயணன்.

Very well narrated. Any work can be done, but it needs little compliment, which will encourage people to do more. Everyone is a human being., with such small expectations.
LikeLike