
சுந்தர் ராஜன் , நான் கடைசியாகப் படித்த புத்தகம்பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அந்தப் புத்தகத்தில் உள்ள சில விஷயங்களை அப்படியே எழுதியுள்ளேன். சில விஷயங்களைச் சுருக்கி எழுதியுள்ளேன். அதோடு என்னுடைய கருத்துகளையும் கூறியுள்ளேன்.
சமீபத்தில் நான் படித்த புத்தகம் திரு.ஆனந்த குமார் அவர்கள் எழுதிய ‘நான்காம் தடம்’.
சமகால ‘தந்த்ர’ மார்க்கத்தின் உச்ச குரு என்று ஓஷோவால் போற்றப்பட்ட ரஷ்ய ஞானி குர்ட்ஜிப்பின் கதை. போர் மேகங்கள் சூழ்ந்த காலகட்டத்தில் ரஷ்யாவின் எல்லைப்புற நாடான அர்மேனியாவில் தச்சுத் தொழிலாளிக்கு மகனாகஃப் பிறந்தவர் குர்ட்ஜிப். அவர் தச்சுத் தொழிலாளி மட்டும் அல்ல;’எசொக்கு’ என்று அழைக்கப்படும் கவிஞர், பாடகர், கதைசொல்லி. எசொக்குகள் ஒன்றுகூடி வரலாற்றுக் காவியங்களைப் பாடி மகிழ்வது வழக்கம். அப்படிப்பட்ட கதைசொல்லிகளின் சங்கமத்திற்கு குர்ட்ஜிப்பையும் அழைத்துச்செல்வார். இளம் குர்ட்ஜிப் ஞானியாக மலர்வதற்கான விதை அங்கே போடப்படுகிறது.
குர்ட்ஜிப் துணிச்சல் மிக்கவனாகவும்,விழிப்புணர்வு மிக்கவனாகவும் வளரவேண்டும் என்பதற்காக தினசரி குர்ட்ஜிப்பின் படுக்கையில் பாம்பை விட்டு வைப்பாராம் அவனது தந்தை . இதனால் காலையில் எழும்போது மிகுந்த எச்சரிக்கையோடுதான் எழுவான் குர்ட்ஜிப் .
தந்தையும் அவரது நண்பர் அருட்தந்தை போர்ஷ் என்பவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்வார்கள். அப்போது குர்ட்ஜிப்பும் அவர்கள் உடன் இருப்பான். அவர்களின் ஆன்மிகம் சார்ந்த உரையாடல்களை ஆர்வத்தோடு கேட்டுக்கொண்டிருப்பான் சிறுவன் குர்ட்ஜிப். அருட்தந்தை போர்ஷ் அவர்களின் உதவியோடு குர்ட்ஜிப் பள்ளிக்குச் செல்லாமலே வரலாறு, புவியியல், உடற்கூறு அறிவியல்,கணிதம், ரஷ்ய மொழி போன்றவற்றைக் கற்றுத் தேர்கிறான். சாதாரண கல்வி அறிவைத்தாண்டி தெரிந்து கொள்ளவேண்டிய உண்மை ஒன்று உண்டு என்று குர்ட்ஜிப்பின் உள்மனம் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. ஆன்மிகத்தேடல் உடைய நண்பர்கள் பலரின் நட்பு அவனுடைய ஆன்மிக தேடலுக்குத் தூண்டுகோலாக அமைகிறது. குர்ட்ஜிப்பின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த சம்பவம் அப்போது நடக்கிறது…….
ரியாஸோ என்ற ஒரு இளம்பெண் மீது குர்ட்ஜிப்புக்குக் காதல் ஏற்படுகிறது. அதே பெண்ணை கார்பெங்கோ என்ற நண்பனும் காதலிக்கிறான். பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு யோசனை சொல்கிறார்கள். அதாவது ஒரே பெண்ணைக் காதலிக்கும் இருவருக்கும் இடையே ஒரு போட்டி வைப்பது. போட்டியில் தோற்றவன் காதலில் விலகிக்கொள்ள வேண்டும். நிபந்தனைக்கு ஒப்புக்கொள்கிறார்கள். போட்டி என்றால் சாதாரண போட்டி இல்லை. உயிரைப் பணயம் வைக்கும் அபாயகரமான போட்டி. அருகிலேயே ஒரு ராணுவ தளம் இருக்கிறது. அங்கே ராணுவ வீரர்கள் பீரங்கி சுடும் பயிற்சியை மேற்கொள்வார்கள். தினசரி காலை முதல் மாலைவரை இந்தப் பயிற்சி நடக்கும். வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாது. நண்பர்கள் திட்டப்படி ராணுவ வீரர்கள் வருவதற்கு முன்பாகவே அவர்களுக்குத் தெரியாமல் குர்ட்ஜிப்பும், கார்பெங்கோவும் ராணுவ தளத்திற்குள் நுழைந்து விட வேண்டும். அங்கே குண்டுகள் பாய்ந்து தாக்கும் இலக்குகளுக்குக் கீழே பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருக்கும். இருவரும் ராணுவ வீரர்களுக்குத் தெரியாமல் பதுங்கு குழிகளில் பதுங்கி இருக்கவேண்டும். வீரர்கள் பயிற்சி முடித்துவிட்டுச் செல்லும்வரை குழிக்குள்ளேயே ஒளிந்திருக்கவேண்டும். பாய்ந்து வரும் குண்டுகளால் உயிர் போகவும் வாய்ப்பு உண்டு. இருவரில் யார் காயமின்றி வருகிறாரோ அவரே போட்டியில் வெற்றி பெற்றவர்.
அதிகாலையிலேயே ராணுவ வீரர்களுக்குத் தெரியாமல் குர்ட்ஜிப்பும்,கார்பெங்கோவும் உள்ளே நுழைந்து பதுங்கு குழிகளுக்குள் பதுங்கிக்கொள்கிறார்கள். பாய்ந்து வரும் குண்டுகளுக்கு மத்தியில் குர்ட்ஜிப் நாள் முழுவதும் பதுங்கி இருக்கிறான்.முதன் முறையாக மரணபயத்தைச் சந்திக்கிறான். நாள் முழுவதும் பாய்ந்து வரும் பீரங்கி குண்டுகளுக்கு மத்தியில் மரணபயத்தோடு பதுங்கி இருந்தது குர்ட்ஜிப் மனதில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. ராணுவ வீரர்கள் பயிற்சி முடிந்து சென்ற பின்னாலும் குழிக்குள் பதுங்கியே இருக்கிறான். ‘ராணுவ வீரர்கள் சென்று விட்டார்கள். வெளியே வாருங்கள்’ என்று நண்பர்களின் குரல் கேட்டு குர்ட்ஜிப் மெதுவாக வெளியே வருகிறான். கார்பெங்கோவைக் காணவில்லை. காலில் குண்டடிபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடக்கிறான். நண்பர்கள் அனைவரும் அவனைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். போட்டியில் வெற்றி பெற்றாலும் குர்ட்ஜிப்பின் மனம் காதலில் லயிக்கவில்லை. மரணபயம் அவரது மனதை வேறொரு தளத்தில் இயங்கச்செய்கிறது. பதுங்கு குழியில் குர்ட்ஜிப்புக்கு ஏற்பட்ட மரணபயம் மாறாத உண்மையை கண்டுணர வேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்துகிறது. மனித வாழ்வின் அடிநாதமாக இருக்கும் அந்த மாறாத உண்மையைக் கண்டறியும் பயணத்தைத் தொடங்குகிறார் குர்ட்ஜிப். ஆன்மிக நாட்டம்கொண்ட நண்பர்கள் பலர் அவரது பயணத்தில் துணையாக வருகிறார்கள்.
ரமண மகரிஷி அவர்கள் வாழ்விலும் ஞான மலர்வுக்குக் காரணமாக இருந்தது மரணபயம்தான். ரமணமகரிஷியோ திருவண்ணாமலையில் ஐக்கியமாகி விடுகிறார்.
ஆனால் குர்ட்ஜிப் ஞானத்தைத் தேடி உலகமெங்கும் பயணிக்கிறான். துருக்கி, கிரேக்கம், ஜார்ஜியா,இராக்,எகிப்து, ஆப்கானிஸ்தான், என்று பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கிறான். காடு,மலை, பள்ளத்தாக்கு என்று அலைகிறான்.

( மீதி அடுத்த இதழில்)
Pingback: நான்காவது தடம் – நிறைவுப் பகுதி அ.அன்பழகன் | குவிகம்