அட்டைப்படம் ஆகஸ்ட் 2020 (சுதந்திரதினப் பாடல் – அஷோக் )

 

74 வது சுதந்திரதினப் பாடல் – அஷோக் 

 

நிமிர்ந்து நின்று நெஞ்சில் வீரம்

……நித்தங் காட்டும் பாரதர்

உமிழ்ந்து தீவு லுத்தர் சோர

……ஓடச் சாய்த்துத் தீர்ப்பரே

இமிழ்த்து தீர ஏற்ற மோடு

……என்றும் காப்பர் நாட்டினை

திமிர்த்தெ ழுந்து தீர்க்க நாளும்

……தெய்வம் எங்கள் பக்கமே!

 

பாரில் மிக்கப் பகரு டைத்த

……பார தத்தைப் போலவே

சீரில் எந்த தேச முண்டு

……தேடி னும்கி டைக்குமோ?

வேரில் ஊன்றி விண்ணு யர்ந்த

……விந்தை கொள்வி ருட்சமாய்

பேரு டைத்துப் பெற்றிப் பெற்ற

……பிம்பம் எங்கும் தங்குமே

 

ஏழு பத்து நான்கு ஆண்டு

……இன்பம் இச்சு தந்திரம்

பாழு டைத்து பட்டு வீழ

……பார்த்தி ருக்கப் போவமோ?

தாழ எங்கள் தாயின் மக்கள்

……தாம்பொ றுத்தல் கொள்வரோ?

ஆழம் மிக்க ஆன்ம சக்தி

……அன்னை தந்த ஆளுமை

 

வாழ்க என்றும் வண்மை மிக்கு

……வல்ல மையில் வாழ்கவே

சூழ்க எங்கள் சொற்கள் பாரில்

……சோதி போலே சூழ்ந்துமே

ஆழ்க எங்கும் ஆன்ற மைந்த

……அன்பு பண்ப மைதியே

வீழ்க தீமை வேக மாக

……வெற்றி யேவி ளைக்கவே

குவிகம் பொக்கிஷம் – விடியுமா -கு ப ரா

நன்றி: அழியாச்சுடர்கள் -வலையேற்றியது: RAMPRASATH | நேரம்: 7:43 AM | வகை: கதைகள், கு.ப.ரா 

கு.ப.ராஜகோபாலன்: நவீனத்துவ சிறுகதை ...
தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது.

‘சிவராமையர் – டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல்
 ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது.

என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்து விட்டார். க்ஷயத்தின் சின்னம் கொஞ்சம்கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள்.

ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப் போய் உட்கார்ந்திருந்தாள்.

எங்கள் எல்லோருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்தது. ‘இருக்காது!’, ’ஏன் இருக்கக்கூடாது? இருக்கும்’ என்று இரண்டு விதமாக மனத்தில் எண்ணங்கள் உதித்துக் கொண்டிருந்தன. ‘இருக்கும்!’ என்ற கட்சி, தந்தியின் பலத்தில் வேரூன்றி வலுக்க வலுக்க, ‘இருக்காது!’ என்ற கட்சி மூலைமுடுக்குகளிலெல்லாம் ஓடிப்பாய்ந்து தனக்குப் பலம் தேட ஆரம்பித்தது.

தந்தியில் கண்டிருந்ததைத் திரும்பத் திரும்பப் படித்தோம். அதில் ஒன்றும் பிசகு இருக்கவே முடியாது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்துதான் வந்திருந்தது. சந்தேகமில்லை. காலையில் அடித்திருக்கிறார்கள். குஞ்சம்மாள் பேருக்குத்தான்! தவறு எப்படி நேர்ந்திருக்க முடியும்?

ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் என்ன நேர்ந்திருக்க முடியும்? மூன்று நாட்களுக்கு முன்புதானே கடிதம் வந்தது? ஏதாவது உடம்பு சௌகரியமில்லாமல் இருந்தால் அதில் எழுதாமல் இருப்பாரோ?

என் தமக்கையும் நானும் சாயந்தரம் ரெயிலில் சென்னைக்குப் புறப்பட்டோம். அதுதான் அன்று கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப்  போகும் முதல்வண்டி. புறப்படுவதற்கு முன் நல்லவேளை பார்த்துப் ‘பரஸ்தானம்’ இருந்தோம். சாஸ்திரிகள், ‘ஒண்ணும் இருக்காது. கிரகம் கொஞ்சம் பீடிக்கும், அவ்வளவுதான்!’ என்றார். அம்மா, தெய்வங்களுக்கெல்லாம், ஞாபகமாக ஒன்றைக் கூடவிடாமல், பிரார்த்தனை செய்துகொண்டு, மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து வைத்தாள். குஞ்சம்மாளுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், புஷ்பம், வெற்றிலைப் பாக்கு க்ஷேமதண்டுலம் எல்லாம் மறந்து போகாமல் மடி நிறையக் கட்டிக்கொடுத்தாள். பசியுடன் போகக்கூடாது என்று. புறப்படும்பொழுது கட்டாயப்படுத்தி இருவரையும் சாப்பிடச் செய்தாள்.

குஞ்சம்மாள், இயந்திரம்போலச் சொன்னதையெல்லாம் செய்தாள்; ‘ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணு!’ என்றதும் போய் நமஸ்காரம் செய்தாள்.
அவள் கதிகலங்கிப் போயிருந்தாள் என்பது அவள் பேச்சற்றுப் போயிருந்ததிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அவளுடைய கலகலப்பு, முதல் தடவையாக அன்று, எங்கோ அடங்கிவிட்டது.

அம்மா வாசலில் போய்ச் சகுனம் பார்த்தாள். திவ்யமான சகுனம். காவேரியிலிருந்து அடுத்தவீட்டுச் சுந்தரி ஜலம் எடுத்துக்கொண்டு எதிரே வந்தாள்.
‘ஒண்ணும் இருக்காது! நமக்கேன் அப்படியெல்லாம் வரது? நாம் ஒருத்தருக்கு ஒண்ணும் கெடுதல் எண்ணல்லே’ என்றெல்லாம், அம்மா அடிக்கடி தன்னையும் பிறரையும் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

ரெயில் ஏறுகிறபோது மணி சுமார் எட்டு இருக்கும். இரவு பூராவும் போயாக வேண்டுமே என்று துடித்தோம். போய் இறங்குவதற்குமுன் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றதால், கொஞ்சங் கொஞ்சமாகத் துடிப்பும், கலக்கலுங்கூட மட்டுப்பட்டன. இரண்டு ஜன்னல்களின் அருகில் நேர் எதிராக இரண்டு பெஞ்சுகளில் உட்கார்ந்தோம்.

‘நீ புறப்படுகிறபோது ஒன்றுமே’ இல்லையே, அக்கா?’ என்றேன், ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று.

‘ஒண்ணுமில்லையே! இருந்தால் புறப்பட்டு வருவேனா?’ என்று அவள் ஏக்கம் நிறைந்த குரலில் பதில் சொன்னாள்.

‘அதற்குள் திடீரென்று ஒன்றும் ஏற்படுவதற்குக் காரணமே இல்லையே!’

எது எப்படியானாலும், மனசைச் சில மணி நேரங்களாவது ஏமாற்றித் தத்தளிப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தது போலப் பேச்சு வெளிவந்தது.

‘நான், இந்த நோன்பிற்காக இங்கே தாமதம் செய்யாமல், போயிருக்காமல் போனேன்!’

’ஒருவேளை, அக்கா, நோன்பிற்காக நீ இங்கே இருந்துவிட்டதுதான் அத்திம்பேருக்குக் கோபமோ? அவர் உடனே வரும்படியாக எழுதியிருந்தார். நாம் ஒரு வாரத்தில் வருவதாகப் பதில் எழுதினோம். அதற்காகத்தான் இப்படித் தந்தி அடித்துவிட்டாரோ?’

‘ஆஸ்பத்திரியிலேயிருந்து வந்திருக்கே?’

’ஆஸ்பத்திரி பேரை வைத்து அத்திம்பேரே அடிக்கக் கூடாதா?’

‘அப்படி அடிக்க முடியுமோ?’ குஞ்சம்மாள் குரலில் ஆவல் இருந்தது.

‘ஏன் முடியாது? தந்தியாபீஸில் – ‘

‘ஒருவேளை அப்படி இருக்குமோ?’ என்று கேட்டபொழுது குஞ்சம்மாளின் முகம் கொஞ்சம் மலர்ந்துவிட்டது.

‘அப்படித்தான் இருக்கவேண்டும். இப்படித் திடீரென்று ஒன்றும் ஏற்படக் காரணமே இல்லை. முந்தா நாள் தானே கடிதாசு வந்தது?’

‘ஆமாம்! அதில் ஒடம்பெப் பத்தி ஒண்ணுமே இல்லையே?’

‘தந்தி அடித்தால் நாம் உடனே புறப்பட்டு வருவோம் என்றுதான் அடித்திருக்கிறார். வீட்டிலிருந்து அடித்தால் கூட அவ்வளவு தாக்காது என்று ஆஸ்பத்திரி பேரை வைத்து அடித்திருக்கிறார்’.

‘அப்படி அடிக்க முடியுமாடா, அம்பி? அப்படியிருக்குமா?’ என்று மறுபடியும் குஞ்சம்மாள் சந்தேகத்துடன் கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்ட பொழுது, முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தால்கூடச் சொல்ல மனம் வந்திருக்குமோ, என்னவோ?

‘நீ வேண்டுமானால் பாரேன்! எழும்பூர் ஸ்டேஷனில் வந்து இருக்கப் போகிறார்’ என்றேன்.

மனத்தில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக்கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம் கொஞ்ச நேரத்திற்கு ஒரு தரம் அந்தத் திகில் மேல்மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும்; உடம்பு பதறும்; நெஞ்சு உலரும்; அடிவயிறு கலங்கும்; முகம் விகாரமடையும். மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும்; பயத்தைக் கீழே அமுக்கிவிடும்.

சுகமோ துக்கமோ எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபாவத்தில் இதுவும் ஓர் அத்தாட்சியோ? ரெயில் வண்டி வெறி பிடித்ததுபோல் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது; எங்கேயோ சென்னையில் விடியப்போகும் ஒரு காலையை நோக்கிக் கனவேகமாகப் போய்க் கொண்டிருந்ததுபோல் இருந்தது.

துக்கத்தில் தலையெடுக்கும் தைரியம்போல தொலை இருளில் அந்த ஒளித்தொடர் விரைந்து சென்று கொண்டிருந்தது.

சென்னை போய்ச் சேரும்பொழுது, எங்கள் கவலையும் அந்த இருளைப் போலப்பின் தங்கிவிடாதா? நிம்மதி, காலையைப் போல, அங்கே எங்களை வந்தடையாதா? இருள், நிச்சயம் கூட வராது! சென்னையில் காலைதான்! – இவ்வாறெல்லாம் பேதைமனம் தன்னைத் தேற்றிக் கொண்டே இருந்தது.
குஞ்சம்மாள் மூட்டையிலிருந்து வெற்றிலை பாக்கை எடுத்து எனக்குக் கொடுத்துத் தானும் போட்டுக் கொண்டாள்.

எங்களவர்க்குள்ளேயே குஞ்சம்மாள் அதிக அழகு என்று பெயர். நல்ல சிவப்பு; ஒற்றை நாடித் தேகம்; அவளுக்கு தெருவிலேயே ஒரு செல்வாக்கு உண்டு.
அன்று என்னவோ, இன்னும் அதிகமாக, அவள் ஒளிர்ந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் என்றுமே இல்லாத ஓர் ஏக்கம் என்று முதல் முதலாகத் தென்பட்டதாலோ என்னவோ, அவள் அழகு மிளிர்ந்து தோன்றினாள்.

குஞ்சம்மாளுக்குப் புஷ்பம் என்றால் பிராணன். யாரு கேலி செய்தாலும் லட்சியம் செய்யமாட்டாள். தலையை மிஞ்சிப் பூ வைத்துக் கொள்ளுவாள். ஆனால் அன்று அவள் தலையில் வைத்துக் கொண்டிருந்த பூவைப்போல, அது என்றும் சோபித்ததில்லை என்று என் கண்களுக்குப் பட்டது. வெற்றிலைக்காவி அவளுடைய உதடுகளில் அன்றுதான் அவ்வளவு சிவப்பாகப் பிடித்திருந்ததுபோல இருந்தது.

சோர்வில்தான் சௌந்தரியம் பரிமளிக்குமோ? அல்லது-? கடைசியாக, அணைவதற்கு முன்னால், விளக்கு-? இல்லை! இல்லை!
குஞ்சம்மாள் அன்று என்னவோ அப்படி இருந்தாள்.

வெற்றிலையைப் பாதி மென்றுகொண்டே, ‘அம்பு, ஒங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?’ என்றாள் குஞ்சம்மாள்.
அவளுடைய கண்களில் ஜலம் மளமளவென்று பெருகிற்று.

‘என்னிக்கும் பிடிவாதம், என்னிக்கும் சண்டை, நான் அழாத நாள் உண்டா? – என் வாழ்வே அழுகையாக-’ என்று உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திக்கொண்டாள்.

‘எதிலாவது நான் சொன்ன பேச்சைக் கேட்டது உண்டா? எப்படியோ ஆயுசுடன் இருந்தால் போதுமென்று தோன்றிவிட்டது, போனதடவை உடம்புக்கு வந்தபோது!’

இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தோம். ஆனால் மனசு மட்டும் மௌனமாக இருக்கவில்லை.

நல்ல நிசிவேளை. வண்டியில் ஜனங்கள் உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் அநேக தினுசாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். வண்டி ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்றதும், சிலர் எழுந்து இறங்கிப் போவார்கள், மௌனமாகப் பிசாசுகள் போல. அப்பொழுதுதான் தூங்கி எழுந்த சிலர், ‘இதென்ன ஸ்டேஷன்?’ என்று தலையை நீட்டிக் கேட்பார்கள். போர்ட்டர் ஒருவன் ஏதாவது ஒரு ஸ்டேஷன் பெயரை அரைகுறையாகத் தூங்கி வழிந்துகொண்டே சொல்லுவான். மறுபடியும் வண்டி பூரான் மாதிரி ஓட ஆரம்பிக்கும்.

சுமார் ஒரு மணிக்கு வண்டி விழுப்புரம் ஸ்டேஷனுக்குள் ஆர்ப்பாட்டத்துடன் போய் நின்றது. அதுவரையிலும் வண்டியில் அமைதியும் நிசப்தமும் இருந்தன. அந்த ஸ்டேஷனில் கூட்டமும் கூக்குரலும் அதிகமாயின. அது வரையில் காலியாகவே வந்த எங்கள் பலகையில் சாமான்கள் நிறைந்தன. நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருத்தி, பெண் குழந்தையும் புட்டியுமாக என் தமக்கையின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
அவள் அணிந்திருந்த முதல் தரமான வைரங்களுடன் அவள் முகமும் ஜொலித்துக் கொண்டு இருந்தது. ஏதோ ஓர் உள்ளப்பூரிப்பில் அவள் தன்னையே மறந்து தன் குழந்தையுடன் கொஞ்சினாள்.

வண்டி புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் என் தமக்கையின் பக்கம் தன் புன்னகை பூத்த முகத்தைத் திருப்பி; ‘எங்கிட்டுப் போறீக அம்மா?’ என்று கேட்டாள்.

என் தமக்கை சுருக்கமாக, ‘பட்டணம்’ என்றாள்.

’நானும் அங்கேதாம்மா வாரேன்!’ என்று ஆரம்பித்து, அந்தப் பெண் வரிசையாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். பிறகு தன் பக்கத்திலிருந்த ஓலைப் பெட்டியிலிருந்து கொஞ்சம் மல்லிகைப்பூ எடுத்துக் குஞ்சம்மாளுக்குக் கொடுத்தாள்.

என் தமக்கை மெய்சிலிர்த்துப் போனாள். வெகு ஆவலுடன் அந்தப் பூவை வாங்கி ஜாக்கிரதையாகத் தலையில் வைத்துக்கொண்டாள். அம்பாளே அந்த உருவத்தில் வந்து தனக்குப் பூவைக் கொடுத்து, ‘கவலைப்படாதே! உன் பூவிற்கு ஒருநாளும் குறைவில்லை!’ என்று சொன்னதுபோல எண்ணினாள்.
அதுவரையில் அவளுக்கு ஒவ்வொரு வார்த்தை பதில் சொல்லிக் கொண்டு வந்தவள். உடனே இளகி, அவளிடம் சங்கதி பூராவும் சொன்னாள்.

‘மகாலட்சுமி போலே இருக்கீங்கம்மா! ஒங்களுக்கு ஒண்ணும் கொறவு வராது!’ என்று அவள் சொன்னதைத் தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டுவிட்டாள் குஞ்சம்மாள். அந்த ஆறுதலில் கொஞ்ச நேரம் அவளுடன் கவலை மறந்து பேசிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று ஞாபகம் வந்துவிட்டது. ஏதோ பெருத்த குற்றம் செய்தவள் போலத் திகிலடைந்தாள். ‘ஐயையோ! பைத்தியம் போல் இப்படிச் சிரிச்சுண்டு பேசிக் கொண்டிருக்கிறேனே!’ என்று எண்ணினவள்போல அவள் கலவரமடைந்தது நன்றாகத் தெரிந்தது. வண்டிபோன வேகத்தில் விர்ரென்று அடித்த காற்றிலும் அவளுடைய முகத்தில் வியர்வை தென்பட்டது.

ஆனால் எவ்வளவு நேரந்தான் கவலைப்பட முடியும்? கவலையால் ஏற்பட்ட அசதியிலேயே எங்களை அறியாமல் கண்ணயர்ந்தோம்.

துக்கத்தில், நித்திரையும் நினைவு மறதியும் சேர்ந்துதான் வாழ்க்கைக்கு ஒரு சிறு போதையாகித் தாபத்தைத் தணிக்கின்றனவோ?

வண்டி செங்கற்பட்டை நெருங்குகிற சமயம். வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தோம். கிழக்கு வெளுத்துக்கொண்டிருந்தது. வண்டி ஏதோ ஒரு குக்கிராமத்தைக் கடந்து போய்க்கொண்டிருந்தபொழுது கோழி கூவியதுகூடக் காதில் வந்துபட்டது.

‘அப்பா! விடியுமா?’ என்கிற நினைப்பு ஒருபக்கம்.

‘ஐயோ! விடிகிறதே! இன்னிக்கி என்ன வச்சிருக்கோ!’ என்ற நினைப்பு மற்றொரு பக்கம்.

இரவின் இருட்டு அளித்திருந்த ஆறுதலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்டிய வெளிச்சம் பறிக்க வருவதுபோல் இருந்தது.
எங்கேயோ, கண்காணாத தூரத்தில் உருவடைந்த ஒரு காட்சியில் ஈடுபட்டவளாய் நிலைகுத்திய பார்வையுடன் குஞ்சம்மாள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

‘செங்கற்பட்டில் பல் தேய்த்துக்கொண்டு காபி சாப்பிடுவோமா?’ என்று கேட்டேன்.

‘எல்லாம் பட்டணத்தில்தான்!’ என்று சொல்லிவிட்டாள் குஞ்சம்மாள். பக்கத்தில் நகரத்தார் பெண் கவலையற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
‘இதோ ஆயிற்று, இதோ ஆயிற்று!’ என்று சொல்வதுபோல வண்டி தாவிப் பறந்து கொண்டிருந்தது.

ஆனால் எங்களுக்கு என்னவோ பட்டணம் நெருங்க நெருங்க, வண்டி வேண்டுமென்றே ஊர்வதுபோல இருந்தது.

எழும்பூர் வந்தது கடைசியாக.

ஸ்டேஷனில் யாருமில்லை; அதாவது எங்கள் அத்திம்பேர் இல்லை – எல்லோரு இருந்தார்கள். ‘ஆனால் அவர் ஸ்டேஷனுக்கு எதற்காக வரவேண்டும்? அங்கே எதிர்பார்ப்பது சரியில்லைதான்’ என்று அப்பொழுது தோன்றிற்று.

வீட்டுக்குப் போனோம். வீடு பூட்டியிருந்தது.

உடம்பு சௌகரியமில்லைதான்! சந்தேகமில்லை இப்பொழுது!

ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அரைமணி நேரம் துடித்த பிறகு குமாஸ்தா வந்தார்.

‘நீங்கள் கும்பகோணமா?’ என்றார்.

’ஆமாம்-’ என்றேன்.

‘நோயாளி – நேற்றிரவு – இறந்துபோய்விட்டார்’ என்று குமாஸ்தா சாவதானமாகச் சொன்னார்.

’இறந்து-? அது எப்படி? அதற்குள்ளா?’ அப்பொழுதும் சந்தேகமும் அவநம்பிக்கையும் விடவில்லை.

‘சிவராமையர்-?’

’ஆமாம், ஸார்!’

‘ஒருவேளை-’

‘சற்று இருங்கள். பிரேதத்தைப் பெற்றுக் கொள்ளலாம்’ என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் குமாஸ்தா தம் ஜோலியைக் கவனிக்கப் போனார்.
கொஞ்சநேரம் கழித்துப் பிரேதத்தைப் பெற்றுக் கொண்டோம்.

அப்பொழுது, அதைப் பார்த்தவுடன், நிச்சயமாயிற்று!

ஒருவழியாக மனத்திலிருந்த பயம் தீர்ந்தது; திகில் தீர்ந்தது.

பிறகு-?

விடிந்துவிட்டது.

காக்கைச் சிறகினிலே… – பொன் குலேந்திரன் – கனடா

பிரான்ஸ் அரசு தந்த செம டிரெய்னிங் ...

அன்று புரட்டாசி சனிக்கிழமை. அம்மாவும் அப்பாவும் புரட்டாசிக் சனிக்கிழமைக்கு விரதம். இருவரும் காலை, வண்ணார்பண்ணை வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் போய் நல்லெண்ணை எரித்து, சிவனுக்கு அர்ச்சனை செய்து போட்டு வந்தார்கள். அவர்கள் தங்களோடு என்னையும் வரும்படி கூப்பிட்ட போது நான் சாக்கப் போக்கு சொல்லி கடத்திவிட்டேன். அப்பாவுக்கு ஏழரைச் சனி கடைக்கூறாம அம்மா சொன்னாள.; முதற் கூறில் அக்சிடென்ட் பட்டவர் நல்லகாலம் தன்றை மாங்கல்யப் பாக்கியத்தால் அவர் உயிர் தப்பியது என்பாள் அவள் அடிக்கடி. நடுக் கூறு நடக்கும் போது காணியில் பங்கு கேட்டு  அவர் போட்ட கேஸில் தோர்த்து போனார். நடுக் கூறு நடக்கும் போது தான் அப்பாவுக்கு புரமோசன் கிடைத்தது. அக்காவுக்கு திருமணம் நடந்தது .கனடா மாப்பிள்ளை வேறு. அந்த நல்ல காரியங்களைப் பற்றி அம்மா பேசமாட்டாள். அம்மா பயப்பட்டாள கடைக் கூறில் என்ன நடக்குமோ என்று. இதுக்கெல்லாம் காரணம் ஊர் சாஸதிரி சதாசிவம் தான். ஒரு மாதத்துக்கு ஒரு தடவை அவரிடம் இருபது ரூபாய் கொடுத்து ஆலோசனை கேட்காவிட்டால் அம்மாவுக்குத் திருப்தியில்லை. அவர் சொன்ன படி சனிக்கிழமை விரதப் பயித்தியம் அவளைப் பீடித்துக் கொண்டது. அது தான் ஒவ்வொரு சனிக்கிழமையும் அவள் விரதம் இருந்தாள். எனக்கு தான் வயிற்றில் அடி. சனிக்கிழமையில் தான் மார்க்கண்டன் கிடாய் வெட்டி கூறு போடுகிறவன். பனை ஓலையிலை கொழுப்போடை கட்டித் தரும் அந்த இறச்சியை ருசித்த சாப்பிடாமல் இந்த சனிக்கிழமை விரதம் தடுத்துவிட்டது. ஒரே ஒரு சனிக்கிழமை சித்தப்பா வீட்டை போய் அம்மாவுக்கு தெரியாமல் அந்த இறச்சியை சாப்பிட்டு வந்தனான். அம்மாவுக்கு தெரிந்திருந்தால் வீட்டுக்குள்ளை விட்டிருக்கமாட்டா.

*****

கோயிலுக்குப் போய் வந்து, சமைத்து, கையில் வாழையிலையில் காகத்துக்குப் படைக்க சோறு கறியுடன் முற்றத்துக்கு அம்மா போவதைக் கண்டேன். கத்தரிக்காய் பொரித்த குழம்பு, முருங்கையிலை வறை, பாவக்காய்  பொரியல் , துவரம் பருப்பு கறி , புடலங்காய் வதக்கல், உருழைக் கிழங்கு பிரட்டல் வாசனை மூக்கைத் துளைத்தது. சனிக்கிழமை விரதத்துக்கு முருங்கையிலை கறி அவசியம் இருந்தாக வேண்டும். இது அம்மாவின் நம்பிக்கை. சுத்த பசு நெய்யின் மணம் கூட வீசியது. அடித்தது யோகம் காகங்களுக்கு.  வீட்டில் பழைய பராசக்திப் பாடலான கா கா கா என்ற பாடல் ரேடியோவில் கேட்டது அவவின் கா கா கா என்று காகத்தை அன்பாக விருந்துக்கு கூப்பிடும் அழைப்பும் பராசக்தி பாடலையும் கேட்டவுடன் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. தாளத்தில் தான் என்ன ஒற்றுமை.

 

இந்தக் காகங்கள் பொல்லாதது. சமயம் பார்த்து புரட்டாசி சனிக்கிழமைகளில் ஓடி ஒளிந்துவிடும். அதுகளுக்கு ஊரில் நல்ல மதிப்பு பாவம் அம்மா தொண்டை கிழிய கத்திய பிறகு எங்கையோ இருந்து பக்கத்து வீடுகளில் வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு வேண்டா வெறுப்பாக துணிமணிகள் காயப் போட்ட கொடியில் வந்தமர்ந்தது ஒரு காகம்.

 

“ஐயோ அம்மா பசிக்குது. இரண்டு நாளாக பட்டினி. ஏதும் சாப்பாடு இருந்தா போடுங்கோ.” பிச்சைக்காரன் குரல் கேட்டடியில் கேட்டது. அவன் போட்டச் சத்தத்தில் காகம் பறந்து போய் விடுமோ என்ற பயம் அவளுக்கு.

” ஏய் ஒரு மணித்தியாலம் கழித்து வா  காகம்  சாப்பிட்டபின் வாபார்ப்பம்” என்றாள் அம்மா. மனிதனின் பசியை விட காகத்தின் பசி தான் அவளுக்கு முக்கியமாகப் பட்டது. எல்லாம் சனியின் வேலை.  மதில் மேல் நாயுக்கு எட்டாத வாறு சாப்பாட்டை வைத்தாள். அவள் முகத்தில் ஒரு திருப்தி. சனி பகவான் வந்துவிட்டார் என்ற திருப்தியோ என்னவோ. நடப்பதை தூரத்தில் இருந்து நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

“உன் பொறுமைக்கு பாடம் கற்பிக்கிறேன். போன கிழமை காய வைத்த மிளகாயை கிளரியதுக்கு என்னை கல்லல் எறிந்து துரத்திய உன்னை பழி வாங்காமல் விடப் போவதில்லை நான் சாப்பிட்டால் தான் நீ சாப்பிட முடியும். நான் பக்கத்து வீட்டை சாப்பிட்டு விட்டேன்” என்பது போல் சாப்பாட்டு பக்கம் பாராமல் வேறு பக்கம் தன்தலையைத் திருப்பி வைத்திருந்தது அக்காகம். பழிவாங்க நினைத்த அக்காகம் என்ன நினைத்ததோ என்னவோ கொடியில் காயப் போட்டிருந்த அப்பாவின் வெள்ளை நிற மல் வேட்டியில் தன் எச்சத்தால் கோலம் போட்டது. அம்மா பார்த்துவிட்டாள். என் செய்வது வந்ததோ ஒரே ஒரு காகம். அதன் மேல் கல் எடுத்து வீசி தன் கோபத்தைத் தணிக்க முடியாதே அதுவும் புரட்டாசி சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கு எள் எண்ணை எரித்தப் பிறகு காகம் செய்த செயலுக்காக அதை தண்டிக்கலாமோ?. சனி  பகவான் கோபிக்க மாட்டாறொ. அப்பாவுக்கு இன்னும் ஏழரைச் சனி முடியவில்லை. காகம் கோபப்பட்டு சனிபகவானுக்கு கோள் மூட்ட, அவர் எதாவது எக்கச்சக்கமாக கடைக் கூறில் செய்து விட்டால். எழரைச் சனி முடியும் மட்டும் கவனமாக இருக்கும் படி சாஸ்திரி கூட எச்சரிக்கை செய்தவர். அவள் அதை யோசித்திருக்க வேண்டும். விருந்துக்கு வந்ததோ ஒரே ஒரு காகம். அதை ஆதரவாக வரவேற்று சாப்பாட்டைக் கொடுக்காவிட்டால் இன்று நாங்கள் பட்டின தான். அது சாப்பிட்டு ஏவறை விட்ட பிறகு தான் எமக்கு அம்மா சாப்பாடு போடுவாள். இல்லாவிட்டால் அவள் சுவையாக சமைத்த கறி சோறு ஆறிப் போய்விடும்.

 

“ அம்மா காகங்களுக்கு மரக்கறி சோறு பிடிக்காது. மீன் அல்லது இறச்சி கறி வைத்தால் அவை மணத்துக்கு உடனே வந்திடும் என்றேன் நான் கிண்டலாக”

“ டேய் நீ வாயை மூடு. உனக்குத் தான் இதிலை நம்பிக்கையில்லை என்றால் சும்மா இருக்க வேண்டியது தானே கடவுளின் கோபத்தை தேடிக்  கொள்ளாதே” அம்மா  என்னைஅதட்டினாள்.

 

பாவம் எங்கள் வீட்டு ஜிம்மிக்கு கூட பசி. பாவம் அதுவும் வீட்டோடை விரதம். நாக்கை வெளியே நீட்டிய படி தனக்கு அதில் ஒரு பங்கு கிடைக்காதா என்று தவித்து நின்றது. கலியாணவீட்டு மிச்சச் சாப்பாடும், ஹோட்டல்களில் எஞ்சி இருந்த சாப்பாட்டையும் ஒரு கை காகங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடும் ஜம்மிக்கு புரட்டாசி சனிக்கிழமை மட்டும் காகங்களுக்கு ஏன் இந்த தனிச் சலுகை என்பது விளங்காத புதிராக இருந்தது. லொள் லொள் என்று அடிக்கடி குரைத்தது. கொடியில் இருந்த காகத்தை  கேட்டபோது அது சொல்லிற்று

“ ஏய் ஜிம்மி நாங்கள் சர்வ வல்லமை படைத்த சனிபாகவானின் அலுவலக வாகனம். அதாவது ஒபிசல் வெகிக்கல். அவர் நினைத்தால் தன் ஏழரை வருட ஆட்சியில் ஆக்களை ஆட்டி வைக்க முடியும். என்னை தாஜா செய்தால் நான் அவருக்கு சிபாரிசு செய்து கஷ்டத்தை அவர் ஆட்சி காலத்தில் கொடுக்காமல் செய்து விடுவேன். அதற்காக எனக்கு எனக்கு ஒரு தனி மரியாதை”

 

“ ஓ அப்ப ஒரு வித ஊழல் என்று சொல்லேன்” என்றது ஜிம்மி.

 

“ ஏய் ஜம்மி அதிகம் பேசாதே. உனக்கும் பிரச்சனையை தரச் சொல்லுவன்”

 

“ என்ன என்னை மிரட்டுகிறாயா. நான் எல்லோரையும் பாதுகாக்கும் வைரவரின் வாகனம். அவர் இருக்கு மட்டும் எனக்கேன் பயம்.?”

 

“ அப்படியென்றால் வைரவருக்கு பொங்கி படைக்கும் போது உனக்க என்னைப் போல் என்ட சலுகை காட்டுவதில்லை?”

 

“ ஏன் என்றால் உன்னைப் போல் நன்றியில்லாதவன் அல்ல நான். நாய் ஒரு நன்றியுள்ள மிருகம் எனக் கேள்விப்பட்டிருப்பியே. அது தான் என்னை அன்பாய வீட்டில் வளர்க்கிறார்கள். உனக்கு வருஷத்தில் சில தினங்களுக்கு தான் மரியாதை கொடுக்கிறார்கள். மற்ற நாட்களில் கல் எறிந்து துறத்திவிடுவார்கள்” ஜிம்மி தன் கௌரவத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

 

அம்மாவுக்கு காகம் சாப்பிடாமல் ஜிம்மியுடன் பேசிக் கொண்டிருந்தது புரியயில்லை. ஜிம்மி தொடர்ந்து குரைத்தது. காகம் கரைந்தது. இரண்டும் தொடர்நது பேசிக் கொண்டன. அவர்கள் பாhவையில் எனக்குப் புரிந்து அவர்களுக் கிடையே உள்ள கௌரவ பிரச்சனை.

“ ஏய் ஜிம்மி என்னைப் பற்றி மகா கவி பாரதியார் கூட “காக்கைச் சிறகினலே..” என்று பாடியிருக்கிறார். என் நிறத்தில் அழகைக் கண்டு இரசித்திருக்கிறார்.. அதோ கேட்டாயா அந்த காக்கா பாடலை. அது கூட நடிகர் திலகம் தன் முதல் படத்தில் பாடியது. அந்த படம் வந்த போது எங்களைப் பார்த்து ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக பாடுவார்கள்.”

“ ஒற்றுமையா?”

“ ஆமாம். உங்களைப் போல் நாலு பேர் கூடினால் வள் வள் என்று குரைத்து கடித்து சண்டை போடமாட்டோம். பிரச்சனையெண்டவுடன் கா கா கா என்று ஒரு குரல் கொடுத்தால் போது நாலு திசையிலும் இருந்தும் எம்மினம் பறந்து வந்திடும். ஒரு நாள் இப்படித்தான் ஒரு சிறுவன் மரத்தில் ஏறி கூட்டில் உள்ள முட்டைகளை  களவெடுக்க பார்த்தான். எனது சகோதரி அதைக் கண்டு விட்டர்ள. உடனே அவள் போட்ட குரலில் என் சொந்தக்காரர், நண்பர்கள் எல்லோரும் பறநது வந்து சிறுவன் தலையில் கொத்தோ கொத்தி இரத்தம் வழிய சிறுவனை ஓடச் செய்து விட்டார்கள். சாப்பாட்டை கூட பகிர்ந்துண்ணுவோம்.” என்றது பெருமையாக காகம்.

 

“ ஓ கோ. ஆனால் என்னை குளிப்பாட்டி தலை வாரி கவனிப்பது போன்ற மரியாதை உனக்கு நடப்பதில்லையே”

 

“ ஏன் இல்லை. என் பெயரில் யாழ்ப்பாணத்தில் காக்கை தீவு என்ற பெயர் உள்ள கடலோரப் பகுதி கூட உண்டு. கிட்டடியில் கொழும்பில் என் இனத்தவர்கள் சிலர் தீடீரென்று இறக்கத் தொடங்கினர். உடனே மாநகரசபை அதற்கு காரணம் கண்டு நடவடிக்கை எடுத்தது. நாம் நகரைச் சுத்தம் செய்யும் தொழிலாளிகளுக்கு ஒரு விதத்தில் உதவி செய்கிறோம். உன்னைக் கண்டால் படித்து கூட்டுக்குள் அடைத்து கொண்டு போய் விடுவார்கள். மக்களை விசராக்கி விடுவாய் என்ற பயம் வேறு”

 

“ ஏய் அப்படி சொல்லாதே நீ கூட தொற்று நோயை பரப்பி விடுவாய் என்று சனங்கள் பயப்பிடுகிறார்கள்?

 

“ நான் பிறருக்கு உதவி செய்யும் இனத்தை சேர்ந்தவன். குயில் கூட என் கூட்டில் தான் முட்டையிடும். நான் அடைகாத்து அதன் முட்டைகளை பொரிக்க வைப்பேன். குஞ்சுகள் வெளி வந்ததும் அவை வளரும் மட்டும் தாதியாக கவனிப்பேன். நீ அப்படி ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறாயா?”

 

“ஏன் இல்லை. என் வீட்டு எஜமானின் குழந்தைகளை என்னை நம்பி எத்தனை தடவை தனிமையாக விட்டுப் போயிருக்கிறார்கள் தெரியுமா உனக்கு.?”

 

“ ஏய் ஜிம்மி உன்னைப்பற்றி அதிகம் புழுகாதே. என்னைப் பற்றிய காகமும் நரியும் என்ற பிரபல்யமான கதை கேள்விப்பட்டிருக்கிறாயா?

 

“ ஏன் இல்லை. நீ நரியால் ஏமாற்றப் பட்ட கதையைத் தானே சொல்லுகிறாய். அந்த வடைக்கு என்ன நடந்தது?”

 

“ அடேய் ஜிம்மி அதையல்ல நான் சொல்வது. போப் இசை  பாடகன் ஏ.யீ மனோகரனின் பிரபல்யமான இலங்கைக்காகத்தின் பாடலில் வந்த கதையை. நரிக்கு காதுலை பூ வைத்துவிட்டு போன புத்தியுள்ள காகத்தின் மொடர்ன் கதை அது”

 

அவர்களிடையே நடந்த சம்பாஷணை அம்மாவின் பொறுமையை சோதித்தது. ஜிம்மி காகத்தை சாப்பிட விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது அவளுக்கு எரிச்சலை கொடுத்தது. கீழே கிடந்த கல்லை தூக்கி ஜிம்மி மேல் எறிந்து “ ஓடிப் போ “ என்று துறத்தினாள்.  அது வள் வள் என்று கதறிய படி ஓடியது. பார்க்க பரிதாபமாகயிருந்தது.

அடுத்த புதன் கிழமை அரசடி வைரவர் வடைமாலை சாத்தி பொங்கல்.. அது தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அப்போ பார்ப்பொம் ஜிம்மிக்கு அம்மா மரியாதை செய்கிறாவா வென்று.

 

ஜிம்மி போனபின்னும் கொடியில் இருந்த காகம் சாப்பிட மறுத்தது. அம்மாவின் கா கா என்ற பரிதாபமான ஓலத்தைக் கேட்டு மனம் இரங்கி இன்னும் இரண்டு காகங்கள் சாப்;பிட மதிலில் வந்தமர்ந்தன. கொடியில் இருந்த காகமும் அவையளோடை சேர்ந்து உண்ண ஆரம்பித்தது.

 

“ கனகம் எனக்கு பசி வயித்தை பிடிங்குது என்று அப்பா உள்ளுக்குள் இருந்து சத்தம் போட்டார். எனக்கு மனதுக்குள் சந்தோஷம். சாப்பிட வீட்டுக்குள் அம்மாவுக்குப் பின்னால் போனேன். ஜம்மியும் அப்பா சொன்னது விளங்கியோ என்னவோ என் பின்னால் வந்தது. நல்லகாலம் எல்லா காகங்களும் முழுதையும் சாப்பிடும் மட்டும் அம்மா நிற்கவில்லை.

 

காகங்கள் இல்லாத தேசங்களில் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் காகத்துக்கு சாப்பாடு வைக்க என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். பதில் கிடைத்தது. கலியாணத்தில் பொம்மைப் பசுக் கன்று, வாழை மரம், முருக்கை மரம்  வைத்து கலியாணச் சடங்குகள் செய்வது போல் பொம்மைக் காகத்துக்கு சாப்பாட்டை வைப்பார்கள் போலும் என்றது என் மனம். கிட்டடியில் கனடாவில், புரட்டாசிக் சனிக்கிழமை அன்று இரண்டு காகத்தை எங்கிருந்தோ கொண்டு வந்து கூட்டுக்குள் அடைத்து வைத்து கோயிலில் சாப்பாடு வைக்க இரண்டு டொலர் எடுத்ததாக அத்தான் போன் செய்த போது சொன்னார். கேட்கும் போது வேடிக்கையாகயிருந்தது. எல்லாம் மக்களின் மூட நம்பிக்கை தான். அதை வைத்து பிஸ்னஸ் செய்யினம் கோயில்கள்.  “காக்கைச் சிறகினிலே நந்தலாலா மடைமைத் தனம் தோன்றுதடா நந்தலாலா” என்று எனக்குள் பாரதியார் பாடலைத் திருத்தி பாடிக்கொண்டேன்.

 

( யாவும் புனைவு)

 

திரைக்கவிதை – கண்ணதாசன்- மயக்கமா கலக்கமா

 

திரைப் படம்: சுமைதாங்கி

குரல்: P B ஸ்ரீநிவாஸ்

வரிகள்: கண்ணதாசன்.

 

மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா

வாழ்க்கையில் நடுக்கமா

 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எது வென்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை

வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

 

ஏழை மனதை மாளிகையாக்கி

இரவும் பகலும் காவியம் பாடி

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

குண்டலகேசியின் கதை – தில்லை வேந்தன்

ஒரு புதிய கவிகைத் தொடர் உங்கள் உள்ளத்தைக் கொள்ளையடிக்கப் போகிறது.!

குண்டலகேசியின் கதையை சங்கப் பாடலுக்கு இணையாக புதிய காப்பியமாகப் படைக்க வந்திருக்கிறார் தில்லை வேந்தன். வாழ்த்துக்கள் ! 

                                                                                                                                 குண்டலகேசியின் கதை

 

.                  
முன்னுரை:

தமிழின்  ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி, பௌத்த சமயத்தைச் சார்ந்த நூலாகும். இந்நூல் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை… இதில் 19 பாடல்கள் மட்டுமே  கிடைத்துள்ளன.

 இப்பாடல்களைக் கொண்டு காப்பியத் தலைவியின் வரலாற்றை அறிய இயலாது.
எனினும், பொதுவாக நாட்டிலும், இலக்கியத்திலும் வழங்கி வரும் கதையில் கற்பனையும் கலந்து “குண்டலகேசியின் கதை”யைப் படைத்துள்ளேன்.

வணிகர்க் குலப் பெண்ணான குண்டலகேசியின் கதை, உள்ளத்தை  உருக்குவது; ஊழின் வலிமையை   உரைப்பது;  உலக உண்மைகளை உணர்த்துவது. 

இனி நூலுக்குள் நுழைவோம்:

பக்தி கதைகள், குண்டலகேசி கதைச் ...
                 
             

புத்தன் வணக்கம்

 

முற்றும் தன்னை உணர்ந்தானை,

      முழுதும் அமைதி நிறைந்தானை,

குற்றம் மூன்றும் களைந்தானை,

     கூடும் வினைகள் தடுத்தானை,

பற்று       நீங்கி      உயர்ந்தானை,

     பான்மை உணர்ந்து பகர்ந்தானை,

வெற்றுப் பிறவி அறுத்தானை

      வீழ்ந்து திருத்தாள் பணிவோமே

 

( குற்றம் மூன்று — மனம்,மொழி,மெய்களால் உண்டாகும் குற்றம்)

 

                 தமிழ்த்தாய் வாழ்த்து

 

குழலோடு யாழும் முழவோடு சேர்ந்து

     கொண்டாடும் இன்பத் தமிழே

அழலோடு புனலும் அழித்தாலும் அழியா

     அழகான தொன்மைத் தமிழே

நிழலோடு வெயிலும் விளையாடும் சோலை

     நிகரான தண்மைத் தமிழே

எழிலோடு விளங்கும், புகழோடு துலங்கும்

     இந்நாட்டின் அன்னைத் தமிழே!

 

                        பூம்புகார் சிறப்பு

 

முற்றத்தில் உலர்நெல்லை உண்ப தற்கு

     முனைகின்ற கோழியினை விரட்ட வேண்டிக்

கற்றிகழும் காதணியைக் கழற்றி வீசும்

     கயல்விழியார் உறைகின்ற  அகன்ற வீட்டில்

மற்றந்தக் கனங்குழையும் சிறுவர் தேரின்

     வழியடைத்து விளையாட்டைத் தடுத்தல் அன்றி

உற்றிடுமோர் பகைத்தொல்லை எதுவும் இல்லா

     ஓங்குபுகழ் கொண்டிருக்கும் பூம்பு காரே

 

உப்பளங்கள் வெண்மணலாய்ப் பரந்தி ருக்கும்

     ஓவியமாய்க் காட்சிதரும் பொய்கை, ஏரி,

அப்புறமும், இப்புறமும்  சிறந்தி ருக்கும்.

     அறம்நிலைக்கும் அட்டில்களின் சோற்றுக் கஞ்சி

எப்புறமும் வடிந்தோடும் வீதி தோறும்

     எருதுகளின் சண்டையினால் சேறாய் மாறும்.

செப்பரிய தவப்பள்ளி, வேள்விச் சாலை,

     திகழ்மருங்குப் பெரும்புகழின் பூம்பு காரே!

 

                   ( அட்டில்கள் — சமையற்  கூடங்கள்)

 

                  பூம்புகாரின் தெருக்கள்

 

கடல்வழியே வந்திறங்கும் குதிரைக் கூட்டம்,

     கால்வழியே வருகின்ற மிளகு மூட்டை,

வடமலையின் பொன்மணிகள்,மேற்கில் உள்ள

     மலைவிளைந்த சந்தனமும்,அகிலும்,தெற்குக்

கடல்பிறந்த ஒண்முத்தும், கங்கை மற்றும்

     காவிரியின் நீர்வளத்தால் விளைபொ ருட்கள்

இடமெங்கும் குவிப்பதனால் தவித்துப் போகும்

      ஈடில்லாப் பூம்புகாரின் பெருந்தெ ருக்கள்

 

( கால்— சக்கரம்– இங்கு வண்டிகளைக் குறிக்கும்)

 

       பல்வகை வீதிகள்

 

பட்டு விற்கும் வீதிகளும்

     பவளம் விற்கும் வீதிகளும்

பிட்டு விற்கும் வீதிகளும்

     பிறங்கு பாணர் வீதிகளும்

கொட்டிக் கிடக்கும் பல்பொருட்கள்

     கூவி விற்கும் வீதிகளும்

மட்டில் தொழில்செய் வீதிகளும்

     வயங்கும் வளமார் புகார்நகரில்.

 

      அங்காடியில் விற்கும் பொருட்கள்

 

வண்ணமும் விற்பர், சுண்ணமும் விற்பர்,

     மணங்கமழ் புகைப்பொருள் விற்பர்,

உண்பொருள் கூலம், ஒண்ணிறப் பூக்கள்,

     உப்பு,மீன், கள்ளுமே   விற்பர்.

வெண்கலம், இரும்பு, செம்பினில் செய்த

     விதவிதப் பொருட்களும் விற்பர்

கண்கவர் ஆடை, பொன்மணி  அணிகள்

     கலையெழில் கொஞ்சிட விற்பர்.

 

                      ( கூலம் — தானியம்)

 

.          வணிகர் இயல்பு

 

நடுநிலை பிறழா நெஞ்சர்

     நவில்வது யாவும் வாய்மை

கொடுபொருள் குறைக்க மாட்டார்

     கொள்பொருள் மிகையாய்க் கொள்ளார்

வடுவிலா வாணி கத்தில்

     வரவினை வெளியே சொல்வார்.

கெடுநிலை இல்லாக் கோல்போல்

       கேண்மையோர் வணிக மாந்தர்.

 

        ( கோல் – துலாக்கோல்/தராசு)

( கேண்மையோர் – நட்புக் கொள்பவர்கள்)

 

            பத்திரை பிறப்பு

 

பெருங்குடி வணிக னுக்குப்

     பிறந்தனள் பத்தி ரையாள்

அருங்குணப் பண்பு மிக்காள்

      அழகுடன்.நெஞ்சில் அன்பும்

ஒருங்கவே இயைந்த நல்லாள்

       உரைத்திடும் இனிய சொல்லாள்

சுருங்கிய இடையு டையாள்

       சுந்தர வடிவு  டையாள்.

 

( இவளுக்குப் பெற்றோர் இட்ட பெயர்

பத்தா தீசா. பத்ரா என்றும்  அழைக்கப்பட்டாள்)

 

(தொடரும்)

 

இன்னும் சில படைப்பாளிகள் – சுஜாதா – எஸ் கே என்

சுஜாதா

என்றென்றும் சுஜாதா - அமுதவன் ...

சுஜாதா என்னும் புனைப்பெயரில் எழுதிவந்த எஸ். ரங்கராஜன், புதினங்கள், சிறுகதைகள், நேர்காணல்கள், விஞ்ஞானக் கட்டுரைகள், அனுபவக் கட்டுரைகள், கேள்வி பதில், ஆழ்வார்கள் பற்றி, சங்க இலக்கியம் குறித்து, மரபுக்கவிதைகள் மற்றும் புதுக் கவிதைகள் குறித்து என பல தளங்களில் எழுதிக் குவித்திருக்கிறார்.  அவரைப்பற்றி வாசகர்களுக்குத் தெரியாத விவரம் என்பது அதிகம் கிடையாது. அவர் எழுதியவை போலவே அவரைப்பற்றி எழுதப்பட்டிருப்பவையும் ஏராளம்.

அவருக்கு லட்சக்கணக்கான வாசகர்கள் என்பது சர்வ நிச்சயம். அதிக எண்ணிக்கையில் வாசர்களை எழுத்தால் கட்டிப்போட்ட அவர் இலக்கியவாதியா இல்லையா என்பது மன்மதன் எரிந்த கட்சி எரியாத கட்சி போல முடிவு இல்லாத சர்ச்சை.

அறுபதுகளில், எழுத்துக்கூட்டியாவது படிக்கத் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற உந்துதலை ‘தினத்தந்தி’ ஏற்படுத்தியது. இது ஒரு மகத்தான பணி. பத்து பேர் முன்னிலையில் ‘தினத்தந்தி’ படிப்பதற்காகவே தமிழ் படிக்கக் கற்றுக்கொண்டவர்கள் பலர்.  இதற்காகவே, என் பள்ளி நண்பன் ஒருவன் அவனது தந்தைக்கு ‘அ’னா ‘ஆ’வன்னா சொல்லிக்கொடுத்ததை நான் பார்த்திருக்கிறேன்.

அதுபோல, சுவாரசியமான எழுத்துகளால் லட்சக்கணக்கானவர்களை படிக்கவைத்ததும், ஆயிரக்கணக்கானவர்களை எழுதவைத்ததும் சுஜாதாவின் எழுத்துகள்தான் என்பதும் பலரும் ஒப்புக்கொள்ளும் விஷயம்.

பல ‘நகாசு’ வேலைகளுடன் வித்தியாசமான முயற்சிகளோடு பல கதைகள் எழுதியிருக்கிறார். வழக்கமான கட்டமைப்பிலும் குறிப்பிடத்தக்க கதைகளும் எழுதியுள்ளார். அதில் ஒன்று  ‘நிஜத்தைத் தேடி’.

******

 கல்யாணமாகி ஒன்பது வருஷத்துக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை கிருஷ்ணமூர்த்தியும் சித்ராவும் ஹாலில் எதிர் எதிரே உட்கார்ந்திருந்தார்கள். பழக்கப்பட்ட மௌனம். கிருஷ்ணமூர்த்தி செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்க சித்ரா குக்கர் சப்தம் வரக் காத்திருக்கும் நேரத்தில் தொடர்கதை படித்துக் கொண்டிருந்தாள்.

என்று தொடங்குகிறது.

முப்பது வயது இருக்கக்கூடிய ஒருவன் மர கேட்டைத் திறந்துகொண்டு வந்தான். கையில் ஒரு தட்டு. காலில் செருப்பில்லை. யாரென்ற கிருஷ்ணமூர்த்தியின் கேள்விக்கு வந்தவன் பதில் இது:

“ஊருக்குப் புதுசுங்க. வேலை தேடி வந்தேங்க. என் மனைவி காலைல இறந்து போய்ட்டாங்க பிணம் கிடக்குதுங்க. எடுக்கக் காசில்லை. பெரிய மனுசங்க உதவி பண்ணணும்” அவன் வைத்திருந்த தட்டில் சில ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. எதற்கோ புஷ்பங்கள் இருந்தன. ஒரு ஊதுவத்தி புகைந்து கொண்டிருந்தது.

படித்துக் கொண்டிருந்த தொடர்கதையை நிறுத்திவிட்டு சித்ரா எட்டிப்பார்த்து, என்னவென்று கேட்டாள். வந்தவன் தன் கதையை மீண்டும் சொன்னான்.

மனைவியின் மரணம் என்பது உடனே கேட்டவனை உலுக்கிவிடக்கூடிய சோகம். உடனே உள்ளே போய் பணம் எடுத்துக் கொடுக்க வேண்டியதுதானே? கிருஷ்ணமூர்த்தி அப்படிச் செய்யவில்லை. செய்யமாட்டான். எதையும் விசாரிப்பான். சித்ராவுக்குத் தெரியும்.

வீடு எங்கே என்று தொடங்கி, அட்ரஸ் கேட்டு ‘மூணாவது கிராஸ்னா எச்.எம்.டி லே-அவுட்டா, சுந்தர் நகரா..? சினிமா தியேட்டர் பேரென்ன?’ என்றெல்லாம் குறுக்கு விசாரணை செய்தான் கிருஷ்ணமூர்த்தி. வாக்குவாதம் வேண்டாமே என்று சொல்லி குறுக்கிடும் சித்ராவை சத்தம்போட்டு வாயை அடைத்தான்.

போலீஸ்காரன் போலக் கேள்வி கேட்கிறீர்களே, காசு கொடுக்க முடியும் அல்லது முடியாது என்று சொல்லிவிடுங்கள் என்றான் வந்தவன்.

“என்ன ஒரு மனிதாபிமானமில்லாத ஆசாமி அய்யா நீ” என்று திட்ட ஆரம்பிப்பான் என்று நிச்சயம் எதிர்பார்த்தாள். அவன் அப்படிச் சொய்யாமல் திடுதிப்பென்று அழ ஆரம்பித்தான். தட்டைக் கை மாற்றிக்கொண்டு மௌனமாக அழுதான். “வரேன் ஸார்” என்று திரும்பி நடந்தான். போகும் போது வாசல் கேட்டைத் தாளிட்டுவிட்டுச் சென்றான். கிருஷ்ணமூர்த்தி இந்தச் செயலை எதிர்பார்க்கவில்லை.

கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதம். ஏதாவது காசு கொடுத்து அனுப்பியிருக்கலாம் என்பது சித்ராவின் அபிப்பிராயம். உண்மையென்றால் அட்ரஸ் சொல்லியிருப்பான்; மோசடிப் பேர்வழி என்பது கிருஷ்ணமூர்த்தியின் முடிவு.

ஊருக்குப் புதியவன்; அவன் அழுவதைப் பார்த்தால் உண்மையானவன் போல் தெரிகிறது; ஏதாவது கொடுத்து அனுப்பியிருக்கலாம் என்று சொன்னாள் சித்ரா.

“நீங்க சொல்றாப்போல நிறையப்பேர் பொய் சொல்றா ஏமாத்தறா தப்பிப்போய் இவன் சொன்னது மட்டும் நிஜமா இருந்து தொலைச்சுடுத்துன்னா.. அவ்வளவு துக்கத்தில இருக்கிறவனை வாசல்ல நிக்கவெச்சு கேள்வி கேட்டு மடக்கி அவனும் சொல்லத் தெரியாம முழிச்சு காசும் கொடுக்காம துரத்திட்டமே அது தப்பில்லையா? எதுக்காக கேள்வி கேட்கணும் அவனும் பொய் சொல்றான்னா எக்கேடு கெட்டுப் போகட்டும்னு ரெண்டு ரூபாய் கொடுத்திருந்தா இத்தனை..”

ஏழை என்று பிச்சை கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன்; எமாற்றுகிறவனுக்கு கொடுக்கக் கூடாது என்று கூறி, திருப்பதிக்குப் போகிறேன் என்று ஏமாற்றிக் காசு வாங்கியவள், இல்லாத அனாதைப் பள்ளிக்கூடத்துக்கு ரசீது புத்தகம் போட்டு காசு வாங்கியவன் என்று எமாற்றுக்காரர்களை பட்டியலிட்டான் கிருஷ்ணமூர்த்தி.   சித்ரா சமாதானமாகவில்லை. வந்தவன் அவனுடைய துக்கத்தில் கொஞ்சம் அவளிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டது போல அழுகையே வந்துவிட்டது.

“ஆல் ரைட் உனக்கு இன்னும் சமாதானமாகலை ஒண்ணு செய்யறேன் அவன் என்ன சொன்னான்? தியேட்டர் பக்கத்தில மூணாவது கிராஸ்னுதானே? தியேட்டர் கிட்டத்தில் தான் இருக்கு மூணாவது கிராஸ் போய் அங்க இருக்கானான்னு விசாரிச்சுண்டு வந்துடலாம் வா! அப்பதானே உனக்கு நிம்மதி ஆகும் ? வா காரை எடுத்துண்டுபோய் ஒரு நிமிஷம் பாத்துட்டு வந்துரலாம்.”

சித்ராவிற்கு வர மனமில்லை. அவன் பொய்தான் சொல்கிறான் என்கிற தனது வாதத்தை சித்ரா ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் கிருஷ்ணமூர்த்தி பார்த்துவிட்டுத்தான் வருவேன் என்று தீர்மானமாகச் சொன்னான். சித்ரா அழுதது தப்பு என்பதை நிருபிக்கவேண்டுமாம். நிஜமாக இருந்தால் காசு கொடுத்துவிட்டு வருவானாம். காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

தியேட்டருக்கு அருகில் மூன்றாவது கிராஸ் இருந்தது. அதில் திரும்பியதும் வெறிச் சென்ற அந்த சிறிய தெரு பூராவும் தெரிந்தது. தெருவின் நடுவில் ஒரு சட்டி வைக்கப்பட்டு அதனுள் நெருப்பு புகைந்து கொண்டிருந்தது. பச்சை மூங்கில்கள் காத்திருந்தன. ஓரத்தில் தலையில் கை வைத்துக்கொண்டு அவன் மண்ணில் உட்கார்ந்திருந்தான்.

சற்றுத் தயங்கிவிட்டு காரை ‘ரிவர்ஸ்’ எடுத்து வீடு திரும்பிவிட்டான் கிருஷ்ணமூர்த்தி.

“என்ன ஆச்சு?” என்றாள் சித்ரா அசுவாரஸ்யமாக

 “நான் சொன்னது சரியாப்போச்சு அவன் சொன்ன மூணாவது க்ராஸ் முழுக்க விசாரிச்சுப் பார்த்துட்டேன் ஒண்ண்ணும் இல்லை”

“அப்படியா? அப்பா! எத்தனை பொய்!” என்றாள் சித்ரா.

என்று கதை முடிகிறது.

** ** ** **

சுஜாதாவின் சிறுகதைகளில் என்னுடைய ‘All time favourite’ இந்தக் கதைதான்.

சித்ராவின் கடைசி வாக்கியம் ‘எத்தனை பொய்’ என்பது கிருஷ்ணமூர்த்திக்குத்தான் பொருந்துகிறது என்பது வாசகர்களுக்குப் புரிகிறது. பிறர்மேல் நம்பிக்கையின்மை மற்றும் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் மனநிலை என இரு பரிமாணங்கள் இந்தக் கதையின் மையக்கருத்து.

இந்தக் கதை ‘டெலி ஃபிலிம்’ ஆக எடுக்கப்பட்டபோது பிறர் மேல் நம்பிக்கையில்லாததை மட்டுமே மையப்படுத்தி எடுத்திருந்தார்கள்.  கதை முடிந்ததும், கதைகுறித்த  உரையாடலிலும் அதையே வலியுறுத்திச் சொன்னார்கள். கிருஷ்ணமூர்த்தி காசு கொடுத்துவிட்டு வருவதாக தேவையற்ற மாற்றத்தையும் சேர்த்திருந்தார்கள்.

அந்த வருத்தத்தை தெரிவித்து சுஜாதா அவர்களுக்கு எழுதிய மின்னஞ்சலுக்கு இப்படி பதில் அளித்திருந்தார்.

“The appendix was unnecessary ….. sometimes very wise people do stupid things”

 

 

இலக்கியச் சுவை – மெல்லியலாள் பாதம் – சௌரிராஜன்

World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை ...
பெண்கள் கால்களில் கொலுசு அணிவதால் ...

 

மதியழகி : பெண்கள் அணியும் கொலுசு ...

 

*மெல்லியலாள் பாதம்*

 

*திருவள்ளுவர்*:

*அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்*
*அடிக்கு நெருஞ்சிப் பழம்* .

தினம் ஒரு குறள் அனுப்பும் நண்பர் ஒருவர் மேற்கண்ட குறளை, சில நாட்கள் முன்பு அனுப்பியிருந்தார். படித்தேன்.

குறளின் பொருள்:

முகர்ந்தாலே வாடிப்போகும் மென்மையான அனிச்ச மலரும் ( மோப்பக்குழையும் அனிச்சம்) , அன்னப் பறவையின் மெல்லிய இறகுகளும் – இரண்டுமே ( காலில் பட்டால் ) நெருஞ்சி முள் தைத்தது போல துன்புறுத்தக்கூடிய அளவுக்கு என் காதலியின் காலடிகள் மென்மையானவை.

( அடேயப்பா).

சரி, வள்ளுவர் எடுத்து தந்ததை மற்றவர்கள் (நமது கண்ணதாசன், வாலி உட்பட) விட்டு விடுவார்களா என்று தோன்றியது. உடனே ஆராய்ச்சி தொப்பியை மாட்டிக்கொண்டேன். ( Research cap).

கிடைத்தது ஒரு அரிய பொக்கிஷம். அதை *மெல்லியலாள் பாதம்* என்ற தலைப்பில் உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

*2*.

முதலில் மாட்டியவர்கள் *அம்பிகாபதி, கம்பர்*.

*இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க*

கம்பரின் மகன் அம்பிகாபதி சோழ மன்னனின் மகள் அமராவதியை காதலிக்கிறான். இது சோழ மன்னனுக்கு பிடிக்கவில்லை. ஒருநாள் அரண்மனையில் அனைவருக்கும் விருந்து அளிக்கும் பொழுது மரியாதை நிமித்தமாக மன்னன் தன் மகளை உணவு பரிமாற சொல்கிறான். சாப்பிட உட்கார்ந்திருந்த அம்பிகாவதி, அமராவதியை கண்டவுடன் சிருங்கார ரசம் பெருக,

*இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்த மருங்கசைய*

என்று பாட ஆரம்பித்து விடுகிறான். அதாவது அவள் காலடி வைத்த உடன் அவள் கால் வலிக்க, வைத்த காலை எடுக்கும்போது கால் கொப்பளித்து விடுகிறதாம். அவ்வளவு மென்மையானவளாம். கையில் தட்டை சுமந்த அவள் இடை ( மருங்கு) அசைகிறதாம்.
இதைக் கேட்டவுடன் சோழமன்னன் சும்மா இருப்பானா , கம்பரை தீப்பார்வை பார்க்கிறான். வெலவெலத்துப் போகிறார் கம்பர். சமாளித்தாக வேண்டுமே, இல்லாவிட்டால் மகன் தலை போய்விடுமே, அதனால் அம்பிகாபதி பாடிய பாடலை அவர் தொடர்ந்து முடிக்கிறார்:

*கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று* *கூவுவாள் – தன்நாவில்*
*வழங்கோசை வையம் பெறும்*

முழுப்பாடலின் பொருள்:
உலகம் முழுதும் கேட்குமாறு தெருவில் கொட்டிக்கிழங்கு கூவி விற்பவள், நல்ல வெயிலில், தன் கிழங்குத்தட்டுடன் அசைந்து நடந்து வருகிறாள். அவள் கால் வலித்து, கொப்பளித்துவிட்டது.

அதாவது அம்பிகாபதி பாட ஆரம்பித்தது வெளி வாயிலில் கொட்டிக்கிழங்கு விற்கும் பெண்ணைப் பற்றித்தான் என்று கம்பர் சமாளிக்கிறார்.

” எங்கே, எனக்கு கேட்கவில்லையே, யாரும் கொட்டிக்கிழங்கு விற்பதாக ” என்று சொல்லும் மன்னன் எல்லோருடனும் வெளியே வந்து பார்க்கிறான்.
கம்பன் வாக்கு பொய்க்கக்கூடாது என்று சரஸ்வதியே அங்கு திருவடிகளில் பாதரட்சை இல்லாமல் கடும் வெயிலில் கிழங்கு விற்று போகிறாள் என்பது கர்ணபரம்பரைக் கதை,.

Well, நான் எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு ( மெல்லியலாள் பாதம் ) *இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க* என்பது எவ்வளவு பொருத்தம்.

*3*

அடுத்து, *கம்பர்* இயற்றிய கம்ப ராமாயணத்திலிருந்து ஒரு துளி பருகுவோம் .

இராமன் சிவதனுசை முறித்தபின் , தசரதன் வசிஷ்டர் உள்ளிட்ட அயோத்தி மகாஜனங்கள் மிதிலைக்கு வந்து சேர்ந்த பின், சீதையை அந்தப்புரத்திலிருந்து அலங்காரம் செய்து அரசவைக்கு அழைத்து வருகின்றனர். அப்போது கம்பன் பாடிய பாடல்:

*வல்லியை உயிர்த்த நிலமங்கை இவள் பாதம்*

*மெல்லிய உறைக்கும் என அஞ்சி வெளி எங்கும்*

*பல்லவ மலர்த் தொகை பரப்பினள் என தன்*

*நல் அணி மணிச் சுடர் தவழ்ந்திட நடந்தாள்*

*பொருள்* :

ஜனகன் பொன் ஏர் பூட்டி உழுதபோது, நிலத்தில் கிடைத்தவள்தான் சீதை. எனவே சீதை பூமாதேவியின் மகள். வல்லி என்பது கொடி.

கொடி போன்று இருக்கும் சீதையின் மென்மையான பாதங்கள் வெறும் தரையில் நடந்தால் உறுத்தி அவளை வருத்தக்கூடும் என்று அஞ்சி, சீதை நடந்து செல்லும் தடம் முழுவதும் மென்மையான தளிர்களையும் மலர்களின் தொகுதிகளையும் மண்மகள் பரப்பிவைத்தாளோ என்று தோன்றும் அளவிற்கு,
தான் அணிந்திருக்கும் சிறந்த அணிகலன்களில் பதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு இரத்தின, மாணிக்க மணிகளின் வண்ண ஒளிச்சுடர்கள் முன்னே பரவிச் செல்ல சீதை நடந்தாள்.

தலைப்புக்கான தொடர்பு:
*இவள் பாதம் மெல்லிய உறைக்கும் என அஞ்சி..*

*4*.

அடுத்து *இளங்கோவடிகள்*.

*மண்மகள் அறிந்திலள் – இவள்*
*வண்ணச் சீறடி* . –

கண்ணகி பற்றி இளங்கோவடிகள் – *சிலப்பதிகாரம்* காப்பியத்தில் :

மாதவியைப் பிரிந்த கோவலன், புது வாழ்வைத் தேடி கண்ணகியுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறான். கோவலனும் கண்ணகியும் செல்லும் வழியில் கவுந்தியடிகள் எனும் சமணத் துறவியைச் சந்திக்கின்றனர். மூவரும் மதுரை நோக்கிச் செல்கின்றனர். மதுரை நகருக்குள் கோவலன் செல்லும்போது கண்ணகி பாதுகாப்பாக இருக்க , எல்லையில் மாதரி என்னும் இடையர் குல பெண்ணிடம் கண்ணகியை அடைக்கலமாகத் தருகின்றார் கவுந்தியடிகள். கோவலன் வரும்வரை இவளை பத்திரமாக பார்த்துக்கொள் என்று கூறி கண்ணகியின் பெருமையையும் அவளை பேணும் முறையையும் ( பார்த்துக்கொள்ளும் விதத்தையும்) மாதரிக்கு விளக்குகிறார். அப்போது சொல்கிறார் :

*ஈங்கு,*
*என்னொடு போந்த இளங் கொடி* *நங்கை-தன்*
*வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்*

அதாவது , மதுரைக்கு வருவதற்கு முன்னால் இவள் ( கண்ணகி ) நடந்தே அறியாதவள் என்பதால் இவளின் வண்ணமிகு அழகான பாதங்களை நிலமகள் கண்டதே இல்லை. நடக்க ஆரம்பித்த உடனே புண்பட்ட அடிகளையே மண்மகள் அறிந்திருப்பதால், *வண்ண* ச் சீர் அடியை நில மடந்தை அறிந்தாள் இல்லை.

கண்ணகியின் மெல்லிய பாதங்களை, அவள் எவ்வளவு மென்மையானவள் என்பதை இங்கு காண்கிறோம்.

*5*.

அடுத்து சிக்கியவர் நமது *கவியரசு கண்ணதாசன்*.

*சித்திரத்தாள் அடிச்சுவட்டைத் தேடிப் பார்த்தான்*

*தென்றல் வந்து போனதற்கு சுவடு ஏது*?

கவிஞரின் தனித்தொகுப்பான ” மாங்கனி ” என்ற குறுங்காவியத்தில் வரும் பகுதி இது.

காதலியைத் தேடி காதலன் வருகிறான். அதற்குள் அவள் போய்விடுகிறாள். எந்தப் பக்கம் போனாள் என்று தெரியவில்லை. அவள் காலடிச் சுவட்டை வைத்து எந்தப் பக்கம் போனாள் என்று பார்த்து, அந்த வழியே போகலாம் என்று தரையில் அமர்ந்து அவளின் காலடிச் சுவட்டைத் தேடுகிறான். சுவடு தெரியவில்லை.

காதலியின் காலடிச் சுவடுகளைக் காணவில்லை. ஏன்?காரணம் சொல்கிறார் கவியரச்ர். தென்றல் வந்து போனதற்கு சுவடு ஏது? தென்றல் வந்து போனால், சுவடு இருக்குமா?
*தென்றலைப் போல மென்மையானவள்* அவள். அதனால்தான் அவள் போனதற்கான காலடிச் சுவடு தெரியவில்லை என்று சொல்கிறார்.*சித்திரத்தாள்* என்பதில் ‘தாள்’ என்பது பாதம். அதற்கு உரிச்சொல்லாக ( adjective) சித்திரம் என்று கொள்ளலாம். அதாவது ஓவியம் போன்ற பாதத்தை உடையவள்.அல்லது ‘சித்திரத்தாள்’ என்ற முழு சொல்லையும் ஒரு உருவகமாக ( metaphor) கொள்ளலாம் – அவளையே ஓவியம் என்று கொள்ளலாம்.தமிழின் அருமையை என்ன சொல்ல !!*6*.

*கண்ணதாசன்* திரைப்பாடல் ஒன்று – எல்லோரும் அறிந்தது.

படம் : *புதிய பறவை*

ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
*முல்லை மலர் பாதம் நோகும்*
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…

இதற்கும் தலைப்புக்கும் ( மெல்லியலாள் பாதம் ) உள்ள தொடர்புக்கு விளக்கம் தேவையில்லை.

*7*.

வந்தாரையா *வாலி*.

படம் : *உலகம் சுற்றும் வாலிபன்*

*பச்சைக்கிளி முத்துச்சரம்*
*முல்லைக்கொடி யாரோ*

பாடல் அறிவோம்.

அதில் சரணத்தில் வரும் வரிகள் :

” *தத்தை போலத் தாவும் பாவை*
*பாதம் நோகும் என்று*

*மெத்தை போல பூவைத் தூவும்*
*வாடைக் காற்றும் உண்டு*

மெல்லியலாளான, கிளி போல தாவிச்செல்லும் தலைவியின் பாதம் வலிக்குமே என்று , காற்று வீசி , செடி, கொடி, மரங்களிலிருந்து பூக்களை உதிர வைத்து அவைகளை மெத்தை போல படியவைத்து , தலைவிக்கு வலிக்காமல் பார்த்துக் கொள்கிறதாம்.

இந்த கற்பனைக்கான உந்துதல் வாலிக்கு மேலே 3 வது புள்ளியில் குறிப்பிட்ட கம்ப ராமாயணம் பாடலாக இருக்கலாம் என்றால் ஏற்புடையதே..

*8*

*வாலி* யின் வேறொரு வித்தியாசமான பாடல்..

இதுவரை பார்த்ததில் எல்லா கவிஞர்களும்,
மெல்லியலாள் , அவள் பாதம் நோகும் , கொப்பளிக்கும், அவள் பாதச்சுவடு பதிந்த இடம் தெரியவில்லை என்று பாடினார்கள்.

வாலி ஒருபடி மேலே போய் சொல்கிறார்: தலைவி தன் தாமரை மலர் போன்ற மெல்லிய பாதங்களால் அடியெடுத்து நடந்தால் , காதலனின் உள்ளம் புண்ணாகி விடுமாம்.

படம்: *பணம் படைத்தவன்*

*பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்*

என்ற பாடலின் சரணத்தில் :

“பூ மகள் மெல்ல வாய் மொழி சொல்ல
சொல்லிய வார்த்தை பண்ணாகும்,

*காலடி தாமரை நாலடி நடந்தால்*
*காதலன் உள்ளம் புண்ணாகும்* –
இந்த காதலன் உள்ளம் புண்ணாகும் “

என்பதாக வருகிறது.

ஆஹா, என்ன ஒரு கற்பனை – மெல்லியலாளான தலைவி அடியெடுத்து வைத்தால் அவள் பூம்பாதம் படப்போகும் துயரங்களை எண்ணிப் பார்த்து ( அவள் இன்னும் நடக்கவில்லை; அப்படி நடந்தால் என்று எண்ணிப்பார்த்து ) காதலன் படும் வேதனையை என்ன அழகாக சொல்கிறார் !

————

*9*

இறுதியாக, என்னதான் கவிதைகளை ரசித்து படித்தாலும், *காணும் இன்பம்* என்பது வேறுதானே!

*படகோட்டி* படத்தில் வாலி அவர்கள் எழுதிய ஒரு பாடல் :

*நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை*
*ஒருவர் மடியிலே ஒருவரடி*

இப்பாடலில் முதல் சரணம் முடிந்து இரண்டாம் சரணம், *ஊரறியாமல் உறவறியாமல்* ஆரம்பிக்கு முன் வரும் பின்னணி இசையின் போது,
ஒரு நீர் நிறைந்த தடாகத்தில், தாமரை இலைகள் வரிசையாக இருக்கும். அதன்மேல் கால்களை மாற்றி மாற்றி வைத்து சரோஜாதேவி கடந்துவிடுவார்.
அதன்பின் MGR அதே மாதிரி செய்ய முயற்சிப்பார். முதல் இலையில் கால் வைத்ததுமே கால் தண்ணீருக்குள் சென்று விழுந்து விடுவார்.

ஏன் ?

ஏனென்றால், கதாநாயகியின் பாதம்,
*மெல்லியலாள் பாதம்*.

காணொளியின் லிங்க் தனியே கீழே கொடுத்திருக்கிறேன்.

இலக்கிய சுவை மேலும் காண்போம்..

சுடர் அகல்- பானுமதி.ந

Weekly Maritime Security Report - Week 35, 2019

நீலக் கடலலைகளின் மேலே நீந்திச் சென்றது விக்ரம். அது கடலில் பொதுவாக ரோந்துப் பணிகளுக்குச் செல்லத் தேவையில்லை. ஆனால், இது வழக்கமான பணியில்லை. கடற் கொள்ளையர்களைப் பிடிக்க இரகசியத் தகவல்களின் பேரில் கொச்சி கடற்தளம் தாண்டி சத்தமின்றி அது இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் மேல் தளத்தில் தொலை நோக்குக் கருவியுடன் அருண், உதவி கமேண்டர் பார்த்துக்கொண்டிருந்தான். கடல், தாலாட்டும் ஒத்திசைவோடு கப்பலைச் சுமந்தது. தொடு வானில் ஆரஞ்சு வண்ணத்தில் கதிரவன் எழுந்தான். அவன் வரவை கட்டியம் சொல்லும் முகமாக ஒளித் தீற்றல்கள். அருணின் மனதில் சுதா பாடும் பாடல் ஒலித்தது.  ‘உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது’

சுதாவின் நெற்றியில் சிறு செவ்வட்டமாக மிளிரும் குங்குமம்; அவள் ஒட்டும் பொட்டை ஒரு நாளும் சூடியதில்லை. நாசியில் ஒற்றைக்கல் மூக்குத்தி, கரும் அருவியென வீழும் கூந்தலில் நுனியில் முடிச்சு, மேலே  ஈரக் கூந்தலில் இரு பக்கமும், நடுவிலும் சிறு இழைகள் எடுத்துப் பின்னிய பைப் பின்னலில் சொருகப்பட்ட செண்பகப் பூ, இலேசாக மஞ்சள் பூசிய முயல் குட்டிகளென புடவையின் கீழிருந்து வெளிப்படும் வெள்ளிக் கொலுசுப் பாதங்கள். இந்தப் பாடலை முணுமுணுத்துக்கொண்டு அவள் ஏற்றும் குத்து விளக்கு. திரிக்குத் தாவிக் குதிக்கும் ஒளியில் சுடரேற்று வண்ண ஜாலங்களாய் அவள் கன்னத்தில் பரவும் மூக்குத்தியின் கார்வை; ஆம், அது தம்பூரின் ஸ்ருதி போல் இயைந்து வரும் வருடல். மணமான இந்த ஆறு மாதங்களில்  தரையில் இருந்த  மூன்று மாதக் காலத்தில் அவன் பார்த்துப் பார்த்து இரசித்த ஓவியம் அவள். சூரியன் கடலில் குளித்துக் கிளம்புவதைப் போல் அவள் குளித்து வருகையில் வண்ணங்கள், வாசங்கள் வெளிப்படும் அவளது இளம் மேனி. கிளர்த்தும் மஞ்சளிலிருந்து செங்குழம்பாக நீலப் பிண்ணனியில் ஆதவன் உயிரூட்ட வரும் போது அவன் அவளையேதான் இப்போதெல்லாம் நினைக்கிறான். பெண்ணை நிலவென்று சொல்லும் கவிஞர்கள், பாவம், ஆதவன் உதயத்தையும், அவன் மேலைக்கடலில் ஆழ்வதையும் பார்க்கவில்லை என அருண் சிரித்துக்கொண்டான். ஒரு நாள்,கூடிய விரைவில், அவளை அழைத்து வந்து, அவள் கண்களைக் கைகளால் பொத்தி கப்பலின் மேல் தளத்தில் நிறுத்தி ‘உன் நெற்றியிலொன்று, வானிலொன்று என இரு மாதுளை மொக்குகளைப் பார்’ என்று காட்ட வேண்டும். அவன் அணையும் வேளையில், வானில் அவன் கலைத்துப் போடும் துகில்களை உனக்கெனக் கொண்டு தரட்டுமா என்று கேட்க வேண்டும். மனம் முழுவதும் மகிழ்ச்சி ததும்புகிறது, ஆனாலும் இனம் தெரியாத உணர்வும் வந்து போகிறதே என்று நினைத்தான் அருண்.

ஒரு மணியாகும் வரை எந்தக் கப்பலும் தென்படவில்லை. உளவுச் செய்தியை கரையேறும் வரை கவனத்தில் தான் வைத்திருக்க வேண்டும். பார்த்துக்கொண்டே வந்தவனின் தொலை நோக்கியில் ஒரு கப்பல் விரைந்தோடிச் செல்வது தெரிந்தது. அவன் எச்சரிக்கை அடைந்தான். அது செல்லும் பகுதியில் அலைகளின் ஆர்ப்பரிப்பு மிகுதியோ என ஒரு கணம் நினைத்தான்; இல்லை என்று மானிட்டர் காட்டியது. அங்கே அத்தனை விரைவு என்றால் ஏதோ ஆபத்து இருக்கக்கூடும்; அந்த ஆபத்து அவர்களுக்கா, அவர்களால் மற்றவர்களுக்கா என்பது இப்போது தெரியாது. கீழே பைலட் நவீனிடமிருந்து அருணுக்கு அதே நேரம் அவசர அழைப்பு வந்தது.

‘கோலாலம்பூரிலிருந்து நமக்கு ஒரு தகவல் வந்ததில்ல ஒரு கப்பல கடத்திட்டாங்கன்னு; இப்ப சேடிலைட் தகவல் சொல்லுது அது நமக்குப் முப்பதியிரண்டு நாடிகல் மைல் தொலவில, முன்னாடி போற கப்பலாக்கூட இருக்கலாமாம்.’

“நான் டெலெஸ்ல பாத்தேன்; அது வேகமா ஓட்றது. ரேடியோல பேசிப் பாக்கலாமா?”

‘செஞ்சுட்டேன்.அவங்க ரெஸ்பான்ட் செய்யல.’

“டிஸ்ட்ரெஸ் செய்தி கூட இல்லையா?”

‘அதுதான் இடிக்குது’

“அதுல கொள்ளைக்காரங்க இருக்கலாமோ, என்னமோ? அவங்க கப்பல் க்ரூவை பிணையாக் கூட வச்சிருக்கலாம்; ‘கோட’ ஜேம் செஞ்சிருப்பாங்க. இல்லன்னா ஏன் ஓட்றாங்க?”

‘வார்னிங் ஷாட் கொடுப்போம்; நிற்காம ஓடினா துரத்த வேண்டியதுதான். என் அட்ரீனல் இப்போதே எகிறி அடிக்குது’

ரேடியோவில் மீண்டும் முயன்று பார்த்துவிட்டு இவர்கள் எச்சரிக்கை  வெடியோசை எழுப்பினார்கள். அந்தக் கப்பல் விலகி ஓட ஆரம்பித்தது.சந்தேகமேயில்லாமல் அது கடத்தப்பட்ட கப்பல் தான். ஆனால் அதில் எப்படி நம்முடைய சின்னம் போல் தெரிகிறது? என்ன ஒரு அயோக்கியத்தனம்? மேல் கால் பகுதியில் நம் தேசியக் கொடி, அலையாடும் மற்ற பகுதிகளில் நம் எம்ப்ளம். அப்படியென்றால்…இல்லையே நம் கப்பல்கள் கடத்தப்பட்டதாகச் செய்தியில்லையே! மீனவப் படகுகள் பிடிபடுகின்றன, மீனவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள்; ஆனால்,கப்பல்? இது நிச்சயமாகக் கவனத்தைத் திருப்பும் முயற்சிதான். என்ன ஒரு அராஜகம், நம் கைகளைக் கொண்டு நம்மை குத்தப் பார்க்கிறார்களே! அருணும்,நவீனும் இப்படி யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

வர்ஷிணி பரபரப்பாக வந்தாள். ‘இது ரெயின்போவா இருக்கலாம். அதான், ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்தோனேஷியால கோலா தாஞ்சூங்க் போர்ட்ட விட்டுக் கிளம்பி மலாக்கா ஸ்ட்ரெட்டில கடத்தப்பட்ட ஜப்பானோட சரக்குக் கப்பல். அலுமினிய தகடுகள், குழாய்கள்,அலாய் இணைப்புகள் இருந்ததாம். கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்பு’ என்றாள்.

“அந்தக் கப்பல் இந்த வழில வர சான்ஸ் உண்டு. ஆனா,அந்தக் கப்பலின் க்ரூவுக்கு என்னாச்சு?”

‘அருண், கோலாலம்பூர் ந்யூஸ் இது. பைரேட்ஸ் ‘ரெயின்போ’வின் அத்தனை க்ரூவையும் பணயமாக்கிட்டாங்க. ஒரு நாட்டுப்படகில தப்பிச்ச சாலமன்கிற சைலரை ஃபிஷர்மேன் காப்பத்தி மலேசியால ஒப்படைச்சிருக்காங்க. மீதி பதினோரு பேரும் கப்பலுக்குள்ள பிணையா இருக்கணும்.’

“என்ன கேக்கறாங்களாம்?”

‘அது தெரியல. ஆனா, பிணையா மனுஷங்கன்னாக்க,ஏதோ கொள்ள மட்டுமில்ல, தீவிரவாதி விடுதலயக் கேக்கற க்ரூப்போ என்னவோ?’

“அப்போ இது அந்த ஹைஜேக்ட் கப்பல்தான். எதுக்கும் ரொம்ப கிட்ட போ வேணாம்.நம்மோட வேகத்தை கொஞ்சம் குறப்போம்;அவங்க ரியாக்க்ஷனைப் பாப்போம்”

‘ஆனாக்க, நம்ம ரேடார்ல அவங்க இருக்கணும்;பாக் எல்லைக்குள்ள போறத்துக்குள்ள பிடிச்சுடணும்.’

காலையில் பார்த்த நீலக்கடல், மதியத்தில் கரு நீலப் பளபளப்போடு இருந்தது. அதுவும் மாறி இலேசாக செம் மஞ்சள் மினுக்க ஆரம்பித்தது. ‘சுதா,சுதா’ வென அருணின் மனம் அரற்றியது. தான் இப்போது இருக்கும் நிலை அவளுக்குத் தெரியுமா? அவள் பூஞ்சிரிப்போடும், ஆர்வத்தோடும் கேட்டுக் கொண்டிருந்த கடற்பயண அனுபவங்கள்; இரவில் கதையெனக் கேட்பவள் பகலில் அதன் அபாயங்களைப் பற்றி மட்டுமே பேசுவதும், தரையில் பார்க்கக்கூடிய வேலைகளே இல்லையா என ஆதங்கப்படுவதும் அவனின் சந்தோஷத் தருணங்கள். அதற்காக அவளை அவன் கேலி செய்கையில் மிரளும் விழிகளில்  திரளும் நீர். ஆறு மாதங்களுக்கு முன் அவளை அவனோ, அவனை அவளோ அறிவார்களா? இந்த அன்பு அத்தனை வலுவானதா? சுதா, நீயும் என்னைத்தான் நினைத்துக் கொண்டிருப்பாய். எனக்கு வெற்றி வாழ்த்து சொல் என் துணையே!

வான் மகனை ஆரத்தி எடுத்து வரவேற்க அலைக்கரங்கள் செம்மை பூண்டு எழுந்தன. ‘நீ வா, என் மடியில் நீ உறங்கும் நேரம் இது. உன் தீக்கங்குகள் குளிரட்டும். மஞ்சள், குங்குமம் என சிறிது நேரம் உன் வண்ண ஜாலங்களை இந்த மானுடம் பார்க்கட்டும்.உறங்குவது விழிப்பதற்கே, என் மகனே!

இவர்கள் கப்பலின் வேகத்தைக் கூட்டினார்கள். அந்தக் கப்பலைப் பெரிதாக்கிக் காட்டும் மற்றொரு கருவி அதில் ‘மேக் தூத்’ என எழுதப்பட்டிருந்ததைக் காட்டியது. ‘என்ன ஒரு அட்டூழியம்’ என இவர்கள் இரத்தம் கொதித்தது.

சிறு படகுகளையும், நூலேணியையும் மறு பக்கத்தில் தயார் நிலையில் வைத்தார்கள். இப்போது அந்தக் கப்பல் பதினைந்து கி.மீ தொலைவில் இருந்தது. மீண்டும் எச்சரிக்கை குண்டுகளை அருண் வெடித்தான். அவர்கள் ராக்கெட் மூலம் வெடிகுண்டுகளை வீசித் தாக்கத் தொடங்கினார்கள். கீழே இறங்க நினைத்த சூரியன் செவ்வண்ணப் பந்தாக நிலை கொண்டான். காற்று அலைக்கரங்களைக் கொந்தளிக்கச் செய்தது. நவீன் கையெறி குண்டுகளை வீசினான். வெடிகுண்டு தாக்கி கப்பலுள்ளே விழுந்த அப்பாஸை வர்ஷிணி தளத்தோடு தவழ்ந்து வந்து உள் அறைக்கு இழுத்துச் சென்றாள்.

அருணின் தொடர்ந்த தாக்குதல் அந்தக் கொள்ளையர் கப்பலின் பின் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கப்பல் மூழ்கும் அபாயமும் ஏற்படலாம். அவர்களிடமிருந்து செய்தி வந்தது.

“நாங்கள் இந்தக் கப்பலை வெடித்து சிதறச் செய்துவிடுவோம். அதனுடன் பதினோரு ஜப்பானிய மாலுமிகளும், தொழில் வல்லுனரும் அழிந்துவிடுவார்கள்.”

‘என்ன பயமுறுத்துகிறாயா? சரண்டர் ஆவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை’

“இந்தியர்கள் புத்திசாலிகள்.”

‘கப்பலைச் சிதறச் செய்தால் நீங்களும், நீங்கள் கடத்திய சரக்கும் கூடவே அழியும். நீங்கள் அப்படிச் செய்ய முடியாது. சரணடையுங்கள். இது இறுதி எச்சரிக்கை’

“முட்டாள்.சரக்குகள் பாதி ஏற்கெனவே கள்ளச் சந்தைக்குப் போய்விட்டன. மீதியும், நாங்களும் செல்ல விமானம் மேல்தளத்தில் உள்ளது. என்ன, நீங்கள் எங்களை விட்டுவிட்டால்,அவர்களை, அந்த ஜப்பானியர்களை கராச்சியின் அருகே விட்டுவிடுகிறோம்.”

‘…..’

“எங்களுக்குத் தெரியும். நீங்கள் நேரம் கடத்துகிறீர்கள்.இதோ, பாவம், இந்த ஜப்பானியனைச் சுடப் போகிறேன். ஒன்று, இரண்டு …”

‘ஸ்வாங்கை எடுக்க வேண்டும். வேறு வழியில்லை’

“அருண், உனக்கு மட்டும் தான் தெரியும்.ஆனா, உன்னை அனுப்பணுமா?”

நவீன் தடுத்தும் அருணும், ஆறு சிப்பாய்களும் வானிலிருந்து அந்தக் கப்பலைச் சுற்றி வளைத்தார்கள். அவர்கள் எதிர்க்க முடியவில்லை; அனைத்துக் கொள்ளையரையும் பிடித்துவிட்டதாக நினைத்தார்கள்.  பரிதாபகரமான நிலையில் ஜப்பானியக்கப்பலின் க்ரூ ஒன்றாகப் பிணைக்கப்பட்டு கப்பலின் அடித்தளத்தில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இருள், குளிர், குழப்பமான ஒலிகள், கட்டவிழ்க்கையில் கண்ணீருடன் கட்டிப்பிடித்தார்கள். ‘ப்ரேவ் இன்டியன், க்ரேட் இன்டியா’ என்று முழந்தாளிட்டு வாழ்த்தினார்கள்.  ஜப்பானிய மாலுமி மிகத் திறமையாக அடிப்பாகம் சிதைவுண்ட கப்பலைச் செலுத்தி விக்ரத்தின் அருகே கொண்டு செல்கையில் மறைந்திருந்த கொள்ளையன் ஒருவன் அருணை துப்பாக்கியால் சுட தடுமாறி அவன் அலைகளில் விழுந்து எங்கோ இழுத்துச் செல்லப்பட்டான். காற்று சுழன்று வேகம் கூட்டியது. விக்ரம் விலகி விலகித் தள்ளாடியது. ஒரு நாள், கூடிய விரைவில், அவளை அழைத்து வந்து, அவள் கண்களைக் கைகளால் பொத்தி கப்பலின் மேல் தளத்தில் நிறுத்தி ‘உன் நெற்றியிலொன்று, வானிலொன்று என இரு மாதுளை மொக்குகளைப் பார்’ என்று காட்ட வேண்டும்.அவன் அணையும் வேளையில்,வானில் அவன் கலைத்துப் போடும் துகில்களை உனக்கென கொண்டு தரட்டுமா என்று கேட்க வேண்டும்.’

“கடலோ,நிலமோ,பாலையோ எங்கோ அருண் இருக்கிறார். அவரைக் காற்று வழியில் சென்று நான் தேடி அடைவேன்.” மணற் குன்றின் மேல் அகல் விளக்குடன் நிற்பவளை அலைகள் போய் அருணிடம் சொல்லாதா என்ன?

 

தலைமுறை மாற்றங்கள் –   ம.மீனாட்சிசுந்தரம்

 

தலைமுறை மாற்றங்கள்

நாளை நடக்கப் போகும் அவனது குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்காக வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீடு முழுக்க பல வண்ணங்களில் பலூன்களும், கண்ணைப் பறிக்கும் நிறங்களில் காகிதப் பூக்களும் நிரம்பி வழிந்தன. வீட்;டு வாசலில் மாவிலைத் தோரணங்கள்.

முதல் நாளன்றே, அவனது பெற்றோர், மாமனார், மாமியார், மற்றும் உறவினர்களின் வருகையால் வீடே களைகட்டியிருந்தது.

அவனது மனைவி தெய்வானையின் முகம் முழுக்க மகிழ்ச்சிக் குவியல். அவள் தன் அன்புக் கணவனின் முகத்தையும், அன்பு மகனின் முகத்தையும் பார்த்துப் பார்த்து பூரித்துப் போயிருந்தாள்.

     தெய்வானைக்கு இது தலைப்பிரசவம். குடும்ப வழக்கப்படி முதல் பிரசவமும், குழந்தையின் பெயர் சூட்டுவிழாவும் மாமனார் வீட்டில்தான் நடக்கவேண்டும். மாறாக மாமனாரிடம் இரண்டையும் தானே பார்த்துக் கொள்வதாக விரும்பி வேண்டி கேட்டுக் கொண்டான் அவன். அவரும் மாப்பிள்ளை விருப்பத்திற்கிணங்க மறுப்பேதும் தெரிவிக்காமல் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.

     “மாப்ளே சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்துட்டீங்களா? காலை டிபனுக்கும், மதியச் சாப்பாட்டுக்கும் என்னென்ன அயிட்டம்?“ வெங்கடாசலம் 

அவன் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த மெனுப் பட்டியலை மாமனாரிடம் கொடுத்தான். பட்டியலைப் பார்த்த அவர் முகத்தில் திருப்தியும் கூடவே மகிழ்ச்சியும் இருந்ததைப் பார்த்து, “என்ன மாமா ……………?“ கேள்வியை முடிக்கும் முன்பே “எல்லாம் சூப்பர் மாப்ளே! சொன்னதோடு

“மாப்ள கொஞ்சம் இப்படி வாங்க“ தனியாக கூட்டிச் சென்று பணம்  கொடுத்ததை, சற்றும் எதிர்பார்க்காத வேலாயுதம்,

“மாமா பிரசவத்தையும் அதோட குழந்தைக்கு பெயர் வைக்கிற விசேசத்தையும் நாந்தான் செய்யணும்னு விருப்பப்பட்டேன். அதுக்கு நீங்களும் ஒத்துக்கிட்டீங்க தான“.

“அதுக்காக செலவு முழுக்க நீங்க ஏத்துக்கணுமா?“ .  

“மாமா நீங்க ரிடையர்டு ஆயாச்சு. உங்க சக்திக்கு மீறி. எங்க கல்யாணத்தையும் ஆடம்பரமா நடத்துனீங்க. இன்னும் மாப்ள சிவாவோட ஒரு வருச படிப்பு இருக்கு. அவன் வேலைக்குப் போற வரைக்கும் உங்களோட பென்சன் பணத்தை வச்சுத்தான் எல்லா செலவையும் பார்த்துக்கணும். இதையெல்லாம் நினைச்சுத்தான் இப்படி ஒரு முடிவுக்குவந்தேன்.“

மாப்பிள்ளை ஒரு கறார்ப்பேர்வழி. பிடிவாதக்காரர் என்று அவருக்குத் தெரியும். இருப்பினும், தாத்தா பேரனுக்கு செய்ய வேண்டிய முக்கியமான கடமை என எடுத்துச்சொல்லியும் அவர் கேட்காதது மனசுக்கு வருத்தமாகத்தான் இருந்தது.. 

 “என்ன அத்தான் மருமகங்கூட பேச்சு சூடா இருக்கு?“ வேலாயுதத்தின் அப்பா

வெங்கடாச்சலம், மருகமனிடம் பேசியதை சம்பந்தி வேதாச்சலத்திடம் சொல்லி முடித்தார். 

“அத்தான் இது உங்க கடமைதான் எனக்கும் புரியுது. நம்ம காலத்தப்போலவா இப்போ சடங்குகள் சம்பிரதாயங்கள் நடந்துக்கிட்டிருக்கு? காலச் சுழற்சியில் உடுத்துற உடையில இருந்து, சாப்பிடுற சாப்பாடு வரைக்கும் எல்லாமே மாறிடுச்சு. அதுக்கேத்தமாதிரி நாமும் மாறிக்க வேண்டியதான். நாங்க எதிர்பார்த்ததுக்கும் மேல நீங்களும் கல்யாணத்துக்கு செஞ்சுட்டீங்க. .அவனோட குழந்தைக்கு அவன் செய்யணும்னு பிரியப்படறான். விட்டுடுங்க.“

அப்பா பிள்ளை இருவரின் மனசும் ஒருசேர இருப்பதை நினைத்துப் பார்த்தார் வெங்கடாச்சலம். இப்படி பெருந்தன்மையுள்ள மனிதர்களும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். தனக்குள் சொல்லிக் கொண்டார்

ஆனாலும் சம்பந்தி சொன்னதை ஏற்றுக்கொள்ள மறுத்தது அவர் மனம். இந்தப் பணத்தை பேரன் பெயரில் அஞ்சலகத்திலோ, வங்கியிலோ .டெபாசிட் செய்தால் அவன் படிப்புச் செலவுக்கு ஆகும். அதை ஊர் போய் சேர்ந்ததும் செய்துவிடவேண்டும் என்றும் மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டார்.

      மாலை மணி ஆறு. விளக்கேற்றி விட்டு ஹாலிற்கு வந்தாள் தெய்வானை. சொந்தங்களிடம் பேசிக் கொண்டிருந்த தன் கணவனிடம் “என்னங்க நம்ம குழந்தைக்கு என்ன பெயர் வைக்கிறது. இன்னும் முடிவு பண்ணலையே?“

      “ஞாபகம் இருக்கு.  முதல்ல பூஜைக்கு வாங்கவேண்டிய  சாமான்களை வாங்கிட்டு வந்துடுறேன். ராத்திரி சாப்பாடு முடிஞ்சதும் முடிவு பண்ணிருவோம்.”

நாளைக்கான வேலைகளையும் இரவு சாப்பாட்டையும் முடித்து  தெய்வானையோடு மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான் வேலாயுதம். குளிர்ந்தகாற்றுடன் .நிலா வெளிச்சமும் சேர்ந்து இப்படி ஒரு ரம்யமான சூழலில் மகனின் பெயரை தேர்வு செய்வது இருவருக்கும் ஒரு புதிய அனுபவத்தையும், மனசுக்குள் மட்டற்ற மகிழ்ச்சியையும் கொடுத்தது..

தெய்வானை, பத்து பெயர்கள்  எழுதிய பேப்பரை கணவனிடம் கொடுத்தாள். அதில் அவனுடைய தகப்பனார் பெயரும் இருந்தது. அதைப் பார்த்த வேலாயுதம், மனைவியை நன்றிப் பெருக்குடனும், பெருமை பொங்கப் பார்த்தும் அவளை உச்சி முகர்ந்தான். தெய்வானையின் முகம் பூரிப்பால் சிவந்து போனதை தன்னை மறந்து  பார்த்துக் கொண்டிருந்தான். இருவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்

அவனது திருமணத்தின் போதும் அதற்குப் பின்னரும் ‘நீ குடுத்து வச்சவன்டா என்று நண்பர்களும், ஒம்மனசுக்கேத்த மாதிரி அழகும் கூடவே அன்பும் நிறைஞ்ச மனைவி கிடைச்சிருக்காப்பா‘ என்று உறவினர்களும் சொன்னதை நினைத்துப் பார்த்தான் வேலாயுதம்,

“நீ எழுதிவச்சிருக்குற எல்லாமே நல்லாருக்கு தெய்வானை. ஆனா இதுல எது உனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லு.“

      “எனக்கு பிடிச்சத சொன்னா நீங்க ஒத்துப்பீங்களா. அதுக்கு சரின்னு சொன்னா சொல்றேன்.“

      “எனக்கு பிடிச்சிருந்தா ஒத்துக்கிறேன் சொல்லு“

      “வேதா வெங்கட்“

      தெய்வானையின் புத்திசாலித்தனத்தை மனசுக்குள் மெச்சினான். ஆனால் என்ன பதில் சொல்வது…..?

      அவன் உடனே பதில் சொல்லாதது அவளுக்கு ஏமாற்றத்தை தந்தது.

      “பிடிக்கலைன்னு சொல்றதுக்கு இவ்வளவு நேரமா?“

      “அவன் சிரித்துக்கொண்டே பிடிச்சிருக்கு, இத அடுத்த குழந்தைக்கு வச்சுக்கலாமே“

      “அதுக்கு. எதுக்கு எங்கிட்டயும் கொடுத்து, என்னோட நேரத்தையும் வீணாக்கிக்கிட்டு….,“

      “உனக்கும் ஒரு ஆசை இருக்கும் இல்லையா. அதுக்காகத்தான்…..“

      “நானு ஆசைப்பட்டதும் உங்களுக்கு பிடிக்கலையே. குழந்தை முழிச்சிருவான்.“

      “உனக்கும் அந்த பேரு பிடிக்கும்.“

      அவன் சொன்ன பெயரும், அதை தேர்வு செய்ததற்கான காரணத்தையும். அவனது நன்றி உணர்வையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டியதோடு,

      “ரொம்ப சந்தோசமா இருக்குங்க. மாமாவும் அத்தையும் அப்பவே கேட்டாங்க. சொல்லிடுறேன். அவங்களும் ரொம்பவே சந்தோசப்படுவாங்க.“

      “நாளைக்கி நம்ம குழந்தை காதுல இந்த பேரைச் சொன்னதுக்கு அப்புறந்தான் சொல்லணுமாம். அதுதான் ஐதீகமாம். ஐயர் சொன்னாரு. அதானால…….“

       “சரிங்க.“ அவனின் கன்னத்தை திருகிவிட்டு…. வலிக்குதா‘ செல்லமாக அவன் காதருகில் சொல்லிவிட்டு “வாங்க போகலாம்“

‘‘அந்தக் காலத்துல, பிறக்குற ஆணுக்கும், பெண்ணுக்கும் அவங்க அவங்க தாத்தா ஆச்சி பெயர வச்சி சந்தோசப்பட்டாங்க. இப்ப அதெல்லாம் மலையேறிப் போச்சு.. இப்பல்லாம் மாடர்னால்ல பேரு வைக்கிறாங்க. அதுவும் கம்யூட்டர்ல தேடறாங்களாம். இத பெத்தவங்களுமே பெரிசா எடுத்திக்கிறதில்ல. காலம் மாறிப்போச்சு.“

உறவுகளின் பேச்சைக் கேட்ட இருவருக்குமே, மனசுக்குள் ஒரு தடுமாற்றம். இதை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் ‘அப்பாவும், அம்மாவும் நிச்சயம் என்னைப் பாராட்டுவார்கள்‘ தனக்குள் சொல்லிக் கொண்டான் அவன்.

      மறுநாள் காலை எல்லோருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த பெயர் சூட்டுவிழா  கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகியது. ஐயரின் மந்திரச்சொற்கள் வீடு முழுக்க ஒலித்துக் கொண்டிருந்தது.

      உற்றார், பெற்றோர், நண்பர்கள் சூழ, புத்தாடை உடுத்தி மடியில் குழந்தையோடு தன் கணவன் அருகில் அமர்ந்திருந்தாள் தெய்வானை.. இருவரின் முகங்களிலும் சந்தோசம் பொங்கி வழிந்தது. மடியில் வைத்திருந்த குழந்தை தூங்கியபடி சிரித்த அழகை தன் கணவனோடு சேர்ந்து ரசித்தது தெய்வானையின் முகத்தில் தெரிந்தது….

       “பார்வதி எங்கண்ணே பட்டுரும் போல இருக்கு. இன்னிக்கு உம்மகன், மருமக, ஒம் பேரனுக்கும் மறக்காம திருஷ்டி சுத்திப் போட்டுரு.“ வேதாச்சலம்

      அனைத்து பூஜைகளையும் முடித்த ஐயர் “இரண்டு பேரும் மூணு முறை குழந்தை காதுல பெயரை சொல்லுங்கோ“

இருவருமாக குழந்தையின் காதுகளில் சொன்னார்கள்.

“மற்றவாளுக்கும் குழந்தைக்கு வச்ச பெயரை சத்தமா சொல்லுங்கோ“

 வேலாயுதம் “தெய்வநாயகம்“ என்று உரக்கச் சொன்னான். ஆனந்தம் கண்களில் பொங்கிப் பெருக, கூட்டத்தின் பின்னால் அமர்ந்திருந்த அவரை பார்த்து இருகரம் கூப்பி வணங்கினான். அவனுடைய செய்கை, அவருடைய பெயரைத்தான் அவன் குழந்தைக்கு வைத்திருப்பதை உறுதிப்படுத்தியது.

அனைவரும் திரும்பிப் பார்க்க. நெற்றி நிறைய விபூதியும், குங்குமப் பொட்டுமாக, தெய்வகடாட்சத்தோடு மனைவியுடன் அமர்ந்திருந்தார் அவர்.  எளிமைக்கு இலக்கணமாய், கூட்டத்தில் ஒருவராய் அமர்ந்திருந்த அவர்தான் அவனது முதலாளி என்று யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான். அவர் விழா ஆரம்பித்த பின் வந்ததால் அவரை அறிமுகப்படுத்தவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது வேலாயுதத்திற்கு. அவனது திருமணத்தின்போதும் அவர் வெளிநாடு சென்றிருந்ததால் அதிலும் கலந்து கொள்ளவில்லை. அவரை வந்திருந்த அனைவரும் அறிந்திராதிருக்க அதுவும் ஒரு காரணமாயிற்று.

வேலாயுதம் அவரை தனது முதலாளி என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்திவைத்தான்.

“பட்டப் படிப்பு என்ற தகுதியோடு மட்டுமே வந்த என்னை அவருடைய நிறுவனத்தில் எழுத்தராகச் சேர்த்தார்.. குறுகிய காலத்திலேயே எனது உழைப்புக்கும் நேர்மைக்கும் கைமாறாக நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பையும் கொடுத்தார். இந்த வீடு, கார் என்று நானே நினைத்துப் பார்க்க முடியாத உயரத்திற்கு எனது வாழ்க்கையை உயர்த்திய அவருக்கு நான் செய்யும் நன்றிக் கடன் இதை விட வேறு என்னவாக இருக்கமுடியும்?.“

தனது மகனின் செயலை நினைத்துப் பெருமை பொங்கப் பார்த்த அவனது பெற்றோர். கண்ணீர் மல்க பாராட்டிய அவனது மாமனார், மாமியார். அவனது நன்றி உணர்வை பாராட்ட வார்த்தைகள் வரவில்லை என்று உற்றாரும், நண்பர்களும் வாழ்த்தியபோது,

“இதில் பெரும்பங்கு இவளுக்குந்தான்“ அருகிலிருந்த தெய்யவானையை காட்டி, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று அவள் காதுகளில் கிசுகிசுத்தான்.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல் இருவரும் தன் குழந்தையோடு, முதலாளி அவர் மனைவி இருவரின்  பாதங்களையும் தொட்டு வணங்கினார்கள். அவரும் “என்னோட பேரை உம் மகனுக்கு வச்சிருக்க. அவன் பேர் புகழ் நீண்ட ஆயுளோட வாழ்வாம்பா.“ வாழ்த்திய தெய்வநாயகம் மட்டுமல்ல அனைவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.                                   

 

 

சரித்திரம் பேசுகிறது – ” யாரோ”

சங்கரவிஜயம்

ஆண்டவனை அறிய முடியுமா?- Dinamani

ஆதி சங்கரர்..

இந்த உலக நாயகன் வாழ்ந்த காலம் என்ன என்பதை விவாதித்தோம்.

அது .. ஒரு ‘டீஸர்’ தான்.  

இது .. ‘மெயின் பிக்சர்’.

இவரது சரித்திரம் சொல்லாமல் நமது எழுத்து நகர இயலாது।

இவரைப் பற்றி எழுத..

நமது நண்பர் ..  இலக்கியவாதி.. ‘அசோக் சுப்பிரமணியம்’ எழுதுகிறார்:

இனி அசோக்கின் வார்த்தைகள்:..’யாரோவின் கண்பார்வையில்’
****************************************************************************************************************************************************************
வருடம் கி.மு. 509!

பாரத தேசத்தின் தெற்கு மூலையில்  கடவுளின் சொந்த தேசமென்று கூறப்படும் வஞ்சி பூமியாம் கேரள தேசத்தில்

இந்நாளைய திருச்சூர் நகரிலிருந்து தென்கிழக்காக முப்பது மைல் தூரத்தில் சிறிய கிராமமாக இருந்த காலடியில் 

ஈஸ்வர பக்தியோடு கூடிய சிவகுரு-ஆர்யாம்பா என்னும் புண்ணியத் தம்பதியருக்கு  மகனாக நம் சங்கரர் அவதரித்தார்.

(சரித்திரம் பேசுகிறது தொடரின் இது வரையில் வந்த மிக நீண்ட வாக்கியம் இது தான்! நீளமான சொற்றொடருக்கு மன்னிக்கவும்!)

என்ன செய்வது?

சரித்திரத்தில் இடம் பெறும் சாதனை நாயகருக்கு,

சனாதனத் தருமத்தின் விடிவிளக்காம் ஆச்சாரியாருக்கு ஏற்ற  கட்டியமாக அல்லவா சொல்லவேண்டியிருக்கிறது!

அவதாரமும், அவதார காலமும்:

கலி பிறந்து 2000 ஆண்டுகளுக்குப் பின், தன்னுடைய அம்சமாக சங்கரர் என்ற பெயரில் அத்வைத ஆசாரியர் அவதரிப்பார் – என்று  சிவபெருமானே “சிவரகசியத்தில்” கூறியுள்ளபடி சங்கரர்  அவதாரம் செய்தார்.

அவருடைய நேரடி சீடர்களான தோடகர், பத்மபாதர் போன்றோரும் அவரை பரமேஸ்வர அவதாரமாகவே கூறுகின்றனர்.

கேரள தேசத்திலே மிகப்பெரிய சிவத்தலம் திருச்சூரில் வ்ருஷாசலம் என்னும் பெயருள்ள வடக்கு நாதன் கோவில் உள்ளது.

அங்கு புத்திர பாக்கியத்துக்காக சிவகுரு-ஆர்யாம்பா தம்பதியர் தங்கிப் பாராயண நியமங்களோடு விரதம் இருந்துவந்தனர்.

ஒருநாள் சிவகுருவின் கனவில் இறைவன் தோன்றி..

புத்திரவரம் தருவதாகக் கூறி ஒரு கேள்வியை முன் வைத்தார்.

‘மண்டுக்களாக பூரண ஆயுசுடன் பல பிள்ளைகள் வேண்டுமா?’அல்லது ‘பெரும் அறிவு ஜோதியாக, அல்பாயுசு காலமே இருக்கக்கூடிய குழந்தை வேண்டுமா?’

மார்க்கண்டேயரின் தகப்பனுக்கும் இதே கேள்வி கேட்கப்பட்டது.

மார்க்கண்டேயரின் தந்தை – த ன் மகன் 6 வயது வாழ்ந்தாலும் அறிவுடன் இருக்கும் பிள்ளையே வேண்டும் என்றார்.

சிவகுரு – அந்தக் கனவிலேயே தன்னுடைய பத்தினியைக் கலந்தாலோசிப்பதாகக் கூறி விழித்தார்.

சிவபெருமான் – சிவகுருவின் மனைவியாருக்கும் அவ்வண்ணமே கனவில் தோன்றினார்.

இருவரும் இறைவனின் திருவுளப்படியே நடக்கட்டும் என்று தீர்மானம் செய்து, வடக்குநாதர் சந்நிதியில் உளமாற வேண்டிச் சொல்லவும்,
தானே அவர்களுக்குக் காட்சி தந்து,  அவர்களுக்குப் புத்திரனாக அவதரிப்பதாகச் சொல்லி, ஆனால் எட்டுவயதுவரைக்கும் மட்டுமே தான் இருப்பேன் என்று கூறி மறைந்தார்.

தங்கள் பஜனத்தை ( விரதத்தை) முடித்து, சமாராதனையில் பிராம்மண போஜனத்தின் மிச்சத்தை   ஆர்யாம்பாள் பிரசாதமாக உண்ணும்போதே ஐயன் அவள் வயிற்றில் கருவாகி விட்டார்.

பிறந்தது நந்தன வருட, வைகாசி மாதம்.

வளர் பிறை பஞ்சமியில்,

சூரியன் உச்சியில் இருக்கும் வெற்றியைத்தரும் வேளையில்,

பரமசிவனை அதிதேவதையாகக் கொண்ட திருவாதிரை நட்சத்திரத்தில் சங்கரர் திருஅவதாரம் செய்தார்.

சங்கரர் அவதார நாளன்று பல சுப சகுனங்கள் தோன்றியதாகவும், வைதிக மதத்திற்கு எதிராக பிரசாரம் செய்துகொண்டிருந்தவர்களுக்கு மட்டும் தீய சகுனங்களாகத் தோன்றின என்றும் சங்கர விஜய நூல்களில் சொல்லப்பட்டுள்ளன.

இந்த நாளை உறுதிப் படுத்தும்விதமாக ஆச்சார்யாள் சித்தி அடைந்த நாளாக கி.மு 477-ஐக் குறிக்கும் சுலோகம் ஒன்றை புண்யச் சுலோக மஞ்சரி என்ற நூலில் காணலாம்.

அதில் இருக்கும் சங்கேதக் குறிப்பைக் கடபயாதி சங்கியையின்படி படித்தால்..

ரக்தாக்ஷி வருடத்தில் வைகாசியில் சுக்லபட்ச ஏகாதசியில் சித்தியானார் என்றிருக்கிறது.

சித்தியானபோது அவருடைய வயது 32 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த குறிப்பின்படி, அந்தவருடம்..  கலியுகத்தில் 2625 என்றும்,
அதுவே கி.மு 477 என்றும் ஆகிறது.

இதிலிருந்து 32 வருடங்கள் பின்னோக்குவோமானால், அது கி.மு.509
அதாவது சங்கரரின் அவதார தினத்துக்கு வந்துவிடுகிறது.

என்ன! இது ஒரே புராணகால நடையாக இருக்கிறதே..
வழக்கமான ‘யாரோ’ எழுதியதுபோல இல்லையே! வேறு ‘யாரோ’ எழுதியதுபோல இருக்கிறதே என்று எண்ணவேண்டாம்..
என்ன செய்ய!

ஆச்சாரியர்கள் பரம்பரையின் ஆதி ஆச்சாரியரைப் பற்றி எழுதும் சரித்திர உரையில், இந்நடை தேவைப்படுகிறதே!

பின்னால் வந்த கி.பி 788-820 என்னும் நாளென்பது எப்படிப் பொருந்தவில்லை என்று சென்ற கட்டுரையில் கோடி காட்டியிருந்தோம்.
அதனால் அப்பக்கம் அதிகம் செல்லவேண்டியதில்லை. 

(சந்தேகப் பேர்வழிகள் சென்ற இதழைப் படித்து விட்டு வரவும்..)

இளமையில் மேதை

சங்கரர் குழந்தையிலே பெரிய மேதையாயிருந்தார்.  மூன்று வயதுக்குள்ளாக அவர் தேச மொழிகளிலெல்லாம் தேர்ச்சி பெற்றுவிட்டார்.
அவை பெரும்பாலும் தமிழும், சமஸ்க்ருதமுமாகத்தான் இருந்திருக்கவேண்டும். இந்த காலத்தில் சொல்லுகிறார்போல் சங்கரரும் “சைல்ட் ப்ராடிஜி”யாக இருந்திருக்கவேண்டும்.

தந்தையும் அவரது நாலு வயதிற்குள்ளாக சிவபதவி அடைந்துவிடுகிறார்। 
உறவினர் துணையோடு அவருக்கு ஐந்து வயதிலேயே உபநயனமும் செய்துவிட்டார்கள்.
எட்டு வயதுக்குள் குருகுல வாசத்தையும் முடித்துவிட்டு வந்து சந்நியாசமும் வாங்கியாயிற்று.
தன்னுடைய 12வது வயதுக்குள் அத்தனை பாஷ்யங்களும் கூட எழுதிவிட்டாராம்..

அவர் தனக்குத் தெரிந்த சித்தாந்தந்தத்தையே மட்டும் சத்தியம் என்று கொண்டாடாமல் மற்ற சாத்திரங்களையும் சித்தாந்தங்களையும் ஐயம் திரிபறக் கற்றதாலேயே  அவற்றைக்  கண்டிக்கும் பாண்டியத்துவமும் பெற்றார்.

அவருக்கு உண்மையான, ஆத்மார்த்தமான அனுபவமாக இருந்தது “அத்வைத சித்தாந்தம்” மட்டுமே.

“அமல அத்வதை ஸுகே” என்பதுபோல் அழுக்கு, குற்றங்குறைகள், ஏதுமில்லாமல்  நித்திய சுகமாய் இருப்பது அத்வைதம் மட்டுமே.

ஈசன் வேறில்லை, தாம் வேறில்லை என்னும் பேதமில்லா மனநிலையே திருமூலரும் பாடிய “ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்” என்று கூறிய நிலை.

மீமாம்சையானால், கர்மானுஷ்டானம் செய்து சுவர்க்கத்தை அடையும் விருப்பம் என்பதுபோல எல்லா தத்துவங்களிலும் ஏதேனும் ஒரு அழுக்கு இருக்கிறது.

பிரம்மமே தானாக இருக்கும் நிலையாம் அத்வைதத்தில் அனைத்து ஆனந்தமும் அடங்கிவிடுவதால், அதனிலும் விஞ்சிய ஒன்றில்லை என்று சங்கரர் தெளிந்தார்.

பொன்மாரியாய் பொழியவைத்தப் பொன்மனச் செம்மல்

அவர் பால சந்நியாசியாக இருந்த காலத்திலே, உஞ்ச விருத்தி முறைப்படி, ஓர்  ஏழைப் பிராமணர் வீட்டு வாசலில் நின்று :
“பவதி பிக்ஷாம் தேஹி” என்று கேட்டார்.

அன்று அந்த வீட்டிலிருந்த அம்மாள் , இத்தனை ஒளிபொருந்திய முகத்தோடு பால பிரம்மச்சாரி சிறுவன் வந்திருக்கிறானே ! 

இவனுக்கு திருவோட்டில்  இட ஒரு குந்துமணி அரிசி இல்லையே என்று வருந்தி, புரையில் இருந்த  ஒரே ஒரு அழுகிய நெல்லிக்காயை எடுத்துவந்து  பிட்சையாக இட்டார் !

அந்தப்  பால சங்கரர்  உள்ளம் நெகிழ்ந்து, மகாலக்ஷ்மியின் பேரில் “கனகதாரா துதியைப்” பாடினார்.

“மனம் சோர்ந்து வாடிப் போயிருக்கிற இந்த ஏழையான பறவைக் குஞ்சுக்கு, உன் கடாக்ஷமேகம் அருட் காற்றோடு கூடிவந்து திரவிய தாரையாகப் பொழியட்டும்” – என்று சங்கரர் வேண்டிய மாத்திரம் அந்த ஏழைத் தாய்க்கு அன்னை மகாலட்சுமி பொன் நெல்லிக்கனிகளாகப் பொழிந்துவிட்டாள்.

இதுதான் அவர் முதன் முதலில் பாடிய சுலோகமாம்!

அந்த ஐந்து வயதுக்குள்ளாக அப்படியொரு கவித்துவமாகப் பொழிந்தது, அன்னை பராசக்தியின் அருளமுதால்தானோ என்னவோ?

நதியை வளைத்த நாயகர் அவர்!

அன்னையைத் தெய்வமாகப் போற்றியவர் ஆதி சங்கரர்.

அதிலொரு நிகழ்வு

ஒரு சமயம் ஆர்யாம்பாள் நோய்வாய்ப்பட்டிருந்தார் .

தூரத்திலுள்ள நதிக்குச் சென்று நீராடமுடியாத நிலை.

எங்கோ ஓடிக்கொண்டிருக்கும் ஆல்வாய்ப்புழையான பூர்ணாநதியை தன்னுடைய கிராமத்து மக்களுக்குப் பயன்படும்படியாவும்..
தன் அன்னையின் குறையை நிவர்த்தி செய்யும் விதமாகவும் வளைத்து வீட்டின் புழக்கடை அருகே ஓடும்படி செய்துவிட்டாராம்.

பின்னாளில் அன்னை மரணத்தருவாயிலும்.. எங்கோ இருந்தவர் ஆகாயமார்க்கமாகவே வந்து, அவளுக்கு கங்கை நீரை வார்த்தாராம்.

****************************************************************************************************************************************************************

அசோக்கின் எழுத்துக்கு நன்றி.

சரித்திரம் ‘ஆதி சங்கரர்’ என்ற இந்த யுக புருஷரைப்பற்றி இன்னும் எழுதத் துடிக்கிறது

விரைவில் சந்திப்போம்..
 

காளிதாசனின் குமார சம்பவம் – எஸ் எஸ்

 

நான்காம் சர்க்கம்

காம தகனம்: மன்மதனை எரித்த மகேசன் ...

கணவனை இழந்த ரதியை பொல்லா விதியே  மயக்கம்  தெளியவைத்தது  

தீப்பொறி பிறக்கும்போதே மயங்கிய ரதியின் கண்கள்  மதனைத் தேடின

‘எங்கே என் நாதன்?’ எனக் கேட்ட ரதி மனித வடிவில்  சாம்பலைக் கண்டாள்

கணவன்இறந்தனன் என்றறிந்ததும்  தரையில் விழுந்து துடித்து அழுதனள்

 

“அழகன் நீ எரிந்த பின்னும்  சிதறாமல் உயிர்வாழும் என் காதல்மனம்  எங்கே

உடைந்த அணை நீர் போல எனை விடுத்துச்சென்றீர் ,சென்றவிடம் எங்கே      

பிழை ஒன்றும் செய்யாத நமக்கேன் இப்பிரிவு பரிவுகொண்ட  மனம் எங்கே

ஊடலில் கோபித்த எனை விடுத்துப் போனாயோ ?  போனவிடம்  எங்கே

நீ மட்டும் எரிந்துபட உன் மனதில் நானிலையோ? நான் இங்கே நீ எங்கே

உனைத்தேடி நானும் உடன்வருவேன் நீயில்லா உலகில்  இனி இன்பம் எங்கே    

காதலன்  காதலியை சேர்க்கும் என்மதன்  என்னைத் தன்னிடம்  சேர்க்கட்டும் 

மதன் இல்லா உலகில் மதுவருந்தும் பெண்ணின் பரவசம் பறந்து போகும்

மதன் இல்லா வானில் சந்திரனும் காதலுக்குத்  துணை போக மாட்டான்

குயில்கூவி பறை  சாற்றும் மாம்பூவின் பாணத்தை யார் இனி தொடுப்பார்

பாணத்தில் நாணாக காட்சிதரும்  வண்டினமும் சோகத்தில் புலம்புதுகாண்

பொன்னுடல்  தான்பெற்று  எனக்குச்சுகம்தர  எழுந்துவர மாட்டாயா

ஆட்கொண்ட உன்னை  தொட்டுத்தழுவிடத்  துடிக்குது  என்மனம்

மலர்களால் அலங்கரித்த என்னுடல் வாடிவதங்கிட  எங்கே  நீ சென்றாய்

காதல் களிப்பில்  நாமிருவர் கலந்திருக்க பாதியில் பிரித்தது முறையாமோ

உன்னழகைக் கண்டு தேவமாதர்  மயங்குமுன் உன்னிடம் நான் வரவேண்டும்

எனைநீ பிரிந்தும் நான்மட்டும் இங்கிருக்க  என் அன்பில் குறையுளதோ

என்னுயிர் பிரியுமுன் உனக்கிறுதி அழகு  செய்ய பொன்னுடல் தான் எங்கே   

கையில் வில்லுடன் கண்ணில் காதலுடன் எனை நோக்கும் பார்வை எங்கே

வில்லினை செய்துதரும் தோழன் வசந்தன் எங்கே அவனும் எரியுண்டானா 

 

ரதியின் படுதுயரம் விஷப்பாணாமாய்த் தைத்திட வசந்தன் வெளிவந்தனன்

வசந்தனைக் கண்டரதி அணை வெடித்தாற்போல் மேலும் புலம்பலானாள்

 

“ வசந்தனே! காற்றும்  சிதைக்கும் சாம்பலாய் மாறிய உன் நண்பனைப் பார் 

மதனா! காதலியைவிட நண்பன் உயர்ந்தவன் அவனைக் காண  எழுந்து வா

அம்பெய்தது நீயேதான் ஆயினும் அதன் செயலைச் செய்தவன் அவனன்றோ     

காற்றடித்த விளக்கென கணவன் மறைந்திட புகையும் என் நிலையைப் பார் 

மரத்தை முறித்த யானை அதனுடன் இணைந்த கொடியை விட்டது சரியோ

மதனை நான் விரைவில் அடைந்திட நீ எனக்குத்  தீ மூட்டித் தந்திட  வேண்டும்

மேகம் மறைய  மின்னலும் மறைவது போல நானும்  மறைந்திடல் வேண்டும்

மதன் உடல்சாம்பல்  தழுவி  அனலில் நான் மகிழ்வுடன் விழுந்திட வேண்டும்

வணங்கிக் கேட்கிறேன் வசந்தா !, மதனிடம் நான் சேர சிதை ஒன்று தந்திடு

மூட்டிய சிதையினில்  நானும் எரிந்துபட  தென்றலை வேகமாய் வீச வை

இருவருக்கும் சேர்த்து கைநீரை தர்ப்பணமாய்  ஒருசேர நீயே   தந்தருள்வாய்

மதன் விரும்பும் மாம்பூவை அந்திமக் கிரியையில் மறக்காமல் சேர்த்துவிடு   

 

மடியும் மீனுக்கு பெய்திடும் மழை போல புலம்பும் ரதிக்கு அசரீரி பேசிற்று  

 

“கவலை விடு  ரதியே !  நின் ஆசைக் கணவன் விரைவில் நின் கண்படுவான்  

 முன்னாளில் பிரும்மரிடம்  மலரம்பு  எய்ததின்  சாபமே இத்துயரம்  

சிவ பார்வதி மண நாளில் மன்மதன் சாபத்தின் விமோசனம்  பெறுவான்    

மங்கள ரதியே! நல்லுடல் கிட்டும் வரை சாம்பல் உடலைப் பாதுகாத்து வை”

 

அசரீரி கேட்டரதி  மயங்கிநிற்க, வசந்தனும் ரதியிடம் நம்பிக்கை வளர்த்தான்       

நிலவு  ஒளிபெற இரவுக்கு ஏங்குதல்போல் ரதியும் துயர் விடிய  காத்திருந்தாள்  

 

 

மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் -மூன்றாவது வினாடி -ஜெர்மன் மூலம் – தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி

தோட்டா : இரண்டாவது வினாடி முடிந்து விட்டது காந்தி! எலும்புத் தசையில் நுழைகிறேன் நான் இந்தக் கணத்தில். என் நுனி உன் இதயத்தைத் தொடுகிறது! வலிக்கிறதா?

காந்தி : ஆம்! மிகவும் வலிக்கிறது!

தோட்டா : மன்னித்துவிடு காந்தி! என்னால் இயன்ற அளவுக்கு மிருதுவாகவே இருக்க எண்ணினேன்! நீ அமைதியாக இருந்தால்தான் நானும் மிருதுவாக வேலை செய்ய முடியும். என்ன ஆயிற்று உனக்கு காந்தி? எல்லாம் அமைதியாக தளர்ந்து இருந்தன. உன் தசைகள் இப்போது இறுகிக் கொண்டு இருப்பதால் நான் என்னை உள்ளே நுழைத்துக் கொள்வதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. உன் இதயத் துடிப்பினால் உன் மார்புக் கூடு எலும்புகள் மிகவும் நடுங்குகின்றன. உன் ரத்தம் ஊற்றுப்போல எனக்கு எதிராக பாய்கிறது. ஏதோ உன் மார்புக் கூட்டிலிருந்து அலம்பி என்னை வெளியேற்றிவிடுவது என்ற நோக்கத்துடன்! மன்னியுங்கள் மகாத்மா, இனி என்னால் மிருதுவாக உள்ளே நுழைய முடியாது!

பூமி : உன் தசைகளை எஃகை போல் உறுதியாக்கிக் கொள்ளவிடு காந்தி,

நதி : உன் இதயத்தை குறிபார்க்கும் தோட்டாவை பின் தள்ளிவிடும் அளவிற்கு உன் இரத்தத்தை மாபெரும் ஊற்றுபோல் ஓடி வழியவிடு.
காற்று : உன் உயிரை குடிக்க நினைக்கும் தோட்டாவிற்கு எதிராகக் சம்மட்டியால் அடிப்பதுபோன்று உன் இதயத்தைத் துடிக்கவிடு காந்தி!

பூமி : தோல்வி மனப்பான்மை வேண்டாம்!

காற்று : தொடர்ந்து ‘போராடு! நதி உயிருடன் இரு! உயிருடன் இரு காந்தி!

காந்தி : (முனகுகிறார்)

பூமி : உன் வாழ்க்கை எவ்வளவு உன்னதமானது என்று இனி நாம் பேசமாட்டோம்.

காற்று : (மிக அருகில் வந்து) புனிதமான வாழ்க்கை உன்னுடையது மகாத்மா காந்தி!

பூமி : பல செயல்களை, இனி பிறந்து உணவு உண்டு உறங்கி ஆசாபாசங்களில் ஈடுபட்டு பின்பு மரணம் அடைய வேண்டிய எந்த ஜீவனாலும் புரிந்து கொள்ள முடியாத பல செயல்களை ஆற்றியிருக்கிறாய்!

காற்று : புனிதமானது என்று உன்னுடையவர்கள் வர்ணிக்கும் செயல்களை நீ புரிந்திருக்கிறாய்.

பூமி : காந்தி, வெறுப்பிற்கு நீ அளித்த பரிசு அன்பு, கருணை.

நதி : துச்சமாக மதித்தவனுக்கு நீ அளித்த பரிசு அன்பு, கருணை.

காற்று : நீ மற்றவர்களுக்காக துன்பப் பட்டிருக்கிறாய், காந்தி. நீ அதை மறுத்துப் பேசவேண்டாம்!

பூமி : உன் மக்களிடையே மட்டும் நீ ஒரு மாபெரும் மனிதன் இல்லை . மனித இனத்தின் மாபெரும் மனிதன் நீ! காற்று நீ எல்லா மனிதர் களுக்காகவும் துன்பப்பட்டி ருக்கிறாய்.

நதி : நீ மௌனமாகத் துயர்பட்டிருக்கிறாய் என்பதால் நீ புனிதமானவன்!

பூமி : இரத்த ஓட்டத்தை இழந்துவிட்ட உன் உதடுகளால் நீ மறுத்தப் பேசவேண்டாம்!

நதி : கண் இமைகளை அசைப்பதன் மூலம் நீ மறுத்துப் பேசத் தேவை இல்லை. நீ எப்படி எல்லாம் மனத்துயர் பட்டிருக்கிறாய் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

பூமி : டர்பன் நகரில் ஒருநாள் பஸ் நடத்துநர் ஒருவர் உன்னை அடித்தது. ஞாபகம் வருகிறதா காந்தி? உன் முகத்தில் கைகளால் குத்தி அடித்தது, நீ ஒரு வெள்ளைத் தோல் இல்லாத இந்தியன் என்பதால் அவன் அடிப்பதிலிருந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலவில்லை நீ! அமைதியாக அடிகளை வாங்கிக் கொண்டு இருந்தாய்!

நதி : தென் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் பிரிட்டிஷ் நீதிபதிகள் உன்னை ஜெயிலில் தள்ளினார்களே, உன் ஆயுட்காலத்தில் பாதிக்குமேல் ஜெயிலில் தள்ளினார்களே, அதை எல்லாம் மறந்து விட்டாயா? அப்போதும் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலவில்லை! உன் நீதிபதிகளின் முன் குனிந்து அவர்களை வணங்கி நீ கூறினாய், “அதுவும் நல்லதற்கே” என்று.

காற்று : தென் ஆப்பிரிக்காவில் உன்னை அவர்கள். எப்படி அடித்து உதைத்து வீழ்த்தினார்கள் என்பது கூடவா மறந்துபோய் விட்டது காந்தி? ஒரு நாயை அடிப்பது போல் பொது இடத்தில்! அப்போதும் நீ அதை தடுக்க முயலவில்லை! பிரக்ஞை அற்று மரணம் அடைந்தவன் போல நீ தரையில் விழ்ந்துகிடந்தாய்!

பூமி : உனக்கு ஞாபகமில்லை – – .

காந்தி : உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் என் நண்பர்களே! வாயை மூடிக்கொள்ளுங்கள். பேசாமல் அமைதியாக இருங்கள். என் உடம்பில் பலமில்லை. என் கைகளைப்போன்று என் ஆன்மாவும் பலமிழந்துவிட்டது. மேலும் எல்லா கதவுகளும் திறந்து இருக்கின்றன. அமைதியாக இருங்கள் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன்.

காற்று : தெரியுமா உனக்கு . . . கடலில் செல்லும் எல்லா கப்பல்களிலும் எல்லா ரயில் வண்டிகளிலும், இந்தியாவின் மீது சென்று கொண்டிருக்கும் எல்லா விமானங்களிலும் இருக்கும் மனிதர்கள்.

பூமி : நீ உயிருடன் இருக்கிறாயா அல்லது மரணம் அடைந்து விட்டாயா என்று கோடிக்கணக்கான மனிதர்கள் உன்னை எண்ணிப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள் காந்தி!

நதி : காந்தி, தெரியுமா உனக்கு? ஆசியாவில்.

காற்று : . . . உன்னை நேரில் பார்த்திராத உன் மொழியை பேசாத உலகநாடுகள் பலவற்றில் உள்ள மனிதர்கள் – – –

பூமி : தெரிந்து கொள் . . . நீ உயிருடன் இருக்கிறாய் என்று தெரிந்தால் உலகமக்கள் திம்மதியுடன் வாழமுடியும் என்று – – –

நதி : காந்தி என்ற மனிதர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்று அவர்களுக்குத் தெரிந்தால் – .

காற்று : அவர்களுக்குத் தெரிந்தால் . . .

காந்தி : என் குரலே, என்னைக் காப்பாற்று!

பூமி : நாங்கள் சொல்வதை கேள், காந்தி!

மெல்லிய குரல் ஒன்று : காந்தி – . .!

காந்தி : நான் ஒரு புதிய குரலைக் கேட்டேனே? நண்பர்களே! நீங்கள் இந்தக் குரலைக் கேட்கவில்லையா?

பூமி : இல்லை! எந்தக் குரலையும் நாங்கள் கேட்கவில்லை.

காற்று : தன் இரைக்காக காத்துக் கொண்டிருக்கும் கழுகு ஒன்று ஆகாயத்தில் மிக உயரத்தில் சத்தியிருக்கலாம்.

நதி : ஒருக்கால் “தீண்டத்தகாதவர்கள்” அதோ அந்த குன்றுகளில் உட்கார்ந்து கொண்டிருக்கும் கண்டத்தகாதவர்கள் பெருமூச்சு விட்டிருக்கலாம்.

குரல் : (கொஞ்சம் அருகில் வந்து “தாந்தி காந்தி என் குரலாயிற்றே! நான் அந்தக் குரலைக் கேட்டிருக்கிறேனே!

பூமி : காந்தி, நீ ஏதோ கனவு காண்கிறாய்!

நதி : நீ ஏதோ ஜுரத்தில் உளறுகிறாய் காந்தி

காற்று : உன் மூளைப்பகுதியில் ரத்தம் வெகு வேகமாக பாயந்து கொண்டிருக்கிறது. காந்தி நீ கேட்டதாகக் சொல்லும் எந்தக் குரலையும் காங்கள் கேட்கவில்லை.

குரல் : காந்தி! என் குரல் உன் காதில் விழுகிறதா?

காந்தி : உன் குரல் கேட்கிறது. என் குரலே! ஆனால் நீ என்னிடமிருந்து வெகுதூரத்தில் இருக்கிறாய்!

குரல் : அப்படி ஆளால் என்னிடம் நீ வந்து விடு!

காந்தி : வழக்கமாக நீதானே என்னிடத்தில் வருவாய்

குரல் : ஆனால் நீ என்னிடத்தில் வரவேண்டிய நேரம் வந்து விட்டது. காந்தி!

காந்தி : எனக்குப் பாதை தெரியாதே!

குரல் : உனக்குத் தெரியும் காந்தி!

காந்தி : புரிகிறது தியானத்தின் மூலம் ஞானம்! ஞானத்தின் மூலம் பொறுமை! பொறுமையின் மூலம் பேரமைதி!

குரல் : பாதை தெரியும் என்றால் என்னிடம் வந்துவிடு!

காந்தி : எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது, இந்தியா என்னை “தேசப்பிதா” என்று அழைக்கும்போது, நான் உயிருடன் இருக்க வேண்டியது அவசியம் தானே!

குரல் : அது ஒரு வெறும் பாதை தான்! உனக்கும் உன் மக்களுக்கும் அது வெறும்பாதையே! உனக்குத் தான் தெரியுமே!

காந்தி : ஆம்!

குரல் : அதைப் புரிந்து கொண்டிருக்கிறாய் என்றால் என்னிடம் வந்து விடு!
(இடைவெளி)

காந்தி : என்னால் நடந்து வர முடியாது. என் கால்கள் மரத்து விட்டன.

குரல் : (அருகே வந்து) இப்போது உன்னால் நடக்கமுடியும்.

காந்தி : நீ என்னைத் தொட்டாயா?

குரல் : (லேசாகச் சிரித்துவிட்டு) தொடுவதா? அப்படி என்றால் என்ன?

காந்தி : எல்லாமே திடீர் என்று மாறிவிட்டதே. வலி என்பதே இல்லை. உடல் கனமாக இல்லை . நான் பறந்து கொண்டு இருக்கிறேனோ?
குரல் : பறப்பது என்றால் என்ன?

காந்தி : நான் பறந்து கொண்டிருக்கிறேன்!

பூமி : (வெளியேறிக் கொண்டு) நீ உயிர் வாழவேண்டும், காந்தி!

நதி : (அவ்வாறே) போராடு காந்தி!

காற்று : நித்யம் நிரந்தரமானது என்று கூறி உன்னை ஏமாற்ற அனுமதிக்காதே!

காந்தி : நீயே பார்! நான் மேல்நோக்கி பறக்கிறேன். என்னைக் குழப்பத்தில் ஆழ்த்திய தரல்கள் எனக்கு கீழே தற்போது!

குரல் : உண்மை . காற்று ஒன்று மட்டும்தான் உன் மீது மூச்சு விட்டு கொண்டிருக்கிறது, பேராசையுடனும் முழு உயிர்துடிப்புடனும்.

காந்தி : ஏன் அவ்வளவு உயரத்தில் இருக்கிறேன்! அதோ அந்தச் சிட்டுக்குருவி. இன்னும் அப்படியே ஆகாயத்தில் ஆடாமல் அசையாமல் தொங்கிக் கொண்டிருக்கிறது, நான் உயிருடன் இருப்பதற்காக.

பூமி : (மிகவும் தூரத்திலிருந்து வரும் குரல்) பறந்து போகாதே, காந்தி.

நதி : (அவ்வாறே) எல்லோருக்கும் கிடைப்பது உரு பிறவி மட்டும்தான் காந்தி!

காற்று : (அங்கிருந்து நகர்ந்து போய்க்கொண்டு) எல்லோருக்கும் ஒரு பிறவிதான். அதன்பின் வாழ்க்கை முற்றுபெற்று விடுகிறது.

காந்தி : அந்த குரல்கள் மிக ஆழத்திலிருந்து வருகின்றன. அவை சொல்வது தெளிவாகக் கேட்கவில்லை.

மூன்று குரல்களும் : (மிகவும் தூரத்திலிருந்து) மகாத்மா காந்தி!!

காந்தி : ஏன் இப்படி என்ன செய்வது என்று தெரியாமல் கூச்சலிடுகின்றன இந்த குரல்கள். அவை மிக்க சக்தி படைத்தவையாக யுகயுகமாக வாழ்ந்து கொண்டிருப்பவை ஆயிற்றே!

குரல் : பொய் கூறுவதையே தொழிலாகக் கொண்டவை! உன் உடலில் குடியிருப்பவை. உன் தசைகளில் உன் மூச்சில், உன் உடலில் ஓடும் ரத்தத்தில், ஒவ்வொருவரும் மரணம் அடையும்போது அவற்றின் வாழ்வும் முடிவடைய வேண்டும் என்பது நியதி!

காந்தி : அந்த குரல்களை நான் அவ்வளவாக கேட்கமுடியவில்லை. ஆனால் என் அருகில் உள்ள மேகத்தின் குளிர்ச்சியை என்னால் உணர முடிகிறது. அவ்வளவு உயரத்திற்கு நான் வந்து விட்டேனா?

குரல் : கீழ்நோக்கிப் பார்!

காந்தி : நதியையும், குன்றுகளையும் காண்கிறேன். சோலைகள் மரங்களுக்கு இடையே அரைக் கோளங்களாக இருக்கின்றன. அதோ, அங்கே என்ன அது? நதிக்கரையில் மூன்று குன்றுகளுக்குக்கருகில் என்ன இருக்கிறது? சமவெளிப்பகுதிகளும் குன்றுகளின் சரிவுகளும் ஏன் இப்படி வெண்மை நிறத்தில் காட்சி அளிக்கின்றன? பால்போல் வெண்கடல்! மாபெரும் உறைபனி ஆறு! யமுனா நதிக்கரையில் டெல்லிக் கருகே பெரிய உறைபனி ஆறு போல என்ன அது?

குரல் : காந்தி, அது காத்துக் கிடக்கும் மக்கள் வெள்ளம்!

காந்தி : எதற்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்? வெண்நிறப் போர்வையின் நடுவில் ஒரு கருவட்டம், எரிமலைவாய் போல் இருண்டுபோன எரிமலையின் வாய்போல்!

குரல் : அந்த இடத்திலிருந்து வெள்ளை மனிதர்கள் (வெள்ளை உடை மனிதர்கள்) பின் நகர்ந்து சென்று நின்றிருக்கின்றனர்!

காந்தி : பயந்து போயா! அந்தக் கருநிற எரிமலையின் வாயில் புள்ளி, சிறிய பூச்சி ஒன்றுபோல, ஒரு வெள்ளை எறும்பு போல ஒன்று இருக்கிறதே! அது என்ன, என் குரலே!

குரல் : அது யார் என்று உனக்குத் தெரியுமே!

மூன்று குரல்களும் : (சரியாக காதில் விழாத ஹீனஸ்வரத்தில்) காந்தி! மகாத்மாகாந்தி!

காந்தி : நானா அது?

குரல் : நீயேதான்!

காந்தி : அது நான் என்றால் – எப்படி அங்கும் இங்குமாய் இருக்க முடியும்?

குரல் : நீ அங்கும் இருக்கிறாய், இங்கும் இருக்கிறாய்!

காந்தி : என் குரலே, உண்மையை கூறு! நான் மரணம் எய்தி விட்டேனா?
(மணி ஓசை)

தோட்டா : மூன்றாவது வினாடி முடிந்துவிட்டது,

“புத்தர்-விவேகானந்தர்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

Aval Vikatan - 27 December 2016 - கொடு... கிடைக்கும் ...

பல வருடங்களுக்கு முன்னால் இந்த சிறுவனை என்னிடம் ஒரு மனோதத்துவ மருத்துவர் அனுப்பி வைத்தார். அவர் வெளிநாடு போக வேண்டியதாக இருந்ததால் தானே சிகிச்சை தர முடியவில்லை..

வந்தவனுக்கு ஆறு வயது என அம்மா குறிப்பிட்டாள். அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருந்தாள். அவனோ அப்படியே கண்கொட்டாமல் என்னை முறைத்துப் பார்த்தபடி இருந்தான். இடது பாதத்தால் ஆதி தாளம் போட்டுக் கொண்டு இருந்தான். தலை வாராமல் இருந்தது, இன்றைய சர்ஃப் விளம்பரம் போலச் சட்டை மண்ணில் புரண்டதைக் காட்டியது. அந்த வயதில் இப்படி இருப்பது இந்த வயதினருக்கு இயல்பு. என்றாலும் அவனின் உடல்மொழி அவனைப் பற்றி பலவற்றைச் சொல்லியது.

பெயரைக் கேட்டதும், உடனடியாக, “ராமு” என்றான். அம்மா அவன் தோளை அழுத்தி, “ஸாரி மேடம், இவன் எப்போதும்…” முடிப்பதற்குள் நான் அவர்களை நிறுத்தி, “ராமுவை பெயரைக் கேட்டேன், சொன்னான். ஸாரீ எதற்கு?” என்று அம்மாவைப் பார்த்துச் சொன்னதும், ராமு அம்மாவைப் பார்த்து என்னைப் பார்த்தான்.

அம்மா, ஸைக்காட்ரிஸ்ட் கொடுத்த ரிபோர்ட்டை என்னிடம் தந்தாள். ராமுவை வெளியூரிலிருந்து ஒருத்தர் அந்த ஸைக்காட்ரிஸ்டிடம் அனுப்பி இருந்தார். அதில் ராமு முரட்டுத் தனமாக இருப்பதாகவும், பள்ளியில் பல சேட்டை செய்வதாகவும், எப்போதும் மறு பேச்சு பேசுவதாலும் அவனுக்கு “அடங்காமல் எதிர்க்கும் கோளாறு” (Oppositional Defiant Disorder) என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

ராமுவின் பக்கத்து வீட்டில் யாரோ இதைப் படித்து “செல்வி அக்கா ! இது, உருப்படாதுனு சொல்லி இருக்காங்க” என்றதை ராமு முன்னால் சொல்லியிருந்தார்கள்.

நான் தாளைப் படிக்கும் போதே அவள் ராமுவின் மாற்றத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் எனக் கூறி, பட்டியலிட ஆரம்பித்தாள். குழந்தை முன்னால் அவர்களைப் பற்றிச் சொல்வதை நான் என்றுமே அனுமதிப்பதில்லை என்று விளக்கம் அளித்தபின் ராமுவை வெளியில் அமரச் சொன்னேன். அதோடு, அம்மா சொல்ல ஆர்வமாக இருப்பதால், அவர்களிடம் பேசின பின்னே அவனிடமும் பேசப் போவதாகச் சொன்னேன்.

அவன் தோளைச் சுற்றி கையை அணைத்து, வெளியில் உட்கார வைத்து வந்தேன். ஏனோ இந்தக் குழந்தை பல சங்கடங்களைச் சந்தித்தவன், தவிப்பவன் எனத் தோன்றியது.

கடந்த ஆறு மாதங்களாகத் தான் ராமுவிடம் மாற்றம் தெரிந்ததாகச் செல்வி சொன்னாள். எது சொன்னாலும் மறு பேச்சு என்றாள், சொல்வதைச் செய்ய மறுப்பதும், பல சமயங்களில் மற்றவர்கள் மேல் பழி போடுவதும் உண்டாம், மற்றும்  கோபம் அதிகமானதாம். இவையெல்லாம் வீட்டில். பள்ளியில் படிப்பில் கவனம் சிதறுகிறது என்று அடிக்கடி ஆசிரியரின் புகார். சில நண்பர்களின் புகார்:எறும்பை, பூச்சிகளைக் கொல்வதாக, பார்த்துப் பயந்தார்கள் என்று.

அவள் முடிப்பதற்குள் உள்ளே தடாலென கதவைத் திறந்து கொண்டு வந்தான். கண்ணீர் கொட்டியது. நான் போய் அவனை அணைத்துக் கொண்டேன். உடனே, கையை உதறிவிட்டு, “யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை” என்றான். எந்த அளவிற்குக் குழந்தையின் மனம் வலித்து இருக்கிறது இப்படிச் சொல்லுவதற்கு என்ற எண்ணம் மனதில் ஓடியது!!

நான் அவனை விடவில்லை. ராமுவை அணைத்தவாறு ஆறுதல் சொன்னேன். மேலும் அவனுடைய நிலைமையை மாற்றி அமைக்க ப்ளே தெரபி அறைக்கு அழைத்துச் சென்றேன். சில பொருட்களை எடுத்துப் பார்த்தான். சில நிமிடங்களுக்குப் பின்னர், நாளை இங்கே வருகிறாயா என்று கேட்டேன். ஏன் என்றான். விளக்கினேன். வெகு நேரம் என்னையே கூர்ந்து கவனித்த பின், சரி என்றான். அம்மாவிடம் நேரத்தைச் சொல்லி அழைத்து வரச் சொன்னேன்.

சொன்னபடி வந்தார்கள். ராமு போன்ற வயதினருக்கு விளையாட்டு சிகிச்சை (play therapy) வழிமுறைகளைப் பயன்படுத்துவேன். என்னை மிஸ் என்று தான் அழைப்பேன் என்றான். இன்றும் மண் படிந்த சட்டை, கலைந்த தலைமுடி. செல்வி சங்கடப் பட்டாள். நான் செய்கையால் பரவாயில்லை என்றேன்.

பல வண்ணங்களில் பென்சில், புத்தகங்கள், காகிதங்கள், களிமண், பொம்மை வாகனம், கட்டிடக்கண்டம்,  எல்லாம் அறையில் இருந்ததைப் பார்த்தவுடன், ஓடி உள்ளே போனான். அவனுடன் நானும் சென்று, தாளில் வரைய ஆரம்பித்தேன், அவனும் சேர்ந்து கொண்டான். அவன் வரையும் படத்தில் உள்ளது அவனுடைய உணர்வைப் புரிய உதவியது. செல்வியிடமும் ஸெஷன்கள் ஆரம்பித்ததில் சூழலை அறிய ஆரம்பித்தேன்.

ராமு மிகச் சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவன். இருபத்தி ஐந்து வயதான அப்பா திலகன், தொழிற்சாலையில் தொழிலாளி. கடினமாக உழைப்பவர். குடும்பத்தினருக்கு வசதிகள் செய்ய இயலாமையால் மனம் தளர்ந்தே இருந்தார். செல்வி தைரியம் சொல்வாள். அவளுக்குப் பக்கத்தில் உள்ள ஜவுளி தொழிற்சாலையில் தையல் வேலை. திலகனின் அப்பா-அம்மா இவர்களுடன் இருப்பதால் ராமுவை பார்த்துக் கொள்ள உதவினார்கள். முடிந்த வரை செல்வி எல்லா வேலையையும் செய்துவிட்டுத் தான் வேலைக்குப் போவாளாம்.

திடீரென திலகன் வேலை நீக்கம் செய்யப்பட்டான். ராமுவின் பள்ளிக்கூட மாதாந்திர கட்டணம் கட்டுவது கடினமானது. திலகன் திகைத்துப் போனான். செயலற்ற நிலையில் இருப்பது போலத் தோன்றியது. பணம் கட்டும் நேரம் கடந்தது. கட்டாததற்கு முதலில் ராமு வகுப்புக்கு வெளியே நிற்க வேண்டியதாயிற்று. மேலும் நாட்கள் கடந்தும், கட்டாமல் போக, தண்டனையாகப் பள்ளிக்கூட வாயிற்கதவில் நிற்க வேண்டி வந்தது. சில மாணவர்கள் ஏளனமாகப் பார்ப்பதும், கேலி செய்வதாலும் ராமு சங்கடப் பட்டான்.

தினமும் ஏதோ தண்டனை. அதனால் அவமானப் படுவதால் வீட்டில் அம்மாவைப் பைசா கட்டச் சொன்னான். அம்மா எதுவும் செய்ய முன் வரவில்லை (அவன் கண்களில்).

அன்றிலிருந்து, அவள் எதைச் சொன்னாலும் கேட்பதை நிறுத்திக் கொண்டான். செல்வியுடன் ஸெஷன்களில் இதைப் பற்றிப் பேச, அவள் மெதுவாகப் புரிந்து கொண்டாள், ராமுவின் நடத்தையால்  அவனுடைய ஆதங்கத்தைக் காட்டினான். அவளை அவமானப் படுத்த இல்லை என்று உணர்ந்தாள். இது புரிந்த பிறகே அவளுக்கு ராமுவின் மேல் இருந்த ஆத்திரம் குறைய ஆரம்பித்தது.

ராமுவின் கோபம் ஆரம்பமானதை அவன் போட்ட வரைபடத்தின் மூலம் அறிய வந்தேன். ப்ளே தெரபி போது எதை எடுத்தாலும் கரடுமுரடாக உபயோகிக்கும் விதத்தில் அவனுடைய மனதின் கொந்தளிப்பு புரிய வந்தது.

அதேபோல, ராமு தான் நிராகரிக்கப் படுவதாக உணருகிறான் என்பது பல பரிமாணங்கள் மூலம், அவன் செய்யும் விதங்களில், படங்களில், மற்றவர்களைப் பற்றிப் பேசுவதில், செய்வதை விவரிப்பதில் புரிய வந்தது. உதாரணத்திற்கு, விளையாட்டு மைதானத்தை அமைக்கும் போது தன்னை எங்கேயோ வைத்தான்.

ப்ளே தெரப்பீயிலும் சரி அவன் சொன்னதை வைத்து எனக்குப் புரிந்தது, அவன் எதையும் செய்வான். எழுத மட்டும் மறுத்தான்.

ராமுவின் எதிர்மறை உணர்வுகளால் வகுப்பில் தண்டனை பெற்றான். விளைவு, வகுப்பில் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளக் கடினமானது. பாடப் புத்தகம் வாங்கியாவது சரி செய்து கொள்ளலாம் என்றால் பகிர யாரும் முன்வரவில்லை. ஆசிரியர்கள் அதிக தண்டனை தர, நண்பர்கள் விலக ஆரம்பித்தார்கள்.

இதை விவரிக்கும் போது, கையில் உள்ளதை முறுக்கி உடைப்பது போலச் செய்கை செய்தான். முதல்முறை அவன் கவனத்தைத் திசை திருப்பி பொருளைக் கையிலிருந்து வாங்கி விட்டேன். வகுப்பு சம்பந்தப்பட்ட தகவல்களைப் பகிரும் போது, திரும்பவும் அவ்வாறே பொருளை இப்படி அப்படிச் செய்வதைக் கவனித்தேன். அவனுக்கு அந்நேரத்தில் நேர்ந்ததைப் புத்தகத்தில் உள்ள ஒரு கதை வடிவமாகக் காட்டினேன். அழ ஆரம்பித்தான். மறு செஷன்களிலிருந்து, உடை கிழிந்து இருந்தது, மண் இல்லை.

உள்ளுக்குள் ஏற்படுவதைச் சொல்ல, வெளிப்படுத்த, தத்தளிப்பில் இந்த மாதிரி உடைப்பார்கள். மற்றவர் தன்னைப் பார்த்துப் பயந்து போகும்படி செய்வார்கள். அப்படி என்றால், தன்னை நிராகரிக்க வில்லை. பயந்து போகிறார்கள் என்று ராமு தன்னைச் சமாதானம் செய்து கொண்டான். பலன்? நண்பர்கள் சிதறி ஓடினர். அவர்கள் கவனத்தைக் கவர, எறும்பை மிதிப்பது.

தனிமைப் படுத்தப் பட்ட வேதனை. பல விளையாட்டு மூலமாக இந்த ஆதங்கத்தை வெளியில் கொண்டு வர முயன்றேன். ராமு புதுமையான விளையாட்டு யோசிப்பதில் வல்லவன் எனப் புரிந்தது. அதேபோல், விளையாட்டின் விதிகளைச் சிரத்தையுடன் கடைப் பிடிப்பவன். இந்த இரண்டை பல்வேறு தருணத்தில் பார்த்த பின் இவனுக்கு அப்போஸிஷனல் டிபைஃயன்ட் டிஸ்ஸார்டர்” (Oppositional Defiant Disorder) தான என்பதே சந்தேகமானது.

இந்த சிந்தனை என் மனதில் ஓட, ஒரு கட்டத்தில் அன்று முடித்துச் செல்லும் போது, என் கழுத்தைக் கட்டிக்கொண்டு, கண்கள் தளும்ப “மிஸ் தாங்ஸ்” என்று சொல்லிக் கொண்டே ஓடிப்போனான். ஸ்தம்பித்தேன். அவனுக்கு அந்த கோளாறு இருப்பதாகக் கருதிய மருத்துவருக்கு இதுவரையில் பார்த்ததைப் பதிவு செய்து, அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

ராமுவின் நிலைமைக்குப் பள்ளிக்கூடமும், ஆசிரியர்களின் அணுகுமுறையும் காரணிகளாக இருந்ததால் அவர்களைச் சந்தித்தேன். தலைமை ஆசிரியரிடம் சூழலை விளக்கி, அவன் வகுப்பு, ஆசிரியர்களுக்குக் குழந்தை உளவியல் பற்றிய பயிற்சியின் அவசியத்தை எடுத்து விளக்கினேன். முதலில் மறுத்தார். பிறகு அவர்களாகவே அழைத்து, ஒப்புதல் தந்தார்.

ராமு, செல்வி ஸெஷன்கள் இல்லாத நாட்களில், இந்தப் பள்ளிக்கூடப் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். முதல் மாற்றம் எட்டிப்பார்க்க, ஒரு மாதம் தேவையானது. இதன் பிறகு செல்வி, திலகன், மற்ற பிள்ளைகளின் பெற்றோர்களையும் இதில் சேர்த்துக் கொண்டேன். தனியாக மாணவர்கள்-ஆசிரியர்கள்-பெற்றோர் என, அதன் பிறகு ஆசிரியர்-மாணவர்கள், மாணவர்கள்-பெற்றோர், பெற்றோர்-ஆசிரியர் என்று.

வெவ்வேறு குழுவிற்கு பொதுவாக மனநலம் பற்றிய பயிற்சிகள் நடத்தினேன். இதனால் தான் ஆசிரியர்களின் அணுகுமுறையில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.

ராமுவின் சக தோழனான அப்துல் அவன் எப்போது வருவான் எனக் கேட்டான். இந்த விஷயத்தை மையமாக வைத்து வகுப்புக்கு மன-சமூக நிலையைப் பற்றிய வர்க்ஷாப் தொடங்கியதில் இந்த முதல் வகுப்பு மாணவர்களின் இயல்பான அன்பு வெளிப்பட்டது. அவர்கள் வகுப்பில் உள்ள ராணி அவன் வீட்டுப் பக்கத்தில் இருப்பதால் சிலர் அவளுடன் ராமுவின் வீட்டிற்கு சென்றார்கள்.

ஒரே ஆரவாரம். அன்பு, நெகிழ அவனுக்குப் பாடங்களைச் சொல்லித் தருவதாகச் சொன்னார்கள். ராமு கட்டணம் கட்டப் படாததற்கு காரணங்கள் பல இருக்கலாம் என்பது மாணவர்களுக்குப் புரிந்தது. நிலமையை அவனுக்குப் புரிய வைக்க, அவன் மிகப் பிரியப்படும் களிமண்ணால் செய்த புத்தர் மற்றும் ஸ்வாமி விவேகானந்தர் பொம்மைகள் வைத்து ஆரம்பித்தேன். முதல் முறையாக இவர் இருவரையும் பார்ப்பதாகச் சொன்னான். சுத்தம் செய்யும் பெண்மணி இவற்றைப் பார்த்துப் பார்த்து துடைத்து வைத்ததில் இவர்கள் மட்டும் ஜொலிப்பார்கள். ஒருவேளை அதனால் தானோ என்னவோ, ராமு இவர்களை மட்டும் உடைக்காமலிருந்தான்.

ராமு இவர்களுடன்  மட்டும் மிக  அக்கறையோடு விளையாடுவான். அவர்களை பற்றிய பல தகவல்கள் கேட்டான். இரண்டு மூன்று புத்தகங்கள் வாங்கி வந்து விளக்கினேன். தன்னைப் போல் கோபம், நிராகரிப்பு அவர்களுக்கும் ஏற்பட்டதா என்றதைக் கேட்டான். அவர்களின் வாழ்க்கையில் சந்தித்த சிலவற்றைச் சொன்னேன்.

அத்துடன், அவனுடைய நிலையைப் பற்றி காகிதப் பொம்மை (ஓரிகாமி) மூலம் பேசினோம். நிலமையும் பரிந்தது. தன் விரல்களால் செய்யக்கூடிய விரல் பொம்மை, கைப்பாவை வல்லவன் போல் செய்தான். இந்தப் பொருட்களையே பல ரோல் ப்ளே செய்ய உபயோகித்தேன்.

மாற்றங்கள் தோன்ற, போகப் போக, அவனிடம் தன் வகுப்பு, வீடு, நண்பர்கள் பற்றிக் கேட்டேன். இப்போது எதிர்மறை இல்லாமல் பதில் வந்தது. தற்செயலாக வந்த நபர் ஒருவர் நன்கொடை தர, ராமு பள்ளிக்கூடக் கட்டணம் கட்ட உதவியது. இதுவெல்லாம் நடந்தும், எதற்காக இந்த நிலை நேர்ந்தது என்பது என் மனதைக் குடைந்தது.

இது கேட்டது போல, மறு வாரம் ரெவ்யூவிற்கு ராமு வந்தான். செல்வி வேலையிலிருந்ததால் திலகன் வந்து இருந்தான். திலகன் இப்போது வேலைக்காக வெளியூரில் இருப்பதாகச் சொன்னான். சோர்வு அதிகம், வேலை குறைவாகச் செய்யப் பாதி சம்பளம் தான் என்றதையும் சொன்னான். அவனிடம் விஷயங்களைக் கேட்கத் தெளிவு பெற முடிந்தது. வேலை போனதில் திலகன் மன உளைச்சலுக்கு ஆளானான்.

நான் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்பதால் நாங்கள் மருந்துச் சீட்டுத் தரக் கூடாது. ஸைக்காட்ரிஸ்டைப் பார்த்து, மாத்திரை சாப்பிட ஆரம்பித்தான். திலகன் போன்ற சிலருக்கு மாத்திரை தேவை. சில மாதங்களுக்கு. குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவர் சொல்வது படி மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும். அறிகுறிகள் குறையக் குறைய, மாத்திரையும் குறையும்.

பெற்றோரின் மனநலன் சரிவதில், அதன் பிரதிபலிப்பு குழந்தைகளிடம் தெரிய வாய்ப்பு உண்டு. அதுதான் ராமுவிற்கு ஆனது. இப்போது எனக்கு இன்னும் ஊர்ஜிதம் ஆயிற்று, அவனுக்கு ” அப்போஸிஷனல் டிபைஃயன்ட் டிஸ்ஸார்டர்” (Oppositional Defiant Disorder) இல்லை என்று. சிறுவர்களை (ஏன் எல்லோரையும் தான்) நாம் ஓர்வகை எடை போட்டு நடத்தி வந்தால், அதனாலேயே அவர்களின் நிலைமை மேலும் மாறக் கூடும். கவனமாக இருக்க வேண்டும்.

 

 

கடவுள் தீர்ப்பு – முனைவர் ஜெ.ரஞ்சனி,

சாப்பாடு போடாத மனைவி; தற்கொலை ...

 

 

சென்னை செல்லும் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தாள் மீனா. வெள்ளிக்கிழமை இரவு என்பதால் எல்லா பேருந்திலும் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. இறுதியாக ஒரு அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தாள். புழுக்கம் அதிகமாக இருந்தது. கண்ணாடிக் கதவை லேசாக தள்ளினாள்; ஜில்லென்று வீசிய குளிர்காற்று அவள் உடலை லேசாக தழுவியது. ஆனால் அவள் மனம் மட்டும் வெறுமையாக இருந்தது.

மீனா அருகில் இளம் பெண் அமர்ந்தாள்.

அவள் மடியில் ஐந்து மாதக் குழந்தை உறங்கி கொண்டிருந்தது. மற்றொரு குழந்தை அழுது கொண்டிருந்தது. தாய் ஏதோ சொல்லி சமாதான படுத்தினாள். குழந்தை கேட்கவில்லை.

“அம்மா நான் ஜன்னல் ஓரத்தில்தான் உட்காருவேன்” என்று சொன்னாள்.

காதில் வாங்கிய மீனா இருக்கையை விட்டு எழுந்து வேறு இருக்கையில் அமர்ந்தாள். இடம் கிடைத்த மகிழ்ச்சி அந்த மூன்று வயது குழந்தையின் முகத்தில் நிரம்பியிருந்தது. அவள் வடிவத்தில் மகள் தர்ஷினியை காண்கிறாள் மீனா. அவள் உயிரோடு இருந்திருந்தால் இவள் வயது இருக்கும். இந்நேரம் துறுதுறு என்று வளைய வருவாள் நினைக்கும் போதே அழுகை பீறிட்டது மீனாவிற்கு அடக்கி கொண்டாள்.

அவள் முன் பழைய நினைவுகள் நிழலாடியது.

கல்லூரி மேல்படிப்புக்காக மீனா நாகர்கோவில் சென்றபோது அறிமுகமானவன் பிரதாப். அவன் மிகுந்த செல்வந்தன் சொந்தமான பேன்ஸி ஸ்டோர் வைத்திருந்தான். இரண்டு மாத பழக்கம் அவர்களுக்குள் காதலை ஏற்படுத்தியது.

பிரதாப்பின் தந்தை வேதாச்சலம் இவர்கள் காதலை தடுத்தார். மீனா நடுத்தர வர்க்கத்துப் பெண்; நம் குடும்ப அந்தஸ்துக்கு ஏற்றவள் அல்ல என்று எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லிப் பார்த்தார். பிரதாப் கேட்கவில்லை மீனாவை திருமணம் செய்துக் கொள்வதில்; உறுதியாக இருந்தான்.

பெற்றோரை எதிர்த்து மீனாவை திருமணமும் செய்து கொண்டான். வேதாச்சலம் மகன் நடத்தி வந்த பேன்ஸி ஸ்டோரை பிடுங்கிக் கொண்டு அவனை வெளியே துரத்தினார்.

மீனா பிரதாப்பை அழைத்துக் கொண்டு திருச்சி வந்தாள். அவள் அம்மா வீட்டிற்கு அருகில் குடி புகுந்தாள்.

ஒரு வருட காலம் சந்தோஷமாக ஓடியது அவர்கள் வாழ்க்கை. அதன் அடையாளமாக தர்ஷினி பிறந்தாள். பணப்பற்றாக்குறை அவர்களுக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்தியது.

கால் சென்டரில் வேலை பார்க்கும் மீனாவிடம் அடிக்கடி பணம் கேட்பான் பிரதாப். அவள் தரவில்லையென்றால் அடித்து துன்புறுத்துவான். மாத கடைசியில் பக்கத்து தெருவில் வசிக்கும் மாமியாரிடம் பணம் வாங்கி வரும்படி வற்புறுத்துவான். அன்று ஞாயிற்றுக்கிழமை மீனா வீட்டிலிருந்தாள் வழக்கம் போல பிரச்சனை செய்தான் பிரதாப்.

“ஏய்…மீனா கை செலவுக்கு பணம் இல்ல உன் அம்மாகிட்ட போய் பணம் வாங்கிட்டு வா” அதிகாரத்துடன் சொன்னான்.

“ஒரு வேலையும் செய்யாம வீட்டுல உட்காந்திருந்தா எங்கிருந்து பணம் வரும்? ஏதாவது வேலைக்குப் போய் சம்பாதிக்க பாருங்க் சும்மா எங்க அம்மாகிட்ட பணம் கேட்காதீங்க” கோபத்துடன் சொன்னாள்.

“சம்பாதிக்கிற திமிருல பேசுறியா? எங்க அப்பாகிட்ட இருக்கிற சொத்திற்கு நான் வேலைக்கு போகனும்னு அவசியமில்ல் உன்னை கல்யாணம் பண்ணதுனால எனக்கு எந்த லாபமும் இல்லை என் சொத்தை இழந்ததுதான் மிச்சம்”.

“உங்க அப்பா சொத்து தரலேன்னா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும் விருப்பப்பட்டுதானா என்னைத் திருமணம் செஞ்சீங்க.

“ஆமாம் அதுக்காக நான் இப்ப வருத்தப்படறேன் வழவழன்னு பேசாம போய் உங்க அம்மாகிட்ட பணம் வாங்கிட்டு வா”.

மீனா போகாமல் நின்றாள் ‘பளார்’ என்று அவள் கன்னத்தில் அறைந்தான் பிரதாப். விருட்டென்று தொட்டில் அருகே சென்றாள். உறங்கும் குழந்தையை தூக்க அவளை தடுத்தான் பிரதாப்.

“குழந்தைய தூக்கிட்டு போனா நீ வரமாட்டேன்னு எனக்கு தெரியும். அதனால நீ மட்டும் போயிட்டு வா” அவளை விரட்டி அனுப்பினான்.

பணம் வாங்க சென்ற மீனா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. கடுப்பில் இருந்தான் பிரதாப். குழந்தை வேறு பசியால் அழுது கொண்டிருந்தது.

‘நிலமை தெரியாமல் இதுவேறு சனியன்….என்று சொல்லியவாறே வேகமாக தொட்டில் அருகே சென்றான். குழந்தையை  ஒரு கையால் தூக்கினான். முற்றத்தில் நீர் நிரம்பிய அகன்ற பாத்திரம் இருந்தது; அதில் குழந்தையை அமுக்கினான். மூச்சு திணறிய எட்டு மாதக் குழந்தை இரண்டு நிமிடங்களில் தன் உயிரை இழந்தது.

இறந்த குழந்தையை வீசியெறிந்து விட்டு வெளியே ஓடினான் பிரதாப் ; எதிரில் வந்த மீனாவை அவன் கவனிக்கவில்லை. தலைதெறிக்க ஓடும் காரணம் புரியாமல் குழம்பிப் போனாள் மீனா.

வீசியெறியப்பட்ட குழந்தையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.

“ஐயோ என் பிள்ளையை கொன்னுட்டானே பாவிபய” தலையிலும், மார்பிலும் அடித்துக் கொண்டு கதறினாள். தரையில் தவழும் குழந்தை தரையோடு கிடப்பதைப் பார்த்து மனம் குமுறினாள்.

இறந்த குழந்தையை இரு கை தாங்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். பின் அவிழ்ந்த கூந்தலை முடித்துக் கொண்டு புயலாக புறப்பட்டாள். காவல்துறை நோக்கி

வழியில் எதிர்பட்டான் பிரதாப்.

“மீனா…கோபம் என் கண்களை மறைச்சிடுச்சு அநியாயமா நம்ம பிள்ளையை கொன்னுட்டேன் என்னை மன்னித்து விடு” அவள் காலை பிடித்து கெஞ்சினான்.

“சீ…என் கால விடு” அவன் கைபிடியிலிருந்து தன் கால்களை விடுவிடுவித்துக் கொண்டாள் மீனா.

“நீயெல்லாம் ஒரு மனுஷனாடா? பெத்த புள்ளைய கோபத்துல கொன்னுட்டேன்னு சொல்றீயே உனக்கு வெட்கமில்ல. பால்வடியிற இந்த முகத்தை கசக்கி பிழிய உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு. கள்ளம் கபட மில்லாத இந்த முகத்தை பார்த்தால் நம் கவலையெல்லாம் மறந்து போகுமே”. குழந்தையை முத்தமிட்டவாறே அழுது புலம்பினாள்.

“மீனா நான் சொல்றதை….”முடிக்கவில்லை அவன்.

“நீ சொல்ற எதையும் நான் கேட்க விரும்பல. பெத்த பிள்ளைய கொலை செய்த மிருகம் நீ. உனக்கு விலங்கு மாட்டாமல் நான் ஓய மாட்டேன்”

ஆவேசத்துடன் சொல்லிவிட்டு ரோட்டை கடந்து போனாள்.

“மீனா.. மீனா என்று கத்தியவாறே அவளை பின் தொடர்ந்தான் பிரதாப். எதிரில் வந்த லாரியை அவன் கவனிக்கவில்லை. லாரி அவன் மீது மோதியது. அவன் உடல் நாலாபுறம் சிதறி கீழே விழுந்தது.

திரும்பி பார்த்த மீனா கடவுள் தீர்ப்பு சரி என உணர்ந்தாள்.

கண்டெக்டர் ‘டிக்கெட்…டிக்கெட்’ என்று சொன்னதும் அவள் நினைவுகள் கலைந்தன. மனம் மட்டும்  சலனமில்லாமல் வெறுமையாகவே இருந்தது.

பலவீனம் -ரேவதி

 

பலவீனம்

சிறப்பு சிறுகதை - ஏய்.. சீதா நில்லு..

 

காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு வந்து பார்த்தேன், மணி எட்டு ஆகி இருந்தது.

ஒன்பதரை மணிக்குள் பெரம்பூரில் உள்ள என் ஆபிசுக்குப் போகவேண்டும்.  நேரமாகிவிட்டது. சரியாகக் கூட உலராத முடியை வாரிப் பின்னல் போட்டுக் கொண்டேன்.  முகத்திற்குப் பவுடர் போட்டு நெற்றியில் மை இட்டுக் கொண்டேன்.  மணி எட்டரை ஆகி விட்டது.  அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு அம்மாவிடம் சொல்லிக்கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டேன்.

திருவள்ளுவர் சிலை ஸ்டாப்பிங்கில் வந்து நின்றேன்.  பஸ் அவ்வளவு சீக்கிரம் வருவதாகத் தெரிய வில்லை. 

என்னைப் போல பஸ்ஸின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்த ஓர் இளைஞனின் கண்கள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.  என் சேலைத் தலைப்பைச் சரி செய்து கொண்டேன்.

உர்…ர்… என்ற உறுமலுடன் ஒரு பல்லவன் வந்து குலுங்கலுடன் நின்றான்.  அதிலிருந்த சில இளைஞர்களின் கண்களும் என்னையே உற்று நோக்குவதைக் கண்டேன்.  சில மணிநேர இன்பம் போலும்.

உடம்பெல்லாம் கூசியது. சேலைத் தலைப்பை இறுக்கமாக இழுத்து கைப்பையுடன் சேர்த்துப் பிடித்துக் கொண்டு நின்றேன்.  அந்தப் பல்லவனும், அதிலிருந்து ஊடுறுவிய பார்வைகளும் சில நேரத்தில் மறைந்து விட்டன.

பகீரதன் தவம் செய்ததைப் போல என்னுடைய பஸ்ஸின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

இதோ நான் செல்ல வேண்டிய வண்டியும் வந்துவிட்டது.

அடேயப்பா, எவ்வளவு கூட்டம்.

இந்தக் கூட்டத்தில் எப்படி ஏறுவது?

திகைப்பைச் சில வினாடிகளில் பலவந்தமாக நீக்கிவிட்டு, வண்டியில் ஏறலாமென்று போய்க் கைப்பிடியைப் பிடித்தேன்.

அதென்ன, ஏதோ முதுகில் பலமாக மோதுகிறதே. எருமையைப் போல? ஒன்றுமில்லை. ஒரு இளைஞனின் தோள் தான்.  சமாளித்துக் கொண்டு ஏறினேன்.

கண்டக்டர் விசில் அடித்து விட்டார். வண்டியும் புறப்பட்டுவிட்டது.

`அப்பாடா’, என்று பெருமூச்சு விட்டேன்.

பஸ் பல்லவா தள்ளவா என்று கேட்கும் படியான நிலைமைக்கு வராமல் இருந்தால், லேட் இல்லாமல் ஆபிசுக்குச் சென்று விடலாம்.  மனத்திலே ஒரு திருப்தி.

`எங்கம்மா போகனும்’ என்றார் கண்டக்டர்

`பெரம்பூர் ஒன்னு’ என்றேன் நான்.

ஆள்காட்டி விரலை நாக்கில் வைத்து `ரின்ஸ்’ செய்தபின் ஒரு டிக்கெட்டைக் கிழித்துத் தந்தார் கண்டக்டர்.  அருவருப்புடன் வாங்கிக் கொண்டேன்.

`சார், டிக்கட்’ – என் பின்னால் நின்று கொண்டிருந்த அந்த இளைஞனிடம் கேட்டார் கண்டக்டர்.

`பெரம்பூர், ஒன்னு’ என்ற அவ்விளைஞன் பர்சை எடுக்க கைப்பிடியைப் பிடித்திருந்த கையை எடுத்து விட்டு பாக்கட்டில் கைவிட்டான் போலும், பஸ்ஸில் ஒரு குலுங்கல்.  மறுபடியும் ஒரு எருமை மோதல்.  கீழே விழ இருந்த நான் ஒரு சீட்டின் `பார்’ ஐப் பிடித்துக்கொண்டு தப்பித்தேன்.

`சாரி’ , பொய்மையான ஓரு வார்த்தை அந்த இளைஞன் வாயிலிருந்து உதிர்ந்தது.

இந்தக் காட்சியைப் பார்க்கத்தானோ என்னவோ முன்னால் இருந்த சில இளவட்டங்களின் பார்வை திரும்பியது.

அவ்வளவு தான், திரும்பிய பார்வைகள் திரும்பிய படியே நின்று விட்டன.

சில ஜோடிக் கண்கள் என் தலைமுதல் எது வரை பார்க்க முடியுமோ அதுவரை நோட்டம் விட்டன.

`சீ, இதென்ன வெட்கங்கெட்ட செயல், ஆண்டவா, ஏன்தான் என்னைப் பெண்ணாகப் படைத்து, இளமை கொழிக்கும் அழகையும் படைத்தாயோ’ – ஊமை அழுகையில் என் உள்மனம் அழுதது.

பொருட்காட்சியில் வைக்கப்பட்ட ஜீனஸ் சிலைக்கு கைகளும் வைத்து பஸ்ஸில் நிறுத்தி வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி நின்றிருந்தேன்.

குனிந்த தலை நிமிர வில்லை என்றாலும் அந்தப்பல ஜோடிக் கண்களின் பார்வைகள் இன்னும் என்னைவிட்டு விலகவில்லை என்பதை என்னால் உணர முடிந்தது.

பஸ் ஸ்டெர்லிங் ரோடு ஸ்டாப்பிங்கில் வந்து நின்றது.  வழக்கம்போல ஏற்றுமதி இறுக்குமதிகளைச் செய்து விட்டு வண்டி நகர்ந்தது.

இறக்குமதியானவைகளின் பார்வையிலிருந்து தப்பித்தோமென்று நான் நினைப்பதற்குள் ஏற்றுமதியானவைகளின் புதிய பார்வைகள் என் இளமையைக் கொத்திக் கொண்டிருப்பதைக் கண்டேன்.  பின்னால் ஓர் அம்மாள் அடுத்த ஸ்டாப்பில் இறங்கினாள். 

பசி வேளையில் கிடைத்த பஞ்சாமிர்தம் போல் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டேன்.  கொத்திய விழிகளின் கொடுமையிலிருந்து தப்பித்தோம் என்று என் மனம் மகிழ்ச்சியடைந்தது.

கடைசியாக பல்லவன் நான் இறங்க வேண்டிய இடத்தில் உறுமலுடன் நின்றான்.  வண்டியிலிருந்து இறங்கி ஆபீசை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

சற்றுதூரம் சென்றபிறகுதான் பின்னால் இருவர் என்னைப் பின்தொடர்ந்து வருவதை உணர்ந்தேன்.  அவர்கள் ஏதோ குறும்பாகப் பேசிக்கொண்டு வருவது என் காதுகளில் லேசாக விழுந்தது.

`சீதா அவுர் கீதா’ பாத்தியாடா.  அதுல ஹேமமாலினி எப்படி இருக்கா தெரியுமா’ என்றான் ஒருவன்.

`ஹூம், அவள் என்னடா அழகு. இந்த சிட்டுக்கிட்ட நிக்கக்கூட முடியுமா அவளால` என்றான் மற்றொருவன்.

`ஆமாம், உன் சிட்டு எங்கடா வேலை பாக்குது` என்றான் முதலில் பேசியவன்.

`பக்கத்திலதான்` என்றான் அடுத்தவன்.

அவர்கள் இருவரும் என்னைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என்று எனக்கும் புரிந்தது.  புரிந்தும் செய்வதறியாது என் போக்கில் விரைவாக நடந்தேன்.  நான் என்னுடைய ஆபிசை நெருங்கும்போது மணி ஒன்பதே முக்கால் ஆகிவிட்டது.

லேட் என்று தெரிந்திருந்தும், `என்னங்க லேட்டா? என்று வழக்கமான ஓர் அசட்டுச் சிரிப்புடன் கேட்டார் அக்கவுண்டண்ட்.  அந்த ஆள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் முகத்தில் அசடு வழிய ஓர் இளி இளிப்பார். இந்தக் காட்சியைப் பார்த்தப் பார்த்து எனக்குப் புளித்துப் போய்விட்டது.

`ஆமாம்`, கொஞ்சம் லேட்டாயிடுத்து` என்று சொல்லிவிட்டு என் இடத்தில் போய் உட்கார்ந்தேன்.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஹெட்கிளார்க் உங்களைக் கூட்பிடுகிறார் என்று பியூன் வந்து சொன்னான்.  கைப்பையை வைத்துவிட்டு ஹெட்கிளார்க் அறைக்குச் சென்றேன்.

என்னம்மா லேட்டு என்று கேட்டுவிட்டு ஒரு கடிதத்தை அவசரமாக டைப் அடித்துக்கொடுக்கும்படி என்னிடம் கொடுத்தார்.  கொடுக்கும் போது வேண்டுமென்றே என் கைகளைத் தொட்டுக் கொடுத்தார்.  அவர் இப்படிச் செய்வதொன்றும் புதிதல்ல என்றாலும் எனக்கு என்னவோ போல் இருந்தது.

அந்தக் கடிதத்தை வாங்கிக்கொண்டு என்னுடைய சீட்டிற்கு வந்தேன்.

ஹெட்கிளார்க் கொடுத்த கடிதத்தை உடனே டைப் செய்து கொடுத்தனுப்பிவிட்டு என்னுடைய மற்ற வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.  நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. 

மணி ஒன்று ஆனதும், கையில் கொண்டு வந்திருந்த டிபன் பாக்சை எடுத்துக் கொண்டு சாப்பாட்டு அறைக்குச் சென்றேன்.  அங்கு சகஊழியர்களின் கூட்டத்தில் ஒரே சத்தம்.  பலவிதமான பேச்சுக்கள்.

திடீரென்று ஞாபகம் வந்தவர்போல அக்கவுண்டண்ட், “”””நம்ம டைபிஸ்ட்டம்மா வீட்டு ஊறுகாய் அருமையாக இருக்குமே’’ என்று சொல்லிக் கொண்டே பாக்ஸ் மூடியுடன் என்னிடம் வந்து பல்லைக் காட்டினார்.

அவருடைய பாக்ஸ் மூடியில் இரண்டு துண்டு ஊறுகாயை எடுத்து வைத்தேன் வேண்டாவெறுப்பாக.  அவருக்கு அமிர்தமே கிடைத்து விட்டதைப் போல மகிழ்ச்சி.  `தாங்ஸ்` என்று மரியாதைக்காகச் சொல்லிவிட்டு அவருடைய டிபன் பாக்சிடம் சென்றுவிட்டார்.  அங்குபோய் தன் நண்பர்களிட்ம் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் காண்பித்தார்.

`உனக்கென்னப்பா தினமும் ஓசி ஊறுகாய் கிடைத்துவிடுகிறது.  எங்களைச் சொல்லு` என்று தங்களது வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்துக் கொண்டார்கள். 

ஒரு வழியாக சாப்பாட்டை முடித்துக் கொண்டு, சாப்பாட்டறையின் புகைமூட்டத்திலிருந்து வெளியேறி என் இடத்தில் வந்து அமர்ந்தேன்.

சிறிது நேர ஓய்வுக்குப் பின் ஆபீசில் மீண்டும் வேலை துவங்கியது.  மாலை நான்கு மணிக்கு அக்கவுண்டண்ட் ஒரு வெள்ளைத் தாளில் ஏதோ எழுதி என்னிடம் கொண்டு வந்தார்.

 “நம்ம கல்யாணராமன் கல்யாணத்திற்கு நம் ஆபீஸ் சார்பில் ஒரு பிரசண்ட் கொடுக்க வேண்டும், தொகையை எழுதி கையெழுத்துப் போடுங்கள்.  பணம் பிறகு கொடுக்கலாம்“, என்று  நீட்டினார்.

நல்லவேளை பணம் இப்போது கேட்கவில்லை என்று நினைத்துக் கொண்டு, பத்து ரூபாய் எழுதிக் கையெழுத்துப் போட்டேன்.  அதற்கும் ஒரு `தாங்ஸ்` கிடைத்தது.

இப்படியாக ஆபீஸ் நேரம் முடிந்து ஐந்து மணிக்கு கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன்.  பஸ்ஸடாப்பில் வந்து நின்றேன்.

என் அருகில் என்னை இடிப்பது போல மோட்டார் சைக்கிள் ஒன்று வந்து நின்றது.  நான் சற்று பின்னால் நகர்ந்து கொண்டேன்.

அதை ஓட்டி வந்த கிருதா வாலிபன், `நீங்க எங்க போகணும்னு சொன்னீங்கன்னா நான் டிராப் பண்ணிடறேன்` என்று என்னிடம் கேட்டான்.

`நோ, தாங்ஸ்` என்றேன்.

கிருதா முகத்தில் அசடுவழிய நகர்ந்துவிட்டது.  என் பக்கத்தில் பஸ்ஸுக்காக, நிற்கக் கூட முடியாமல் நின்றிருந்த வயதான அம்மாளை ஏன் அந்த கிருதா கேட்கவில்லை? எனக்கு வியப்பாகவும் அதே சமயம் எரிச்சலாகவும் இருந்தது.

நான் எதிர்பார்த்திருந்த வண்டியும் வந்துவிட்டது.  ஒரே கூட்டம்.  தட்டுத் தடுமாறி ஏறிவிட்டேன்.  உள்ளே உட்கார இடமில்லையாதலால் தலைவிதியே என்று நின்று கொண்டிருந்தேன்.

மீண்டும் அதே எச்சில் டிக்கட், குலுங்கள்கள், கொத்தும் விழிகளின் கூரிய பார்வைகள், ஊறலெடுத்த மனித எருமைகளின் மோதல்கள் இவற்றினூடே பயணம்.  பெரம்பூரில் துவங்கி மயிலாப்பூர் வள்ளுவர் சிலையும் வந்து முடிந்தது.  வள்ளுவர் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் போலும்!

சரியாக ஆறுமணிக்கு வீடுவந்து சேர்ந்தேன். விவிதபாரதியைத் திருப்பினேன்.  `பெண்ணினம் வாழ்கவே` என்ற பாடல் டிரான்சிஸ்டரிலிருந்து மிதந்துவந்தது.

முகத்தைக் கழுவிக் கொண்டு, காபி குடித்துவிட்டு படுக்கையில் ஓய்வாகச் சாய்ந்தேன்.  அன்றைய நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக மனத்திரையில் தோன்றின.

   காலையில் பஸ்ஸ்டாப்பில் வைத்தகண் வாங்காமல் பார்த்த இளைஞனின் பார்வை;

   பஸ்ஸில் ஏறும் போது மோதிய இளைஞனின் மோதல்;

   பர்சை எடுக்கும் சாக்கில் இடித்தஇடி;

   என் இளமையை விழுங்கிய பார்வைகள்;

    பின் தொடர்ந்த இளைஞர்களின் கமண்ட்ஸ்;

    அக்கவுண்டன்டின் பல்லிளிப்பு;

    ஹெட்கிளார்க்கின் அநாவசியமான கைத்தீண்டல்;

    அறிமுகமில்லா கிருதாவின் அழைப்பு.

 

வேண்டுமென்றே இவற்றையெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள்? இவற்றை நம்மால் திரும்பச் செய்ய முடியுமா?  இப்படிப் பல கேள்விகள்.  இறுதியாக ஓர் உண்மை புலப்பட்டது.

அவர்களைப் போலச் செய்வதற்கு என்னால் முடியவில்லை!

`வாழ்கவே பெண்ணினம்’ – என்ற பாடல் என் காதுகளில் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

 

இது கதை அல்ல.  பாதிக்கப்பட்ட ஒரு பெண்மனத்தின் மௌன வெளிப்பாடு, அவ்வளவே ஆனால் இதில் வரும் நிகழ்ச்சிகளை நினைத்து அவமானப்பட எல்லோருக்கும் உரிமை உண்டு.  அது அவரவர் சௌகரியம்.

நடுப்பக்கம் – சந்திரமோகன்

Pammal K. Sambandam (2002)

தில்லை நடராஜருக்கு பைக் ஓட்ட தெரியுமா?

எனக்கு நன்கு தெரியும். புராணத்தில் படித்துள்ளேன், வரை படத்திலும், திரைப்படத்திலும் பார்த்துள்ளேன் சிவனின் வாகனம் நந்தி தேவன் என்று. பின்னர் எனக்கு ஏன் இந்த சந்தேகம் வர வேண்டும். என் சந்தேகத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை.

சில வருடங்களுக்கு முன் திடீரென மயிலாடுதுறை சுற்றி உள்ள கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று வரலாம் என முடிவெடுத்தோம். அடிக்கடி எடுக்கும் முடிவுதான். அதுபோல எப்பொழுதுமே திடீரென்றுதான் இது போன்ற முடிவுகள் எடுக்கப்படும். இது போன்ற முடிவுகளை முன் மொழிவது, எதிர்ப்பின்றி வழி மொழிவது போன்ற சிரமமான பணிகளை என் மனைவி எடுத்துக் கொள்வாள். அதை செயல் படுத்தும் சுலபமான வேலை மட்டும் எனக்கு ஒதுக்கப்படும்.

அந்த வாரம் சனி, ஞாயிறு ஒதுக்கப் பட்டது. வெள்ளிக்கிழமை மதியம் குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் கிளம்புவதாக ஏற்பாடு. வழக்கமாக தங்கும் மாயவரம் பாம்ஸ் விடுதியில் அறை ஏற்பாடாகி விட்டது.

வெள்ளிக் கிழமை மாலை வேளை, வீட்டை பூட்டி விட்டு வாசலுக்கு வந்தவுடன்தான் அலமாரியை பூட்டினோமா என்ற சந்தேகம் வந்தது. கதவை திறந்து சரி பார்த்து பூட்டை இரண்டு தடவை இழுத்து பார்த்து காரில் அமர்ந்தோம். அச்சமயம் மனைவிக்கு பூஜை அறை விளக்கை எடுத்து வைத்தோமா என்ற ஐயம். பின் அதையும் சரி பார்த்து கிளம்ப மாலை நான்கு மணியாகி விட்டது.

இடையில் சிதம்பரத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு பத்து மணிக்கு மயிலாடு துறை சென்றடைய திட்டம்.

குடும்பத்துடன் இதுமாதிரி செல்கையில் நம்மையும் அறியாது மனதில் குதூகலம் வந்து விடும். பேச்சும் சிரிப்புமாக கார் போய்க் கொண்டிருந்தது.
சிதம்பரம் அருகே புவனகிரியை கார் நெருங்கும் பொழுது மணி ஒன்பதை காட்டியது. பின் சீட்டில் உறக்க நிலையில் குழந்தைகள். அன்று முட்லூர், புவனகிரி கடைவீதிகள் சற்று வித்தியாசமாக எனக்கு பட்டது. அளவிற்கு மீறிய அமைதி. வழக்கமாக எதிரிலும், போட்டி போட்டு கடந்தும் செல்லும் பேருந்துகளை காணவில்லை. அதுபோலவே எதிர் பக்கமோ, பின்னாலோ கார்களையும் காண வில்லை. ஏதாவது கூறி மனைவியை பயப்படுத்தாமல் காரை மெதுவாக ஓட்டிச்செல்கிறேன்.

புவனகிரியிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் வெள்ளார் நதி பாலத்தில் நுழைகிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக டயர்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. வீதியில் நடமாட்டம் இல்லை. அதை கடந்து செல்லும் பொழுது பாலத்தின் மறு பக்கம் பெரும் அளவில் தீயைப் பார்க்கிறேன். கார் நின்று விட்டது. மனதில் பயம் பற்றி எரிய ஆரம்பித்தது. முன்னும் பின்னும் யாரும் இல்லை. சற்று கூர்ந்து பார்த்தால் பல உருவங்கள் கைகளில் ஏதேதோ வைத்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. வழக்கம் போல மனைவியின் உதடுகள் பாசுரங்களை உச்சரிக்க ஆரம்பித்தன. திரும்பிச் செல்லவும் பயம்.
முன் பக்கம் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த நான் என் அருகில் பைக் ஒன்று வந்து நின்றதை கவனிக்கவில்லை. ஒரு கை கண்ணாடியை தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு பார்த்தேன். கை கண்ணாடியை கீழ்இறக்கச் சொன்னது.

பைக்கில் அமர்ந்து இருந்தவர் வெள்ளை வேஷ்டி, பனியன், கழுத்தில் துண்டு சகிதம் இருந்தார். கண்ணாடி இறங்கியதும் காரினுள் உற்று பார்த்து “ எங்கே செல்கிறீர்கள்” என்றார். நான் “மயிலாடுதுறை” என்றேன். “ வழியில் உங்களை போலீஸ் தடுக்க வில்லையா” என்றவர் “ ஒரு பிரிவினர், வாண்டையார் ஒருவரை வெட்டி விட்டார்கள்’ சிதம்பரம் பற்றி எரிந்து கொண்டுள்ளது. போகும் வாகனங்களை அடித்து நொறுக்குகிறார்கள். நீங்கள் திரும்பியும் செல்ல முடியாது. நீங்கள் வந்த வழியில் பறங்கிப் பேட்டையிலிருந்து மற்றொரு கும்பல் வந்து கொண்டுள்ளது” என என்னை மரண பயத்தில் கொண்டு நிறுத்தினார்.

நடுக்கத்துடன் நான்” இப்ப, என்ன செய்யறதுங்க” என்றேன். அவர் “ கவலைப்படாதீங்க வண்டியை திருப்பி என் பின்னால் வாங்க என்றார்”. எனக்கு வேறு வழி ஒன்றும் தெரிய வில்லை. அவரை நம்பி பின் தொடர்ந்தேன். சந்து பொந்துகளில் நுழைந்து, நுழைந்து சென்றார். மெயின் ரோடு வந்தது. “ நாம் சிதம்பரத்தை தாண்டி விட்டோம், சீர்காழி அருகில்தான், இனி பயமில்லை செல்லுங்கள்” என்றார்.

நான் காரிலிருந்து நன்றி சொல்ல இறங்கும் முன் அவர் பைக் திரும்பி சென்று கண்களிலிருந்து மறைந்தும் விட்டது.

நம்மை வழிகாட்டி அழைத்து வந்தது தில்லை நடராஜன்தாங்க என்று என் மனைவி தீர்க்கமாகக்  கூறினாள். 

“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்­றும்
இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!”

என்ற அப்பரின் பதிகத்தை அவள் சொல்லும் பொழுதுதான் பைக் கார் அருகில் வந்து நின்றதாம்.

அதை மறுத்துச்சொல்லும் தைரியம் எனக்கில்லை.

தவளைக் கூச்சல்  – வளவதுரையன்

வரலாற்று அறிவியல்: மழை காலங்களில் ...

 

ஒரு மழைக்கால நள்ளிரவு

வீதியில் நடக்கையில்

பாதங்கள் குளிர்ச்சியடைந்து

மகிழ்ச்சி அடைகின்றன

 

இருளும் குளிரும் உடலை

ஆடையாய்ப் போர்த்த

மனமெங்கும்

மத்தாப்புச் சிதறல்கள்

 

படைவீர்ர் இறங்குவது போல

வீதிவிளக்கு வெளிச்சத்தில்

சரமாரியாய்த் தூறல்கள்

 

வந்துவந்து போகும்

அவளின் புன்னகையாய்

மின்னல் வெடிப்புகள்

 

கொட்டு மேளச் சத்தமாய்

இடைவிடாமல் வரும்

லேசான இடிஒலி

 

குளிர அடக்க

முடங்கி முடங்கிப் படுக்கும்

பிச்சைக்காரர்

 

சரியான இடம் தேடி

அலைகின்ற தெருநாய்

 

தம்மை விருந்துண்ணத்

தாமே அழைக்கும்

தவளைச் சத்தம்

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

  1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
  2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020

 

  1. ஹையா டீச்சர் !

 

ஹையா டீச்சர் வந்தாச்சு –

வகுப்பே கப்சிப் ஆயாச்சு !

டீச்சர் பாடம் நடத்திடுவார் –

கவனமாய் நாங்கள் கேட்டிடுவோம் !

 

தமிழில் பாடங்கள் படித்திடுவோம் !

ஆங்கிலமும் நன்கு பயின்றிடுவோம் !

அனைத்து மொழிகளும் அறிந்திடுவோம் !

அகிலம் போற்றவே வாழ்ந்திடுவோம் !

 

அறிவியல் கணிதம் சமூகவியல் –

எல்லாவற்றிலும் தேர்ந்திடுவோம் !

உடற்பயிற்சியை எந்நாளும் –

உற்சாகமாக செய்திடுவோம் !

 

ஆடல் பாடல் எல்லாமே –

பள்ளியிலேயே உண்டன்றோ !

பற்பல கலைகள் கற்றிடுவோம் !

நல்ல பெயரையே எடுத்திடுவோம் !

 

நண்பர்கள் பல பேர் பள்ளியிலே –

எனக்கு நிறையவே உள்ளனரே !

பள்ளி சென்றால் ஜாலிதான் –

துள்ளிக் குதித்தே செல்வேனே !

 

ஹையா டீச்சர் வந்தாச்சு –

வகுப்பே கப்சிப் ஆயாச்சு !

டீச்சர் பாடம் நடத்திடுவார் –

கவனமாய் நாங்கள் கேட்டிடுவோம் !

 

 

 

  1. இயற்கை அன்னை!

 

ஒரு பறவைக்கு ஒரு கூடு –

இந்த உலகம் எனது வீடு !

இயற்கை கொள்ளை அழகு –

அதை காப்பதே நம் கடமை !

 

காற்று மாசுபட்டால் –

நம் மூச்சு வந்து முட்டும் !

தண்ணீர் மாசுபட்டால் –

நோய் நொடிகள் நம்மை வாட்டும் !

 

வனங்களை நாம் அழித்தால் –

நாமும் சேர்ந்து அழிவோம் !

விலங்கு மரங்கள் பறவை –

இவை அனைத்தும் நமது தேவை !

 

போதும் என்ற மனமே –

பொன் செயும் மருந்தாம் !

பொருள்கள் குறைத்து வாழ்ந்தால் –

நாம் பெருமையோடு வாழ்வோம் !

 

இயற்கை அன்னை என் தாய் –

என்னை வாழவைக்கும் தெய்வம் !

பொறுப்பாய் நானும் வாழ்வேன் –

இந்த பூமியை நான் காப்பேன் !

 

 

 

 

 

 

 

 

 

“கண்ண அமுதாவான்” – மீ.விசுவநாதன்

பாலில் மோரும் வெண்ணையுமே
பதுங்கி இருக்கும் தெரியாது
மாலின் உருதான் என்றாலும்
மனதிற் கறியும் அறிவேது !சின்னக் குழந்தை என்றாலும்
செய்யும் லீலை பலகோடி
என்னைத் திருடும் அவன்கருணை
இருளென் உள்ளம் உணராது !புல்லாங் குழலின் இசையாலே
புரட்டி எடுக்கும் கலைவாணன்
பல்லாங் குழியாம் காலத்தில்
பதமாய் ஆடும் இளங்கண்ணன் !

அவனுக் கென்று தருவதற்கு
அகிலம் முழுக்கப் பொருளேது
இவனுக் குள்ளே அழுக்கிருக்கு
அதனைக் கொள்வான் வெளுப்பதற்கு !

பசுவும் பச்சைப் புல்வெளியும்
பாம்பும் நச்சும் அவனாவான்
விசுவம் முழுக்க நிறைவாக
விளங்கும் கண்ண அமுதாவான் !

கண்ணன் கோவில் எனக்காகக்
கால மெல்லாம் திறந்திருக்கும்
எண்ணப் பறவை வடிவாக
எளிதாய்ச் செல்ல வழியிருக்கும்!

மனம் ஒரு மாயமான் – கவிஞர் இரஜகை நிலவன்

மனம் ஒரு மாயமான்….

Magical Deer Mixed Media by Ata Alishahi

எதையெல்லாம் எண்ணங்கள் தேடி ஓடுகிறதோ..
அங்கெல்லாம் வெறுமையான
அட்சய பாத்திரத்தை தூக்கிக் கொண்டு
ஓடுகிறது இந்த மாயமான் …

எதைத்தேடுகிறோம் எனப்புரியாமல்
அங்குமிங்கும் நாக்கைத் தொங்க போட்டுக்கொண்டு..
இரைக்காக ஓடிக்கொண்டிருக்கும் ஓநாயைப் போல்
வெற்றிடத்தில் …..
ஊளையிட்டு……
ஊனமாய்……
ஊமையாய்…..
நிர்வாணமாய்….
இன்னும் நுரைதள்ளிக்கொண்டு….
ஓடும் முயலைத் துரத்திப்பிடிக்கும்
வேட்டை நாயாய்…
எத்தனை வேடமிடுகிறது.. தன்
தேவைகளுக்காக…..

மாயமானே..
தூங்கும்போதும் விழித்துக்கொண்டிருக்கிறாய்..
அதைத்தேடு.. இதைப்புசி..
எனமனக்கண்ணால் கட்டளையிட்டு விட்டு
சப்புக்கொட்டி கவண் கல் கொண்டு குறி
பார்த்து அடித்ததை
விழுங்கி விட்டு ஏப்பமிடக்காத்திருக்கிறாய்…

உன்னை யானையின் அங்குசமாய்
ஆக்கிகொண்டால்.. மலை யானை
ஆனாலும்…ஆணைக்கு
அடிபணிந்து…….

நன்றி கொண்ட நாயாய்
வாலாட்டிக்கொண்டே பின்னால்
உலவுவாய்…

இல்லையெனில் புலிவால்
பிடித்த மூடனாய்
நீ போகும் திசையெல்லாம்
இழுத்துப் போவாய்
மாயக்கயிற்றில் கட்டி இழுத்துக்கொண்டே…..

இடைவெளி – செவல்குளம் செல்வராசு

 

கணவனை குண்டு யானை என அழைத்த ...

 

 நமக்குள் பெரிய இடைவெளி

விழுந்துவிட்டது…

குடும்பம் குழந்தைகள் என

கடக்க முடியா பாலம் வளர்ந்துவிட்டது

இப்பொழுதெல்லாம் உன்னைப்பற்றி

எதுவுமே தெரிவதில்லை எனக்கு

தெரிந்தோ தெரியாமலோ தெரிவிக்கும்

நளினி பாப்பாவும் வளர்ந்துவிட்டாள்

ஒன்றும் சொல்வதில்லை

முகநூல் புண்ணியத்தில் காணக்கிடைத்தது

பாப்பாவைத் தொட்டுக்கொண்டோ

தாங்கிக்கொண்டோ

எச்சரிக்கையாய் ஒதுங்கியிருக்கும்

உன் கைகள் மட்டும்

புலனத்தின் முகப்புப் படத்தில்

அடிக்கடி பார்த்துச் சிரிப்பேன்

குட்டிப் பாப்பாவின் சிரிப்பு

உன்னை உரித்துவைத்தாற்போல

பேசிப் பேசியே கழிந்த பொழுதுகளும்

சேர்ந்தே படித்துக் கிழித்த புத்தகங்களும்

பத்திரமாகத்தான் இருக்கின்றன

நினைவடுக்கிலும் புத்தக அடுக்கிலும்

பேசாவிட்டாலும் செய்தி அனுப்பலாம்தான்

ஆனாலும் அனுப்புவதில்லை இருவரும்

வழக்கம்போல மாசித் திருவிழாவில்

சந்திக்கலாம்தான் பேசலாம்தான்

பேசத்தான் ஒன்றும் இல்லை

வீட்டுக்கு வரலாம்தான்

நலம் விசாரிக்கலாம்தான்

உரிமை பாராட்டதான் ஒன்றுமில்லை

நமக்குள் பெரிய இடைவெளி

விழுந்துவிட்டது

 


மனசுக்குள் மத்தாப்பு – மாலதி அங்குசாமி

 

ஒரு கிராமம் - ஒரு காதல் - காதல் கவிதை

மாஞ்சோலை குயிலு ஒன்னு

மஞ்சளாடை கட்டி இருக்கு…

மாம்பூக் கொட்டும் போது

மனசும் கொஞ்சம் கொட்டிருச்சு…

 

தூண்டாமணி விளக்கு தூங்கிட்டு இருக்கு

தூண்டிவிட வர மாட்டாயோ நீ..

தரிசனம் தர மாட்டாயா நீ

கரிசனம் காட்ட மாட்டேனா நான்…

 

நான் பாடாத ஒரு பாட்டு

நீ வாராயோ அதை கேட்டு…

வருச நாட்டு ஓரத்துல

வருஷம் எல்லாம் காத்திருக்கேன்…

 

 

வாழப்பாடி சந்தை போயி

வாழமரம் வாங்கி வாரதெப்போ…

முல்லைபூ வாங்கி வந்து

முல்லைக்கு சூட்டுவதெப்போ  …

 

காட்டன் துணி போட்டு

காட்டுக்குள்ள போன புள்ள…

காதல் வந்துடுச்சு என்று

காதுக்குள்ள சொல்லி புட்டேன் …

 

வாசலிலே கோலம் போட்டு 

வாசமல்லி பூச் சூடு…

புளியம்பூ சேலை கட்டு

புண்ணைமர பந்தல் போடு…

 

சிக்கல் எல்லாம் தீர்ந்துவிடும்

சிக்கலில் நாம் சேர்ந்துவிடுவோம்… !

 

(சிக்கல் – ஊரின் பெயர்

ஆலயம் – சிங்கார வடிவேலர் கோவில் )

 

 

குவிகம் கடைசி பக்கம்  – டாக்டர் ஜெ பாஸ்கரன்

Padithathil Pidithathu - Dr J Bhaskaran - Padithathil Pidithathu ...

கண்ணு படப் போகுதைய்யா….

கண் திருஷ்டி நீங்க பூசணிக்காயை ...

ரா கி ரங்கராஜனின் ‘நாலு மூலை’ கட்டுரைத் தொகுப்பு வாசித்துக் கொண்டிருந்தேன் – இது எத்தனையாவது முறை என்று தெரியாது – அவ்வளவு சுவாரஸ்யமான தகவல்களுடன், அவருக்கே உரித்தான கேலியும் கிண்டலும் கலந்த நகைச்சுவை விருந்து! அதில் அவர் திருஷ்டி பற்றிய வாதூலனின் கட்டுரையைக் குறிப்பிட்டு, மேலும் பல செய்திகளைச் சொல்லியிருந்தார். ரேடியோ எஃப் எம் ஒன்றில் ‘கண் படுமே, பிறர் கண் படுமே’ என்று பி பி ஶ்ரீனிவாஸ் பாடிக்கொண்டிருந்தார்.

மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த உறவினரைப் பார்க்க அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தேன் – நீண்ட நாட்களுக்குப் பிறகு, அந்த நண்பர் என்னைப் பார்க்க வந்திருந்தார். பொதுவாகவே அவர் பிறர் முன்னேற்றத்தைப் பார்த்துப் பெருமூச்சு விடுபவர், ஆனாலும் நல்ல மனிதர். மரியாதைக்காக ஒரு ஐந்து நிமிடம் பேசிவிட்டு, மருத்துவ மனைக்குக் கிளம்பினேன். கையில் பிளாஸ்டிக் கூடையில் இரண்டு ஃப்ளாஸ்க் – ஒன்றில் சுடுநீர், மற்றதில் காபி – மற்றும் பிஸ்கட் பாக்கெட் எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பினேன் – நண்பர் என் வீட்டை ஒரு ரவுண்ட் நோட்டம் விட்டார் – டிவி, ஃப்ரிஜ், மியூசிக் சிஸ்டம் – ‘வீட்டை நல்லாத்தான் வெச்சிருக்கே’ என்றவாறே என்னுடன் கிளம்பினார். ‘டப்’ என்ற சத்தம் கேட்டது – சுடுநீர் இருந்த ஃப்ளாஸ்க் உள்ளே உடைந்து கல கலத்தது!அவசரமாக உள்ளே சென்று, மற்றொரு ஃப்ளாஸ்கில் சுடுநீருடன் புறப்பட்டேன். வெளிக்கதவைப் பூட்டி, கிரில் கேட்டை சாத்தும்போது, பிளாஸ்டிக் பை சாய்ந்து, காபி ஃப்ளாஸ்க் உருண்டு தரையில் விழுந்து சிவலோகப் பிராப்தி அடைந்தது! வேறு வழியின்றி, கடையில் புது ஃப்ளாஸ்க், ஓட்டலில் காபி என்று மருத்துவ மனை சென்றேன்.

மனதில் ஒரு குரல் இந்த மனிதனின் ‘கண்’தான் ஃப்ளாஸ்க் உடையக் காரணம் என்றது. ஆனாலும், சூடான நீரினாலும், என் அஜாக்கிரதையாலும் பிளாஸ்க்குகள் உடைந்திருக்கலாம் என்று பகுத்தறிவு சொன்னது. அது எப்படி இவர் வந்த போது மட்டும் ஒரே சமயத்தில் இரண்டு ஃப்ளாஸ்க்கும் உடைந்தது என எதிர் வாதம் செய்தது மனது!

இதைத்தான்,“கண்ணு போடுவாங்க”, “கண்ணு வெச்சுட்டாங்க” ,”திருஷ்டி பட்டுப் போச்சு” என்றெல்லாம் சொல்லுகிறோம்! பொறாமையாலோ, அவர்களது இயலாமையினாலோ, இப்படிப் பெருமூச்சு விடுவதால் ஏதேனும் கெட்டது நடந்து விட்டால், ‘அவரது கண் பட்டதால்தான்’ என்று நம் மனம் நம்புகிறது!

புதியதாய் வாங்கிய கண்ணாடி ஃப்ளவர் வேஸ் கைதவறி கீழே விழுந்து நொறுங்கி விட,‘யார் கண் பட்டதோ’ என, பழி வேறிடம் சென்றுவிடும்! நம் அஜாக்கிரதை மறக்கப்படும்!

இப்படிக் கண் திருஷ்டி பற்றி நம்மிடையே எத்தனை நம்பிக்கைகள்!

கண் திருஷ்டியைக் குறைக்க, புதிதாய்க் கட்டிய வீட்டு வாசலில் (சில புதிதாய் வாங்கிய மிகப் பழைய வீட்டு வாசலிலும்!), ‘தொங்கும்’ நாக்குடன் விழி பிதுங்கும் காளியோ, நின்று கொண்டிருக்கும் திருஷ்டி கணபதியோ, ‘கண்ணைப் பார் சிரி’ வாக்கியமோ (உடன் கழுதைப் படம் கொசுறாக இருப்பதும் உண்டு) தொங்க விடப்படும்! அதனால் திருஷ்டி கழிகிறதோ இல்லையோ, பார்த்த குழந்தைகள் பயந்து அலறுவது நிச்சயம்!

சிலர் வீட்டு வாசலில் முகம் பார்க்கும் கண்ணாடியைப் பதித்து வைத்திருப்பார்கள் – வீட்டுக்கு வருபவர் தன் முகத்தையே பார்த்து, பயந்து நடுங்கி, திருஷ்டி போட மறந்து, வீட்டுக்குள் சென்று, காபிக்கு பதில் காய்ச்சியமோர் கேட்கும் நிலைக்குத் தள்ளப் படுவதும் உண்டு!

கடன் வாங்கி வீடு கட்டிய வீட்டு சொந்தக்காரரின் பேய் அறைந்த முகத்தைப் பார்த்தவுடன், விருந்தாளியின் கண் திருஷ்டி கழிந்து, கால் வழியே வழிந்து ஓடிவிடுவது வீட்டுக்காரரின் முகராசியாக இருக்கலாம்!

“குழந்தை அழகா ‘டிஷுக்’குன்னு இருக்கு” என்று ’சொல்ல’ வேண்டாம், அப்படிப் பார்த்தாலே போதும், வீட்டுப் பாட்டிகள் “ அவ கண்லெ காக்கா குசுவ “ என்று சபித்து, வாசலில் ‘அவள் பாதம் பட்ட மண்ணை’க் கொண்டு, குழந்தைக்குச் சுற்றிப் போடுவது கிராமங்களில் சகஜம்!

வீட்டு கிரகப்பிரவேசம், விசேஷங்கள், சில பண்டிகைகள் முடிந்த கையோடு வீட்டிலுள்ளவர்களை நிற்க வைத்து திருஷ்டி கழிப்பது வழக்கம் – குடுமியுடன் தேங்காய் மீது கற்பூரம் ஏற்றி (எரியும் கற்பூரம் கீழே விழாமலும், நெருப்பு அணைந்து விடாமலும், மூன்று சுற்று சுற்றும் மீசைக்காரர் எப்போதும் என் விசேஷ கவனம் பெறுவார் – இதயம் என் வாயில் துடிப்பதைக் காணலாம்!

டெக்னிகலாக பூசணியில் ஓட்டை போட்டு, இரத்தச் சிவப்பில் குங்குமமும், சில காசுகளும் உள்ளே சேர்த்து, பூசணி மீது கற்பூரம் ஏற்றிச் சுற்றுவதும் உண்டு!

தேங்காயோ, பூசணியோ – சுற்றிய பிறகு தெருவின் நடுவில் உடைத்து திருஷ்டி கழிக்கப்படும்!நடப்பவர்கள் காலில் தேங்காய் ஓடு கிழித்து இரத்தம் வந்தாலோ, சைக்கிள் அல்லது ஸ்கூட்டர், உடைந்த பூசணித் துண்டின் மீது வழுக்கி, வண்டி ஓட்டுபவர் கீழே விழுந்து, கபாலம் உடைந்தாலோ திருஷ்டி கழிந்து விட்டதை உறுதிப் படுத்தலாம்!

அந்தக் காலத்தில் வீட்டுப் பாட்டிகள், விசேஷ நாட்களில் ஓர் ஆழாக்கில் (ஒழக்கில் என்றும் சொல்லலாம் – இவை எல்லாம் என்ன என்பவர்கள் பாட்டியைக் கேட்கலாம் அல்லது சின்ன படி, பெரிய படி என்ற கொள் அளவைகள் குறித்துப் படிக்கலாம்!) இரண்டு காய்ந்த மிளகாய், நாலு மிளகு, கொஞ்சம் கல் உப்பு போட்டு, வலது உள்ளங்கையால் மூடிக்கொண்டு குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் திருஷ்டி கழிப்பதை – க்ளாக்வைசில் மூன்று முறை, ஆண்டி க்ளாக்வைசில் மூன்று முறை சுற்றி, தலை முதல் கால் வரை மூன்று முறை ஏற்றி, இறக்கி ,மிகவும் வேகமாகவும், நளினமாகவும் சில பாட்டிகள் பக்தியுடனும், நம்பிக்கையுடனும் செய்வது அழகு! – பார்த்திருக்கிறேன். திருஷ்டி கழிக்கப் பட்டவர்கள் உடனே அந்த இடத்தை விட்டுச் சென்று விட வேண்டும் – ஆழாக்கில் இருப்பவற்றை அடுப்பில் போட, வெளியேறும் நெடி அதிகமாகவோ, குறைவாகவோ இருப்பதைப் பொறுத்து, திருஷ்டியின் அளவு கணிக்கப் படும்!

நாய்க் கண்ணு, நரிக் கண்ணு, காக்காய்க் கண்ணு, பேய்க் கண்ணு, கொள்ளிக்கண்ணு என்று நிறைய கண்களைச் சொல்லி, எல்லாம் போக பிரார்த்தனையுடன் திருஷ்டி கழிக்கப் படும்!

துடைப்பத்துடன் பாட்டி அருகில் வந்தால் அச்சம் கொள்ளத் தேவையில்லை – மூன்று முறை உங்களைத் துடைப்பத்தால் சுற்றி, திருஷ்டி கழித்து, அனுப்பி விடுவார் (பாட்டி இந்த நேரத்தில் உங்கள் மீது கோபம் ஏதும் இல்லாமல் இருப்பது மிகவும் அவசியம் – ‘அடி’த்துதிருஷ்டி கழித்துவிடும் பாக்கியம் கிடைத்து விடலாம், உங்களுக்கு!). பின்னர் துடைப்பத்தை நுனியிலிருந்து எரித்து விடுவார்.

கருப்பு உல்லன் கயிற்றில், இரண்டு மிளகாய், ஒரு எலுமிச்சம் பழம், படிகாரக் கல் ஆகியவற்றைக் கட்டித் தொங்க விடுவது ஒரு வகை திருஷ்டி தடுப்புதான்! வீட்டு நிலைப் படி, கடைகளின் வாசல், நாலு சக்கர சிற்றுண்டி வண்டி, கார், லாரி எல்லவற்றிலும் தொங்கும் இந்த கலைடாஸ்கோப் ஊஞ்சல் மிகவும் உயர்ந்தது, விலையிலும்!ஒரு முறை எனக்கு திருஷ்டி என்று வீட்டு வாசலில்இந்த மாதிரி திருஷ்டிக் கயிறு கட்ட ஒருவர் வந்த போது, நிற்காமல் திரும்பத் திரும்ப விழுந்து கொண்டிருந்தது – ‘எவ்வளவு திருஷ்டி உங்களுக்கு’ என்றவரிடம், ஒரு ஸ்டூலைக் கொடுத்து அதன் மேல் ஏறி நின்று கட்டச் சொன்னதும் சரியானது. வந்தவர் குள்ளமாயிருந்தது, என் வீடு கட்டியவரின் குற்றம் அல்ல!

திருஷ்டியைப் போலவே சகுனம் பார்ப்பதுவும் நம் பாரம்பரியப் பெருமை சொல்வது! நாய், பூனை, நரி, காக்கை, கழுதை என எல்லா பிராணிகளுக்கும் இதில் பங்குண்டு. நாய் ஊளையிட்டால் கெடுதல், கழுதை ஊளையிட்டால் (கழுதை ஊளையிடுமா, பாடுவது போல கத்துமா?) நல்லது, பூனை குறுக்கே போனால் – இடமோ, வலமோ – ஒரு பலன் என ஏராளமான நம்பிக்கைகள் – தனி வியாசம்தான் எழுத வேண்டும்! பல்லி விழும் பலன், கண் துடிப்பது, கனவுகளின் பலன்கள் என நீள்கிறது பட்டியல்.

சிறிது யோசித்தால், இவை யாவும் நமது நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை என்று புரியும். மனதை சமாதானம் செய்யும் எதுவும், பிறர் நலன் கெடுக்காத வரையில், நல்லவையே என்று நினைக்கத் தோன்றுகிறது.

இப்போது எஃப் எம்மில் இளையராஜா பாடிக்கொண்டிருக்கிறார் – கண்ணு படப் போகுதைய்யா…..