“WriterSCafe” – எழுத்தாளர் சங்கமம் சார்பில் 2026 ம் வருடம் நடத்தப்பட்ட இரண்டாவது உலகளாவிய சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை
******
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது
இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு
– கண்ணதாசன்
ஒரு மனிதன் தன் நாட்டை விட்டு வெளியேறும்போது உண்மையில் எதை எடுத்துக் கொண்டு செல்கிறான் என்று நான் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆடைகள், ஆவணங்கள், புகைப்படங்கள் — இவை அனைத்தும் வெளிப்புறச் சுமைகள். ஆனால் உள்ளுக்குள் பயம். சில சமயங்களில், ஒரு கதவு மூடப்பட்ட சத்தம் கூட.
மாயா முதன்முதலில் என் அலுவலகத்துக்குள் வந்தபோது, அவளைப் பார்த்த உடனேயே எனக்குள் தோன்றிய உணர்வு அதுதான் — அவள் இன்னும் முழுமையாக இங்கே வந்து சேரவில்லை. அவளுடைய உடல் மட்டும் இந்த நாட்டில் இருந்தது. அவளுடைய செவிகள் இன்னும் வெடி குண்டுகளின் இடைவெளியை கேட்டுக்கொண்டிருந்தன.
அந்த மாலையில் வெளியே பனி பெய்துகொண்டிருந்தது. ஜன்னலுக்கு வெளியே தெருவிளக்கின் மஞ்சள் ஒளி பனியில் உடைந்து பரவியிருந்தது. மாயா கதவுக்கருகே நின்றபடியே முதலில் பேசாமல் இருந்தாள். அகதிகளின் முகங்களில் நான் அடிக்கடி காணும் ஒரு தயக்கம் அவளிடமும் இருந்தது — எந்த இடத்திலும் முழுமையாக நிற்க முடியாத மனிதர்களின் தயக்கம். அவர்கள் நாற்காலியில் அமரும்போதுகூட உடலை முழுவதுமாக அதன்மேல் ஒப்படைப்பதில்லை.
அவளுடன் நான்கு குழந்தைகள் வந்திருந்தார்கள்.
மூத்தவன் சாளரத்தை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தான். இரண்டாவது பெண் குழந்தை தன் தாயின் தோளில் முகத்தை வைத்திருந்தாள். மூன்றாவது பையன் ஒரு பள்ளிப்பையை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். கடைக்குட்டி மட்டும் அறைக்குள் இருந்த சுழல் நாற்காலியைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
அந்தச் சிரிப்பு என்னை அசௌகரியப்படுத்தியது.
போர் கடந்து வந்த குழந்தைகள் சிரிக்கும்போது, அதில் எப்போதும் விளக்கமளிக்க முடியாத ஏதோ ஒன்று இருக்கும். மனித இனத்தின் உயிர்வாழும் பிடிவாதமா? அல்லது இன்னும் துயரத்தின் முழு பருமனை அறியாத மனத்தின் அறியாமையா?
மாயா பேசத் தொடங்கியபோது, அவள் தன் வாழ்க்கையைச் சொல்லவில்லை. அவள் தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட விதத்தைச் சொன்னாள்.
“அந்த இரவு வானம் முழுக்க புகை அக்கா,” என்றாள். “கருப்பு இல்லை… சாம்பல் மாதிரி…”
சில மனிதர்கள் ஒரு காட்சியை விவரிக்கும்போது அவர்கள் சொல்லும் நிறங்கள், அவர்கள் உள்ளுக்குள் இன்னும் எதைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிடும்.
அவளின் கணவன் சிறையில் இருந்தான். “விசாரணை” என்ற சொல்லை அவள் உச்சரித்த விதத்தில் ஒரு விநோதமான வெறுமை இருந்தது. அந்தச் சொல்லுக்குள் மனிதர்கள் எப்படித் தங்கள் உடல்களையும் நினைவுகளையும் இழக்கிறார்கள் என்பதை அவள் ஏற்கனவே கற்றிருந்தாள்.
“முதலில் அவர் திரும்பி வருவார் என நினைத்தேன்,” என்றாள். “பிறகு, காத்திருப்பதுதான் வாழ்க்கை ஆகிவிட்டது.”
அந்த ஒரு வாக்கியம் நீண்ட நேரம் எனக்குள் ஒலித்தது.
காத்திருப்பது.
உண்மையில் மனித வாழ்க்கையின் பெரும்பகுதி அதுதானோ? நாம் நிகழ்வுகளில் வாழ்வதற்கும் அதிகமாக அவற்றுக்காகக் காத்திருக்கிறோம். பிறப்பு, காதல், திரும்பி வருதல், மரணம் — எல்லாவற்றிற்கும் இடையில் நீளமாக விரிந்திருப்பது காத்திருப்பே.
அவள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கடலைக் கடந்தபோது, மூன்றாவது பையன் வீட்டுத் திறப்பை மட்டும் எடுத்துக்கொண்டு வந்திருக்கிறான் என்று சொன்னாள்.
“அதை இன்னும் வைத்திருக்கான்,” என்றாள்.
நான் அந்தப் பையனைப் பார்த்தேன்.
அவன் பள்ளிப்பையை இறுக்கமாகப் பிடித்திருந்தான்.
அந்த வயதில் குழந்தைகள் பொதுவாக பொம்மைகளைப் பற்றிக்கொள்வார்கள். சில குழந்தைகள் தாயின் கையை. ஆனால் போர் கடந்துவந்த குழந்தைகள் பெரும்பாலும் பொருட்களைப் பற்றிக்கொள்கிறார்கள். ஏனென்றால் பொருட்கள் மட்டுமே மறைந்து போகாமல் இருக்கலாம் என்று அவர்கள் நம்பத் தொடங்கிவிடுகிறார்கள்.
அந்தத் திறப்பு எதற்கானது?
இப்போது இல்லாத ஒரு வீட்டிற்கானதா?
அல்லது திரும்பிச் செல்ல முடியாத ஒரு காலத்திற்கானதா?
அவர்களுக்கு அகதித் தஞ்சம் கிடைத்த போது வெளியே பனி பெய்து கொண்டிருந்ததாம். “அவ்வளவு வெள்ளைப் பனியை நான் பாத்ததே இல்ல,” என்றாள்.
போரிலிருந்து வரும் மனிதர்கள் வெள்ளை நிறத்தை வேறுவிதமாகப் பார்க்கிறார்கள் என்பதை நான் பின்னர் புரிந்து கொண்டேன். அவர்களுக்கு வெள்ளை என்பது மருத்துவமனைத் துணி.
சடலத்தை மூடும் விரிப்பு. சில சமயங்களில் சரணடையும் கொடி.
ஆனால் அந்த நாளில் பனி விழுந்து கொண்டிருந்தது.
“சத்தமே இல்லாமல் விழுந்து கொண்டிருந்தது” என்றாள்.
அந்தச் சொல்லை அவள் மெதுவாகச் சொன்னாள். ஒருவேளை, பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக உலகம் உடையாமல் ஏதோ ஒன்று நிகழ்வதை அவள் அப்போது பார்த்திருக்கலாம்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அவளுடைய கணவன் பிணையில் விடுவிக்கப்பட்டான். அந்தச் செய்தியைச் சொல்ல வந்த நாளில் அவளுடைய முகத்தில் நான் முன்னர் காணாத ஒரு ஒளி இருந்தது. அது மகிழ்ச்சி அல்ல. மிக நீண்ட இருளுக்குப் பிறகு மனித மனம் மீண்டும் ஒளியை நம்பத் தயங்கும் ஒரு நிலை. “இனியாவது குடும்பமா இருக்கவேணும்,” என்றாள்.
“குடும்பம்” என்ற சொல்லை அவள் மிக மெதுவாக உச்சரித்தாள்.
அது வெறும் உறவுகளின் தொகுப்பல்ல; போராலும் பிரிவாலும் சிதைக்கப்பட்ட வாழ்க்கையின் கடைசி மீதிப்பாக இருந்தது.
அலுவலகம் எப்போதும் போல குளிராக இருந்தது. அங்கு குளிர்சாதனப் பெட்டி மட்டுமல்ல, மனித முகங்களும் குளிர்ச்சியாகத்தான் இருந்தன.சுவர்களில் எந்தப் படங்களும் இல்லை. மரமேசையின் மேல் கோப்புகள் மட்டும். ஒவ்வொரு கோப்பும் யாரோ ஒருவரின் வாழ்க்கை. யாரோ ஒருவரின் துயரம்.
மாயா குழந்தைகளை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள். சிறியவள் அவளது சேலையின் முனையைப் பிடித்துக்கொண்டிருந்தாள். மூன்றாவது பையன் சாளரத்துக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்குப் புரியாது — பெரியவர்கள் பேசும் இந்தச் சொற்கள் எதற்காக என்று.
அதிகாரி கோப்பைப் புரட்டிக்கொண்டிருந்தார். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
“கணவரை உங்களுடனும் குழந்தைகளுடனும் சேர அனுமதி தரலாம்,” என்றார் அவர்.
சிறிது இடைவெளிக்குப் பிறகு, “ஆனால் ஒரு நிபந்தனை இருக்கு.”
அந்த இடைவெளிகள்தான் பல நேரங்களில் மனிதர்களை உடைக்கின்றன.
“நான்கு குழந்தைகளுக்கும் அவர்தான் தந்தை என்பதை டி.என்.ஏ. (மரபணுக்களின் பரிசோதனை) பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.”
மாயா உடனே தலையசைத்தாள். மாயாவுக்கு அதில் எந்தத் தயக்கமும் இல்லை. மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்று நினைத்தாள். உண்மைதானே என்றும் துணை நிற்கும் என்று நம்பினாள்.
தன் வாழ்க்கை இன்னும் சில காகிதங்களின் கருணையில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணராத ஒருவரின் அமைதியோடு அவள் பதில் சொன்னாள்.
பரிசோதனை முடிவுகள் வந்த நாள், வானம் முழுக்க மேக மூட்டமாக இருந்தது. மழை பெய்யுமா இல்லையா என்று தெரியாத ஒரு கனமான பிற்பகல். அறைக்குள் மாயா வந்தபோது, அவளது கைகளில் நடுக்கம் இருந்தது. ஆனால் அது பயத்தின் நடுக்கமல்ல; நீண்டகாலக் காத்திருப்பின் சோர்வு.
அறிக்கையைப் பார்த்த அதிகாரி கண்களை உயர்த்தாமல் வாசித்தார்.
“மூன்றாவது குழந்தை அவருடையது அல்ல.” அவ்வளவுதான்.
ஒரு வாழ்க்கையை உடைக்க பல வாக்கியங்கள் தேவையில்லை.
மாயா முதலில் புரிந்து கொள்ளவே இல்லை.
“என்ன?” என்று கேட்டாள்.
அதற்குள் அவளது முகத்தில் இருந்த நிறம் மெதுவாக வடியத் தொடங்கியது.
“இது பிழை,” என்றாள். பின்னர் மீண்டும்,
“இது எப்படி சாத்தியம்?”
அவளது குரலில் கோபம் இல்லை.
தன்னை நிரூபிக்க வேண்டிய தேவையின் அச்சுறுத்தல் மட்டுமே இருந்தது.
ஒரு பெண்ணின் நேர்மையையும், ஒரு தாயின் உண்மையையும், ஒரே நேரத்தில் சந்தேகித்து விட்ட உலகத்தின் கொடுமை. “இந்தக் குழந்தையும் அவருடையதுதான்,”
அவள் அதைச் சொல்லும்போது, மூன்றாவது பையனைத் தன்னருகே இழுத்துக்கொண்டாள். அந்தச் சிறுவன் எதுவும் பேசவில்லை.
பெரியவர்கள் ஏன் அழுகிறார்கள் என்று புரியாத கண்களால் மட்டும் சுற்றிப் பார்த்தான்.
பிறகு நான் அவளிடம் குடும்பப் புகைப்படங்களைக் காட்டச் சொன்னேன்.
அவள் அலைபேசியைத் திறந்தாள்.
கைகளில் நடுக்கம் இன்னும் இருந்தது.
படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்தன.
பிறந்தநாள் கேக்கின் முன் நிற்கும் குழந்தைகள்.
கடற்கரையில் காற்றில் பறக்கும் முடிகள்.
சிறிய வீட்டின் முன் நின்று எடுத்த குடும்பப் படம்.
சில படங்களில் மின்சாரம் இல்லாத இரவுகளின் இருள் கூட பின்னணியில் தெரிந்தது.
மூன்றாவது பையனின் படத்தைப் பார்த்தபோது நான் திடுக்கிட்டேன்.
அவன் தகப்பனின் முகத்தை உரித்து வைத்தது போல இருந்தான்.
அதே கண்கள்.
சிரிக்கும் போது கன்னத்தில் விழும் அதே குழி. அதே நெற்றி.
சில நேரங்களில் ரத்தம் தன் உண்மையை முகத்திலேயே எழுதிவிடுகிறது.
அந்த நொடியில் எனக்குள் ஒரு எண்ணம் தோன்றியது. மரபணுக்களை கண்டுபிடிப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, முகங்களைப் பார்த்து தந்தை-மகன் உறவை உணர்ந்து கொண்டிருந்தார்கள். உடல் தன் ரகசியங்களை வெளிப்படுத்துவதற்கான மொழியை எப்போதோ கற்றுக்கொண்டு விட்டது.
“இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது,” என்றேன் நான் மெதுவாக.
“மறு பரிசோதனைக்கு விண்ணப்பியுங்கள்.” என்று நான் கூறிய அந்த நொடியில் மாயா என்னைப் பார்த்த விதம் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.
மூழ்கிக்கொண்டிருக்கும் ஒருவர் திடீரென தண்ணீரின் மேல் மிதக்கும் மரத்துண்டைப் பார்க்கும் பார்வை.
மீண்டும் பரிசோதனை.
மீண்டும் காத்திருப்பு.
அந்த நாட்களில் மாயா முழுவதுமாக சோர்ந்து போனாள்.
ஒவ்வொரு தொலைபேசி அழைப்புக்கும் அவள் பதறினாள்.
ஒவ்வொரு கதவு தட்டலுக்கும் இதயம் துடித்தது.
சமூகம் ஏற்கனவே தன் தீர்ப்பை வழங்கத் தயாராக இருந்தது.
ஒரு பெண்ணின் மீது சந்தேகம் வீசப்படும்போது, உலகம் அதை எவ்வளவு ஆர்வமாக ஏற்றுக்கொள்கிறது!
ஆனால் உண்மை, சில நேரங்களில் தாமதமாக வந்தாலும், வழி தவறிவிடாது.
இரண்டாவது முடிவு வந்தது.
“நான்கு குழந்தைகளுக்கும் அவர் தான் தந்தை.”
விநோதமான எண்ணம் தோன்றியது.
மனிதர்கள் அறைக்குள் சில நொடிகள் முழு அமைதி.
மாயா முதலில் எதுவும் பேசவில்லை.
பிறகு அவள் சிரித்தாளா, அழுதாளா என்று பிரித்தறிய முடியாத ஓர் ஒலி அவளிடமிருந்து வெளி வந்தது.
அது நீண்டகாலமாக நெஞ்சின் மேல் அழுத்திக்கொண்டிருந்த ஒரு பாறை உடைந்து விழும் சத்தம் போலிருந்தது.
அவள் மூன்றாவது பையனைத் தழுவிக்கொண்டாள்.
மீண்டும் மீண்டும் அவன் தலைமுடியைத் தடவினாள்.
அந்த நொடியில்தான் நான் உணர்ந்தேன் — மனித வாழ்க்கையின் மிகப் பெரிய போராட்டங்கள் பெரும்பாலும் உலக வரலாற்றில் பதிவு செய்யப்படுவதில்லை. அவை இத்தகைய சிறிய அறைகளில், பெயரற்ற மனிதர்களின் நடுக்கமுள்ள விரல்களுக்குள், அமைதியாக நடந்துகொண்டே இருக்கின்றன.
அந்தத் தருணத்தில் அவள் வென்றது ஒரு சட்டப் போராட்டத்தை மட்டுமல்ல. தன் தாய்மையின் உண்மையை. தன் உடலின் நினைவுகளை. தன் குடும்பத்தின் உரிமையை.
கணவன் விரைவில் குடும்பத்துடன் இணைய ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டது. பின்னர் அவர்கள் குடும்பமாக மீண்டும் சேர்ந்தார்கள். போரால் சிதைக்கப்பட்ட வீடுகளில், மகிழ்ச்சி எப்போதும் முழுமையாகத் திரும்பிவராது.
போர் அவர்களுக்குள் ஒரு வெற்றிடத்தை விட்டுச்சென்றிருக்கும்.
அந்த வெற்றிடத்தோடு வாழ கற்றுக்கொள்வதற்கே அவர்கள் பின்னர் “வாழ்க்கை” என்று பெயர் வைக்கிறார்கள்.
அந்தக் குடும்பத்தைப் பார்த்தபோது எனக்குத் தோன்றியது —
உலகம் எத்தனை ஆவணங்களைக் கேட்டாலும், மனிதர்களை இறுதியில் காப்பாற்றுவது அவர்களுக்குள் இருக்கும் அந்தக் காணாத பிணைப்புகள்தான்.

