புத்தகச் சுருக்கம் : தீபக் சோப்ராவின் ” The Seven Spirituality Laws of Success “

ஆங்கிலத்தில் புத்தகச் சுருக்கம் என்று ஒன்று வெளியிடுவார்கள். பிரபல புத்தகங்களை எழுதிய ஆசிரியரையோ அல்லது வேறு பிரபலமானவரையோ வைத்து அந்தப் புத்தகத்தின் சாரத்தை 2/3 பக்கங்களில் வெளியிடுவார்கள். getabstract.com என்ற ஒரு பணம் கொடுத்துப் பார்க்கும் இணைய தளம் உள்ளது.

தமிழில் இது இன்னும் அவ்வளவாகப் .புழக்கத்தில் வரவில்லை.

அந்த வகையில் தீபக் சோப்ராவின்  ” The Seven Spirituality Laws of Success ”  என்ற புத்தகத்தின் சாரத்தை உங்கள்முன் பணிவன்போடு வைக்கிறேன்.

விதி ஒன்று : உண்மையான சக்தியின் விதி

இயற்கையோடு வாழ முயலுங்கள். தினமும் இரு முறை காலையிலும் மாலையிலும் அரை மணி நேரம் மௌன விரதம் இருங்கள் அல்லது தியானத்தில் இருங்கள்.

 

விதி இரண்டு : கொடுக்கல் வாங்கல் விதி

எவ்வளவு கொடுக்கிறீர்களோ அவ்வளவு உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். தினமும் யாருக்காவது ஒரு பூ அல்லது வேறு ஏதாவது பரிசு கொடுங்கள்.

 

விதி மூன்று: காரிய -காரண விதி

எந்தச் செயலைச் செய்வதற்கு முன்பும் , இதன் விளைவுகள் என்னவாகும், இது மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா ? என்ற கேள்வியை  உங்கள் இதயத்திடம் கேட்டுவிட்டுப் பிறகு அதன் கட்டளைப்படி நடங்கள் !

 

விதி நான்கு: குறைந்த முயற்சி விதி

எதையும் எப்போதும்

செய்ய முயலாதீர்கள் – செய்யுங்கள்

குறைவாகச் செய்தாலும் நிறைவாகச் செய்யுங்கள்

வருவதை  ஏற்றுக் கொள்ளுங்கள்

நினைத்தபடி நடக்காவிட்டால் வருந்தாதீர்கள்

உங்கள் பாதுகாப்பு வளையத்தை உடையுங்கள்

உங்கள் கருத்துக்களை மற்றவர் மீது  திணிக்காதீர்கள்

மற்றவர்களை ஒப்புக்கொள்ளச் செய்வது தான் வெற்றி என்று எண்ணாதீர்கள்

 

விதி ஐந்து: ஆசையும் குறிக்கோளும்

உங்கள் ஆசைகளைப் பட்டியல் போடுங்கள்

அனுதினமும் அவற்றைப் படித்துவிட்டு தியானம் அல்லது மௌனவிரதம்         இருங்கள் .

ஆசைகளை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் .

விளைவுகளைப் பற்றி மறந்துவிடுங்கள்

ஆசைகள் நிறைவேறுவதும் நிறைவேறாததும் இந்தப்  பிரபஞ்சத்தின் செயல்            என்று எண்ணிக்கொள்ளுங்கள்

 

விதி ஆறு: பிணைப்பிலா விதி

உலகில் எல்லா செயல்களிலும் உங்களால் முடிந்தவரை  கலந்து                  கொள்ளுங்கள்

ஆனால் அவற்றுடன் உங்களைப் பிணைத்துக் கொள்ளாதீர்கள்.  சற்று            விலகியே இருங்கள்

 

விதி ஏழு: வாழ்வின் விதி

எதிலும் யாருக்கும்

நான் எப்படி உதவமுடியும் என்று கேளுங்கள் ; இதில் எனக்கு என்ன                              இருக்கிறது என்று பார்க்காதீர்கள்

உங்களின் அபாரத் திறமைகளை   எழுதித் தினமும் அவற்றைப் படியுங்கள்;            உங்களுக்கு நம்பிக்கையும்  பெருகும்; அந்தப் பட்டியலும் நீளும்

 

உங்களுக்கு ஒரு  உண்மை தெரியுமா?

நமது உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் (cell) இந்த ஏழு விதிகளை எப்போதும் கடைப்பிடிக்கின்றன !

ஸ்மார்ட் சிடி

 

மத்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு தமிழகத்தில், 12 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. முதல் இருபது  நகரங்களில் சென்னையும் கோயம்புத்தூரும் இடம் பெற்றிருக்கின்றன.  

சரி, ஸ்மார்ட் சிட்டி என்றால் என்னென்ன இருக்க வேண்டும்? 

தேவையான தண்ணீர் வசதி, சரியான மின்சார விநியோகம்,  குப்பை மேலாண்மை, போக்குவரத்து வசதிகள், வீடு வசதிகள் (குறிப்பாக ஏழை  எளியவர்களுக்கு) , தகவல் துறை தொடர்பு, கணிணி  மயமாக்கல், நல்ல அரசமைப்பு, குடிமக்கள் பயன் பெறும் வகையில் இணைய தளம் மூலமாக அரசுப் பணிகள், நல்ல சுற்றுப்புறம், குடிமக்களுக்குக் குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோருக்குப் பாதுகாப்பு , சுகாதாரம் மற்றும் படிப்பு வசதி.

இதற்காக மத்திய அரசு  சார்பில் ஒவ்வொரு நகரத்துக்கும் 100 கோடி ரூபாய் வருடந்தோறும் வழங்கப்படும். மாநில அரசும் அதற்கு இணையான  தொகையை வழங்க வேண்டும். 

சென்னையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தேர்வு செய்து, அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மேம்பாட்டு பணிகளைச்  செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி  தி.நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தி.நகரில் திட்டமிட்டுள்ள செயல்பாடுகள் :

ஒருங்கிணைந்த கட்டமைப்புப் பணிகள்

மோட்டார் வாகனமில்லா  மிதிவண்டிப் பாதை, பாதசாரிகள் வளாகம்

 மின்சேமிப்பு விளக்குகள், நவீன குடிநீர், கழிவுநீர் வடிகால் வசதிகள் 

சாலை வடிவமைப்பு, நவீன சிக்னல்கள், பாதுகாப்பு அம்சங்கள்  

பனகல் பூங்கா மேம்படுத்தல் 

வாகன நிறுத்துமிட மேலாண்மை,

குப்பை அகற்றுவதில் நவீன முறையை கையாளுதல்

ஆகியவை  இந்தத் திட்டத்தில் இடம் பெறும்.

 

 

மக்களுக்கு முக்கியமாகத் தேவை :

  

குப்பையில்லா சாலை / வீடு

மாசு இல்லா காற்று

நெரிசல்  இல்லா போக்குவரத்து 

நடக்கக் கூடிய நடைபாதைகள்

சரியான இடங்களில் மேம்பாலங்கள்

சாலையைக் கடக்கப் பாலங்கள்

ரயில் / பஸ் வசதி 

சரியான ஆட்டோ 

பஸ்களுக்குத்  தனிப் பாதை 

வண்டிகளுக்குத் தனித்தனித்  தடங்கள் 

ஒப்பனை அறைகள் – 

குடி தண்ணீர்

மருத்துவம்

டாஸ்மாக் ஒழிப்பு

பள்ளிகள் / கல்லூரிகள்

உணவு விடுதிகள்

சுத்தமான ரயில் / பஸ் நிலையங்கள்

பொறுப்பான காவல் துறை

லஞ்சம் இல்லா அரசு அலுவலகங்கள் 

 

 

 

 

 

 

 

படைப்பாளி – நாகூர் ரூமி

கிருபா2

 

கணையாழி குறுநாவல் போட்டிகளால் பெரும்பாலோர்  கவனத்திற்கு வந்த எஸ்.சங்கர நாராயணன், அழகிய சிங்கர், சமீபத்தில்  மறைந்த ம.வே. சிவக்குமார் போன்று  மற்றுமொரு படைப்பாளி நாகூர் ரூமி. ஆம்பூர் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவரான திரு ஏ எஸ் முகம்மது ரபி, கம்பனையும் மில்டனையும் ஒப்பாய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். மாணவர்களுக்கான  இவரது சுய முன்னேற்ற நூல்களும், ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளும் மிகப் பிரசித்தம்.

சிக்மண்ட் ஃப்ராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ பாரசீக கவிஞானி ஜலாலுத்தின் ரூமியின் ‘கதைகள் கவிதைகள்’  மஸ்னவி காவியத்திலிருந்து  ‘சூஃபி கவிதைகள்’ , ஹோமரின் ‘இலியட்’ , பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப் எழுதிய சுயசரிதையான ‘உடல் மண்ணுக்கு’, பாரக் ஒபாமாவின் ‘நம்மால் முடியும்’  ஆகியவை இவரது தமிழாக்கங்களில் சில

இவரது வலைத்தளம்    பறவையின் தடங்கள்

இவரது பிருந்தாவனில் வந்த கடவுள் என்னும் கதை

ஏற்கனவே அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருந்ததற்கு மரியாதை செய்யும் பொருட்டு சரியாக முப்பது நிமிடங்கள் மட்டுமே தாமதமாக வந்து சேர்ந்தது பிருந்தாவன் எக்ஸ்ப்ரஸ்.

என்று தொடங்குகிறது.

தூண்களைச் சுற்றிய சிமென்ட் தளத்தில் அமர்ந்து, சூட்டையும் பொருட்படுத்தாமல், அரட்டை அடிக்கும் பெண்கள், இருபது வருடங்களாக பிச்சை எடுக்கும் கையிழந்த பிச்சைக்காரன் ஆகியோரை கவனித்தபடியே  தனது  எஸ். 6  கோச்சில்   72 வது இருக்கையை அடைகிறான் அமீர். ஆனால், அவனது இருக்கையில் தெனாவெட்டாக ஒரு மார்வாடி அம்மா சம்மணம் கொட்டி உட்கார்ந்து சாவகாசமாக இரண்டு மூன்று சப்பாத்திகளை உள்ளுக்கு தள்ளிக்கொண்டிருந்தது. இவன் டிக்கெட்டைக் காண்பித்ததும் எதிரில்  உட்கார்ந்து இருந்த அவள் குடும்பத்தினர் ஏதோ சொல்ல வேறு இருக்கைக்குப்  போய்விட்டாள்.

அவளுக்கு எப்படியும் ஐம்பத்தெட்டிருக்கும். கழுத்தில் டாலர் செயின், கைகளில் வளையல்கள் மோதிரங்கள், பாதங்களில் கொலுசு, வாயில் சப்பாத்தி. பாவாடை கட்டி தாவணி போட்டிருந்தாள். அந்த உடை வேண்டுமென்றே வயதைக் குறைத்துக் காட்டும் முயற்சியாகத் தோன்றவில்லை. என்னவோ ஒரு பொருத்தம் அவளுக்கும் அந்த உடைக்கும் இருந்தது. அது உடலை மீறிய பொருத்தமாக இருந்தது. ஒரு வயதான மார்வாடிக் குழந்தை போலத்தான் அவள் இருந்தாள்.

 

சமீபத்தில் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ஜே.கிருஷ்னமூர்த்தியின் ‘தெரிந்ததிலிருந்து விடுதலை’  புத்தகத்தை வெளியில் எடுத்தான்.

எதிரிலிருந்தவர், அந்தப் புத்தகத்தைப் பார்க்கலாமா என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார். தான் ஜே கே வின் முப்பது புத்தகங்கள் வாசித்துள்ள ரசிகன் என்று கூறி ‘  நீங்க ஜே.கே. விரும்பி படிப்பீங்களா சார்?’ என்று கேட்கிறார். இவனோ , “நானும் படிச்சிருக்கேன்” என்கிறான் பட்டும்படாமல்.

அவரோ விடாப்பிடியாக இருவரும் சந்தித்தது இறைவனின் அருள் என்கிறார், இவன் தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறான்.

பின் ஏன் ஜே கே படிக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, அவர்  அழகாக இருக்கிறார் என்பதால் என்று பதிலளிக்கிறான்.

அவருடயை அம்புகளைப் பார்த்தால் அவர் யுத்தத்துக்குத் தயாராகிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது. வேறு வழியில்லாமல்தான் அவர் போனால் போகுதென்று கடைசியில்சார் போட்டுப் போட்டு பேசினார் என்பதும் விளங்கியது. ஆனால் ஒரு நாத்திகனை இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் ஆத்திகனாக மாற்றிவிட்ட சந்தோஷத்தை அடையாமல் அவர் ரயிலை விட்டு இறங்க மாட்டார் என்று தோன்றியது. சரி அழுக்குக் கடவுளா சுத்தமான சாத்தானா பார்த்துவிடலாம் என்று அவனும் முடிவு செய்து கொண்டான்.

சென்ட்ரல் வரப் பத்துநிமிடம் இருக்கும் வரை வாதம் தொடர்கிறது. அப்போது ஊனமுற்ற ஒரு ஐந்தாறு வயது சின்னப் பையன் தனியாக பிச்சை கேட்டு வருகிறான். சிலர் சில்லரை போட்டனர். சிலர் பார்க்காத மாதிரி இருந்தனர். அவனுக்கு ஏதாவது பணம் தரலாம் என்று எண்ணி அமீர் தன் தோள்பையைத் திறந்து காசைத் தேடியபோது  ……..

kiruba3

யாரும் எதிர்பார்க்காத வகையில் அதை அந்த அம்மா செய்தாள். அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அம்மாதான். சட்டென்று அந்தப் பையனை வாரி எடுத்தாள். அணைத்த மாதிரி தூக்கி எதிரில் உட்காரவைத்தாள். தனது பிஸ்லேரி பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் முகத்தைக் கழுவினாள். பின் ஒரு துணியை எடுத்து அவன் முகத்தைத் தான் பெற்ற பிள்ளையின் முகத்தைத் துடைப்பதைப் போலத் துடைத்தாள்.

முகம் சுத்தமான பிறகு ஒருயூஸ்அன்த்ரோதட்டை எடுத்து தன் எவர்சில்வர் தூக்குச் சட்டியைத் திறந்து அதிலிருந்து சோறு கீரை கறி எல்லாம் எடுத்து வைத்தாள். பிசைந்து ஊட்டி விட்டாள். இப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத பையனும் ஒரு எதிர்ப்பும் காட்டாமல் சாப்பிட ஆரம்பித்தான். ரொம்ப பசி போல.

 

எல்லா வாய்களும் விவாதங்களும் நின்று போயிருந்தன. இந்த காட்சியை அந்த ‘கோச்’சே ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருந்தது.

கடவுள் இருக்கிறானா இல்லையா என்ற கேள்விகளையும் விவாதங்களையும் அழித்துவிட்டு அவள் இறங்கிச் செல்ல,  இதுதான் சமயம் என ஜே கே ரசிகரிடமிருந்து தப்பிக்கிறான் அமர்.

ஆனால் பட்டுப்புடவை கட்டி நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து தன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த கடவுளோடு பிருந்தாவனில் பிரயாணம் செய்வோம் என்று அமீர் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அடிடாஸ் பையோடு கடவுள் இறங்கிப் போன திசையையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு நின்றான்.

என்று கதை முடிகிறது.

===================================================

இவரது குறுநாவல்    குட்டியாப்பா  கட்டாயம் படிக்கப்படவேண்டிய படைப்பு.  இணையத்தில் கிடைக்கும் இன்னும் சில கதைகள்

தேவதையும் பூனைக்குட்டியும்

கங்கா ஸ்நானம்

அவரோகணம்

 

அம்மா ! அம்மா ! நீங்கள் இல்லாத இடமே இல்லை !!

தமிழனுக்கு மட்டும் ஏன்  இந்தத் தலைக்  குனிவு ?

பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளின் காலை வருடும் பூனையாக நாயாக ஏன் அவன் தன்னைத் தானே தாழ்த்திக் கொள்கிறான்  ?

தலைவர்களைக் கடவுளாக நினைக்கும் மனப்பாங்கு நம்மிடையே ஊறிப் போய்விட்டதா?   உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஒரு கலாசாரம் நம் தமிழகத்தில் மட்டும் ஏன் தழைத்து வேரூன்றி நிற்கிறது ?

ஒபாமாவை எந்த அமெரிக்கனாவது  ஜீசஸ் என்று சொல்லியிருக்கிறாரா?   இல்லை பிரிட்டிஷ் ராணியைப் பார்த்து  யாராவது மேரி மாதா  என்று சொல்லியிருக்கிறார்களா?

நம்முடைய தலைவர்களின் விளம்பர ஆசை ஆபாசமாக இல்லை ?

பிளாஸ்டிக் மாசில் மிகவும் அசிங்கமான  மாசு நமது கட்  அவுட்டுக்களும் , பேனர்களும் தான்.

ரஜினிகாந்த்தின் கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யும் செம்மல்கள் நிறைந்த நாடு இது.

கலைஞர் முதல்வராக இருந்த போது கவிஞர்களும், மற்றவர்களும்  அவரை சந்திரன், சூரியன், தானைத் தலைவன், என்று  அவர் காது குளிரும் வரை – மக்கள்  காது கூசும் அளவிற்குத் துதி பாடிய நாடு இது ! தினம் ஒரு பாராட்டு விழா இல்லையென்றால்  அவருக்குத் தூக்கமே வராது போலும்.

இன்று  அம்மா  நேரம்.  அவருக்கு வைக்கப் பட்டிருக்கும் ப்ளெக்ஸி பேனர்களை கூரையாக வைத்தால்  உதய சூரியனின் ஒளி    தமிழகத்தில் படவே படாது.

கட் அவுட்டுகளில் பொறித்துள்ள வாசகங்களை நமது கவிஞர் பாஷையில் சொன்னால் – எழுதிய பேனாக்களுக்கே கூச்சம் வரும்;  மேகத்துக்கே கண்ணீர் வரும்; நிலவுக்கே குளிரும்; சூரியனுக்கே வியர்க்கும்;  மின்னலுக்கே  கண் கூசும்; இடிக்கே நடுக்கம் வரும்.

அரசுத் திட்டங்கள் எல்லாம் இந்திரா திட்டம், கலைஞர் திட்டம் , அம்மா திட்டம் மோடி திட்டம் என்று சொல்ல இவர்களுக்கு உரிமை இருக்கிறதா ?

 

சமீபத்தில் 68 பேருக்கு ஒரே மேடையில் நடைபெற்றத  திருமண விழாவில் Coimbatore: Couples at a mass marriage ceremony organised to mark the AIADMK leader and Tamil Nadu Chief Minister J Jayalalithaa's 68th birthday at Udumalpet in Coimbatore on Friday. PTI Photo (PTI2_5_2016_000112B)அம்மாவின் புகைப்படம் மணமக்கள் அனைவர் தலையிலும் தலைப் பட்டத்தோடு அமைக்கப்பட்டுள்ளதாம். அம்மா தலை(மை)யில் திருமணம் என்பதைத் தொண்டர்கள் தவறாகப் புரிந்து கொண்டார்களோ?

கலக்கராங்க!!

 

இலக்கிய வாசல் பத்தாவது நிகழ்வு – “புத்தக உலகம்” – ரவி தமிழ்வாணன்

IMG_0924IMG_0920IMG_0919IMG_0921

குவிகம் இலக்கிய வாசலின் பத்தாவது நிகழ்வான “புத்தக உலகம்” திரு  ரவி தமிழ்வாணனின் சிறப்புரையுடன் ஜனவரி இருபத்து மூன்றாம் நாள் திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையஅரங்கில் நடைபெற்றது.

சுந்தரராஜன் வந்திருந்தவர்களை வரவேற்று , குவிகம் இலக்கிய வாசலில் இதுவரை நடைபெற்ற நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.முக்கியவிருந்தினரான திரு ரவி தமிழ்வாணன் அவர்களின் வெற்றிப் பாதைகளையும் சுட்டிக் காட்டினார்.

திருமதி பத்மஜா ஸ்ரீராம் அவர்கள் கவிதை வாசித்தார்.

 திருமணம் ஆன பெண் புகுந்த வீடு சென்ற பிறகு வார விடுமுறையில் தன்அன்னையையும், பாட்டியையும் பிறந்த வீட்டில் பார்க்கும் போது   அவள்மனதில் ஏற்படும் பாசப் பிணைப்பைக்  கவிதையாய் – உணர்வுகளாய் நம்முடன்பகிர்ந்து கொண்டார்.

திரு அழகியசிங்கர், ஒரு பெண் தன்னைக் காதலிக்கும் இரண்டு பேர்களில் யாரைத் திருமணம் செய்து கொள்ளுவது என்ற தவிப்பை விறுவிறுப்பான கதைமூலம் நமக்கு வழங்கினார்.

 

திரு ரவி தமிழ் வாணன் ” புத்தகஉலகம்” என்ற தலைப்பில் தமிழ்ப் புத்தகங்கள்  வாசிக்கும் களத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து விளக்கினார். எழுத்தாளர்களுக்கு மதிப்பும் மரியாதையும் நிறைந்த முதல் காலம்.  புத்தகங்கள் படிப்பதையே தவிர்க்கும் இன்றையகாலம். இணைய தளங்கள் ஆதிக்கத்தில் வரும் எதிர் காலம் ……

அவரது சிறு உரையைத் தொடர்ந்து வாசகர்கள் ஒவ்வொருவரும் குழந்தைகள் இலக்கியம், இளம் பிராயத்தினருக்குத் தேவையான புத்தகங்கள், தமிழ்க் கல்வி கட்டாயமாக்கப்பட  வேண்டியதின் அவசியம், நடமாடும் புத்தகாலயம் அமைப்பது போன்ற பல புத்தகம் சம்பந்தப்பட்ட கேள்விகளைச் சரமாரியாக எழுப்பினர் .

 

ரவி தமிழ்வாணன் அவர்களும் மற்றையோரும் அதற்கான விடைகளைப் பகிர்ந்து கொண்டனர். மணிமேகலை பிரசுரம் நடத்தும் எழுத்தாளர் – பதிப்பாளர் முதலீட்டு செய்யும் முயற்சியையும் திரு ரவி விளக்கினார்.
சுந்தரராஜன் அனைவருக்கும் நன்றி கூற கூட்டம் இனிது முடிந்தது.
கலந்துரையாடல் என்பதற்கு இந்தக் கூட்டம்  ஓர்  அருமையான உதாரணமாகஇருந்தது.

அன்றைய தி. நகர்

நல்லி குப்புஸ்வாமி அவர்கள் எழுதிய தி நகர் அன்றும் இன்றும் என்ற புத்தகத்திலிருந்து  சில  சுவையான தகவல்கள்: 

.

 • தி .நகர்   1923-25 இல் நிர்மாணிக்கத் திட்டம் தீட்டப் பட்டது. .
 • 1916இல் தி.நகரில் ஒரு பெரிய ஏரி  இருந்தது.  
 • 1920இல் சுப்ரமணிய ஐய்யர் என்பவரிடம் நூறு ஏக்கருக்கு  மேல் தி.நகரில்  இடம் இருந்ததாம் .
 • மாம்பலம் தி.நகரை விடப்  பழமையானது. 
 • 1920இல் ஒரு  மனையின் விலை 500 ரூபாய்  தான்..
 • 1933 இல், பாண்டிச்சேரி சொக்கலிங்க முதலியார் 10 கடைகளைக் கட்டினார். அதுவே பாண்டி பஜார் ஆயிற்று. .
 • 1948 இல் ரங்கநாதன் தெரு ஒரு அக்ரகாரமாக இருந்தது. .
 • இரண்டாம் உலகப் போரின் போது  சென்னை உயர் நீதி மன்றம் தி.நகரில்  இருந்த ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வெண்ட்டுக்கு மாற்றப்பட்டது. .
 • 1930இல் தி.நகர்  கிளப்பிற்காக 14 மனை இடம் அரசாங்கத்திடமிருந்து வாங்கப்பட்டது. 
 • 1930 களில் இரவு 10 மணிக்குப் பிறகு தி.நகரில் நரிகளின் நடமாட்டம் இருந்து வந்தது. .
 • இப்போது  இருக்கும் கண்ணதாசன்  சிலைக்குக் கீழே ஒரு பெரிய பொதுக் கிணறு இருந்தது. 
 • 1930 களில் மக்கள் பனகல்  பூங்காவில் அமர்ந்து  7.15 மணிக்கு செய்திகள் கேட்பது வழக்கம்.
 • இரவு எட்டு மணிக்குப் பிறகு தி.நகரில்  மனித நடமாட்டமே இருக்காது. 

நகைச்சுவை நாவல்கள் – நாடகங்கள் -கதைகள் – பாரதியார்

 

தமிழில் நல்ல நகைச்சுவை எழுத்தாளர்கள் , நாடக ஆசிரியர்கள் தங்கள் படைப்புக்கள் மூலம் நமது சிரிப்பு எலும்பை மீட்டிக் கொண்டே இருக்கிறார்கள் ! மிகவும் ஆழமாக, தீவிரமாகக் கதை சொல்லும் எழுத்தாளர்களும் இடை இடையே  நகைச்சுவையைக் கலக்கத் தவறுவதில்லை.

ஆனால் நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்  துமிலன்,  நாடோடி, எஸ் வி வி,  தேவன் , வடுவூரார்,  கல்கி,  சாவி , கடுகு , பாக்கியம் ராமசாமி, ஞானசம்பந்தன்,  தேனி எஸ். மாரியப்பன், கிரிஜா  மணாளன்,  சோ,  கிரேஸி மோகன்,  ஒய் .ஜி.மகேந்திரன், மெரினா போன்ற எண்ணற்றவர்கள்.

நாம் தமிழ் எழுத்தாளர்களின் நகைச்சுவை உணர்வுகளை இந்தக் கட்டுரைகளின் மூலம் பார்ப்போம்.

 

இந்த மாதம் நாம் பாரதியாரின் சிரிப்பு அலை தெறிக்கும் கதை கவிதைகளைப் பார்ப்போம்.

சுப்பிரமணியன் ( பாரதி )  சிறு வயதில் பள்ளீயில் சுமாராகத் தான் படித்து வந்தார். கவிதைகள்  மட்டும் மழை போலப் பொழிவார். ஆசிரியர் ஒரு முறை ” மேகம் மழையைப் பொழியறது போல, நீ கவிதை சொல்வேன்னு கேள்விப்பட்டேன். ஆனால், நான் கேட்ட கேள்விக்கு உன்கிட்ட பதிலே இல்லையே”ன்னு கேட்டார்

“மெத்தப் படித்த ஆசிரியரே, ஒரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க. மேகங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தத்தான் மழை பொழிகின்றன. நீங்க கேள்வி கேட்கிறதால இல்ல”ன்னு பட்டென்னு பதில் சொன்னான் சுப்ரமணியன். ஆனா, இறுதிப் பரீட்சையில் தோல்வியைத் தழுவினார்.

சுப்பிரமணியன்  ஒருமுறை எல்லோரும் ஆச்சரியப்படுகிற மாதிரி அற்புதமாக வாதம் செய்து பேசினார். அவருடைய பேச்சுத் திறமை எதிராளியையும் வசப்படுத்தியது.  அந்த விவாதம் முடிந்ததும் , ஒரு முதிர்ந்த பண்டிதர் எழுந்து  “நீ உன் வயதை மீறின புத்திசாலித்தனத்தோட இருக்கிறாய். அதனால், நீ ஒரு பாரதி (அனைத்தும் அறிந்த பண்டிதர்)” என்று பட்டம் சூட்டினார்.

காந்திமதிநாதன் என்ற ஒரு பெரியவருக்குப் பாரதியைப் பிடிப்பதில்லை. ஒரு நாள் பாரதியிடமே ” பாரதி சின்னப் பயல்” என்று கவிதை பாடும்படிக் கூறினார். பாரதியாரும் சளைக்காமல் , காந்திமதிநாதனைப் பார் – அதி (பாரதி) சின்னப்பயல்” என்றதாக ஒரு கதை உள்ளது.

இன்னொரு  கதையின் ஒரு பகுதி:

முன் பகுதியில் ஒரு ராயர் பெரிய குடும்பத்தோடிருந்தார், அவருக்குப் பகல் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கும்படியாகத் தபால் கச்சேரியிலோ, எங்கேயோ ஓர் உத்தியோகம் உடம்பிலே கோபிமண்முத்திரைகள் எத்தனையோ, அத்தனை குழந்தைகள். அவர் மனைவி மறுபடியும் கர்ப்பம். அந்த முற்றத்திலே ஒருபசுமாடு. அத்துடன் ஒட்டுக்குடியாக அவருடைய பந்துக்கள் சிலர் வசித்தார்கள்ராயருக்குக் காச நோயாதலால்அவர் இருமிக் கொண்டேயிருக்கிற சப்தம் ஓயாமல் கேட்கும். அவருடைய குழந்தைகள் ஒன்று மாற்றி ஒன்றுஅழுது கொண்டேயிருக்கும் கர்ப்பிணியாகிய அவர் மனைவி இடையிடையே விழித்துக் குழந்தைகளையோ,அல்லது ராயரைத்தானே, கன்னட பாஷையிலே திட்டி விட்டு மறுபடியும் உறங்கி விடுகிறாள்.”

வரும் வழியிலே ஜட்காவண்டிகள், துரைகள் போகும் கோச்சுகள். புழுதி, இரைச்சல், துர்நாற்றம் இவற்றையெல்லாம் கடந்துமுன்பகுதியிலே, பசுமாடு, ராயர் வீட்டம்மாள் குழந்தைக் கூட்டங்கள் முதலிய விபத்துக்கெல்லாம் தப்பிப் பின்புறத்திலே மெத்தைக்கு வந்துசேர்ந்தேன்.”

ஆறில் ஒரு பங்கு என்னும் சிறு கதையில், ஸ்ரீமான் நாயுடுவுக்கு மூன்று வருஷத்திற்கொருமுறை ஆபீஸீல் பத்து ரூபாயும், வீட்டில் ஒருகுழந்தையும் பிரமோஷன்என்னும், வாக்கியத்தைப் படிக்கும்போது குலுங்கச் சிரிக்காத மனிதர்களை ஏதேனுமொரு கண்காட்சிசாலைக்குத்தான் அனுப்ப வேண்டுமென்று சிபாரிசு செய்வேன்.

உதாரணத்துக்கு இங்கே கொஞ்சம், சின்னச் சங்கரன் கதையிலிருந்து:

சாயங்காலத்துக் கச்சேரி முடிந்தவுடன் கவுண்டரவர்கள் குதிரை வண்டியிலேறி ஊரைச் சுற்றிச் சவாரி செய்துகொண்டு வருவார். கவுண்டநகரம் சரித்திரப் பெருமையும் ‘நக்ஷத்திர மஹாத்மியமும்’ வாய்ந்த ஊராயினும் அளவில் மிகவும் சிறியது. ஐந்து நிமிஷத்துக்குள் குதிரை வண்டி இதைச் சுற்றி வந்துவிடும். இதற்குப் பன்னிரண்டிடத்தில் ‘வாங்கா’ ஊதுவார்கள். இந்த வாங்கா என்பது பித்தளையில் ஒருவித ஊது வாத்தியம். சிலர்  இதனை ஊதிக்கொண்டு ஜமீந்தாரவர்களின் வண்டி முன்னே குடல் தெறிக்க ஓடுவார்கள்.

சில தினங்களில் பல்லக்கு சவாரி நடக்கும். இன்னும் சில சமயங்களில் ஜமீந்தாரவர்கள் ஆட்டு வண்டியிலே போவதுண்டு. ஆட்டுவண்டி சவாரிக்கு உதவுமா என்று படிப்பவர்களிலே சிலர் வியப்படையக் கூடும். இரண்டு ஆடுகளைப் பழக்கப்படுத்தி, அவற்றுக்கிணங்க ஒரு சிறு வண்டியிலே பூட்டி, வண்டி, ஆடுகள் இவற்றைச் சேர்த்து நிறுத்தினால், அவற்றைக் காட்டிலும் குறைந்த பக்ஷம் நாலு மடங்கு அதிக நிறைகொண்ட ஜமீந்தார் ஏறிக்கொண்டு, தாமே பயமில்லாமல் ஓட்டுவார். குதிரைகள் துஷ்டஜந்துக்கள். ஒரு சமயமில்லாவிட்டாலும் ஒரு சமயம் கடிவாளத்தை மீறி ஓடி எங்கேனும் வீழ்த்தித் தள்ளிவிடும். ஆடுகளின் விஷயத்தில் அந்த சந்தேகம் இல்லையல்லவா?

இன்னும் சில சமயங்களில் ஜமீந்தார் ஏறு குதிரை சவாரி செய்வார். இவருக்கென்று தனியாக ஒரு சின்னக் குதிரை மட்டம் – ஆட்டைக் காட்டிலும் கொஞ்சம் பெரிது – தயார் செய்துகொண்டு வருவார்கள். அதன்மேல் இவர் ஏறி உட்கார்ந்தவுடன் அதற்கு முக்கால்வாசி மூச்சு நின்றுபோகும். பிரக்கினை கொஞ்சம் தான் மிச்சமிருக்கும். எனினும் இவருக்குப் பயம் தெளியாது. இவருடைய பயத்தை உத்தேசித்து முன்னும் பின்னும் பக்கங்களிலுமாக ஏழெட்டு மறவர் நின்று அதைத் தள்ளிக்கொண்டு போவார்கள். ஜமீந்தார் கடிவாளத்தை ஒருகையிலும் பிராணனை மற்றொரு கையிலும் பிடித்துக்கொண்டு பவனி வருவார்.

பாரதியார் , குயில் பாட்டில்  குரங்கு ஜாதி மனிதனை விடச் சிறப்பு வாய்ந்தது என்று சொல்லும் போது ‘வாலுக்குப் போவதெங்கே ‘ மற்றும் ‘திருவால்’ என்ற அவர் வரிகள்  நகைச்சுவையின் சிகரம்

வானரர் தஞ் சாதிக்கு மாந்தர் நிகரா வாரோ?
ஆனவரையு மவர் முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை
எட்டுடையால் மூடி யெதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம்
ஆசை முகத்தினைப் போலாக்க முயன்றிடினும்,
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில் ஏறத்
தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும்,
வேறெதைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே
வானரர்போ லாவாரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை யிதற்கு நிகராமோ?
பாகெயிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு, கந்தைபோல்
வேகமுறத் தாவுகையில் வீசி யெழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ
சைவசுத்த போஜனமும் சாதுரியப் பார்வைகளும்
வானரர் போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?

 

 

டப்ஸ்மாஷ் – நன்றி ஹிந்து

குறும்படத்திற்குப் பிறகு , செல்ஃபிகளுக்குப் பிறகு  இப்போ செலவே இல்லாத அரை  –  கால் நிமிடத்தில் ஓடும் படம் தான் டப்ஸ்மாஷ்.

உங்களுக்குப் பிடித்த நடிகரின் வசனத்தை நீங்களே  பேசி நடிப்பதுdub1 தான் டப்ஸ்மாஷ் .

இதற்கான ஆன்ராய்ட்  பயன்பாடு (ஆப் ) இந்தக் காரியத்தை மிகவும் சுலபமாக்கிவிட்டது.

சமூக வலை தளங்களில் மற்றும்  மொபைல்களில் இப்போது அதிகமாக வலம் வருபவை இந்த டப்ஸ்மாஷ்களே ! 

ஹிந்து தனக்குப் பிடித்த டப்ஸ்மாஷ்களை இணைத்து ஒரு சிறு வீடியோவை தயாரித்துள்ளது. 

அதைப் பாருங்கள். பார்த்து மகிழ்ந்து பங்குபெற்ற கலைஞர்களுக்கும் ஹிந்துவுக்கும்  நன்றி கூறுங்கள் !

 

 

 

ஒரு நாளைக்கு 36 மணி நேரம் பெறுவது எப்படி?

 

எனக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போத மாட்டேன் என்கிறது;  இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்தால் இன்னும் என்னென்னவோ சாதிப்பேன்  என்று சொல்லும் வாலிப வயோதிக அன்பர்களே ! அம்மணிகளே!

இதே 24 மணிநேரம் தான் எடிசனுக்கும், நியூட்டனுக்கும், பில்கேட்ஸுக்கும், காந்திக்கும்,  நேருவுக்கும், மோடிக்கும் இருந்தது / இருக்கிறது . அவர்கள் சாதிக்கவில்லை?

இருந்தாலும் நீங்கள் கேட்டுக்கொண்டபடி உங்களுக்குத் தருகிறோம்   36 மணி நேரம் ! பிரபல அறிஞர்   ஒருவர்  ( how to make 36 hours  a day  by Jon Bischke) கூறுகிறார்.

கீழே குறிப்பிட்ட 10 முயற்சிகளைக் கையாளுங்கள் ! உங்களுக்கு 12 மணி நேரம் அதிகமாகக் கிடைக்கும்.

மிச்சம்

 1. உங்கள் தூக்கத்தைச் சரிப்படுத்துங்கள். 8 மணிநேரம் (10 – 6 )                    தூங்குவதை இரண்டு வகையாகப் பிரியுங்கள். இரவு 10 – 4                       1.5   தூங்குங்கள். பகலில் மதியம் அரை மணிநேரம் தூங்குங்கள்.
 2. உணவைச் சரிப்படுத்துங்கள் .  குறைவான மகிழ்ச்சியூட்டும் உண வை  வைட்டமின்களுடன் உண்ணுங்கள். அது உங்கள் காரியத்தை வேகமாகச் செய்யவைக்கும்.  1.5
 3. பல வேலைகளை ஒரேசமயம்  செய்யுங்கள்                                                       2.0
 4. வேலைகளைச் செய்யுமுன் திட்டமிட்டுச் செய்யுங்கள்                                 1.0
 5. படிக்கும் வேகத்தை அதிகப்படுத்துங்கள்.                                                             0.75
 6. புதிய யுக்திகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.                                                           1.5
 7. கம்ப்யூட்டரின் பணிகளை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்                  0.5        உதாரணமாக ஷார்ட் கட்களை உபயோகியுங்கள்.
 8. டைப்பிங் கற்றுக் கொள்ளுங்கள்                                                                              0.75
 9. உங்கள் டி.வி / வாட்ஸ் அப் / பேஸ் புக் இவற்றை ஒரு நாளைக்கு          2.0       ஒரு முறை மட்டும் பாருங்கள்
 10. தேவையான போது மற்றவர்களிடமிருந்து உதவியைப் பெற்றுக்           0.5        கொள்ளத் தயங்காதீர்கள்.

 

இந்தப் பத்துக் கட்டளைகளையும் கடைப்பிடித்தால் உங்களுக்குப் பன்னிரண்டு மணிகள் அதிகமாகக் கிடைக்கும்.

செய்வோமா? ஜமாய்ப்போம் !!

 

 

கம்பனிடம் கண்ணதாசன் ரசித்த காதல் வர்ணனைகள்

கம்ப ராமாயணத்தில் பால  காண்டத்தில் 18வது படலம் உண்டாட்டுப்படலம்.

சீதை – ராமர் திருமணத்திற்காக மிதிலைக்கு வந்த தசரதனது படை வீரர்கள் தங்களோடு தங்கள் மனைவிகளையும் அழைத்து வந்தனர். மாட மாளிகையில் மலர்ச் சோலையில் அவர்கள் மதுவருந்தி மயங்கித் திளைத்தனர். சீதை – ராமன் திருமண விழாவைக் கொண்டாட மதுவை அவர்கள் உண்டாடுகின்றனர். அந்த மது மயக்கத்தைக் கம்பர் எப்படி வர்ணிக்கிறார் தெரியுமா? அவையே கண்ணதாசன் தான் மிகவும் ரசித்த வர்ணனைகளாகத் தெரிவிக்கிறார்.

 

இதே வர்ணனைகளை அண்ணாவும் பார்த்துவிட்டு ஆபாசத்தின் சிகரம் என்று தனது கம்பரசம் என்ற புத்தகத்தில் விளாசித் தள்ளியுள்ளார்.

கம்பனை – ராமாயணத்தை – ஆத்திகத்தைச் சாட அண்ணாவுக்கு இவை வசைகள்.

ஆனால் கவிஞனுக்கோ அவை இலக்கியச் சாரல். இன்பத்தேன்

 

 

கண்ணதாசன் கண்ணசைவில்  கம்பனின் காமத்துப்பாலைக் காணலாமா?

அது என்ன ?

 • வெள்ளைவெளேர் என்று கள்வெள்ளம் உலகமெல்லாம் பரவி ஓடுகிறதா?
 • சங்கீதத்திற்கு உயிர் வந்து உலகமெலாம் பரவி நிற்கிறதா?
 • மனதிலே காமவெறி ஊறி பெருக்கெடுத்து ஓடி உலகமெலாம் பரவி விட்டதா?
 • ஆம். அன்று மிதிலையில் தோன்றிய வெண்ணிலவின்  ஒளி வெள்ளம் உலகமெலாம் பரவி நிற்கிறது.

 

 • கட்டிலில் விளையாடிக் கொண்டிருக்கும் கணவனுக்கும்  மனைவிக்கும்  அது கள்ளைப்போல் இனித்தது.
 • விட்டுப் பிரிந்த காதலனுக்கு அது விஷம் போல் இருந்தது.
 • ஊடல் செய்துகொண்டிருந்த காதல்களுக்கு அது தூது போனது
 • மன்மதனின் வேண்டுகோளின்படி அது இதையெல்லாம் செய்தது.

அது எது?    நிலவு

 

ஒரு பாடல் : 

கணவனோடு கலவி செய்து களிக்க வேண்டும் என்ற ஆசையில் பெண்கள் கள் அருந்துகிறார்கள்.ஒரு பெண் ஒரு கிண்ணத்தை எடுக்கிறாள். அது சந்திரனின் ஒளி பட்டு வெள்ளையாகக் காட்சியளிக்கிறது. அவள் தன் சிவந்த கையால் கிண்ணத்தை எடுக்கிறாள். கிண்ணம் சிவப்பாகிறது. இப்போது அவள் அந்த மதுவைத் தன் வாயிலே ஊற்றிக்கொள்கிறாள். அவள் விழியும் சிவப்பாகிவிட்டது.

 

இன்னொரு பாடல்

அற்புதமான பெண் அவள். மதுவை அருந்திவிட்டாள். வந்தது வம்பு. அக்னிக் குண்டத்தில் நெய் ஆகுதி செய்தது போலாகிவிட்டது . நெஞ்சில் எரிந்த காம நெருப்பில் மது என்னும் நெய் விழுந்து காமத்தைப் பன்மடங்கு எரியச் செய்துவிட்டதாம்.

 

இன்னொருத்தி  வெள்ளி மதுக்கிண்ணத்தில் தன் முகத்தைப் பார்க்கிறாள். போதையில் தடுமாறித்  தன் பிம்பத்தைத் தோழி என்று எண்ணி , ‘அடி தோழி!, நீயும்  என்னுடன் மது  அருந்த  வா’ என்று அழைக்கிறாளாம்.

 

இன்னொரு இளம் பெண் சிவந்த இதழில் சிரித்த முகத்துடன் மதுக் கோப்பையைக் கையில் எடுக்கிறாள். அதிலும் அவள் முகம் தெரிகிறது. ‘ நான் அருந்தும் மதுவை யார் அருந்த வந்தது என்று,  தன்  பிம்பத்தின் மீதே கோபம் கொள்கிறாளாம். பின்னர் தன் நிழலைப் பார்த்து  ‘ அடி பைத்தியக்காரி ஜாடியில் வேண்டும் மட்டும் கள் இருக்கிறது. அதைக் குடிக்காமல் நான் குடித்த எச்சலை ஏன் குடிக்க வருகிறாய்? என்று கேட்டாளாம்.

 

மற்றொருத்தி கிண்ணம் ஒன்றைக் கையில் ஏந்தி நிற்கிறாள்   கள் ஊற்றுவார் என்று எதிர்பார்த்து. நிலவின் பால் ஒளி கிண்ணத்தில் பாய்கிறது. ‘அடடா, கிண்ணம் நிரம்பிவிட்டதே’ என்று அவளும் கிண்ணத்தை வாயில் வைத்துக் குடிக்கிறாளாம்.

 

மற்றொரு கூடல் பாடல்.

வீட்டுக்கு வந்த நாயகன் நாயகி படுத்திருந்த பஞ்சணையைப் பார்க்கிறான். அதில் இருந்த மலர்க்கூட்டம் அத்தனையும் கருகி இருக்கிறது. நாயகியின் காம வெப்பத்தால் உடல் சூடேறி அந்தச் சூட்டில் மலர்கள் கருகி விட்டனவாம்.

 

வீடு திரும்பிய கணவனை மனைவியும் அவளுடைய சாந்து தடவிய தனங்களும் வரவேற்றனவாம். அவளின் உடல் சூட்டில் சாந்து உலர்ந்து போய் விட்டதாம். பட்டாபிஷேகக் கலசங்கள் போல் அவை அவனுக்கு ஆசி  கூறுகிறதாம்.

 

கணவனைப் பிரிந்து காமத்தில் துடிக்கும் பெண் ஒருத்தி தாங்க முடியாத நிலையில் அவனுடன் பள்ளி கொள்ள அவனைத் தேடி வருகிறாள். சத்தம் கேட்கக்கூடாது என்று மேகலை, சிலம்பு எல்லாவற்றையும் கழற்றிவிட்டு ரகசியமாக வருகிறாள். அப்படியும் அவளை ஒருவன் பார்த்து விடுகிறான்.

அவன் .. சந்திரன்

 

இன்னொருத்தி வெகு நாட்கள் கழித்து வந்த கணவன் மார்பில் மாலைகளைப் போட்டு இறுக்கக் கட்டினாளாம். ‘என் மார்பைத் தழுவாத  தோளுக்கு இது தண்டனை ‘ என்றாளாம்.

 

இன்னொரு பாடல்

காதலர்கள் இருவரும் முன்பு உடம்பு இரண்டாய் ஒரே உயிராய் இருந்தார்களாம். இன்றோ  இரண்டு உடம்பும்  ஒரே உடம்பாய் மாறி இரண்டறக் கலந்துவிட்டார்கள். என்கிறாராம்.

 

இன்னொரு பேதைக்கு மன்மதனின் அம்பு பட்டு அவள் மார்பு புண்ணாகி விட்டதாம்.அந்தக் காயத்துக்கு ஒத்தடம் கொடுப்பது போலத் தன் இரு கைகளையும் மார்பில் வைத்துக் கொள்கிறாளாம் . பிறகு அழுகிறாள் , சிரிக்கிறாள், தோழியின் காலில் விழுந்து காதலனிடம் தூது செல்லடி என்று கெஞ்சுகிறாளாம்.

 

கலவி விளையாட்டு நடக்கிறது. மேகலையை எடுத்து எறிந்தார்களாம். ஏன் தெரியுமா? ரகசியங்கள் நடக்கிற இடத்தில் சத்தம் போடுபவர்கள் இருக்கலாமோ ?  என்று தான்.

 

அவன் குமரன். அவள் குமரி. இருவருக்கும் காதல் போர் . நீ ஜெயிப்பதா நான் ஜெயிப்பதா என்று கலவிப்போர் நடக்கிறது. சம அளவு சக்தி கொண்டவர்கள் போரில் இறங்கிய பிறகு யார் முதலில் வெற்றி பெறுவார்கள்?

 

ஆனந்தம் தாங்காமல் அவள் தன் கணவனின் மார்பைக் காலால் உதைக்கப் போகிறாள். அவனோ , தான்  அணிந்திருக்கும் மலர் மாலை அவள் காலில் குத்திவிடக் கூடாதே என்று தன் மார்பைக் கையால் மூடிக் கொள்கிறானாம். அதைப் பார்த்த அவளுக்கு மேலும் கோபம். ‘ நீ உன் மார்பில் வேறொரு காதலியை ஒளித்து வைத்திருக்கிறாய்! நான் உதைத்தால் அவளுக்கு நோகும் என்று தானே உன் மார்பை மூடிக் கொள்கிறாய் ? என்று சினந்தாளாம்.

 

இன்னொருத்தி , தன் மார்பில் சாய்ந்திருக்கும் கணவனைக் கட்டித் தழுவி ஆனந்த மயக்கத்தில்  எங்கே தன்னுடைய தனங்கள் அவனுடைய மார்பில் குத்தி முதுகு வழியாக வெளியே வந்திருக்குமோ என்று தடவிப்பார்த்தாளாம்.

 

ராமனின் புகழ் பாடும் புனித நூலில் இந்த மாதிரி காதல் விளையாட்டுக்கள் தேவை தானா? என்று சிலர் கேட்கிறார்கள். பௌத்தம், சமணம் போன்றவற்றிலிருந்து மக்களை இழுக்கவே  இந்த யுக்தி என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் காப்பியம் என்றால் இந்த மாதிரி கொஞ்சம் இருக்கவேண்டும் என்கிறார்கள். ( நம்ம சினிமாவில் குத்துப் பாட்டு மாதிரி )

இலக்கியத்தில் இது காதல் இலக்கியம்.

 

 

இந்தப் பாட்டு என்ன ராகம் ?

இந்தப் பாடல்கள் எல்லாம் கர்நாடக சங்கீததை மையமாக வைத்து அமைக்கப் பட்டப் பாடல்கள்.

என்ன ராகம் என்று கண்டுபிடியுங்கள் !!! 

ண்ணோடு காண்பதெல்லாம் – ஜீன்ஸ்       ? 

கொஞ்ச நாள் பொறு தலைவா  – ஆசை –  ?? 

கல்யாண தேனிலா  – மௌனம் சம்மதம்  –  ??? 

சுந்தரி நீயும் சுந்தரன் நானும்   மைக்கேல் மதன காம ராஜன் –  ????

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்  –  ????

வராக நதிக்கரை ஓரம் – சங்கமம் –   ?????

புது வெள்ளை மழை  இங்கு – ரோஜா –  ?????

மறைந்திருந்தே பார்க்கும் – தில்லானா மோகனாம்பாள்  – ????

என் வீட்டுத் தோட்டத்தில் – ஜெண்டில்மேன்-   ???

தூங்காத விழிகள் ரெண்டு – அக்னி நட்சத்திரம் – ??

 

 விடை : கீழே 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 1. ஆபேரி  
 2. ஆனந்த பைரவி 
 3. தர்பாரி கானடா 
 4. கேதாரம் 
 5. நளின காந்தி 
 6. யமுனா கல்யாணி 
 7. கானடா 
 8. ஷண்முகப்ரியா 
 9. செஞ்சுருட்டி
 10. அமிர்த வர்ஷினி 

 

வடிகால் — நித்யா சங்கர்

 

       “ பிரியா! கதவைத் திற!  மனுஷன் எத்தனை நேரமா வெளியிலே நிற்கிறது?” என்று படபடவென்று வாசல் கதவைத் தட்டும் பக்கத்து வீட்டு மோகனின் குரல் கேட்டது.

தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தவள் கடிகாரத்தைப் பார்த்தேன்.  இரவு மணி பதினொன்று. இன்னும் பத்து நிமிடத்தில் மோகனின் கச்சேரி ஆரம்பித்து விடும்.

“ வரேங்க! வரேங்க!”என்று கூவியபடியே அவசர அவசரமாகச் செல்லும் பிரியாவின் குரல் கேட்டது.

என் வீட்டு அறைகளையும், பிரியாவின் வீட்டு அறைகளையும் பிரிப்பது ஒரு கல் சுவர்தான்.  அதனால் அவர்கள் வீட்டில் சிறிது சத்தமாகப் பேசினால் எனக்குத் தெளிவாகக் கேட்கும்.

வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.  மோகன் உள்ளே வந்து இருக்க வேண்டும்.

“ சனியனே! சனியனே! மணி என்ன பதினொண்ணு தானே ஆச்சு.. அதற்குள்ளே தூங்கிட்டியா? புருஷன் இன்னும் வரலியேன்னு ஒரு கவலையும், ஆதங்கமும் இருந்தால்தானே..” என்று கூச்சலிட்டான் மோகன்.

“ என்னங்க.. மெதுவாப் பேசுங்க. ராத்திரி நேரம். அக்கம் பக்கத்துலே எழுந்துரப் போறாங்க. அப்புறம் அசிங்கமாயிடும்.” என்றாள் பிரியா மெல்லிய குரலில்.  வெட்கமும், சங்கடமும் அவள் குரலில் தெரிந்தது.

“ ஏண்டி! எனக்கு உபதேசம் பண்ணறியா?  கேட்கட்டுமே.. எல்லோரும் கேட்கட்டும், நீ குடும்பம் நடத்துற லட்சணத்தை. ஒவ்வொரு வீட்டிலேயும் பார்! புருஷன் எப்ப வரார்னு வாசல் பக்கமா காத்து நின்னுட்டிருப்பாங்க. நீ மகாராணி, நல்லா தூக்கம் போட்டுட்டு மனுஷனை பைத்தியக்காரன் மாதிரி தெருவிலே நிற்க வெச்சுட்டே.”

“ இல்லீங்க! நான் தூங்கலீங்க. நம்ம குழந்தை ராமுவைத் தூங்கப் பண்ணிட்டிருந்தேன்.”

“ பெரிய குழந்தை! ஊரிலில்லாத குழந்தை! புருஷனுக்கு வாசக் கதவைக் கூட உடனே திறந்து விட முடியாம தூக்கம் பண்ணிட்டிருந்தாளாம். மனுஷன் ஆஞ்சு ஒஞ்சு களைச்சு வந்தா வீடும் ஒரு நரகமா இருக்கு. சே!” என்றபடியே அவனுடைய ரூமிற்குப் போயிருக்க வேண்டும்.

“ எங்கேடி சோப்? பாத்ரூமிலே சோப் வெச்சிருக்கணும்னு கூடவா உனக்குச் சொல்லித் தரணும்?” என்று அட்டாச்ட் பாத்ரூமிலிருந்து கத்தினான்.

“ ஸாரிங்க.. நீங்க நேத்து டைனிங் ஹாலில் உள்ள வாஷ் பேசினில் முகம் கழுவினதாலே சோப்பை அங்கே ரெடியா வெச்சிருந்தேன்.  ஒரு நிமிஷம்” என்றபடியே பிரியா டைனிங் ஹாலை நோக்கி ஓடும் சத்தம் கேட்டது.

“ யூ.. டாமிட்! நான் அங்கேதான் முகம் கழுவிக்கணும்னு  ரூல்ஸ் போட்டிருக்கியா? நான் எங்கே முகம் அலம்பிக்கிறேனோ அங்கே சோப் ரெடியா இருக்கணும்” என்று இரைந்தான்.

“ ஓகே! இனிமே தப்பு வராம பார்த்துக்கிறேன்.”

“ என்ன குடும்பம் நடத்தறியோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்” என்ற மோகனின் குரல் சிறிது தணிந்து இருந்தது.

“ வாங்க! சாப்பிட வாங்க” என்று பிரியா உணவு பரிமாறும் பாத்திரங்களின் ஓசை கேட்டது.

“ என்ன சமையல்டி  பண்ணறே.. எனக்கு வெண்டைக்காய் கறி பிடிக்காதுன்னு தெரியுமில்லே. பசித்து வந்தவனுக்கு நல்ல சாப்பாடும் கிடையாது” என்று மோகன் நாற்காலியைப் பின்னே தள்ளி எழுந்திருக்கும் ஓசை கேட்டது.

“ ஒரு நிமிஷம். கத்தரிக்காய் கறியும் பண்ணியிருக்கேன்.  இதோ போடறேன்.”

“ ஏன்? முதல்லே அதைப் போட்டிருக்கக் கூடாதா?”

“ இல்லே. அன்னிக்கு வெண்டைக்காய் கறியை ரசிச்சுச் சாப்பிட்டீங்க.. அதான்.”

“ என்னவோ அன்னிக்குப் பிடிச்சிருக்கலாம். இன்னிக்குப் பிடிக்கலே. ஏன்? ஒரே காய்கறியையே எப்பவும் சாப்பிடணுமா?”

ஏதோ முணுமுணுத்தவாறு மோகன் சாப்பிட்டு முடிக்கும் சத்தம் கேட்டது.

“ என்னங்க! ஆபீசிலே ரொம்ப வேலையா? ஜெனரல் மானேஜர் ஏதாவது சொன்னாரா” என்று ஆதரவோடு மெதுவாகக் கேட்டாள் பிரியா.

“ பிரியா! நம்ம மாதிரி சின்சியர் பீபிள் இதுமாதிரி கம்பெனியில் வேலையே செய்யக் கூடாது.  என்ன பண்ணிக் கொடுத்தாலும் திருப்தியே இல்லே.  நீயும் பார்க்கறியே! காலையிலே ஒன்பது மணியிலிருந்து ராத்திரி ஒன்பது மணி வரை நான்-ஸ்டாப்பா மாடா உழைக்கிறேன்.  நான் திறமையா வேலை பண்ணிக் காட்டிட்டேன் இல்லே. மேலே மேலே மற்றவர்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் என் மேலே போட்டு, ‘ஆச்சா! ஆச்சா!’ ன்னு ஒரே டார்ச்சர்”

“ கவலைப்படாதீங்க! உங்க சின்சியாரிடிக்கு நிச்சயமா தகுந்த ரிவார்டு கிடைக்கும்.  ஜெனரல் மானேஜர், ஆபீஸ் எல்லாத்தையும் மறந்துடுங்க.  வாங்க! நிம்மதியா தூங்குங்க!”

“ ஒரு பக்கம் ஜெனரல் மானேஜர், அப்படீன்னா இன்னொரு பக்கம் நம்ம அஸிஸ்டண்டுங்க.. கொஞ்சம் அசந்தா தப்பும் தவறுமா எல்லாத்தையும் பண்ணிக் கொடுத்து என்னுடைய வேலைக்கே உலை வைக்கப் பார்க்கறாங்க.”

“ நீங்க உங்க ஜெனரல் மானேஜர் கிட்ட அவங்களைப் பத்தி கம்ப்ளெய்ன் பண்ணறதுதானே?”

“ கம்ப்ளெய்ண்டா.. அவங்களை ஒரு வார்த்தை கேட்க மாட்டார் ஜெனரல்  மானேஜர். கேட்டால் அவர் பெயர் கெட்டுப் போயிடும் பார்.  அதென்ன லைன் ஆஃப் கன்ட்ரோல்.  அவர்  என்னைத்தான் கேட்பாராம்.  நான்தான் அவர்களை டாக்ட்புல்லா டீல் பண்ணணுமாம்.  பிராபரா வேலை வாங்கணுமாம்.  அதையேன் கேட்கறே..? ஒரே டார்ச்சர்.. நிம்மதிங்கறதே கிடையாது “ என்ற மோகனின் குரல் நன்றாகவே தணிந்திருந்தது.

“ வாங்க! நிம்மதியாப் படுங்க!  தூங்குங்க! என்றப்டியே பிரியா லைட்டுகளை அணைக்கும் சத்தம் கேட்டது.  அதற்குப் பிறகு அவர்களது மெலிதான பேச்சொலியும், சிரிப்பொலியும் கேட்டுக் கொண்டிருந்தது.

எனக்குக் கோபம் கோபமாக வந்தது.  பிரியாவுக்கும், மோகனுக்கும் கல்யாணமாகி மூன்று வருடங்கள்தான் ஆகியிருக்கும்.  அதற்குள் என் கணக்குப்படி முப்பது வருட வாழ்க்கைத் துன்பங்களை அனுபவித்து விட்டாள்.  எதற்கெடுத்தாலும் கோபம், இரைச்சல், திட்டு.  மோகன் அவளைத் திட்டுவதற்காகவே வீட்டிற்கு வருகிறானோ என்று கூடத் தோன்றும் எனக்கு.  அந்தச் சின்னக் குழந்தை படுத்தும் பாடுகளை நாளெல்லாம் சகித்துக் கொண்டு ராத்திரி அவனுடனும் போராட வேண்டியிருக்கு.  என்ன வாழ்க்கை இது?  நாளை அவளிடம் கேட்டு விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

முந்தைய நாள் இரவில் ஒன்றுமே நடக்காதது போல் மோகன் ஆபீஸிற்குக் கிளம்ப, பிரியா அவனுக்குப் புன்முறுவலோடு, ‘ டாடா’ காட்டிக் கொண்டிருந்தாள்.  மோகன் கிளம்பிப் போனதும் வீட்டிற்கு உள்ளே போகக் கிளம்பியவள் என்னைப் பார்த்ததும் தயங்கிப் புன்முறுவலோடு நின்றாள்.

“ ஏண்டி பிரியா! உன்னாலே எப்படி சிரிக்க முடிகிறது? நேத்து ராத்திரி என்ன கத்துக் கத்தினான் அவன்? இப்போ ஒன்றுமே நடக்காத மாதிரி அவனுக்கு ‘டாடா’ சொல்லிக் கொண்டிருக்கிறாயே ! நானா இருந்தா ஒண்ணுக்கு ஒண்ணா நின்னு நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டிருப்பேன்.”

“ மாமி! அங்கேதான் நாம தப்பு பண்ணறோம். ஆபீஸிலே ஏகப்பட்ட பிரஷர்.  டென்ஷன்.. மானேஜரின் ஏச்சுக்கள் வேறே.  இதையெல்லாம் கொட்டித் தீர்க்க ஒரு வடிகால் வேண்டாமா?  அதுதான் நம்மைப் போல உள்ள மனைவிகள். நானும் முரண்டு பிடிச்சிட்டு கத்திட்டிருந்தா என்ன ஆகும்?  அவருடைய டென்ஷன் ஜாஸ்தியாயிடும்.  டென்ஷனைக் குறைக்க வேறு என்னடா வழி என்று தேடத் தோன்றும்.  இதனாலேதான் பாதிப்பேர் குடிப் பழக்கத்திற்கும், வேறே கெட்ட பழக்கங்களுக்கும் ஆளாகறாங்க.  இப்போ என்ன, புருஷன்தானே திட்டறார். அதுவும் நம்மைத் திட்டலே. ஆபீஸிலே கொட்டித் தீர்க்க முடியாததை இங்கே வந்து கொட்டறார்.  இல்லாமே, என் மேலே அன்பு இல்லாமலோ, கோபத்தாலோ திட்டலே.  இந்த விஷயத்தை நாம புரிஞ்சிக்கிட்டோம்னா அவருக்கு நாமும் வீட்டிலே டென்ஷன் கொடுக்காம இருந்தோம்னா ஒரு பிராப்ளமும் இல்லே.  நேத்து அப்படிச் சத்தம் போட்டவர் அதுக்கப்புறம் எவ்வளவு ஃபீல் பண்ணினார் தெரியுமா மாமி” என்று வெட்கத்துடன் புன்னகைத்தாள் பிரியா.

‘ தெரியும்டி! உங்கள் வீட்டிலே நீங்க பேசற பேச்சுக்கள், அசைவுகள் அத்தனையும் எனக்குத் துல்லியமாகக் கேட்கிறதே’ என்று மனதில் நினைத்துக் கொண்டு நானும் அவளைப் பார்த்துப் புன்முறுவலித்தேன்.

**************************

சென்னை கதைசொல்லும் திருவிழா

CSF

 

சென்னையில் 5 நாட்களாக உலகக் கதை சொல்லும் திருவிழா நடைபெற்றது. ஒரு நாளில் 7 பேர். ஏழு விதமான கதை. அவர்களின் பேச்சும் சிரிப்பும் நடிப்பும் கதை சொல்லும் பாங்கும் அடேங்கப்பா!

என்ன திறமை.  என்ன லயிப்பு?

அப்படியே கதை கேட்பவர்களையும் கதையுடன் இணைந்து ஊம் கொட்ட வைத்துக், கேள்விகளுக்குப் பதில் சொல்ல வைத்து , தங்களுடன் பாட வைத்து, ஆட வைத்துத் ,துடிக்க வைத்து  நம்மைக் கதை நடக்கும் இடத்திற்கே அழைத்துச் செல்லும் அந்த அருமையான  திறமைக்கு ஆயிரம் ஆயிரம் பாராட்டுதல்கள்.

கதைகள் எல்லாம், நாம் கற்ற, கேட்ட கிராமிய மற்றும் கற்பனைச் சிறகு முளைத்த கதைகள் தான். ஆனால் அவற்றை அழகு ஆங்கிலத்தில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எந்த விடத் தடங்கலுமின்றி ஒரு ஆற்றைப் போல,  ஒரு நீர்வீழ்ச்சியைப் போல , ஒரு மழையைப் போல,  ஒரு தென்றலைப் போல அவர்கள் நடித்து, நடந்து, பேசிச் செய்த விதம் இருக்கிறதே அதை எப்படிப் பாராட்டுவது.?

கதை சொல்வது எங்கள் இதயத்தின் உணர்வு என்று அவர்கள் சொல்லிக் கொள்வது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல. அது அவர்கள் உள்ளத்திலிருந்து வரும் உணர்ச்சிக் காவியம்.  

 1. ஒரு துணிச்சலான எலி ,கரடி மேல் ஏறி ஆற்றைக் கடந்து  சிங்கத்தின் மேல் ஏறி மலையின் உச்சியில் நின்று பெருமிதப்படும் கதை ஒரு கவிதை.  
 2. ஒரு பெரிய மாளிகை முழுவதையும் ஒரு ரூபாய் காசில் வாங்கிய பொருளைக் கொண்டு நிரப்புபவனுக்கே அந்த மாளிகை உரியது என்று தந்தை கூற பஞ்சால் நிரப்பித்  தோல்வியுற்றான் முதல் மைந்தன். மெழுவர்த்தியின் ஒளியினால் நிரப்பிய இரண்டாம் மகனும் தோல்வியுற்றான். புல்லாங்குழலின்  இசையால் நிரப்பி அதன் மூலம் மகிழ்ச்சியை  நிரப்பி அதன் மூலம் அதில் வாழ்வை நிரப்பிய மகளே இறுதியில் வெற்றி பெறுகிறாள். 
 3. நாச்சியம்மை என்ற பசு தன் மகனுக்குப் பாலூட்டிவிட்டுப் புலிக்கு உணவாக வருகிறேன் என்று சொன்ன சத்திய வாக்கை நிலைநிறுத்தும் பசுவைப் பார்த்து, சத்தியத்தின் திருவுருவத்தைக் கொன்று  தன் பசி ஆற்றிக்கொள்ள வேண்டாம் என்று உண்ணாமல் செல்லும் புலி. ஆஹா தமிழ்ப் பாட்டுடன் கலந்து சொன்ன கதை கண்ணில் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கும் பெருமையான அருமை. 
 4. மனதளவில் சேவலாய் மாறிய இளவரசனைக்  குணப்படுத்தத் தானும் கோழியாக மாறி திருத்திய வைத்தியனின் கதை ! 
 5. சிவன் அருளால் பிறந்த மகனைக், காளி அருளால் பிறந்த கரடி தாக்க வரும் போது, சிவன் அருளால் பிறந்த ஒரு நாய்க்குட்டி எப்படிக் காப்பாற்றுகிறது என்று ஒரு கதை.  
 6. மனிதனை நம்பாதே என்று சொல்லும் புலி, குரங்கு, பாம்பு 
 7. பேசும் சேனைக்கிழங்கு, பனைமரம், மீன், ஆறு. அவற்றைப் பார்த்ததாகக் கூறும் மக்களைக் கோபிக்கும் மன்னன். அவர்கள் சென்ற பிறகு  அரசனின் அரியாசனமே அவனுடன் பேசுவதைக் கண்டு திகைக்கும் அரசன்.  
 8. தான் பிறந்த ஹீப்ரு மக்களுக்காகப் போராடும் மோஸசின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் விதமும் கதையின் களமும் நம் கண் முன்னால்  பத்துக் கட்டளைப் படத்தை அப்படியே நிலை நிறுத்துகிறது.   

 

 கதை சொல்லும் கலை நமக்குப் புதியதல்லவே ! ஆனால் இவர்கள் காட்டும் உணர்ச்சி வெள்ளம் புதிது  – அதைப் பாராட்டுவோம் அதில் நாமும் பங்குபெறுவோம் . 

 

 

சிவகார்த்திகேயன் நடிக்கும் அட்லியின் முகப்புத்தகம் – குறும்படம்

21 நிமிடத்தில் ஒரு முழுத் திரைப்படத்தைப் பார்த்த திருப்தி !

தரமான படம் –  வித்தியாசமான களம்.

சிவகார்த்திகேயனின் தூள் நடிப்பு

ஆச்சரியம் இல்லை இயக்குனர் அட்லீ பெரிய திரையில் எங்கோ போயிருக்கிறார் .

https://youtu.be/pfk5gSqrZSM