The Devadasi and the Saint

                                   தேவதாசியும் சன்யாசியும்

                                          ஆங்கில நூல் – ஸ்ரீராம்

                                    ——————————-

           பிரமிக்க வைத்த புத்தகங்களைப்பற்றி எழுதும்போது புத்தகங்களை ஆசிரியர் எழுதிய விதமா அல்லது உண்மைக் கதைகளாயின் அவற்றில் வரும் பாத்திரங்களின் குணாதிசயங்களின் மேன்மையா எது நம்மை பிரமிக்க வைக்கிறது என நான் சிந்தித்தேன். இது எழுதுபொருளையும் எழுதுபவரின் எழுத்து வன்மையையும் பொறுத்ததே எனும் முடிவுக்குத்தான் என்னால் வர முடிந்தது. என்னைப் பிரமிக்க வைத்த புத்தகம் உங்களை ஒன்றுமே செய்யாதிருக்கலாம்.

மேற்காணும் தலைப்பிலான புத்தகம் என்னையும் எனது நண்பர்கள் சிலரையும் புரட்டிப் போட்டது. எப்படிப்பட்ட எழுத்து என சிலாகிக்கலாம்; எப்பேர்ப்பட்ட பெண்மணி இவர் என வியப்பில் சிலிர்க்கலாம். அப்படியான புத்தகம் இது.

எங்கே தொடங்குவது எனக் குழப்பத்திலாழ்கிறேன். இத்தனை நாட்கள் தியாகராஜ ஆராதனைக்குத் திருவையாறு சென்று பங்கெடுத்து வருகிறேன்; ஆயினும் (சில ஆண்டுகளுக்கு முன்புவரை) இதனை யார் தொடங்கி வைத்தது, ஏன் எப்படி எவ்வாறு என அறிந்திலேன். அரசல் புரசலாக பெங்களூர் நாகரத்தினம்மா எனும் பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும்கூட, யாரவர், எப்படி என்ன செய்தார் என்றெல்லாம் சிந்திக்கக்கூட இல்லை, ஸ்ரீராமின் ‘தேவதாசியும் சன்னியாசியும்’ எனும் இப்புத்தகத்தைப் படிக்கும் வரை. இதற்காக நான் என் தங்கையின் கணவர் திரு. பாலசுப்ரமணியனுக்கு நன்றி கூற வேண்டும். அவரால் முடிந்த ஆண்டுகளிலெல்லாம் ஆராதனைக்கு வந்து பங்கெடுத்துக் கொண்டும், பஞ்சரத்தினங்களை ஆர்வத்தோடு சேர்ந்து பாடியும் அதில் பெருமகிழ்ச்சியடைந்து கொண்டும் இருப்பவர். திருவையாறு மண்ணே மிகப்புனிதமானது என்று கூறி மகிழ்பவர். அவரே இந்தப் புத்தகத்தை எனக்குப் பரிசளித்தார். அதற்காக அவருக்குப் பெரிதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

புத்தகத்தினுள் நிழையலாமா? என்னால் கோர்வையாகக் கூற சாத்தியப்படாது என எண்ணுகிறேன்.

கடந்த நூற்றாண்டில் ‘தேவதாசி’ எனும் அழகான, பொருள்நிறைந்த சொல்லைக் கொலைசெய்து ஒரு அருவருப்பான பொருளையும் குலத்தாரையும் குறிப்பிட்டார்கள். ஆனால் தேவதாசிகள் கடவுளின் சந்நிதியில் ஆடிப்பாடி தொண்டுசெய்யும் குலத்தவர் என்பதே அழகான பொருள். அதற்காக அரசர்கள் அவர்களுக்கு மானியங்களும் நிலமும் பொருளும் கொடுத்தனர் என்றெல்லாம் அறிகிறோம். அதனால் ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் ஆடலும் பாடலும் இவர்கள் கைவசமே இருந்தன. குடும்பப் பெண்கள் இவற்றைக் கற்றுக் கொள்ளவில்லை. படித்த உயர்குடி மக்கள்கூட இந்த தேவதாசி முறையை ஆதரித்தனர் எனலாம். இருப்பினும் 19ம் நூற்றாண்டின் கடைசியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிகழ்ந்த பல நிகழ்வுகளால் இந்த தேவதாசி வழக்கம் சிதைந்து தற்போது முற்றுமாக அழிந்தும் விட்டது.

பெங்களூர் நாகரத்தினம்மா என்பவர் அந்தக் காலத்தில் ஒரு பிரமிக்கத்தக்க, உயர்வானவராக இருந்தார். கல்வி கலைகளில் தேர்ந்தும், இசை பாடுவதிலும் இசை ஞானத்திலும் மிகுந்த தேர்ச்சியுடையவராக இருந்தார். சங்கீதத்தில் தேர்ச்சியும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். மிகவும் வித்தியாசமான மனுஷியாக இருந்த அவர் தனது காலத்தில் மிகவும் முன்னோடியாகவும், பெண்களின் உரிமைகளுக்குப் போராடுபவருமாக இருந்தார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமி மீது அவர் கொண்டிருந்த பக்தி அளப்பரியது. அந்த மகானுக்கு எழுப்பிய சமாதியில் அவருடைய பங்கு மகத்தானது. எண்ண எண்ண பிரமிக்க வைப்பது. இப்படியும் ஒரு மனிதர் உண்டா என வியக்க வைப்பது.

ஸ்ரீராம் அவர்கள் தனது எழுத்தால் அவர் வாழ்வு எவ்வாறு தேவதாசி சம்பிரதாயத்துடன் பின்னிப் பிணைந்து இருந்தது என்பதனையும், எளிய பின்புலத்தினின்றும் வந்த அவர் 1920-30களில் எவ்வாறு கலை, சங்கீத உலகில் எழுச்சி பெற்று அனைவராலும் மதிக்கத்தக்க தாரகையாக விளங்கினார் எனவும் நுட்பமாக விவரித்துள்ளார். மிகச்சில குறிப்புகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

பெங்களூர் நாகரத்தினம்மா நினைவுகொள்ளப்படுவது மிக முக்கியமாக அவர் தியாகராஜ சுவாமியின் சமாதியைச் சுற்றி ஒரு நினைவு மண்டபம் எழுப்பியதற்காகத்தான். தனது வாழ்க்கை முழுவதிலும் ஈட்டிய பொருள்கள் அனைத்தையும் அதற்காகவே செலவு செய்தார்.

புட்டலக்ஷ்மி எனும் தேவதாசித்தாய்க்கும் அவளைப் புரந்தவரான வக்கீல் சுப்பராவ் என்பவருக்கும் நஞ்சன்கூடு எனும் ஊரில் பிறந்தவர் நாகரத்தினம்மா. புட்டலக்ஷ்மி ஸ்ரீகாந்தேஸ்வரம் எனும் கோவில் தேவதாசி. நாகரத்தினத்தின் ஒன்றரை வயதினிலேயே அவளுடைய தந்தை தாய்க்குண்டான மனவேறுபாட்டால், அத்தனை செல்வங்களையும் பறித்துக்கொண்டு, தாயும் மகளும் அடித்து விரட்டப்பட்டனர். மைசூரை வந்தடைந்த அவர்கள் வேறு ஒரு வித்வானிடம் அடைக்கலம் புகுந்தனர்.  நன்றாகக் கல்வியும் சங்கீதமும் கற்று வந்த நாகரத்தினத்தைப் பொறாமையாலும், ஆத்திரத்தாலும் அடித்துவிரட்டிய ஒரு குரு அவள் சாணி பொறுக்கத்தான் லாயக்கு என்றாராம். அத்தனை கஷ்டத்திலும் மகளைக் காத்து வளர்த்த தாய் அவளை மகாராஜாவே அழைத்து கௌரவித்தாலொழிய மைசூருக்குள் நுழைய மாட்டேன் எனக் கூறி, மகளுடன் ஊரை விட்டு வெளியேறினாளாம்.

இவ்வாறு பல இடர்களையும் அவமானங்களையும் சகித்துக் கொண்டு வாழ்க்கையைத் தொடர்ந்தனர் தாயும் மகளும். வயலின், வாய்ப்பாட்டுடன், ஆங்கிலம், தெலுகு, சம்ஸ்கிருதம் ஆகியவற்றையும் கற்றார் நாகரத்தினம். நாட்டியமும் அபிநயமும் கற்பிக்கப்பட்டன. அனைத்திலும் தேர்ச்சியடைந்தபோது காசநோயால் வருந்திய தாய் காலமானாள்.

மைசூரில் வீணை சேஷண்ணா வீட்டில் நாகரத்தினம்மாவின் கச்சேரி ஏற்பாடானது. அவளை வாழ்த்திய அனைவருமே அக்காலத்தில் பெரும் வித்வான்கள். மைசூர் வாசுதேவாச்சார் நாகரத்தினத்தின் இசையைப் புகழ்ந்து ஆசிர்வதித்தார். பிடாரம் கிருஷ்ணப்பாவுடன் நாகரத்தினத்தின் சங்கீத பாடங்கள் தொடர்ந்தன. இவ்வாறு மைசூரில் தனது தாயின் விருப்பப்படி தன்னை நிலைநாட்டிக் கொண்டார் நாகரத்தினம்மா.

பெங்களூர் பெரிய மனிதர் வக்கீல் நரஹரிராவுடன் நட்பும் உருவாயிற்று. நாகரத்தினத்தின் சங்கீதத்தை இடையூறுகளின்றிக் கேட்க ஒரு குன்றின் மீது வீடுவாங்கி அவரை அதில் குடிவைத்தார் நரஹரிராவ். பல நண்பர்களுடன் வேண்டும்போதெல்லாம் வந்து அவரின் இசையைக் கேட்டு மகிழ்வது அவரது வழக்கமாயிற்று.

இங்கு ஒரு சுவாரசியமான தகவல்: ஒருமுறை நரஹரி அவர்களுடன் ஏதோ மனவேறுபாட்டால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. பின்பு வேறெங்கோ சந்தித்தபோது ஒரு அழகான கமாஸ் ராக ஜாவளியை இயற்றிப் பாடினாராம் நாகரத்தினம். உடனே சமாதானமடைந்து பேசத் தொடங்கினாராம் நரஹரிராவ்.

‘மாத்தாட பாரதேனோ’ என்பதே அந்த அழகிய ஜாவளி.

[இதை யூட்யூபில் காணலாம். விதுஷி ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் பாட, நாட்டியமணி நர்த்தகி நடராஜ் அவர்கள் அழகாக அபிநயித்து நடனமாட, பார்ப்பவர்கள் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்து.]

நரஹரி ராவ் அவர்கள் தாம் இறக்கும் முன் நாகரத்தினம்மாவைப் பாதுகாத்துப் போஷிக்க சென்னையில் உள்ள தமது நண்பரை வேண்டிக் கொண்டார். அவரும் சென்னைக்குக் குடி பெயர்ந்தார். வீணை தனம்மாள் முதலானோருடன் தொடர்பு ஏற்பட்டது.

நாகரத்தினம்மாவிற்கு இன்னும் பல முகங்கள் உண்டு. ‘ராதிகா ஸந்த்வானமு’ எனும் தடை செய்யப்பட்ட ஒரு புத்தகத்தைத் திரும்பப் பதிப்பித்தார். இந்தப் புத்தகம் மிகவும் விரசமான கருத்துக்களைக் கொண்டுள்ளது எனக் கூறப்பட்டது. அத்தனை பிரதிகளும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குமேல் வழக்காக நடந்தன. அவரை ஒன்றும் பாதிக்கவில்லை.

அடுத்து பெண்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டார். தேவதாசி எனும் குலத்தை இறைவனுக்குத் தொண்டு செய்பவர்கள் என்று கூறாமல் அவர்களை விலைமாதருக் கிணையாகக் கூறலாயினர். இதனால் தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என ஒரு சாரார் வழக்குகள் தொடுத்தனர். இது பல ஆண்டு காலங்கள் நடந்தது. நாகரத்தினம்மாவும் சளைக்காமல் எதிர்வழக்குத் தொடுத்தார்.

தியாகராஜசுவாமி இவருடைய கனவில் தோன்றினார். அதைத் தொடர்ந்து திருவையாறில் அவருடைய சமாதியைச் சீராக்கிடும் முயற்சியில் நாகரத்தினம்மா ஈடுபட்டார்.

இவ்வாறெல்லாம் பலவிதமாக, பல வேறு முகங்களில் தன் வாழ்க்கை செல்ல, அதனை ஒரு தவமாக ஏற்று தியாகராஜ சுவாமிக்கு தன் கைப்பொருளையெல்லாம் செலவழித்து அவர் சமாதியைச் சுற்றி  ஒரு மண்டபம் எழுப்பி, பின் திருவையாற்றிலேயே தங்கியிருந்து ஆண்டுதோறும் அவருடைய ஆராதனையை நடத்திய மகத்தான ஒரு செயலைத் தன் ஆயுளில் செய்த அற்புதமான ஒரு பெண்ணரசியைப் பார்த்து பிரமிப்பதா போற்றுவதா என அறியவியலாமல் தவிக்கலாம்.

நாகரத்தினம்மா மிகவும் முன்யோசனையுள்ள பெண்மணி என்கிறார் ஆசிரியர் ஸ்ரீராம். தனது உயிலை எழுதும்போது தனது எண்ணங்களிலும் செயல்பாடுகளிலும் உறுதியாக இருந்தார். வித்யாசுந்தரி பெங்களூர் நாகரத்தினம் டிரஸ்ட் எனும் பெயரில் டிரஸ்டை அமைத்து, மூன்றுபேரை அதற்கு டிரஸ்டிகளாக நியமித்தார்.

எவ்வாறு தியாகராஜ ஆராதனையை நடத்த வேண்டும் எனவும் விவரமாக உயிலில் பதிவிட்டார். பெண்களும் தேவதாசிகளும் மேடையில் ஏறிப் பாட அனுமதிக்கப்படவேண்டும். சமாதி மண்டபத்தைச் சுற்றி எந்தவொரு நிரந்தரமான கட்டிடமும் கட்டலாகாது. இவையெல்லாம் அவருடைய சில நிபந்தனைகள்.

பெண்களின் சாதனைகள் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன. கலை, எழுத்துலகில் மிகவும் உயர்வாகக் கருதப்படும் ‘கிருஹலக்ஷ்மி ஸ்வர்ண கங்கணம்’ பரிசு அவருக்கு அளிக்கப்பட்டது. திருவையாறிலிருந்து அவருடைய நண்பர்களான பெண்மணிகள் பின்வரும் வாழ்த்துச் செய்தியை அனுப்பியிருந்தனர்: “கடவுள்களான ராமரையும் கிருஷ்ணரையும் யாரும் பார்த்ததில்லை; அவர்களது பக்தரான தியாகைய்யரைச் சிலர் பார்த்துள்ளனர்; நாகரத்தினம்மா மூலமாகத் தியாகைய்யரின் பக்தியின் முக்கியத்துவத்தை நாங்கள் காண முடிந்தது.”

ஓரிரவில் திருவையாறில், நாகரத்தினம்மாவிற்கு சத்ய சாய்பாபாவின் தரிசனம் கிடைத்தது. வெங்கடகிரியில் அவரைத் தரிசனம் செய்யச் சென்றார். அவரிடம் ஒரு தியாகராஜ கீர்த்தனையைப் பாடச் சொன்ன பாபா தாமும் உடன் பாடலானார். இவ்வாறே பல கீர்த்தனைகளைத் தொடர்ந்து இரண்டுமணி நேரம் அவர்கள் இசைத்தனராம்.

இவ்வாறு அம்மையாருக்குப் பலப்பல தெய்வீக அனுபவங்கள் கிடைத்தன. அவரது உடல்நிலை தளர்ந்து கொண்டே வந்தது. கடைசி நேரத்தில் நினைவிருக்கும்போது ராம நாம ஸ்மரணை செய்தபடியே இருந்தார். திருவையாறு பெண்டிர் ஒவ்வொருவராக வந்து பாடல்களைப் பாடலாயினர். ‘வக்கீல் சுப்பராவின் வேண்டப்படாத பெண்குழந்தை தன் முதிய பிராயத்தில் தியாகராஜரிடம் பக்தியில் ஈடுபட்டு, இறைவன் திருவடி சேர்ந்தார்,’ என்கிறார் ஸ்ரீராம். நம் கண்கள் புனாலாடுகின்றன.

ஒரு தேவதாசி இறந்தால் இறைவன் துக்கம் அனுஷ்டிப்பார்; அவருக்கு திருக்கோவிலிலிருந்து துணி அனுப்பப்படும், அவரை எரிப்பதற்கான நெருப்பு கோவில் அடுக்களையில் இருந்து அனுப்பப்படும் என்பது அக்கால வழக்கம். அதற்கேற்ப தியாகராஜருடைய படம் வைத்து ஊர்வலம் வரும் தேர் நாகரத்தினத்தின் இறுதி ஊர்வலத்திற்காக வந்தது. திருவையாறின் புராதனமான சரித்திரம் நிறைந்த ஈமக்காடு முதல்முறையாகவும் கடைசிமுறையாகவும் ஒரு பெண்ணின் உடலைத் தன்னிடம் வாங்கிக் கொண்டது.

பின்பு ஒரு நாளில் அவருடைய சிலாரூபம் அந்த சமாதியின்மீது நிறுவப்பட்டது. அமர்ந்த நிலையில் குவிந்த கைகளுடன் தியாகராஜரின் சமாதியைநோக்கி அந்தச் சிலை அமைந்தது. நாகரத்தினத்தின் நீண்டநாள் தோழியான ஹரிகதை விற்பன்னர் பன்னிபாய் அவர்கள் அவர்மேல் பாடல்களை இயற்றி ஹரிகதை வடிவிலமைத்தார். இதுவே மிக உயர்ந்த ஒரு தேவதாசி மாதின் வாழ்க்கை.

தியாகையரைப் பற்றிய மாலனின் எழுத்து:

அரசர்கள் அவரை வணங்கினர்.

           பாடகர்கள் அவருடைய பாடல்களைப் பாடி (விற்று) பிழைத்தனர்.

           ஆனால் ஒரு அரசவையணங்கு (தேவதாசி) அல்லவா

           அவருக்குக் கோவில் எழுப்பினாள்?

 

வாய்ப்புக் கிடைத்தால் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பாருங்கள்.

 

பின்குறிப்பு: என் கணவர் பாலகணேஷின் சித்தி (தாயாரின் தங்கை) திருவையாறில் நீண்ட நாட்களாக வாழ்பவர். அவர்களுடைய தந்தையார் (காலஞ்சென்ற) டாக்டர் கிருஷ்ணஸ்வாமி ஐயர் திருவையாறில் புகழ்வாய்ந்த மருத்துவர். இவரே நாகரத்தினம்மாவிற்கு வைத்தியம் பார்த்தார். ஃபீஸ் வாங்கிக் கொள்ள மறுத்து விடுவாராம். அவ்வப்போது சிறுபெண்ணான சித்தியும் தன் தந்தையாருடன் நாகரத்தினம்மாவின் வீட்டிற்குச் சென்றதுண்டு. சிறுமியை சங்கீதம் கற்றுக்கொள்ள வைக்க முயன்ற நாகரத்தினம்மா பாட்டு வாத்தியாரை ஏற்பாடும் செய்கிறேன் என்றார். அந்தக் காலத்தில் சிறு பெண்களைப் பாட்டு வாத்தியாரின் வீட்டிற்குத் தனியே அனுப்பும் வழக்கம் இல்லாமையால் அது நடக்கவில்லை, தான் சங்கீதம் கற்றுக்கொள்ள இயலாமல் போயிற்று என்றார் சித்தி. ஆயினும் சித்தியின் சங்கீத ஞானம், ராகங்களை இனம் காணும் திறமை எல்லாம் என்னை பிரமிக்க வைக்கும்!

———————————