கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்
– கண்ணதாசன்
அத்தனை மொட்டைமாடிகளும், மரங்களும் மனிதர்களால் நிறைந்திருந்தன. இந்த நூற்றாண்டு முடிவதற்கு இன்னும் சில இருபது ஆண்டுகள் உள்ளன. ஆயினும், மனிதர்களின் ஆவல் என்றுமிருப்பது ஒன்று போலத்தான்.
சுதர்சனத்தின் மாடியில் அவன் அபாரமான, கலக்கலான நிறங்கள் மிகுந்திருந்த, இன்னவகையென்று சொல்ல முடியாத வடிவமைப்பிலிருந்த உடைகளை அணிந்து நின்றிருந்தான். அவனே வடிவமைத்த மிகு திறன் வாய்ந்த அதி சிக்கனமான மின்வானுர்தி ‘இந்திர இரதம்’ என்று பெயரிடப் பட்ட ஒன்று இன்னும் சில மணித்துளிகளில் அவன் வீட்டு மாடியின் வெற்றுத் தளத்தில் இறங்க இருக்கிறது. ஒரு முறை பூமியில் அதன் பேட்டரிகளை மின்னேற்றம் செய்துவிட்டால் அது பறக்கும் போதே காற்றின் சுழலிலிருந்து தேவையான மின் சக்தியை எடுத்துக் கொண்டு விடும். அதன் உள்ளே சிறு குழாயில் வெற்றிடம் உள்ளது. அதன் அருகில் இருபுறங்களிலும் காந்தங்கள் உள்ளன. அது காற்று சக்தியை உள்ளிழுத்து மின் காந்தச் சக்தியாக மாற்றி இயங்குவதற்குத் தேவையான மின்சாரத்தை வழங்கிவிடும். எனவேதான் சிக்கன உடலமைப்பு மற்றும் இருவர் மட்டுமே செல்லும் வசதி அதில் தற்போது இருக்கிறது. காற்றுவெளியை நிர்ணயம் செய்வதில் தடைகள் இருந்தால், உள்ளிருக்கும் மின் இயந்திர பேட்டரி உடனே இயக்கத்திற்கு வந்துவிடும். முழுவதும் தானியங்கியான அதில் ஹ்யூமனாய்ட் எனப்படும் மனித ரோபோ இருக்கிறது.
சின்ன முயல்குட்டி போன்ற அவன் மகள் கயல், துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தாள். ‘தர்ஷ், எப்போ வரும் அந்த இ-ப்ளேன், நானும் கூட வரேனே?’ என்று செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள் அவள்.“ “பட்டுக்குட்டிக்கு இன்னிக்கி வீட்ல படிக்கற நாளாச்சே; அடுத்த வார லீவ்வின் போது போலாம்.”
அவன் சொல்லி முடிக்கவும், அமைதியாக, இலேசான குரலில் ஒரு பாட்டிசை போல, கச்சிதமான வடிவோடு ‘இந்திர இரதம்’ அவனது மொட்டை மாடியில் வந்து நின்றது. தானாகவே படிகள் இறங்க கயல் ஓடிப்போய் அதில் ஏறினாள்; சுதர்சனம் தன் மனைவியிடம் விடை பெற்றுக் கொண்டிருக்கும் போதே, விமானத்திலிருந்து முன்பு நீண்ட படிகள் உள்ளிழுத்துக் கொண்டன. அவன் கத்திக் கொண்டே ஓடினான். அதன் எந்தப் பகுதியும் கைகளுக்கு சிக்கவில்லை. மின் விமானம் பறக்கத் தொடங்கியது. அவன் அவசர அவசரமாக மின்விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டான். “என் சிறு மகள், கயல், ஐயோ அவளுக்கு எட்டு வயதுதான், பயப்படுவாள், அந்த விமானத்தை தரையிறங்கச் செய்யுங்கள், எங்கேயென்றா கேட்கிறீர்கள்? அடுத்த நியரெஸ்ட் பாயின்ட்ல. எனக்கு ஒரு மின் விமானம் அதே இடத்திற்கு உடனே வேண்டும். சீக்கிரம், சீக்கிரம்”
கயல் முதலில் படிக்கட்டுகளைத் தேடினாள்; அது அகப்படவில்லை; ‘தர்ஷ், தர்ஷ்’ என்று அலறினாள். பறக்கத் தொடங்கிவிட்டோம் என்பது அவளுக்கு மெதுவாகத்தான் புரிந்தது. இருவர் மட்டுமே செல்லும் விமானம் என்பது புரிந்தவுடன் அருகிலிருந்த இருக்கையில் பைலட்டை தேடினாள். யாரும் இல்லை. அவள் கத்தி அழத் தொடங்கினாள்.
“கயல், அழாதே. நா உன்னோட தானிருக்கேன்.” அப்பாவின் குரல், ஆனால், அவர் எங்கே?
“அப்பா, ப்ளீஸ் நேர்ல வாப்பா. பயமாயிருக்குப்பா.”
‘பைலட் சீட்ல இப்ப பார்.’ அவள் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தாலும், அப்பா தெரியவில்லை. ஆனால், அவர் வடிவத்தில் ஒரு ஹ்யூமனாய்ட் இப்போது தெரிந்தது. அவளுக்குப் புரியவில்லை. அப்பா எப்போ வந்தார், ஏன் இப்படி இருக்கிறார்?
“நீ.. நீங்க யாரு? எங்கப்பாவா? இல்ல பைலட் அங்கிளா?”
‘நான் உங்கப்பா தர்ஷ் தான். பயப்படாதே’
“அப்பாவா, நெஜமா அப்பாவா?”
கயலின் அப்பாவின் குரலில் அது சிரித்தது. பின் சொன்னது:
“பறக்கும் அலைகள், பார்வைக்கு இல்லை
அதன் பேசும் மொழிகள் நம் செவிகள் கேளாத இசை.
நியூட்ரினோ, குவாண்டம், ஒளி அலைகள்”
கயல் மீண்டும் பயந்தலறினாள்.
“பைலட் அங்கிள், என்ன எங்கப்பா கிட்ட கொண்டு விட்டுடு. நீ சொல்றதெல்லாம் எனக்குப் புரியல. ப்ளீஸ், ப்ளீஸ், அவர்கிட்ட சொல்லி உனக்கு எல்லாம் வாங்கித் தரேன்.”
‘அழாம இருந்தா கொண்டு போய் விட்றேன். இப்ப பாரு, மேகத்துக்குள்ள போறோமா? கீழ பாரு, எத்தன ட்ரோன்கள். மேல பாரு, அட, நமக்கு மேல ஒண்ணு பறக்குது.’
“ஐய, அது ட்ரோன் இல்ல, ஜெட் விமானம்”
‘அதத் தாண்டி போவோமா?’
“அத்தன உயரத்துக்கா? விழுந்துட மாட்டோமா?”
‘இது ரொம்ப மேலயும் போகும், ரொம்ப கீழயும் போகும். இப்பப் பாரு வேடிக்கய.’
அந்த ரோபோ விசையை ஏற்றியது. அதே சமயம் அவள் உடலைச் சுற்றியும், கால்களைப் பிணித்தும் மேலும் சில பெல்ட்டுகள் தானாகவே அமைந்து கொண்டன. ஆக்சிஜன் வாயுக் குழாய் நேரடியாக மூக்கில் நுழைந்து கொண்டது. பயம், பதட்டம், உற்சாகம் அவளது சிறிய உடலில் நுழைந்து கொண்டது.
ஒரு செங்குத்தான வடிவமொன்று தலைகீழாக பூமியை நோக்கி வந்து கொண்டிருந்தது.
‘நோ, நோ என்று ஹ்யூமனாய்ட் அலறியது வரை அவளுக்கு நினைவில் உள்ளது.
கீழே வந்து கொண்டிருந்த அதற்கு நாமே ஒரு பெயர் வைப்போம் ‘அனந்தம்’ என்று. அது பல்லாயிரம் கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஒன்று. அதன் சிறு மாகாணமான சின்ன அனந்தத்திற்கு, அதில் வசிக்கும் பெரியவர்கள் பேசிக் கொள்ளும் பூமியை, குறிப்பாக இந்தியாவை, அதன் அழகிய நதிகளைப் பார்க்க ஆசை. தனது சிறு மாகாணத்தின் பெரும் பகுதியை அது ஒரு பயண வாகனமாகச் செய்து கொண்டது. மிகவும் கவனமாக செயல்பட்டாலும், அதன் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டன. அது தன் பயண வாகனத்துடன் தப்பி செங்குத்தாக தன் பயணத்தைத் தொடங்கி வேகமாக வரும்போது, இப்படி ஒரு மின்விமானத்தை இத்தனை உயரத்தில் எதிர்பார்க்கவில்லை. தன் கூர் மூக்கைத் திறந்து அப்படியே அந்த விமானத்தை விழுங்கிவிட்டு பூமி கிரகத்தில் கன்யாகுமரி கடலோரம் இறங்கியது.
கயல் மயக்கத்திலிருந்தாள். அவள் குளிக்க அடம் பிடித்தாள், பட்டாம் பூச்சியைத் துரத்தினாள், ஐந்து வயதில் அவள் கணிதத்தில் அபார மேதையானாள், திட சாப்பாட்டை விட திரவங்களை விரும்பினாள், உலகின் அத்தனை அறிவும் எப்படியோ தனக்கு வேண்டும் என்று ஆசைப்பட்டாள், அம்மா, அப்பாவை வியந்தாள்.
ஹ்யூமனாய்ட் ரோபோவின் கால்கள் இந்த விபத்தில் சேதமுற்றன. ஆனால், அதால், கைகளால் தவழ முடிந்தது. சிறு துளி வெளிச்சத்தில் கயல் அமர்ந்திருந்த இருக்கை பிய்க்கப்பட்டு, அந்த அதிர்ச்சியில் பெல்டுகள் கழன்றுகல அவள் இருக்கையின் கீழே விழுந்திருந்தாள். உயிர்வாயுக் குழாய் இன்னமும் நீண்டு பிடிவாதமாக அவளுக்குள் பிராணனைச் செலுத்திக் கொண்டிருந்தது. ரோபோ அவளைத் தூக்கி தன் செயலற்ற கால்களில் கிடத்திக் கொண்டே முடிந்த மட்டும் அவள் உடலில் சூட்டை உண்டுபண்ணிக் கொண்டிருந்தது. கயல் இலேசாக முனகினாள். அந்த ஹ்யூமனாய்டை தன் அப்பா என்று அவள் கைகள் தானாகச் சுற்றிக் கொண்டன. அது தூக்கத்தில் அவள் எப்போதுமே செய்யும் ஒன்று. ரோபோவின் மனிதத் தன்மை விழித்துக் கொண்டது. ‘விளையாட்டாய் இந்த விமானத்தில் ஏறிய குழந்தை, என்னுடன் சேர்ந்து அழியப் போகிறது. தன்னையே விழுங்கிய அது என்ன, இப்போது கடலில் அதால் எப்படி மிதக்க முடிகிறது, எப்போது தன்னை வெளியே கக்கி என்னை, விமானத்தை, இந்தக் குழந்தையை, சுதர்சனத்தின் கனவை இது அழிக்கப் போகிறது?
‘பயம் வேண்டாம் நண்பா’ என்றது அனந்தம்

