தினமும் மதிய உணவுக்குப் பின் சற்று நேரம் கண் அயரும் பழக்கும் உண்டு எனக்கு. வீட்டில் யாரும் கிடையாது. இந்திய நாட்டின் மூத்த பிரஜைகளின் நானும் ஒருவன். என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து சென்று பல வருஷங்கள் ஆகி விட்டன; இறந்து போய் விட்டாள் என்று கற்பனை பண்ணிக்கொள்ளவேண்டாம். ‘நான் வேண்டாம்’ என்று சென்று விட்டாள். இப்போது அடிக்கடி தமிழ் பத்திரிகைகளில் வருகிறதே? ‘கருத்து வேறுபாடு’ என்று. அதுதான் காரணம். அவளுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்ததே ஓர் அசம்பாவிதந்தான். எனக்கு இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒருவர் மனைவியை இன்னொருவர் கட்ட முடியாது என்பார்களே அதுபோலத்தான் என்று நினைத்து கொள்வேன்.
அவள் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவள். நன்கு படித்தவள். அவளுக்கு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற அவா அதிகமாக வே இருந்தது. அவள் சகோதரன் அந்த நாட்களிலேயே ஐஐடியில் படித்து பட்டம் பெற்று அமெரிக்கா சென்று விட்டவன். இவளும் ஆங்கில இலக்கியம் படித்தவள். அவளுக்கும் அமெரிக்கா ஆசை இருந்தது. நான் சாதாரணன். வெறும் பி ஏ. ஒரு உபாயமான கம்பெனியில் ஓர் உபாயமான வேலையில் இருந்தேன். எனக்கு அமெரிக்கா ஆசை கனவெல்லாம் கிடையாது. எனக்கு அம்மா மட்டும்தான். அப்பா சிறுவயதிலேயே போய் விட்டார். அம்மாவின் வாழ்க்கை மாமன்மார்கள் மத்தியில் சிக்கி தவித்தது எனக்கு நன்றாக தெரியும். வேறு வழியில்லை. எனக்கு வேலை கிடைத்து நான் சம்பாதிக்க தொடங்கியவுடன் தனியாக வந்து விட்டோம். என் அம்மாவுக்கு விகடன், கல்கி, குமுதம், கதிர். மங்கை என்று பல பத்திரிகைகள் படிப்பதில் மிகவும் ஆர்வம் உண்டு. எனக்கும் அது தொற்றிக்கொண்டது.
அம்மாவின் கடைசி காலம் வரை என்னுடன் வைத்து காத்து கரையேற்ற வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால், அம்பிகா, அதாவது என் மனைவிக்கு அது பிடிக்கவில்லை. அவள் கனவு அமெரிக்கா சென்று அங்கு வேலை பார்த்து நவீனமான வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இருந்தது.
அது அவள் ஆசை, கனவு. அதை தடுக்க நான் யார்? நான் தடுக்கவில்லை. நீ உன் வேலையை பார்த்துக் கொள், நான் என்னையும் என் தாயாரையும் பார்த்துக்கொண்டு இங்கேயே இருக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.
இதில் எனக்கு துளியும் வருத்தமில்லை. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.
எனக்கு இங்கே மைலாப்பூர் அருகே ஓர் இரு படுக்கை அறை கொண்ட பிளாட் இருக்கிறது. அதில் நான் என் தாயுடன் தங்கி விட்டேன். என் அம்மா மறைந்தபிறகும் நான் இந்த வாழ்க்கையை தொடர்ந்து வாழ்கிறேன். இதிலும் எனக்கு வருத்தமில்லை. ஆனால், கட்டாயம் ஏமாற்றம் உண்டு.
ஓர் மகன் இருக்கிறான்; அவன் பிறந்தது; ஓர் விபத்து அல்லது எதேச்சை என்று சொல்லலாம். எனவே உங்களுக்கும் அவனைப் பற்றிய இதர விஷயங்கள் தேவையில்லை. அவனை அவள் உடன் அழைத்துச் சென்று விட்டாள். அவனும் படித்து எதோ ஓர் சுமாரான வேலையில் அமெரிக்காவிலேயே அவள் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கிறான். அவனும் கூட சமீபத்தில் ஓர் மெக்ஸிகன் பெண்ணை திருமணம் செய்து கொண்டு விட்டான் என்று சொன்னாள்; ‘ஓஹோ’ என்று கேட்டுக் கொண்டேன்.
ஒரு முறிந்த உறவு, எதிர்காலம் என்று சொல்லிக்கொள்ள முடியாத ஓர் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருந்தேன் என்றால் மிகையில்லை. ஆன்மிகம் என்னை கொஞ்சம் ஆட் கொண்டது. சொல்லப்போனால், ஆன்மிக ஆர்வம் என்பது ஓர் ‘செலவில்லா சிங்காரம்’. கோவிலுக்கு போக மனம் தான் வேண்டுமே தவிர வேறு எதுவும் வேண்டாம். வெளியூர் கோவில்களுக்கு என்றால் கொஞ்சம் செலவு. நான் உள்ளூரிலேயே திருமாலைக் கண்டு சேவித்தவன்.
திடீரென வாசல் மணி ஒலித்தது. ‘யார் இந்த வேளையில்?’ என்ற கேள்வியுடன் கதவை திறந்தேன்.
மிகவும் இளைஞனும் இல்லாமல், நடுத்தர வயசும் சொல்ல முடியாத ஒருவன் வாசலில் நின்றிருந்தான். வெளியில் லேசாக தூறல் விழுந்து கொண்டிருந்தது. வானத்தில் கருமேகங்கள் மழை வர போவதை கட்டியம் கூறுவது போல் இருந்தது.
‘எஸ்’ என்றேன் நான். அவன் லேசாக நனைந்திருந்தான். மாநிறத்திற்கும் குறைச்சல். முகம் லட்சணமாக இருந்தது. கண்கள் குறிப்பாக; உதடுகளில் ‘லேசான புன்னகை. அதனுடன் பிறந்தவன் போல் தோன்றியது.
‘என்ன வேண்டும்?’ என்றேன்.
‘சற்று மழைக்கு ஒதுங்க வேண்டும்,’ என்றான்.
இந்த நாட்களில் யாரை நம்புவது என்பது சற்று கடினமான செயல். என்னிடம் திருடிக்கொண்டு போகும் அளவுக்கு ஒன்றும் இல்லை; ஏகப்பட்ட புத்தகங்கள் தான் இருந்தன.
‘சரி. உள்ளே வாங்க’, என்றேன்.
கைக்குட்டையால் முகத்தை துடைத்து கொண்டு உள்ளே வந்தான்.
‘உட்காருங்கள்,’ என்றேன் நான் எதிரில் இருந்த ஓர் நாற்காலியை காட்டி.
அமர்ந்தான்.
அவன் பார்வை சுவரில் நான் மாட்டியிருந்த பல திருமாலின் படங்களில் சுழன்றது. பின் என்னை பார்த்து ‘வைணவ பக்தரோ?’ என்றான். நான் புன்னகை செய்தேன்.
‘என் பேர் கண்ணன்,’ என்றான் தானாகவே.
‘கோகுலத்து ஆயர்களை காக்க மலையை குடையாக பிடித்த கண்ணன் இந்த சின்ன மழைக்கு என் வீட்டில் ஒதுங்கி இருக்கிறாரே?’ என்றேன்.
அவன் முகம் ஓர் வினாடி தீவிரமாகியது. ஆனால் சடுதியில் அது புன்னகையாக மாறியது.
‘அது நடந்தது வேறு யுகத்தில்; இப்போது அது சாத்தியமில்லை,’ என்றான்.
அவனின் புத்திசாலித்தனமான பதில் என்னை கவர்ந்தது.
‘ஏன்?’ என்றேன்.
‘மக்கள்’ என்றான் உடனே. ‘அன்று நான் அதை செய்தபோது கோகுலத்தில் இருந்த மக்கள் மிகக் குறைவு. இந்த பகுதியிலும் இதன் சுற்று வட்டாரத்திலும் இருக்கும் ஜனத்தொகையை விட மிகவும் குறைவு.’ என்றான் சிரித்தபடி.
அவன் ‘நான்’ என்று தன்னை குறிப்பிட்டுக் கொண்டது எனக்கு வியப்பு அளித்தது. ‘ நான்’ என்றா சொன்னீர்கள்? நீங்கள் என்ன அந்த ஆயர்பாடி கண்ணனா ?’ என்றேன் கேலியாக.
அவன் புன்னகை மாறவில்லை. ‘அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன்?’ என்றான் சிரித்தபடி.
‘அப்படியா? பாற்கடலில் அமைதியாக உறங்க வேண்டிய நீங்கள் எதற்காக பூமிக்கு வந்திருக்கிறீர்கள்?’ என்றேன் கேலியாக.
‘உங்கள் மொழியில் சொல்லவேண்டுமென்றால் ‘போரடித்தது’ அதனால்தான் கிளம்பி வந்தேன் என்றான் சிரிப்பு மாறாமல்.
‘நான் வெறுமே கேலி செய்தேன். நீங்கள் அதை ‘சீரியஸ்’ ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். சாரி,’ என்றேன் சமாதானமாக.
இப்போது கண்ணன் கலகல வென்று சிரித்தான். அவன் சிரிப்பு இசையுடன் இனிமையாகவும், அழகாகவும் இருந்தன.
ஏனென்று தெரியாமல் எனக்கு அந்த இளைஞனைப் பிடித்தது; அவனுடன் பேரசுவது சுவாரஸ்யமாக இருக்கும் போல் தோன்றியது.
‘நான் காபி குடிக்கும் நேரம். நீங்கள் காபி குடிப்பீர்களா?’ என்றேன். தொடர்ந்து ‘உங்களுக்கு ‘பாலும் வெண்ணெயும் தானே பிடித்த பண்டங்கள்?’ என்று சொன்னேன். அவன் முகம் சற்று மாறியது. ‘அப்படி ஒன்றும் இல்லை. அந்தந்த காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்றபடி உணவு பழக்கங்கள் மாறுகின்றன,’ என்றான். நான் பதில் சொல்லாமல் சமையல் அறைக்கு சென்றேன். ‘யாரோ இவன்? இவனை ஹாலில் உட்காரவைத்துக்கொண்டு வெட்டி பேச்சு பேசியதோடு அவனுக்கு காபி வேறு கொடுத்து உபச்சாரம் செய்கிறேனே, ஏன்?’ என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.
காபியையும் எனக்கு ஓர் கோப்பையிலும் அவனுக்கு மற்றொன்றிலுமாக கொண்டு வைத்து ‘எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றேன்.
அவன் எதோ தீவிர யோசனையில் ஆழ்ந்து இருப்பது போல் தோண்டியது; அதே சமயம் வெளியில் மழை வலுத்து இருந்தது. ஓசையுடன் பெய்து கொண்டிருந்தது.
‘என்ன யோசனை?’ என்று கேட்டேன். ‘நீங்கள் மிகுந்த இறை நம்பிக்கை உள்ளவர் என்று தோன்றுகிறது,’ என்றான்.
நான் உடனே பதில் தரவில்லை. ‘என் வாழ்க்கையில் எனக்கு நிகழ்ந்த அநீதிகளை பட்டியலிட்டால் நான் எப்படி இத்தனை நாட்களாக, ஏன் இன்னும் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தோன்றுகிறது.’ என்றேன் கசப்புடன்.
‘தெரியும்,’ என்றான் கண்ணன்.நான் திடுக்கிட்டேன். ‘எப்படி? நான்தான் ஒன்றுமே என்னைப்பற்றி சொல்லவில்லையே?’ என்று கேட்டேன். அவன் முகம் சற்று மாறியது. ‘ஆமாம்..ஏதோ வாய் தவறி வந்துவிட்டது,’ என்றான் சமாதானமாக புன்னகையுடன்.
இப்போது நான் அவன் முகத்தை உற்று பார்த்தேன். அதில் என்னால் ஏதோவொரு வித்யாசத்தை உணர முடிந்தது. ‘என்ன அது?’
பின்னர் அவனே ‘இப்போது கடவுள் பக்தி மிகவும் அதிகமாக இருப்பது போல் தோன்றுகிறது!’ என்றான் புன்னகையுடன்.
‘ஆம். பல கோவில்களில் திருவிழாக்களும், தேரோட்டமும் அமர்க்களப் படுகிறது.,’ என்றேன்.
‘ஆனால், அதே அளவு குற்றங்களும் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறதே?’ என்றான்.
‘அதற்கு அளவே இல்லை,’ என்ற நான் தொடர்ந்து ‘எந்த யுகத்தில்தான் குற்றங்கள் குறைவாக இருந்தன?’ என்று கேட்டேன்.
அவன் சற்று யோசனையில் ஆழ்ந்தவன் போல் தோன்றினான்.
‘ஐ ம் சாரி. உங்களிடம் போய் கடந்த காலங்களை பற்றி பேசுகின்றேன்?’ என்றேன் தொடர்ந்து.
அவன் மீண்டும் சிரித்தான். ‘அதான் வந்து உடனேயே பேசி விட்டீர்களே? மலையை குடையாய் பிடித்தவன் என்று?’ என்றான்.
‘ஆனாலும் பாண்டவர் கௌரவர் பகையும், குருக்ஷேத்திர யுத்தமும் மிகவும் கொடுமையானவை,’ என்றேன் நான்.
‘உண்மைதான்,’ என்றான் கண்ணன்.
‘நீங்கள் நினைத்திருந்தால் தடுத்து இருக்கலாம் இல்லையா?’ என்று கேட்டேன்.
அவன் சற்று திடுக்கிட்டான் போல் இருந்தது. ‘நானா?’ என்றான் அதிர்ச்சியுடன்.
‘ஆம், நீங்கள்தானே எல்லா குழப்பம், பகைமை, யுத்தம் எல்லாவற்றிற்கும் காரணம்?’ என்றேன் நான்.
‘அடேடே…என்ன இது? நீங்கள் எல்லா பழியையும் என்மேல் திருப்பி விடுகிறீர்கள்?’ என்றான் அவன்.
‘உண்மை அதானே?’ என்றேன் நான் விடாமல்.
‘இல்லை. ஒவ்வொருவர் செய்யும் காரியங்களுக்கும் அவரே பொறுப்பாகிறார்கள்; மற்றவர்கள் அல்ல,’ என்றான் அவன்.
எனக்குள் சீற்றம் பொங்கியது. ‘என் வாழ்க்கை, மற்றும் எனக்கு தெரிந்த ஓர் சிலரின் வாழ்க்கையை வைத்து சொல்கிறேன்.’
அவன் பதில் பேசவில்லை.
‘என்ன? உங்களிடம் பதில் இராதே? போன ஜென்ம பாவம், புண்ணியம் என்று அளந்து கொட்டுவீர்கள், அப்படித்தானே?’ என்றேன் நான் உஷ்ணமாக.
நான் ஏன் இப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசினேன், அதுவும் முன் பின் தெரியாத ஒருவனிடம் என்று கூட தோன்றவில்லை. ஏனென்று தெரியாமல் எனக்கு அந்த இளைஞனைப் பிடித்தது; அவனுடன் பேரசுவது சுவாரஸ்யமாக இருக்கும் போல் தோன்றியது.
அவன் எதோ தீவிர யோசனையில் ஆழ்ந்து இருப்பது போல் தோன்றியது; அதே சமயம் வெளியில் மழை வலுத்து இருந்தது. ஓசையுடன் பெய்து கொண்டிருந்தது.
கண்ணன் உடனே பதில் தரவில்லை. பின் தொடர்ந்தான்.’அந்தக்காலத்து குற்றங்களுக்கு என்னை குறை சொன்னீர்கள். சரி. இன்றுதான் உங்கள் மக்கள் அறிவிலும், நாகரீகத்திலும், செல்வச்செழிப்பிலும் மேம்பாட்டு இருக்கின்றார்களே ? அவர்களுக்கு தெரியாதா, தான் செய்யும் காரியம் சரியாய் தவறா என்று ?’
‘நீங்கள் நினைத்தால் முடியும்,’ என்றேன் நான். அவன் முகத்தில் வியப்பு தோன்றியது.
‘எதை வைத்து சொல்கிறீர்கள்?’ என்றான் அவன்.
‘நீங்கள் தானே கடவுள், கண்ணன், மகா விஷ்ணு என்றெல்லாம் ஒப்புக்கொண்டீர்கள் சற்று முன்?’ என்றேன் நான் சூடாக.
கண்ணனின் முகம் மாறியது. ‘இருக்கலாம். ஆனால் என்னால் முடியாது.’ என்றான்.
‘இந்தக்கால பெற்றோர்களால் அவர்கள் பெற்று வளர்த்த பிள்ளைகளை தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நடக்க வைக்க முடிகிறதா?’ என்று கேட்டான். ‘ஏன் இல்லை? பெற்றோர் தானே படிக்க வைத்து சொத்து சுதந்திரங்கள் சேர்த்து வைத்து கல்யாணம் செய்து எல்லாம் செய்கிறார்கள்? அவர்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்கிறார்களா?’ என்றான் கண்ணன்.
‘இல்லை, அவர்கள் மனதை நீங்கள் நினைத்தால் மாற்றலாமே? மக்கள் எந்த அளவு உங்களை நம்புகிறார்கள்?’ என்று கேட்டேன்.
‘எந்த அளவு? அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே. அதை என்னால் கொடுக்க முடிந்தால்தானே?’
‘ஏன் முடியாது? ஓர் தந்தையின் தாயின் மனதின் கவலைகள் உங்களுக்கு தெரியாதா? அவர்கள் பிள்ளைகள் தவறு செய்யும் போது நீங்கள் ‘அவர்களின் மனதை மாற்றி நல்வழி காட்டலாமே?’ என்றேன் நான்.
‘முடியாது,’ என்றான் கண்ணன்..’இன்றைய உலகில், மக்களே கடவுள்கள் போல் செயல் படுகின்றனர். அவர்களின் விவகாரத்தில் நான் தலையிடுவது தவறு. முடியவும் முடியாது. ‘
‘தர்மம், அதர்மம்’ என்று ஒன்று கிடையாதா?’ என்றேன் நான் கோபத்துடன்.
கண்ணன் புன்னகை செய்தான். ‘கிடையாது, இப்போதல்ல. எப்போதுமே. நான் தடுத்திருந்தால் யுதிஷ்டிரன் சூதாடி இருக்க மாட்டான் என்றா நினைக்கிறீர்கள்?’ என்றான்.
‘ஆமாம்,’ என்றேன் நான்.
‘தவறு. அவன் ஆடாமல் போயிருக்க மாட்டான். அது அவன் கௌரவ பிரச்சினை. என் பேச்சை மீறி ஆடித்தான் இருப்பான்.’
‘என்னது?’ என்றேன் நான் வியப்புடன். ‘அவன் தர்மத்தை கடை பிடிப்பவன் இல்லையா?’ என்றேன் நான்.
‘ஆமாம். அவன் தர்மத்தை அவன் கடை பிடித்தான். ஓர் அரசன் மற்றொருவனை சூதாட அழைத்தால் வரவேண்டும். இல்லை என்றால் அவன் கோழை என்று பட்டம் கட்டுவார்கள். அதை வாங்கிக்கொள்ள தர்மனுக்கு விருப்பம் இல்லை. கௌரவ பிரச்சினை. கௌரவர்களால் வந்த கௌரவ பிரச்சினை.’
‘என்றும் அவரவர் துன்பத்திற்கு அவர்களேதான் காரணம். என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நான் விதி என்று பழி போடவில்லை. அவரவர் செயல்கள் அவர்கள் விதியாகிறது.’
எனக்கு பதில் தெரியவில்லை. அவனே தொடர்ந்து பேசினான்.
‘கண்ணனை வாயில் வந்தபடியெல்லாம் துரியோதனன் சாகும்முன் குளத்தில் இருந்தபடி பேசியதை நீங்கள் படிக்கவில்லையா? அவன் வேண்டுமென்றே பழி எல்லாவற்றையும் என் மீது சுமத்தினான். அதை அவன் கேட்டுக்கொண்டுதானே இருந்தான்?’
‘குருக்ஷேத்திர யுத்தத்திற்கு பின் பாண்டவர்களுக்கு என்ன கிடைத்தது? ராஜ்ய பரிபாலனம், அத்தனை குழந்தைகளும், அஸ்வத்தாமனால் கொலையுண்ட பின்னர், அதனால் என்ன பலன்? குருட்டு திருதிராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் என்ன லாபம்? நூறு பிள்ளைகளையும் போரில் பலி கொடுத்த பிறகு? இவை எல்லாமே அவர்களாகத் தேடிக்கொண்ட வினைகள் தானே? இதில் கண்ணன் பங்கு என்ன?’
‘அவ்வளவு ஏன்? கிருஷ்ணனின் இனத்தவர்களே ஓர் கட்டத்தில் கோரைப்புல்லை எடுத்து ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு மாண்டுதானே போனார்கள்? கிருஷ்ணனே அதை கண்டுகொள்ள வில்லையே?’
‘ஒவ்வோர் யுகத்தின் அழிவிலும் தான் வருவேன் என்று கிருஷ்ணன் சொன்னாரே?’ என்றேன் நான்.
அவன் தோள்களை குலுக்கினான். ‘வரலாம். அதற்கான சூழ்நிலை இன்னும் உருவாகவில்லையோ என்னவோ? யாருக்கு தெரியும்?’
‘இதை விட மோசமாகவா?’ என்றேன் நான்.
அவன் புன்னகை செய்தான்..’மோசத்திற்கு அளவுகோல்கள் இருக்கின்றனவா என்ன?’
சிறிது மவுனத்திற்கு பின் கேட்டேன். ‘ஆக, ஒருவர் தவறுக்கும், தண்டனைக்கும் அவரவர்களே காரணம் என்கிறீர்கள். அப்படித்தானே?’
‘ஆம்’ என்பது போல் தலையசைத்தான் கண்ணன். ‘உங்கள் விஞ்ஞான விதிப்படியே நான் சொல்கிறேன்; ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர் வினை உண்டு என்று உங்கள் விஞ்ஞானம் சொல்கிறதா இல்லயா?’
‘ஆம்’ என்பது போல் தலையசைத்தேன் அவனே தொடர்ந்து பேசினான்.
‘ஆனால் இன்றைய உலகத்தில் மக்களின் ஆணவம் தலை விரித்து ஆடுகிறது. இதற்கான பலன்களையும் அவர்களோ அல்லது அவர்கள் சந்ததிகளோ அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.’
‘ஆக உங்கள் கையில் ஒன்றும் இல்லை என்கிறீர்கள்?’ என்றேன் நான் கடுமையாக. ‘ஆம். என்றுமே என் கையில் எதுவுமே இருந்ததில்லை. அப்படி சொல்வதெல்லாம் உங்கள் வார்த்தைகளின் சாதுர்யம். அவை நிஜமில்லை.’
நான் பேச்சிழந்து அமர்ந்திருந்தேன். மழை நின்று விட்டது போல் இருந்தது. அவன் சட் என்று எழுந்து நின்றான்.
எனக்கு எனவோ அவன் வானத்திற்கும் பூமிக்கும் ஒன்றாக நிற்பது போல் தோன்றியது.
‘நான் வருகிறேன், நன்றி. நான் இன்னும் சில இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது,’ என்றான் சிரித்தபடி.
‘எதற்காக?’ என்றேன் நான்.
‘யுகங்கள் மாறினாலும் மனிதர்கள் மாறுவதில்லை; அதுதான் மனித இனத்தின் சோகம். மனிதர்களை புரிந்து கொள்வதற்காக.. அதுதானே என் வேலை மற்றும் பொழுதுபோக்கு?’ என்று சிரித்து விட்டு வெளியே சென்றான்.
***
நான் அசையாமல் எத்தனை நேரம் உட்கார்ந்திருந்தேன் என்று தெரியவில்லை. மாலையில் வீட்டுக்கு சமையல் செய்ய வரும் பெண்மணி ‘என்ன அய்யா, கதவை திறந்து வைத்துக்கொண்டே தூங்கறீங்க?’ என்றாள் வியப்புடன்.
நான் திடுக்கிட்டு கனவில் இருந்து விழித்தவன் போல் பார்த்தேன்.
‘வெளியே மழை பெய்கிறதா என்ன?’ என்றேன் நான்.
‘ஆமாம், கொஞ்ச நேரம் முன்னாலே லேசாக மழை பெய்தது,’ என்றாள் அவள்.
அவள் அதற்குள் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு பெருக்க வந்தவள் எனக்கு எதிரே இருந்த நாற்காலியின் கீழே பார்த்து விட்டு ‘அட, இது எப்படி இங்க வந்திச்சு?’ என்று கையில் எடுத்து என்னிடம் காட்டினாள்.
அது ஓர் மயிலிறகு. நான் சற்று திடுக்கிட்டேன்.
‘ அட…நம்ம பக்கத்து வீட்டு பாப்பா எதோ ஒரு புத்தகத்தையும் இதையும் எடுத்திட்டு வந்திச்சு. இத மறந்து போய் விட்டிட்டு போயிடிச்சு போல..’ என்றபடி அந்த மயிலிறகை கையில் எடுத்து அருகில் இருந்த மேசை மீது வைத்தாள்.
நான் ஒன்றும் பேசவில்லை.


என்ன மாயம்! அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றவனா?
ஸ்ரீராம்
LikeLike