பெருமாளும், தாயாரும் திவ்யத் தம்பதிகள் என்று பக்தர்களால் கொண்டாடப்படுகிறார்கள். அவர்களின் பெருமையை ஆழ்வார்கள் பல பாசுரங்களில் பாடியுள்ளனர். இப்பாசுரங்களின் தொகுப்பு நூல் ’திவ்யப்பிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சுமார் நான்காயிரம் பாடல்களை இது உள்ளடக்கியது இது. எனவே, இந்த நூல் நாலாயிர திவ்யப்பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக முதலாழ்வார்களுக்கு பரத்துவத்திலும்(பரமபதநாதன்), திருவேங்கடத்திலும் (வேங்கடமுடையானிடம்) அதிக பற்று இருந்து வந்தது..அதனால் அவர்கள் வேங்கடமுடையானின் மேல் நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்கள்.
ஆழ்வார்கள் வட மொழி வேதங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து, மக்களுக்கு உபதேசிப்பதற்காகவே இப்பூவுலகில் அவதரித்தனர். மேலும், அவர்கள் பகவானின் மேல் தீவிரமான பக்தியில் மூழ்கி, அவரை பக்தியால் பாடி அவர் காட்டிய கருணையால் மோட்சமும் அடைந்தவர்கள்.
பன்னிருஆழ்வார்களில் மிக முக்கியமானவர்கள் பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், ஆகியோர் ஆவார்கள். அவர்கள், ’முதல் மூன்று ஆழ்வார்கள்’ எனவும் அன்புடன் வைணவ பக்தர்களால் அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் இணக்கமான ஆன்மீக உறவே இதற்கு அடித்தளமாகும்.
இவர்களில் பொய்கையாழ்வார் ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில் காஞ்சிபுரம் திருவெஃகாவை அடுத்த பொய்கையில் பொற்றாமரையில் அவதரித்தவர். இவர் திருமாலின் திருக்கரத்தில் உள்ள பாஞ்சஜன்யம் என்னும் சங்கின் அம்சமாக கருதப்படுகிறார்.
அதற்கு மறுநாள் அவிட்ட நட்சத்திரத்தில் திருக்கடல்மல்லையில் (மாமல்லபுரத்தில்) ஒரு பொய்கையில் நீலோற்பவ மலரில் பூதத்தாழ்வார் அவதரித்தார்.இவர் திருமாலின் கௌமோதகி எனப்படும் கதாயுதத்தின் அம்சமாக கருதப்படுகிறார்.அதற்கு அடுத்த நாள் சதய நட்சத்திரத்தில் மயிலாப்பூரில் உள்ள ஒரு கிணற்றில் செவ்வல்லி மலரில் பேயாழ்வார் அவதரித்தார். இவர் பெருமாளின் நந்தகம் என்னும் வாளின் அம்சமாக கருதப்படுகிறார். இவர்கள் மூவரும் சாதாரண மானிடர்களைப் போல தாயின் வயிற்றில் ஜனிக்காதவர்கள். ஆதலால் ‘அயோநிஜர்கள்’ என அழைக்கப்படுகிறார்கள்.
ஸ்ரீமன் நாராயணனின் திருவருளைப் நிரம்பப் பெற்ற இவர்கள், ஒரு மழை நாளில் ஒருவர் பின் ஒருவராக இருட்டிய நேரத்தில் திருக்கோவிலூர் பெருமாள் கோவிலுக்குள் ஒன்றாகக் கூடினார்கள். திருக்கோவிலில் உள்ள ஓர் இடைக்கழியில் உள்ள இடம் அது. அந்த இடம் ஒருவர் படுக்கவும், இருவர் உட்காரவும், மூவர் நிற்கவும் மட்டுமே போதுமானதாக இருந்தது. அவர்கள் நான்காவதாக ஒருவர் தங்களுடன் இருப்பதை உணர ஆரம்பித்தனர். அவர் திருமாலே என்பதையும் பின்னர் அவர்கள் உணர்கிறார்கள்.
திருமாலின் தரிசனத்தைக் காண அவர்கள் விழைந்தார்கள். எனவே,பொய்கையாழ்வார் அங்கு பரவியிருந்த இருளை ஓட்டிட விளக்கேற்ற முற்பட்டார்.
இதை அவர் தம் பாடலில்,
“வையம் தகளியா, வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று.”
என்று திருமாலைப் பாடி முடிக்கிறார்.
இந்த அகலமான உலகத்தையே அகல் விளக்காகவும், நீண்ட கடலையே நெய்யாகவும், வெப்பம் தரும் சூரியனை அதன் சுடராகவும் பாவித்து, சிவந்த ஒளிரும் சக்கரத்தையுடைய திருமாலின் திருவடிகளுக்கு,
இந்தச் சொல் மாலையைச் சூட்டினேன். உலக மக்களின் துன்பக் கடல் நீங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இப்பாடலைப் பாடி திருமாலை பாடித் துதிக்கிறார்.
’அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக” என்பது இரண்டாம் திருவந்தாதியின் தொடக்கப் பாசுரத்தை பாடியவர் பூதத்தாழ்வார் ஆவார். அவர் பாடிய பாசுரம்,
’அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை இடுதிரியா
நன்புருகிஞானச் சுடர்விளக் கேற்றினேன்
நாரணற்குத்ஞானத் தமிழ்புரிந்த நான்’
என்று பாடி முடிக்கிறார்.
அன்பையே அகலாக்கி ஆர்வத்தையே நெய்யாக்கி தன் சிந்தையையே திரியாக அமைத்து ஞானத் திருவிளக்கை ஏற்றினார் அவர்.
தொடர்ந்து பேயாழ்வாரும் நாலாயிர திவ்ய பிரபந்தம் மூன்றாம் திருவந்தாதியின் முதல் பாடலைப் பாடுகிறார்.
இதனை,
’திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்,
திகழும் அருக்கன்அணிநிறமும் கண்டேன்,
செருக்கிளரும்பொன்னாழி கண்டேன்,
புரிசங்கம் கைக்கண்டேன்என்னாழி வண்ணன்பால் இன்று’
என்று பாடித் தெளிகிறார்.
இதில் திருக்கண்டேன் என்பது திருமாலின் மார்பில் வீற்றிருக்கும் மகாலக்ஷ்மியை குறிக்கிறது, பொன்மேனி கண்டேன் என்பது மஹாவிஷ்ணுவை கூறுகிறது. வைணவ சம்பிரதாயத்தில் மகாலக்ஷ்மியே நம்மைப் போன்ற ஜீவாத்மாக்களை மகாவிஷ்ணுவிடம் அழைத்து சென்று மோட்சம் கிடைக்க பரிந்துரை செய்கிறாள். ஆக அங்கு வந்துச் சேர்ந்த அந்த நான்காமவர் நாராயணனே ஆவார்.
இவ்விருவரும் ஏற்றிய விளக்குகளின் ஒளி இருளை விரட்ட, அந்த வெளிச்சத்தில் பேயாழ்வார்,’ திருக்கண்டேன்’ என்று முதலில் தாயாரையும், பின்னர்,’பொன்மேனி கண்டேன்’ என்று எம்பெருமானையும், தரிசித்து பாடினார். பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் அந்த தெய்வீகக் காட்சியைக் கண்டு களித்தனர்.
ஒரு பாடல் தொகுப்பில், ஒவ்வொரு பாடலின் கடைசி வார்த்தையை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாக கொண்டு அமைத்தால் அது அந்தாதி என்று தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படுகிறது. இப்படியான தொகுப்பில் கடைசி பாடலின் கடைசி வார்த்தை, முதல் பாடலின் முதல் வார்த்தையாக அமைந்து ஒரு மாலையாக அமையும். இந்த மூன்று ஆழ்வார்களும் முதல் ஆழ்வார்கள் ஆனதாலும், அவர்கள் பாடிய பாடல் தொகுப்பு அந்தாதி வடிவில் இருந்ததாலும் அவைகள் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் திருவந்தாதிகள் என அழைக்கப்படலாயின.
“சாக்கியம் கற்றோம், சமணம் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகமநூல் ஆராய்ந்தோம்; பாக்கியத்தால் வெங்கட்கரியனை சேர்ந்தோம்”, என்று பாடிய அடுத்த ஆழ்வாரான திருமழிசை ஆழ்வாருக்கு பேயாழ்வார் ஆச்சர்யனாக இருந்து பின்னாட்களில் அவரை வைணவத்திற்கு மாற்றினார் என்பது குறிப்பித்தக்கது.
ஒவ்வொரு மாதமும் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யார்கள் அவதரித்த நட்சத்திர தினங்களில் ஆசார்யன், ஆழ்வார் மற்றும் திவ்ய தம்பதிகளை மனதில் கொண்டு கோவில்களுக்கு சென்று வழிபட்டு அவர்களின் திருவருளைப் பெறுவது நம் முதற்கடமையாக மாற வேண்டும்.இதை அடுத்த தலைமுறைக்கும் நாம் கற்றுத் தரவேண்டும்.
