சரித்திரம் பேசுகிறது – யாரோ

யுவான்சுவாங்

Image result for யுவான்சுவாங்

ஹர்ஷர், புலிகேசி, நரசிம்மபல்லவர் என்று பல ஹீரோக்கள் இருக்கும்போது – அதே நேரத்தில்  – இன்னொரு சூப்பர் ஸ்டார் இந்தியாவில் உருவானார். அது எந்த நாட்டின் மன்னனும் அல்ல. கத்தி பிடித்தவீரனும் அல்ல. அறிவையும் எழுத்து கோலையும் நம்பி பதினாறு ஆண்டுகள் இந்தியாவில் பயணித்து, சமய நூல்களை ஆய்ந்து, கற்று, மொழிபெயர்த்து, மன்னர்களின் மதிப்பைப் பெற்று. சரித்திரத்தில் இடம் பெற்றது மற்றுமல்லாமல், சரித்திரத்தையே தொகுத்துத் தந்தவர். அன்றைய நாளின் ‘சரித்திரம் பேசுகிறது’ – எழுதியது யாரோ என்ற கேள்விக்கு விடையே அவர் தான்..

அவர் தான்..

யுவான் சுவாங்!

அவரது கதை எழுதி சரித்திரம் பேசலாம்.

முதலில் சீனாவுக்கு செல்வோம்.

அட.. இந்நாள் தமிழ் சினிமாவில் பாடல் காட்சிக்கு வெளிநாடு செல்லும் போது.. நாமும் கொஞ்சம் சீனாவுக்குச் செல்வோமே!

கி பி 602:

சீனாவில்..இந்நாளின் ஹெனான் மாகாணம்:

யுவான் சுவாங் பிறந்தான்.

அவன் குடும்பத்தில் அனைவரும் அறிவாளிகளாகவும் அறிவு ஜீவிகளாகவும் இருந்ததர்.

தந்தையார் மகனுடைய அறிவுக்கூர்மையையையும், கற்கும் ஆர்வத்தையும் அறிந்தார்.

சிறு வயதிலிருந்தே அவன் சமயப்புத்தகங்கள் படிக்க பெரு விருப்பம் கொண்டிருந்தான்.

பதின்மூன்று வயதில் அவன் பயிற்சி புத்தத்துறவியாக (ட்ரெய்னிங்) நியமிக்கப்பட்டான்.

இருபது வயதில் முழுத்துறவியாகினான்.

பின்னர் சீனா முழுதும் பயணித்து புத்தசமய நூல்களைத் தேடி சேகரித்தான்.

நாட்டில் கிடைத்த அந்நூல்கள் பெரும்பாலும் அரைகுறையாகவும், தவறாகவும் இருப்பதை உணர்ந்தான்.

முன்னாளில் பாஹியான் இந்தியா சென்று பல புத்த சமய புத்தகங்களை சீன மொழிக்கு கொண்டு வந்ததை அறிந்தான்.

அன்று பாஹியான் செய்ததைப் போல நாமும் செய்யவேண்டும்?

அதுக்கும் மேலே!

யுவான் சுவாங் – மனம் இந்தியா செல்வதை விரும்பியது.

நன்றி: (Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=247641)

சீன அரசாங்கம் யாரும் வெளிநாட்டு செல்லத் தடை விதித்திருந்தது.

விசா கொடுக்கவில்லை!!

யுவான் சுவாங்கின் வெளிநாட்டுத் திட்டம் பற்றி அறிந்திருந்த அரசாங்கம், அதைத் தடுக்க முயற்சிகளை மேற்கொண்டது.

பயணம் போக குதிரை வேண்டுமே.

யுவான் சுவாங் குதிரை வாங்கினான்.

அது மெலிந்த சிவப்பு நிறக் குதிரை.

பாலைவனப் பயணம் அறிந்த பலான குதிரை.

யுவான் சுவாங் – சீனாவைத் தாண்டியது காட்சிகள் பாகுபலி காட்சிகளை மிஞ்சும்.

சீன எல்லை.

காவலர்கள் கண்விழித்து இரவும் பகலும் எல்லையைக் காத்து நின்றனர்.

அவர்களுக்கு அரசாங்கம் செய்தி அனுப்பியிருந்தது.

யுவான் சுவாங் எல்லை தாண்டி செல்ல முயலுவான் என்று.

அவனைத் தடுத்திட வேண்டும்.
யுவான் சுவாங்கின் நண்பன் வெளிநாட்டவன் ஒருவன்.

கட்டடம் கட்டுவதில் வல்லவன்.

சீன எல்லையில் இருந்தது நதி.

அதில் ஒதுக்குப்புறத்தில்.. ஒரு சிறு பாலத்தைக் கட்டினான்.

யுவான் சுவாங் அந்தப்பாலத்தில் தப்பிச்செல்ல குதிரையில் வந்தான். அவனுடன் 12 தோழர்களும் உடன் வந்தனர். சீனத்தின் எல்லைப்பாதுகாவல் படையினர்- தப்பிச் செல்லும் யுவான் சுவாங்கை துரத்தினர்.

அம்பு மழை பெய்தனர்.

பயணிகள் தப்பித்தனர்.

வழியில் கோபி பாலைவனம்.

அங்கும் ஆபத்து.

உயரத்தில் ஒரு காவல் மணிக்கூண்டு.

அதன் தாழ்வாரத்தில் ஒரு தொட்டியில் தண்ணீர்.

பாலைவனத்தில் தண்ணீர் தங்கம் போன்றது… விலைமதிப்பில்லாதது.

யுவான் சுவாங் கூட்டம் தாகத்தால் வரண்டது.

இரவின் போர்வையில் மெல்ல நீர்த்தொட்டியை அணுகினர்.

மணிக்கூண்டிலிருந்த வீரர்கள் அம்பு எய்தினர்.

இறையருள் இல்லாதிருந்தால் அந்தத் தாக்குதலில் யுவான் சுவாங் மாண்டிருக்க வேண்டும்.

தப்பித்த யுவான் சுவாங் – பாலைவனத்தில் ஐந்து நாட்கள் வழி தவறி.. தண்ணீர் இல்லாமல்..தடுமாறினான்.

மரணத்தின் விளிம்பு கண்டான்..

பாலைவனம் தாண்டிய பின்…

க்லேஸியர் என்னும் பனிப்பாறைகள் கொண்ட நிலம்..

யுவான் சுவாங் தனது பத்து நண்பர்கள் பனியில் உறைந்து மரித்ததைக் கண்டான்.

மனம் தொய்ந்தான்.

‘புத்தர்’ நம்மை ஏன் இறக்க விடவில்லை – என்று யோசித்தான்.

அதுவும் கடந்து போனது.

 

சில மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது இது. எந்த இடத்திலும் அவர்கள் செல்லு முன்னரே அங்கு அவர்களது புகழ் அடைந்து விடும். முன்பு அலெக்சாண்டரிடம் இதைத் நாம் பார்த்தோம். யுவான் சுவாங் அப்படிப்பட்ட புகழ் கொண்டிருந்தான்.

துருக்க மன்னர் (இந்நாளின் துருகேசஸ்டான்)  ‘கான்’ – ஒரு குறுநில மன்னன்!

அவன் யுவான் சுவாங்கை வரவேற்க தடபுடல் அலங்காரங்கள் செய்தான்.

தங்கத்தால் இழைத்த பெரும் கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டது.

அதில் அவனது மந்திரிகள் இருபுறமும் பாய் போட்டு அமர்ந்திருந்தனர்.

மற்ற முக்கியப் பிரமுகர்கள் பின்னர் நின்றிருந்தனர்.

மன்னன் ‘கான்’ கூடார மண்டபத்தை விட்டு வெளியே வந்து முப்பது அடிகள் நடந்து வந்து யுவான் சுவாங்கை வரவேற்று..முகமன் கூறி ..உள்ளே அழைத்துச் சென்றான்.  பிறகு இசை நிகழ்ச்சி ஒன்றை துவங்கி வைத்தான். தனது மந்திரிகளுக்கும் – முக்கிய விருந்தினர்களுக்கும்  மதுவும் – புலாலும் வழங்கினான். யுவான் சுவாங் மற்றும் அவன் குழுவுக்கு திராட்சை சிரப் அளித்தான்.

அதைத்தான் தமிழர்கள் சொன்னாரோ: ‘கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு’!

யுவான் சுவாங் சிறப்புரை ஆற்றினான்: ‘தான் என்ற என்னமிலாது செய்யும் கர்மா’, ‘முக்தி’, மற்றும் ‘மிருக வதை தடுப்பு’ –என்று பல கொள்கைகளை விவரித்தான்.

அட என்னடா இது.. எமபுரிப்பட்டணம் போல – காதுல பூ –என்றோ நினைக்கவேண்டாம்…

சரித்திரத்தை – சற்றே சாயம் பூசிப் பேசுகிறோம்..

தொடரும்…

Advertisements

கைலாஷ் பாபுவின் பென்சில் கூர் சிலைகள்

 

தமிழகத்தின் கைலாஷ் பாபு என்ற ஓவியர், டால்டன் கெட்டி என்ற பிரபல

கலைஞரின் படைப்புக்களைக் கண்டு  பிரமித்து அதன் உத்வேகத்தில் 200க்கும்

மேற்பட்ட பென்சில் கூர் சிலைகளை வடிவமைத்துள்ளார்.

அவரது மையக் கருத்துக்களும் சமூகத்திற்கு விழிப்புணர்ச்சி தருபவைகளாக இருக்கின்றன. (உதாரணமாக – தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல்) . மரபை உடைக்கும் வகையிலும் இவரது படைப்புக்கள் உள்ளன. (உதாரணம்: ரத்தக்கறை படிந்த சானிடரி நாப்கின் பற்றிய சிலை)

எல்லோரும் பெரிது பெரிதாகச் செய்யும்போது தான் ‘புழுவின் பார்வையாக’ சிலை வடிக்க விரும்புகிறேன் என்கிறார் கைலாஷ் பாபு.

Image Source: The Hindu
Image Source: Scroll.in

( நன்றி : இன்ஷார்ட்ஸ்)

 

காலை நடைப்பயிற்சி – தில்லைவேந்தன்

Image result for நடைப்பயிற்சி

மலையில் முகிலும் படிகிறது – காணும்
     மனதில் கவிதை வடிகிறது -மிகத்
தொலைவில் சாலை முடிகிறது – சென்று
     தொட்டால் பொழுது விடிகிறது -திரிந்து
அலையும் எண்ணம் குவிகிறது – வாழ்வின்
     ஆழ்ந்த உண்மை தெரிகிறது – சற்றுத்
தலையும் சுற்றி வருகிறது – படைப்பின்
     தன்மை    பற்றிப்    புரிகிறது.

Image result for நடைப்பயிற்சி
குயிலின் குரலும் கேட்கிறது -செவியில்
     கொஞ்சம் தேனைச் சேர்க்கிறது -மென்மை
இயையும் ஏழு பண்ணினிமை -அதில்
     எழுந்து பரவி ஆர்க்கிறது – பெரும்
மயலும் சோர்வும் மறைகிறது – பிணியின்
     வலியும் மெல்லக் குறைகிறது – செயலில்
முயன்று பார்த்து முன்னேறும் – புது
     முனைப்பில் உள்ளம் விரைகிறது.
                            

கேஸ் எவ்வளவு இருக்கிறது என்று கண்டுபிடிப்பது எப்படி? காணொளி

lmes-smile

Let us Make Engineering Simple (LMES) ஒரு உபயோகமான வீடியோ சானல்!

இதில் கணக்கு , விஞ்ஞானம் , மற்றும் பல பொறியியல் தத்துவங்களை அழகான தமிழில் சொல்லிக் கொடுக்கிறார். சிறிய முயற்சியாக பிரேமானந்த் சேதுராமன் என்பவர் ஆரம்பித்தார். இன்று ஒரு பெரிய அகாடமியாக அது வளந்துள்ளது. எஞ்சினீரிங் படித்துவிட்டு அமெரிக்காவில் பலதரப்பட்ட இடங்களில் 8 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு 2014இல் அமெச்சூராக விஞ்ஞானத் தத்துவங்களை வீடியோ மூலம் விளக்கி பேஸ்புக், யூடியூப் மூலம் பதிவு செய்ய ஆரம்பித்தார். இவரது ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடியோக்களை ஒருலட்சத்திற்கும் அதிகமான பேர் சந்தாதாரர்களாக சேர்ந்தும், 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ‘லைக்’ போட்டும் வரவேற்றிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு விஞ்ஞானத்தைக் கற்றுக்கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுவரை 4573 மாணவர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார். 3.7 லட்சம் பேர் இவரைப் பிபற்றுகிறார்கள். 1.7 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இவரது படைப்புக்களைக் கண்டிருக்கிறார்கள்.

அதில் ஒன்றுதான் இந்தவீடியோ!

பார்த்ததுப் பயன் அடையுங்கள்!!

தீர்வு….! – நித்யா சங்கர்

Image result for சிறுகதை

காட்சி… 1

( சுந்தரின் வீடு. மாலை 5 மணி.. நீட்டாக டிரஸ் செய்து கொண்டு
சுந்தரின் வருகையை நோக்கி ஆவலோடு ஹாலில் உட்கார்ந்து
கொண்டு பேப்பரைப் புரட்டிக் கொண்டிருக்கிறாள் சூர்யா – சுந்தரின்
மனைவி. குழந்தைகள் ரம்யாவும், சவிதாவும் வெளியே விளையாடப்
போயிருக்கிறார்கள். சுந்தரின் ஒன்று விட்ட சகோதரன்- சித்தப்பா
பையன், முரளி, உள்ளே கஸ்ட் ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.
சுந்தர் குஷாலாக ‘மங்கையரில் மகராணி.. மாங்கனி போல் உன் மேனி..’
என்று சினிமாப் பாட்டை முணுமுணுத்துக் கொண்டே, ப்ரீஃப் கேஸுடன்
உள்ளே நுழைந்து சூர்யாவின் பக்கத்தில் சோபாவில் அமர்கிறான்)

சூர் : அட.. அட.. இன்னிக்கு என்ன ஐயா செம மூடில் இருக்கற மாதிரி
இருக்கு?

சுந் : வாஹ்… வாஹ்… அதையேன் கேட்கறே… ஆபீஸ் விட்டு அப்படியே
வந்துட்டிருந்தேனா… அப்படியே கிறங்கி நின்று விட்டேன்…

சூர் : (ஏளனமாக) ஏன் உங்க மானேஜரைப் பார்த்தீங்களாக்கும்…?

சுந் : மானேஜரைப் பார்த்தால் ஏன் கிறங்கி நிற்கிறேன்..? அதிர்ந்து
அல்லவா நின்னுருக்கணும்… அப்பப்பா.. பெண்ணா அவள்..! என்ன
ஸ்ட்ரக்சர்… ஒவ்வொரு அங்கமும் அப்படியே ரவிவர்மா ஓவியம்
போலே செதுக்கி செதுக்கி வெச்ச மாதிரி…. வெச்ச கண்ணை எடுக்-
கவே முடியலையே…!

சூர் : (முகம் சிறிது சிவப்பாக மாற) நீங்கள்ளாம் ஆபீஸிற்கு வேலை செய்-
யப் போறீங்களா… இல்லே ரோடிலே போற பெண்களையெல்லாம்
‘ஸைட்’ அடிக்கப் போறீங்களா..?

சுந் : சூர்யா..இந்தக் கடவுள் எங்களுக்கு கண்ணையும் கொடுத்து. அழகான
பெண்களையும் படைச்சுட்டானே… அழகழகா அவங்க எதிரிலே
வரும்போது பார்க்காம இருக்க முடியலியே.. வழவழப்பான உடல்..
அதுவும் நேர்த்தியா அந்த ப்ளூ ஷ்ஃபான் ஸாரி. உடுத்திட்டிருந்தா
பார்… மார்வலஸ்.. நீ பார்த்திருந்தாக் கூட அப்படியே அவளை
அள்ளி அணைச்சுருப்பே…

சூர் : (சிறிது கோபமாக) என்ன… டிராக் மாறுது… ஆமா.. அதுமாதிரி ஒரு
அழகியைக் கல்யாணம் பண்ணிக்கிறதுதானே…

சுந் : (பெருமூச்சுடன்) என்ன செய்யறது..? அதுலே ரெண்டு ப்ராப்ளம்
இருக்கே… ஒண்ணு… எனக்கு ஆல்ரெடி கல்யாணமாயிடுத்து… நம்ம
சட்டப்படி ‘பிகமி’ அலௌடு இல்லே…

சூர் : (சிறிது அழுகையோடு) ஓஹோ… அதுக்கென்ன நான் கன்ஸென்ட்
லெட்டர் கொடுத்துடறேன்..

சுந் : ஐ நோ… ஐ நோ.. என் சூர்யா டார்லிங் அதைக் கொடுத்துடுவா…
ஆனா.. அவள் என்னைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கணுமே..

சூர் : ஏன் அதையும் கேட்டுப் பார்த்துடறதுதானே..?

சுந் : ம்.. விடுவேனா.. அவள் வழவழப்பான உடம்பைத் தொட்டு, அவ
ஸாரியையும் தொட்டுப் பார்த்துப் பேசி வாங்கி வந்துட்டேன்..

சூர் : ஓ.. நோ… இன்காரிஜிபிள்.. (கண்ணைக் கசக்குகிறாள்)

சுந் : அடி அசடே… (ப்ரீஃப் கேஸைத் திறந்து அந்த நீல ஸாரியை எடுத்து கொடுக்கிறான்)

சூர் : ஓ,, மார்வெலஸ்…

சுந் : பைத்தியம்.. நான் சொன்னது ஷோகேஸ் பொம்மையை…

சூர் : (அசடு வழிய) ஆமாமா… சமர்த்துதான்..

சுந் : ம்… கல்யாணமாகி பதிமூணு வருஷமாச்சு… உங்கிட்டே இருக்கிற
சமர்த்து கொஞ்சமாவது இங்கே வரவேண்டாமா..

(என்றபடியே அவளை அள்ளி அணைக்கிறான்)

சூர் : ஸ்.. சும்மா இருங்க… குழந்தைக வந்துடப் போறாங்க… முரளி
அண்ணா வேறே கெஸ்ட் ரூமில் இருக்கார்…

சுந் : முரளி வந்திருக்கானா..? எப்ப வந்தான்..?

சூர் : இப்பத்தான்.. வந்து ஒரு மணி நேரமாச்சு… ரெஸ்ட் எடுத்திட்-
டிருக்கார்.

சுந் : ஓகே.. ரெஸ்ட் எடுக்கட்டும்.. அப்புறம் பார்க்கலாம்..

(ரம்யாவும், சவிதாவும் ஓடி வருகிறார்கள்)

ரம் : டாடீ… நான் கேட்ட அந்த டெடி பேர் வாங்கி வந்தீங்களா..?

சுந் : (பெருமூச்சோடு) அதையேன்டா கேட்கறே.. நான் அந்தக் கடைக்குப்
போனேனா… அந்தக் கடை வாசல்லே ‘நோ பார்க்கிங்’ போர்டு போட்டிருந்தது..
அவனே ‘நோ பார்க்கிங்’ போர்டு போட்டிருக்கிறப்போ
நாம எப்படிப் பார்க்கறதுன்னு வந்துட்டேன்…

ரம் : போங்க டாடீ.. நீங்க எப்பவுமே இப்படித்தான்.. ஆசையா கேட்டா
உடனே வாங்கித்தர மாட்டெங்கறீங்க…

சுந் : யூ ஸில்லி.. கமான் டார்லிங்…

(டெடி பேரை எடுத்துக் கொடுக்கிறான். ரம்யா அதை
வாங்கிக் கொண்டு குதிக்கிறாள்)

ஹாய்… சவிதா… இந்தா உனக்கு நீ கேட்ட பொம்மை…

(சவிதாவின் முகத்திலும் மகிழ்ச்சி தொத்திக் கொள்கிறது)

சூர் : ஆமா.. ஐயாவுக்கு திடீரென்று எங்கிருந்து இவ்வளவு பணம்..?

சுந் : போனஸ் வந்தது..

(ஹாலில் நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த
முரளியின் மனதிலே ஆதங்கம். மெதுவாக முணு-
முணுக்கிறான்)

முர : வாட் எ ஹாப்பி ஃபாமிலி.. என்னை மாதிரியே சம்பளம்,
ஸர்வீஸ்… பட்.. சின்ன குடும்பம்… நம்ம வீட்டிலே நடக்-
கறது நேர் எதிரிடையாயில்லே இருக்கு..

(அவன் பார்வையிலே அவனது வீட்டுக் காட்சி
விரிகிறது)

காட்சி — 2

(முரளியின் வீடு. முரளி தலையில் இடி விழுந்த மாதிரி
கன்னத்தில் கை வைத்துக் கொண்டு நாற்காலியில் அமர்ந்-
திருக்கிறான். அவன் மனைவி சாந்தா பக்கத்தில் தரையில்
உட்கார்ந்திருக்கிறாள். குழந்தைகள், ராமு (11வயது),
வேணு (7 வயது), காயத்ரி (6 வயது), உமா (2 வயது)
மூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டு மூலைக்கொரு-
வராய் உட்கார்ந்திருக்கிறார்கள்)

ராமு: நம்மாலே முடியாது… நம்மாலே முடியாது… எப்பவும் இதே
பாட்டுத்தான். அங்கே என் ஃப்ரண்ட்ஸெல்லாம் ஜாலியா
எக்ஸ்கர்ஷன், பிக்னிக்னு போறாங்க… என்னை ஒரு வருஷம்
கூட அனுப்பறதில்லே..

முர : ராமு… அதுக்குப் பணம் கொடுக்க வேண்டாமா.. நமக்கு
ஏகப்பட்ட செலவு… பிக்னிக்குக்கு கொடுக்கறதுக்கு பணத்துக்கு
எங்கே போறது..?

ராமு: எல்லோருடைய அப்பாவும் எப்படிக் கொடுக்கறாங்களாம்? என்
தலைவிதி… பிக்னிக் போக முடியாது… எல்லார் மாதிரியும் கொஞ்-
சம் டீக்கா டிரஸ் போட்டுட்டு போகலாம்னா அது முடியாது..
மத்தியான லஞ்சுக்கு எல்லோரும் விதவிதமா டிபன், சாப்பாடெல்-
லாம் கொண்டு வராங்க. நம்ம வீட்டிலேயோ எப்பவும் தயிர்
சாதம்… இல்லே இல்லே… மோர் சாதம்… எனக்கு என் ஃப்ரண்டு
க்ரூப்லே தலை நிமிர்ந்து நிற்க முடியலே… எல்லோரும் டீஸ்
பண்ணறாங்க… ஏன்தான் பிறந்தேனோ..?

(சலிப்போடு வெளியே போகிறான்.. அதிர்ந்து உட்கார்ந்-
திருந்தான் முரளி. 11 வயது பையன் பேசும் பேச்சா இது?
நிதர்சனமான உண்மையை ஜீரணிக்க முடியவில்லை)

வேணு: (மெதுவாக தயங்கியபடி) அப்பா.. என் யூனிஃபார்ம் கிழிஞ்சி-
ருக்காம். எங்க மிஸ் பணிஷ் பண்ணினாங்க. உடனே புதுசு
வாங்கிப் போட்டுட்டு வரணும்னு சொல்லியிருக்காங்க.

முர : சாந்தா.. யூனிஃபார்ம் என்ன விலையாகும்?

சாந் : குறைஞ்சது ஐநூறு ரூபாய் ஆகும்..

முர : மை காட்… நான் என்ன பண்ணுவேன்..?

வேணு: அப்பா.. நாளைக்கு புதுசு போட்டுட்டு போகலைன்னா எங்க
டீச்சர் வகுப்புக்குள்ளே விடமாட்டாங்க…

(அழ ஆரம்பித்தாள்)

முர : (எரிச்சலோடு) ஓ… ஸ்டாப் இட்.. பார்க்கலாம்.

சாந் : உங்க கையாலாகாத்தனத்தையும். எரிச்சலையும் குழந்தைகள் மேல்
ஏன் காட்டறீங்க…?

முர : வாட் டூ யூ மீன்… கையாலாகாத்தனமா..? நாள் பூரா உழைச்சு
ஓடாத் தேயறேன்… உன் கண்ணுக்கு அதெல்லாம் தெரியலியா?

சாந் : அது சரிதான்.. உழைக்கிறீங்க.. ஆனா பிராக்டிகலா பார்த்தா
குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுக்க முடியலையே?
வேணு என்ன செய்திருக்கான் தெரியுமா? எல்லா பசங்களும் லஞ்ச்
அவர்லே ஐஸ்க்ரீம் வாங்கித் தின்னிருக்காங்க. குழந்தைதானே..
இவனுக்கும் ஆசை வந்திருக்கு… பக்கத்திலிருந்த பையனுடைய
பையிலிருந்து ரூபாய் எடுத்துட்டுப் போய் வாங்கித் தின்னிருக்கான்.
இது அவனுடைய டீச்சருக்குத் தெரியப் போய் ஒரே அமர்க்களம்..
நான் சாயந்திரம் குழந்தைகளைக் கூப்பிடப் போனபோது ஒரே
கம்ப்ளைன்ட்…

முர : (அதிர்ச்சியோடு, கோபமாக) டேய் திருட்டு ராஸ்கல்…

(அடிக்க கை ஓங்குகிறான். வேணு பயத்தில்
மூலையில் பதுங்குகிறான்)

சாந் : நோ.. அவனை ஒண்ணும் சொல்லாதீங்க… நான் ஆல்ரெடி
கண்டிச்சிருக்கேன்… குழந்தைகளுக்கு நாம பிராபரா வேண்டியதைச்
செய்யலேன்னா அவங்க தடம் மாறினாலும் மாறிடுவாங்க. இந்த
நாலையே சமாளிக்க முடியாதபோது வயத்துலே வேறே இது
ஒண்ணு… கர்மம்.. கர்மம்…

(அலுத்துக் கொள்கிறாள்)

முர : சாந்தா… நீயும் என்னை வார்த்தையாலே கொல்லாதே…!

சாந் : இல்லீங்க… நான் உங்க மனதை கஷ்டப்படுத்தணும்னு சொல்லலே..
இதுதான் உண்மை.. சம்பாதிக்கிறீங்க… வாஸ்தவம்.. ஆனா
நம்மாலே மத்தவங்க மாதிரி டீஸன்டா – ரெஸ்பெக்டபிளா – நல்ல
வீட்டிலே கம்ஃபர்டபிளா இருக்க முடியறதா பாருங்க.

(அலுப்போடு எழுந்து உள்ளே போகிறாள். பித்துப்
பிடித்தவன் போல் உட்கார்ந்திருக்கிறான் முரளி)

காட்சி — 3

(சுந்தர் வீட்டில், கெஸ்ட் ரூமில் பழையதையே நினைத்துக்
கொண்டிருந்த முரளி, ‘ஹாய்… முரளி’ என்ற சுந்தரின்
குரல் கேட்டு இவ்வுலகிற்கு வருகிறான்)

சுந் : டேய்… என்னடா… கனவு கண்டுண்டிருக்கியா…?

முர : இன் எ வே எஸ்… சுந்தர்… உன்னைப் பார்த்துப் பொறாமைப்-
படறேண்டா….

சுந் : டேய்… டேய்… என்னடா இது…?

முர : நோ.., ஐ ஆம் ஸீரியஸ்… ‘சிறு துளி பெருவெள்ளம்’னு சொல்ற
மாதிரி ‘சிறு குடும்பம் பெருமகிழ்ச்சி’.. இப்ப என்னைப் பார்…
நாலு குழந்தைகளாச்சு… அதோடு ஷீ ஈஸ் இன் ஃபேமிலி வே..
செலவைத் தாக்குப் பிடிக்க முடியலே… திண்டாடறேன்.. நீ ப்ளான்
பண்ணி, டீ.வி.., ஃப்ரிட்ஜ், சொந்த வீடு… இத்யாதி.. இத்யாதி…
குடும்பத்தை ஹாப்பியா வெச்சிருக்கே…

சுந் : ‘குழந்தைகள்’ செல்வங்கள்டா…

முர : அது பழைய காலத்துலே சுந்தர்… ராக்கெட் வேகத்துலே விலைவாசி
ஏறற இந்தக் காலத்துக்கு ஒத்து வராது.

சுந் : ஒருமாதிரி அவங்களை ஒப்பேத்தி விட்டேன்னா, அப்புறம் ஹாயா
வ்வொருவர் வீட்டிலேயும் போய் கொஞ்சம் கொஞ்சம் இருந்துண்டு அவங்க கூட
சந்தோஷமா இருக்கலாமே…

முர: நானும் அப்படித்தான் நினைத்தேன்.. ஆனா இப்போ அவங்களை
நல்லபடியா அவங்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுத்து
வளர்த்தலேன்னா, இந்தக் காலத்துப் பசங்களுக்கு அப்பா மேலே
உள்ள பாசமும், மதிப்பும், மரியாதையும் போயிடுமோன்னு பயமா-
யிருக்கு… உலகமும் மெடீரியலிஸ்டாக ஆயிட்டு வறது.. ‘ஆமாமா..
இந்த அப்பன் நமக்கு என்ன பண்ணினான்.. நாம் எதுக்கு அவ-
னுக்கு பண்ணனும்’னு திங்க் பண்ண ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்-
சுடுவாங்க. நெட் ரிஸல்ட்… இப்பவும் மன வேதனை… அப்பவும்
மனவேதனை….

சுந் : முரளி.. உனக்கும் ஆல்மோஸ்ட் என்னைப் போல்தானே சம்பளம்
வரது…

முர : கரெக்ட்… ஆனா அடுத்தடுத்து பிரசவம் ஆனதாலே சாந்தா உடம்பு
ரொம்பவும் கெட்டுப் போனதாலே எக்கச்சக்கமாய் மெடிகல் எக்ஸ்-
பென்ஸ் ஆயிடுத்து. ஆயிண்டும் இருக்கு… ‘பிள்ளையார் பிடிக்கப்
போய் குரங்காய் மாறிடுச்சு’ன்னு சொல்வாங்க. அதுபோல வயது
காலத்துலே ஒண்ணுக்கு நாலு பசங்க இருந்தா நல்லதுன்னு நினைக்-
கப் போய்… சும்மாவா சொன்னாங்க… சிலருக்குச் சொன்னாத்
தெரியும்.. சிலருக்கு அனுபவிச்சாத்தான் புரியும்னு… நான்
ரெண்டாவது வகை போலிருக்கு….

சுந் : கமான்… டோன்ட் லூஸ் ஹார்ட்… கடவுள் நல்ல வழி காட்டுவார்..

முர : என்னடா காட்டப் போறார்… உனக்கு ஏதாவது யோசனை
தோணிச்சின்னா சொல்லு…

சுந் : (சிறிது யோசித்து) நீ தப்பா நினைக்கலேன்னா ஒண்ணு சொல்றேன்..
சாந்தா ஆல்ஸோ ஷுட் நாட் மிஸ்டேக் மீ…

முர : டேய் சொல்லுடா… முடியும்னா செய்யலாம்.. இல்லேன்னா வீ வில்
டிராப் இட்…

சுந் : டேய் முதல்லே நீ போய் ஒரு ஃபாமிலி ப்ளான்னிங் டாக்டரைப்
போய் பார்… இப்ப பிறக்கப் போற குழந்தையையும், உமாவையும்
நல்ல வசதியாக இருக்கும் நமக்குத் தெரிந்த குழந்தையில்லாத
இரு தம்பதிகளுக்கு தத்துக் கொடுத்துடலாம். அந்தக் குழந்தைகள்
ப்ராப்ளம் இல்லாம சீரும் சிறப்புமா வளர்வாங்க. பின்னே ராமுவும்
வேணுவும், காயத்ரியும் தானே.. ரொம்பக் கேர்ஃபுல்லா ப்ளான்
பண்ணி செலவு செய்து, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம்
செய்து கொடு. சாந்தாவுக்கும் நல்ல டாக்டர்கிட்டே கூட்டிட்டுப்
போய் காட்டி மருந்து கொடுத்து ஹெல்த் இம்ப்ரூவ் பண்ண வழி
செய்துடு…இப்போ எல். ஐ.சி., பாங்குகள் நிறைய ஸேவிங் ஸ்கீம்ஸ்
ஆஃபர் பண்ணறாங்க… அதுலே சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா
சேமிச்சுக்கோ… அந்த ஸ்கீம்ஸ் பீரியட் பதினஞ்சு, இருபது வரு-
டம்னு இருக்கறதாலே மந்த்லி டெபாஸிட் கம்மியாத்தான் இருக்கும்
ஸ்ட்ரெயின் தெரியாது.. குழந்தைகளுக்கெல்லாம் ஜாம் ஜாம்னு
கல்யாணம் பண்ணி அவங்களைத் தனிக் குடித்தனம் வைத்துவிட்டு
நீயும், சாந்தாவும் இந்தப் பென்ஷன் ஸ்கீம்ஸில் வர பணத்தை
வெச்சுட்டு நிம்மதியா இருக்கலாம்.. குழந்தைகள்கிட்டே எதிர்-
பார்க்கறதுக்கு பதிலா நீ அவங்களுக்கு ஏதாவது செய்யலாம்.
இப்போ உனக்கு இம்மீடியட்டா ஏதாவது மொத்தப் பணம்
வேணும்னா சொல்லு… நான் ஏற்பாடு பண்ணித் தரேன்.

(முரளி சுந்தரையே ஒரு கணம் பார்த்தான். அவன்
கண்களில் கண்ணீர்.. அப்படியே அவனைத் தழுவிக்
கொண்டான்)

 

 

ஒரு கோப்பை சூரியன் – கவிதை நூல் – விமர்சனம் – ந பானுமதி

 

 

Image may contain: sky, cloud, tree and outdoor

Image may contain: 5 people, people standing

  ஒரு கோப்பை சூரியன்- காலவன் கவிதைகள்-(ஆர்.கே.ராமநாதன்)

நூல் விமர்சனம்

கவிதை என்பது என்ன? எவற்றைக் கவிதை எனச் சொல்லலாம்?விதை என்பது வாழ்விற்கு இன்றியமையாதது.விதை விதைத்து பயிர் வளர்த்து உயிர் ஓம்புவது போல் எண்ணங்களை, சிந்தனைகளை விதைத்து மனித மனங்களைப் பயிரிட்டுப் பதன்படுத்துவதால்,’க’ என்னும் விகுதி சேர்த்து கவிதை எனப் பெயரிட்டார்களோ?

அறிந்த சொற்களின் வழியே அறியாத ஒன்றை கவிதை அறிமுகம் செய்ய வேண்டும்.அறிவின் புரிதல்களைத் தாண்டி புது அனுபவத்தை கவிதைகள் தர வேண்டும்.அவை அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டாலும்,அவரவர் மன நுட்பத்திற்கேற்றவாறே உணரப்படுகின்றன.

கவிதை, கட்டுரை, நாடகம், நடிப்பு, இயக்கம், வங்கி வேலை எனப் பன்முக ஆளுமையான ஆர். கே, ‘காலவன்’ என்ற புனை பெயரில் ‘ஒரு கோப்பை சூரியன்’ என்ற தலைப்பில் ‘குவிகம்’ வெளியீடாக தன் முதல் கவிதைத் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். பதிப்பாளர்களின் 50-வது நிகழ்ச்சியில் அவர்களின் 25-வது பதிப்பாக இந்நூல் வெளி வந்துள்ளது சாலச் சிறப்புடையது.

லா ச ராவின் மயக்கும் திகைக்க வைக்கும் எழுத்தின் தாக்கம் இவரது சில கவிதைகளில் காணப்படுகிறது.

‘உண்மையின் சுடரொளியில் ஒளியுறும் சொற்களின் விக்ரகங்கள்’ சொல்லெனப்படுவது என்கிறார்.’குவளையின் தரிசனமும் ஸ்பரிசமும் போதும் அது நிரம்பியிருந்தாலும், காலியாகவே இருந்தாலும்’என்ற வரிகள், நினைவுகள் கிளர்த்தும் எண்ண வண்ணங்களை அழகாகக் காட்டுகின்றன.கோப்பை இவரை மிகவுமே கவர்ந்திருக்கிறது.’குவளை மேல் சதிராடும் நீராவியாக’ என்று எழுதுகிறார்.’தொடர்புச் சங்கிலிகள் துளித்துளியாய் சேதி சொல்ல ஒரு குவளை தேறியது; ஒரு குவளை காதல் மழை மேகம்’

‘நீ வந்த பிறகு தான் கவிதைகள் உணர்வின் தீர்க்க நிலை முகமணிந்து கொண்டது ‘ எனக் காதலியைக் கொண்டாடுகிறார்.அவள் தான் இது நாள் வரையான தன் தேடலின் இலக்கு எனப் புரிந்து கொள்கிறார்.

‘நானும் நீயும் நாமெனும் கலப்பின் வர்ணக் கீற்றுகளெனும் வரையறை வகுத்திணைத்தேன் பிறகுதான் நிறப்பிரிகை மாற்றம் புரிபடல் துவங்கியது-நான் நீ என்பதாய் நீயே நான் என்பதாய்’ இவ்வரிகள் லா ச ராவை நோக்கி என்னை அழைத்துச் சென்றன.அதே போல் மற்றொன்று

‘வெறும் காலடிச் சத்தத்தில்,

மன எதிர்பார்ப்பின் நொடிகளில்,

சிநேகத்தின் வாசனைப் பரவலில்,

தோற்ற நிழலின் சிறு கவிப்பில்,

தரிசனத்தின் ஆதர்சத்தில்,

ஆறுதல் சார்பின் எதிர்பார்ப்பில்,

வெறும் சுண்டு விரல் பலத்தில் கூட

விலக்கமேற்று வரவேற்கும்

திரைச் சீலை வடிவில்தானே

வண்ணம் கொண்டதாய்

வலம் வந்தன

நமக்குள்ளான கதவுகள்..?’

அவள்’ஒவ்வொரு பார்வையிலும் ஒரு கவிதை எழுதி வைக்கிறாளாம்;ஒவ்வொரு கவிதையிலும் பார்வை பதித்து வைக்கிறாளாம்’! கொடுத்து வைத்தவர்.

‘என் அத்தனை கவிதையும் உன் பார்வை பேச்சிற்கு முன்

யாக நெய்த்துளி எனத் தெரியாத நிழல் முனியாக’ என உருகுகிறார்.

‘வார்த்தைகளின் கூடாரம்’ சிறப்பாக இருக்கிறது.

அம்மா, அப்பா, தோழி,வீடு, காகம், துரோகம்,என்று அனைத்துமே பாடு பொருளாகின்றன இவருக்கு.நாமிருக்கும் உடலில் உணர்வு இணைந்திருப்பது போல் இவர் வசிக்கும் வீடு இவருடன் பிணைகிறது.

பிற மொழிச் சொற்களை இவர் தவிர்ப்பது நலம்.’தெய்வச் செயல்’ கவிதைக்கு மனம் இணங்கவில்லை; தூயது, போலிக்கு மயங்குவது என்பது எக்காலத்திலும் உண்மையில்லை.

‘இருப்பேன் என்றென்றும் ஒரு கவிதையாய், கதையாய்,படைப்பாய்,பாட்டாய்’ என்ற இவர் ஆவல்  நிறைவேறுவதாக!

 

திரைக்கவிதை – நறுமுகையே – வைரமுத்து – ரஹ்மான் -மணிரத்னம்

மணிரத்தினத்தின் இருவர் படப் பாடல்

Image result for நறுமுகையே பாடல் அர்த்தம்All PostsImage result for நறுமுகையே பாடல் அர்த்தம்

 

 

 

 

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்.

மலர் போன்றவளே.. சற்று இங்கே நில்

செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்

செங்கனி ஊறி மிகவும் இனிப்பாக இருக்கும் உன் இதழ்களைதிறந்து உன் மொழியால் என்னுடன் பேசு..

அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித்தரள நீர்வடிய

கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா

அதாவது அன்று ஒரு நாள் முழு நிலவின் போது அந்தபுரத்தில் உள்ள குளத்தில் நெற்றியில் முத்து போல நீர் உருண்டோட நீராடிய பெண்மணி நீயா??

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்

வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்

திருமகன் என்றால் எல்லா நற்பண்புகளும் கொண்ட ஒருவன். திருமகனே என்னை சற்று பார்.

வெள்ளை குதிரையில் வந்தவனே.. வேல் போன்ற என் கண்கள் கூறும் வார்த்தைகளை கேள்..

அற்றைத் திங்கள் அந்நிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்

ஒற்றைப்பார்வை பார்த்தவனும் நீயா

அன்று முழுநிலவில் நான் அந்தபுர குளத்தில் நீராடுகையில் என்னை பார்த்தவன் நீயா..

மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன..

மான்களின் விழிகளை கொண்ட இந்த பெண்ணின் கண்களில் இருந்து வரும் பார்வை, அம்புகளை போல என் மனதை துளைக்கிறது..

பாண்டினாடனைக் கண்டு என்உடல் பசலை கொண்டதென்ன..

பாண்டி நாட்டு வீரனே.. உன்னை கண்டதும் என் உடல் முழுவதும் சிலிர்த்துவிட்டது..

நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்

அன்று நான் முழு நிலவின் வெளிச்சத்தில் கண்ட அந்த காட்சி..

இன்றும் என் கனவில் தோன்றிக்கொண்டே இருக்கிறது..

இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை..

இடையினில் மேகலை இருக்கவில்லை..

உன்னை காணாத துயரத்தில் துடித்து துடித்து இளைத்து போனேன்.

இளைத்த காரணத்தினால் என் இடுப்பினில் மேகலையும் நிற்கவில்லை..

யாயும் ஞாயும் யாராகியறோ நெஞ்சு நேர்ந்ததென்ன

என் தாயும் உன் தாயும் எந்த விதத்திலும் சம்மந்தபடாதவர்கள்..

ஆனாலும் நம் இருவரது இதயமும் ஒன்றாக கலந்தது எப்படி??

யானும் நீயும் எவ்வழியறிதும் உறவு சேர்ந்ததென்ன

நானும் நீயும் எந்த விதத்திலும் தெரிந்தவர்கள் இல்லை..

ஆனாலும் எப்படி நமக்குள் இந்த உறவு ஏற்பட்டது??

ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன.

ஒரே ஒரு முறை தான் என்னை நீ தொட்டாய்..

அதுவே என்னுள் ஒரு அரும்பு பூத்தது போல ஆகி விட்டதே..

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன.

நீர் மண்ணோடு கலந்து பிரிக்க முடியாதது போல எப்படி ஆகின்றதோ அப்படி நம் நெஞ்சங்கள் சேர்ந்துவிட்டது எப்படி??