சுந்தரபாண்டியன் -3 பாண்டியப் பொற்காலம்

Maravarman Sundara Pandyan: The Pandya King Who Defeated the Cholas | மாறவர்மன் சுந்தரபாண்டியன்

சுந்தரபாண்டியன் சேரநாட்டை வென்ற கதை பார்த்தோம். பாண்டியருக்கும் சேரருக்கும் தீரா பகை ஏற்படவும், இன்று “பாண்டி” என தமிழர்களை ஒருமாதிரி கேரளத்தவர் இழுப்பதற்கு சுந்தரபாண்டியனின் படையெடுப்பே காரணமாம்.

விரைவில் நடந்து முடிந்த இந்த சேர வெற்றியை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர், அருகிருந்த நாட்டு மன்னர்கள். தஞ்சையில் சோழன் ராஜேந்திரன், கண்ணனூர்க் கொப்பத்தில் முகாமிட்டிருந்த போசள தளபதி சிங்கணன், சேந்தமங்கல கோப்பெருஞ்சிங்கன், ஈழத்து மன்னன் பராக்கிரமபாகு அனைவரும் பாண்டியனின் சேர வெற்றியைக் கண்டு அதிர்ந்தனர். புதுக் கூட்டணி அமைத்து பாண்டியனை அழிக்கலாம் என்று ஆலோசித்து வந்தனர்.

சுந்தரபாண்டியன், வீரபாண்டியனிடம் சொன்னான்: “தம்பி, சேரவெற்றியை மட்டும் வைத்துக்கொண்டு நாம் குளிர்காயலாகாது. சுற்றி இருக்கும் எதிரிகள் சேர்ந்து நம்மைத் தாக்க முயல்வர். அவர்கள் ஒன்று சேரும் முன், அவர்களை ஒவ்வொருவராக அழிக்கவேண்டும். ஓய்வுக்கு நேரமில்லை. முதல் இலக்கு ஈழம்” என்றான்.

1255 ல் சுந்தரபாண்டியன் தெற்கே இலங்கை சென்று போரிட்டு வென்றான். ஒரு அரசனைக் கொன்று, மற்றொரு அரசனைப் பணியவைத்தான். பெருந்திரளான யானைகளையும், தந்தங்களையும், முத்துக்குவைகளையும் திறையாகப் பெற்றான்.

சுந்தரபாண்டியன் “அடுத்த இலக்கு சோழர்கள். அவர்களைப் பகைத்தால், ஹொய்சாளர்கள் உதவிக்கு வருவர். இருவரையும் தோற்கடிக்க வேண்டும். படைகளை இன்னும் பெருக்க வேண்டும்” என்றான். படைகள் பெருக்கின.

ஹொய்சாளமன்னன் வீரசோமேஸ்வரன், சோழமன்னன் மூன்றாம் ராஜேந்திரனின் ஆதரவைப் பெற்றிருந்தான். வீரசோமேஸ்வரனின் தம்பி, வீரராமநாதனை, சோழநாட்டிலுள்ள கண்ணனூர் (தற்போதைய சமயபுரம்) பகுதியின் சிற்றரசனாக நியமித்திருந்தான் சோழ மன்னன் ராஜேந்திரன். நமது பழைய வில்லன் சிங்கணனும் வீரராமநாதனிடம்தான் தளபதியாக இருந்தான்.

1257 ல் சுந்தரபாண்டியன் சோழநாட்டுக்குப் படையெடுத்துச் சென்றான். மூன்றாம் ராஜேந்திரனைப் போரில் முறியடித்தான். இப்போரில் ஹொய்சாளர்கள் சோழனுக்கு உதவியாகப் பங்கு பெற்றிருந்தனர். அவர்களும் தோற்று ஓட வேண்டிவந்தது. ராஜேந்திரன், பாண்டியனுக்குக் கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான். சோழநாடு பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசாகியது.

  1. ஹொய்சாள சோமேஸ்வரன் தன் தோல்விக்குப் பிறகு, ஆர அமரத் தன் முழு வலிமையையும் திரட்டிக்கொண்டு பாண்டியன் மீது படையெடுத்து வந்தான்.

சுந்தரபாண்டியன் வீர வசனம் பேசினான்: “ஹொய்சாளர்கள் படையெடுத்து வந்துள்ளனர். இது நமது அதிர்ஷ்டமே! அவர்களாக நம்மிடம் ‘விட்டில் பூச்சி நெருப்பில் மோதுவது போல’ மாட்டிக் கொள்கின்றனர். நமது தாக்குதலில், ஹொய்சாளர்களை நிர்மூலம் செய்து, இனி அவர்கள் தமிழ்நாடு பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்க இயலாத வகை செய்யவேண்டும்” என்றான்.

சுந்தரபாண்டியன் பெரும்படையுடன் கண்ணனூர்மேல் படையெடுத்து சென்று, கண்ணனூர்க் கொப்பத்தை முற்றுகையிட்டான். கண்ணனூர் அருகே கடும் போராட்டம் நடந்தது. இப்போர் கிட்டத்தட்ட பேரரசாக வளர்ந்து வந்த ஹொய்சாளருக்கு பேரிடியாயிற்று. அவர்களது படைத்தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். படைகள் சிதைந்தன. சுந்தரபாண்டியன், ஹொய்சாள இளவரசன் வீரராமநாதனையும், சிங்கணனையும் கொன்று, கண்ணனூரைக் கைப்பற்றினான். போசள மன்னன் வீரசோமேசுவரனும் கொல்லப்பட்டான். ஹொய்சாளர்களிடமிருந்து, பாண்டியர் யானை, குதிரைகளையும், நிதியங்களையும், படைக்கலங்களையும் களத்திலிருந்தே ஏராளமாகப் பெற்றனர். கண்ணனூரையும் தமிழகத்திலிருந்த தம் தென்மாகாணத்தையும் ஹொய்சாளர்கள் இழந்தனர். அவற்றில் குவித்து வைக்கப்பட்டிருந்த ஹொய்சாளர்களின் பெருஞ்செல்வக் குலையும் பாண்டியர் வசமானது.

பாண்டியரின் இந்த அதிரடித் தாக்குதலும், அடைந்த பெரு வெற்றியும், போசளர்கள் குலத்தை வேரறுத்த செய்தியும், அதிர்ச்சி அலைகளை தென்னிந்தியாவில் பரவவைத்தது. காடவ (பல்லவ) அரசன் கோப்பெருஞ்சிங்கன் ஒரு பலமான மன்னனாக உருவாகிக்கொண்டிருந்தான். சுந்தரபாண்டியனது அடுக்கடுக்கான வெற்றிகளைக் கண்டு அஞ்சிய கோப்பெருஞ்சிங்கன், அவனைப் பகைப்பது தற்கொலைக்குச் சமமாகும் என்றுணர்ந்தான். சுந்தரபாண்டியனுக்குத் திறைப்பொருளை அனுப்பி வைத்தான். சுந்தரபாண்டியன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

தம்பி வீரபாண்டியனை அழைத்து “வீரபாண்டியா! இந்த கோப்பெருஞ்சிங்கன் பெரிய படை வளர்த்து பலமான மன்னனாக இருக்கிறான். சோழனை விட இன்று பலமாக இருக்கிறான். அவன் இன்று சமாதானத்தைக் கோரி, திறைப்பொருளை அனுப்பியுள்ளான். அதை ஏற்றுக்கொண்டு அவனை விட்டுவிட்டால், அவன் நம்மைத் தாக்க நல்ல நாளுக்காக காத்திருப்பான். அவனுக்கு பாடம் கற்பித்து, அவனது படையைக் குறைக்க வேண்டும். அது அருகில்இருக்கும் சோழனுக்கும் ஒரு அச்சத்தை விளைவிக்கும். புதுக்கூட்டணிகள் உருவாகாமல் இருக்கும்“ என்று சொன்னான். வீரபாண்டியன் அண்ணனின் ராஜதந்திரத்தை மெச்சி, உடனே புறப்படத் தயாரானான். சுந்தரபாண்டியன், கோப்பெருஞ்சிங்கன் மீது படையெடுத்துச் சென்று, அவனுடைய தலைநகராகிய சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுப் போர் செய்தான். அப்போரில் கோப்பெருஞ்சிங்கனை வென்று சேந்தமங்கலத்தைக் கைப்பற்றிக் கொண்டான். மேலும் அவனுடைய யானைகளையும், குதிரைகளையும், பிற செல்வங்களையும் கவர்ந்து கொண்டான். பிறகு அவனைத் தன் ஆணைக்கு அடங்கி நடக்கும் சிற்றரசனாக்கி விட்டுத் தன் நாடு திரும்பு முன், திருவரங்கத்திலும், தில்லையிலும் இறைப்பணி செய்து வடதிசை செல்லத் துணிந்தான்.

வடதிசையிலிருந்த அரசுகள் (யாதவ, காகதீய) தெற்கே பரவிவரும் இந்தப் பேராற்றலைத் தடுக்கத் துணிந்தனர். சுந்தரபாண்டியன் காலத்தில், காஞ்சிபுரத்தைத் தெலுங்குச் சோழனாகிய விசயகண்ட கோபாலன் ஆண்டு வந்தான். சுந்தரபாண்டியன் அவன் மீது படையெடுத்துச் சென்று, போரில் அவனைக் கொன்று, காஞ்சிபுரத்தைக் கைப்பற்றினான். பின்பு விசயகண்ட கோபாலனுடைய தம்பியர் வந்து, தன்னடி பணிந்து வணங்கவே, அவர்களுக்குக் காஞ்சிபுரத்தை அளித்து, அவர்களை ஆண்டுதோறும் தனக்குத் திறை செலுத்திக் கொண்டு ஆட்சி செய்து வருமாறு பணித்தான்.

சுந்தரபாண்டியன், இறுதியாகத் தமிழகத்தின் வடக்கே படையெடுத்துச் சென்றான். நெல்லூர் மாவட்டத்தில் மூடுகூர் என்றொரு ஊர் உள்ளது. மூடுகூரில், அங்கே காகதீய நாட்டை ஆண்டு வந்த கணபதிதேவன் என்பவனைப் போரில் வென்று, அவனுக்கு உரிய நெல்லூரைக் கைப்பற்றி, தென்னகமே அதிரும்படியான பெருவெற்றி அடைந்தான். அந்நகரில் வீராபிடேகம் செய்து கொண்டான்.

திருவரங்கம் கோவிலுக்கு துலாபாரம் அளித்த நிகழ்வு சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது. தன் எடைக்குச் சமமான தங்கத்தை ரங்கநாத ஸ்வாமிக்கு அளிக்க எண்ணினான் சுந்தரபாண்டியன். காவேரியில், இரு படகுகளை அமைத்து, ஒன்றில், தான் பட்டத்து யானை மீதமர்ந்து, மற்றொரு படகில் தங்கக்கட்டிகளை ஏற்றவைத்தான். இரு படகுகளின் நீரளவு சமமாகும் வரை தங்கக்கட்டிகள் ஏற்றப்பட்டன. பின், அந்தத்  தங்கம் கோவிலுக்குத் தானமாக வழங்கப்பட்டது.

இவ்வாறு பல நாடுகளை வென்று தன்னடிப்படுத்தித் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் முடிமன்னனாக விளங்கிய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன், ‘எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர்’ என்ற பட்டப் பெயரைப் புனைந்து கொண்டான். அடுத்து, திரிகோணமலையை ஆண்டுவந்த இலங்கைமன்னன் சந்திரபானு மீது படையெடுத்து, அவனையும் தோற்கடித்தான்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குப் பொன்னாலான விமானத்தைக் கட்டுவித்தான், சுந்தரபாண்டியன். ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு எண்ணற்ற ஆபரணங்களை அளித்து, திருப்பணிகளையும் செய்தான். இவனளித்த ஆபரணங்களுள் “பாண்டியன்கொண்டை” என்ற ஆபரணம் குறிப்பிடத்தக்கது.

மகதநாடு, கொங்குநாடு, சோழநாடு, சேரநாடு, இலங்கை உள்ளிட்ட பெருநிலப்பரப்பை ஆட்சிசெய்த முதல் பாண்டியமன்னன் சுந்தரபாண்டியன். இருபதாண்டுகால ஆட்சிக்காலத்தில், பிற்காலச் சோழப்பேரரசை வீழ்த்தி, பிற்காலப் பாண்டியப்பேரரசை எழுச்சிபெறச் செய்து, அதை மாபெரும் விரிவாக்கமும் செய்ததை எல்லாம் நினைத்தாலே மலைப்பாக இருக்கிறதல்லவா? இதனால்தான், வரலாற்று மாவீரா்களுள் ஒருவனாக, தென்னிந்திய நெப்போலியனாக முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் போற்றப்படுகிறான்.

மூன்றாம் ராஜேந்திரன் ஒடுங்கிப்போனான். சந்ததியற்று , பழையாறையில் மறைந்து வாழ்ந்து 1279 க்குப் பின் காணாமல் போனான். நானூறு ஆண்டுகளுக்கு முன் ஆதித்தசோழனின் வெற்றியால் பல்லவர்கள் முடிந்தனர். இன்று சுந்தரபாண்டியனின் வெற்றியால் சோழர்கள் முடிந்தனர். சரித்திரத்திலிருந்து காணாமல் போயினர். பாண்டியரின் பொற்காலம் ஒன்று தொடங்கிவிட்டது.

இலங்கை திரிகோணமலையினை கைபற்றி ஈழநாட்டை தனது அரசுடன் இணைத்த சுந்தரபாண்டியன் அங்கிருந்து கடாரம் சென்று ஷயாம் (தாய்லாந்து) நாட்டையும் கைபற்றியிருந்தான். சந்திரபானு எனும் தாய்லாந்து மன்னனும் (நமது ராஜமுத்திரை இந்திரபானுவின் தந்தை) அவனுக்கு அடிபணிந்து கப்பம் கட்டினான். அதன் பின் அவன் ஆட்சி துங்கபத்திரா தாண்டி இன்றைய ஓடிசா வங்கம் வரை நீண்டது. அப்படியே பர்மா தாய்லாந்து என அவன் ஆளுகைக்குள் வந்தது.

சுருக்கமாக சொன்னால், ராஜேந்திர சோழன் ஆண்ட பகுதியினையெல்லாம், அவனுக்கு பின் 200 ஆண்டுகள் கழித்து அதைவிட பெரிதாக ஆண்டு சரித்திரம் படைத்திருந்தான் சுந்தர பாண்டியன்.

பகை ஒன்றுமில்லாமல், அனைவரையும் வென்ற சுந்தரபாண்டியன், தன் தம்பிகள் வீரபாண்டியன், விக்கிரமபாண்டியன், மகன் குலசேகரபாண்டியன் அனைவரையும் அழைத்துச் சொன்னான். “இவ்வண்ணம், நாம் வெற்றிகரமாக இருப்பதற்கு முக்கியக்காரணம்- நாம் இணைந்து ஒற்றுமையாக செயல்படுவதே. நமது முன்னோர்கள் வீரபாண்டியனும், விக்கிரமபாண்டியனும் அடித்துக் கொண்டு சோழர்களிடம் தோற்று வாழ்ந்ததை நினைவு கூறுங்கள். ஒற்றுமை வெற்றியைத் தரும். நமக்குப்பிறகு வரும் பாண்டியர்களும் இளவல்களும் ஒருங்கிணைந்து பாண்டிய தேசத்தை உன்னதமான நிலைக்குக் கொண்டுவர தில்லைநாதனையும், திருவரங்கனையும் பிரார்த்திக்கிறேன்” என்றான். ஆனால் பதவி மோகம் வரும் சந்ததியரை, பேரழிவுக்குக் கொண்டுவந்தது.

ஒரு பொற்காலம் உருவானது உண்மைதான். ஆனால், அது எத்தனை நாள் நீடித்தது? அந்த விபரங்கள் இனி தொடரும்.