மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
அலை ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்  – கண்ணதாசன்

 

இரவு கனமாக இருந்தது. காற்று கூட மூச்சுவிட சிரமம்கொண்டிருந்தது.

தச்சனின் குடிசையின் ஒரு மூலையில், மூடாத பெட்டிக்குள்ளே இருந்த சில ஆணிகள் அமைதியாக படுத்திருந்தன. நிலவொளி அவற்றின் குளிர்ந்த உடல்களில் விழுந்து, ஒரு மங்கலான ஒளியைப் பரப்பியது.

ஒரு நீளமான, கூர்மையான ஆணி மெதுவாக நடுங்கியது. அதைக் கண்ட மற்ற சில ஆணிகள் கூடவே நடுங்கின. அருகில், மரக் கட்டைகள் அமைதியாக இருந்தன.

ஒரு ஆணி பேசியது.

“அடுப்பின் தீயைத்தாங்கினேன், எண்ணற்ற சுத்திகளின் அடிகளைச் சுமந்தேன். தீ என்னை எரித்தது, சுத்தி என்னைத் துன்புறுத்தியது, ஆனால் அந்த வலி எதுவும், நாளை வரவிருக்கும் வலியுடன் ஒப்பிடமுடியாது. மரக்கட்டையே. உணர்ச்சியற்றவனே. உன்னால் மட்டும்எப்படி அமைதியாக இருக்கமுடிகிறது?”

ஒரு மரம் பேசியது.

“கோடாரிகளும்,  அரிவாள்களும், ரம்பங்களும்  என்னைப் பிளக்கவில்லையா என்ன? நானும்வெட்டப்பட்டேன், வடிவமைக்கப்பட்டேன்.  ஒரு வீட்டின் கூரையாக இருந்தது சில மனிதர்களுக்கோ, தொழுவத்தின் கூரையாகவோ இருந்து, சில ஜீவராசிகளுக்கோ குடையாய் இருப்பேன் என்றோ,  ஒரு கட்டிலோ தொட்டிலோ ஆவேன் என்றோ நினைத்துக்கொண்டிருந்த நான், நாளை சாபம் ஏற்கப்போகிறேன். இருதயம் மட்டுமின்றி உடலே இரும்பாய் கொண்ட ஆணியே!  என் துயரம் நீ எப்படி அறிவாய்?”

ஆணியும் மரமும் தங்கள் துயரத்தை பகிர்ந்துகொண்டன. இன்று வந்தவர்கள் நாளை வரக்கூடாது. நாளை வந்தாலும், அவர்கள் என்னைத் தேர்தெடுக்கக்கூடாது என்று ப்ரார்த்தித்தன. ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. நட்சத்திரங்கள் மட்டும் மேலிருந்து பார்த்தன. அவற்றின் ஒளிகூட நடுங்கியது, நாளை வரவிருக்கும் துயரத்தை உணர்ந்தது போல.

எல்லோர் பிரார்த்தனையும் கேட்கப்படும். எவர் விருப்பப்படி அது நிறைவேறும் என்பதை  அறிவதில்லையே!

“நான் என்படைப்பாளியையே துன்புறுத்தப் போகிறேனா?” என்று விம்மியது ஆணி.”நான் பாவத்தின் கருவியாக இருக்க விரும்பவில்லை. தீர்க்கதரிசனங்கள் நிறைவேற வேண்டும்” என்றது மரம்.

அவை இரண்டும் இயற்கையிடம் பிரார்த்தித்தன. முப்பது வெள்ளிக்காசுகளுக்காக விலைபோனவனை அவை சபித்தன.

“காற்றே, நிலமே, வானமே… உனக்கு இரக்கம் இருந்தால், விடியற்காலைக்கு முன் எங்களை எடுத்துச் செல். இந்த துயரத்தின் கருவிகளாக இருக்க விடாதே” என்று மன்றாடியது. காலம் என்கிற சக்கரம் யாருக்காகவும் நிற்பதில்லையே. அது கடவுளே ஆனாலும்.

சூரியன் உதித்து காலை ஒன்பது மணி ஆகியது. அந்த மரக்கட்டை சிலுவையாகமாறியது.தேவகுமாரனின் உடலைத்தாங்கியது.

“ஏழை தச்சனின்மகனே! உலகத்தின் பாவங்களைச் சுமக்கும் தேவ தேவனே என்னை இரட்சியுங்கள்” என்று கேட்டுக்கொண்டது மரம்.

ஒவ்வொரு அடியும், தேவனுடைய குமாரனின் பரிசுத்த உடலில் தள்ள, “பரிசுத்த ஆன்மாவே என்னை இரட்சியுங்கள்” என்று தழுதழுத்தது ஆணி. தேவனுடைய குருதியின் வெப்பத்தை தாங்கிக்கொள்ள தயாரானது அவை இரண்டும்.

மனிதர்களின் விருப்பத்தால் கட்டுப்பட்டிருந்தும், தேவனுடைய இரட்சிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய நிலைமையில், விடியற்காலையின் அமைதியில், அவை ஒரு ஆழ்ந்த உண்மையை உணர்ந்தன.

சில நேரங்களில், விருப்பமில்லாதவர்களும், சரித்திரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டியிருக்கும்.

அதைத்  தீர்மானிப்பவன் தேவனே.

 

← Back

Thank you for your response. ✨