எவண்டா அந்த பாமா கோபாலன்?

 

Kumudham Office-il Gopalan by Bhama Gopalan (Ebook) - Read free for 30 daysகுமுதம் - Tamil Wiki

ஒரு பேட்டி குமுதம் ஆபீசின் கண்ணாடிகளைச் சில்லுகளாக்கிய சம்பவம் மட்டுமா? குமுத்தில் வேலை பார்த்தபோது ஏகப்பட்ட நிகழ்ச்சிகள்.. சஸ்பென்ஸ்கள்.. பயங்கள்.. சந்தோஷங்கள் .. குதூகல கணங்கள். இன்று யோசித்தால் எதை…யுமே மறக்க முடியாது.

அதைவிடவும்.. 

குமுதம் என்ற பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்து எஸ்  ஏ பி என்ற மகான்.. சுஜாதா என்ற பெரும் புத்திசாலி.. மாலன் என்ற திறமைசாலி  பிரியா கல்யாண ராமன் என்ற இளம்புயல் ஆகிய நான்கு ஜாம்பவான் எடிட்டர்களின் கட்ளையின்கீழும்.. ராகி ரங்கராஜன்.. ஜரா சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி) புனிதன், பிரபஞ்சன் போன்ற ஜாம்பவான் எழுத்தாளர்களின் கீழும் பணிபுரிந்தது ஒரு கொடுப்பினை என்றால்.. அனைத்துத் துறைகளிலும் உள்ள டாப் கிளாஸ் திறமைசாலிகளிடம் பேட்டி கண்ட அனுபவத்துக்கு ஈடும் இல்லை இணையும் இல்லை.

எவ்வளவு சினிமா டைரக்டர்கள். நடிகர்கள், நடிகைகள், எழுத்துலகப் பிதாமகர்கள், இசையுலக மேதைகள், எனப் பேட்டி கண்டோம்! கொடி கட்டிப் பறந்த அத்தனை ஓவியர்களும், சக பத்திரிகையாளர்களும் எங்களின் நெருங்கிய நட்புவட்டத்துக்குள் வந்து கைகோர்த்தார்கள். மற்றவர்கள் எங்களை அண்ணாந்து பார்த்தார்கள்… சின்னதொரு பூனை அறுபதாவது மாடியில் உட்கார்ந்த மாதிரி..

எல்லாப் புகழும் குமுதத்துக்கே. 

குமுதம் நிருபர்களில் தலை சிறந்த பால்யூ, “கோபாலன். வெல்கம். ஒருவரே அரசியல்.. சினிமா .. இசை என்று எத்தனை துறைகளுக்குத்தான் ஓடி ஓடிப் பேட்டி எடுப்பது? இந்த இஷ்யூவில் நீங்க எழுதியிருக்கும் கட்டுரை பார்த்தேன். புது நிருபர் மாதிரியே இல்லை சப்…பாஷ். எந்த சந்தேகம்னாலும் என்னைக் கேளுங்க. எந்தப் பிரமுகரின் போன் நம்பர்.. அல்லது அட்ரஸ் வேணும்னாலும் நான் தரேன்.’’

இதை என் கணவர் நெகிழ்ச்சியுடன் சொன்னபோது நானும் நெகிர்ந்தேன். அவர் வாய் வார்த்தையாக அப்படிச் சொல்லவில்லை என்று புரிந்தது. பால்யூ சார் ஒரு டயரி வைத்திருந்தார். பல துறைகளைச் சேர்ந்த அத்தனை பேரின் போன் நம்பர்களையும் வைத்திருந்தார். பல பிரபலங்களின் போன் நம்பர்கள் டெலிபோன் டைரக்டரியில் இருக்காது. (அன்லிஸ்டட் நம்பர் என்பார்கள்). அவையெல்லாம் இவரிடம் இருந்தன.

அபார நினைவாற்றல் கொண்டவர் பால்யூ. அவர் வீட்டுக்கு நானும் என் கணவரும் பல முறை சென்றிருக்கிறோம்.  பலரின் பிறந்த தேதிகளை சட் சட்டென்று மிகச் சரியாகச் சொல்வார்.

ஏதோ கண்ணாடிச் சில்லு என்று ஆரம்பிச்சீங்களே வேதா.. என்னமோ சுவாரஸ்யமான சம்பவம் வரப்போகுதுன்னு ஆசையாய்க் காத்திருந்தால் வேற ஏதேதோ சொல்லிக்கிட்டுப் போறீங்களே?

இது மட்டும் இல்லைங்க.. இது மாதிரிப் பலப்பல சம்பவங்களை இந்த் தொடரில் பார்க்கப்போகிறோம்.

ஒரு சோறு பதமாக அந்தச் சம்பவம் இதோ..

குமுதத்தைப் பொருத்தவரை எத்தனையோ சீரியஸான பெரிய விஷயங்களைச் சர்க்கரை கோட்டிங் மாதிரி லைட்டான நடையில் கொடுத்து, ஒரு பக்காவான பொழுது போக்குப் பத்திரிகையாக நடத்தினார்கள்தான்.  நாம் பிரமிப்புடன் படிக்கும் சீரியஸான விஷயங்கள் எத்தனையோ இருந்தாலும்.. வாசகர்கள் தங்களின் அன்றாடக் கவலைகளை மறந்து ஜாலியாக ரசிக்க வேண்டும் என்பதுதான் எடிட்டர் எஸ் ஏ பியின் குறிக்கோளாக இருந்தது. அவர் தாயுமானவரையும் சின்மயானந்தாவையும் ரசிப்பார். ஆனால் சிலுக்கின் போட்டோவைத்தான் கொடுப்பார். கிசுகிசுவை விநோத் விநியோகிப்பார். 

இதைப் பலரும் கழுவி ஊற்றினார்கள். குமுதம் என்பது விஷயத்தைப் பரப்பாமல் விஷத்தைப் பரப்புகிறது என்றார்கள். மாணவர்களைக் கெடுக்கும் பத்திரிகை என்றார்கள். ஆனால் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான  பத்திரிகையாக உயர்ந்தது குமுதம். ராமலிங்க அடிகளாரையும் ஸ்வாமி சின்மயானந்தரையும் அரசு பதில்களில் கொண்டு வந்தார். (அண்ணாமலை ரங்கராஜன் சுந்தரேசன் என்ற பெயர்களின் ஆரம்ப எழுத்துதான் அ-ர-சு என்று பலரும் நினைத்தும் பரப்பியும் வருகிறார்கள். அந்த ஒரு பகுதியை மொத்தமாக ஆண்டவர் எடிட்டர்  எஸ் ஏ பி மட்டுமே. தன் பர்சனல் அனுபவங்களையும் ரசனைகளையும் தைரியமாக அதில் எழுதினார்.

அவருடைய போட்டோக்கள் குமுதம் உள்பட எதிலும் பிரசுரமானதில்லை என்பதால் தைரியமாக ரயிலிலும் பஸ்ஸிலும் பயணம் செய்தார் எஸ் ஏ பி அவர்கள். அங்கு கிடைத்த அனுபவங்களை வைரச் சுரங்கம் மாதிரி வெளிப்படுத்துவது அவர் வழக்கம்.

ஒவ்வொரு இதழ் ஒவ்வொரு துணை ஆசிரியர் தயாரிப்பது வழக்கம் என்றேன் அல்லவா? அவற்றிற்கான ஐடியாக்களும் அந்தந்த துணைஞரின் மனதில் உதித்தவையாகத்தான் இருக்கும். ஆனால் கண்டிப்பாக எடிட்டரின் அனுமதி வாங்கியாக வேண்டும். (சில ஐடியாக்கள் மிகவும் ஸில்லியாக இருக்கும். இருக்க வேண்டும்).

அவற்றில் ஒன்று… ஜ ரா சுந்தரேசன் அவர்கள் மனசில் உதித்தது.

அது ஒரு வாசகரின் கேள்வியிலிருந்து உதித்தது.

கேள்வி இதுதான். “நான் எம் ஜி ஆர் மாதிரியே இருக்கிறேன் என்கிறார்கள் எல்லோரும் .. அது பற்றி  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” இது கேள்வி பதில் பகுதியில் இடம் பெறவில்லை.

“கோபாலன் நீங்க என்ன செய்யறீங்க.. அந்த நபரைப் பார்த்து ஒரு சின்ன பேட்டி வாங்கிடுங்க.. அதே மாதிரி.. பிரபலமானவங்க ஜாடைல உள்ள ஒரு நாலைந்து பேரின் பேட்டியும் வாங்கிடுங்க. மொத்தம் மூணு பக்கம் வரணும்” என்றார்.

இது கோபாலன் குமுத்தில் இணைந்து மூன்று நான்கு வருடங்கள் கழித்து நடந்தத சமாசாரம்.

குமுதத்தில் வேலை பார்ப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. நாலைந்து பேர்.. அதிலும் பிரபல ஜாடையில் உள்ளவர்கள்.. அதிலும் பேட்டி தரச் சம்மதிப்பவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதுகூட சாத்தியமாகலாம்.. தேடி.. கண்டுபிடித்து.. பேட்டி வாங்கி.. எழுதி (அல்லது டைப் செய்து..) மறு நாளைக்குள் கொண்டு வா என்றால் திருநாளைப் போவார் மாதிரி எவ்வளவு சிரமமான விஷயம்?

இப்படிப்பட்ட சாமர்த்தியமும் புயல் வேகமும் இல்லாதவர்கள் அந்த நாளைய குமுதத்தில் இரண்டு நாளைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாது. நாங்கள் இரண்டு பேராய் வேலை பார்த்ததால் பிழைத்தோம்.

போன் செய்து என்னிடமும் சொன்னார். நான் ஒரு பக்கம் சிநேகிதிகள்.. அக்கம்பக்கத்தினர் என்று சொல்ல.. அவர் மற்றவர்களிடம் கேட்க..

நாலைந்து பேர் கிடைத்தார்கள். அவர்களில்  அச்..சு அசல் டி ராஜேந்தர் மாதிரியே ஒரு டீக்கடைக்காரர் இருப்பதாய் நண்பர் ஒருவர் சொன்னார். டீக்கடை இருந்தது புரசைவாக்கம் பகுதியில். அதாவது குமுதம் ஆபீசுக்கு மிக அருகில். சந்தோஷமாய்ப் போய்க் கேட்கவும் அவர் சற்றுத் தயங்கியிருக்கிறார்.

பாமாகோபாலனிடம் ஒரு நல்ல குணம் உண்டு. யாரேனும் பேட்டி தர மறுத்தார்ல வற்புறுத்தவே மாட்டார். பேட்டி கொடுத்த பிறகும், தான் அதில் சொன்ன ஏதாவது ஒரு விஷயம் பிரசுரமாக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டால் கருணை இல்லாமல் அந்த வரிகளை நீக்கிவிடுவார்.

ஆனால் அபூர்வமாய்க் கிடைத்திருக்கிறாரே ஒருவர். “உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா வற்புறுத்த மாட்டேன். ஆனால் உங்க போட்டோ பிரபலமான குமுதத்துல பிரசுரமாகும். பிரபல நடிகர் மாதிரி இருக்கீங்களே” என்று சொல்லியிருக்கிறார்.

“தெரியுங்க நிறையப் பேர் சொன்னாங்க..”

பேட்டியின் முதல் வரி தயார்!

“போட்டோ எடுத்துக்கலாமா?” (கையோடு புகைப்படக்காரை அழைத்துப் போயிருந்தார்)

“தாராளமா எடுத்துக்குங்க… குமுதத்தில் போடலாம். ஆனா நான் அந்த நடிகருக்கு ரசிகர் இல்லைங்க.. அவர் படங்களை அதிகம் பார்க்கறதில்லை. ஏன் படமே அதிகம் பார்க்க மாட்டேன். எனக்கு என் டீக்கடை முக்கியம் அதைவிட்டுட்டு நடிகருங்களை ரசிச்சுக்கிட்டிருந்தால் என் பிழைப்பு என்னாவது?” என்று கேட்டிருக்கிறார்.

“இதையே நான் பேட்டியா எடுத்துக்கலாமா?” என்று கேட்க.. அவரும் சம்மதிக்க.. மறு வாரமே அவர் சொன்னதெல்லாம் வார்த்தை மாறாமல் பிரசுரமானது.

மறுநாள் டி ராஜேந்தரின் ரசிகர்கள் ஒரு பத்துப்பேர் வந்து குமுதம் ஆபீசின் முன்புறத்தைக் கட்டை கம்பு கற்கள் என்று வைத்துத் தாக்க ஆரம்பித்தனர்.

“எங்க தலைவரின் படத்தைப் பார்க்க மாட்டேன்னு எவனோ சொன்னால் அதை பிரசுரிப்பீங்களா? எங்கடா அந்த பாமா கோபாலன்?” என்று சரமாரியாய்க் கண்ணாடிகளை உடைக்க..

அந்த இஷ்யூவின் பொறுப்பாளரான ஜ ரா சுந்தரேசன் நேராக பாமா கோபாலனைப் பார்த்து “சார்.. அந்த பாமாகோபாலன் உள்ளே இருப்பார் .. கூப்பிடுங்க.. அவரை இவங்க பொறுப்புல விட்டுடுவோம். என்ன செய்யணுமோ செய்துக்கட்டும்” என்று ஹின்ட் கொடுத்தார்.

“அவர் இன்னும் வரலை சார்..” என்று இவர் பதில் கொடுத்தார்.

அவர்களால் முன்புறக் கண்ணாடிகளைத்தான் உடைக்க முடிந்தது. அதற்குள் செக்யூரிட்டிகள் அந்த ஆட்களை வெளியேற்றி.. போலீசுக்குத் தகவல் சொல்லி.. ஏக அமர்க்களம். அதைவிட சோகம்.. அந்த டீக்கடை சுக்குநூறாக்கப்பட்டது. ஜ ரா சுந்தரேசனும் பாமா கோபாலனும் மனிதாபிமான அடிப்படையில் தங்களால் இயன்ற பொருள் உதவி செய்தாலும்.. மறக்க முடியாத சோகம் இது.

இதைக் கேள்விப்பட்ட டி ராஜேந்தரும் வருத்தம் தெரிவித்தார். அப்படிச் செய்தவர்கள் தன் ரசிகர்கள் இல்லை என்றார்.

 

இன்னும் நிறைய வரும் ..