புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு – கண்ணதாசன்
ஆட்டோவிலிருந்து இறங்கிய ரேகா..”கொஞ்ச நேரம் ஆகும்..வெயிட் பண்ணுங்க..வந்துடறேன்” என ஓட்டுநரிடம் சொல்லிவிட்டு..அந்த வீட்டின் அழைப்பு மணியை அடித்தாள்
பின் அனிச்சையாக கையில் இருந்த அழைப்பிதழைப் பார்த்தாள்..திரு பரமானந்தம் என்று எழுதி இருந்ததை ஒரு தரம் உச்சரித்தாள்
ஒரு சிறுமி..பத்து வயது இருக்கும்..கதவைத் திறந்தாள்
ரேகாவைப் பார்த்த சிறுமி, “யார்?” என்பது போல தன் புருவங்களை உயர்த்தினாள்
“பரமானந்தம் இருக்காரா?”
“ஓ..தாத்தாவா..இப்பதான் வெளியே போனார்”
தன் மகள் அழைப்பு மணி ஒலித்ததும், கதவைத் திறந்து யாருடனோ பேசிக் கொண்டிருப்பதை கேட்ட வசந்தி.. “சாந்தா..யார் வந்து இருக்கா?” என்றபடியே அடுக்களையில் இருந்து வந்தாள்.
வாசலில் நின்று கொண்டிருந்த ரேகாவைப் பார்த்ததும். சில வினாடிகள் தயங்கியவள், “நீ..நீ ரேகா இல்ல..”என்று கேட்டபடியே வந்து அவளைக் கட்டித் தழுவினாள்.
பின், “ரேகா..வா..வா..உள்ளே வா..உன்னைப் பார்த்து எவ்வளவு வருஷங்கள் ஆச்சு? எப்படி இருக்க? எங்க இருக்க?” என்றபடியே உள்ளே செல்ல, ரேகா அவளைத் தொடர்ந்தாள்.
தன் பள்ளி தோழி வசந்தாவை அங்குக் கண்டதும் ரேகாவின் கண்கள் சற்று கலங்கின.பின் சமாளித்துக் கொண்டு,”வசந்தா..நீ எப்படி இருக்க?” என்றாள்.
“எனக்கென்ன குறைச்சல்? நல்லா இருக்கேன்.” என்றபடியே வசந்தா, ரேகாவை ஹாலில் இருந்த சோபாவில் அமரச் சொல்லி விட்டு..தானும் பக்கத்தில் அமர்ந்தாள்.
“இவ உன் பொண்ணா?” சாந்தாவை காட்டி ரேகா கேட்க, “ஆமாம்..” என்ற வசந்தா. “உன்னைப் பத்திச் சொல்லு ..உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா..புருஷன் என்ன பண்றார்? எத்தனை குழந்தைகள்?” என்றாள்.
“சொல்றேன்..ஒவ்வொன்னா கேளு” என்றபடியே,சாந்தியைப் பார்த்து, “நீ எந்த கிளாஸ் படிக்கற..?” என்றாள் ரேகா.
“செவன்த் ஸ்டாண்டர்ட் “
“பார்த்தியா வசந்தா..உனக்கும் எனக்கும் ஒரே வயசு.இன்னிக்கு நான் என் பொண்ணோட கல்யாண இன்விடேஷன் கொடுத்துட்டுப் போக வந்து இருக்கேன்..ஆனா உம்
பொண்ணு செவன்த் தான் படிக்கறா..”
“யார் தப்பு? நீ பத்தாவது படிக்கும் போதே..திடீர்னு அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆயிடுச்சுன்னு பாதியில டிஸ்கண்டின்யூ பண்ணிட்டு ஊரை விட்டு போயிட்டதா சொன்னாங்க…ஆமா..அப்புறம் உனக்கு சின்ன வயசுலேயே கல்யாணம் ஆயிடுச்சா? உம் படிப்பு என்ன ஆச்சு?”
“எல்லாம் விவரமா சொல்றேன்.ஆமா..உங்கப்பா பரமானந்தம் வீட்ல இல்லியா..”
“ஆதென்னடி பரமானந்தம்னு பெயரைச் சொல்ற..சார்..சார்னு சொல்லிக்கிட்டு இருப்ப எப்பவும்..” என்றபடியே..”கடைத்தெருவுக்கு போயிருக்கார்.வர்ற நேரம் தான்.சொன்னா நம்பமாட்ட கார்த்தால காகம் ஒண்ணு ஜன்னல்ல உட்காந்து கத்திக் கிட்டே இருந்தது.அப்பாகூட..இன்னிக்கு யாரோ விருந்தாளி வரப்போறாங்க பாருன்னார்.நீ வந்து நிக்கற..”
“அப்போ நீ என்னை விருந்தாளின்னு சொல்றியா?”
“உன்னை அப்படி சொல்வேனா..நீ விருந்தாளிக்கும் மேல என் உயிர்த் தோழி..இது உன் வீடு போலத்தானே”
‘ஆமாம் ..உங்கம்மா…”
“இல்லை..போயிட்டாங்க.என்னை பக்கத்து ஊர்ல சொந்தத்துல தான் கட்டிக் கொடுத்து இருக்காங்க.எனக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துல அம்மா இறந்துட்டாங்க.ஹார்ட் அட்டாக்..அப்புறமா..அப்பாவை என் கூட வந்து இருக்கச் சொல்லி, எவ்வளவோ கேட்டுக் கிட்டேன்.வரமாட்டேன்னு சொல்லிட்டு இங்க தான் தனியா இருக்கார்.எம் பொண்ணுக்கு ஸ்கூல் ஒரு வாரம் லீவு.அது தான் அவளையும் கூட்டிக்கிட்டு அப்பாவைப் பார்க்க வந்து இருக்கேன்.நல்லவேளை..என் ஃபிரண்ட் உன்னையும் பார்த்துட்டேன்”
“உம் பொண்ணுக்கு பதினோரு வயசு இருக்குமா?”
“பன்னிரெண்டாச்சு.நல்லா வளர்ந்துட்டா.இன்னமும் வெகுளியாகத்தன இருக்கா?
எப்ப உட்காரப் போறாளோ..”?
“அது..அது..அந்தந்த காலத்துல நடக்கறப்போ நடந்தே தீரும்.கவலைப்படாதே” என்றவள்..சாந்தா தனியே சற்றுத் தள்ளி எதையோ எழுதிக் கொண்டிருப்பதை பார்த்தாள்.
அவளிடம், “உன் பெயர் என்ன? என்ன எழுதற….இந்த ஆண்ட்டி யார் தெரியுமா? உங்க அம்மாவோட படிச்சவ..” என்றாள்
“என் பேரு சாந்தா.அடுத்த வாரம் எங்க ஸ்கூல்ல டீச்சர்ஸ் டே அன்னைக்கு ஒரு பேச்சுப் போட்டி வைச்சு இருக்காங்க.ஆசிரியர்கள் பற்றி பேசணும்..நானும் கலந்துக்கிட்டு இருக்கேன்.அதுதான் கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கேன்…எழுதினவரைக்கும் நல்லா இருக்கான்னு பாக்கறீங்களா? என நோட்டு புத்தகத்தை அவளிடம் நீட்டினாள்
“பாக்கறேன்.அதுக்கு முன்னால..உங்க ஸ்கூல்ல பெண் குழந்தைகளுக்கு குட் டச்..பேட் டச் பத்தியெல்லாம் சொல்லிக் கொடுத்து இருக்காங்களா? “
“ஓ..சொல்லிக் கொடுத்து இருக்காங்களே..”
இடையே புகுந்த வசந்தா, “ரேகா..இப்ப எதுக்கு அவகிட்ட இது பத்தியெல்லாம் பேசறே” என்றாள்
“இல்ல வசந்தா..கண்டிப்பா குழந்தைகளுக்கு இது எல்லாம் தெரிஞ்சு இருக்கணும்.பொண் குழந்தைங்க..எந்த வயசானாலும் ஜாக்கிரதையா இருக்கணும்.என்னதான் வாய் கிழிய ஜெண்டர் ஈக்வாலிடி பத்தி பேசினாலும்..ஆண்கள் கிட்ட மாற்றமே இல்ல..சின்னக் குழந்தையை கூட ஒருத்தர் கிட்ட நம்பி விட்டுட்டு போக முடியலை .அதனாலத்தான் இதைப் பத்தியெல்லாம்
குழந்தைகள் கிட்ட சொல்லிக் கொடுத்து தெரிய வைக்கணும்”
“சரி..சரி..நீ இவ கிட்ட பேசிக்கிட்டு இரு..நான் உனக்கு காஃபி போட்டு கொண்டு வரேன்” என்ற படியே வசந்தா மீண்டும் அடுக்களைக்குள் நுழைந்தாள்.
சாந்தா, ஆசிரியர்கள் பற்றி எழுதியிருந்ததைப் படித்த ரேகா..”ரொம்ப நல்லாஎழுதி இருக்க..இப்ப நான் சொல்றதையும் சேத்துக்க..” என்று சொல்ல ஆரம்பித்தாள்.
“ஆசிரியர் தொழில் என்பது புனிதமான ஒன்று.சேவை மனப்பான்மையும்,கடமை உணர்வும், பொறுமையும் உள்ள தொழில் அது.கல்லாய் இருக்கற ஒருத்தனை செதுக்கிச் செதுக்கி அழகான சிலையா மாத்தறவங்க ஆசிரியர்கள்.அதனாலத்தான் மாதா பிதா குரு தெய்வம்னு ஆசிரியர்களையும் தெய்வம்ங்கற லிஸ்ட்ல சேத்து இருக்காங்க.”
அவள் சொல்லி முடித்ததும் கை தட்டிய சாந்தா..”சூபர் ஆண்ட்டி..இப்பவே சேத்துடறேன்” னு எழுத ஆரம்பித்தாள்.
ரேகாவோ மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்..
“ம்..நானும் ஆசிரியர்களை தெய்வமாகத்தான் நினைச்சேன்.ஆனா..அந்த தெய்வ வேஷத்துல இருந்த ஒரு காமுகன் என் வாழ்க்கையையே சீரழிச்சுட்டானே.நான் பத்தாவது படிக்கும் போது. ஒரு சந்தேகம் கேட்க வந்த என்னை..என்னை.. அழுதுக் கொண்டே வந்து வீட்ல சொன்னப்போ..அம்மா “ஓ”ன்னு அழ ஆரம்பிக்க..அப்பாவோ சத்தம் போட ஆரம்பிச்சார். போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னு சொன்னார்.ஆனா அம்மாவோ..”இந்த சமுதாயம் பெண்களுக்கு அநியாயம் நடந்தா தட்டிக் கேட்கறேன்னு சொல்லி மேலும் மேலும்
தேவையில்லா.. சொல்லக் கூசும் கேள்விகளை அவளைக் கேட்டு அவள் வாழ்வை சீரழிச்சுடும்”னு சொல்லி..இரவோடு இரவாக ஊரை விட்டு வெளியே கிளம்பணும்’னு சொல்லிட்டா.இன்னிக்கு இருக்கற தைரியமும்,துணிச்சலும் அந்த நாள் பெண்கள்கிட்ட இல்லன்னாலும்…இன்னிக்கும் நிலைமை மாறலைங்கறதுதான் நிதர்சனம். பிறகு .. அன்றைய நிகழ்வால் கருவுற்றதும்..அம்மா கருவை கலைக்க சொன்னதை மறுத்து ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டதும் பழைய கதை”
காஃபியுடன் வந்த வசந்தா, “ரேகா..ரேகா,,எந்த உலகத்துல இருக்க..என்ன யோசிச்சுக்கிட்டு இருக்க” என்றபடியே காஃபியை அவளிடம் நீட்டினாள்
அந்த நேரம்..கையில் காய்கறி பையுடன் உள்ளே நுழைந்த பரமானந்தம் ரேகாவைப்
பார்த்ததும் ஒரு வினாடி தடுமாறியவர்..”நீ ரேகா..தானே” என்றார்.
“ஆம்..நான் ரேகாவேதான்” என்றவள்..”என் பொண்ணு கல்யாணம்.இன்விடேஷன் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்” என்றபடியே அழைப்பிதழை அவரிடம் கொடுத்து விட்டு..”நான் வரேன் வசந்தா.கல்யாண வேலை நிறைய இருக்கு” என்றபடியே கிளம்பத் தயாரானாள். பின் சாந்தாவிடம்..”சாந்தா..ஆசிரியர்கள்னா எப்படி இருக்கணும்னு உங்க தாத்தா கிட்ட கேள்..நிறைய சொல்லித் தருவார்”
பரமானந்தம் அழைப்பிதழைப் பார்த்தார்..அதில்..பரமானந்தம்- ரேகா தம்பதியினரின் மகள் கல்யாணத்துக்கு அழைப்பதாக அச்சிடப்ட்டிருந்தது..
வெளியே ஆட்டோ கிளம்பும் சப்தம் கேட்டது

