“தாத்தா, 500 கிடையாது, 200 தான் வரும். டாக்டரும் அதைத்தான் எழுதியிருக்காரு” மருந்தகத்திலிருந்த பெண், கம்பி ஜன்னலுக்கு உள்ளிருந்து உரத்துச் சொன்னாள்.
“இல்லம்மா, டாக்டர் சொன்னாரு, 500 தான் வேணும்” – வெளியில் நின்றுகொண்டு, கவுண்டரில் கைவிட்டு மருந்துச் சீட்டைக் காட்டிய பெரியவருக்கு வயது தொண்ணூறு இருக்கலாம். கணுக்கால் வரை வேட்டி, முக்கால் கை வைத்த ஜிப்பா, கழுத்தில் சம்பந்தம் இல்லாமல் ஒரு வெள்ளைத் துண்டு. காதுகளுக்கு மேலேயும், பின் தலையிலும் கொஞ்சம் முடி. கையில் ஒரு பெரிய நீல நிறக் கோப்பு நிறைய பழைய, புதிய மருந்துச் சீட்டுகள், பரிசோதனை ரிப்போர்ட்டுகள், எக்ஸ்ரே இத்யாதிகள்…
“அந்த மருந்துல 500 கிடையாது தாத்தா. இது ஒண்ணுதான் வருது” என்று மாத்திரை அட்டையை இருபதாவது தடவையாகக் காட்டிச் சொல்லிவிட்டு பெருமூச்சுடன், அயர்ந்தாள் அந்தப் பெண்.
காலை வேளை. பெரியவருக்குப் பின்னால் வரிசை நீண்டிருந்தது. மருந்தும் வாங்காமல், பிறருக்கு வழியும் விடாமல் கவுண்டரில் நிற்கும் கிழவரைப் பார்த்து, காத்திருந்தவர்கள் எரிச்சல் அடைந்தனர்.
“யோவ் பெரிசு, ஒண்ணு சீக்கிரம் மருந்த வாங்கு இல்லே வழியவானும் விடு. அவங்கதான் 500 கிடையாதுன்னு சொல்றாங்க இல்லே?” வரிசையில் ஓர் இளைஞன் பொறுமையிழந்துக் கத்தினான். அவனுக்கு அவன் அவசரம். சப்தம் செய்ய விரும்பாதவர்கள் ‘உச்’சுக் கொட்டி, சலித்துக்கொண்டனர்.
டாக்டரைப் பார்க்க என் முறை இன்னும் வராததால், ஓரமாக நின்றிருந்த நான் அந்தப் பெரியவரிடம் சென்று, “இந்தப் பக்கம் வாங்க, நான் பார்க்கிறேன்; மத்தவங்களுக்கு நேரமாகுதில்ல?” என்று கூறியபடி, அவரைக் கை பிடித்து, மருந்துக் கவுண்டரை விட்டு, வெளியே அழைத்து வந்தேன்.
“சாரி சார். நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சுக்கங்க சார். இவங்க எல்லாம் கத்தறாங்க… தப்பான மருந்தை எப்படி சார் வாங்கிட்டுப் போறது?” என்னை நிமிர்ந்து பார்த்தவர் கண்களில் கண்ணீர்.
அவர் கையிலிருந்த சீட்டைப் பார்த்தேன். ‘200’ என்றுதான் எழுதியிருந்தது. நான் வெளியில் காத்திருக்கும்போது, டாக்டர் அவரிடம் கொஞ்சம் குரல் உயர்த்திப் பேசியது ஏனென்று இப்போது புரிந்தது. பெரியவருக்குக் காது கொஞ்சம் மந்தம். டாக்டர் ஒரு முறையும், அவரது உதவியாளர் நர்ஸ் இரண்டு முறையும் மருந்துகளையும், அவற்றைச் சாப்பிடும் முறையையும் விளக்கியது எனக்கே இன்னும் நினைவில் இருக்கிறது.
“கூட துணைக்கு யாரும் வரலையா?”
“யாரு வருவாங்க?” என்னை எதிர்க் கேள்வி கேட்டார்.
அரை விநாடி அவர் பார்வை எங்கோ வெறித்துப் பார்த்தது. “அவனவனுக்கு அவன் பொண்டாட்டி, புள்ளைங்க பத்திதான் கவலை. போனவாரம், என்னோட அவ துணைக்கு வந்தா. இன்னிக்கு அவளுக்கும் முடியலை.. ஐயோ, அவ காலுக்குத் தைலம் கேட்டாளே..” பெரியவர் முகம் கலவரமடைந்தது.
“200 தான் இந்த மருந்தோட அளவு. வேற கிடையாது தாத்தா. சரியாத்தான் கொடுக்கறாங்க. வாங்கிட்டுப் போங்க” என்றேன்.
“இல்ல தம்பி, டாக்டர் 500 னுதான் சொன்னாரு… நான் போய் திரும்பவும் கேட்டுட்டு வர்றேன்..” டாக்டர் அறை நோக்கிப் போகும் பெரியவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது. நானும் உடன் சென்றேன். அங்குக் காத்திருந்த நோயாளிகளுக்கு மீண்டும் இந்தப் பெரியவரைப் பார்க்க, மிகவும் ஆயாசமாக இருந்தது. உள்ளே போனால் குறைந்த பட்சம் பதினைந்து நிமிடமாவது கேள்விகளாய்க் கேட்பார்.
கதவருகே இவரைப் பார்த்த டாக்டர், உள்ளே அழைத்து விபரம் கேட்டார். மருந்தகப் பெண்ணை அழைத்து விசாரித்தார்.
பெரியவரிடம், “இவங்க சரியாகத்தான் கொடுத்திருக்காங்க. இந்த மருந்தோட அளவு 200 தான். வாங்கிக்கோங்க” என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண்ணிடம், “திரும்பவும் இவரை வரிசையில் நிற்க வைக்காதீங்க, மருந்தைக் கொடுத்து அனுப்புங்க” என்று சொல்லி அனுப்பினார்.
“ரொம்ப நன்றி டாக்டர். கஷ்டம் கொடுத்திருந்தா அயம் வெரி ‘சாரி’ டாக்டர்” கையெடுத்துக் கும்பிட்டு, கண்ணீருடன் வெளியே வந்தார்.
உள்ளே நர்சிடம் டாக்டர், “பாவம் பெரியவர். மறதி வியாதியுடன் கொஞ்சம் மனப் பிறழ்வும் உள்ளது. அடுத்த முறை வரும்போது, வீட்டிலிருந்து யாரையாவது உடன் அழைத்து வர வேண்டும் என்று சொல்லிவிடு” என்றார்.
வெளியே வந்த தாத்தா, ஒரு முறை மருந்தகத்தையும், தெருவில் நிற்கும் நாயையும் நெற்றியைச் சுருக்கிப் பார்த்தார். மருந்து வாங்காமலே சென்று விட்டார். நான் அவரிடம் ‘ஏன்’ என்று கேட்கவில்லை.
என் ரிப்போர்ட்டுகளைக் காண்பிக்க அடுத்த வாரம் சென்ற போது, அந்தப் பெரியவர், சுவற்றோரமாக நின்று கொண்டிருந்தார். கையில் அதே நீல நிறக் கோப்பு, அதே மருந்துச் சீட்டு.
“என்ன தாத்தா, மருந்து வாங்கலையா இன்னும்?” என்றேன்.
“டாக்டர் 500 தான் சொன்னார். இவங்க 200 தான் இருக்குன்றாங்க தினமும். இன்னைக்கு என்ன கோவமோ தெரியல, அதுவும் இல்லைன்றாங்க. வெளில வேற கடையில வாங்கிக்கன்னு சொல்லிட்டாங்க”
“உங்க மனைவி கூட வரலையா?”
“ம் ஹூம்.. அவளுக்கு ரெண்டு முட்டியும் வலி, வர முடியலை” என்றார்.
அந்தப் பெரியவருக்கு எப்படி உதவ முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. அப்போது அங்கு பெரிய மீசையுடன், நீல யூனிஃபார்மில் வந்த செக்யூரிடி, “என்னா பெர்சு, ஏன் நின்னுங் கெடக்கிற? மருந்து வாங்கலையா இன்னும்?” என்று கேட்க, மிரட்சியுடன் பெரியவர், “மருந்து இல்லைன்றாங்கப்பா” என்றார்.
“அப்போ போய்ட்டு, அப்பால வா. இல்லாங்காட்டி வேற கடையில போயி கேளு. இங்கெ நின்னுகினு, கூட்டம் போடாத”
“நான் ஏன்யா கூட்டம் போடறேன்? 500 கெடைச்சா வாங்கிக்கிட்டுப் போகப் போறேன்” என்றபடி திரும்பவும் மருந்து கவுண்டரை நோக்கிச் சென்றார்.
வரிசையில் நின்றபடி, ‘500 இல்லைன்னா என்ன செய்யறது? இரண்டு 200 போட்டுக்கலாமா? நானூறுதானே ஆகும்…’ எனக் கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்தார் – காது சரியாகக் கேட்காதவர்களின் இயல்பு அது! நேரே சுவற்றில் வாலைக் குழைத்தபடி பல்லி ஒன்று இருந்தது. சற்று தள்ளி, மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்த சிறிய பூச்சி ஒன்றைப் பிடிக்கக் காத்திருந்தது. ‘பூச்சியப் பிடிக்குமா? இல்லே கீழே விழுந்திடுமா?’ என்று நினைத்தாற்போல, ஒரு சிலிர்ப்புடன் தலையை ஆட்டிக்கொண்டார்.
கவுண்டரிலிருந்த பெண், தாத்தாவைப் பார்த்தவுடன், மற்றுமொரு உரையாடலுக்குத் தயாரானாள்.
என்ன தோன்றியதோ தெரியவில்லை, திடீரென்று வரிசையிலிருந்து வெளியே வந்த தாத்தா, விரைவாக தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தார். என்னைக் கடந்து போகும்போது, “ரொம்ப சாரி சார். நான் உடனே போகணும். வீட்ல அவ தனியா இருப்பா இல்லே… மருந்து கொடுக்கணும்..” என்றவாறே என் பதிலுக்குக் காத்திராமல், தெருவைக் கடந்து, எதிர்த் திசையில் நடக்கலானார். கையிலிருந்த கோப்பை இறுகப் பிடித்துக்கொண்டவர், கையிலிருந்த மருந்துச் சீட்டைப் பார்த்தபடி நடந்தார்.
‘நாளைக்கானும் 500 கிடைக்குமா?’

மருத்துவர் பாஸ்கரன் அவர்கள் உணர்ந்த நோயாளி ஒருவர் இங்கே மருந்து வாங்க மன்றாடுகிறார்.
LikeLike