காளமேகமும் கண்ணதாசனும் பாடிய காய் பாடல்கள் | #KalamegamKannadasan | சிலேடை பாடல்கள்கண்ணதாசன் அவர்களின் தத்துவார்த்த பாடல்களும் , இலக்கிய நயம் கொண்ட பாடல்களும் நமக்கு பல வாழ்க்கை யதார்த்தத்தை கூறுவதை மறுக்க முடியாது.அதே நேரத்தில் அவரது காதல் பாடல்களும் ,நகைச்சுவை கலந்த பாடல்களும் நம்மனதை அவ்வப்போது இலகுவாக்குகிறது.அப்படி அவர் சிலேடையில் எழுதிய பாடல் ஒன்று பார்ப்போமா!சிலேடை என்பது இரட்டுற மொழிதல் என்று அறியப்படும்.அவை இரண்டு வகைப் படும்.
ஒன்று, வார்த்தை ,சொற்களை பிரிக்காமல் அப்படியே வேறு பொருள் தருவது ; மற்றொன்று பிரித்தால் வேறு பொருள் தருவது. சங்க கால புலவர்களில் காளமேகப் புலவர் சிலேடையில் கவிகள் புனைவதில் வல்லவர்.
முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் கொடுத்தால் அதைவைத்து நகைச்சுவையாக கவி பாடும் கவிஞர்.எழுத்து வித்தகரான நம் கவிஞர் கண்ணதாசனுக்கு அதுவும் கை வந்த கலையே.
ஆசு கவி பாடுவதில் வல்லவரான காளமேக புலவர் கண்ணதாசனை எப்படி ஈர்த்தார் என்று பார்ப்போமா!சிலேடையில் எழுதுவது என்பது ஒரு விளையாட்டு, பொழுது போக்கு என்று தோன்றினாலும் இரு பொருள் பட எழுதுவது எளிதல்ல.
ஒருமுறை பெண் புலவர் ஒருவர் ‘ கரி, என்று துவங்கி ‘ உமி ‘  என்று முடியும்படி   ஒரு  வெண்பா பாடல் எழுதும்படி
கவி காள மேகத்தைக் கேட்க, அவர்,‘ கரிக்காய் பொறித்தாள் கன்னிகாயைத்  தீய்த்தாள்
பரிக்காயைப் பச்சடியாப் பண்ணினாள் உருக்கமுள்ள
அப்பைக்காய் நெய் துவட்டலாக்கினாள் அத்தை மகள்
உப்புக்கான் சீச்சி யுமி…….

இதில் அமைந்துள்ள சிலேடையை பார்ப்போமா.

கரிக்காய் என்பது அத்திக்காயை குறிக்கும். கருப்பு நிறமுடையது .கரி= யானை . யானை போன்று கரிய நிறம் உடையை காயை பொறியலாக செய்தாள்.
கன்னிகாய்:  விதை இல்லாமல் கன்று அருகில் மூளைத்து வளருவதால் வாழைக்கையை கன்னி காய் என்றுஅழைப்பது உண்டு,
அதை தீய்த்தாள் — அதாவது வாழைக்கையை  வறுத்து எடுத்தாள்.

பரிக்காய் —– பரி என்றால் குதிரை,மாங்காய் என்று இரு பொருள்
மாங்காயை பச்சடி செய்தாள் என்பதை சிலேடையாக ‘பரி ‘க்காய் பச்சடி செய்தாள் என்று கூறினார்.( குதிரையை பச்சடி செய்தாள்  என்று பொருள் கொள்ளலாமோ?. அத்திக்காய், மாங்காய் இவைகளை   கரிக்காய், பரிக்காய்( யானை,  குதிரை  ) என்று நகைச்சுவையாக கூறி உள்ளார் )

அப்பைக்காய்  —– கத்திரிக்காயிற்கு மற்றொரு பெயர் அப்பைக்காய் .உருக்கிய நெய் சேர்த்து அதை துவட்டலாக்கினாள்.இதை எல்லாம் பாங்காக செய்த என் அத்தை பெற்ற மகள் உப்பு என்ற ஒன்றை சேர்க்க மறந்து விட்டாள்.

‘ உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதற்கேற்ப இந்த உணவு வகைகள் எல்லாம் நாக்கு ஏற்க மறுத்து சீச்சீ என்று உமி(ழ) ந்து விட்டது. என்று சிலேடையாக கரியில் துவங்கி ‘உமியில் ‘முடித்து சபையில் உள்ளவர்களை தலை குனிய செய்தார் என்று சங்கப்பாடல் கூறுகிறது.அத்தனை காய்களுமே வேறு ஒரு பொருளில் கையாளப் பட்டுள்ளது.சிலேடையில் ஒரு சமையலையே
நகைச்சுவையாக முடித்து விட்டார். கேட்டவர்கள்  இந்த சிலேடை மொழியைக் கண்டு சிரிக்காமல் இருக்க முடியுமா?

இந்த அத்திக்காயும், கரிக் காயும் கவிஞரை எப்படி ஈர்த்தது?

பலே பாண்டியா படத்தில் காதலர்கள் பாடும் பாட்டாக ஒன்றை அமைத்துள்ளார்.

இங்கும் அத்திக்காய் தான் ; ஆனால் பொருள் வேறு.

அத்திக்காய் காய் காய் .
ஆலங்காய் வெண்ணிலவு
இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ
நீ என்னைப்போல் பெண்ணல்லவோ!

அத்திக்காய் = ஒருவிதகாய் பிரிக்காமல் பார்த்தால்
அத்திக்காய்=. அந்த+ திக்காய்.   பிரித்தால். அந்த திசையில் என்று பொருள் .அந்த திசையில் ‘ காய் காய் ‘ = காய்தல் ; கதிர்களை வீசுதல், வெம்மை.

‘ இத்திக்காய் காயாதே. = இந்த + திக்கு . இந்தப் பக்கம் வராதே.
வெண்ணிலவே உன்னுடைய ஒளி கதிர்களை வேறு ஒரு பக்கம் சென்று வீசு,இங்கு நாங்கள் இளம் காதலர்கள் தனியா  ஒருவரை ஒருவர் ரசித்துக் கொண்டு இருக்கிறோம் .எங்களுக்கு இடையூறு விளைவிக்காதே என்ற பொருள் பட பாட்டை எழுதி உள்ளார் .

காளமேக புலவர் அத்திக்காயை கரிக்காய் என்கிறார்; நம் கண்ணதாசனோ அத்திக்காயை அந்த திக்காய் ( திசையில்) காய் என்கிறார்.
கவி , வார்த்தை ஒன்று அர்த்தம் வேறு என்று பிரிக்காமல் கூறுகிறார்.கண்ணதாசன்  வார்த்தை ஒன்று ஆனால் பொருள் வேறு என்று  பிரித்து  கூறுகிறார். இரண்டுமே சிலேடை இலக்கணத்திற்குள் வந்துவிடுகிறது.அத்திக்காய் என்ற வார்த்தை பிரயோகம் இரு வேறு வேறு  சூழ்நிலைக்கு ஏற்றவாறு பொருள் தருகிறது.

காளமேகம் சமையலைப் பற்றி பேசுகிறார்.இவர் காதலைப்பற்றிப்  பேசுகிறார்.

கண்ணதாசன் இந்த திசையில் உன் ஒளியை வீசாதே என்கிறார். நம் முண்டாசு கவி ‘ காணிநிலம்’ வேண்டும் என்று பராசக்திக்கு விண்ணப்பம் செய்த பொழுது , காணிநிலத்தில் மாளிகை வேண்டும் ,முற்றம் வேண்டும் அந்த முற்றத்திலே பத்தினி பெண்ணுடன் கவிதைகள் படிக்க  ‘ முத்துச்சுடர் போலே நிலா ஒளி  வேண்டும் என்கிறார்.

கவிஞர்கள் என்றுமே நமக்கு புதிர்தான்.

மேலும் கண்ணதாசன் அந்த பாட்டு முழுவதுமே காயை வைத்து இரு பொருள் பட எழுதி உள்ளார்.

‘ கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்|

கன்னிக்காய். வாழைக்காய். இங்கே ஆசைக்கொண்ட, காதல் வயப்பட்ட  இளம் பெண்( பாவக்காய்= பாவையின் பொருட்டு)
அவரைக்காய்  = என்னுடைய காதலனான கோ (அரசன் ) வை காய்

காய்கள் வைத்து எத்தனை விதமான காதலர்கள் உரையாடல் ,வெண்ணிலாவைப்பார்து.

இசையுடன் பாடலைக்கேட்கும் நமக்கு ‘ ஹப்பா! எத்தனை வித காய்கள் வைத்து பாடல்கள் எழுதி உள்ளார் என்று ரசிக்கிறோம் .அதன் ஆழ்ந்த பொருளை அறிந்தால் இத்தனை காய்க்குள்ளும் இவ்வளவு பொருள் சேர்ந்த காதல் மொழிகள்
உள்ளனவா என்று பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

கண்ணதாசனின் பாடல்கள் செவிக்கும்,சிந்தனைக்கும் என்றுமே தெவிட்டாத ,தேனில் ஊறிய  பலாச்சுளைப் போல் இனிப்பவை.

அடுத்து கண்ணதாசன் யாருடன் கை கோர்கிறார்! விரைவில் விடையுடன்