ஹாலோவீன் (Holloween) என்னும் ஆவிகளுக்கு மரியாதை செய்யும் பேய் திருவிழா கடந்த அக்டோபர் 31ஆம் தேதியன்று நடந்தது. இந்த வருடம் அதே நாளில் தீபாவளியும் வந்தது. ஆகவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழும் இந்தியர்கள், இரண்டையும் சேர்த்து DIWOLEN ஆக கொண்டாடினார்கள்.
ஹாலோவீன் தினத்தன்று, சின்னஞ்சிறு குழந்தைகள் ‘பேய்’ வேடமிட்டு, வீடு வீடாகக் கதவைத் தட்டி “Trick or Treat..?” என்று கேட்பார்கள். பெரியவர்கள், பொதுவாக எங்கள் மீது தந்திரங்கள் ஏதும் செய்ய வேண்டாம். நாங்கள் இனிப்புகளே தந்து விடுகிறோம் என்று வந்த குழந்தைகளுக்கு சாக்லேட் போன்றவற்றைக் கொடுப்பார்கள்.
இதில் காமெடி என்னவெனில், பேய் வேடமிட்டு வந்த சிறுமி, மிரட்ட நினைத்து அடுத்தவர் வீட்டுக் கதவைத் தட்ட, கதவைத் திறக்கும் குழந்தையின் பேய் வேடத்தைக் கண்டு, வந்த குழந்தை அலறுவதுதான்..!
ஆக, குழந்தைகளுக்கு பேய் பிடிக்கும்.! சில பேய்களுக்கு குழந்தைகளையும் பிடிக்கும்.
*******************
எனக்கு பேய்க் கதைகளைப் பிடிக்கும். ஆனால் ‘பேய்’ பிடிக்காது. சின்ன வயதில், வாராந்தரி ராணியில் பேய்க்கதை மன்னன் P.T.சாமி, ஒவ்வொரு வாரமும் தன் சித்திரக் கதையை இவ்வாறு முடிப்பார்;
“நள்ளிரவு! கதவைத் தட்டும் சத்தத்தைக் கேட்டு அவன் திறந்தான். வாசலில் ‘பேய்’…!! (கூடவே ஒரு வெள்ளைத் துணி போர்த்திய ‘எலும்புக் கூடு’ கதவுக்குள் தலை நுழைத்து எட்டிப் பார்ப்பது போல் ஒரு படம் வரையப் பட்டிருக்கும்) – அவ்வளவுதான், எனக்கு இராத்திரி ஜுரம் கண்டு விடும்.
இருப்பினும், அடுத்த வாரமும் அந்தத் தொடரைப் படிப்பேன்.
“மத்தப் பசங்க எல்லாம் முத்து காமிக்ஸ் / இரும்புக் கை மாயாவி..னு படிக்கிறப்ப போது, உனக்கு ஏன்டா இந்த வேண்டாத வேலை?” என்பாள் அக்கா.
‘யார் நீ, நடு இரவில்’ போன்ற படங்களை, முகத்தை கைகளால் மூடிக்கொண்டு இரு விரல்களுக்கு நடுவே பார்த்திருக்கிறேன். ‘தியேட்டருக்கு வராதே, வீட்டிலேயே இரு..ன்னா கேட்க மாட்டேயே’ எனத் திட்டு விழும்..!
“நானே வருவேன்………” பாடலை நினைத்துக் கொண்டு, திடீரென தூக்கத்திலிருந்து விழித்து பக்கத்திலிருந்த பாட்டியை எழுப்பிக் கேட்பேன். “பாட்டி! இப்ப பேய் வருமா? பிடிக்குமா?”
தாத்தா நினைவுகளுடன் கூடிய சுவாரஸ்யமான தூக்கம் தடைப்பட்டதால் பாட்டி, ‘பிடிக்கிற பேய்..யாவது, படுக்கிற பாய்..யாவது சும்மா தூங்கு” என்று திரும்பி படுத்துக் கொள்வாள்.
வாரத் தொடராக வந்து பைண்ட் செய்யப்பட்ட, ஜாவர் சீதாராமனின் ‘உடல் பொருள் ஆனந்தி, மின்னல் மழை மோகினி’ நண்பனிடமிருந்து வாங்கி வைத்திருந்தேன்.
ஒரு நாள் இரவு, மாடியறையில் படித்துக் கொண்டிருந்தபோது, திடீரென மல்லிகைப் பூ வாசம்..! ; மல்லிகைப்பூ வாசம் வந்தால் மோகினி வருவாள். வீட்டில் என்னை மட்டும் தனியே விட்டுவிட்டு எல்லோரும் கோயிலில் சாமி புறப்பாட்டுக்காகச் சென்றிருக்கிறார்கள் என்பதை அப்போதுதான் கவனித்தேன். வாசல் கதவு மெதுவாக அசைய, பயந்தபடியே திறந்த போது, பூக்காரம்மா தான் நின்று கொண்டிருந்தாள்.
பிற்காலத்தில் ‘The Exorcist’, The Omen’ போன்ற படங்கள், என்னை ஸீட் நுனிக்குத் தள்ளியிருக்கின்றன.
நிறையப் பேய் படங்கள் பார்த்த பின், ஃபார்முலா கைவசப்பட்டது. பேய் Ground Floor இல் வசிக்காது. மாடியில் எல்லா கதவு, ஜன்னல்களுக்கும் திரைச்சீலைகள் இருக்கும். BGM முழு அமைதியாக இருந்தால், திடீரென ஒரு அலறல் வரும். காற்று திரைச்சீலைகளை அலைக்கழித்தால், பேய் வரும்.
இருப்பினும், ஜெயமாலினியின், ‘ஜெகன் மோஹினி’க்குப் பிறகுதான் ஒரு தெளிவு கிடைத்தது. அதாவது பேய்கள் எல்லாம் கொல்லுபவை அல்ல! ‘காமெடிப் பேய்’களும் உண்டு.
அந்தப் படத்தில் பேய், அடுப்பிற்குள் தன் கால்களை நீட்டி கட்டை விறகாகப் பயன்படுத்திச் சமைத்துக்கொண்டிருக்கும். அது போல் பல நகைச்சுவைகளுக்காக அந்தப் படம் ‘பயங்கரமாக’ ஓடியது. வேறு சில காட்சிகளுக்காகவும் அந்தப் படம் ஓடியது.. என்று வளர்ந்த பிறகு தெரிந்து கொண்டேன்! இவ்வாறு பேய்களை குழந்தைகளுக்கு நண்பனாக்கிய பெருமை, டைரக்டர் விட்டலாச்சார்யா..வையே சாரும்!
போகப் போக ‘கிலி’ போய், ‘வா ஜாலியாக ஒரு பேய் படம் பார்த்துவிட்டு வரலாம்’ என்றாகி விட்டது.
பிற்கால படங்களில், நம்மைப் பயமுறுத்துவதை விட்டு விட்டு, அழகான பேய்கள் பல வண்ண புகை மண்டல பின்னணியில், காலில்லாமல்(?) நின்று கொண்டு, சென்டிமெண்ட், நீதி என முழ நீளத்துக்கு லெக்சர் கொடுப்பது செம காமெடி..!
சில நாட்களுக்கு முன், மனைவி ஊரில் இல்லாததால் ஒரு மாலைப் பொழுதில் சீரியசான வெளிநாட்டுப் பேய் படம் ஒன்றைப் பார்க்கலாம் எனத் திட்டமிட்டேன்.
இந்த மாதிரி படங்களுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க, ஜன்னல்களைச் சாத்தி திரைகளை இழுத்து விட்டு இருட்டாக்கி, விளக்குகளை அணைத்து விட்டு டிவியை இயக்கினேன். வெளியில் கன மழை கொட்டும் சத்தம். படம் கிட்டத்தட்ட கிளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது,
வாசல் அழைப்பு மணியடிக்க, கதவின் கண் துளை வழியே பார்த்தேன். தலை உட்பட உடல் முழுதும் கருநிற உடையால் மூடிய ஒரு உருவம் நின்று கொண்டிருந்தது, கதவு கொக்கி சங்கிலியை விலக்கி, லேசாகத் திறந்து எட்டிப் பார்த்தேன், ‘படக்’ என்று மின்சாரம் துண்டித்தது. உடன் கதவைச் சாற்ற எத்தனித்த போது, கதவின் இடுக்கு வழியே அந்த கை நீண்டது. அதில்,
ஒரு ‘ஸ்விக்கி’ பார்சல் தொங்கிக் கொண்டிருந்தது.
******************


பேய்களுக்குக் கால் கிடையாது என்று ஒரு ஐதீகம் உண்டு. இருந்தாலும் சினிமாவில் பேய்கள் வரும் போது ஜல் ஜல் என்ற சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். ஒரு வேளை கால் பேய் அரைப் பேய் என்று கூட உண்டு போலிருக்கு. ஆசிரியர் அழகாக எழுதியிருக்கிறார். படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது.
LikeLike
super
nice story telling
LikeLike