சென்னையின் 375 வது பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கூறி அறிவுரை டிப்ஸ் வழங்கும் கமலஹாசன்!

கமல் கூறியதாவது : 

 

ஒரு கடற்கரை கிராமமாகத் தொடங்கி பல படையெடுப்பிற்குப் பின் ஆங்கிலேயர்கள் தக்க வைத்துக் கொண்ட ஒரு அழகான தீவு சென்னை. இரண்டாற்றங்கரை என்று ஸ்ரீரங்கத்தைச்  சொல்வார்கள். சென்னையும் இரண்டாற்றங்கரை தான். அதற்கு இன்று 375 வயது ஆகியிருக்கிறது. இந்த இளம் தாயை, இரண்டு ஆறுகள் கொண்ட இரண்டாற்றங்கரையை, இரண்டு சாக்கடைகள் கொண்ட நகரமாக்கிய அவப்பெயர் நம் தலைமுறைக்கு உண்டு. இதை மாற்றும் திறமையும் நமக்கு உண்டு. அதைச்  செய்தால் சரித்திரத்தில் நாம் இரண்டு நதிகளை சுத்திகரித்துப் புதுப்பித்த வித்தகர்களாக போற்றப்படுவோம். இல்லையென்றால் இக்காலகட்ட நம் சரித்திரம் நல்ல இரண்டு நதிகளை சாக்கடையாக்கிய ஜனக்கூட்டத்தின் சரித்திரமாக எழுதப்படும். அதை நினைவில் வைத்துக்கொண்டு பெற்றதைக் கொண்டாடுவோம்! கற்றதைப் போற்றுவோம்! பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது சென்னைக்கு! 

https://api.soundcloud.com/tracks/164137374/stream?client_id=3cQaPshpEeLqMsNFAUw1Q?plead=please-dont-download-this-or-our-lawyers-wont-let-us-host-audio

கமல் பகிர்ந்ததைக் கேட்டீர்கள்!

இப்போ  R J  பாலாஜி அந்தக் கால சென்னை  மன்னிக்கவும் மெட்ராஸ் நினைவுகளை எப்படிக் கலாய்க்கிறார் என்று கேளுங்கள்!

25 முதல் 60 வயது வரை இருக்கும் சென்னை வாழ் மக்கள் அனைவரும் பாலாஜி சொல்வதை 80 சதவீதம் ஒத்துக் கொள்வீர்கள்!

இன்னா பிரதர் ! சும்மா செந்தமில்லே பேசிகினு கீரொம்! பேஜாரா இல்லே! நம்ம குஜாலுக்கா மெட்ராஸ் தமில்லே பேசுவோம்!

இத்தப்பாருபா வெக்கத்தை! 

இத்தெல்லாம் பேச இப்ப கண்டிக்கு ஆளே இல்லே நைனா! இத்து  ஒண்ணும் ராங்க் இல்லே! அப்பாலே பாஷையே புட்டுக்கும் போலருக்கு! நாம தான் வாத்யாரே இத்துக்கு உசிரு குடுக்கணும்!

நல்லா படி நைனா! மஜாவா இருக்கும்!

மெ ட்ராஸ் பாஷை வார்த்தைகள் தெரிந்துகொள்ள /நினைவில் கொள்ள மேலே இருக்கும் பகுதியைக் க்ளிக் செய்யுங்கள் !படிக்க வசதியாக இருக்கும்! மறுபடியும் க்ளிக் செய்தால் குவிகத்திற்குச் செல்லலாம்!

இதில் இல்லாத புதிய வார்த்தைகளைக் கண்டு  பிடிப்பவர்களுக்குப் பரிசு உண்டு. 

எம்மதமும் நல் மதம்

image

image

ராமருக்கு          கோயில்     கட்டப்       போறேண்டா – அதில்
பாபருக்கு          சிலை       வைக்கப்    போறேண்டா !
ஜீசஸைக்         கும்பிடத்    தான்        போறேண்டா – அவர்
தேஜஸுக்கு        மண்டியிட   வாறேண்டா !
அல்லாவைத்      தொழுதிடத்  தான்        போறேண்டா – அவர்
எல்லார்க்கும்       நல்லதையே தர்வார்டா !

கண்ணன்    சொன்ன     கீதையைத்தான்    கேளேண்டா
கர்த்தரின்        பைபிளைத்தான்    படியேண்டா      
அல்லாவின்    குரானைத்தான்     ஒதேண்டா
எல்லாமே   ஒண்ணு     தாண்ணு          புரியும்டா !

கணபதிக்குத்       தோப்புக்கரணம்    போடேண்டா
மரண பயம்       உன்னை விட்டு    போகும்டா !
மாதாகோவிலில்      மெழுகுவர்த்தி     ஏத்தேண்டா
மனசில் உள்ள     இருட்டெல்லாம்    மறையும்டா
அஞ்சு வேளை      பள்ளி வாசல்      செல்வோம்டா
அஞ்சுகிற          தீமையெல்லாம்    தொலையும்டா !

ஆண்டவன்      எல்லோருக்கும்    ஒண்ணு     ஒண்ணு –   அதை
அறியாதவன்       தலையிலெல்லாம்  மண்ணு     மண்ணு           தெரிஞ்சுக்கோ      தெரிஞ்சுக்கோ      நல்லாத்     தெரிஞ்சுக்கோ
புரிஞ்சுக்கோ       புரிஞ்சுக்கோ       எல்லாம்     புரிஞ்சுக்கோ !!

 

க்ளிக் செய்யுங்கள் படிக்க வசதியாக இருக்கும்! மறுபடியும் க்ளிக் செய்தால் குவிகத்திற்குச் செல்லலாம்!

சில படைப்புகள் – கிருபானந்தன்

  

image

ஒரு சிறுகதை, நாவல், (சில சமயம்) கவிதை படித்தால் ஒரு அபிப்பிராயம் தோன்றுவது சகஜம். சில சமயங்களில் அவற்றை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும்போது பெரும்பாலும் மேலும் எதைப் படிக்கலாம் என்ற ஐடியாவும் கிடைக்கும்.

சுமார் முப்பது ஆண்டுகளுக்குமுன் திரு குமரி அனந்தன் எழுதிய நீங்களும் பேச்சாளர் ஆகலாம் என்ற புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் சின்ன அண்ணாமலை அவர்கள் பேசும்போது பேசுவது ஒருகலை என்றால் பேச்சைக் கேட்பதும் ஒரு கலை, சமையல் ஒரு கலை என்றால் சாப்பிடுவதும் ஒரு கலை என்றார். அதுபோல எழுதுவது ஒரு கலை என்றால் விமர்சனமும் ஒரு கலை தானே?.

கருத்து சொல்லும்போதைவிட எழுதும்போது மிகக் கவனமாய் இருக்கவேண்டி உள்ளது. பல விமர்சகர்கள் “வேஸ்ட்” “தண்டம்” என்றெல்லாம் எழுதுவது படைத்தவரை மட்டுமல்லாமல்  அதை ரசிப்பவரையும் மதிப்பிடுவது என்றாகிறது.  ஒரு பிரபல தெலுங்கு எழுத்தாளர் ஒரு நேர்காணலில் ஒரு கதை எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வது சரி, ஆனால் நன்றாக இல்லை என்று சொல்லவேண்டாமே என்றார்..

ஒரு பேராசிரிய நண்பர்  “தரமில்லாப் படைப்புகளை பாராட்டுவது அந்த எழுத்தாளர் வளர விடாமல் தடுக்கிறது” என்று சொல்லுவார். விமர்சகர்கள் சிலரை குட்டிக் கெடுக்கிறார்கள் அல்லது சிலரை  நக்கிக் கெடுக்கிறார்கள் என்று மலையாளத்தில் ஒரு பேச்சு உண்டாம்

ஒருமுறை எழுத்தாளரின் முன்னிலையில் நடந்த விமர்சன நிகழ்ச்சியில்  விமர்சனங்கள் சற்று கடுமையாகவே இருந்தன. அந்த எழுத்தாளரும் சற்று கடுமையாகவே மறுமொழி அளித்தார்.

நண்பர்  ஒருவர்  அச்சமயம். படைப்பு வெளியான பிறகு அது பொதுவில் வந்துவிடுகிறது. சாதகமாகவோ பாதகமாகவோ விமர்சிக்கப்பட்டால் எழுத்தாளர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கோபித்துக்கொள்வது ஏன்? மற்றவர்கள் விமர்சிக்கக்கூடாது என்று எதிர்பார்த்தால் நீங்கள் இனி உங்கள் டைரியிலேயே எதுவேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள் என்று ஒரு போடுபோட்டார்.

படைப்பு பற்றிய அபிப்ராயங்களைச் சொல்லாமல் ‘பிரிண்ட் நல்லாயிருக்கு. பெரிய எழுத்தில் போட்டிருப்பது படிக்க ரொம்ப சௌஹரியம்’ என்று நழுவுவதையும் பார்த்திருக்கிறோம். சிலர் “கோட்பாடு”, “உத்தி”, “உலக இலக்கியத்தரம்”, “கட்டமைப்பு” என்றெல்லாம் வேறு அலைவரிசையில் எழுதுவார்கள். அதெல்லாம் எனக்கு “bouncer”

எந்த ஒரு படைப்பாளியும் தனது படைப்புகள் பேசப்பட வேண்டும் என விரும்புவது இயற்கை. அதுபோல் விமர்சகரும் தனது விமர்சனங்கள் பலரைப் போய்ச்சேர வேண்டும்  என விரும்புகிறார். விமர்சனங்களும் விமர்சிக்கப்படுகின்றன.

 சில வலைப்பூக்களில்  வந்த விமர்சன  மறுமொழிகளுக்கு விமர்சகர் காட்டமாக பதில் அளித்திருந்தார். ஒரு விமர்சகர் தனது விமர்சனம் விமர்சிக்கப்படுவதை விரும்பாதது ஒரு தமாஷ்தான்.

image

இதன் பின்னணியில் ஒரு விமர்சனத் தொடர் …

முதலில் ந.பிச்சமூர்த்தி. – அடுத்த இதழில்  பார்ப்போம்! 

கோகுலாஷ்டமி

கோகுலாஷ்டமி -ஜன்மாஷ்டமி என்றெல்லாம் கொண்டாடப்படும் கிருஷ்ணனின் பிறந்த நாள்வைபவத்தில் அவர் அவதரித்த மதுராவில் – அவர் தவழ்ந்த கோகுலத்தில்- அவர் விளையாடிய பிருந்தாவனத்தில் நமது மனம்  என்றென்றும் ஐக்கியம் செய்து கொள்ள விழைகிறது. 

மதுரா- பிருந்தாவனில் கட்டப்பட்டுள்ள புதிய வண்ண வண்ணக் கலவையான ‘ப்ரேம் மந்திர்’ என்றழைக்கப்படும் கிருஷ்ணன் கோவில் – கிருபாள்ஜி அவர்களால் கட்டப்பட்டது. அந்த அழகிய அன்புக் கோவிலில் அமைந்துள்ள சிற்பங்களும் ஓவியங்களும் நமது குவிகத்தை அலங்கரிக்கின்றன. 

பொன்மகள் வந்தாள் நித்யா சங்கர்

image

மாமுனிவர் பிருகுமகளாம் திருமகளே போற்றி 
  கமலத்தை  யுறைவிடமாய்க் கொண்டவளே போற்றி 
எம்பெருமான் திருமாலின் ஈரமிகு நெஞ்சினிலே 
  கொலுவிருக்கும் கோதையே  குலமகளே  போற்றி 
தாமோதரன் மனையாளே அருகிருந்து காப்பவளே  
  அன்பின் திருவுருவே குணவதியே போற்றி 
தேமதுர இன்னிசையின் நாதத்தின் வடிவினளாய்  
  திகட்டாத இனிமையைத் தருபவளே போற்றி 

இருள்நீக்கு  மொளிவடிவா  யிருப்பவளே போற்றி 
  செல்வங்க  ளனைத்திற்கும் தலைவியே போற்றி 
தரணிவாழ் மாந்தர்கள் வானுறை தேவர்கள்
  பரணிபாடி கொண்டாடும் நாயகியே போற்றி
அருள்சொரியும் எழில்கொஞ்சும் கமலக்கண் பார்வையினால்
  உலகினையே  காக்கின்ற தேவிநின்  தாள் போற்றி 
சார்ங்கமெனும் வில்லினையே ஆயுதமா யேந்தி நிற்கும்
  திருமாலின் துணையாளே திருமகளே போற்றி 

செந்தாமரை மலர்களது மிருதுவான இதழ்கள் போல்
  மெலிதான எழிலான கண்களையு  முடையவளே  
சிந்தையெலா முனைநினைத்து ஆழ்மனதில் பொங்கிவரும் 
அன்பையும் பக்தியையும் கரைத்தே  யுருவாக்கி 
அந்தியிலும் காலையிலும் அனுதினமும் துதிப்போர்க்கு
  செல்வங்கள் பதவிகள் ஆனந்தம் வந்தெய்தும்
சிந்தியாது செய்துவிட்ட பாவங்கள் மறைந்துவிட
  பூஜித்த பலன்களவை பக்தரெமைக் காக்கட்டும்   

புதன்

பூரிக்க       வைக்கும்    புதன்
பொன்       கிட்டியும்    கிட்டாத     புதன்
நல்லவை   யாவும்      துவங்கும்   புதன்
புத்தியும்     சித்தியும்    சேர்ந்த      புதன்
புதுமையை  அள்ளித்     தந்திடும்     புதன்
ஐந்து       வேலை     நாட்களில்   நடுவன்     புதன்
ஏழு         வார        நாட்களில்   நடுவன்     புதன்
அப் புதன்    நாட்களில்   அற்புதம்     விளைந்திடும்
அப் புதன்    நாட்களில்   அர்த்தமும்        விளங்கிடுவோம்

சதமென்று   வந்தால்     சதா  சிவனைக்    காண்போம்
பதமென்று   வந்தால்     பரம  சிவனைக்    காண்போம்
நிதமென்று  வந்தால்     நீல   கண்டனைக்  காண்போம்
புதனென்று   வந்தால்     பூத   நாயகனைக்  காண்போம்
மத்த        மதியனை   தொழுது           வணங்குவோம்
சித்த        வாசனைப்   பணிந்து           வணங்குவோம்
புத்த        போதனை   உணர்ந்து          வணங்குவோம்
புதன்        நாயகனை   வணங்கி           வாழ்த்துவோம் 

முதல் தமிழ் பேசும் படம் வெளியானது  31 அக்டோபர் 1931 ல் ( தீபாவளி ரிலீஸ்) 

படத்தின் பெயர்:       காளிதாஸ்

image

image

காளிதாஸ் பற்றிய சில தகவல்கள்:

ஹீரோயின் : டி.பி. ராஜலக்ஷ்மி 

ஹீரோ: பி. ஜி‌. வெங்கடேசன் 

இசை : பாஸ்கர தாஸ் 

மற்ற நடிகர்: எல் வி பிரசாத்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழியில் பேசி நடித்த படம். அதனால் விமர்சகர்கள் இதை முதல் தமிழ்ப் படம் என்பதை விட முதல் பல-மொழிப் படம் என்றே சொல்வார்கள்.  

படப் பெட்டியை சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து சினிமா தியேட்டர் வரை நூற்றுக்கணக்கான மக்கள் ரோஜா மலர் தூவி ,  ஊதுபத்தி  கொளுத்தி,  தேங்காய் உடைத்துக் கொண்டாடினார்களாம்.(அந்த பக்தி இன்னும் தொடர்கிறது)  

8000 ரூபாயில் எடுத்த படம் 75000 கலெக்சன் கட்டியதாம்!

காளிதாஸ் படத்துடன் மக்கள் ரசனைக்காகக் குறத்தி நடனம் என்ற பிட்டும் போடப்பட்டதாம்!

image

குட்டீஸ் லூட்டிஸ் (கீதா சங்கர்)

இன்னொரு பொம்மை!

image

எனக்கு அந்த  பொம்மையை வாங்கிக் கொடு’ என்று பொம்மைக் கடையை விட்டு நகர மறுத்து அடம் பிடித்தான் எனது மூன்று வயது மகன்.

இதோ பார்! உனக்கு நான் இனி விளையாட்டு பொம்மை வாங்கித் தரமாட்டேன். நேற்று நான் ஒரு பொம்மை வாங்கித்தந்தேன். அதை வீடு  சேர்வதற்குள் உடைச்சுட்டே!’ என்று கூறியவளை இடை மறித்து ‘அதுதான்மா ..அது உடைஞ்சு போச்சே.. எனக்கு வேறொண்ணு வேண்டாமா.. அதுதான் வாங்கித் தரச் சொல்றேன்’ என்றானே பார்க்காலாம்!

க்ளிக் செய்யுங்கள் படிக்க வசதியாக இருக்கும்! மறுபடியும் க்ளிக் செய்தால் குவிகத்திற்குச் செல்லலாம்!

அன்றும் இன்றும் (கோவை சங்கர்)

image

சொல்வாக்கு கோடி பெறும் அந்தக்காலம் 

செல்வாக்கு  கோடி பெறும் இந்தக்காலம்

உண்மைக்கு உயிர் உண்டு அந்தக்காலம்

உண்மைக்கு உயிர் எங்கே  இந்தக்காலம்

நேர்மையது விலை போகாது அந்தக்காலம்

நேர்மைக்கும் விலை உண்டு இந்தக்காலம்!

image

வலி

image

தலையினை வலிப்போர்க்குத் தயவுடனே மருந்து கேட்டால்
மலையினின் பாறாங்கல்லைத் தலையிலே உருட்டி விட்டால்
 தலைவலி  பறந்து போகும் வாயினால் ஆவி போகும்

வயிற்றினை வலிப்போர்க்கு  வலியுடன் மருந்து கேட்டால்
கயிற்றினால் கட்டிவிட்டுக் கத்தியால் குத்திவிட்டால்
வயிற்று வலி பறந்து போகும் வாயினால் ஆவி போகும்.

கண்ணினை வலிப்போர்க்குக் கனிவுடனே மருந்து கேட்டால்
கள்ளிப்  பாலும் எருக்கம் பாலும் கலந்து ஒரு சொட்டு விட்டால்
உள்ளதும் நொள்ளையாகி ஒரு முழம் தள்ளிப் போமே 

காதிலே வலிப்போர்க்குக் கருத்துடனே மருந்து கேட்டால் 
காதினை விரித்து வைத்து ஊசியால் குத்திவிட்டால்
காதுவலி பறந்து போகும் செவிகள்  டமாரமாகும்  

காலினை வலிப்போர்க்குக் கடுப்புடனே மருந்து கேட்டால்
இரும்பினைப் பழுக்கக் காய்ச்சிக் காலினில் இழுத்து விட்டால் 
கால்வலி பறந்து போகும் வாயினால் ஆவி போகும்

முதுகினை வலிப்போர்க்கு முனகலுடன் மருந்து கேட்டால்
குப்புறப் படுக்க வைத்து சவுக்கினால் விளாறிவிட்டால் 
முதுகுவலி பறந்து போகும்  முதுகெலும்பு முறிந்து போகும் 

நெஞ்சினை வலிப்போர்க்கு நெகிழ்வுடன் மருந்து கேட்டால்
பஞ்சினைக் கட்டிவிட்டு நெருப்பையும் இட்டுவிட்டால்
நெஞ்சுவலி பறந்து போகும் நெஞ்சமே வெந்து போகும் 

ஐந்து

image

ஐந்தெழுத்து       மந்திரம்     நமசிவாய !
ஐந்து முதல்       ஐம்பது      வரை அதே  திரு மந்திரம் !
ஐம்பது முதல்     ஆயுள்      வரை அதே  மூல மந்திரம் !
ஐந்திலே           வளை      ஐம்பதில்    நிலை !
ஐந்திலே           கலை       ஐம்பதில்    கவலை !
ஐந்து             விரலும்     ஒன்றல்ல   ஒன்றாய்க்   கூடும்
அடிப்பதற்குக்      கூடும்       அணைப்பதற்கும்         கூடும்
ஐந்தை            பஞ்சமம்    என்பர் !

பஞ்ச  பாண்டவர்   பஞ்ச பூதம்  பஞ்ச மா    பாதகம் !
எண்களில்         ஐந்து       வரைதான்   கொஞ்சல்கள்
ஒண்ணு           ஒண்ணாக   இரண்டு     ரெண்டாக
மூன்று            மூணாக     நான்கு நாலாக
ஐந்து             அஞ்சாக     வழக்கில்    இருக்கும்

image

 
ராமாயணத்தில்     அஞ்சைப்    பற்றிப்      பாடல்
அஞ்சிலே ஒன்று   – வாயு –    அவர்       மைந்தன்    அனுமன்
அஞ்சிலே ஒன்று   – மண் –     அதில்   உதித்த      சீதையைத் தேடி
அஞ்சிலே ஒன்று   – கடல் –     அதனைத்    தாண்டி
அஞ்சிலே ஒன்று   – ஆகாயம் – அதன்       வழியாய்ச்   சென்று
அஞ்சிலே ஒன்று   – தீ –        இலங்கையை எரித்தான்
அஞ்சனை  பெற்ற      மைந்தன்    அனுமனை  வணங்கினால்
அஞ்சுதல்   அகன்று     அஞ்சாமை  சேரும்      உண்மை !!

image

மீனங்காடி

image

மாற்றத்திற்கு முதல்படி தைரியம் 

      அடுத்த இரண்டு நாளைக்கும் மேரிக்கு ஆபீஸில் சரியான வேலையாக இருந்தது. அப்படிச் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்த்தாள். ஆனால் அவள் எண்ணம் முழுவதும் ‘ டோனி ‘ சொன்ன ‘ எண்ணத்திலேயே ‘ இருந்தது.  அவனோட பேசும்போது  மீனங்காடியின் தத்துவம் சரி என்று தோன்றினாலும் இடை இடையே நிறைய சந்தேகமும் வந்து கொண்டிருந்தன. ‘ சந்தேகம் வரும்போது அதைப் பற்றி நிறைய தகவலைத் தேடிக் கண்டுபிடி ‘ என்று அவள் பள்ளிக்கூட ஆசிரியர் சொன்னது ஞாபகம் வந்தது. வெள்ளிக் கிழமை பாஸ் பிரசாத்துடன் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று முடிவு செய்தாள். போனை எடுத்தாள். 

 “ பிரசாத் ! நம்ம சேர்மன் சொன்னபடி மக்களை உற்சாகத்தோடு வேலை செய்ய வைக்க என்ன செய்யலாம்”  உங்கள் யோசனையைச் சொல்லுங்களேன் “ – நிதானமாகத் தான் கேட்டாள் மேரி !

 “ என்னது ! உற்சாகத்தோடு வேலை செய்ய வைக்கிறதா? அதெல்லாம் புதுக் கம்பெனிகளுக்குத்  தான். அது இதுன்னு உன் நேரத்தை ஏன் வீணடிக்கிறே” “

மேரிக்கு ஆத்திரம் வருவது போல் இருந்தது. மெல்ல பல்லைக் கடித்துக் கொண்டாள்.

 “ இதோ பாருங்கள் பிரசாத் ! இந்த வேலையை நான் எடுத்துக் கொண்ட போதே நம்ம ரெண்டு பேருக்கும் நல்லாத் தெரியும். இதில் நாம நிறைய செய்ய வேண்டியிருக்கும் என்று. இப்போ அது ரொம்பத் தீவிரமா போய்க் கொண்டிருக்கு ! நீங்க என் பாஸ் ! என்னை விட உங்களுக்குத்தான் இதை சரி செய்யற பொறுப்பு, அக்கறை இருக்கணும்.  நீங்க எனக்கு உதவப் போகிறீர்களா? இல்லை முட்டுக் கட்டை போடப் போகிறீர்களா? “

 மேரிக்குத்  தன்னையே நம்ப முடியவில்லை. ‘ நாமா இப்படித் தைரியமாகப் பேசினோம் ‘  என்று. பேசின பிறகு ரொம்ப நன்றாகவே இருந்தது.

 பிரசாத் அனுபவசாலி. பனங்காட்டு நரி. இந்த மாதிரி யாராவது எதிர்த்துப் பேசினால் அவருக்குக் கோபம் வராது. சந்தோஷமாக இருக்கும். ‘ சரி! சரி ! மேரி ! கவலைப்படாதே ! சேர்மன் அந்த கருத்தரங்கில் கலந்துக்கிட்டபோது எடுத்த டேப் எங்கிட்டே இருக்கு. எனக்கு அதைக் கேட்க நேரமில்லை. நீ அதைக் கேட்டுட்டு அதோட முக்கிய கருத்து என்ன என்று எனக்குச் சொல்லு !”

 “ சரி சார் ! நான் வந்து வாங்கிக்கறேன் .”

image

                       நெஞ்சம் நிறைந்த பயணம்

காரில் போய்க் கொண்டிருந்தாள் மேரி.  சரியான டிராபிக்.  ‘ பம்பர் டு பம்பர் ‘ இருந்தது. ஆனாலும் அவளுக்கு நேரம் போவதே தெரியவில்லை.  தன்னைப் பற்றியே யோசித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தாள். ‘ எப்போ எனக்கு என்மேல நம்பிக்கை போச்சு?  ரெண்டு வருஷம் இருக்குமா? அது எப்படி திரும்ப வந்தது?  இந்த ரெண்டு வருஷத்திலே மேலதிகாரிகிட்டே இவ்வளவு அழுத்தம் திருத்தமா பேசினது இது தான் முதல் தடவை. அவளுக்கு அவளையே பிடித்திருந்தது. மனதின் அடித்தளத்தில் சந்தோஷமும் எட்டிப் பார்த்தது.  ‘ சரி ! சரி ! ரொம்ப கொண்டாடாதே ! பாஸ் கொடுத்த டேப்பைக் கேளு ‘ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

காரின் ஸ்டீரியோ ஸ்பீக்கரில் கேசட்டின் சப்தம் துல்லியமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.  ஆரம்பமே ஒரு நம்பிக்கையை ஊட்டுற பாட்டு ! தனக்காகவே எழுதியது போலவே இருந்தது.

image

பா. விஜய்யின் ‘ ஆட்டோகிராப் ‘ பாட்டு ! என்ன சுகமான அன்பான ஆணித்தரமான பாட்டு.

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே !  
வாழ்க்கை என்றால் போராடும் போர்க்களமே !        
ஒவ்வொரு  விடியலுமே சொல்கிறதே !
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே !

நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் !
லட்சியம் நிச்சயம்  வெல்லும் ஒரு நாளில்

மனமே ! ஓ ! மனமே ! நீ மாறி  விடு !
மழையோ அது பனியோ நீ மோதி விடு

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது.
என்ன இந்த வாழ்க்கை என்று எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள்
காலப் போக்கில் காயம் எல்லாம் மறைந்து போகும்                                                                                                             மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே மண் மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால் அதை தினமும் கண்டால்
ஒரு நாளில் நிஜமாகும்.

மனமே ! ஓ ! மனமே ! நீ மாறி விடு !
மழையோ அது பனியோ நீ மோதி விடு !

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்க்கை என்றால் போராடும் போர்க்களமே !

வாழ்க்கைக் கவிதை வாசிப்போம் !
வானம் அளவு யோசிப்போம் !
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போல சுவாசிப்போம் !

லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு

உன்னை வெல்ல யாருமில்லை  உறுதியோடு போராடு !

மனிதா உன் மனதைக் கீறி விதை போடு மரமாகும்
அவமானம் தடுத்தால் நீ எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா ! தூக்கம் என்ன என் தோழா ?
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அன்றே வானம் வசமாகும்

மனமே ஓ மனமே நீ மாறி விடு !
மழையோ அது பனியோ நீ மோதி விடு !

மேரியின் நெஞ்சம் விம்மியது.  எனக்காகவே எழுதிய பாட்டா இது?’ மாணவன் தவிக்கும்போது ஆசிரியர் தானே தேடி வருவார் ‘ என்ற பொன்மொழி எவ்வளவு உண்மை ! ஒவ்வொரு வார்த்தையுமே நம்பிக்கை இழந்த எனக்காகவே எவ்வளவு அழகாக ஆணித்தரமாக இருக்கிறது.  நான் எப்படி இப்படிப் போனேன்? ஜானின் திடீர் மறைவு – இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்பு – இவையா என்னை – என் நம்பிக்கையை பயமுறுத்துகின்றன? தோற்று விட்டால் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் தானே என்மீது படர்ந்து இருக்கிறது !

image

இந்த வேலையை விட்டு புது வேலை தேடலாம்.  ஆனால் அது ஆபத்தானது. வேலை கிடைக்கத் தாமதமாகலாம். இருக்கிற வேலையும் போகலாம் ! சரி ! வேலையை விடாமல் இதையே தொடர்ந்து செய்து வந்தால் என்ன ஆகும்?  அப்போதும் வேலை போகலாம். அதுக்காக உயிரே இல்லாத ஒரு வேலையில் மரக்கட்டை மாதிரி கிடப்பதற்கு அவள் தயாராக இல்லை.  மீறி மீறிப் போனால் என்ன நடக்கும்? வருங்காலம் எப்படி இருக்கும் என்று ஊகிக்கவே முடியவில்லை. ‘

இப்படியே ஏனோ தானோ என்று வாழும் வாழ்க்கை என்ன வாழ்க்கை? என் குழந்தைகளுக்கு நான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டாமா?  தீர்மானித்து விட்டாள். திங்கட்கிழமை புது முயற்சி ஆரம்பிக்கப் போகிறேன். முதல் வேலை என்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்ளப் போகிறேன். நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளப் போகிறேன்.  என்ன நடந்தாலும் நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளப் போகிறேன்.

 ‘ எனக்குத் திறமை இருக்கிறது ! நிறைய இடங்களில் அதை நிரூபித்துக் காட்டியிருக்கிறேன். எதையும் என்னால் சிறப்பாகச் செய்ய முடியும்.  மனதிலே தோன்றுகிற பயத்தை வேரோடு பிடுங்கி எறியணும். வாழ்க்கையை ஓட்டறதுக்காக இல்லை. அது சிறப்பா அமையணும் என்பதற்காக இதைச் செய்யணும். சோதனையில் வெற்றி பெறணும் என்பதிற்காக அல்ல.  வாழ்வில் வெற்றி பெறணும் என்பதற்காக இதைச் செய்ய வேண்டும்.  என்மீது எனக்கு நம்பிக்கை  வளர இதுதான் சரியான வழி !

மனமே ! ஓ ! மனமே ! நீ மாறி விடு !
மழையோ அது பனியோ நீ மோதி விடு !

குழந்தைகள் காப்பகத்தில் காரை நிறுத்தியதும் கீழே இறங்காமல் தனது நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் எடுத்துக் காரிலேயே எழுதத் தொடங்கினாள்.!

 ‘ விலை மதிப்புள்ள வாழ்க்கையை
  விழித்திருக்கும் பாதி நாட்களை
  குப்பைத் தொட்டியில் போடுவதா?’

இப்படித்தானே என் கீழே வேலை செய்யும் அனைவரும் எண்ணுவார்கள். இந்த மூன்றாம் மாடிக்கென்று ஒரு தனி கலாசாரம் ஆண்டாண்டு காலமாய் இருந்து வருகிறது.!
அதை நான் உடைக்கப் போகிறேன் ! என்ன துன்பம் வந்தாலும் சரி !

சமீபத்திய நிகழ்வுகள் என் நம்பிக்கையைக் குலைத்திருக்கலாம் !

நன்மையில் முடியும் என்ற எண்ணத்தோடு நம்பிக்கையைப் புதுப்பிக்கப் போகிறேன் !

ஒன்றும் செய்யாமல் அழிவதை விட திருப்தியாகச் செய்து அழிவு வந்தால் அது அழிவே இல்லை !  

‘போருக்குத் தயார்!  கத்தியைத் தீட்டி விட்டேன் ‘ காரின் கதவைத் திறந்து புது உற்சாகத்தோடு குழந்தைகளை அழைத்துச் செல்லக் காப்பகத்தில் நுழைந்தாள்.

image

:” ஏம்மா ! உன் கண் கலங்கியிருக்கு ! அழுதியா? “
 ‘ ஜோ ‘ கிட்டே எதையும் மறைக்க முடியாது. “ ஆமாண்டா கண்ணா ! அழுதேன் அது ஆனந்தக் கண்ணீர்.”
“ அப்படீன்னா?”
“ அது இருக்கட்டும் ! நீங்க எப்படி இருந்தீங்க ?”
 “ அம்மா ! அம்மா ! நான் நம்ம குடும்பப் படம் வரைஞ்சேன். மிஸ் கூட நல்லா இருக்குன்னு சொன்னாங்க ! காட்டட்டுமா?”
“ காட்டேன் “
நாலு பேரை வரைந்திருக்கிறாள்.  கடவுளே ! என் நம்பிக்கைக்கு இப்படி சோதனையா? பெருமூச்சு விட்டாள்.
“ வா ! ஜோ ! ஜேனையும் கூட்டிக்கொண்டு வீட்டுக்குப் போகலாம்!

(தொடரும்)

கேளு அண்ணாத்தே கேளு

image

அடுத்தவனுக்கு     வாச்சதை   எண்ணி
      அண்ணாத்தே உனக்கேன்   கவலை
அவனவனுக்கு     இருக்குது    பாரு
      தலைக்கு    மேலே வேலை !

கொடுத்த    காசுக்கு     வஞ்சனை   இல்லாம
      காட்டுற     வேலை     என்   வேலை – அட
தின்னு தின்னு தூங்கிக்      கிட்டிருந்தா
      மண்டையில் எதுக்கு      மூளை !

அடுத்த      வேளைக்கு  சோறில்லாம
      தவிக்கிற    சனங்க      கோடி
கோடி       கோடியாய்   சொத்தை    சேத்தும்
      ஆசை       போகலியே  சேடி !

அடுத்த      ஊரிலே     தண்ணி     இல்லாம   
      தவிக்கிற    சனங்க      கோடி
இருக்கிற    தண்ணியை  பகிர்ந்து     கொடுத்தா
      இன்பம்      பெருகுமே  தேடி !

அடுத்த      நாட்டிலே    உரிமை     இல்லாம
      வெடிக்கிற   சனங்க      கோடி
அழிவை     நிறுத்தி      அமைதிப்    படுத்தினா  
      துன்பம்      போகுமே    ஓடி !

நம்ம        நாட்டையே  கொளுத்திப்  போடவே
      எல்லை     தாண்டியே   வருவான் – அவன்
பல்லைப்    பேத்து      விரட்டி      அடிச்சிட்டா
      தொல்லை   இல்லையே  போடி !!

தலையங்கம்

ஜம்மு & காஷ்மீரில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம்! 

சென்ற ஆண்டு உத்தர்காண்ட். இப்போது ஸ்ரீநகர். இயற்கையின் சீற்றத்திற்கு அளவே இல்லை. நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் வெள்ளத்தில், நிலச் சரிவில் உயிரை இழந்திருக்கின்றனர். 

image

image

image

image

image

இந்த சமயத்தில் பத்திரிகை-TV சானல்களின் முக்கிய கடமை பாதிக்கப் பட்டவரைக் காப்பாற்றுவது தான். இதைச் செய்யவில்லை – அதைச் செய்யவில்லை – மாநில அரசு சரிவர செய்யவில்லை – மத்திய அரசு மாற்றாந்தாய் மனப் பான்மையுடன் செயல்படுகிறது என்றெல்லாம் எழுதி / பேசி துயரத்தில் இருக்கும் மக்களுக்கு கோபத்தை உண்டாக்காதீர்கள். உதவிக்கு வருபவர்களை அடிக்கும் அளவிற்கு மக்களைத் துரத்தி விட்டீர்கள்! இது தான் செய்தித் துறையின் தர்மமா? 

பாதிக்கப்பட்ட மக்கள் எல்லாம் ஒருவாறு அமைதியானபின் உங்கள் குற்றச்சாட்டுகளை எடுத்துச் சொல்லுங்கள்! தவறு செய்தவர்களைக் கிழி கிழியென்று கிழியுங்கள்! அதுவரை உங்கள் வாயையும் பேனாவையும் மூடிக் கொண்டிருப்பது அனைவருக்கும் நல்லது!

வேதனைப் படும் மக்களின் கண்ணீர் வெள்ளத்தைத் துடைப்பது அனைவரது தலையாய பணி என்று  உணர்ந்து செயல் படுவோம். 

படங்கள் உதவி: ஹிந்துஸ்தான் டைம்ஸ் 

கதையில டுவிஸ்ட்!

image

ஒரு காலத்தில தமிழ் சினிமாவில் டுவிஸ்ட் டான்ஸ் தான் இருக்கும். இப்போ கதையில விதவிதமான டுவிஸ்ட்.
நாமும் கொஞ்சம் டுவிஸ்ட் பார்க்கலாமா?

image

டாக்டர் கதாநாயகன் கதாநாயகியிடம்

‘ஐ  லவ் யு’ என்று சொன்னதும்  அவள் மயங்கிச்

சாய்கிறாள். செக் பண்ணினால் அவள்

பிரக்னண்ட். இது காதலுக்கு முன் கர்ப்பம்

டுவிஸ்ட்!

image

ஹீரோ வில்லனைத் துரத்த அவன் மலை, ஆறு , பின்னி இரும்புக்கடை தாண்டி பில்டிங்- மால் என்றெல்லாம் சுத்தி கடைசியில் டாஸ்மார்க் பாருக்கு வருகிறார்கள்! இருவர் கையிலும் பீர் பாட்டில். வா மச்சி சண்டை போட்டது போதும்! பீர் அடிக்கலாம் என்று டேபிளில் உட்காருகிறார்கள்! ‘மது உடலுக்கு தீது ‘என்று டைட்டில் கார்ட்’

image

கதாநாயகி கதாநாயகனுக்கு  கிஸ் அடித்துவிட்டுத் திரும்பினால் ஹீரோ டிராகுலாவா மாறி நிற்கிறான்.

ஹீரோ வில்லனை அடித்துவிட்டு கதாநாயகிக்குத் தாலி கட்டும் போது தான் தெரிகிறது அவள் வில்லனின் அம்மாவென்று!

image

படத்தில் சந்தானம் சென்சார் போர்டு அதிகாரியா வருகிறார். யார்  டபிள் மீனிங்லே வசனம் பேசினாலும் அவர் அதை ஒருமுறை திருப்பிச் சொல்லிவிட்டு கத்திரி எடுத்து  அந்த சீனைக் கட் செய்கிறார். 

 டிரையினில் ஹீரோவும் வில்லனும் சண்டைபோடும் போது வில்லன் ஹீரோவை அடித்துத் தள்ளி விட முயலும் போது சந்தானம் டி.டி.ஆர். வேடத்தில் வந்து டிக்கட் கேட்க ஹீரோவிடம் டிக்கட் இருக்க வில்லனிடம் டிக்கட் இல்லாததால் அவனை இறக்கி விடுகிறார். படம் இப்படி முடிகிறது! எப்படி கிளைமாக்ஸ் டுவிஸ்ட்!

image

வில்லன் ஹீரோயினைக்  காரில் கடத்திக் கொண்டு ஓடும் போது டிராபிக் போலீஸ் ஓவர் ஸ்பீடுக்காக அவனை அரெஸ்ட் செய்ய ஹீரோயின் தப்பிக்கிறாள். இது எஸ்கேப் டுவிஸ்ட்!

எருமைக் காவல் தண்டனை

image

“அடேய் சீவாச்சு! ” யாரோ கூப்பிட்டமாதிரி இருக்கே! ரொம்பத் தெளிவா தெரிஞ்ச குரல் மாதிரி இருக்கு. தொறந்த ஜன்னல்லே எட்டிப்பார்த்தா  வழக்கம் போல மாட்டுக் கொட்டகை தான் தெரியுது. அங்கேயும் ஆள் யாரையும் காணோம். ‘சரி! நம்ம மனச்சாட்சி தான் சத்தம்போட்டுக் கூப்பிட்டிருக்கும்’ னு நினைச்சுக்கிட்டு குப்புறப் படுத்து தூக்கம் பிடிக்க ஆரம்பிச்சேன்! மறுபடியும் “அடேய் சீவாச்சு! ” என்ற குரல் தெளிவாக மாட்டுக் கொட்டகையிலிருந்து வந்தது.

என் ரூமைத் தொட்டாப்போல மாட்டுக் கொட்டகை – அதில் ஒரு டஜன் எருமை மாடு. ரூரல் போஸ்டிங்கில குக்கிராமத்துக்கு வந்த எனக்கு இந்த மாட்டுக்கொட்டகை அட்டாச்சுடு வீடு தான் சவுகரியமான வீடு. முக்கியமா வீட்டுக்காரம்மா மூணு வேளைக்கும் சோறு வேற போடறாங்க! மாட்டுக் கொட்டகை தான் பெரிய மைனஸ் பாயிண்ட்! இந்தக் கிராமத்திலே இதைவிட நல்ல வீடு கிடைக்க சான்ஸே இல்லை. என் ரூம் மேட் சேது – அவன் போஸ்ட் ஆபீஸில் கிளார்க்கா இருக்கான். அவன் இதே வீட்டிலே நாலு வருஷமா இருக்கான். பெரிய மனசு பண்ணி என்னை ரூம் மேட்டாக சேர்த்துக்கிட்டான்.

ரெண்டு பெரும் பேச்சலர்ஸ். ராத்திரியெல்லாம் என்னென்னவோ பேசுவோம். அவனுக்கு ஜாதகத்தில சனி. இன்னும் ஏழரை வருஷம் கழிச்சுத்தான் அவன் மொறப் பொண்ணு கோமளாவைக் கட்டுவானாம். எனக்கு வாயில சனி. ‘என் கல்யாணத்துக்கு இப்போ என்னப்பா அவசரம் –  ரேவுக்குக் கல்யாணம் ஆனப்புறம் பாத்துக்கலாமே ’ ன்னு  ஒரு பந்தாவுக்குச் சொன்னதை அப்பா அம்மா சரியாப் பிடிச்சுக்கிட்டாங்க! அவளுக்கு இப்போ தான் பதினாறு வயசாகுது.அவளுக்குக் கல்யாணம் ஆகிறதுக்குள்ளே நான் ரிடையரே ஆயிடுவேன் போலயிருக்கு!   

இப்போ தான் நாங்க ரெண்டு பேரும் பக்கத்து ஊருக்குப் போய் ஒரு பலான படம் பாத்துட்டு ஒரு பிரண்ட் ரூமிலே கொஞ்சம் பீர் அடித்துவிட்டு வந்தோம். சேது குப்புறப் படுத்து பொணம் மாதிரி தூங்கிட்டான். எனக்குத் தான் தூக்கம் வரவேயில்லை. பார்த்த படத்தில வந்த ஹீரோவுக்கு பதிலா  நான் -ஹீரோயினோட குஜால் .. அந்த மூடிலிருந்தேன். காத்துக்காகத் திறந்து வைச்சிருந்த ஜன்னலாண்ட ஒரு அசிங்கமான கறுப்பு எருமை என்னையே முறைச்சுப் பார்த்துக்கிட்டிருந்தது. ‘சூ’ ன்னு விரட்டப் போனேன். அப்பத் தான் எனக்கு வாழ்க்கையிலே முதல் முறையாத் தூக்கி வாரிப்போட்டது. அந்த எருமை தன் வாயைத் திறந்து  "அடேய் சீவாச்சு! “ ன்னு கூப்பிட்டது.

(நான் ரீல் விடறேன்னு நீங்க நினைக்கலாம். இருந்தாலும் முனி – காஞ்சனா – பீட்ஃசா படம் பார்த்து ரசித்த நீங்கள்  இதை படத்தில சொன்னா ஒத்துக்கிவீங்க!  ஆனா நான் சொன்னா  மட்டும் ஏத்துக்க யோசிப்பீங்க இல்லையா? சத்தியமா சார்! நான் பாத்தது கேட்டது எதுவும் விஞ்ஞானத்துக்கு சம்பந்தம் இல்லாத விஷயம். ஆனா முழுக்க முழுக்க உண்மை.)

image

image

அப்புறம் அந்த எருமை கடகடவென்று பேச ஆரம்பித்தது. "அடேய் சீவாச்சு! நான் யாரு தெரியுதாடா?”

அந்தக் குரல் வைக்கோலைத்   தின்னுட்டு  ம்மேய்ய்ன்னு கத்துகிற  எருமைக் குரல்  மாதிரி இல்லை. கொஞ்சம் பழகின வயசான குரல் மாதிரி இருந்தது. பேசும் போது அந்த எருமையின் மூக்கு அசிங்கமா அசையறதைப் பாக்கறப்போ  கொஞ்சம் பயமா இருந்தது. இருந்தாலும் கொஞ்சம் தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு ‘நீ.. நீங்க யாரு’ ன்னு கேட்டேன்.

பக பகவென்று சிரிக்க ஆரம்பித்து விட்டது அந்தக் கருப்பு எருமை. “என்னைத் தெரியலையாடா? நான் தாண்டா..–  உன் URS  தாத்தா! சாட்சாத் உடுமலைப் பேட்டை ராமசாமி சர்மா! . குரல் மாறிப் போச்சாடா?”

மறுபடியும் தூக்கிவாரிப் போட்டது. ஆனா அதுக்குள்ளே தூக்கி வாரிப் போடறது பழக்கமாப் போயிடுச்சு. பின்னே என்ன சார்! ஐந்து நிமிஷத்திலே பத்து தடவைத்  தூக்கி வாரிப் போட்டா என்ன பண்ணறது?

“அட அர்ஸ் தாத்தாவா?”

“ஆமாண்டா உங்க அப்பனோட அப்பன் தான்! இப்போவாவது புரிஞ்சுதா? சரியான ட்யூப் லைட்ரா நீ ! அது சரி ! நீ எப்படி இருக்கே? பாங்க் எக்ஸாம் பாஸ் பண்ணிட்டியா? உங்கப்பன் எப்படி இருக்கான்? உங்கம்மா – மாமனாரை  அடிச்சு விரட்டிய புண்ணியவதி எப்படி இருக்கா? ரேவுக்குட்டி எத்தனாங்கிளாஸ் படிக்கிறா?”

நிஜமாகவே என் தாத்தா தான். அஞ்சாறு வருஷம் முன்னாடி சைக்கிள்ளே பராக் பார்த்துக்கிட்டு போகும் போது ஒரு லாரி மேல மோதப் போயிட்டாரு. அவரைக்  காப்பாத்த லாரிக்காரன்  வண்டியை ஒடிச்சுப் பக்கத்தில  பள்ளத்துக்குத்  திருப்பினான்.  பள்ளத்தில இருந்த எருமைமாடு ஸ்தலத்திலே மரணம். லாரிக்காரன் தாத்தாவைக்  கன்னா பின்னான்னு திட்டினான். எருமைக்காரன் வேற தாத்தாகிட்டேர்ந்து பணத்தை வைன்னு கத்தினான். நான் தான் தாத்தாவைக்  காப்பாத்தி பணத்தைக் கொடுத்து வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போனேன்.

 image

ஆனால் அந்த எருமை ஆக்ஸிடெண்டுக்குப்  பிறகு தாத்தா சுத்தமா மாறிட்டார்.அதுக்கு முன்னாடி ‘ பாகீரதீ ! இதென்ன காப்பியா கழுநீரா’ ன்னு கத்தினார்னா  வீடே அதிரும். ‘பாருடா! உங்க தாத்தா கொடுமைப் படுத்தராறு’ ன்னு சொல்லி அம்மா தினமும் அழுவாள். ஆனால்   அந்த ஆக்ஸிடெண்டுக்குப்  பிறகு தாத்தா பெட்டிப் பாம்பாய் மாறிட்டார். அம்மா அதுதான் சாக்குன்னு கீரியாய் மாறிட்டா. அடிக்கடி செத்த எருமை ஞாபகம் தாத்தாவிற்கு வந்துடும். அவர் தூக்கம் வராம அவதிப் படுவார். அந்த எருமை செத்த திதி அன்னிக்கு தாத்தா ராத்திரியெல்லாம் ம்மேய்ய்ன்னு கத்திக்கிட்டே இருப்பார். கேட்க ரொம்பப் பாவமா இருக்கும். மாசா மாசம் அந்த திதி அன்னைக்கு அவரை ரூமிலே வைத்துப் பூட்டிவிடுவோம். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அம்மா ஒரு நாளைக்கு நேராவே சொல்லிட்டா- ‘பகவதி கோவிலுக்கோ எரவாடிக்கோ  போயிங்கோ’ ன்னு. அடுத்த நாள் தாத்தா திடீர்ன்னு காணாமப் போயிட்டார். நாலு வருஷத்துக்கு அப்புறம் இங்கே இப்போ என்கூட எருமை மாடா பேசறார். நம்பவே முடியலை!

image

“என்னடா சீவாச்சு யோசிச்சுக்கிட்டிருக்கே?”

“நிஜமாவே நீங்க நீங்க தானா தாத்தா? எப்படி நீங்க இப்படி?”

“அதெல்லாம் பெரிய கதை. சொன்னா போரடிக்கும். சுருக்கமா சொல்றேன் கேட்டுக்கோ ! உங்க அம்மாகிட்டே கோவிச்சிக்கிட்டு  உடுமலைப் பேட்டையை விட்டுட்டு நேரே காசிக்குப் போனேன். அங்கே ஒரு பெரிய மகான் இருந்தார். அவர் கிட்டே அந்த எருமையைக் கொன்ன பாவத்தைப் போக்க என்ன வழின்னு கேட்டேன்! அல்பாயுசா செத்த அந்த எருமையின் பாக்கி நாலு வருஷம் சொச்சத்தையும் எருமையா இருந்து தீர்க்கணும். இல்லாட்டி   இந்த எருமைக் கத்தல்  ஒருத்தர் மாத்தி ஒருத்தருக்கு பரம்பரையா வரும்னு சொன்னார். நான் செஞ்ச பாவம் உங்களுக்குத் தொடரக் கூடாதேன்னு நானும் அந்த எருமைக் காவல் தண்டனைக்கு ஒத்துக்கிட்டேன். அந்த குருஜியும் என்னைக் கூடு விட்டுக் கூடு பாய வைச்சார். நான் டெல்லி எருமையாயிட்டேன்.”

“என்ன தாத்தா இது? பருப்புத் தேங்கா கூடு மாதிரி ஏதோ சொல்றீங்க? ராம நாராயண் படம் பார்க்கற  மாதிரி இருக்கு!”

“குறுக்கே பேசாதேடா ! நான் கூடு விட்டு கூடு பாஞ்சதும் குருஜி என் பாடியை வாரணாசியிலே ஒரு கோல்ட் ஸ்டோரேஜில வைச்சிருக்கார். மாசாமாசம் அந்த எருமை செத்த திதி அன்னிக்கு மட்டும் தான் எனக்கு கொஞ்சம் சுய நினைவு வரும். இன்னிக்கு அந்த நாள். இத்தனை நாள் நான் டெல்லியில இருந்தேன். போன மாசந்தான் தமிழ்நாடு எருமை வள போர்டு ஆயிரம் எருமைகளை டெல்லியிலிருந்து வாங்கியது. யார் கிட்டேயும் சொல்லாதே! அதிலேயும் பயங்கர ஊழல் இருக்கு! அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம்.இந்த வீட்டுக் காரன் பேங்க் லோன் போட்டு என்னை வாங்கினான். இன்னைக்குக் காலையில ஜன்னலாண்ட உன் மூஞ்சியைப் பார்த்ததும் எனக்கு உன் ஞாபகம் வந்தது. இன்னிக்கு அந்த திதி.  சீவாச்சு! உன்னைப் பார்ப்பேன்னு நினைக்கவே இல்லேடா!”

“ஸாரி தாத்தா உங்களை நிக்க வைச்சே பேசிக்கிட்டிருக்கேன்! உள்ளே வாங்களேன்! உட்காருங்கோ!”

“எப்படிடா உள்ளே வர்றது? வந்தாலும் அந்த நொண்டி நாற்காலிலே எப்படிடா உட்கார்ரது? நீ பேசாம ஜன்னலாண்ட உக்காந்துக்கோ! எனக்கு நாலு காலும் வலிக்குது! நான் படுத்துகிட்டே பேசறேன்!”

“தாத்தா உங்களுக்கு இது கஷ்டமாயில்லையா?”

“ரொம்ப மோசம்டா இந்த மாட்டுக் கொட்டகை! கொசு நிறைய இருக்கு டெல்லி ரொம்ப சூப்பரா இருக்கும். அங்கே பிரைம் மினிஸ்டர் மாட்டுப் பண்ணையில் இருந்தேன். தவலை தவலையா கோதுமை தின்னுட்டு இங்கே மற்ற சொங்கி மாடுகளோடு போஸ்டர் தின்ன ரொம்ப வெக்கமாயிருக்குடா!”

“ஏன்  தாத்தா! பால் கறக்கறச்சே உங்களுக்கு வலிக்குமா?”

“டெல்லியில  ஒரு சிங் வந்து கறப்பான் பாரு வலியே தெரியாது. இங்கேயும் இருக்கானே ஒருத்தன்! இதமா  கறக்கத் தெரியலை! கொஞ்சம் வலிக்கறது.”

“என்ன தாத்தா எதுக்கெடுத்தாலும் டெல்லி டெல்லி! அந்த ஊர் ரொம்ப உசத்தியா போயிடுச்சோ?”

“ஆமாண்டா! டெல்லி டெல்லி தான்! காலங்காத்தாலே அந்த சிங் சத்தம் போட்டு எழுத்துக் கூட்டி டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பர் எல்லாம் படிப்பான். நியூஸ் எல்லாம் காதிலே விழும். ஊர் நல்லா இருந்தாலும் ஊழல் ஜாஸ்திடா! எனக்குப் போடற தவிடு புண்ணாக்கில கூட ஊழல் பண்ணினாங்கன்னு தெரிஞ்சப்பறம் பால் கொடுக்கிறதைக் கொஞ்சம் கொஞ்சமாக் கொறைச்சிட்டேன்! அப்பறம் மோடி ஜெயிச்ச அன்னிக்கு சொன்னா நம்ப மாட்டே! மூணு மணி நேரம் கன்டினுவசா பால் கொடுத்தேன். லிம்கா ரெக்கார்ட்ஸ்ல கூட என்ட்ரி ஆயிருக்கு!”

“தாத்தா நீங்க எப்போ காங்கிரஸ்லேர்ந்து பிஜேபிக்கு மாறினேள்?”    

“எல்லாம் நம்ம குருஜி யோசனை தான். அவர் ஆர் எஸ் எஸ் பக்தராம். அதனாலே தான் என்னை வாரணாசியிலிருந்து டெல்லிக்குப் போய் பிரதமர் மாட்டுப் பண்ணையில் இருக்க வைத்தார். நான் நிறைய சமாசாரம் ஒட்டுக்கேட்டு அவருக்கு சொல்வேன்! 2 ஜியிலிருந்து நிலக்கரி வரை எல்லா ஊழல் சமாச்சாரமும் எனக்குத் தெரியும். இப்பவும் குருஜி தான் எனக்கு டெல்லியிலிருந்து தமிழ்நாட்டுக்கு என்னை டிரான்ஸ்பர் செஞ்சிருக்கிறார். அது சரி! இன்னிக்கு என்ன தேதிடா?”

“நவம்பர் நாலு தாத்தா!”

 "என்னது நவம்பர் நாலா! சீவாச்சு! “ – தாத்தா அலறினார். படுத்துக் கொண்டிருந்தவர் நாலு கால்லே எழுந்து நின்றார்.

image

 ”என்ன ஆச்சு தாத்தா?“

 ”எனக்கு விடுதலைடா! விடுதலை! நாலு வருஷம் ஒன்பது மாசம் பதினாலு நாள் இன்னிக்கோட முடியுதுடா! என் எருமைக் காவல்  தண்டனை இன்னிக்கு ராத்திரி பன்னிரண்டோட முடியுதுடா! “ தாத்தா  ஆடிப் பாட ஆரம்பித்துவிட்டார்.

 ”விடுதலைன்னா எப்படி தாத்தா! எனக்கு ஒண்ணும் புரியலையே!“

 ”நேரமாச்சு சீவாச்சு! இன்னிக்கு ராத்திரி 12 மணிக்கு நான் செத்துப் போவேன்! அப்பறம்  காசிக்குப் போகணும்.“

"எப்படி?”

“செத்தப்பறம் காத்து மாதிரி தானேடா! கொஞ்சம் தம் பிடிச்சா காத்தாலே ஆறு மணிக்கெல்லாம் காசி போயிடலாம். புயல் வார்னிங் ஒண்ணும் இல்லியே? குருஜி நம்ம பாடியை கங்கைக் கரையில எடுத்து பத்திரமா வைச்சிருப்பார். நம்ம உடம்பு தானான்னு செக் பண்ணிட்டு உள்ளே புகுந்திட வேண்டியது தான். அப்பறம் என்ன? ஷேவ் பண்ணிட்டு கங்கா ஸ்நானம் பண்ணிட்டு ..ஐயையோ கடிகாரம் பன்னிரெண்டு அடிக்குதே!”

“அது அஞ்சு நிமிஷம் பாஸ்ட் தாத்தா! நீங்க சீக்கிரம் சொல்லுங்க!" 

 ”அப்பறம் என்னடா ! பழைய படி உன் தாத்தாவா வெளியே வந்து ஷேத்ராடானம் போயிட்டு டிசம்பர் 6 அன்னிக்கு அயோத்யா போயிட்டு டெல்லி வந்து முடிஞ்சா மோடியைப் பாத்துட்டு கரிப் ரத் டிரைனைப் புடிச்சு டிசம்பர் 10ந்தேதி சென்னைக்கு வருவேன். சரி. நீ ஜன்னலைச் சாத்திட்டுப் படுத்துக்கோ! நான் சாகறச்சே நீ பாக்கக் கூடாது. ஆசை தீர நாலு தடவை  கத்திடறேன்! ம்மேய்ய்! ம்மேய்ய்! ம்மேய்ய்! ம்மேய்ய்!“

image

டிசம்பர் 10தித் தேதி சென்னைக்குப் போய் சென்ட்ரலில் கரிப் ரத் டிரைனுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நான் கண்டது கனவாயிருக்குமோ என்ற டவுட் வேற!

டிரையினிலிருந்து  தாத்தா மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தார். என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை.  அவர் கிட்டே போய் ‘தாத்தா!’ என்றேன்!

"அடேய்! சீவாச்சுவா? நீ எப்படிடா இங்கே வந்தே?”

“என்ன தாத்தா! நீங்க தானே போன வாரம் சொன்னீங்க!" 

"என்னடா உளர்ரே! நாலே  முக்கால் வருஷத்துக்கப்பறம் இப்போ தான் உன்னைப் பாக்கிறேன். டெல்லியில் ஒரு சர்தார்ஜியோட மாட்டுப் பண்ணையில் வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். உங்களையெல்லாம் பாக்கிற ஆசையில இப்ப தான் வர்றேன்! ஒண்ணு தெரியுமோ? இப்போல்லாம் நான் அந்த எருமை மாதிரி கத்துவது கிடையாது தெரியுமா? உங்கப்பன் எப்படிடா இருக்கான்? உங்கம்மா திருந்திட்டாளாடா? ரேவுக்குட்டி எத்தனாங் கிளாஸ் படிக்கிறா?”

இவர் நிச்சயமா என் தாத்தா தான். அப்படியானால் அவர்.. அது… நான் கண்டது கனவாய் தானிருக்கும். எருமைக் காவல் தண்டனையாவது வெங்காயமாவது! அப்படியானால் தாத்தா இன்னிக்கு கரிப் ரத்திலே வர்ற சேதி எனக்கு எப்படித்தெரியும்? ஏதோ இடிக்குதே!

“தாத்தா! வாங்க உடுமலைப்பேட்டை பஸ்ஸைப்    பிடிக்கலாம்! " 

நடந்தோம்! 

க்ளிக் செய்யுங்கள் படிக்க வசதியாக இருக்கும்! மறுபடியும் க்ளிக் செய்தால் குவிகத்திற்குச் செல்லலாம்!

சொல்லிவிட வா

image

உள்ளத்திலே உள்ள கதை சொல்லிவிடவா
கள்ளத்திலே உன் அழகைக் கிள்ளிவிடவா
கன்னத்திலே முத்த மழை சிந்திவிடவா
எண்ணத்திலே சித்தமதை  தந்து விடவா

பெண்மயிலே உன்சிறகை விட்டுவிட்டு வா
காண்கையிலே என் விழியைச் சுட்டுவிட்டு வா
உன்கையிலே கணை தொடுத்துக் கொன்று விட வா
புன்னகையில் எனை மடித்து மென்றுவிட வா
 
வெள்ளியென மின் இடையில் கன்னமிடவா 
வெள்ளமென உன்  ஜடையில் பின்னிவிடவா 
கிள்ளையென உன் மடியில் பிஞ்சுவிடவா 
பிள்ளையினை நம் இடையில் கொஞ்சிவிடவா 

கண்ணசைவில் கவிதை நயம்  திறந்துவிடவா 
பெண்ணசைவில் அத்தனையும் மறந்துவிடவா
என்னவளைக் கரம்பற்றி  ஈர்த்துக் கொள்ளவா
உன்னுருவில் என்னுயிரை சேர்த்துக் கொள்ளவா   

image