வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்
பண்டோர் கம்பன் பாரதி தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன் – கண்ணதாசன்
‘கௌரவ் மல்டி நேஷனல்’ என்ற பெயர் பலகை தாங்கி நின்ற அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தில் நுழைந்தாள் அந்த இருபதுகளின் இறுதிகளில் இருக்கும் அந்த பெண். நவீன கால முறைப்படி அரை முதுகு வரை வந்த கூந்தலை அலையவிடாமல் கட்டி இருந்தாள். பார்க்க அழகாக இருந்தாள் என்பதை விட புத்திசாலித்தனமான பெண் என்பது தோற்றத்தில் தெரிந்தது. மெலிதான ரோஜா நிறத்தில் ஷிபான் புடவை அணிந்திருந்தாள். அதே நிறத்தில் சற்று ஆழ்ந்த நிறத்தில் கையில்லாத ரவிக்கை. கழுத்தில் ஒரே ஓர் மெல்லிய தங்க சங்கிலி. வளைகள் கிடையாது. இடது கையில் ஓர் கடிகாரம். சற்றே குதி உயர்ந்த ஜோடுகள். கையில் ஓர் அழகு பை. கண்களை மறைக்கும் பெரிய குளிர் கண்ணாடி.
பாதுகாப்பு சோதனையை தாண்டி பிரம்மாண்டமான வரவேற்பு பகுதியில் நுழைந்தாள் அவள்.
அங்கு ஓர் பகுதியில் இருந்த பெரிய வரவேற்பு மேசையின் பின் அமர்ந்திருந்த ஒயிலான பெண்ணிடம் சென்று நின்றாள்.
அந்த வரவேற்பாளினி இவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு, ‘குட் மார்னிங்..எஸ்.’ என்றாள்’
‘நான் மிஸ்டர் தேவ் அவர்களை பார்க்க வேண்டும்,’ என்றாள் வந்தவள்.
‘உங்களுக்கு முன்கூட்டியே சந்திக்க அனுமதி இருக்கிறதா? உங்கள் பெயர்?’ என்று கேட்டாள் வரவேற்பாளினி.
‘இருக்கிறது. என் பெயர் அம்பா,’ என்றாள் வந்தவள்.
அதற்குள், அன்றைய எம்.டியின் சந்திப்புகளை பற்றிய முன் குறிப்பை பார்த்த வரவேற்பாளினி. ‘சாரி…உங்கள் பெயர் இல்லையே?’ என்றாள்.
‘ஓ, பரவாயில்லை. நீங்கள் அவரிடம் போனில் பேசுங்கள். என் பெயரை சொல்லுங்கள். நான் பனாரஸ்லிருந்து வருகிறேன் என்று சொல்லுங்கள்.’ என்றாள் வந்தவள்.
சற்று புருவம் சுருங்கிய வரவேற்பாளினி எம்,டியின். எண்ணை தொடர்பு கொண்டாள்.
‘குட் மார்னிங் சார். உங்களை பார்க்க பனாரஸில் இருந்து ஓர் பெண்மணி வந்திருக்கிறாள். பெயர் அம்பா.’
அந்தப்பக்கம் ஓர் வினாடி ம் மௌனம் நிலவியது. பின் அவர் சொன்னார்.
‘வரச்சொல்லுங்கள்.’
‘மிஸ் அம்பா. நீங்கள் மூன்றாவது தளத்தில் இருக்கும் கடைசி அறைக்கு செல்லுங்கள்’ என்று கூறிவிட்டு மின்தூக்கிகள் இருக்கும் திசையை காட்டினாள்.
‘நன்றி’ என்று கூறிவிட்டு அம்பா அந்த திசை நோக்கி நடந்தாள். வரவேற்பாளினி அவள் போவதையே சற்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவளிடம் எதோ ஓர் வேற்றுமை தெரிந்தது. மற்ற நவீன நங்கைகள் போல் இல்லை இவள் என்று தோன்றியது.
***
கதவை லேசாக விரலால் தட்டிவிட்டு தேவ் வின் அறைக்குள் நுழைந்தாள் அம்பா.
மிகப்பெரிய அலங்காரமான அலுவலக மேசைக்கு அந்தப் புறத்தில் ஓர் கம்பீரமான ஆனால் சற்று வயதான ஓர் ஆண் வீற்றிருந்தார். அவர் முகத்தில் கம்பீரம், அகங்காரம், ஒளி எல்லாமே எதோ ஓர் வினோதமான கலவையில் இருந்தது.
‘ஐ’ம் அம்பா த்ருபத். நான் பைவ் ஸ்டார் பைனான்சில் இருந்து வருகிறேன்..என்னை உங்களை சந்திக்கும்படி சொல்லி அனுப்பியது மிஸ்டர் கேசவ். உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.’ என்றாள், அவள் குரலில் பெண்மையின் மேன்மையை விட சற்று ஆணின் அழுத்தம் இருந்தது.
தேவ் புருவத்தை உயர்த்தி பார்த்தார். பின் ஓர் புன்னகை அவர் முகத்தில் தோன்றியது.
‘ஓ ..கேசவ் உங்களை அனுப்பினாரா? என்ன விஷயம்?’
ஓர் வினாடி அம்பா மௌனமாக இருந்தாள்.
‘எங்கள் நிறுவனம் எடுத்து செய்வதாக இருக்கும் குருக்ஷேத்ரா நிறுவனத்தின் ப்ரொஜெக்ட்டில் நீங்கள் விலகி இருக்கும்படி மிஸ்டர் கேசவ் உங்களிடம் சொல்லக் சொன்னார்.
தேவின் முகம் மாறியது. புருவங்கள் நெருங்கின.
‘அதை அவர் என்னிடம் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ சொல்லி இருக்கலாமே?? உங்களை போன்ற ஓர் பெண்ணை எதற்கு என்னிடம் அனுப்பி வைக்க வேண்டும்?’ என்றார் சற்று வியப்புடன்.
அம்பாவின் முகத்தில் ஓர் சிறு புன்னகை வந்தது.
‘ஏனெனில் நான்தான் அந்த ப்ரொஜெக்ட்டை எடுத்து நடத்த போகிறேன்.’
தேவின் முகத்தில் வியப்பு, மற்றும் பரிகாசம் இரண்டும் ஒன்றாக தோன்றின.
‘நீங்களா?’
‘ஆமாம். நாந்தான். நான் இந்த பைவ் ஸ்டாரில் சேருவதற்கு முன் பரசுராம் பைனான்சில் வேலை பார்த்து அனுபவம் பெற்றவள்.’ என்றாள் அம்பா சற்று கர்வம் ததும்பும் குரலில்.
தேவின் முகம் மாறியது. மௌனம் காத்தார். ‘எனக்கு தெரியும்…’
‘என் திறமையில் உங்களுக்கே சந்தேகம் வர வாய்ப்பில்லை. அதோடு இந்த ப்ரொஜெக்ட்டில் என்னுடன் எனக்கு மேல் இருந்து கண்காணிக்க போவது தனஞ்சய். உங்களுக்கு அவரையும் நன்கு தெரியும் என்று நினைக்கிறேன்,’ என்றாள் அம்பா.
அவள் முகத்தில் ஓர் புன்னகை வந்தது.
அதைக்கேட்ட தேவ் தானும் புன்னகை செய்தார். ‘கேஷவ் எதை செய்தாலும் அதை சிந்தித்துதான் செய்வார். அது எனக்கு தெரியும். இப்போது உங்களை இங்கு அனுப்பியது கூட ஓர் அர்த்தத்துடன்தான் என்பதும் எனக்கு தெரியும்.’
அம்பா புன்னகை செய்தாள். பின் மெதுவாகக் கேட்டாள்.
தேவ் சற்று யோசனை செய்வது போல் தோன்றியது. பின் பேசினார்.
‘சுயோதனனும் இந்த ப்ரொஜெக்ட்டில் ஆர்வமாக இருக்கிறான். என்னால் அவனை தடுக்க முடியாது. நீங்கள் இதை கேஷவிடம் சென்று சொல்லுங்கள். அவருக்கு அவனைபி பற்றித் தெரியும்.’
அம்பாவின் முகம் மாறியது.
அதில் இப்போது மென்மை மறைந்து ஓர் ஆணின் அகங்காரம் தெரிந்தது. பின் ஓர் வினாடி மௌனத்திற்கு பின் சொன்னாள்.
‘நீங்கள் பின்னால் வருத்தப்படக்கூடாது. இதன் விளைவுகள் மோசமாக இருக்கலாம்.’ என்றாள் அழுத்தமான குரலில்.
தேவ் சற்று நேரம் அமைதி காத்தார். பின் அவருக்கு பக்கவாட்டில் இருந்த பெரிய ஜன்னல் வழியாக சிந்தனையுடன் வெளியே பார்த்தார்.
பின் அம்பாவை தீவிரமாக நோக்கினார்.
‘விளைவுகள் பற்றி எனக்கும் தெரியும் என்று கேஷவ் இடம் சென்று சொல்லுங்கள். அவன் புத்திசாலி என்பதில் சந்தேகமில்லை. அதே போல் தனஞ்சயின் திறமை பற்றியும், ஏன் உன் சாதுர்யம் பற்றியும் எனக்கு சந்தேகமில்லை. ஆனால், என்னால், கௌரவ் நிறுவனத்திற்கு எதிராக வேலை செய்ய முடியாது. அது என் கடமை. பொறுப்பு. இது இந்த அதிகாரம் நிறைந்த நிதி மற்றும் இதர பண பரிவர்த்தனை நிறுவங்களுக்கும், ஏன், வங்கிகளுக்கு கூட தெரியும். என்னால் பின் வாங்க முடியாது.
களத்தில் சிந்திப்போம் என்று கேசவிடமும், தனஞ்சய்யிடமும் சென்று சொல்லுங்கள். நீங்கள் போகலாம்.’ என்று அழுத்தமான குரலில் பேசி முடித்தார் தேவ்.
அம்பாவின் முகத்தில் கடும் சினமும், வெறுப்பும் தெரிந்தன.
‘உங்களுக்கு கௌரவ் நிறுவனத்தின் மேல் இருக்கும் அக்கறையை பாராட்டுகிறேன். ஆனால், நீங்கள் இந்த வணிக போரில் தோற்கப்போவது உறுதி,’ என்றபடி எழுந்தாள் அம்பா.
தேவின் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை. பதிலாக ஓர் புன்னகை தவழ்ந்தது.
****
அந்த மிகப் பெரிய ‘குருக்ஷேத்திர ப்ரொஜெக்ட்’டுக்கான இறுதி விளக்கக்காட்சி ஓர் மிக பெரிய ஹோட்டலில் நடந்தது. இரண்டு நிறுவங்களுக்கும் அறிமுகமான பல துறைகள் சார்ந்த நிறுவனங்களும், அரசாங்க அதிகாரிகளும் அதில் கலந்து கொண்டனர்.
அதில் முதலில் பேசிய சுயோதனன் மிகுந்த தன்னம்பிக்கை, மற்றும் அதிகாரத்துடன் தாங்கள் இந்த ப்ரொஜெக்ட்டை எப்படி நடத்தி நிர்வகிக்க போகிறோம் என்று விளக்கினான். கூட்டம் மிக பலமாக கைகளை தட்டி ஆர்ப்பரித்தது. சுயோதனனுடன் தேவும் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தார்.
அடுத்து ‘பைவ் ஸ்டார் பைனான்ஸ்’ மற்றும் ‘பீம் கட்டுமானம்’ நிறுவனத்தின் சார்பாக எவர் வந்து பேசப்போகிறார் என்று காத்திருந்த போது ஒலிபெருக்கியில் ‘அடுத்து குருக்ஷேத்ரா ப்ரொஜெக்ட்டை எப்படி நிறைவேற்றப்போகிறோம் என்பது பற்றி பேச கேஷவ் மற்றும் ஐவர் கட்டிடக்கலை நிறுவனம் சார்பில் எங்கு வந்து விளக்கம் தரப்போவது மிஸ். அம்பா, கேஷவ் நிதி மற்றும் நிர்வாகம் நிறுவனத்திலிருந்து.’ என்ற அறிவிப்பு வந்தது.
அங்கிருந்த பலருக்கும் அம்பா த்ருபத் பற்றியும், அவள் திறமைகள் பற்றியும் மிகுந்த நமிபிக்கை இருந்ததால் வியப்பு, மற்றும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
அம்பா மிக திறமையாக தாங்கள் எப்படி அந்த ப்ரொஜெக்ட்டை கொண்டு செல்லப் போகிறோம் என்பது மட்டும் இன்றி அந்த ப்ரொஜெக்ட்டினால் இந்தியா, மற்றும் பல வெளி நாட்டு திறமை வாய்ந்த நிறுவனங்களுடன் இணைந்து மிகப்பெரிய அளவில் சாதனை புரியப்போகிறோம் என்பதையும், அதன் பல்வேறு சிறப்பம்சங்களை மிக விரிவாக விளக்கினாள்.
அவள் பேச்சு மிகுந்த கட்டுக்கோப்புடனும், சாதுர்யத்துடனும், பல வகைகளில் சுயோதனனின் பேச்சை முறியடிப்பதற்காக இருந்தது. அதனால், மிகுந்த கவனத்துடன் கேட்ட கூட்டத்தினரும், இதர நிறுவனங்களை சேர்ந்தவர்களும் பலத்த கரகோஷம் எழுப்பினர்.
நடுவர்களாக நியமிக்க பட்டிருந்த ஐந்து பெரும் தனியாக பேச ஓர் தனி இடத்திற்கு சென்றனர்.
கேஷவ் மற்றும் தனஞ்சய் முகத்தில் மகிழ்ச்சி தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் இருவரும் மேடை நோக்கி வந்து தேவ் மற்றும் சுயோதனன் அவன் சகோதரர்களுக்கு வணக்கம் தெரிவித்தனர்.
முடிவை அறிந்தவர் போல் இருந்த தேவின் முகத்தில் மட்டும் ஈயாடவில்லை. சுயோதனன் முகத்தில் கோபமும், வெறுப்பும் தெளிவாகத் தெரிந்தது.
கேஷவ் மட்டும் தேவ் அருகில் சென்று ‘இந்த ப்ராஜெக்ட் மற்றும் விளக்கவுரை எல்லாமே அம்பாவின் வேலைதான். எனக்கு இதில் எந்த பங்களிப்பும் கிடையாது என்று உங்களுக்கு தெரியவேண்டும்.’ என்றான் மிக மெதுவான குரலில்.
தேவ், கேஷவ வின் முகத்தை உற்று பார்த்துவிட்டு ‘நீங்கள் சொல்வதை நான் நம்புகிறேன்,’ என்றார். ஆனால், அப்போது அவர் முகத்தில் ஓர் புன்னகை வந்தது.
****
அதற்குள் அந்த நடுவர்கள் அரங்கத்தின் மத்தியில் வந்து அமர்ந்து சில சுருக்கமான முன்னுரையுடன் குருக்ஷேத்ரா ப்ராஜெக்ட் கேஷவ் மற்றும் பீம் நிறுவனங்களுக்கு கொடுக்கப் போவதாக அறிவித்தார்.
பலத்த கைத்தட்டல் செவிகளை பிளந்தந்து.
கூட்டம் மெல்ல கரைய ஆரம்பித்தது.
****
தேவ் மட்டும் கேஷவ் அருகில் வந்து ‘எனக்கு உன் சாதுர்யம் தெரியும். அந்த யுகத்தில் என்னை நீ அம்பாவை அர்ஜுனன் முன் வைத்து வீழ்த்தினாய். இது கலியுகம். மன்னர் ஆட்சி இல்லை. மக்கள் ஆட்சி. இன்றும் நீ என்னை அம்பாவை வைத்து என்னையும், கௌரவ நிறுவனத்தையும் வீழ்த்தியதில் ஆச்சரியம் இல்லை,’ என்றார் புன்னகையுடன்.
‘நியாயத் தராசில் வைத்து பார்த்தால், அன்று நீங்கள் அம்பாவுக்கு இழைத்தது அநியாயம்தான். அதன் விளைவுகள் காலம் காலமாக தொடர்வதும் நியாயம்தானே?’ என்றார் கேசவ் அமைதியான குரலில்.
‘அந்த போர்க்களத்தில் சாபங்களும், கோபங்களும் தலை விரித்து ஆடின என்பது மறுக்க முடியாத உண்மை. ஏன்? நீயும், உன் வம்சமும் கூடத்தான் காந்தாரியின் சாபத்திற்கு ஆளாயின என்பதை மறுக்க முடியமா?’ என்றார் தேவ்.
இருவரும் சற்று தூரத்தில் நின்று கொண்டு இவர்களை கூர்மையாக கவனித்து கொண்டிருந்த அம்பாவை பார்த்தனர்.
அம்பா புன்னகையுடன் அந்த இருவரையும் பார்த்து கொண்டிருந்தாள். வெற்றியின் கர்வம் அவள் முகத்தில் தெளிவாக தெரிந்தது.
