கொள்வோர் கொள்க குரைப்போர் குரைக்க
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது
நானே தொடக்கம் நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்! – கண்ணதாசன்
‘பச்சை’ எனப்படுபவன் வளர்த்திருந்த மரம் செடி கொடிகள் நூல்நிலையத்தில் செழித்திருந்தன! வண்ணப் பூக்களின் மணமும், பட்டாம்பூச்சிகள் வண்டுகளின் ரீங்காரமும் பறவைகளின் பாடல்களும் வரவேற்றது!
பச்சையின் கைவண்ணத்தின் தாக்கத்தாலும் அந்தப் பகுதி வாசிகளின் பராமரிப்பாலும் அந்த இடமே ரம்மியமானது! இதைத்தான் கவிஞர் லாங்ஃபெலோ, “Leave footprints on the sands of time!” (காலத்தின் மணற்பரப்பில் காலடிச்சுவடுகளை விட்டுச்செல்!) என்றார். செயலே அடையாளமாகும்!
இந்த நூல்நிலையத்தின் அதிபர் மாதவன் பலகோடி சொத்துள்ள ஐம்பத்தைந்து வயதான உற்பத்தியாளர். நடை உடை உரையாடலில் கம்பீரம் இருந்தது!
நூல்நிலையத்தின் ஒவ்வொரு பிரிவிலும் அரிதான நூல்கள்! ஆர்வத்துடன் உறுப்பினர்கள் சேர்ந்தார்கள்.
இந்த ரம்மியமான இடத்தில் வாராவாரம் மனநலம் அறிதல் பயிலரங்கத்தை நான் நடத்தி வந்தேன். மாதவனும் பங்கேற்றார்.
அன்றொரு நாள் நூல்நிலையத்திற்கு அதிக காய்ச்சலுடன் மாதவன் வந்திருந்தார். மத்திய உணவிற்குக் கிளம்பும் போது வாசற்படியில் மயக்கமானார். உடல் தகதகவென கொதித்தது. அதிக இரத்த அழுத்தத்தினால் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டார். உயிரைக் காப்பற்றப் பிரயத்தனங்கள் ஓடின.
மாதவனுக்கு இந்த பிரயத்தனங்கள் தெரிந்தது. மிகவும் இக்கட்டான ஒரு க்ஷணத்தில் மாதவனுக்கு மின்மினிக்கும் ஒளியை நோக்கித் தொடுவதற்கு முயல்வதாகத் தோன்றியது. அந்த நொடியில், வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் மின்னல் வேகத்தில் எண்ண ஓட்டங்களில் தோன்றிய போது, “பிள்ளைகள்! சமாளிப்பு?” என்ற கேள்வி எழுந்ததுமே, கீழே தள்ளி விட்டார்போல இருந்தது. மாதவன் கண் விழித்தார். நினைவிழந்த நிலையில் வினோதமான அனுபவம்!
அனுபவம் தோன்றியதிலிருந்து ஒரேயடியாக மாறிவிட்டார். பலரிடமும் பகிர்ந்தார். முன்பைவிட எளிமையானார். இவ்வாறு பகிர்வதும் ஆவதும் இயல்பே என ஆராய்ச்சிகள் காட்டுகின்றது!
தன்னுள்ளே ஏற்பட்ட திருப்பங்களைப் பகிர வேண்டும் என்றார். ஸெஷன்களை ஆரம்பித்தேன்.
அவற்றிலிருந்து சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அனுபவத்தை மாதவன் வர்ணித்தார்! மயக்கமடைந்த க்ஷணமே, ஆகாயத்திலிருந்து தோன்றிய வெளிச்சத்தைப் பொன்மாரி பொழிந்தது எனப் பார்த்திருக்க, அலாதி நிம்மதி சூழ்ந்ததாம். அந்தக் கணத்தில், தான் வாழ்நாளில் உச்சரித்த சொற்கள், அவற்றின் தாக்கம், உணர்வு இப்படி முழு நினைவுகளையும் மீட்பில் கண்டாராம். அப்படிக் காண்கையில் “மிச்ச வேலை?” எனத் தோன்றியதுமே பொன் நிறம் மறைந்ததாம். கண்கள் திறந்தது! அவசரப் பிரிவில் “ஆபத்துக் கட்டம் தாண்டிவிட்டது” என்றது மாதவனுக்குக் கேட்டது.
மரணத்தருவாயிலிருந்து திரும்புவோர் சிலர் அனுபவிக்கும் “Near Death Experience (NDE)” மாதவனுக்கு நேர்ந்தது. மகிழ்ந்து தம்முடைய பிரமிப்பைப் பகிர்ந்து கொண்டே இருந்தார்.
ஆராய்ச்சியாளர்கள், எல்லா கலாச்சாரத்திலும் இது போன்ற அனுபவத்திற்குப் பிறகு அதற்குள்ளானவர்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதம், செய்ய வேண்டியவற்றை மாற்றி அமைத்ததைக் குறித்திருக்கிறார்கள். மாதவனும் அவ்வாறே!
நூல்நிலையத்திலும் தொழிற்சாலையிலும் ப்ராஜெக்ட் செய்ய பல்வேறு வசதிகள் செய்தார். பலருக்கு உதவியது! வெகுதொலைவில் உள்ளவர்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.
அப்போதுதான் பச்சை அறிமுகமானார். யாரோ ஒருவரின் பேச்சை ஏற்று, தம்முடைய விவசாய நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவிட்டு மாதவனின் தொழிற்சாலையில் சேர்ந்தார். எப்போதும் தாவரங்கள், ஏரி குளம் பராமரிப்பு, பூமி பாதுகாப்பை வலியுறுத்திப் பேசுவதால் பச்சை என அழைக்கப்பட்ட பெயரே நிரந்தரமானது!
தொழிற்சாலை ஜன்னல்களின் வழியாக வெளியே பார்க்கும் போதெல்லாம் பச்சை உச்சுக்கொட்டி வருத்துப் படுவதைக் கேள்விப்பட்டார் மாதவன். அவரிடம் பச்சை வெளிப்படையாக “நிழலே இல்லை. வெறிச்சோடியாகக் கிடக்கு. வறண்டப் பூமி பாடுபடும். தண்ணீரை உறிஞ்சிடும்” என எச்சரித்தார்.
உடனே மாதவன், “இந்த பூமித் தாயை நன்றாக அரவணைத்துப் பார்த்துக்கொள்” என்றதுமே பச்சை மகிழ்ந்தார். விளைவு, பச்சையின் கைவண்ணத்தைப் பார்த்து எல்லோரும் மனமகிழ்ந்தார்கள்.
பூரித்துப் போன மாதவன் குத்தகைக்குத் தந்த நிலத்தையும் மீட்டு எடுத்தார். பச்சையின் மகன்களை பிடித்தமானதன்படி இயற்கை வேளாண்மை மற்றும் அறிவியல் சார்ந்த நிலப் பாதுகாப்பில் பயிற்சி பெறச் செய்தார். இயற்கையைப் போற்றுவது நம் கலாச்சாரத்தில் கலந்ததாயிற்றே! மாதவன் மனம் நிறைந்தது!
மாதவனின் தனித்துவம் மேலோங்கியது! கவலைகளைச் சுமந்துகொண்டு வேலைக்கு வருவோரைப் பார்த்ததுமே நுழைவாயில் நிறுத்தி விடுவார். அவர்களிடம் சுருக்குப்பையைக் கொடுத்து, “சுமந்து வந்ததைப் போட்டுவிடு! கவலைப்பட்டால் பதில் வராது. மனதைத் திசை திருப்பு! தெளிவு பெறுவாய். பதில் தோன்றும்!” என்பார். தயங்குவோரிடம், “நாளையைப் பற்றி அல்ல. இன்றைய பொழுதை ரசி. இந்த க்ஷணத்தில் செய்வதைச் சிறப்பாகச் செய், நாளைய பொழுதும் இனிதாக மலரும்!”. கடைப்பிடித்தவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளையும் கண்டு வாழ்முறையையும் மாற்றிக் கொண்டார்கள்!
இந்த மனோபாவத்தில் உள்ளதால் மாதவன் இயங்கும் இடத்தை ‘தியானித்தல்’ என வர்ணித்தார்.
எல்லோரிடமும் நற்குணத்தை அடையாளம் கண்டார். பரபரப்பின்றி இயங்குவதின் சிறப்பையும் நிம்மதியையும் பகிர்ந்தார். யாவரின் வளர்ச்சியிலும், நலனிலும் அக்கறை காட்டினார்.
பூமியில் செய்ய விரும்புவதைத் தீர்க்கமாக ஆராய்ந்தோம்.
மகன்கள் தொழிற்சாலை பிரிவுகளைப் பார்த்துக் கொள்வதைப் பற்றி அவருடைய சஞ்சலம் வெளியானது.
இந்த சஞ்சலத்தினால் மரணத்தின் விளிம்பிலிருந்து பூமிக்குத் திரும்பினோம் என மாதவன் உணர்ந்தார்.
முன்பெல்லாம் மகன்கள் தொழிற்சாலை நடத்துவதைக் குறைகூறுவார். அனுபவத்திற்குப் பின்னர் மகன்கள் தொழிற்சாலையைத் திறமையாகப் பார்த்துக் கொள்வதை ஒப்புக்கொண்டார்.
ஸெஷனில் நுணுக்கமாகச் சிந்திக்க, தெளிவானது! அவர்களுக்கு வேலைகளைத் தந்திருந்தார். பொறுப்பை அல்ல. எடுக்க வேண்டிய ஒவ்வொரு அடியையும் மாதவன் சொற்படிச் செய்தார்கள். அவர்களாக இயங்க வாய்ப்புகள் அளிக்கவில்லை! மகன்களோ கைகோர்த்துச் செய்தார்கள்!
மாதவனை மனக்கண்ணாடியில் பார்க்கச் செய்தேன். மனநிலையைப் புரிந்து கொள்ளக் கேள்விகள் எழுந்தன – தன்னிடமிருந்து அதிகாரம் போய்விடுமோ என்ற அச்சமா? மகன்களின் திறமையில் குறைபாட்டை மட்டுமே பார்த்ததாலா? தன்னை விட்டுப் போய்விடுவார்கள் என்ற பயமா? என்ற கோணங்களில் பார்வையைப் போகவைத்தேன்.
இவ்வகை எதிர்மறையான உணர்வுகள் உதவுவதில்லை, அர்த்தமுள்ள வாழ்வை உருவாக்கவில்லை என உணர்ந்தார்!
ஸெஷனில் சுய ஆராய்ச்சி (Reflection) செய்ய, பலன் அளித்ததை அனுபவித்தார்! மாற்றத்தை உருவாக்க இது மிக முக்கியமான பாதை என்று ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. இத்துடன் அர்ப்பணிப்பை (commitment) முழு மனதோடு செய்வதின் பங்கை அவரிடம் எடுத்துக் கூறினேன்! எங்கள் துறையில் க்ளையண்ட் முன்னேற இந்த இரண்டிற்கும் பிரதான இடமுண்டு!
பொறுப்புகளைப் பிரித்தார். மகன்களிடம் இயல்பாக, மனத்திருப்தியுடன் பழக, அன்று முழுவதும் தெம்பாக இருந்ததை அறிந்தார். மனநலன் ஆராய்ச்சியில் இவ்வாறு செயல்படுபவர்கள் உடல் மனநலன் செழிப்பதைக் கூறுகிறார்கள்! தன்நலமற்ற சந்தோஷத்தின் தாக்கம் மாதவன் உடல் மன நலத்தில் காண்பதைப் பற்றிப் பகிர்ந்தார்.
மகன்களும் உற்சாகமாகச் செயல்பட, வியாபாரம் நன்றாகச் சென்றது. மகன்கள் புதுத் தெம்புடன் செயல் படுவதைப் பார்த்து மனத்திருப்தி அடைந்தார்; முன்பே செய்திருக்கலாம் என்றார் மாதவன்!
மாதவன் மோகன் மார்டின் என்பவருடன் வந்து மரணத் தருவாய் அனுபவம் பற்றி மோகன் தெளிவு பெற ஸெஷன் வேண்டும் என்றார். ஒப்புக்கொண்டேன்.
விளக்கங்களை அளித்தேன். உதாரணத்திற்கு மாதவன் போல் அனுபவம் பெற்றவர்களுக்கு அவரைப் போலவே ஊக்கம் அதிகரித்திருக்கும், உளைச்சல் ஆகாது என்றதும் மார்ட்டின் நமுட்டுச் சிரிப்புடன் “இப்படியே இருந்துடுவாரா?” என்று சொன்னது எச்சரிக்கை மணியாக ஒலித்தது.
பிறகு பல வாரங்களுக்கு மாதவன் வர முடியாமல் போனது. வேலையில் சிக்கல் என்றார்.
மீண்டும் வந்தபோது மோகன் மார்டினுடன் மகன்கள் ப்ராஜெக்ட் செய்ய முடிவானதை விவரித்தார். மகன்களுக்கு அனுபவம் தேவை என்று அவர்கள் மீது நம்பிக்கை வைத்துச் செய்ய ஊக்குவித்தேன் என்றார்.
லாபம் தென்படாததால் மோகன் மார்டின் திருத்தங்களைப் பலவந்தமாகச் செய்ய, பெரிய நஷ்டமானது. மகன்கள் வேதனையில் மூழ்கினார்கள்.
மாதவன் கொஞ்சமும் அசரவில்லை. மகன்கள் வியந்தார்கள்.
தந்தையின் மனநலம் சரியா என்ற அச்சம் வாட்டியதால் அவருடைய அணுகுமுறையை அறிய மாதவனுடன் என்னைச் சந்தித்தார்கள். அனுபவத்தின் தாக்கத்தால் மனச் சஞ்சலங்களைத் திறமையாகச் சந்திக்கும் பக்குவம் மாதவன் பெற்றிருந்ததைப் புரிந்து கொண்டார்கள்.
தந்தையின் உயர்ந்த நிலையை அறிய, மகன்கள் கடந்த வாரங்களை வர்ணிக்க வர்ணிக்க ஒவ்வொரு திருப்பத்திலும் சிறு சிறு குறுக்கு வழிகளை மோகன் மார்டின் செய்ததை உணர்ந்தார்கள். நிதர்சனத்தைப் பார்க்காததை உணர்ந்தார்கள். பித்தலாட்டம் நஷ்டத்தைத் தந்தது. மாதவனைப் பொறுத்தவரை இந்தப் புரிதலால் இழந்த நஷ்டத்தை மகன்கள் மீட்டு எடுப்பார்கள் என்றார். அதேபோல நாளடைவில் மீட்டு வரத் தொடங்கினார்கள்.
இந்த அனுபவத்தின் பிறகு மகன்களுக்குப் புதுத்தெம்பு வந்தது! தந்தை மேல் மரியாதை கூடியது கண்முன் தெரிந்தது!
நெடுநாட்களாக மூன்று ஏக்கர் நிலத்தில் விடுதி அமைக்கும் கனவை மகன்களுடன் பகிர்ந்தார் மாதவன். மகன்கள் பூரித்துப் போய் ஒப்புக்கொண்டார்கள்.
மாதவனுடையது போன்ற அனுபவத்திற்குப் பிறகு நிபந்தனையற்ற செய்கை நிலவும். நம்பிக்கை மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக இருக்கும்!
நிலத்தை நான்கு பாகமாக நியமித்தார். தங்குவதற்கான வசதியும், ஒரு பகுதியில் உணவு சாப்பிடவும், விளையாடவும். குறிப்பாக, கடைசிக்கட்ட உடல்நலக்குறைவு குழந்தைகள் வர வாகன வசதியும் செய்தார்கள்.
அங்கு வருவோர் உபயோகமான பொருட்கள் செய்யப் பட்டறை போல அமைத்தார். செடி, கொடி, மரத்தைத் தேர்வு செய்து, அதை நட்டுப் பெயரும் சூட்டினார்கள். பூ, பழம், பொருள் யாரோ ஒருவருக்கு! இருந்தும் மனதிற்குச் சந்தோஷமே!
அர்த்தமுள்ள வாழ்வை உருவாக்கப் பல சிந்தனையால் தியானித்தல் உருவானது!
நல்லெண்ணங்கள் பொழிய,
வாழ்வின் நோக்கத்தை
அறிதல் முக்கியமே!
மனக் கண்ணாடி வழிகளைத் தேர்ந்தெடுக்கும்!
எல்லோரும் நலம்பெறச்
செயல்படுவோமே!
****************************************

