ஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன்(21) – புலியூர் அனந்து

Image result for retired staff from government department in chennai

வாழ்வென்றும் தாழ்வென்றும்
வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது
யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு

பின்னாட்களில் என்னுடன் வேலை பார்த்த ஊழியர்களில் ஒருவர் பயிற்சி மையத்தில் அறிமுகமான தங்கப்பன். எங்கள் நிறுவனத்தில் பல தங்கப்பன்கள் இருந்ததால் இவரை இங்க்லீஷ் தங்கப்பன் என்று கூறுவார்கள்.

கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே தந்தையை இழந்தவர். அவர் தந்தை எங்கள் அலுவலக ஊழியர். கருணை அடிப்படையில் இவருக்கு வேலை வழங்கப்பட குடும்ப சூழ்நிலையை முன்னிட்டு அந்த கால புகுமுக வகுப்பிலிருந்து விலகி பணியில் சேர்ந்தவர்.
ஆங்கிலம் தவிர மற்ற பாடங்களைத் தமிழ்மொழியில் படித்துவிட்டு கல்லூரியில் எல்லாம் ஆங்கில மயம் என்று தடுமாறுவது மிகவும் இயற்கை. தங்கப்பனின் உறவினர் ஒருவர் இந்தத் தடுமாற்றத்தில் கிட்டத்தட்ட மனநோய்க்கு ஆளாகிவிட்டார். அதனால் பதினோராம் வகுப்பு முடிந்து முடிவுகள் வருவதற்குள் தங்கப்பனை ஆங்கிலம் பயில சென்னையில் ஒரு பயிலகத்தில் சேர்த்திருந்தார்கள். ஆர்வத்துடன் இவர் கற்றாலும் மொழி இவருக்குப் பிடிபடவே இல்லை.

அவர் கற்ற ஆங்கிலம் கல்லூரிப் படிப்பிற்கு உபயோகப் படவில்லை. ஆனாலும் தேவை இருக்கிறதோ இல்லையோ இவர் அலுவலகத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசுவார்.
பயிற்சி மையத்தில் சிறு குழுக்களைப் பிரிப்பார்கள். ஒவ்வொரு குழுவிற்கும் ஏதேனும் தலைப்பைக் கொடுத்து கலந்துரையாடச் செய்வார்கள். குழுவில் ஒருவர் நடந்த உரையாடல்களின் கருத்துக்களை எல்லோருக்கும் சொல்வார்கள். தனது குழுவிற்காக அந்தப்பணியை தங்கப்பன் ஏற்றார். தமிழில் யோசித்து ஆங்கில மாற்றம் செய்து தப்பும் தவறுமாகப் பேசி சமாளித்துவிட்டார்.
வகுப்பில் மற்றவர்கள் அந்த காலகட்ட மனமுதிர்ச்சியில் சற்று அதிகமாகவே தங்கப்பனைக் கலாய்த்து விட்டார்கள். முகம் எல்லாம் சிவந்து சிறுத்துப் போய்விட்டது இவருக்கு.

உங்கள் ஊகம் சரிதான் அந்த கேலியில் பங்கெடுக்காத ஒரே நபர் நான்தான். சாதாரணமாகப் பேசுவதே சொற்பம். (நல்ல நாளிலேயே தில்லைநாயகம் என்பார்களே அதுபோல்) தங்கப்பன் அன்று மாலையே ஒரு தமிழ் ஆங்கிலம் அகராதி ஒன்றும் ஒரு ட்ரான்ஸ்சிஸ்டர் ஒன்றும் வாங்கிவிட்டார். எப்படியாவது தான் சிறந்த ஆங்கிலப் பேச்சாளனாக வரத்தான் போகிறேன் என்று என்னிடம் மட்டும் சொன்னார். அதில் அவர் வெற்றி பெற்றாரோ இல்லையோ முயற்சியை மட்டும் எப்போதும் விடவில்லை. அவர் என்னுடன் இரு அலுவலகங்களில் இரு வேறு சந்தர்ப்பங்களில் வேலை பார்த்திருக்கிறார்.

வேலையில் கெட்டிக்காரன் என்று எப்போதும் பெயர் வாங்கியதில்லை. என்னையும் தங்கப்பனையும் தராசில் வைத்தால் எந்தத் தட்டு தாழும் என்று சொல்லமுடியாது என்று அலுவலகத்தில் பேசிக்கொள்வார்கள் ஒரே பிரிவில் இருவரையும் வைத்தால் அதோகதி என்று எண்ணியோ என்னவோ வேறு வேறு பிரிவுகளில் தான் நாங்கள் இருப்போம்.

சில்லறைச் சச்சரவுகள் அலுவலகத்தில் அவ்வப்போது எழத்தான் செய்யும். என்னை யாராவது எதாவது சொன்னால் அவர்களைக் கலங்கடிக்க எனக்கு ஒரு வழிதான் தெரியும். பதிலுக்கு ஒரு வெற்றுப் பார்வைதான். மேலே என்ன சொல்வது அல்லது செய்வது என்று தெரியாமல் தலையில் அடித்துக்கொண்டு போய்விடுவார்கள். எனக்கு அதில் ஒரு குரூர மகிழ்ச்சி இருந்திருக்க வேண்டும்.
தங்கப்பன் நேர் எதிர். இங்கிலீஷ் தங்கப்பன் என்றாலே ‘யார் அந்தச் சண்டைக் கோழியா?” என்று கேட்பார்கள் தன்னை சம்பந்தப்படுத்தி ஏதேனும் சச்சரவு வரக்கூடும் என்று தெரிந்தாலே, சகட்டுமேனிக்கு ஆரம்பித்துவிடுவார்.

“வாட் நான்சென்ஸ்..! தேர் இஸ் எ லிமிட் டு எவரிதிங். ஆல் யூஸ்லெஸ் பீபுள் ஆர் ட்ரையிங் டு ஆக்ட் ஸ்மார்ட். ஐ வில் டீச் தெம் அ லேசன்.” என்று ஆங்கிலத்தில் ஆரம்பிப்பார். உடனே தமிழுக்கு மாறிவிடுவார். “தலைக்கனம் பிடிச்சவன், அகராதி புடிச்சவன் எல்லாருக்கும் இந்த ஆபீசுல இடம் கொடுத்துட்டாங்க … “என்றெல்லாம் சற்று பலமாகவே முனகுவார். எதிராளி ஆரம்பிக்கும் முன்பே பின்வாங்கிவிடுவார்.
ஆனால் இயல்பாகவே மென்மையானவர். பிச்சை எடுக்கும் குழந்தைகளைப் பார்த்தாலே நெகிழ்ந்துவிடுவார். அவர் வீட்டருகில் பல எளியவர்களுக்கு யாருக்கும் தெரியாமல் உதவி செய்து வந்திருக்கிறார்.

ஒருமுறை அவர் நண்பர் ஒருவர் இவரை ஒரு உணவகத்திற்கு அழைத்துக் கொண்டுபோனார். என்ன காரணமோ நானும் உடனிருந்தேன். நண்பர்.வடநாட்டு முறைப்படி சப்ஜி ஆர்டர் செய்தார். அதுவரை இந்த நடைமுறை எனக்குத் தெரியாதே என்று வெளிப்படையாகச் சொன்னார். பல சமாச்சாரங்களைக் கற்றுக்கொள்ளாமலேயே வளர்ந்துவிட்டேன் என்று சொல்லிக்கொண்டார். அலுவலகத்தில் தன் வேலையில் யாரேனும் தப்பு கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்று தெரிந்தாலே பாயும் தங்கப்பன் இவர்தானா என்று எனக்குத் தோன்றியது.

அவருக்கு இரு மகன்கள். வீட்டில் கணினி வாங்குவது அப்போதுதான் தொடங்கியிருந்த நேரம். பிள்ளைகள் கணினி வாங்கித்தரச் சொல்லிக் கேட்டார்களாம். அதற்குக் கணிசமான தொகை செலவு செய்வதற்குமுன் பலரிடம் விசாரித்து வந்தார். அலுவலக நண்பர்கள் மேல் இவருக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் அலுவலக கணினிக்கு பேப்பர், ரிப்பன் போன்றவற்றை கொடுத்துவரும் நபர் மூலமாக ஒரு கணினி வியாபாரம் செய்யும் என்ஜினீயர் ஒருவரைப் பிடித்தார்.

எந்த வகைக் கணினி வாங்கலாம் என்று இவர் கேட்டிருக்கிறார். ஆனால் அந்தப் பொறியாளர், “உங்கள் பிள்ளைகள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதற்கேற்ற கணினிதான் வாங்க வேண்டும். உங்கள் வீட்டிற்கு வருகிறேன்.” என்று சொல்லிவிட்டார். அதுபோலச் செய்யவும் செய்தார். அவர்கள் தேவைக்கேற்ப சரியான தேர்வு செய்து கணினி விற்றார்.

அவர் அப்போது சொன்னதை தங்கப்பன் அடிக்கடி சொல்வார்.

“எனக்கு நல்ல லாபம் கிடைப்பது என் நோக்கமல்ல. உழைத்துச் சம்பாதித்த காசு அதற்கேற்ற பயனைத் தரவேண்டும். நீங்கள் இன்னும் இரண்டு மூன்றுபேரிடம் என்னைப் பற்றிச் சொல்வீர்கள் அல்லவா? அதுவே எனக்கு பெரிய லாபம்.” என்றாராம்.

தனது தாழ்வு மனப்பான்மையை ஆவேசத்தால் மறைப்பது ஒரு வழி என்று எங்கோ படித்தபோது எனக்கு நினைவிற்கு வந்தது தங்கப்பன்தான்.

நானும் தங்கப்பனும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில்தான் ஒய்வு பெற்றோம். நான் எந்தப் பதவி உயர்வும் பெறாமலே வேலைக்குச் சேர்ந்த அதே பதவியில் ஒய்வு பெற்றேன். தங்கப்பன் தாமதமாக முதல் பதவி உயர்வு பெற்றார். ஒய்வு பெறுவதற்குச் சற்றுமுன் இரண்டாவது பதவி உயர்வும் கிடைத்தது. ஓய்வூதியம் சற்று அதிகமாகக் கிடைக்க இது காரணமாயிற்று.

ஒரு மகன் திருமணத்திற்கு நான் போயிருக்கிறேன். அவர் மனைவி கனிவும் பாசமும் மிக்கவர். எனது அலுவலக நண்பர்கள் குடும்பத்திலேயே தங்கப்பன் குடும்பம் ஒன்றுடன்தான் என் மனைவி மக்களுக்குப் பழக்கம்.

பெரிய மகன் வளைகுடா நாட்டில் குடும்பத்தோடு இருக்கிறான். இரண்டாவது மகன் பேராசிரியராக ஒரு கலாசாலையில் பெரும் மதிப்போடு பணியாற்றுகிறான். முனைவர் ஆய்வுகளுக்கு இவனை கெய்ட் ஆகக் கிடைப்பது பெரும் அதிர்ஷ்டம் என்று சொல்லும் அளவிற்கு புகழுடன் இருக்கிறான். பெற்றோர்கள் அவனுடன்தான். செய்தித் தாள்களில் முனைவர் மனோகரன் தங்கப்பன் என்ற பெயர் அடிபடும் போதெல்லாம் எனக்குப் பெருமையாக இருக்கும்.

கிட்டத்தட்ட எங்கள் வயதுக்காரரான சேஷாத்ரி என்ற சக ஊழியர் இருந்தார். எங்களுக்கு சிலவருடங்களே சீனியர் ஆன அவர் படிப்படியாகப் பதவி உயர்வுகள் பெற்றுவந்த திறமைசாலி. எங்கள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் அரசு நியமித்த ஐ.ஏ.எஸ் அதிகாரி இருப்பார். நிறுவனத்திற்குள் ஊழியர்கள் பெறக்கூடிய அதிக பட்ச பதவி உயர்வாக இரண்டாவது பெரிய பதவிவரை உயர்ந்து ஓய்வுபெற்றார். அவரை நான் சில நாட்கள் முன் சந்தித்தேன்.

“தங்கப்பன் இருமகன்களும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நான் பெரிய பதவி வகித்தவன். ஆனால் எனது பிள்ளைகள், என் கவனக் குறைவு காரணமாகவோ என்னவோ, இன்னும் செட்டில் ஆகவில்லை. எங்கள் இருவரில் வாழ்வில் வெற்றி பெற்றவன் யார் என்று இப்போது புரிகிறது.” என்றார்.

நான் வேலைக்குச் சேர்ந்தபோது மனதாரப் பாராட்டியது வேம்பு என்கிற எதிர்வீட்டுப் பையன் என்று நான் முன்னமேயே சொல்லியிருக்கிறேன். நான் இந்த நிறுவனத்தில் சேர இருப்பதைத் தெரிவித்தவுடன் என்னைவிட அவன் மிகவும் சந்தோஷப்பட்டதாகத் தோன்றியது. அவன் எவ்வகையிலோ இந்தத் தங்கப்பனுக்கு உறவினன்.

தங்கப்பன் என்னும் தன் உறவினன் சில நாட்கள் முன்புதான் இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான் என்று சொன்னான். அந்தத் தங்கப்பனை பயிற்சி மையத்தில் சந்திப்பேன் என்றோ ஒரே அலுவலகத்தில் வேலை செய்வோம் என்றோ தெரியாது.
ஏதோ ஒரு சமயத்தில் வேம்புவைப் பற்றி தங்கப்பன் விசாரித்தார். வேம்புவைப் பற்றி எனக்குத் தெரியாத சில விவரங்களையும் தெரிவித்தார். தங்கப்பன் விவரித்தபோது கண்களில் தெரிந்த வியப்பும் கனிவும் இன்றும் நினைவிருக்கிறது. சொல்லப்படுபவரின் குணநலன்களோடு சொல்பவரின் குணநலன்களும் இது போன்ற சமயங்களில் வெளிப்படும்.

வேம்புவின் தந்தை சங்கரலிங்கம் தன் தகப்பனார் பெயரான பொன்னுலிங்கம் என்பதைத்தான் அவனுக்குப் பெயராகச் சூட்டினார். கிட்டத்தட்ட தவமிருந்து பெற்ற பிள்ளை. அதற்கு முன் இரு குழந்தைகள் பிறந்திருந்தாலும் நாள் கணக்கிலேயே இறந்துவிட்டன. பெரியவரான தாத்தா பெயரை வைத்துக் கூப்பிடமுடியாது என்பதால், கூப்பிட வேறு பெயர் தேவைப்பட்டது. குழந்தைகள் தக்கவில்லை என்றால், பிச்சை, குப்பன், வேம்பு என்று பெயரிட்டு அழைப்பது வழக்கம். அதனால் குழந்தை பொன்னுலிங்கம் ‘வேம்பு’ ஆகிவிட்டான்.
அரிசி மற்றும் தேங்காய்தான் குடும்ப வியாபாரம். நல்ல செயலான குடும்பம். மேலும் கோவில் குளம் என்று தர்மம் செய்வது அவர்கள் வழக்கம். ஆனால் அதற்கான புகழ் தேடிக்கொள்வது அவர்கள் விருப்பமில்லை. சற்றுத் தொலைவில் இருந்த ஒரு கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு ஒரு பெரும் தொகையினை அளித்திருந்தார்கள். ஆனாலும், கூட்டத்தோடு கூட்டமாகத்தான் அந்த நிகழ்வில் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டார்கள்.

பல உறவினர்களுக்கு, முக்கியமாகக் கல்விச் செலவுகளுக்கு, உதவுவதில் தயங்கியதே இல்லை. சுற்றத்தில் இந்தக் குடும்பம்தான் பசையுள்ள குடும்பம். ஆனால் எளிமையான வாழ்க்கையும் ஆழமான பக்தியுமாக இருந்தார்கள்.

திருமணம் ஆகி பல வருஷங்களுக்குப் பிறந்தவன் வேம்பு. ஒரு முறை பெற்றோரை அழைத்து வருமாறு வேம்புவிடம் சொல்லியிருந்தார்கள். சங்கரலிங்கம் மகனுடன் போயிருந்தார். தலைமை ஆசிரியர் புதியதாக வேலைக்கு வந்தவர். “அப்பா ஊரில் இல்லையா? தாத்தாவை அழைத்து வந்திருக்கிறாயே?” என்று கேட்டாராம்.

தாத்தா பொன்னுலிங்கம் வியாபாரத்தில் கெட்டிக்காரர். கொள்முதலிலும் ஏலம் எடுப்பதிலும் நல்ல அனுபவம். அவர் காலத்திற்குப் பிறகு அப்பா சங்கரலிங்கம் குடும்பத் தொழிலை தொடர்ந்தாலும் அவ்வளவு வெற்றிகரமான வியாபாரி என்று சொல்ல முடியாது.
கிராமப் பக்கங்களில் ஒரு சொல் வழக்கு உண்டு. ஒரு கண் உள்ள நெல்- இரு கண் உள்ள மாடு- மூன்று கண் உள்ள தேங்காய் மூன்றுமே வியாபாரியை எப்போது வேண்டுமானாலும் கவிழ்த்துவிடும் என்பார்கள்

ஒரு பெரும் தென்னந்தோப்பை ஏலம் எடுத்த விவகாரத்தில் பெரும் நஷ்டம் வந்துவிட்டது. இயற்கையின் ஆவேசத்தில் தோப்பு பாழாயிற்று. அந்தக் காலத்தில் காப்பீடு போன்ற வசதிகள் இல்லை. முழு நஷ்டத்தையும் தந்து இதர சொத்துக்களை விற்று ஈடு செய்தார். கொஞ்சமும் வருத்தப் படவில்லை.

வேம்புவின் தாய் நோய்வாய்ப்பட்டார். துரதிருஷ்டம் ஒன்றன்பின் ஒன்றாக வரும் என்று சொல்வார்களே, அதுதான் இந்தக் குடும்பத்திற்கு ஏற்பட்டது. சில நாட்களில் தாயும் தொடர்ந்து தந்தையும் மறைய வேம்பு அனாதையாக ஆனான். சுற்றத்தினர் தங்களால் இயன்ற வகையில் உதவத்தான் செய்தார்கள்.

இலவச கல்விக்கும் ஹாஸ்டலுக்கும் யாரோ ஏற்பாடு செய்து. கொடுத்தார்கள். வேம்புவிற்கு ஒரு தாய் மாமன் உண்டு. அவர் இளம் வயதிலிருந்தே உடல்நலம் குன்றியவர். அவரும் இவனுடன் சேர்ந்துகொண்டதால், ஹாஸ்டலை விடும்படியாகிவிட்டது, உறவினர்கள் ஒன்றுகூடி இவர்கள் செலவுகளை கவனித்துக் கொண்டார்கள். இவையெல்லாம் தங்கப்பன் எனக்கு அளித்த தகவல்கள். நானே கவனித்த சில விஷயங்களும் உண்டு.

சரித்திரம் நிகழ்ந்ததோ இல்லையோ, ‘வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது’ என்பது வேம்புவிற்கு மிகவும் பொருத்தம்.

 

Advertisements

Period. End of sentence

 

 

 

 

 

 

Image result for பீரியட் எண்ட் ஆஃப் சென்டன்ஸ்

 

இந்திய பெண்கள்  மாதவிடாய் காலங்களில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த ஆவணப் படத்திற்கு விருது கிடைட்துள்ளது.

கோவையைச் சேர்ந்த நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் , மலிவு விலையில் நாப்கின்களை அறிமுகப்படுத்தினார்.                               பல இடங்களுக்கு சென்று பெண்களிடையே கலந்துரையாடி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றார்.

இவரது மலிவு விலை நாப்கின்கள் மற்றும் இந்திய பெண்கள் மாதவிடாய் காலத்தில் படும் அவதிகளை எடுத்துச் சொல்வதை மையமாகக் கொண்டு ஆவணக் குறும்படமாக ‘பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ எனும் பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தினை குனேட் மோங்கா தயாரித்திருந்தார்.

இப்படம் இந்த ஆண்டிற்கான சிறந்த ஆவணக் குறும்படமாக ஆஸ்கர் விருது விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மலிவு விலை நாப்கின் உற்பத்தியாளர் முருகானந்தம் கூறுகையில், ‘இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைப்பதன் மூலம் சர்வதேச அளவில் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்’ என கூறினார்.

இப்படத்தில் முருகானந்தம் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது

 

குவிகம் பெண் எழுத்தாளர் போட்டி – இரண்டாம் பரிசு – ஊமைக்காயம் – ந. பானுமதி

கதையின் ஆசிரியர்  ந . பானுமதி  அவர்களைப்பற்றி ……

 

மின்னிதழ்களான  பதாகை மற்றும் சொல்வனத்தில் இவரது  ஐம்பதுக்கும் மேற்பட்ட கதை கவிதை கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

நவீன விருட்சம் மற்றும் புதுகைத் தென்றல் இதழ்களிலும் இவரது கதைகளும் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

கிழக்குப் பதிப்பகம் சிறுகதைத் தொகுப்பொன்றில் இவரது ‘’”அஸ்வத்தாமா” கதை இடம் பெற்றுள்ளது.

கிழக்குப் பதிப்பகம் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற இவர் ‘கவிமாமணி’, ’ஸ்வாமி இராமானுஜர் ஆயிரத்தாண்டு விருது’ ஆகியவை பெற்றவர்

ஊமைக்காயம்

 

Related image

“கயல், மகிழ்ச்சிதானே! உனக்கு மணவிலக்கு கிடைத்துவிட்டது. உன் பணத்தில் நீ கட்டிய வீடு, ஒருமுறை கூட இதுவரை நீ பார்த்திராத வீடு, உனக்கே உனக்கு என்று நீதிமன்றம் சொல்லிவிட்ட வீடு; உன் மகள் இசையுடன் இனி நீ அங்கு நிரந்தரமாக, சுதந்திரமாக இருக்கலாம். புது வாழ்க்கை தொடங்க என் வாழ்த்துக்கள்.” வழக்குரைஞர் என்னிடம் சொல்கையில் ஒருபுறம் வெற்றிக் களிப்பும், மறுபுறம் வெறுமையுமாக உணர்ந்தேன். எத்தனை நெருங்கிய சொந்தங்கள் எனக்கு, இன்று ஒருவரும் அருகிலில்லை. என் திருமணமும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை, என் மணவிலக்கும். இத்தனைப் பெரிய உலகில் பத்து வயது சிறுமியை கையில் பற்றிக்கொண்டு மிகத் தனியாக நிற்கிறேன். இல்லை, சோர்விற்கு இடமில்லை  வாழ்ந்து காட்ட வேண்டும், மகள் நல்ல துணையில்லையா, வேலை ஒரு கௌரவமில்லையா, நானே உழைத்து நானே முன்னேறும் இவ்வாழ்க்கை ஒரு வரமில்லையா?

அறுபத்தி நான்கு குடியிருப்புகள் அந்த வளாகத்தில் இருந்தன. என்னுடையது ‘சி’ ப்ளாக், இரண்டாம் மாடி. நான் என் சாமான்களுடன் நுழையும் போதே காவலாளி தடுத்தான்.

‘செகரட்டரி’ வந்து சொன்னாத்தான் உள்ள போகலாம்.’

“என் வீட்டுக்கு நான் போறதுக்கு யாரு சொல்லணும்?”

‘அந்த ந்யாயமெல்லாம் அவரிட்ட பேசு. அவரு சொல்லாம லாரி ஒரு இன்ச் நவராது’

“என்னம்மா இது, முன்னாடியே பேசி வக்கறதில்லையா? என்ன டிலே பண்றீங்க” லாரி ஓட்டுனர் படபடத்தார்.

‘அப்படிச் சொல்லுய்யா, பர்மிஷன் இல்லாம வர்லாமா? அவரு என்னைய வேலய விட்டுத் தொரத்திடுவாரு.’

நான் இம்மாதிரியான வரவேற்பை எதிர் பார்த்திருக்க வில்லை; என் வீட்டிற்கு நான் செல்வதை யாரோ தடுப்பார்கள் எனக் கனவிலும் நினைக்கவில்லை.

“சரி, செகரட்டரி எங்க இருக்காரு, ஃபோன்ல கூப்டுங்க, இல்ல நம்பர் தாங்க நான் பேசறேன்”

“புது நம்பரை அவரு எடுக்க மாட்டாரு. க்ளப்புக்கு போயிருக்கிறாரோ என்னமோ? இன்டர்காம்ல கேக்கறேன். ஐயா வரல்லியா?”

நான் பதில் சொல்லாது நின்றேன்.

காவலாளியும், லாரி ஓட்டுனரும் இகழ்ச்சியான பார்வையை பரிமாறிக் கொள்வதை கவனித்தேன். ”பழகிக்கோ கயல்” என்று மனதினுள் சொல்லிக் கொண்டேன்.

படபடப்புடன்  ஒரு முதியவர் வாசலுக்கு வந்தார். ’ஆரு, என்னது, சி ப்ளாக் ஆறா, சந்த்ரன் வீடு இல்லியோ அது? என்னது உங்க வீடா? கோர்ட் சொல்லிடுத்தா? டிவோர்சியா? எப்படி சமாளிப்பேள்? டாக்குமென்ட் இருக்கா? பெண் குழந்தையா? ஈஸ்வரா! பகலோட வரப்படாதோ? உள்ள அனுப்புடா, முழிக்கிறான் பாரு.’

ஒரு வழியாக சாமான்களை இறக்கி பேசினதை விட அதிகத் தொகை கொடுத்து நிமிர்கையில் இசை உறங்கியிருந்தாள்.சாப்பிட வெளியிலும் போக முடியாது, இங்கேயும் செய்ய முடியாது, நாளை பார்த்துக் கொள்ளலாம். எதிரெதிராக இரு ஃப்ளாட்கள்  ஒவ்வொரு தளத்திலும். கட்டிட அமைப்பில் நிறைய இடம் இருக்கும் தோற்றத்தை புத்திசாலித்தனமாக ஏற்படுத்தியிருந்தார்கள். காலை புலர்கையில் இசை விழித்துக் கொண்டு பசிக்கிறது என்றாள்.அவளுக்கு கார்ன் ஃப்ளேக்ஸ் கொடுக்கலாம் என்றால் பாலில் தா என அடம். எதிர்த்த வீட்டில் கேட்கலாமென பெல் அடித்தேன். முழுதாக இரு நிமிடங்களுக்குப் பிறகு கதவு பாதி திறந்தது. ஒரு நடுத்தர வயது பெண் முகக் குறிப்பால் என்ன என்றார்.

“எதிர் வீடு என்னோடது. நேத்துதான் வந்தேன். எக்ஸ்ட்ரா பால் இருந்தா தாங்க.மாலயில வாங்கித் தரேன்.”

‘பாலுமில்ல, ஒன்னுமில்ல’ என்று கதவு சாத்தப்பட்டது. அதிர்ந்தேன். என்ன பிழை என்னிடம்? இசையை அடிக்கும் வேகம் வந்தது. இல்லை, அது இயலாமை. பிறர் உனக்கு எதையும் செய்ய கடன் பட்டவர்களில்லை என்று என்னையே சமன் செய்து கொண்டேன்.

“பால் எங்க கடைக்கும்? காய்கறி கட கிட்டக்க இருக்கா? பலசரக்குக் கட பக்கமிருக்கா?” என்று அந்த காவலாளியைத் தான் கேட்க நேர்ந்தது. அவன் குறுகுறுவெனப் பார்த்துக் கொண்டே ’நேரப் போயி ஜங்க்ஷன்ல  திரும்பு. அல்லாமிருக்கும்’ என்றான். பெரு நகரின் கலாசாரத்தை நோக்கி இந்த ஊர் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

காலை உணவை முடித்துக்கொண்டு அனைத்துப் பொருட்களையும் சுமந்து கொண்டு திரும்பி வருகையில் ‘மிஸஸ். சந்த்ரன்‘ என்று பெண்குரல் கேட்டது. “என்பெயர் கயல்”.

“சாமாங்க இருக்கு. அப்புறம் வரேன்”

“அப்படியா? சரி, உள்ள வாங்களேன். ”ஏ1 வாசலிலிருந்து அழைத்த பெண்மணி செக்ரட்டரியின் மனைவி என சொல்லாமல் தெரிந்தது.

 “சும்மா இப்படி வைங்கோ, உங்க பொண்ணா, அப்படியே சந்த்ரன் ஜாட”

நான் பதில் சொல்ல முயலவில்லை. வீண், இதெல்லாம் வீண். என் தன்மானத்திற்கு நான் தர வேண்டிய விலை. இவைகள் உறுத்தும் ஊவா முட்கள்.எரிச்சல் தரும் பார்வைகள், பின் முதுகில் ஊறும் நமட்டுச் சிரிப்புகள், பாவமே என்று பரிதாபப் படும் பகல் வேஷங்கள். காளியென இவர்களைக் கிழித்துப் போட்டுவிடலாம், ஆனால், எத்தனை பேரை அப்படிப் போட முடியும்? அந்தக் காளியே மகிஷனை வதைத்த பிறகு விட்டுவிட்டாளே?

அந்த வளாகமே சந்திரனை அறிந்திருந்தது. அவனை நல்லவன் என்ற அதன் மதிப்பீட்டிலிருந்து சரித்துக் கொள்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. இசை, விளையாடப் போகையில் பெரியவர்கள் வந்து அவளிடம் கேள்விகள் கேட்பதாகச் சொன்னாள். “அந்த சவிதா இல்ல அவளும், இளங்கோவும் ‘உங்க அப்பா உன்னோட இல்லியா? அவரு கெட்டவரா’ன்னு கேக்கறாங்க மம்மி” என்று  அழுதாள். “மம்மி நம்ம வூருக்கே போலாம், அங்கதான் ராதா, சுரேஷ் எல்லாரும் ஒன்னும் கேக்க மாட்டாங்க.”

“நான்  பேசறேன்.      நீ ப்ரண்ட்ஸ்ஸோட நல்லா வெளயாடலாம். அம்மா கூட எல்லாரையும் விட்டுட்டுத்தானே  இங்க இருக்கேன்.குட் கேர்ள் இல்ல, வீட்டுப் பாடம் எழுத வேணாமா? நாளக்கி தீம் பார்க் போலாம் ஓகேயா?”

இப்போதெல்லாம் என்னைப் பார்த்தால் சிலர் நட்புடன் சிரிக்கிறார்கள். தங்கள் இல்லங்களுக்கும் அழைப்பதில்லை, என் வீட்டிற்கும் வருவதில்லை. ஆனால், ஒதுக்கம் குறைந்துள்ளது. ஏன், அம்மாகூட ஒன்றும் கேட்பதில்லை. இணக்கம் வராமலா போய்விடும்? எனக்கும் அலுவலக வேலைகள், வீட்டு வேலைகள், இசையின் படிப்பும், அவளின் வயலின் வகுப்பும் என்று நேரம் பறக்கிறது. நீல இரவு விளக்கின் ஒளியில் என் கன்னங்களில் வழியும் கண்ணீர் பளபளவென்று மினுங்கி என் வாழ்வைப் போல் காய்ந்தும் விடுகிறது. இத்தனைக்கும் நடுவில் எதிர் வீட்டில் ஆள் இருக்கும் அரவமே இருப்பதில்லை. அன்று பார்த்த முகம், பாதி உடல் ஏனோ மருள் காட்சியெனத் தோன்றித் தோன்றி மறைந்தது.

இசையின் பள்ளி எங்கள் இருப்பிடத்திலிருந்து இரு கிலோ மீட்டருக்குள்தான். நானே அழைத்துச் சென்று விடுவேன், அழைத்து வந்தும்விடுவேன். அன்று காலையில் இருந்தே மனம் அமைதியாக இல்லை. முக்கியமான வழக்கு ஒன்றின் தீர்ப்பு பாதகமாக வரும் என்ற எதிர்பார்ப்பை ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்க, இசையின் பள்ளி நிர்வாகம் மதியம் மூன்று மணிக்கு அனைவரையும் வீட்டிற்குச் செல்லுமாறு சொல்லிவிட்டது. இசை என்னிடம் அதைச் சொல்கையில் நான் முக்கிய கூடுகையிலிருந்தேன். தவிப்பாக இருந்தது, அவள் பள்ளியிலும் இருக்க முடியாது, வெளியிலும் நிற்க முடியாது, நானும் போக முடியாது, கலவரம் நடந்தால் என்ன செய்வது? என் கவனம் சிதறுவது எனக்கே தெரிந்தது. ’மிஸ். கயல், நீங்கள் நிலையாக இல்லை, ஹேவ் சம் டீ’ என்றார் நிர்வாக இயக்குனர்.’ நான் அங்கு இருக்க வேண்டிய அவசியத்தை அவர் சொல்லும் முறை, நான் அவசரத்தில் இருக்கிறேன் என்று சொல்லக் கூடாத நிலை. தவித்தேன், நல்ல வேளை, சவிதாவின் தாய் இசையையும் அழைத்துக் கொண்டு வீட்டில் விட்டுவிட்டதாகவும், தன் வசம் இருக்கும் சாவியால் வீட்டிற்குள் போய்விட்டதாகவும் இசை சொல்ல நிம்மதியாக இருந்தது.

அலுத்துச் சலித்து திரும்புகையில் எங்கள் வளாகத்தின் வாசலில் ஒரே கூட்டம். மேகத்திலிருந்து விடுபட்ட நிலவு போல என் எதிர் வீட்டு அம்மா நின்று கொண்டிருந்தார். ’யாரப் பாத்து என்னடா சொன்ன? என்ன உன் நெனப்பு? பொசுக்கிடுவேன், பாத்துக்க’ என்று கத்திக் கொண்டிருந்தார். காவலாளியை இரண்டு பேர் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

Image result for watchman misbehaving in a flat in chennai

“அப்பவே சொன்னேன், தனிப்பட்ட மொறையில வாட்ச்மேன் வேணாம், செக்கூரிடி ஏஜென்சி மூலமா  வைப்போம்னு; யாரும் கேட்டாத்தானே” என்றார் ஒருவர்.

”இப்படியும் சொல்வீங்க, மெய்ன்டினன்ஸ் ஏத்தினா கத்துவீங்க”

“சரி சார், அதையெல்லாம் அப்புறமா பேசலாம்; இவன என்ன பண்ணப் போறீங்க?”

‘போலீஸ்ல சொல்லிடுவோம்.’

“ஐயா, என்னய போலீசலெல்லாம் மாட்டிடாதீங்க. நான் மன்னிப்பு கேக்கறன், அம்மா கிட்ட. புத்தி பிசகி செஞ்சுட்டம்மா, எனக்கே அவமானமா இருக்கும்மா, மன்னிச்சுடுங்க. இந்தத் தெருவுக்குள்ள இனி நொழைய  மாட்டன்.”

“அவன கணக்கு தீத்து அனுப்பிடுங்க, வேற ஆள பாத்து வையுங்க” என்ற அந்த அம்மா எங்கள் ப்ளாக்கை நோக்கி நடந்தார்.

என் ஃப்ளாட் வாசலில் தென்னம் விளக்குமாறு குச்சிகள் கிடந்தன. என் வீட்டில் தென்னம் துடைப்பம் கிடையாதே, என்னதான் நடந்திருக்கும்? இசை என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டு அழுதாள்.

 “பயந்திருக்கா, அவன வெரட்டியாச்சு, இனி வர மாட்டான், கதவ இன்னாருன்னு பாக்காம தொறக்காத இனி”என்ற அந்த அம்மா என்னைப் பார்த்து.

“ஊமைக் காயத்தை உண்மையாச் சொல்லணும்னு இல்ல; சொல்ல முடியாத நெஜங்கூட நல்லது  தான். எத்தனையோ காயங்கள், யாரோ பேசி சச்சரவு தீந்தா போறாதா? போ போ உள்ள. எந்தக் கெடுதலும் நடக்கல”

அந்த அம்மாவின் கதவு மூடியதில் என் காயங்கள் ஆறின.   

 

பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு

எம்ஜிஆர், சிவாஜி, கமல், மணிரத்னம் ஆகியோர் முயற்சி செய்து முடியாமல் போனது பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாகக்  கொண்டுவருவது !

Related image

 Image result for பொன்னியின் செல்வன் -கமல்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மணிரத்னம்  அவர்கள் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க மீண்டும் முயற்சி  செய்கிறார் என்பது  தற்போதைய சுடும் செய்தி! 

Image result for பொன்னியின் செல்வன் -கமல்

தமிழ்  ஹிந்து செய்தி:  

விஜய், விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரை வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா இணைந்து இப்படத்தை தயாரித்தது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் நிஜமான மல்டி ஸ்டாரர் படம் என்று கொண்டாடினார்கள். தற்போது தனது நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இப்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம்.

கடந்த முறை விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோரை வைத்து முதலில் பேச்சுவார்த்தை தொடங்கினார். ஆனால், எதிர்பார்த்ததை விட பட்ஜெட் அதிகமானதால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.

இப்போது விஜய், விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரை அணுகியிருக்கிறார் மணிரத்னம். இந்த முறை படமாக்குவதில் தீவிரம் காட்டுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். விஜய்யை தன் அலுவலகத்துக்கு அழைத்து, போட்டோ ஷூட் ஒன்றையும் முடித்திருக்கிறார் மணிரத்னம். கதாபாத்திர வடிவமைப்பு எப்படியிருந்தால் அவருக்குப் பொருந்துகிறது என்பதை இதில் முடிவு செய்ததாகத் தெரிவித்தனர்.

விக்ரம் மற்றும் சிம்பு இருவரையும் வைத்து விரைவில் இதே போன்றதொரு போட்டோ ஷூட்டும் விரைவில் நடக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தையும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தன்னுடன் இணைந்து தயாரித்த லைகா நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்முறை தனது ‘பொன்னியின் செல்வன்’ முயற்சியில் வெற்றி பெறுவாரா என்பது, இனிமேல் நடைபெறப்போகும் சம்பவங்களை வைத்து தெரிந்துவிடும் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.

பொன்னியின் செல்வனை மணிரத்னம் ஏற்கனவே எடுத்து முடித்தது போல் நாம் கற்பனையில்  ஐந்து வருடத்து முன் சொன்ன வீடியோ இதையும் பார்த்து ரசியுங்கள்

 

 

அம்மா கை உணவு (13) – வெண்பொங்கல் வேண்டுதல் – சதுர்புஜன்

Image result for வெண்பொங்கல்

நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 

 1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018 .
 2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
 3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
 4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
 5. ரசமாயம் – ஜூலை 2018
 6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
 7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
 8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018   
 9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
 10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
 11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
 12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019

 

 

வெண்பொங்கல் வேண்டுதல்

 

இட்லி தோசை என்று எதை நீட்டினாலும்

இருக்கட்டும் என்று சொல்லி சற்றுத் தள்ளி வைப்பேன்.

பொங்கலென்று சொல்லிவிட்டால் போதுமடா போதும்

பொங்கி வரும் பசி எனக்கு பிடுங்கித் தின்னத் தோணும்.

 

பொங்கலன்று நாம் பொங்கும் தித்திப்(பு) பொங்கலன்று –

நான் சொல்லும் பொங்கல் நல்ல விறுவிறு வெண்பொங்கல்.

பார்த்தாலே பசி எடுக்கும் கப கபவென எரியும் –

உண்ண உண்ண உயிர் சிலிர்க்கும் ருசி உனக்குத் தெரியும்.

 

கொதிக்க கொதிக்க வேணுமடா வெண்பொங்கல் எனக்கு –

கரண்டி நெய்யை மேலே விட்டு கிளறிக்கொண்டு கொட்டு !

உப்பும் மிளகும் தூக்கலாக இருக்க வேணும் எனக்கு –

சப்புக் கொட்டி சாப்பிடவே செய்யும் இந்த சரக்கு.

 

குளித்து முடித்து வந்து விட்டால் பசியும் வந்து சேரும் –

பொங்கல் வாசம் வந்து விட்டால் கையும் வாயும் பேசும்.

சட்னி சாம்பார் எதுவென்றாலும் சேர்த்தடிக்கத் தோணும்

கொத்சு என்று சொன்னால் மனசு குட்டிக்கரணம் போடும்.

 

பெருமாள் கோயில் பொங்கலென்றால் பெருமை உனக்குப் புரியும்

பக்தி கொஞ்சம் பசியும் கொஞ்சம் போட்டு வயிற்றைக் கிளறும்

அம்மா கையால் செய்த பொங்கல் மீண்டும் எனக்கு வேணும்

தவம் இருந்தால் கிடைத்திடுமோ மீண்டும் அந்தச் சொர்க்கம்.

 

பொங்கலோ பொங்கல் என்று உரக்க நீயும் சொல்லு

வெண்பொங்கல் வீட்டில் செய்தால் வயிறும் மனமும் நிறையும்

முந்திரியைப் போட்டு நெய்யில் வறுவறுன்னு வறுத்து

வெண்பொங்கல் வேண்டுமம்மா – வேண்டுதல் நிறைவேற்று.

 

 

குவிகம் பொக்கிஷம் – பைத்தியக்காரி- மாப்பஸான் தமிழில்: புதுமைப்பித்தன்

Related image
“ஆமாம், நீ சொல்வது முன்பு பிரான்சிற்கும் ருஷியாவிற்கும் சண்டை நடந்ததே, அப்பொழுது நடந்த பயங்கரமான சம்பவத்தை என் நினைவிற்குக் கொண்டு வருகிறது” என்று கூறத் தொடங்கினார் முஸே டி’ என்டோலின்.

பாபர்க் கு கார்மீலில் இருக்கிற எனது வீடுதான் உங்களுக்குத் தெரியுமே! ருஷ்யர்கள் படையெடுத்து வந்தபொழுது எனது பக்கத்து வீட்டில் ஒரு பைத்தியக்காரி வசித்து வந்தாள். Maupassant_2அவளுக்குப் பைத்தியம் ஏற்பட்டதே ஒரு பெருங்கதை. இந்த உலகத்திலே துன்பத்தில் யாருக்குத்தான் பங்கு கிடையாது! அந்த ஸ்திரீக்கு துன்பம் தனது ஏகபோக அன்பைச் சொரிந்தது. அவளது இருபத்தைந்தாவது வயதில் தகப்பனாரை இழந்தாள். அவர் இறந்த ஒரு மாதத்திற்குள் அவள் புருஷனும், அப்பொழுதுதான் பிறந்த குழந்தையும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள். இப்படி ஒன்றன்பின் ஒன்றாக வந்த துன்பத்தின் கடாக்ஷத்தால் அவள் படுத்த படுக்கையாகி, பல நாட்கள் ஜன்னி கண்டு பிதற்றினாள். இதன் பிறகு கொஞ்ச நாள் சோர்வும், அமைதியும் அவளைக் கவ்வின. அசையாது அலுங்காது, படுத்த படுக்கையாக, வெறுமெனக் கண்களை மிரள மிரள விழித்துக்கொண்டு கிடந்தாள். உடம்பு குணமாகி விட்டது என்று நினைத்து அவளைப் படுக்கையைவிட்டு எழுந்திருக்கும்படி செய்ய முயற்சித்தார்கள். ஆனால், அவளைத் தூக்க முயன்றவுடன், அவள் கூச்சலிட்டு, கொல்லப்படுபவள் போல் ஓலமிடத் தொடங்கியதால், குளிப்பாட்டி உடைகளை மாற்றுவதற்கு மட்டுமே அவளைப் படுக்கையிலிருந்து எடுக்கவும், மற்றபடி படுத்த படுக்கையாகவே கிடக்கவும் அனுமதித்தார்கள்.

 வயது முதிர்ந்த வேலைக்காரி ஒருத்தி அவள் பக்கத்தில் இருந்து அவளுக்கு வேண்டிய உதவியைச் செய்து கொண்டிருந்தாள்.

அந்தப் பிரமை மண்டிய உள்ளத்தில் என்ன ஏற்பட்டுக் கொண்டிருந்தது என்று ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது. அவள் மறுபடி பேசியதே கிடையாது. என்ன நடந்தது என்று திட்டமாக அறியாமல் வெறும் துன்பக் கனவு கண்டு கொண்டிருக்கிறாளா? அல்லது அவளது கலங்கிய மூளை சலனமற்றுவிட்டதா? இப்படிப் பதினைந்து வருஷங்கள் கழிந்தன. இத்தனை காலமும் அவள் உயிர்ப் பிணமாகக் கிடந்தாள்.

சண்டை ஆரம்பித்தது. டிஸம்பரில் ஜெர்மானியர் கார்மீலுக்குள் வந்தனர். எல்லாம் நேற்று நடந்த மாதிரி இருக்கிறது. அப்பொழுது நல்ல மாரிக்காலம். ஜலம் கல்லைப் போல் உறைந்து பாறைகளைக்கூட உடைத்துத் தகர்த்துவிடும் போல் இருந்தது.

எனக்கோ, அங்கு இங்கு அசைய முடியாதபடி கீல்வாதம். நாற்காலியில் சாய்ந்தபடியே அவர்கள் தட்தட் என்று கால் வைத்துப் போகும் சப்தத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

ராணுவப் படை இடைவிடாமல் சென்று கொண்டேயிருந்தது; தட்தட் என்ற சப்தம் காதில் இடித்துக் கொண்டேயிருந்தது. ராணுவ அதிகாரிகள் தங்கள் படைகளைப் பிரித்து, உணவு கொடுக்கும்படி, வீட்டுக்குப் பத்து இருபது பேராக எங்கள் ஊர்க்காரர் மீது சுமத்திவிட்டனர். எனது பக்கத்து வீட்டிற்குப் பன்னிரண்டு பேர் சுமத்தப் பட்டனர். அதில் ஒருவன் ராணுவ அதிகாரி – மேஜர் – வெறும் தடியன், முரடன்.

கொஞ்ச நாட்களுக்கெல்லாம் அமைதியாக நடந்து வந்தது. பக்கத்து வீட்டுக்காரி நோயாளி என்று அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டது. முதலில் அவன் அவளைக் கவனிக்கவில்லை. கொஞ்ச நாட்களில் அவர்கள் பார்க்க முடியாத ஸ்திரீ என்பது அவனது மனத்தை உறுத்தியது. அவளுக்கு என்ன வியாதி என்று கேட்டான். தீராத் துயரத்தால், பதினைந்து வருஷங்களாகப் படுத்த படுக்கையாக இருக்கிறாள் என்று கூறினார்கள்; அவன் நம்பவில்லை; அந்தப் பைத்தியம் தன் மனத்தில் இதைப் பெருமை என்று நினைத்துக்கொண்டு, ‘படுக்கையை விட்டு எழுந்திருக்க மாட்டேன்’ என்கிறது என்று எண்ணிக்கொண்டான். இப்படி நோயாளி என்று வேஷமிட்டு, பிரஷ்யர் முன்பு வராமல், ஏமாற்ற முயலுகிறாள், அடைந்து கிடக்கிறாள் என்று எண்ணிவிட்டான்.

அவன், அவளைப் பார்க்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி, அவள் அறைக்குச் சென்றான்.

“எழுந்து கீழே வா! நாங்கள் எல்லோரும் உன்னைப் பார்க்க வேண்டும்” என்று முரட்டுத்தனமாகக் கூறினான்.

அவள் பதில் சொல்லாமல் மிரள மிரள விழித்தாள்.

“அதிகப் பிரசங்கித்தனத்தை நான் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டேன். மரியாதையாக நீ எழுந்து நடந்து கீழே வராவிட்டால், உன்னை நடக்கச் செய்ய எனக்குத் தெரியும்!” என்றான் அந்த முரட்டு மேஜர்.

அவள் அவனைக் கேட்டதாகத் தெரியவில்லை. சலனமற்றுக் கிடந்தாள். அவள் பேசாமல் இருப்பதே தன்னை அவமரியாதை செய்வது என்று நினைத்துக்கொண்டு, “நாளைக்கு நீ கீழே இறங்கி வராவிட்டால்…” என்று தலையை அசைத்து உருட்டி விழித்துவிட்டு அவ்விடத்தை விட்டு வந்துவிட்டான்.

மறுநாள் கிழட்டு வேலைக்காரி பயந்துபோய் அவளுக்கு உடைகளை அணிவிக்க முயன்றாள். அதற்குப் பைத்தியம் கூச்சலிட்டுக்கொண்டு தன் முழு பலத்தோடும் முரண்டியது.

அந்த முரடன் சப்தத்தைக் கேட்டு மேலே ஓடினான். வேலைக்காரி அவனை இடைமறித்து, காலில் விழுந்து, “அவள் வரமாட்டேன் என்கிறாள், எஜமான். மன்னிக்க வேண்டும். துயரத்தில் மூளை கலங்கியவள்” என்றாள்.

 படைவீரன் கோபத்தால் துடித்தாலும், சிறிது தயங்கினான். அவளைப் பிடித்து இழுத்து வரும்படி உத்தரவிடவில்லை.

பிறகு, உடனே கலகலவென்று சிரித்துவிட்டு, ஜெர்மன் பாஷையில் உத்தரவிட்டான். சிறிது நேரங் கழித்து, சில சிப்பாய்கள் ஒரு படுக்கையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்கள். அந்தக் கலைக்காத படுக்கையில், பித்துக்குளி, மௌனமாக, என்ன நடக்கிறது என்பதைப் பற்றிச் சிறிதும் கவனிக்காது, படுத்துக் கிடந்தது. படுக்கையைவிட்டு எழுப்பாதவரை அதற்கு என்ன கவலை? அவள் பின்பு ஒரு சிப்பாய் பெண்கள் உடையை எடுத்துக்கொண்டு நடந்தான்.

அந்த முரட்டு மேஜர், “நீயாக உடுத்திக்கொண்டு நடந்து வருகிறாயா, இல்லையா? அதைத்தான் பார்க்கிறேன்!” என்று கைகளைத் தேய்த்துக் கொண்டான்.

இந்தக் கூட்டம் இமாவில் காட்டுப் பக்கம் சென்றது. இரண்டு மணி நேரங் கழித்து, சிப்பாய்கள் மட்டும் தனியாகத் திரும்பினார்கள். பைத்தியக்காரி என்னவானாள் என்பது தெரியவில்லை. அவளை என்ன செய்தார்கள்? எங்கு கொண்டு சென்றார்கள்? ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது.

பனி அதிகமாகப் பெய்தது. எங்கு பார்த்தாலும் உறைபனி. காடுகள் பனித் திரைகள் மாதிரி நின்றன. ஓநாய்கள் வீட்டுக் கதவண்டைவரை வந்து ஊளையிடத் தொடங்கின.

அந்தப் பைத்தியத்தின் கதி என் சிந்தனையைவிட்டு அகலவில்லை. பிரஷ்ய அதிகாரிகளிடம் இதற்காக மனுச்செய்து கொண்டேன். அதற்கே என்னைச் சுட்டுவிட முயற்சித்தார்கள். வசந்த காலம் வந்தது. வீட்டுக்குத் தலைவரியாகச் சுமத்தப்பட்ட படை சென்றுவிட்டது. ஆனால், எனது பக்கத்து வீடு அடைத்தபடியே கிடந்தது. வீட்டைச் சுற்றிய தோட்டத்தில் புல்லும் பூண்டும் கண்டபடி வளரத் தொடங்கின. கிழட்டு வேலைக்காரி மாரிக் காலத்திலேயே இறந்துவிட்டதால், அந்தச் சமாசாரத்தைப் பற்றி ஒருவரும் கவலை கொள்ளவில்லை. நான் ஒருவன் தான் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். அவளை என்ன செய்தார்கள்? அவள் காட்டு வழியாகத் தப்பித்துக் கொண்டாளா? யாராவது அவளைக் கண்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்களா? அவள்தான் பேசாமடந்தையாச்சே; சந்தேகம் தீர்ந்தபாடில்லை. காலந்தான் சிறிது சிறிதாகக் கவலையைக் குறைத்தது.

அடுத்த இலையுதிர் காலம் வந்துவிட்டது. காட்டுக் கோழி ஏராளம். கீல் வாதத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் காட்டிற்குச் சென்று ஐந்நூறு பட்சிகளைச் சுட்டு வீழ்த்தினேன். அதில் ஒன்று ஒரு குழிக்குள் விழுந்துவிட்டது. அதை எடுக்கப் பள்ளத்தில் இறங்கினேன். அது ஒரு மண்டையோட்டின் பக்கத்தில் கிடந்தது. உடனே அந்தப் பித்துக்குளியின் ஞாபகம், என் மனத்தில் எதை வைத்தோ அடித்தது போல் எழுந்தது. அந்த நாசமாய்ப் போன வருஷத்தில் எத்தனை பேரோ இறந்திருக்கலாம். ஆனால் அந்தப் பித்துக்குளியின் மண்டையோடுதான் இது என்று நான் திட்டமாகக் கூறுவேன்.

உடனே எல்லாம் ஸ்பஷ்டமாக விளங்கிவிட்டது. அந்தக் குளிரில் யாருமற்ற காட்டில் படுக்கையை வைத்துவிட்டு வந்துவிட்டார்கள். பித்துக்குளி, மனப் பிராந்தியைப் பிடித்துக்கொண்டு, குளிரில் விறைத்துவிட்டது. பனி அவளை மூடியது.

ஓநாய்கள் அவளைத் தின்றன. பட்சிகள் மெத்தைப் பஞ்சை எடுத்துக் கூடு கட்டின. அந்த மண்டையோட்டிற்கு மட்டும் ஒரு புழுவும் குடியிருக்க வரவில்லை. அவள் அஸ்தியை நான் சேகரித்து, ‘நமது சந்ததி இனியாவது யுத்தத்தை அறியாமல் இருக்க வேண்டும்’ என்று அதன் மீது பிரார்த்தித்தேன்.

ரகுவம்ஸம்

 

By Sesa Dasa Here are three questions for you to ponder, dear reader: First, which came first, the chicken or the egg? Second, what do a highway billboard, a small town storefront, and the Greek ph…

 சூர்ய குல  மன்னர்  ஸ்ரீ ராமபிரானின் பரம்பரையைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!

காளிதாசர் ரகுவம்ஸம்  என்று ஒரு காவியம் படைத்திருக்கிறார். 

1. ப்ரம்ஹாவின் மகன் மரீசி
2. மரீசி யின் மகன் காஷ்யப்
3. காஷ்யப் மகன் விவஸ்வான்
4. விவஸ்வான் மகன் வைவஸ்வத மனு
5. வைவஸ்வத மனு மகன் இக்ஷ்வாகு (இவர் அயோத்தியை உருவாகினார்).
6. இக்ஷ்வாகு மகன் குக்ஷி.
7. குக்ஷி மகன் விகுக்ஷி
8. விகுக்ஷி மகன் பான்
9. பான் மகன் அன்ரன்யா
10. அன்ரன்யா மகன் ப்ருது
11. ப்ருது மகன் த்ரிஷங்கு (இவருக்காக விஸ்வாமித்ரர் ஸ்வர்கம் படைத்தார்)
12. த்ரிஷங்கு மகன் துந்துமார்
13. துந்துமார் மகன் யுவனஷ்வா
14. யுவனஷ்வா மகன் மாந்தாதா
15. மாந்தாதா மகன் சுசந்தி
16. சுசந்தி மகன் துவசந்தி மற்றும் ப்ரசந்ஜீத்
17. துவசந்தி மகன் பரத்
18. பரத் மகன் அஸித்
19. அஸித் மகன் ஸாகர்
20. ஸாகர் மகன் அஸமஞ்ச
21. அஸமஞ்ச மகன் அன்ஷுமான்
22. அன்ஷுமான் மகன் திலீபன்
23. திலீபன் மகன் பாகீரதன் (கங்கையை வானுலகிலிருந்து பூலோகம் தந்தவன்)
24. பாகீரதன் மகன் காகுஸ்தன்
25. காகுஸ்தன் மகன் ரகு (காளிதாஸன் ரகுவம்ஸம் ) 
26. ரகு மகன் ப்ரவ்ருத்
27. ப்ரவ்ருத் மகன் ஷம்கன்
28. ஷம்கன் மகன் ஸூதர்ஷன் 
29. ஸூதர்ஷன் மகன் அக்னிவர்மன்
30. அக்னிவர்மன் மகன் சிஹ்ராக்
31. சிஹ்ராக் மகன் மேரு
32. மேரு மகன் பரஷுக்ஷுக்
33. பரஷுக்ஷுக் மகன் அம்பரீஷ்
34. அம்பரீஷ் மகன் நகுஷ்
35. நகுஷ் மகன் யயாதி
36. யயாதி மகன் நபாங்
37. நபாங் மகன் அஜ்
38. அஜ் மகன் தஸரதன்
39. *தஸரதன் மகன் ராமன்,லக்ஷமணன்,பரதன்,சத்ருக்னன்*
40. ராமன் மகன் லவன் மற்றும் குசன்

பிரும்மாவின்  39 வது தலைமுறை ஸ்ரீ ராமர்

 

(நன்றி: இணையதளம்)