குவிகம் திருக்குறள் போட்டியில் முதல் பரிசு ( ஆயிரம் ரூபாய்) பெற்ற கதை
கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம் – கண்ணதாசன்
“இப்போ இதுக்கு என்ன தேவை இருக்கு? என்ன நினைச்சு இப்படி எல்லாம் பண்றிங்க?” என்று ராஜலட்சுமி கத்திக்கொண்டிருந்தாள். அதை சிறிதும் கண்டுகொள்ளாமல் ஃபார்மை நிரப்பிக்கொண்டிருந்தான் வெங்கடேசன்.
டொம்மென்னு டேபிளில் வந்து உட்கார்ந்தது டீ டம்ளர். சில துளிகளும் சிதறின. துளிகள் படிவத்தில் விழக்கூடும், அல்லது அடுத்து படிவம் கிழிக்கப்படும் என்பதை உணர்ந்து அதை எடுத்து டிராயரில் வைத்தான் (7). அவள் பக்கம் திரும்பினான்.
“உனக்கு என்ன இப்போ இவ்வளவு கோபம்?”
“நல்லாதானே இருக்கிங்க, அப்புறம் என்ன இதெல்லாம்? என் பிறந்தநாளுக்கு என்ன பரிசுன்னு கேட்டா இதை சொல்றிங்க. என்ன? என்னை சீண்டிப்பாக்கறிங்களா?”
“நீ என்ன ராஜி இன்னும் குழந்தை போலவே இருக்க? நம்ம குழந்தைக்கே ஆறு வயசு ஆகுது தெரியுமா?”
“பேச்சை மாத்த வேணா”
டீயை காலி செய்து அவளிடம் கொடுத்தான். வாங்கி அதே டொம்முடன் டேபிளின் மூலையில் வைத்தாள். அவளுக்காக கொண்டு வந்த டீ ஆடை கட்டியிருந்தது.
“சரி உட்காரு அமைதியா. நான் பொறுமையா யோசிச்சுதான் இந்த முடிவை எடுத்தேன். நம்மைன்னு யோசிக்காம நான் சொல்வதை பொதுவா வேற ஒருத்தருக்கா யோசி. அப்போதான் உனக்கும் புரியும். ஒரு வட்டத்துக்கு உள்ளயே இருந்தா அது முழுசா தெரியாது. தூரமா இருந்து பாத்தாதான் முழுப்பரிமாணம் தெரியும் (4).
ராஜலட்சுமி எதுவும் பேசவில்லை. உம்மென்றே இருந்தாள். அதை சம்மதமாக எடுத்துக்கொண்டான் வெங்கடேசன்.
“இப்போ சாதாரணமா கேட்கிற கேள்விகளுக்கு பதில் மட்டும் சொல்லு. என் வருமானம் எவ்வளவு?”
“நாற்பதாயிரம் தருவீங்க”
“அதில் செலவு எல்லாம் போக எவ்வளவு சேவ் பண்ற?”
“அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? இங்கயே பத்தும் பத்தாமதான் இருக்கு. இதில் சேவிங்ஸ் வேற”
“சரிவிடு. சேவிங் எதுவும் இல்லைல்ல… அப்போ…”
இடைமறித்தாள்.
“இருக்கு, அதெல்லாம் சொல்லமுடியாது”
“அச்சோ கண்மணி, அது எதுவேணா இருக்கட்டும். ஆனா டக்குன்னு அந்த வருமானம் நின்னு போச்சுன்னா?”
“இப்போ எதுக்கு அந்த பேச்சுன்னுதான் கேட்கிறேன்”
“இப்படியே போகாது ராஜி. எதையும் ஃபியூச்சர்ல கொஞ்சம் யோசிக்கணும். நாளைக்கு என்ன வேணா ஆகலாம். அதுக்கு தயாரா பாதுகாப்பா இருக்கணும். அப்போதான் பயம் இல்லாம இருக்கலாம் (9).
“சரி சொல்லுங்க”
“எதுக்கு பயப்படணுமோ அதுக்கு பயந்துதான் ஆகணும் (8). எப்படியும் விதியை மாத்தமுடியாது. முடிவு எப்போ வரும்னு தெரியாம இருக்கும் நாள் வரை நிம்மதிதான், இல்லைன்னு சொல்லலை. திடீர்னு எனக்கு எதுவும் ஆச்சுன்னா உங்க பாதுகாப்புக்கு என்ன பண்றது? நான் இல்லாதது ஈடு செய்யமுடியாத இழப்புதான். ஆனா நீ என்னோட வந்துடமுடியுமா சொல்லு? பாப்பா இருக்கா, அவளை கண்ணும் கருத்துமா வளர்க்கணும். நல்லபடியா படிக்க வச்சு அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சுக்கொடுக்கணும். இதெல்லாம் உலக நியதிதானே. நாமும் அதில் ஒருத்தர்தானே (6).
“அப்போ எனக்கு எதுவும் ஆகாதா? நான் ஏன் முதலில் போகக்கூடாது? அதைத்தான் நானும் விரும்பறேன். இப்பவே உடம்பு அப்பப்போ படுத்துது. ரொம்பநாள் தாங்கமாட்டேன் நான். எனக்குதானே முதலில் இன்சூரன்ஸ் எடுக்கணும்?”
“உனக்குப்புரியலை. இன்கம் எனக்குதானே வருது. நீ இல்லைன்னாலும் நான் சமாளிப்பேன் இல்ல?”
“அப்போ நான் போயிட்டா உங்களுக்கு நிம்மதி. அப்படிதானே?”
“அடக்கடவுளே, இந்த சென்டிமெண்ட், ஃபீலிங்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓரமா வச்சுட்டு யோசி. நீ இல்லைன்னா நானும் உடைஞ்சுதான் போவேன். இல்லைன்னு சொல்லலை. ஆனாலும் எனக்கும் கடமை இருக்கே? எது நல்லது எது கெட்டது எல்லாமே பேசிதானே ஆகணும் ராஜி. இதெல்லாம் கெட்ட விஷயம்னு எதுவும் இல்லை. இயற்கை எப்படி வேணா கணக்கு போடும். அதிலே கொஞ்சம் சுதாரிப்பா இருந்து நல்லதை மட்டும் நாம எடுத்துக்கணும் ( 2). பி பிராக்டிகல் ராஜி.
“சரி, அப்படியே இருக்கட்டும். இதென்ன திடீர் ஞானோதயம்? இத்தனை நாள் இப்படி எதுவும் யோசிக்கலையே நீங்க. ஏன் உடம்புக்கு ஏதாவது?”
சொல்லும்போதே அவள் குரல் நடுங்கியது.
“அட பாப்பா, எனக்கு எதுவும் இல்லை. நேத்து நம்ம சீனிவாசன்கிட்ட பேசிட்டு இருந்தேன். அவன்தான் டீடெய்ல் சொன்னான்.”
“ஓஹோ, அவர் ஏஜெண்டா? அவர் சம்பாதிக்க உங்களை பலியாகச் சொல்றாரா? வீட்டுப்பக்கம் வரட்டும். இருக்கு அவருக்கு”
“சத்தியமா அவன் ஏஜெண்ட்லாம் இல்லை. நேபாள் விபத்து பார்த்தோமில்ல? அதை பத்தி பேசிட்டு இருக்கும்போதுதான் சொன்னான். அவன் பத்து லட்சத்துக்கு எடுத்திருக்கானாம். ஆக்சிடெண்டுன்னா இன்னொரு பத்து லட்சம் கிடைக்குமாம். கவர்மெண்ட் பாலிசிதான். பயமில்லை”
“சும்மா இருக்காது. கண்டிப்பா அவருக்கும் எதாவது கமிஷன் இருக்கும்”
“இல்ல தங்கம். அவன் சின்ன வயசில் இருந்தே எனக்கு ஃப்ரெண்டு. எப்பவும் எனக்கு கெடுதலோ, என்னை வச்சு லாபமோ சம்பாதிக்க நினைக்கக்கூட மாட்டான் (5). அதனால்தான் இத்தனை வருஷம் ஆனாலும் அதே நட்போட இருக்கோம். இன்னொரு உண்மையும் சொல்றேன். இப்போ ஏதோ டார்கெட்டாம். அதனால பாலிசி மட்டும் போதுமாம். அதோட கமிஷனும் நமக்கே கொடுத்திடறதா அந்த ஏஜெண்ட் சொன்னாராம். நீ பொதுவா கேள்விபடும் விஷயங்களை வச்சு எல்லோரையும் போல அவனை நினைக்காதே. நான் சொன்னதை எல்லாம் யோசி. உனக்கே உண்மை புரியும் (3).”
“நீங்க எவ்வளவுக்கு எடுக்கிறீங்க”
“இப்போதைக்கு இருபது லட்சம். அதுக்கு ப்ரீமியம் கட்டதான் பணம் இருக்கு. வித் ஆக்சிடெண்ட் பெனிஃபிட் தனி”
எழுந்து சென்றுவிட்டாள் ராஜலட்சுமி. நிம்மதியாக ஃபார்மை எடுத்து விடுபட்ட விபரங்களை நிரப்ப ஆரம்பித்தான் வெங்கடேசன். ஒரு வழியாக ராஜலட்சுமியை சம்மதிக்க வைத்ததால் அவன் மனம் நிம்மதியாக இருந்தது. எப்படி சொல்வது என்றுதான் தடுமாறிக் கொண்டிருந்தான். ‘இவள் எப்போதும் இப்படித்தான். எதையும் அறிவால் யோசிப்பதைவிட உணர்வுபூர்வமாக அணுகி குழப்பிக்கொள்வாள். காலம் கடக்கையில் உணர்வுகள் மாறிப்போகும். அறிவே நிரந்தர செல்வமாக நிலைக்கும் என்பதை உணர்வதேயில்லை (10)’, என்றெல்லாம் யோசித்துக்கொண்டே படிவத்தை எடுத்து கவரில் போட்டான்.
ராஜலட்சுமியை வெளியே கூட்டிச்சென்றான். அவளுக்கான புதிய உடைகள் வாங்கினான். சாக்லேட்டுகளை மகள் வித்யா அள்ளிக்கொண்டிருந்தாள். கேக் வாங்கவேண்டாம் என்று மறுத்த ராஜலட்சுமியை சமாதானம் செய்து அதையும் வாங்கினான். உம்மென்றே இருந்தாள். வீடு வந்தும் அவள் யோசனையில் இருந்து மாறவேயில்லை. அவளுக்காக வாங்கி வைத்திருந்த சின்ன மோதிரத்தை அவளுக்குத் தெரியாமல் கிஃப்ட் பேக் செய்து ஒளித்து வைத்தான். அலைந்த அலைச்சலில் கண் சொருகி தூக்கம் வந்தது. சரியாக பன்னிரண்டு மணிக்கு அலாரம் வைத்திருந்தான். சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது இன்னமும் ராஜலட்சுமி தூங்காமல் படுத்திருப்பது தெரிந்தது. வித்யா நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள்.
“ஹாய் தங்கம். ஹேப்பி பர்த்டே”
“ம்”
“இங்க பாரு உனக்கான சின்ன பரிசு”
என்று சொல்லி அந்த மோதிரத்தை அவள் கையில் போட்டு விட்டான். அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் அதைப் பார்த்தாள். வித்யா எழுந்தால் கேக் கூட வெட்டலாம் என்றும் வெங்கடேசனுக்கு தோன்றியது. ராஜலட்சுமியின் அருகில் நெருங்கி உட்கார்ந்தான்.
“என்ன பர்த்டே பேபி, இன்னமும் உம்முனே இருக்க. பயப்படாதே தங்கம். அப்படி எல்லாம் எனக்கு எதுவும் ஆகாது. எல்லாம் ஒரு பாதுகாப்புக்குதான். நீயே பாப்பாவை பாரேன். அழகா பொம்மையாட்டம் தூங்கறா, அவளுக்கு, அப்புறம் உனக்கும்தான், திடீர் அசம்பாவிதம்ன்னா நீங்க அதில் மாட்டிக்காம வாழணுமில்ல, வாழ்க்கைக்கு ஒரு பாதுகாப்பு அரண், ஒரு நம்பிக்கை வேணாமா(1), அதுக்குதான்”
“இப்பவே யுகேஜிக்கே ஒரு லட்சம் கேட்கறாங்க. இவ காலேஜ் போகும்போது எல்லாம் எப்படியும் அம்பது அறுபது லட்சம் கேட்பாங்க. வெறும் இருபது லட்சம் வச்சு என்ன பண்ண முடியும்?”
“என்ன சொல்ற நீ?”
“கொஞ்சம் பொறுத்து ஒரு அம்பது லட்சமா போடுங்க. போடறது யூஸ்ஃபுல்லா போடுங்க”
சொல்லிவிட்டு ராஜலட்சுமி படுத்து தூங்க ஆரம்பித்தாள். வெங்கடேசனுக்கு அதன்பின் தூக்கம் வரவில்லை.

