எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்தே ஏகுமென் சாலை
தலைவர் மாறுவர் தர்பார் மாறும்
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம் – கண்ணதாசன்

 

 

       “ஏங்க இப்பிடி நடந்தது ? நாம பிரகாஷுக்கு என்ன குறை வெச்சோம் ? அவனை நல்லா பொறுப்பா பார்த்துப் பார்த்துதானே வளர்த்தோம் ? எப்பப் பார்த்தாலும் அவனுக்கு என்ன வேணும் என்ன வேணும்னு, அவனையும் அவனோட தேவைகளையும் வெச்சுதானே எல்லாமே செஞ்சுக்கிட்டு இருந்தோம் ? பின்னே, ஏன் இப்பிடி ?”

  – மாலதி, கணவர் ரங்கநாதனிடம் இது போலக் கேட்பது முதல் தடவையா என்ன ? பொழுது விடிந்து பொழுது போவதற்குள், திரும்பத்திரும்ப தினம் தினம் நூறாயிரம் தடவை கேட்டு நச்சரிக்கின்ற கேள்விதானே !

    ரங்கநாதனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கோபம் பொத்துக் கொண்டு வந்தது அவருக்கு. அந்தக்கால இளவயது ரங்கநாதன் ஆக இருந்தால் பொரிந்து தள்ளி இருப்பார். கால ஓட்டமும் நிதர்சனத்தின் கசப்புகளும் அவருக்கு எக்கச்சக்கமான பொறுமையை வளர்த்து விட்டிருந்தன. இருபதில் இருந்ததுபோல் அறுபதில் இருக்குமா ?

   எரிச்சல் இயற்கையிலேயே தோன்றினாலும் அதை எளிதில் அடக்கி விட்டு, மீண்டும் திரும்ப திரும்ப மாலதியிடம் வாய் வலிக்காமல்  சொல்லிக் கொண்டிருக்கும் வசனத்தையே இன்னொரு முறையும் கிளிப்பிள்ளை போல் சொன்னார். இயலாமை அவருடைய ஒவ்வொரு சொல்லிலும் அங்க அசைவிலும் வெளிப்பட்டது.

   “எத்தனை தடவை சொல்றது மாலதி,,,,? வீ ஹேவ் டு அக்செப்ட் தி ரியாலிட்டி. வேற வழியில்லை…. உன்னோட கேள்விக்கெல்லாம் பதிலே இல்லை… வாழ்க்கைலே சில விஷயங்கள் அப்படித்தான். ஏன் எதுக்குன்னு புரிஞ்சிக்க முடியாது….இதுக்குதான் பிராரப்த கர்மம், பூர்வ ஜென்ம பாவத்தோட பலன்னு ஒரு விளக்கத்தைக் கொடுத்துட்டுப் போயிருக்காங்க பெரியவங்க – கொஞ்ச நேரம் பிரகாஷைப் பத்தி நினைக்கிறத மறந்துட்டு, வேற ஏதாவது வேலையைப் பாரு ! என்னையும் என்னோட இந்த புத்தகத்தைப் படிக்க விடு !”

      ரங்கநாதன் மாலதியின் ஆற்றாமையை புறந்தள்ள நினைத்தாரே தவிர, அவருக்கே பிரகாஷின்  நடவடிக்கைகள் தாங்க முடியாத மன வேதனையை கொடுக்கத்தான் செய்தது. அவரும் கசப்பு மருந்தாக அவனுடைய செயல்பாடுகளையும் நினைவுகளையும் விழுங்கத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

   ஆமாம். அவர்கள் இருவருமே தங்கள் ஒரே மகன் பிரகாஷின் மேல் உயிரையே வைத்திருந்தார்கள். அவன் பிறந்ததிலிருந்தே அவர்கள் வாழ்க்கை முழுவதுமாக மாறிவிட்டது. எல்லாமே அவனைச் சுற்றியே அமைத்துக் கொண்டார்கள். அவர்களுடைய சுய தேவைகளை புறந்தள்ளிவிட்டு, முழுக்க முழுக்க பிரகாஷின் வளர்ச்சியிலேயே நேரத்தையும் கவனத்தையும் செலவழித்தார்கள். சராசரி பெற்றோர்களை விட அவர்கள் செய்த தியாகம் நிச்சயம் கூடத்தான். மற்ற குடும்பங்களில் சினிமா, டிராமா, ஹோட்டல் என்று சுற்றியவர்கள் பலரைத் தெரியும். க்ளப்பிலேயே பழியாய்க் கிடந்தவர்கள், சோசியல் வொர்க், லேடிஸ் கிளப் என்று வீட்டை கவனிக்காமல் ஓடியவர்கள் என்றும், சுற்றுலா கேளிக்கை என்று பணத்தை விரயம் செய்தவர்கள் மத்தியில், ரங்கநாதனும் மாலதியும் பிரகாஷே உலகம் என்று எல்லாமே அவனை மனதில் வைத்து வாழ்ந்தார்கள். அவனுக்கு எல்லாம் பார்த்துப் பார்த்து செய்வதும், இந்த கிளாஸ், அந்த கோச்சிங் என்று அரக்கப்பரக்க இங்குமங்கும் வண்டியில் கொண்டு சென்று கூட்டிக் கொண்டு வருவதும், எல்லா போட்டிகளுக்கும் ஸ்கூலுக்கு உள்ளே வெளியே என்று அவனை தயார் செய்வதும் என்று தட்டாமாலை சுற்றியபடியே இருந்தனர்.

    அவர்களுடைய சேமிப்பை எல்லாம் கரைத்து டொனேஷன் கொடுத்துத்தான் எஞ்சினியரிங்கில் பிரகாஷை சேர்த்தார்கள். அங்கு அவன் அரியர்ஸ் வைத்தபோதும் யார் யார் காலைப் பிடித்தோ, கெஞ்சிக் கூத்தாடியோ மேலே தள்ளி விட்டார்கள். அவன் தவறி விழுந்த போதெல்லாம் தாங்கிப் பிடித்தார்கள்.

     இப்படியெல்லாம் முடிவில்லாமல், அளவில்லாமல் செலுத்திய அன்பிற்கு இதுதான் பரிசா ?

    ஆமாம். இப்படியெல்லாம் சீராட்டிப் பாராட்டி வளர்த்த ஒரே மகனான பிரகாஷ்தான் இன்று திருமணமானவுடன் திரும்பியே பார்க்காமல் இருக்கிறான். இதே ஊரிலேயே தனியாக இருந்து கொண்டு அப்பா அம்மாவை திரும்பிப் பார்க்காமலேயே இருக்கிறான்.

     இதை நினைத்து மாலதியும் ரங்கநாதனும் வருத்தப்படாத நாளே இல்லை. இருவரும் தமது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் “எங்கள் அன்புக்கு கிடைத்த பரிசைப் பாருங்கள்” என்று சுய பச்சாதாபம் படாத நேரமே இல்லை.

**************************

     இந்த நேரத்தில்தான் அவர்களுக்கு அந்த செய்தி காதில் வந்து விழுந்தது.

   ரங்கநாதனுடன் பள்ளி நாட்களில் படித்த தங்கவேலுவின் மகன் இந்திரன், 32 வயதிலேயே அகால மரணமடைந்து விட்டான் என்ற செய்திதான் அது. கோவிட் வந்து, நிலைமை மோசமடைந்து, பின்னர் எல்லாம் சரியாகி விட்டது என்று சொல்லி இருந்தார்கள். ஆனாலும் ஏனோ தெரியவில்லை, மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்ததுமே திடீரென்று அவனுடைய முடிவு சம்பவித்து விட்டிருந்தது.

    இவ்வளவு நாட்களும் ரங்கநாதனுக்கு தங்கவேலுவுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்தது ஆச்சரியம்தான். அவன் இதே ஊரிலேயே அரசாங்க அலுவலில் இருக்கிறான், அவனுக்கும் தன்னைப் போலவே அதே வயதில் ஒரு மகன் இருக்கிறான் என்று மட்டும் ரங்கநாதன் கேள்விப்பட்டு இருந்ததென்னவோ உண்மை.

     அவனுடைய நண்பர்கள் எல்லாம் நகரத்தில் கிளப்புகளிலும் ஹோட்டல்களிலும் அவ்வப்போது கூடும் பார்ட்டிகளில் எல்லாம் தங்கவேலு வந்து கலந்து கொண்டதே இல்லை.

    அதெல்லாம் இருக்கட்டும், இப்போது மகன் இறந்த போது அவனைப் போய் பார்த்து ஆறுதல் சொல்லி வரலாம் என்று மாலதியுடன் கிளம்பிச் சென்றார் ரங்கநாதன்.

   புறநகரின் ஒதுக்குப் புறம் ஒன்றில் இருந்தது தங்கவேலுவின் தனிமையான வீடு. அவனைப்போலவே.

    ராகவன், வேணு, ஜான், மாறன் – அனைத்து பள்ளி நண்பர்களும் வந்திருந்தார்கள்.

    அமைதியாக எல்லோரும் கீழே கிடத்தியிருந்த தங்கவேலுவின் மகன்  இந்திரனின் உடலைச் சுற்றி வந்து வணங்கினார்கள்.

    தங்கவேலு முழுமையாக உடைந்து போயிருந்தான்.

    “இனி இவன் இல்லாம நான் எப்படி இருப்பேன்…..?” என்று அவனுடைய புலம்பல் அங்கே எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

   அங்கிருந்து அவர்கள் மயானத்துக்குக் கிளம்பியபோது ரங்கநாதனின் நண்பர்கள் குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தது அவர் காதில் விழுந்த போது திடுக்கிட்டார் அவர்.

   “பேருதான் இந்திரன்னு வெச்சிருந்தான்….. ஆமாண்டா ! பொறக்கும் போதே அந்த பையன் மனவளர்ச்சி குன்றிதாண்டா பொறந்தானாம் !”

    “தங்கவேலுக்கு மனைவி வேற வேகமாய் போய் சேர்ந்துட்டா இல்ல…. அதனால, எல்லாம் அந்த பயலுக்கு நேத்தி வரை அவன் தாண்டா செஞ்சுட்டு இருந்திருக்கான் !”

     “அந்த பயலுக்கு ஒரு விவரமும் தெரியாது. பரப்பிரம்மம் தான். இந்திரனுக்கு பல்லு தேச்சு, குண்டி கழுவி, பீ அள்ளின்னு….எல்லாம் நம்ம தங்கவேலு தான் !”

    அப்பன்னா அவந்தாண்டா அப்பன்….. நம்ப எல்லாம் என்னவோ நம்ம பசங்களுக்கு பெருசா பண்ணிட்டோம்னு எதையெதையோ அவங்ககிட்டேருந்து எதிர்பார்க்கிறோம்….”

    அவனைப் பாரு…..! எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, கடைசி வரைக்கும், வளர்ந்த பயலை குழந்தையாட்டம்  பாத்துக்கிட்டு இருந்திருக்கான் !”

    மாலதி என்னை புதுவிதமாகப் பார்த்தாள்.

   “எது அன்பு ?” என்று கேட்பது போல் இருந்தது எனக்கு.

 

                   ***************************************************