அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதைத் தேர்வு முதல் பரிசு பெற்ற கதை 

 

 

பாசம் மிகுத்தேன் பற்றுதல் மிகுத்தேன்
ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்
உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்
இல்லா யினெமர் இல்லந் தட்டுவேன்
– கண்ணதாசன் 

ஆட்டோவிலிருந்து இறங்கிய ரே

மானூர் சுப்பையா பிள்ளை என்கிற நா.சங்கரசுப்பிரமணியன்,

நெல்லையப்பர் கோவில் அருகே சுவாமி சந்நிதித்தெருவில் சொந்தவீடு வாங்கிக் குடியேறி முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது …. ஆனாலும் காலில் ஒட்டிய ஈரமணலாக ‘’மானூர் சுப்பையா பிள்ளை“ என்ற அடையாளத்தை உதறமுடியவில்லை !

‘காந்திமதி பவனம்‘ என்ற இந்த நாலுகட்டு வீட்டில்தான் இரண்டு மகன்கள் திருமணம், மூன்று மகள்களின் மறுவீடு விசேஷம் – பேறுகாலம் – பேரன் பேத்திகளின் பெயரிடும் வைபவம் – எல்லாம் …

மகன்களில் மூத்தவன் சாமிநாதன் – தில்லித் தலைமைச் செயலகத்தில் உயர்ந்த பதவியில். இளையவன் பரமேஸ்வரன் மும்பையில் வங்கி மேலாளர். மூத்த மகள் சரசுவதி திருச்சியில் … இரண்டாவது மகள் சௌந்தரி உள்ளூரில் டவுனிலேயே … மூன்றாவது மகள் சீதாலட்சுமியை ‘தூராத் தொலைவாக’ சென்னையில் கட்டிக்கொடுத்திருக்கிறார்.

எப்படியும் மாதம் ஒருமுறை மகனோ.. மகளோ யாராவது குடும்பத்தோடு வந்து இரண்டுவாரம் தங்குவதுண்டு…. மூன்றுவேளையும் விருந்துதான்… மனசு குளிரக்குளிர உபசாரந்தான் …மூத்த மாப்பிள்ளைக்கு கல்தோசை… மூன்றாவது மாப்பிள்ளைக்கு முறுகல் தோசை – அதுவும் கொடியடுப்பு சூட்டில்தான் வெந்தாகணும்! உள்ளூர் மாப்பிள்ளை பழங்கறியாக இருந்தாலும் ருசித்து சாப்பிடுவார்… பேரன்களுக்கு பூரி… அடை… பேத்திகள் விருப்பம் கூட்டாஞ்சோறும் வடகமும் சொதியும் …

யாருக்கு என்ன பிடிக்கும் என்பதெல்லாம் பார்வதி ஆச்சிக்கு அத்துபடி..! முகம் சுளிக்காமல் பார்த்துப் பார்த்துப் பரிமாறி மகிழ்வாள்…

அது ஒரு கனாக்காலம் ….!

பேரன் பேத்திகள் வளர வளர அவர்களின் படிப்பு.. ரசனை.. உத்தியோக வேட்டை … கிரிக்கெட் கோச்சிங் … பாட்டு க்ளாஸ் என்ற காரணங்களைக்காட்டி இரண்டே இரண்டுநாள் நாள் அவசரப்பயணம்..

தூத்துக்குடிவரை விமானம்.. அங்கிருந்து cகார் அல்லது வேனில் நெல்லை வருகை… ‘கார்த்திகா‘ வில் அறையெடுத்து குளித்து உடைமாற்றி ரெடியாகி ஜங்ஷன் வாசலிலேயே ஒருடஜன் ஆப்பிள் வாங்கிக்கொண்டு ‘காந்திமதி பவனம்‘ வருவார்கள்.

பார்வதி ஆச்சி இரண்டுபடி மாவு அரைத்துவைத்துக் காத்திருப்பாள்…

“இட்லி தோசை வேண்டாம்மா.. அவுகளுக்கு சுகர் ஏறிக்கெடக்கு…” என்று சொல்லிவிட்டு, வரும்போதே தயாராக வாங்கிவைத்திருந்த கார்ன்ஃப்லேக்ஸைப் பிரித்து கிண்ணத்தில் கொட்டிப் பாலை ஊற்றி ஸ்பூன்போட்டு எடுத்துப்போவாள் மூத்தமகள் சரசுவதி.

“ஒங்க மகனுக்கு மார்னிங் பிரேக்பாஸ்ட் வெஜிடபிள் சாலட்தான் அத்தே … ஸ்ட்ரிக்ட் டயட்…” என்பாள் இரண்டாவது மருமகள் தங்கம். (வடக்கே குடிபோனதும் சோனா என்று மாற்றிக்கொண்டாளாம்!)

பேரன் – பேத்திகள் பீஸா..பர்கர்.. சான்ட்விச் பிரியர்களாகி விட்டார்கள்…! பார்வதி ஆச்சிக்கு ஆற்றாமை!

என்ன சொல்லிப் பிள்ளைகள் எல்லோரையும் வரவழைக்கமுடியும் என்ற தவிப்பிலேயே ஒரு வருடம் ஓடிவிட்டது.

 சுப்பையா பிள்ளைக்கு எண்பது வயது நிறைந்தது… சதாபிஷேக விழா நடத்தினால் பிள்ளைகள் ஐந்துபேரும் குடும்பத்தோடு வந்து ஒருவாரமாவது தங்கமாட்டார்களா என்று பார்வதி ஆச்சிக்கு யோசனை.

“எம்பது முடியுதில்லா… திருக்கடையூர் சந்நிதியிலே சாந்தி கழிக்கவேண்டாமா..” என்று மெதுவாக ஆரம்பித்தாள்.

“பிள்ளகள்ளாம் வந்துபோக சவுகரியப்படும்னா நடத்துவோம்.

அவுக சாக்குப்போக்கு சொன்னா திருக்கடையூரெ மறந்திரு.. நெல்லையப்பர் கோவில் இருக்கவே இருக்கு… ஒரு அர்ச்சனை..போத்தி ஹோட்டல்லெ வடை பாயாசத்தோட சாப்பாடு…” என்று பெருமூச்சு விட்டார்.

 “அதெல்லாம் வருவாக“ என்று உறுதியளித்தாள் பார்வதி.. அவள் நம்பிக்கை பொய்க்கவில்லை..!

உள்ளூர் மருமகன் சதாபிஷேக வைபவத்திற்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிட்டார்… மகன்கள் இரண்டுபேரும் மகள்கள் மூன்றுபேருமாக ஆளுக்கு இரண்டு லட்சம் போட்டு பார்வதி ஆச்சிக்கு சங்கிலி… பட்டுப்புடவை, சுப்பையா பிள்ளைக்கு ப்ரேஸ்லெட், பட்டுவேட்டி என வாங்கிவந்து அசத்தினார்கள். திருக்கடையூர் சந்நிதியில் சுப்பையா பிள்ளையின் ஜென்ம நட்சத்திரத்தில் கோலாகலமான. சதாபிஷேக விழா !

நெல்லைக்கு திரும்பியதும் பேரன் பேத்திகள் அவர்கள் பங்குக்கு ‘கார்த்திகா‘ அரங்கில் தாத்தாவை மெகாசைஸ் கேக் வெட்டவைத்து பஃபே விருந்தும் கொடுத்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்

சுப்பையா பிள்ளைக்கு நெஞ்சு நெகிழ்ந்தது.. பார்வதி ஆச்சிக்கோ நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐந்து பிள்ளைகளையும், அவரவர் ஜோடிகளையும், பத்து பேரன் பேத்திகளையும், மூன்று கொள்ளுப் பேரன்களையும் காந்திமதி பவனத்தில் ஒருசேரப் பார்க்கும் வாய்ப்பு அமைந்ததில் பெருமகிழ்ச்சி…..

வெளியூர்களிலும் சில வெளிநாடுகளிலும் வேலைபார்க்கும் இளைய தலைமுறை அவரவர் கூடு திரும்பத் தயாரானார்கள்… ஆச்சிக்குக் கண்கலங்கியது.

“இனிமே எப்பம் ஒங்களை ஒருசேரப் பாக்க…” என்று பெருமூச்சு விட்டாள்.

உள்ளூர் மகள் சௌந்தரம் “அட ஏம்மா…ஒம் பேரன் நெல்லையப்பன் என்ன அமேரிக்காவிலெயா இருக்கான்? அவன் கல்யாணம் இங்கனதானே நடக்கும் ! பெரியம்மை, சித்தி, அண்ணன், தம்பிக எல்லாரும் வராமலா இருப்பாக..?” என்றாள்.

மூத்த மகள் சரசுவதி, “நாங்க வராம நெல்லையப்பனுக்குக் கல்யாணமா?… ஆமா , பொண்ணு கிண்ணு பாத்துவச்சிருக்கியா சவுந்தரீ…” என அக்கறையுடன் கேட்டாள்.

“இனிமேத்தான் பொண்ணெ சல்லடைபோட்டுத் தேடணுமாக்கும்..

சின்னண்ணாச்சி மக அமுதாவை மறந்திட்டியேக்கா“ என்று சொல்லி முடிப்பதற்குள் அடுத்த அறையிலிருந்த தங்கம், கணவன் பரமேஸ்வரனின் தோளில் இடித்தாள்.

“இவ மகன் நெல்லையப்பன் லச்சணந்தான் நாறிக்கெடக்கே… அவனுக்குதான் அமுதான்னு ஒங்க தொங்கச்சி சபையிலெ வச்சு அடிச்சுப் பேசுதா… நீங்க இடிச்சபுளி மாதிரி உக்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்…? இந்தக் காட்டானுக்கு கழுத்தெ நீட்டத்தான் அவளை லண்டன் வரைக்கும் அனுப்பிப் படிக்கவச்சோமா.. அதெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு இப்பமே சொல்லீருங்க… “ என்று சீறினாள்.

கூடத்தில் பெரிய பஞ்சாயத்தே தொடங்கிவிட்டது… கடைக்குட்டி சீதா – சூட்கேசில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தவள் – சௌந்தரத்தின் உரத்த குரலைக்கேட்டு அவசரமாக வெளியே வந்தாள்…

“என்ன சௌந்தரீ.. என்ன நெனப்புலெ நீ அமுதாவைப் பொண்ணு கேக்கே… நான் ராம லட்சுமணன் கணக்கா ரெண்டு புள்ளைகளைப் பெத்து வளர்த்து காத்துக்கிட்டிருக்கேன்… சங்கர், பாலு ரெண்டு பேரும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்ஸ்.. அதுவும் யு.எஸ்.லெ ! யார் ஜாதகம் பொருந்துதோ அவனுக்குதான் அமுதா! அவளும் லண்டன்லெ படிக்கிறவதானே… லைஃப் ஸ்டைல் அவங்களுக்குள்ளெ ஒத்துப்போகும்…நீ குறுக்குசால் ஓட்டாதே…” என்று கண்டித்தாள்.

சௌந்தரம் பத்ரகாளி அவதாரம் எடுத்தாள்…! “என்னட்டி பேசுதே… எம் மகனுக்கு என்ன குறைச்சல்ங்கேன் ? அவனுக்குப் படிப்பு ஏறலே.. அதுக்காக எங்களை பட்டினியாவா போட்டு வச்சிருக்கான்… இருவது வயசிலயே நகைக்கடையிலெ வேலைக்கு சேந்தான்… மாசாமாசம் சம்பளத்தெக் கொண்டுவந்து எங்கிட்டெதான் கொடுப்பான். பத்து வருசத்திலெ தொழில் கத்துக்கிட்டு இப்பம் டவுன்லேயே நகைக்கடை தொறந்திருக்கான் தெரியுமில்லா…? அவன் இப்பம் நாலுபேருக்கு சம்பளம் போடுதான்… ஒம் பிள்ளைக மாதிரி இடுப்பொடிய வேலை பாத்துட்டு அடுத்தவன் கிட்ட கையேந்தி சம்பளம் வாங்கலே பாத்துக்கோ… அமுதா எம் மகனுக்குதான்… படிப்பு.. ஆராய்ச்சின்னு பத்து பதினஞ்சு வருசமா அமுதா அப்பா அம்மாவெப் பிரிஞ்சே இருக்கால்லா… சின்னண்ணாச்சியும் ரிட்டயராகி இங்கனயே செட்டில் ஆயாச்சு.. மக உள்ளூர்லெ வாக்கப்பட்டா அண்ணாச்சிக்கும் மதினிக்கும் ஆறுதலா இருக்கும்ட்டீ… என்ன அண்ணாச்சி நாஞ்சொல்லுகது சரிதானே…” என்று பரமேஸ்வரனைத் தன் வாதத்துக்கு துணையாக இழுத்தாள்..

பதில்சொல்லும் நிலைமையிலா சின்னண்ணன் இருக்கிறான்… தங்கம் கண்களில் தணல்… !

சுப்பையா பிள்ளை நிலைமை தீவிரமடைவதை உணர்ந்தார். “ஏட்டீ..ஒங்களுக்குள்ளேயே பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயமா இது… வாழப்போறவதானே அதைத் தீர்மானிக்கணும்.. முறைமாப்பிள்ளைக மூணு பேர்லெ யாருக்கு முடிபோட்ருக்கோ என் செல்லப்பேத்தி அவனைக் கட்டிக்கிடுவா! படிப்பு முடிச்சிட்டு வரட்டுமே… அதுந்தண்ணியும் அக்காளும் தங்கச்சியும் எசலாம இருக்கியளா…!“ என்று அதட்டினார். கூடத்தில் சட்டென்று அமைதி குடிகொண்டது.

****

காந்திமதி பவனத்தைத் தொட்டடுத்த பிருந்தாவன் திருமண மண்டபம் “AMUDHA WEDS MANOHAR“ ஃப்ளக்ஸ் போர்டுடன் வரவேற்றது… சீயக்காய்நிறப் பெண்மணிகள் பட்டுப்புடவை சரசரக்க, கழுத்தில் கொத்துச்சங்கிலி மினுமினுக்க, வளைய வந்துகொண்டிருந்தார்கள்… கருந்தேக்கு நிற ஆடவர்கள் உரத்தகுரலில் “ஏ…மாப்ளே எப்பம் வந்தே” என்று குசலம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். முதல் இரண்டு வரிசையில் அசட்டு வெள்ளைநிறத் தோலுடன் வெளிநாட்டுத் தம்பதிகள் தமிழ்நாட்டுப் பாரம்பரிய உடையில் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களின் வாரிசுகள் கைக்கு அடக்கமான வீடியோ காமெராவில் திருமணக் காட்சிகளைப் பதிவு செய்தவண்ணம் குறுக்கும் நெடுக்குமாக மிரட்சியுடன் ஓடிக்கொண்டருந்தனர்.

உள்ளூர் நண்பர்களுக்கு ஒரே குழப்பம்….

“பாட்டையாவோட பேத்தியும் பேரனும் வெளிநாட்டுலெ வேலை பாக்கவுக இல்லையா…அதான் அவுக கலியாணத்துக்கு வெள்ளைக்கார சிநேகிதப் புள்ளைகளை– லச்சம் லச்சமா செலவளிச்சு – கூட்டீட்டு வந்திருக்காக….” என்ற பேச்சு பந்தலில் பரவத் தொடங்கியது.

பட்டு வேட்டி, பட்டுச்சட்டை, ஜரிகை அங்கவஸ்திரம், கைகளில் சந்தனப்பூச்சு, நெற்றியில் விபூதிக் கீற்று என்ற மணக்கோலத்தில் ரோஜாமாலையை நடத்திக் கூட்டிக் கொண்டு வந்ததைப்போன்ற ஜொலிஜொலிப்புடன் தோற்றமளித்த ஜான் மனோகர் ஆப்ரஹாமின் கையைப்பி டித்து, மாப்பிள்ளைத் தோழன் சங்கரன் அழைத்து வந்ததைப் பார்த்ததும்தான் “ஆஹா…. மனோகர்ங்க பேரெப்பாத்து மேக்கொண்டு சாரிக்காம வந்திட்டமே… பாட்டையா பெரிய சஸ்பென்ஸ்லா கொடுத்திருக்காக.. இது காதல் கல்யாணம் மட்டுமில்லே.. கலப்புத் திருமணமுங்கூட மாப்ளேய்“ என்று கோபத்துடன் குரல்கொடுத்த உறவினர் முகூர்த்தம் முடியும்வரை இருக்கப்பிடிக்காமல் எழுந்தார்… அருகிலிருந்தவர் தடுத்தார்…

“எங்கெ பொறப்பட்டு நிக்கிய அத்தான்..பந்தியிலெ எடம் போடவோ“

“சை… சாதிமதம் பாக்காம சம்பந்தம் பேசி முடிச்சிருக்காக பாட்டையா… நம்ம சங்கத் தலைவன் இந்த வீட்டுலெ கை நனைக்கவா.. ?“

உறவினரின் சாதி அபிமானம் ஊரறிந்த விஷயம்… அவர் மற்றவர்களையும் உசுப்பிவிட்டுவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வுடன் சுப்பையா பிள்ளை அவர் தோளை அழுத்தி உட்கார வைத்தார்.

“சோமுப்பிள்ளை…! அமுதா நம்மவீட்டு இளங்குருத்து… சொந்தம் விட்டுப்போயிரக் கூடாது, சாதியைத் தூக்கிப் பிடிக்கணுமேன்னு முறைமாப்பிள்ளைகள்ளெ ஒருத்தனுக்குக் கெட்டிவைக்கச் சொல்லுதியளா… பழைய வேலியைத் தாண்டி வாரதுக்கு இன்னுமா நாம பக்குவப்படாம இருக்கணும்? பேத்தி ஆசைப்பட்ட மாதிரி அவ சிநேகிதன் ஜான் மனோகரனயே நிச்சயம் பண்ணீட்டோம்… அந்த மாப்பிள்ளை ஆசைப்பட்ட மாதிரி நம்ம பக்கத்து வழமைப்படி தமிழ்முறைத் திருமணம் நடத்துதோம்.. நீங்க இருந்து புள்ளைகளை ஆசீர்வாதம் பண்ணீட்டு முதல்பந்தியிலெ உக்காந்து சாப்பிட்டுட்டுப் போனாத்தானே எங்களுக்கும் கௌரவமா இருக்கும்“ என்று அழுத்தமாகவும் உரிமையுடனும் பேசி சோமுப்பிள்ளை நகரமுடியாமல் நங்கூரம் போட்டுவிட்டார்!

பள்ளித் தலைமை ஆசிரியர் செண்பகராமன் பரபரப்பாகத் தேடிவந்து, “பாட்டையா… ஒரு நிமிஷம் வர்றியளா“ என்று கூப்பிட்டு சுப்பையா பிள்ளையைத் தனியே அழைத்துப் போனார்…

“அந்தக் கல்லுளிமங்கன் வந்திருக்கானே..பாத்தியளா?“ என்றார் பதட்டமாக.

கல்லுளிமங்கன் யார் என்று யோசிக்கவேண்டிய அவசியம் சுப்பையா பிள்ளைக்கு வரவில்லை.. “தாய்மாமா மகளோட கலியாணத்துக்கு அத்தெ மகன் வராம இருப்பானா வாத்தியாரய்யா…” என்று சிரித்தபடி கேட்டார்.

“வந்தது தப்பில்லே… ஆனா நெல்லையப்பன் வந்த நோக்கம் சரியில்லையோ‘னு தோணுது… பெண்ணுவீட்டு ஆளா ஓடியாடி உபசாரம் பண்ணுதாப்பிலெ பாவலா காட்டுதான்… அமுதாவெ கெட்டிக் கொடுக்கலேங்கிற ஆத்திரத்திலெ கலியாணத்தெ நிறுத்த என்னமே சதி பண்ணுதானோன்னு சம்சயமா இருக்கு பாட்டையா…”

“அப்படியா நெனைக்கிய…” என்று யோசனையில் ஆழ்ந்தார். கல்யாண மண்டபத்திற்குள் அவன் என்ன நோக்கத்தில் வந்திருந்தாலும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்கவேண்டிய பெரும் பொறுப்பு தாத்தா சுப்பையா பிள்ளைக்குத்தானே!

“வாத்தியாரய்யா.. நீங்கதான் அவன்மேலெ ஒரு கண் வச்சுக்கிடணும். முகூர்த்தம் நல்லபடியா முடியட்டும்… “ என்று செண்பகராமனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு மணமேடையை நெருங்கி திருமணச் சடங்குகளைத் துரிதப்படுத்தினார்…

மணமேடையச் சுற்றி ஏகப்பட்ட விடியோ காமெராக்கள்… கூடுதலாக எட்டுக்கால் பூச்சிபோல் தலைக்குமேல் பறக்கும் ட்ரோன்கள்… அவ்வப்போது விடியோ பேனல் பக்கம் போய் நின்று பதிவுகளை நோட்டம்விடவும் அவர் தவறவில்லை…

மேடையில் திருமண மந்திரங்களை முழங்கி அதன் தத்துவங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக குருக்களய்யா விளக்கிக் கொண்டிருந்தார். சுப்பையா பிள்ளையின் காது மந்திரங்களிலும், கவனம் நெல்லையப்பனின் மீதும் பதிந்திருந்தன.

 குருக்களய்யா ஒரு தாம்பாளம்நிறைய மஞ்சள் அட்சதையை நிரவி, மஞ்சள்கயிற்றில் கோர்த்த திருமாங்கல்யத்தில் ஒரு கண்ணி மல்லிகைப்பூவைச் சுற்றி மங்கலத் தேங்காயின்மேல் லாவகமாக வைத்து சபையினரிடம் ஆசிவாங்கி வரச்சொல்லி சங்கரனிடம் கொடுத்தனுப்பினார்…

சங்கரன் சுறுசுறுப்பாக மேடையைவிட்டிறங்கி முகம் நிறைய மகிழ்ச்சியுடன் வரிசைவரிசையாக நகர்ந்து பெரியவர்களிடம் அட்சதைத் தாம்பாளத்தை நீட்டினான்.. வெள்ளைக்கார விருந்தினர்களிடம் இதன் தாத்பர்யத்தை ஆங்கிலத்தில் விளக்கி அட்சதையை அவனே எடுத்தெடுத்துக் கொடுத்து கெட்டிமேளம் ஒலிக்கும்போது இந்த அட்சதையை மாப்பிள்ளை – பெண்ணுக்குத் தூவி மனசார ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் சொல்லிவிட்டு நகர்ந்தான்… நெல்லையப்பன் பக்கமும் வந்து தாம்பாளத்தை நீட்டினான்…

“அண்ணாச்சி…. தாலியெத் தொட்டுக்கொடுங்க… தங்கச்சி வாழ்க்கை அமோகமா இருக்கணும்னு வேண்டிக்கிடுங்க“ என்றான்.

நெல்லையப்பன் பல்லைக் கடித்து “என்ன தம்பியாபிள்ளே, ஒறவுமுறையெ மாத்துதியளே… தாய்மாமா மக எப்படி தங்கச்சி ஆவா?“ என்று எகிறினான்.

“கழுத்திலெ தாலி ஏறப் போகுதில்லா…. இனிமே அவ நமக்கு தங்கச்சிதான்!“ – சுளீர் என்று பதில் சொல்லியபடியே மேடையை நோக்கி நகர்ந்தான்..

தாம்பாளம் மேடைக்கு வந்தது- ஆனால் தாலி வரவில்லை!

அதிர்ச்சியுடன் தாம்பாளத்தை வாங்கிய சுப்பையா பிள்ளை அங்கவஸ்திரத்தை அதன்மேல் நழுவவிட்டு, தேங்காயை மூடினார். நாதஸ்வரத்தை நிறுத்தச்சொல்லி கை காட்டிவிட்டு மைக்கை வாங்கி “எலே ஆறுமுகம்.. மண்டபம் வெளிக்கதவைச் சாத்தீட்டு நீ அங்கனயே காவலுக்கு நில்லு“ என்று கட்டளையிட்டார்.

“கதவைப் பூட்டணுமாக்கும் ! ஒங்க தாத்தாவுக்கு முகூர்த்த நேரமா பாத்துதான் கோட்டி பிடிக்கும்“ என்று முணுமுணுத்தாள் பார்வதி ஆச்சி.

அவளுக்கும் சேர்த்து பதில்சொல்லும்விதமாக “திருப்பூட்டு ஆன ஒடனே, நின்ன நெலையிலே அச்சதையெத் தூவீட்டு யாரும் சாப்பிடாம பொறப்பட்றக்கூடாதில்லா.. அதுக்காச்சுட்டிதான் மெயின் கேட்டைப் பூட்டச் சொல்லுதேன்“ என்றார்.

குருக்களையா தாம்பாளத்தை வாங்கக் கையை நீட்டினார்.

“கொஞ்சம் பொறுங்கய்யா.. நம்ம பக்கத்து சடங்கு சம்பிரதாயத்தெ மறந்திட்டியளோ… வந்திருக்க பெரியவுக தொட்டு ஆசீர்வாதம் பண்ணுனதுக்குப் பொறவு, திருமாங்கல்யத்தை குலதெய்வம் படத்துக்கு முன்னாலெ கொண்டுபோய் வச்சு, உத்தரவு வாங்காண்டாமா.. இப்பமே மேல்வீட்டு பூசையறையிலெ தாம்பாளத்தைவச்சு கும்புட்டுட்டு வாரோம்… அதுவரைக்கும் பொண்ணும் பிள்ளையும் மணையிலேர்ந்து எந்திரிக்கக் கூடாது“ என்று சொல்லிவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு பக்கத்துத் திட்டிக்கதவைத் தள்ளித் திறந்து காந்திமதி பவனத்திற்குள் நுழைந்தார்.

பூஜையறையில்…

அம்மன் பாதத்திலிருந்து ஒரு மஞ்சள் கயிற்றை உருவியெடுத்து பூஜைமாடத்தில் வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள்குவியலிலிருந்து ஒரு குண்டுமஞ்சளை எடுத்து அதில் கட்டினார். காரணம் புரியாமல் பார்வதி ஆச்சி விழித்தாள்.

“ஏட்டி… இந்தக் கயித்தைக் கழுத்துலெ போட்டுட்டு ஒன் திருமாங்கல்யத்தை கழத்திக் குடு“ என்று துரிதப்படுத்தினார். மனைவி என்ற இயந்திரம் மறுபேச்சின்றி இயங்கியது…

“சங்கிலி கழுத்தோட கெடக்கட்டும்.. சஷ்ட்டிப்பூர்த்தி தாலியெ ஒதுக்கீட்டு பழைய திருமங்கல்யத்தை இப்படி நீட்டு.. கத்திரிக்கோலைவச்சு வளையத்தை நெம்பி தனியெ எடுத்துத் தாரேன்.. கட்டுலேர்ந்து இன்னோரு மஞ்சக்கயித்தெ எடு“ என்று உத்தரவிட்டபடியே மனைவியின் திருமாங்கல்யத்தை லாவகமாகப் பிரித்து எடுத்தார்..

பார்வதி ஆச்சி அதிர்ந்து கண்கலங்குகிறாளோ என்றெண்ணி முகத்தை ஏறிட்டுப்பார்த்து “ஏட்டி… ஒனக்கொண்ணும் சங்கடமில்லையே“ என்றார் பரிவுடன்….

“கட்டுனவுகதானே கழத்தச் சொல்லுதிய… எமதர்மராசா கேட்டாத்தான் இறுக்கிப்புடிச்சுக்கிட்டு தரமாட்டேன்னு போராடணும்..!“ என்றாள் உறுதியுடன்…

புது மஞ்சள் சரட்டில் பழைய தாலி! கண்களில் ஒற்றிக்கொண்டு தாம்பாளத்தில் வைத்தாள் ஆச்சி.

சுப்பையா பிள்ளை, விளக்கிலிருந்த கதம்பச்சரத்தை எடுத்து கையகலத்திற்குத் துண்டுபோட்டு திருமாங்கல்யத்தில் சுற்றி தேங்காயின் மேல் வைத்தார்.. பழைய திருமாங்கல்யம்…. பளபளப்புக் குறைவு என்பது தெரியக்கூடாது என்ற எச்சரிக்கை!

“இன்னா வாரேன்னு போனவுகளைக் காங்கலியே… கலியாணம் பேத்திக்குங்கதை மறந்தாக்குலெ ஒங்க தாத்தா – அங்கன ஆச்சிக்கு தாலியெக் கட்டீட்டு நிக்காகளா பாரு“ என்ற கேலிக்குரல் வரவேற்றது…

குரலுக்குரியவள் இரண்டாவது மகள் சௌந்தரம்!

“தீவட்டித் தடியனைப் பெத்தவளுக்கு கேலிபேச வாய்வேறெ இருக்கோ“ என்று சீறியபடி நடையை எட்டிப்போட்டார்..

“அவனை ஏசலேன்னா அப்பாவுக்கு சோறு எறங்காதே, பாத்தியாம்மா“ என்று தாயிடம் முறையிட்டாள் சௌந்தரம்…

“வழியெ விடு சௌந்தரீ“ என்று அவள் கையை விலக்கிவிட்டு கணவரைப் பின்தொடர்ந்து விரைந்தாள் பார்வதி ஆச்சி.

கெட்டிமேளம் முழங்க

அமுதாவின் கழுத்தில் ஜான் மனோகரன் தாலி கட்டினான்… இருவர்மீதும் அட்சதை மழை… அக்கினி வலம்வந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஆசிபெற்று மணமக்கள் அருகருகே தயாராகப் போடப்பட்ட நாற்காலிகளில் அமர்ந்தார்கள்..

ஆச்சியும் தாத்தாவும் முதலில் திருநீறுபூசி ஆசீர்வதிக்க உறவினர்கள் வரிசையாக வந்து வாழ்த்தத் தொடங்கினார்கள்…

சுப்பையா பிள்ளையின் கண்கள் நெல்லையப்பனைச் சுற்றியே வட்டமடித்தன. செண்பகராமன் அவர் அருகே வந்து தணிந்தகுரலில்

“அவனை கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன் பாட்டையா… வாலைச் சுருட்டிக்கிட்டுதான் உக்காந்திருக்கான்! திருப்பூட்டு நல்லநேரத்திலெ முடிஞ்சாச்சில்லா.. இனிமே என்ன கவலை? பந்தி பரிமாறலாமான்னு தவசிப்பிள்ளை கேக்காக.. நீங்க ஒரு எட்டு வர்றியளா“ என்று அழைத்தார்..

“பந்தி நடக்கட்டும்.. அங்கனெ பெரியவன், பரமன்.. சம்பந்தார்லாம் பந்தி விசாரிக்க போய்ட்டாக…நீங்க கூடமாட நின்னு பாத்துக்கிடுங்க… இன்னும் ஒண்ணு ரெண்டு சடங்குக பாக்கி இருக்கு… நான் கொஞ்சம் பொறுத்துவாரேன்…” என்று சொல்லி அவரை அனுப்பினார். பந்தலில் இருந்த உறவினர் கூட்டம் பந்திக்கூடத்திற்கு இடம் மாறிற்று… முகத்தை சகஜநிலைக்கு மாற்றிக்கொண்டு பெரிய மகளைத் தேடினார் சுப்பையா பிள்ளை.

“வெள்ளிக்கொடத்துலெ தண்ணி எடுத்திட்டு வாரேம்ப்பா“ என்று சொல்லியபடியே சரசுவதி வந்து கொண்டிருந்தாள்.

“கொடத்துக்குள்ளே மோதரத்தைப் போடணும்…. யார் மொதல்லெ எடுக்கா‘ன்னு பாத்தாத்தானே யார் கை ஓங்கும்னு தெரிஞ்சுக்கிடலாம்?”

“அமுதா கைதான் ஓங்கும்“ என்று பதில்சொல்லியபடியே வந்த சரசுவதியை வழிமறிப்பதுபோல் குறுக்கே நின்றான் நெல்லையப்பன்.

“என்ன பெரியம்மா.. எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லீருந்தா அம்பது பாட்டில் பன்னீரெ வாங்கீட்டுவந்து கொடத்தெ ரொப்பீருப்பேன்லா… பாரு.. தண்ணி சில்லுன்னு இருக்கு” என்று குடத்துக்குள் கைவிட்டு அளைந்தான். கையில் பதுக்கி வைத்திருந்த புதுத்தாலி இப்போது குடத்துக்குள்!

“ஏலே.. வெளையாட நேரம் பாத்தான்.. வழியை விடுலெ“ என்று செல்லமாக நெல்லையப்பனை அதட்டிவிட்டு வெள்ளிக்குடத்தை மணமேடையில் வைத்தாள்… சுப்பையா தன் விரலில் கிடந்த மோதிரத்தைக் கழற்றிக் குடத்திற்குள் போட்டு கையைவிட்டுத் தண்ணீரை நன்றாகக் கலக்கினார்.. கையை வெளியே எடுக்கும்போது மூடிய உள்ளங்கையில் களவுபோன புதுத்தாலி இருந்தது…

மனைவியிடம் தணிந்த குரலில் “சின்னஞ்சிறுசுக வேடிக்கை பாக்கட்டும்..வீட்டுக்குள்ளெ போய்ட்டு வந்திருவோம்.. சத்தங்காட்டாம வா“ என்று உத்தரவிட்டார்.. திட்டிக்கதவைத் திறக்கும்நேரத்தில் எதுவுமே நடக்காதது மாதிரி நெல்லையப்பன் அவர்களை நெருங்கிவந்தான்.

“தாத்தா, ஒங்களெ எங்கேல்லாம் தேடுகது? பந்தியிலே எல்லாரும் நீங்க வரட்டும்னு காத்திருக்காக. ஒங்களுக்கும் பசிக்கும்லா, வர்றியளா..” என்றான் பாசத்துடன்!

அவன் கையை இறுக்கிப் பிடித்து முறுக்கி “வெள்ளாளன் வீட்டுக் கல்யாணத்திலெ எனக்காக மனுஷக்கறி பிரியாணி பண்ணச் சொல்லீருக்கேன். இப்பந்தானே எளங்கறி சிக்கீருக்கு“ என்று சீறியபடியே அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

நெல்லையப்பன் தடுமாறி நிலைகுலைந்து விழப்போனான். தாத்தாவின் கையிலிருந்த தாலியின் கூரிய முனை அவன் கன்னத்தைக் கீறியது.. சௌந்தரம் பாய்ந்துவந்து மகனைத் தாங்கிக்கொண்டு ஆவேசமாகக் கூப்பாடுபோட்டாள்..

“ஏ அப்பா… மனசிலெ என்ன நெனெச்சுக்கிட்ருக்கீய? ஓவியமா வளத்த ஒங்க அருமைப் பேத்தியெ அவனுக்குக் கெட்டிக் கொடுக்கத்தான் மனசில்லெ.. விட்டுக்கொடுக்காம அவன் மூணுநாளா ஓடியாடி வேலை பாத்ததுக்கு நல்ல மரியாதை கொடுத்திட்டியளே! நெல்லையப்பா இன்னும் ஏன் நிக்கே…? இவுக சங்காத்தமும் வேண்டாம்.. சாப்பாடும் வேண்டாம்… சாம்பார் வாளியெ கீழெ வச்சிட்டு ஒங்க அப்பாவை ஒடனே வரச்சொல்லு“ என்று ஓலமிட்டபடியே வெளியேறினாள்.

 பூஜையறையில்….

புதுத்தாலி கோர்த்திருந்த மஞ்சள் கயிற்றை ஈரம்போகத் துண்டால் துடைத்து அம்மன் பாதத்தில் வைத்தார் சுப்பையா பிள்ளை.

“அமுதாவுக்கு தாலிபிரிச்சுக் கோக்கையிலெ இந்தப் புதுத் திருமாங்கல்யத்தை சங்கிலியிலெ கொருத்துக்குடுத்து மாப்பிள்ளை கையாலெ போட்டுவிட்றச் சொல்லு.. நடந்த கூத்து நம்ம மூணுபேரோட போகட்டும்…என்ன இருந்தாலும் நெல்லையப்பன் நம்ம ரத்தம்லா… ஊர்க்காரவுக தூத்த நாமளே எடங்கொடுக்காண்டாம்!“ என்றார்.

“அதுவுஞ் சரிதான்.. என்னமோ எங் கழுத்துக்கு கண்டம்’னு காந்திமதி கோடிகாட்டி நெல்லையப்பன் மூலமா கழத்த வச்சிட்டால்லா… இதை அவ உண்டியல்லெயே போட்ருவோம்… நான் கண்ணெமூடுத காலம்வரைக்கும் மஞ்சக்கயிறே நெலைக்கட்டும்’னு குங்குமம் வச்சுவிடுங்க ஐயா“ என்று நெகிழ்ச்சியுடன் கூறி கணவரின் பாதங்களில் விழுந்து வணங்கினாள், பழுத்த சுமங்கலி பார்வதி ஆச்சி!