அட்டைப்படம் – ஆகஸ்ட் 2021

அட்டைப்படம் வடிவமைப்பு: ஸீன்ஸ் 

ஒலிம்பிக்ஸ்

53 பெண்கள் 68 ஆண்கள் என 121 பேர் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக்கில் வரலாற்றில் முதல் முறையாக ஒரு தங்கம், இரு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்து இருக்கிறது இந்தியா.

ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களை வெல்வது இந்தியாவுக்கு இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குவிகம் குறும் புதினப் போட்டி – பரிசு விவரம்

குறும் புதினம் போட்டி முடிவுகள்

 

      குவிகம் குறும் புதினம் போட்டிக்கு எழுபத்துமூன்று படைப்புகள் வந்திருந்தன என்பதை எண்ணிப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.   இது எங்கள் வெற்றி அல்ல. படைப்பாளிகளின் வெற்றி.  கலந்துகொண்ட அனைவருக்கும் எங்கள் நன்றியைத்  தெரிவித்துக்கொள்கிறோம்.

போட்டிக்கு வந்த எல்லாப் படைப்புகளும் ஏதோ ஒருவகையில் சிறப்பாக இருந்தாலும் தேர்வு என்று வரும்போது விடுபடுதல் தவிர்க்க இயலாமல் போய்விடுகிறது.

அதன்படி முதல் கட்டமாக  பிரசுரிப்பதற்குத் தகுதியான  20 குறும் புதினங்களைத் தேர்ந்தெடுத்தோம்.   அதன் விவரங்களை  ஜூலை 15 குவிகம் மின்னிதழிலும், வாட்ஸ்அப் குழுவிலும்  மின்னஞ்சலிலும் வெளியிட்டிருந்தோம்.

அவற்றுள் நான்கு படைப்புகள் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ‘குவிகம் குறும் புதினம்’ இதழ்களில் ஏற்கனவே வெளிவந்துவிட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள்! .

இந்த இருபது படைப்புகளில் முதல் – இரண்டாம் –  மூன்றாம் பரிசுகளுக்குத் தகுதியான குறும் புதினங்களைத் தேர்ந்தெடுக்கும் பணியை திரு பாமா கோபாலன் மற்றும் அவரது துணைவியார் திருமதி வேதா கோபாலன் இருவரிடமும் ஒப்படைத்தோம். 

 

ஆறு லட்சம் திருமண அழைப்பிதழ் | Dinamalar Tamil News

பாமா கோபாலன் அவர்கள் குமுதம் இதழில் பல ஆண்டுகள் நிருபராகப் பணிபுரிந்தவர்.  

வேதா கோபாலன் அவர்கள் குமுதத்தில் 800க்கும் மேற்பட்ட சிறு கதைகளை எழுதியவர்.

20 குறும் புதினங்களையும் பதினைந்தே  நாட்களில் படித்து அலசி ஆராய்ந்து பரிசுபெறத்  தகுதியான 3 குறும் புதினங்களைத் தேர்ந்தெடுத்த இந்த இலக்கியத் தம்பதியருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.  

முதல் பரிசு ஐயாயிரம் ரூபாய்  பெறும் பானுமதி அவர்களையும், இரண்டாம் பரிசு மூன்றாயிரம் ரூபாய்  பெறும் ஆன்சிலா பெர்னாண்டோ அவர்களையும், மூன்றாவது பரிசு இரண்டாயிரம்  ரூபாய் பெறும் மைதிலி சம்பத் அவர்களையும் குவிகம் மனதாரப் பாராட்டுகிறது

மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 17  படைப்பாளிகளுக்கும்  எங்கள் வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம்.

கலந்துகொண்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

முதல் மூன்று பரிசுதவிர பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற  17  புதிய குறும் புதினங்கள் ஒவ்வொன்றுக்கும்   1000 ரூபாய் வழங்கப்படும் .

இவைதவிர கிளாசிகல் வரிசையில் குறும் புதினத்தில் பிரசுரமாகும் ஏற்கனவே விருதுபெற்ற குறும் புதினங்களுக்கு  750 ரூபாய் வழங்கப்படும்.

மொத்தத்தில்  35000 ரூபாய் குவிகம் குறும் புதின எழுத்தாளர்களுக்குப் பரிசில்களாக வழங்கப்படுகிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

குறும் புதினம் பரிசு வழங்கும் விழா விரைவில் ஜூம் மூலம் நடைபெறும்.

அடுத்த ஆண்டிற்கான (2022 – 23) குறும் புதினம் போட்டிபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

 

இதுவரை பிரசுரமானவை 

குறும் புதினம் படைப்பாளி
பத்து பகல் பத்து ராத்திரி முகில் தினகரன்
கட்டை விரல் சுப்ரபாரதிமணியன்
தன்நெஞ்சே வேணுகோபால் SV
பெருமாள் சங்கரநாராயணன் S
வேட்டை செய்யாறு தி.தா நாராயணன்
நினைவழிக்கும்    விழிகள் ந பானுமதி

இனி பிரசுரிக்கப்படவிருப்பவை செப்டம்பர் மாதம்  முதல் மார்ச் 2022  வரை .

(இது அகர வரிசைதான். பிரசுரமாகும் வரிசை அல்ல) 

குறும் புதினம் படைப்பாளி
எத்தனை உயரம் மைதிலி சம்பத்
என்ன  கொடுமை ராமமூர்த்தி S
கண்டு வர வேணுமடி ராய செல்லப்பா
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் லதா ரகுநாதன்
கள்வர் கோமான் புல்லி ஜெயக்குமார் சுந்தரம்
காற்று வந்து என் காதில் சொன்ன கதை தாமோதரன்
சின்னம்மா பெரியம்மா ஆன்சிலா பெர்னாண்டோ
சொல்விழுங்கியும்   பேசாமடந்தையும் பகவத்கீதா பெ
திரை விழுந்தது எஸ் எல் நாணு 
தெரியாத முகம் சதுர்புஜன் G B
நதியிலே புதுப்புனல் அன்னபூரணி தண்டபாணி
நதியின் மடியில்  அனந்த் ரவி
மகன் தந்தைக்கு ஆற்றும்… கௌரி சங்கர்
மீனும் நானும் ஒரு ஜாதி கோரி ஏ ஏ ஹெச் கே

இனி தேர்வாளர்கள் கருத்து:

போட்டிக்கு வந்திருந்த இருபது நாவல்களையும் சந்தோஷமாகப்  படித்தோம். கற்பனை வளம் உள்ள 20 எழுத்தாளர்களையும் மனமாரப்  பாராட்டுகிறோம்.

  • பொழுதுபோக்கிற்காக மட்டுமே நாவல்கள் எழுதப் படுவதில்லை. படிக்கும் வாசகர்களின் மனதில் பாதிப்பு களையும் பின்விளைவுகளையும் உண்டாக்குகின்றன என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான் எழுத வேண்டும்.
  • அந்த பாதிப்புகளும் பின்விளைவுகளும் நேர்மறையாக இருக்க வேண்டும்.
  • குற்றம் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் நியதி. அந்தத் தண்டனை சட்டம் மூலமாகவோ கடவுளின் விருப்பப்படியே இருக்கும். மேலும் கிரைம் கதைகளில் எழுத்தாளர் தரும் முடிவு எல்லோராலும் ஏற்றுக் கொள்வதாக அமைவது நலம். அதாவது எப்படி எல்லாம் தப்பிக்கலாம் என்று சொல்லிக் கொடுப்பது அவசியமற்றது.
  • இயல்பான சமூக வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களில் இருந்து விடுபட நியாயமான வழிகளை சுட்டிக்காட்டுவது நலம்.
  • வர்ணனைகள் ஏராளமாய் இருந்து கதையம்சம் கொஞ்சம் கூட இல்லாதிருந்தால் சுவாரசியம் குறைகிறது என்பது உண்மை.
  • நேர்மையான சுவையான சம்பவங்கள் கதையின் விறுவிறுப்பை கூட்டுவது நிஜம்.
  • என்ன எழுதுகிறோம் என்பது எழுதுபவர்களுக்கும் புரியாமல் வாசகர்களையும் குழப்புவது நியாயம் அல்ல.

இப்படிப்பட்ட சில வரைமுறைகளை கருத்தில் கொண்டு எல்லா நாவல்களையும் இருவரும் படித்தோம்.

ஒரு நாவலில் கடைசிப் பாராவில் எழுத்தாளர் “இக்கதை உண்மை நிகழ்ச்சிகள். மொழிபெயர்த்திருக்கிறேன்” என்கிற ரீதியில் முடித்திருக்கிறார். அவரது நேர்மையைப் பாராட்டலாம்.

இறுதியில் மிகுந்த விவாதத்துக்கு பிறகு எங்கள் கோணங்களில் தேர்வு செய்யப்பட்ட மூன்று நாவல்கள் பின்வருமாறு:

  1. நினைவழிக்கும் விழிகள் – ந பானுமதி
  2. சின்னம்மா பெரியம்மா- ஆன்ஸிலா ஃபெர்னாண்டோ
  3. எத்தனை உயரம்- மைதிலி சம்பத்

முதல் பரிசு நாவலில் கத்திமேல் நடந்திருக்கிறார் எழுத்தாளர்

இரண்டாம் பரிசு நாவலின் யுக்தி பிரமாதம்

மூன்றாம் பரிசு நாவல் மிகவும் இயல்பான பிரச்சினையை அழகாகச் சொல்கிறது

இக் குறுநாவல்களைப் படிக்கும் வாய்ப்பை தந்த குவிகம் அமைப்புக்கு மனமார்ந்த நன்றி.

பிரியங்களுடன்

பாமா கோபாலன்

வேதா கோபாலன்

 

உலக இதிகாசங்கள் – எஸ் எஸ்

otava heikkilä on Twitter: "Gilgamesh and Enkidu for the force of nature @BasaltBrain whose birthday it is today 🐐❤️👑 the cuneiform (should) read tappû-ia, libbu-ia, my fellow, my heart!… https://t.co/R84cNyezAD"

செடார் வனக்  காவல் தலைவன் ஹம்பாபாவையும் சொர்க்கத்திலிருந்து வந்த எருதையும் அனாயாசமாகக் கொன்ற கில் காமேஷ் மற்றும் எங்கிடு இருவரின் புகழ் மண்ணுலகிலும் விண்ணுலகிலும் பாடப்பட்டன.

கில்காமேஷ் மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்தான்.

அப்போது எங்கிடு அவனிடம் வந்து,

“நண்பா, நேற்று நான் ஒரு கனவு கண்டேன். உனக்குத்தான் தெரியுமே நம்  கனவுகள் அத்தனையும் நனவாகிக் கொண்டிருக்கின்றன என்று.  ஆனால் இது சற்று பயங்கரமான கனவு.

ஹம்பாபாவையும் சொர்க்கத்தின் எருதையும் கொன்ற நாம் இருவரில் ஒருவர் சாகவேண்டும் என்று அணு, காமேஷ் மற்றும் அனைத்து தேவர்களும் முடிவுசெய்துவிட்டார்கள். அதுதான் நியாயமான தண்டனை என்று அவர்கள் ஏகமானதாகக் கூறியதைக் கேட்டேன்.

சூரியதேவன் காமேஷ் நமக்காகப் பரிந்து பேசினாலும் என்வில் மிகவும் தீவிரமாக இருந்தார். முடிவில் சாகவேண்டியது நான்தான் என்பதையும் தீர்மானித்துவிட்டார்கள்” என்று சோகத்துடன் கூறினான் எங்கிடு.

அதைக் கேட்ட கில்காமேஷ் துக்கத்தின்  எல்லைக்கே  சென்றான். எங்கிடுவிற்கு மரணம் என்பதை அவனால் நினைத்தும் பார்க்க முடியவில்லை.

“நண்பா! இன்னும் சில நாட்களில் சாவு என்று கொடிய அரக்கன் என்னை உன்னிடமிருந்து பிரித்துவிடுவான்! சாவைப் பற்றிக் கவலை இல்லை! ஆனால் உன்னைவிட்டுப் பிரிவதுதான் எனக்கு மிகவும் துன்பமாக இருக்கிறது ” என்று எங்கிடு கூறினான்.

அவன் கண்ட  கனவு நிஜமாவது போல எங்கிடு உடல்நலம் குன்றி படுக்கையில்  விழுந்தான். ஜுர ஜன்னியில் சாவுத்தேவனை மனம் கொண்ட வரைக்கும் திட்டித் தீர்த்தான்.

“அடே! சாவுத் தேவா! செடார் காட்டை அழிக்கும்போது உன் இருப்பிடத்தைக்  கண்டேன். உன் கோட்டையின் பிரும்மாண்டமான  மரக் கதவை கில்காமேஷுக்கும் காட்டினேன்.  அப்பொழுதே அந்தக் கதவை உடைத்துத் தூள் தூளாக  ஆக்கியிருக்கவேண்டும். அதைச் செய்யத்  தவறிய காரணத்தால் இப்போது என்னைக் கொல்லத் துணிந்துவிட்டாய்.  பிற்காலத்தில்  எவனாவது ஒருவன் அந்த மரக்  கதவை உடைத்து சாவுத் தேவனான உன்னையும் வெற்றி கொள்வான். இப்போது என்னால் ஒன்றும் செய்ய இயலாவில்லையே” என்று அரற்றினான்.

மிருகமாக இருந்த தன்னை மனிதனாக்கிய வேட்டைக்காரர்களையும் அந்த விலை மாதையும் மனம் போனபடி திட்டினான். பின்னர் மனம்  மாறி   அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தரும்படி சூரியக் கடவுள் காமேஷிடம் வேண்டிக்கொண்டான்.

அவன் குரல் ஒடுங்க ஆரம்பித்தது. அவன் கண்ட கனவின் மறுபாகத்தையும் கில் காமெஷிடம் மெல்ல நெஞ்சம் துடிதுடிக்கக் கூறினான்.

” நண்பா! ஒரு அதி பயங்கரமான உருவம்  வானத்துக்கும் பூமிக்கும் மத்தியில் இருந்து என்னைப் பார்த்துக் கர்ஜிக்கிறது. ரத்தக் காட்டெறி போன்ற முகம். சிங்கத்தின் பாதங்கள். வல்லூரின் கூறிய  நகங்கள் போன்ற கரங்கள். அவற்றைப்  பார்த்த என்  உடல் நடுங்கியது.அவன் என்  தலை முடியைப் பிடித்துக் கொண்டான்.    என்னை இருட்டுத் தேவியின் அறைக்கு இழுத்துச் சென்றான்.  உனக்குத் தெரியுமே! அந்தப் பாதைக்குள் சென்றவன் மீண்டு வரமுடியாது என்று.

அந்த இருட்டு மாளிகை  ஒரு கொடிய நரகம். அங்கே வெளிச்சம் கிடையாது. அங்கே வசிப்பவர்கள் உணவுக்குப் பதிலாக களிமண்ணைத் தின்கிறார்கள். மன்னர்களாகவும் பிரபுக்களாகவும் இருந்தவர்கள் அங்கே வேலைக்காரர்களைப் போல ஏவல் செய்கிறார்கள். பாதாளதேவியின் ராணி அங்கிருந்தாள். அவளது உதவியாளன்  ஒருவன் கையில் இருந்த ஏட்டுப் புத்தகங்களைப் பார்த்து   அங்கு அழைத்து வரப் படும் மனிதர்களின் கதியை தீர்மானிக்கிறான். அவன் என்னைப் பார்த்து ஏட்டைப் புரட்டுவதை என்  கனவில் கண்டேன் நண்பா! ” என்று எங்கிடு புலம்பினான்.

கில் காமேஷ் மிகவும் துடி துடித்துப் போய்விட்டான். “துக்கமான கனவு கண்ட என்   நண்பன் எங்கிடுவைக் காப்பாற்ற கடவுள்களிடம் முறையிடப் போகிறேன்”  என்று கண்ணீருக்கிடையே கூறினான்.

இரவும் பகலுமாக  எங்கிடுவின் அருகிலேயே இருந்து அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தான் கில்காமேஷ்.  ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல. பதினொரு நாட்கள். ஆனால்  எங்கிடுவின் நிலைமை மிகவும்  மோசமடைந்தது .

” நண்பா!போர்க்களத்தில் மடிந்திருந்தால் எனக்கு புகழாவது கிட்டியிருக்கும். இப்படி நோய்ப் படுக்கையில் வீழ்த்தி என்னை அணு அணுவாக சித்தரவதை செய்து கொல்கிறானே!  உன்னைப் பிரியும் வெளி வந்துவிட்டதே நண்பா!” என்று கூறிக் கொண்டே கண்களை மூடினான் எங்கிடு.

தன் உடம்பின் பெரும் சக்தி தன்னைவிட்டுப் போனதைப் போல உணர்ந்தான் கில் காமேஷ்.

தன் உயிருக்கு உயிரான நண்பனின் மரணத்தை தன் துக்கத்தை தன் இதயத்தின்  தவிப்பை நீண்ட கவிதையாக மக்கள் மத்தியில் கூறினான்.

Experts' View: Enkidu's Death - Annenberg Learner

என ஆருயிருனும் இனிய நண்பன் எங்கிடு!

அவனுக்காக  என் குரலை எழுப்பி

நான் அழுகிறேன் துக்கப்படுகிறேன்.

என சகோதரனே எங்கிடு

என்னை ஏன் விட்டுப் போய்விட்டாய்?

என்  விதி என்னை வஞ்சித்துவிட்டது

உன் இழப்பால்  நான் செய்யலற்றவனாகி  விட்டேன்

காட்டில் உன்னை வளர்த்த மிருகங்கள்

உன்னை எண்ணித் துக்கிக்கின்றன.

செடார் வனத்துப் பாதைகள் கூட

உனக்காக வருந்துகின்றன.

துக்கம் துக்கம் இதற்கு இணையாக

எந்தத் துக்கத்தைச்  சொல்வது  ?

தேசம் பூராவும்  அழுகையின்  குரல்

உனக்காக எதிரொலிப்பது

உன் காதில் விழுகிறதா?

ஒரு தாய் மகனுக்காக அழுவதைப் போல

ஊரே உனக்காக அழுகிறது

நாம் வேட்டை ஆடிய மிருகங்களும்

உனக்காகக் கண்ணீர் வடிக்கிறது

நம் யூபிரடிஸ் நதியின் தண்ணீரும்

உனக்காக அழுகின்றன.

எருதைக்  கொன்ற நம் வீரத்தைப் புகழ்ந்த

வாலிப வீரர்களும் உனக்காக அழுகிறார்கள்

உன்னுடன் காதல் புரிந்த பெண்ணழகி

உனக்காகத் துக்கிக்கிறாள்

உன்னை நேசித்த தேசத்து மக்கள் அனைவரும்

கண்ணீர் வடித்துக் கதறுகிறார்கள்!

நீ அழியாத தூக்கம் தூங்குகிறாயே !

எழுந்திருக்கமாட்டாமல் படுத்துக் கிடக்கிறாயே

என சொல் உன் காதில் விழவில்லையே

என்ன செய்வேன் என்  உயிர் போன்ற

என் நண்பனே ! தோழனே எங்கிடு! “

 

நண்பன் எங்கிடுவிற்காக ஏழு நாட்கள் துக்கம் அனுஷ்டித்தான் கில் காமேஷ். அவனுக்காக , தன் கேசத்தை வெட்டாமல் நீளமமாக வளர்க்க உறுதி கொண்டான். அதுமட்டுமல்லாமல் சிங்கத்தின்  தோலையே உடையாக அணிந்துகொண்டு காடுகளில் எல்லாம் சுற்றவும் சபதம் எடுத்துக் கொண்டான்.

அதற்கு முன் தன் தேசத்தில் இருந்த அனைத்து தங்க வேலை இரும்பு வேலை மர  வேலை செம்பு வேலை செய்யும் அத்தனை பேரையும் அழைத்து எங்கிடுவிற்காக ஒரு மிகச் சிறந்த உருவச்  சிலையைச் செய்யும்படி உத்தரவிட்டான். தங்கத்தினால் ஆன எங்கிடுவின் உருவச்  சிலையின்  மார்பில் மணிகளை இழைத்தார்கள்.  ஒரு அரிய மரத்தினால் ஆன மேடை செய்து அருகில் மரகத்தில் செய்த கிண்ணத்தில் மதுவும் நீல மணிக் குப்பியில் வெண்ணையும் வைத்து எங்கிடுவின் உருவாக்க சிலையை சூரியதேவனுக்கு பலியாக அளித்தான் ஊருக் நகரின் மன்னன் கில்காமேஷ் !

எங்கிடுவின் புகழ் 5000 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றும் நிலைத்து நிற்கிறது  

 

தொடரும்

நன்றி: க நா சு வின் கில்காமேஷ் 

வ வே சு அவர்களின் பாஞ்சாலி சபதம் தொடர் சொற்பொழிவு – ஆர் கே, டாக்டர் பாஸ்கரன், தென்காசி கணேசன்

நம் மகாகவி பாரதி, ஒரு “பா”வ(ல்)லன், மற்றும் ஒரு பாமரன்…!

முண்டாசுக் கவிஞனை
கொண்டாடாதார் யாருளர்
இப்பாரில்?

ஒப்பார் யார்க்கும்
குறைந்தபட்சம்
ஒரு காததூரமேனும்
தம் கவித்திறத்தால்
அப்பால் நிற்பார் பார்
நம் பாரதி.!

நம் பாரதி
தமிழன்னை
கம்பீரப் பவனிவரும்
மொழித்தேரின் சாரதி!

எமக்குத் தொழில் கவிதை
நாட்டுக்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்
என கவிதை ஒளிபடைத்த கண்ணன்.
“பண்”பாட்டுடை படைத்தலைவன்.

துழாவத் துழாவ
கவிதை தொட்டனைத்தூறும்
பாரதிக்கு தரணியெலாம்
விழா விழாவாய் எடுத்தாலும்
இன்னும் இன்னுமென
விழாவெடுக்க
சிவசக்தி சொல்லிடும்
அந்தச் சுடர்மிகும் அறிஞனைச்
சுட்டிக் காட்டி!

அப்படித்தான் அக்கவிக்கு
அக்கறையாய் ஒரு
விழா என்ற இரண்டெழுத்திற்கு
முனைப்பெடுத்த
குவிகம் என்ற நான்கெழுத்து
தேர்ந்தெடுத்து
முன்னிறுத்திய
முனைவர் வ வே சு மூன்றெழுத்து.

பொன் கிடைத்தாலும் கிடைக்காத
புதன் மூன்றெழுத்து.
வாரம் மூன்றெழுத்து.
நேரம் மூன்றெழுத்து
ஆறரை மூன்றெழுத்து
அட!
பாரதியை கவிதையை
ரசனையுற திளைத்து சுவைத்த
வவேசு
அவருக்கும்
மூன்றெழுத்து.

எடுத்தது கண்டனர்
இற்றது கேட்டனர்
அது ராமாயண சுயம்வரம்.

வவேசு வந்தார் ஆறரைக்கு.
பாஞ்சாலி சபத பாரதியை
எடுத்தார் தொடுத்தார் உரையை.
மூச்சுவிட மறந்து
பேச்சில் மயங்கியது
ஒரு ஜூம் கூட்டம்.
கவிஒளி, பொருள் உன்னதம், மொழியழகு
மூன்றும் கூட்டி அற்புதமாய்
ஒரு முத்துமாலை கட்டிவைத்தார்
பத்து வார பயணத்தில்.

சகுனி சதிக்கு ஒரு குரல்
தர்மனின் கையறுநிலைக்கு
ஒரு”பா”வம்.
துரியனுக்கு ஒரு சாடல்
பாஞ்சாலி நிலைக்கு ஒரு மனக்கலக்கம்.
கவிதை சொன்ன விதம்
கனன்று பொழிந்த நடை
நமக்குள் கடத்திய கவியுணர்வு
வவேசு நிகழ்த்திக்காட்டியது
பாரதிக்கு,
அந்த பாஞ்சாலி சபதத்திற்கு
ஒரு சரியான ஜதிபல்லக்கு.

மகுடி கேட்ட நாகம்போல
மழலை கேட்ட தாலாட்டுபோல
மதுவுண்ட மந்திபோல
மயங்கி கிறங்கி கிடந்தார்
சனமெல்லாம்.
அத்தனை செவிகளிலும்
இன்பத்தேன் வந்து
பாய்ந்தது.
அத்தனை சொட்டுமே
மனதுக்கு இனிமை சேர்த்தது.
எத்தனைகோடி இன்பம்
இதில் வைத்தாய் எம் இறைவா!

கண்டவர் கேட்டவர் பாக்கியர்கள்.

பாக்கி நான் என உணர்கிறீர்களா
என் போல் பாமரனாய் நீங்கள்?

பாரதியின் பாட்டுரைத்து
பரிவுடன் எம்கரம்பிடித்து
பாஞ்சாலி சபத அவைக்கு
கரம்பிடித்தழைத்துச் சென்ற
“பா”வல்லன் வவேசு
அடுத்த வார புதன்
“அவர்” பாட்டுக்கு
கண்ணன் பாட்டெடுத்து வருகிறார் .
யாவரும் “கேளீர்”!
அவசியம் வாரீர்.!!
அறிவிப்பு வரும் பாரீர்…!

=========================================

டாக்டர் பாஸ்கரன் அவர்கள் முகநூலில்: 

இப்போதெல்லாம் இலக்கியத் தொடர் சொற்பொழிவுகள் அரிதாகவே நடைபெறுகின்றன – திருமுருக கிருபானந்த வாரியார், புலவர் கீரன் போன்றவர்களின் ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவுகள், அந்தப் பணியினைப் புதிய பாணியில் அமைத்து எல்லோரையும் கவர்ந்திழுத்தார்கள். சமீபத்தில், குவிகம் இலக்கிய வாசல் சார்பில் மகாகவி பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’, தொடர் நிகழ்வாக பத்து வாரங்கள் நடைபெற்றது. சொற்பொழிவாற்றி, பாரதியின் உணர்வுகளோடு கேட்பபவர்களைக் கட்டிப்போட்டு, பாஞ்சாலி சபதத்தை மிகச் சிறப்பாக நடத்திச் சென்றவர் முனைவர் வ.வே.சு. அவர்கள்!

பிரம ஸ்துதியில் தொடங்கி (நொண்டிச் சிந்து), அழைப்புச் சருக்கம், சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதற் சருக்கம், சபதச் சருக்கம் என முக்கியமான பாடல்களைக் கோர்வையாக, வாசித்து, பொருள் கூறி அருமையான விளக்கங்களுடன் பேசிய வ.வே.சு. அவர்கள், பாத்திரங்கள் பேசுவதை ஏற்ற இறக்கங்களுடன் வாசித்தது சிறப்பு. மகாகவி கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையை – திரிதராட்டிரன், விதுரன், சகுனி, தருமன், அருச்சுனன், வீமன், கர்ணன், துரியோதனன், திரெளபதி, துச்சாதனன், விகர்ணன் பாத்திரங்களாகவே மாறி எழுதுகின்ற வித்தையை – வ.வே.சு. அவர்களும் தன் சொற்பொழிவினூடே செய்தது வியப்பு!

வீமன் சபதம், அர்ச்சுனன் சபதம், திரெளபதி சபதம் என பாடல்களைப், பதம் பிரித்து, பொருள் சொல்லும் முன் அந்தந்தப் பாத்திரங்களாகவே மாறி உணர்ச்சிப் பிழம்பாகப் பாடல்களை வாசித்த விதம், கண் முன் முண்டாசுக் கவிஞனைக் கொண்டு வந்து நிறுத்தியது.

எங்கெங்கே பாரதி தன் குரலில் ஒலிக்கின்றான் (இறை வணக்கம், பாத்திரங்களின் குணநலன்கள், இயற்கையை வருணித்தல், கண்ணனின் புகழ் பாடுதல், இடையே ‘ஜெய ஜெய பாரத சக்தி, பராசக்தி’யை அழைத்தல்) என்பதை சுட்டிக்காட்டினார். வியாச பாரதத்தில் இல்லாதவற்றை எப்படி பாரதி தன் பாஞ்சாலி சபதத்தில், பாத்திரங்களின் மனநிலைக்கேற்றவாறு எழுதுகின்றான் – திருக்குறள், கம்பராமாயணம் போன்றவற்றிலிருந்து மேற்கோள்கள் என ஓர் இலக்கியப் பேருரையாக மாற்றிய வ .வே.சு. வணக்கத்திற்கும், போற்றுதலுக்கும் உரியவர்.

“மகாகவி பாரதியின் மந்திரச் சொற்கள்” என்ற தலைப்பு மிகவும் பொருத்தமானதுதான் – மந்திரத்தால் கட்டுண்டுதான் கிடந்தோம் ஒவ்வொரு வாரமும்.

பாரதியை எல்லோரும் வாசிக்க வேண்டும். மேற்கோள் காட்டுவதற்கு மட்டுமல்ல – ஆழ்ந்து வாசித்து, அவனை அறிந்து, நல்ல தமிழை அவன் கவிதைகளின் மூலம் சுவாசிக்கவும் வேண்டும்.

வ வே சு அவர்களுக்கும், குவிகம் இலக்கிய வாசலுக்கும் ஓர் வேண்டுகோள்! பாஞ்சாலி சபதம் சொற்பொழிவுகளை ஒரு மின் புத்தகமாகக் கொண்டு வருதல் வேண்டும்! காலத்திற்கும், எல்லோருக்கும் பயனளிக்கும் என்பது என் எண்ணம்!

(தொடர் சொற்பொழிவின் காணொளிகளின் தொகுப்பு (play list): https://bit.ly/2Tm5Bs

==========================================

 

டாக்டர் தென்காசி கணேசன்

குவிகம், இணையம் வழியாக நடத்திய மஹாகவியின் மந்திரச் சொற்கள் – சிறு கண்ணோட்டம்

(முனைவர் தென்காசி கணேசன் – சென்னை 92 )
பாரதி
உன்னைப் பற்றி என்ன சொல்ல? எந்த விதத்திலும் வசதிகள் இல்லாத ஒரு சூழ்நிலையில் – வருமானம் இல்லை, ஆங்கில அரசின் எதிர்ப்பாளர் என்ற முத்திரை, சொந்தங்களும் பந்தங்களும் உதறிய நிலை, எப்போதும் பின் தொடரும் ஒற்றர்களும், போலீசும் ; பரிதவித்துக் கொண்டிருக்கும் மனைவியும் குடும்பமும் – இத்தனைக்கும் நடுவில் உன்னால் எப்படி தேசத்தை மட்டுமே சிந்திக்க முடிந்தது? கவிதைகளும் கட்டுரைகளும், எழுதிக் குவிக்க முடிந்தது? எப்படி சந்தோஷமாக – ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்றும், எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் என்றும் குதூகலிக்க முடிந்தது.?
தாமிரபரணி தந்த தங்கக் கவியே – உன் கவிதைகள் அதிசயம் என்றால் நீயே ஒரு அதிசயம் தான். அதனால் தான் நீ கூறிய வார்த்தைகள் எல்லாம் மந்திரச் சொற்கள் ஆயின. எங்கள் மனதில் இருத்தி, எங்களை மயங்கவும் வைத்தன.
நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் –
இது உலக நீதி
பாரதியே – உன் நினைவு இருந்தால்தான்
எங்களுக்கே நெஞ்சே இருக்கும் !
குவிகம்
உங்களின் பல்வேறு தொடர் சேவைகளில், முத்தாய்ப்பானது இந்த நிகழ்வு என்பதே உண்மை. மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.
பேராசிரியர் முனைவர் வ வே சு
சிலர் பேசினால் நிமிடங்கள் கூட மணியாகத் தோன்றும்
நீங்கள் பேசினால், மணி கூட நிமிடமாக மாறுகிறதே.
சுந்தரத்தமிழின் தந்திரம் அறிந்தவன் நீ –
தன் திறமும் தெரிந்தவன் நீ – அதனால் தான் உனது வாயிலிருந்து வரும் வார்த்தைகள், குற்றால அருவியாக வற்றாமல் கொட்டுகின்றது. வாழ்க !
பாஞ்சாலி சபதம்
முனைவர் வ வே சு அவர்கள் 10 வாரமாக, ஒரு யாகம் போல இந்த சொற்பொழிவை தந்தார்கள். நேரம் போனதே தெரியவில்லை. முடிகின்றதே – அடுத்த புதன் எப்போது வரும் என்றே மனம் எண்ணியது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பது மாற்றி பொன்னான பாஞ்சாலி சபத வீச்சு, எங்களுக்கு ஒவ்வொரு புதன் அன்றும் கிடைத்தது.
வடமொழியில் வியாசர் – தமிழில் பாரதி – எந்த இடத்தில் அப்படியே எடுத்து ஆள்கிறார் – எந்த இடத்தில் வேறுபடுகிறார் என்பதை எல்லாம் விளக்கமாக தந்தார். (வியாசர் த்ருதராஷ்டிரனை தீயவனாக பார்க்க, பாரதி கொஞ்சம் அன்பு காட்டுகிறான் – வியாசரிடம் பாஞ்சாலி சிரித்ததாக இல்லை.- அதேபோல தர்மன் பாஞ்சாலியை வைத்து ஆடியது என இரண்டிற்கான ஒப்பீடுகள்) அத்துடன், பாரதிக்கு இன்னொரு agenda வும் உண்டு – இந்த தேசத்தின் விடுதலை – அவர் சகுனி மற்றும் கௌரவக் கூட்டத்தை , ஆங்கில அரசாகவே நினைக்கிறார். பாரதி எந்த மனோ நிலையில், வேகத்தில் பாடி இருப்பானோ, அந்த உணர்வை வ வே சு தந்தது இந்த தொடரின் வெற்றிக்கு ஒரு காரணம்.
அதேபோல் பல புதிய அறியாத செய்திகள் –
• மன்னும் இமயமலை வரியில், மன்னும் என்ற சொல்லுக்கான விளக்கம் – எப்போதும் நிலைத்திருக்கும் (மன்னுபுகழ் கோசலை என உதாரணத்தை சொன்னது)
• ஆரிய என்ற வார்த்தைக்கு சிறந்தவர் என்று அர்த்தம் ( ஆரிய திராவிட இந்த புலம்பல் எல்லாம் இல்லை )
• சோரன் – அவ்வெது குலத்தான் என்பதற்கு -யதுகுலத் திருடன் கண்ணன் என்று
• இகல்- இதழ் வேறுபாடு – அதன் அர்த்தம் திரிபு
• சவுரியம் தவறேல் என்பதன் அர்த்தம் (வீரம்)
• வவ்வுதல் நீக்கு – திருடுதல்
• விகர்ணன் – நூறு அயோக்கியர்களில் ஒரு நல்லவன்
• வீரம் சாகும்போது சாத்திரமும், சாகிறது
இப்படி எழுதிக் கொண்டே போகலாம் .
சூதாட்டச் சருக்கம் இரண்டு வாரமும், திகில் படம் பார்ப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்தியது வ வே சு வின் சிறப்பு.
நிறைவாக இரண்டு சொன்னார் –
வேதம் புதுமை செய் என்றான் பாரதி. அப்படி என்றால் , அதை மீட்டெடு – பின்பற்று என்கிறான் தவிர மாற்று என்று கூறவில்லை.
(நாவினில் வேதம் உடையவள் எங்கள் தாய் என்றும் வேதம் நிறைந்த தமிழ்நாடு என்றும் கூறுகிறான் – யாருடைய மண் என்ற ஐயமே வேண்டாம் என்கிறான் முண்டாசுக் கவிஞன் )
வியாசனிடம் இல்லாதது எட்டயபுரத்தானிடம் இருக்கிறது – அவனிடம் இருந்து வந்தது ஆவணம்
இவனிடம் இருந்து வந்தது ஆவேசம் –
இது தான் வித்தியாசம் என்றது அருமை
எப்படியோ – பாரதியையும் பாஞ்சாலி சபதத்தையும் மீண்டும் வாசிக்க வைத்த குவிகத்திற்கும் , முனைவர் வ வே சு அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இரு கவிதைகள் – பானுமதி.ந

       சிறகோசை

திருமதி பக்கங்கள்: சிட்டுக்கள்! சின்னச் சிட்டுக்கள்!

சிறு குழந்தையின் கைப் பிடியில்

அடங்கிவிடும் அளவுதான்

ஆனாலும் அதைக் கேட்டு நீ

செய்கிற வம்புகள் சுவையானவை

கூர் அலகைத்

தீட்டி ஓமப்பொடித் தூவலுக்காய்

நீ கரைந்ததில் தொடங்கிய ஸ்னேகம்

கை வேலையாய் இருக்கிறேன் பொறு

என்றால் ஒன்றரைக் கண்களால்

துழாவும் அபாரம்

உன் குழுவுடன் சமயங்களில்

வந்து விடுகிறாய்

எங்கே வைத்திருக்கிறேன் எவ்வளவு

என்பதெல்லாம் நீ அறிவாய் எனவும் நான்

அறிவேன். வீட்டிலும் செய்யவில்லை

கொரோனாவால் கடைகளுமில்லை

என்ற போது ரோஷப்பட்டு பறந்து போகிறாய்

காலி டப்பாவில் உன் சிறகோசையை

பார்த்தவாறு இருக்கிறேன்.

      

சிதறல் 

என்னிடம் சொன்னார் அம்மா!

கவனமிருக்கட்டும்

காய் சிதறித் தெறிக்க வேண்டும்

உன் காரியங்கள் தடைகளைத்

தாண்ட அதுதான் நல்வழி

நாலைந்து சிறார்கள்

என் கைகளைப் பார்த்து

பின்னர் கண்களையும்

அவசரமாக முகங்களைத் தாழ்த்தி

கால்களைப் பரப்பி முதுகுகள் வளைத்து

கைகள் தயாராக

முழுதாய்க் கொடுத்து விட்டேன்

அம்மாவிடம் பொய் சொல்லலாமா?

ஆண்டவனிடம் தவணை கேட்கலாமா?

 

திரை வாழ்க்கை ரசனை 9 – சில நேரங்களில் சில மனிதர்கள் – எஸ் வி வேணுகோபாலன்  

Sila Nerangalil Sila Manithargal (1975) - IMDb

Mediacorp Vasantham on Twitter: "Catch Sila Nerangalil Sila Manithargal starring Lakshmi, Sreekanth and Nagesh at 12pm, only on #vasanthamTV… "

ளவயதில் இருந்தே திரைப்படங்கள் மீது எப்படி ஈர்ப்பு வந்தது என்பதைத் தனியே எழுத வேண்டும். குழந்தைகளை சினிமாவிற்கு அழைத்துச் செல்லும் அன்பு உறவுகள் இருந்த ஒரு காலம் இருக்கவே செய்தது. அப்பா அழைத்துச் செல்வது போல் வராது, என்ன இருந்தாலும் ! 

கொஞ்சம் கண்டிப்பும், அன்பும் இடையறாது சமன் செய்து பேணி வளர்க்கும் ஒரு தந்தை, தம் குழந்தைகளைத் திரைப்படத்திற்கு, சர்க்கஸ் காட்சிகளுக்கு, இசை நடன நிகழ்வுகளுக்கு அழைத்துச் செல்வது ஒரு திருவிழாவுக்குப் போவது போலவே இருக்கும்.  அப்படியான அன்புத் தகப்பனை அண்மையில் இழந்த போது, அவருடன் எனக்கே எனக்கானதருணங்களாக வாய்த்த பொழுதுகள் ஓர் ஒளிப்படம் போல் மனக்கண் மூலம் வந்து போனதில், திரைப்படங்கள் சிலது தட்டுப்பட்டது. குடும்பம் மொத்தத்தையும்தான் அழைத்துப் போவார் அப்பா. தேர்வு செய்து தான் அதுவும். ஆனால், சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்கு அவர்தான் அழைத்துப் போனார் என்பது இன்னமும் எனக்கு விளங்காத புதிரானது. பதின்ம வயதுகளில் இருந்த நான், படம் முடிந்தபின் அவரை நேரே பார்க்க சிறிது சங்கடப்பட்டது இன்னமும் பளிச்சென்று நினைவில் நிற்கிறது – அப்பாவுக்கு வயது 50 அப்போது. படம், வேலூர் நேஷனல் தியேட்டரில் பார்த்தது.  

அதற்குப் பிறகு ஒரு முறை கூட வேறு எங்கும், தொலைக்காட்சியிலோ, யூ டியூபிலோ கூடப் பார்க்காத அந்த அருமையான கருப்பு வெள்ளைப் படத்தின் பல முக்கிய காட்சிகள், சாட்டையடி வசனங்கள், பாடல்களுக்கான காட்சிகள், உறைந்து போய் நின்ற இடங்கள், குமுறிக் குமுறி அழத் தூண்டிய தருணங்கள், அதிர்ந்து போய் வெளியேறிய கடைசிக் காட்சி என எப்படி இந்தப் படம் இன்னமும் நினைவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது புரியவில்லை. இப்போது மீண்டும் பார்த்தேன்.

வரிசை படங்களின் மூலம் அறிந்து வைத்திருந்த பீம்சிங் அவர்கள் இயக்கியதா என்ற கேள்வி முதல் அதிர்ச்சி எதிர்வினை. அசாத்திய காட்சி தொகுப்பில், அசாதாரணமான கருப்பொருளை ரசிகர்களுக்கு இப்படி கடத்தி விட எப்படி முடிந்தது என்பது அடுத்த அதிர்ச்சிக் கேள்வி.  கிட்டத்தட்ட எல்லா பாத்திரங்களும் அத்தனை  தன்னியல்பாக நடிக்க வைத்த மேஜிக் எப்படி நிகழ்ந்தது, இது மூன்றாவது வியப்பு. கதையின் போக்கில் கதாசிரியரும் கதைக்குள்ளேயே கலந்தும் விலகியும் உடன் வந்தும், ஒரு கட்டத்தில் வர இயலாமல் தவிப்பதும், அவரது பாத்திரத்தால் அவரே கவிழ்க்கப்படுவதும் நான்காவது வியப்பு. இரண்டே பாடல்கள், என்றென்றும் பேசப்படும் கேட்கப்படும் பாடல்கள். படத்தில் பின்னணி இசைக்கு மிக முக்கிய பங்கு, இன்னொரு பாத்திரமாகவே ! முக்கியமான பெரு வியப்பு, ஒரு சிறுகதையின் முதல் வரியை, அப்படியே படத்தின் முதல் காட்சியாகப் படைத்தளித்தது. ஜெயகாந்தன் எனும் எழுத்துச் சிற்பியை எண்ணியெண்ணி அசந்து போய் நிற்க வைக்கும் திரைக்கதை.

படத்தின் நாயகி பாத்திரத்திற்கு லட்சுமியை, இயக்குநர் கே பாலச்சந்தர் தான் பரிந்துரைத்தார் என்று விக்கிபீடியாவில் ஒரு குறிப்பு இருக்கிறது.  மரத்தை மறைக்காமல், மரத்தில் மறையாமல் வரும் மாமத யானை நடிகை லட்சுமி!  லட்சுமி அல்ல அவர், ஜெயகாந்தனின் கங்கா தான். உணர்ச்சிகளின் எத்தனை வண்ணங்கள் உண்டோ அத்தனையும் ஒரே கதாபாத்திரத்தில் அவருக்கு இப்படி வாய்த்திருக்குமா தெரியவில்லை, சொற்கள் போதாதுபிச்சி உதறி இருப்பார் லட்சுமி. விருதுகள் கிடைத்ததில்  வியப்பு இல்லை. 

ஆனால், படத்தின் நடிப்புக்காக சுந்தரிபாய்க்கு உள்ளபடியே மிகப் பெரிய மரியாதை செய்யப்பட்டிருக்க வேண்டும். நடுத்தர வயது கடக்கும் பருவத்தில், எல்லோருக்கும் சேவை செய்யவும், தனக்குள் மட்டுமே கதறி அழுது கொள்ளவும், யாரையும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டாது தான் மட்டும் எல்லோருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய ஒரு கைம்பெண் பாத்திரம். அந்தப் பேசும் கண்கள், வெறிக்கும் பார்வை, துடித்தது துடித்தபடி இருந்தாலும் எப்போதாவது மட்டும் பேச அனுமதி பெற்றுக் கொள்ளும் உதடுகள்……கனகம், ஓர் அற்புதப் பாத்திரப்படைப்பு, சுந்தரி பாய், கனகமாகவே வாழ்ந்திருப்பார். அப்புறம், ஒய் ஜி பார்த்தசாரதி, கதைக்காகச் செதுக்கிச் செய்த உடல் மொழியும், முக பாவங்களும், அசட்டு சிரிப்பும், சாதுரியமான அத்து மீறலும், அடிவாங்கியதும் அடக்க ஒடுக்கமாக வெளியேறுதலும் சிறப்பாகக் கொண்டு வந்திருப்பார்.

 திரடியாக மழை பெய்து கொண்டிருக்கும் ஒரு மாலை நேரத்தில் வீடு திரும்ப பேருந்து நிறுத்தம் ஒன்றில் காத்திருக்கிறாள் கங்கா.  குடை கூட இல்லை. ஒதுங்க இடமில்லை. மற்றவர்கள் அவரவர் பேருந்து வர வர புறப்பட்டுப் போய்விட ஒற்றை ஆளாக உடலைக் குறுக்கிப் பாட புத்தகங்களை அணைத்துக் கொண்டு செய்வதறியாது அவள் நிற்கையில் கடந்து போகும் கார், ஒரு வளைவு எடுத்துக் கொண்டு அவளருகே வந்து நிற்கிறது. சன்னமாக மறுக்கும் அவளை சமாதானம் செய்து காரில் ஏற வைத்துவிடுகிறது வெளியே விடாது அடிக்கும் மழையும், வராது போகும் பேருந்தும். எதிர் முனை பேருந்து நிறுத்தத்தில் குடையோடு பேருந்துக்குக்  காத்திருக்கும் அதே கல்லூரியின் நூலகர் – எழுத்தாளர் ஆர் கே வி எனும் விஸ்வநாதன் பார்க்கிறார், பரிதவித்துப் போகிறார். கார் கங்கா எதிர்பார்க்கும் வழியில் செல்வதில்லை, அதை இயக்குபவனுக்கு வசதியான ஒதுக்குப்புறம் போய் நிற்கிறது. அவள் மீண்டும் சன்னமாக மறுக்கிறாள். அந்த அபலைப் பெண் தன்னைத் தொலைத்து விடுகிறாள்.

எப்படியோ துணிவை வரவழைத்துக் கொண்டு வீடு திரும்பிவிடும் அவளுக்கு, லாந்தர் விளக்கோடு மல்லுக்கட்டிக் கொஞ்சநஞ்ச வெளிச்சத்திற்குப் போராடி இருளில் உழலும் விதவைத் தாயைப் பார்த்ததும் தாங்க மாட்டாமல் உடைந்து கொட்டி விடுகிறாள். அய்யோ அய்யோ என்று அவள் தலையிலும், தனது தலையிலும் அடித்துக் கொள்ளும் தாயின் கதறல், அவள் மகன், மருமகள் எல்லோருக்கும் கேட்டு, அதன்வழி தெருவுக்கே எல்லா செய்திகளையும் எடுத்துக் கொடுத்துவிடுகிறது. வீட்டை விட்டு வெளியேறியாக வேண்டி இருக்கிறது கங்கா. 

நேரில் காரில் போவதை மட்டும் பார்க்கும்ஆர் கே வி, கங்கா பின்னர் கல்லூரிக்கு வருவதில்லை என்றும், காரணம் என்ன என்பதையும் அறிந்தபின், தான் வேறு ஒரு கற்பனை செய்து பார்ப்பதுஅக்கினி பிரவேசம் என்ற கதையாகப் பின்னர் சில ஆண்டுகள் கழித்து எழுதி வெளியாகி விடுகிறது. கதையில் வரும் தாய், பிறிது ஒருவர் அறியாத வண்ணம், தேவையற்ற களங்கம் படியாமல் மகளின் எதிர்காலத்தைக்  காத்துவிடுகிறார். மகள் இறக்கி வைக்கும் இடியை அவள் விழுங்கி விட்டு, ‘ஒண்ணுமில்ல, மழையில நனைஞ்சுண்டு வந்திருக்காஎன்று சொல்லிவிடும் அவளது ஒற்றை வாக்கியம் ஊர் வாயை மூடி விடுகிறது. கதையைக் கனகம் வாசித்துக் கொண்டிருக்கும்போது உலை வாய் மட்டும் தான் பொங்கிக் கொண்டிருக்கிறது சமையலறையில்! 

உன் பொண்ணுக்கு சமத்து இருந்தா அவனையே தேடிப் பிடிச்சு இழுத்துண்டு வந்து இவன் தான் என் ஆம்படையான், இவனோடத் தான் வாழப் போறேன்னு சொல்லட்டுமேஎன்று தாய் மாமன் சொல்வது, கதியற்று நின்ற நேரத்தில் அவரது உதவியால் படிப்பை முடித்து நல்ல பதவியில் அமர்ந்த நிலையிலும் உள் நின்று வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது கங்காவை. ஆர் கே வி மூலம் அந்த பிரபாகரைக் கண்டு பிடித்து விடுகிறாள். ஆனால், அவன் ஏற்கெனவே திருமணம் ஆகி, கல்லூரியில் படிக்கும் வயதில் ஒரு மகள் உள்பட மூன்று குழந்தைகளின் தந்தை. அவனது குற்ற உணர்ச்சியைத் தணித்துப் பழகத் தொடங்கும் கங்காவின் போக்கு, அவள் அம்மாவை நிலை குலைய வைக்கிறது.

எழுத்தாளர் ஆர் கே வி, மனைவியை இழந்த தமது உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு கங்காவை மணமுடிக்க ஆலோசனை சொல்கிறார். கங்கா, பிரபாகரனோடு தான் வாழ்க்கை என்று சொல்லி விடுகிறாள். கங்காவின் சகோதரன், பிரபாகரனையே நேரில் பார்த்துப் பேசவும், பிரபாகரன், அவள் வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக வெளியேறி விடுகிறான்.  கொட்டுகிற மழையில் காரிலிருந்து இறக்கி விடப்பட்ட போது இருந்ததை விடவும் வேறு கொதிப்பில் நிற்கிறாள் கங்கா. முன்னது உடலில் மட்டும் ஏற்பட்டிருந்த காயம்.

தையை ஏற்பதோ, மறுப்பதோ, வாதிடுவதோ இன்னும் பல ஆண்டுகள் நிகழக் கூடும். கதை சொல்லல் பற்றித் தான் இங்கே பேசுவது. 

 நடுத்தர பிராம்மணக் குடும்பம், அதன் ஆச்சார அனுஷ்டானங்கள் மட்டுமல்ல அதன் பேச்சு மொழி இத்தனை பாந்தமாக, செயற்கையற்றுத் திரையில் அதிகம் பார்த்த நினைவில்லை. லட்சுமி காலில் விழுந்து வணங்கும்போது, ஒய் ஜி பார்த்தசாரதி ஆசி கூறும் பாங்கு, முதல் முறைக்கும் இரண்டாம் முறைக்கும் இடையே எதிரெதிர் உணர்ச்சிச் சூழல்  என்றாலும் அத்தனை இயல்பாக இருக்கும்.

அந்தக் கட்டால போறவன் ஏன் இங்கே வந்துட்டுப் போறான்என்று ஊர் பேசும் பேச்சுக்குத் தன்னிடம் நியாயம் கேட்கும் அம்மாவைக் கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டு விடுகிறாள் கங்கா. நீ மட்டுமென்ன சாஸ்திரப்படி தான் வாழறியா என்பது கேள்வி, ஆனால் அந்தச் சொற்கள் நெருப்பில் தெறிப்பவை. மறுநாள் அதிகாலை தலைமுடியை மழித்துக் கொண்டு குளத்தில் குளித்துவிட்டு தலையைச் சுற்றிய ஈரப்புடவையோடு வீட்டுக்குள் நுழையும் தாயைக் கண்டு பதற மட்டுமே முடிகிறது கங்காவுக்கு.  

காஞ்சிபுரத்தில் இளவயதில் கைம்பெண் ஆகி, பூவும் பொட்டும் மட்டுமல்ல, நகைகள் துறந்து ரவிக்கை இன்றி, கழுத்தைச் சுற்றிய நார்மடிப் புடவை மழித்திருக்கும்  தலையைச் சுற்றியபடி இருக்கும் நெருங்கிய உறவினர் எங்கள் வீட்டுக்கு வருவதைப் பார்த்துப் பழகி இருந்த இளவயதில், எங்கள் பாட்டனார் மறைந்த போது எங்கே எங்கள் பாட்டியும் அப்படி செய்துகொண்டு விடுவாளோ என்று சித்திகளோடு சேர்ந்து நாங்களும் கத்திக் கதறிக் கூடாது என்று போராடித் தடுத்தது எப்போதும் மறக்காது. கருத்த நிறத்தினள் ஆன எங்கள் பாட்டி, தனக்கு மிகவும் பிடித்தமான மஜெந்தா நிறக் குங்குமம் இலேசாக வைத்துக் கண்ணாடியில் பார்த்துவிட்டு அழுதவாறே அழித்துக் கொள்ளும் காட்சியும்தான்!

எழுத்தாளர் ஆர் கே வி, கல்லூரியில் மாணவியரின் கேள்விகளுக்கு எடுத்தியம்பும் பதில்கள் படம் வந்த காலத்தில் மிகவும் பேசப்பட்டவை. நாகேஷ் பின்னி எடுத்திருப்பார். அவரது வீட்டுச் சூழல், அவரது கதையை மெனக்கெட்டு நகல் எடுக்கும் அவருடைய மனைவி, அவரது கதைகளைக் கரித்துக் கொட்டும் தாய் (இவா வயிற்றெரிச்சல் கொட்டிக்கத்தானே நான் கதை எழுதறேன்‘) எல்லாம் தமிழ்த் திரைக்குப் புதிது.  சிறிது நேரமே வந்தாலும் நீலகண்டன் (அண்ணன்), சுகுமாரி (மன்னி) அருமையாகச் செய்திருப்பார்கள். 

கங்காவின் வாழ்வில் இரண்டு முறை குறுக்கிடும் வித்தியாசமான பாத்திரத்தில் ஸ்ரீ காந்த் சிறப்பாக செய்திருப்பார், ஆனால், வலிய திணிக்கப்பட்ட பேச்சு மொழி போல உறுத்தலாகத் தெரியும். 

கண்டதைச் சொல்கிறேன், ‘போலச் செய்தல்வாய்ப்பற்ற ஓர் அருமையான இசைப்பாடல், ஜெயகாந்தன் பாடலுக்கான உயிர்ப்பான முறையில் எம் எஸ் விஸ்வநாதன் இசைக்கும் அந்தப் பாடல், உலுக்கிப் போடுவது.  ஜெயகாந்தனின் மற்றொரு பாடலான ‘வேறு இடம் தேடிப் போவாளோ‘  வாணி ஜெயராம் இசைத்திருக்கும் அபாரமான ஒன்று.

படிப்பும், வேலையும், பொருளாதார வலுவும் கங்காவை நிமிர்ந்து நின்று துணிந்து பேச வைக்கிறது. இத்தனையும் இருந்தபோதிலும் அவள் பெண் என்பதை சமூகம் அவளுக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. இந்தப் பின்னணியற்ற பெண்களின் கதியையும் சேர்த்து சிந்திக்கத் தூண்டுகிறது படம். 

 ந்த மழை பெய்து கொண்டே இருக்கிறது, படம் முடிந்த பிறகும்….உள்ளே அமர்ந்திருப்பவர் குடையோடு இருக்கத் தான் நனைந்தபடி மிதித்துப் போகும்  ரிக்ஷாகாரர், காளைகள் இழுத்துப் போகும் பெரிய பார வண்டி, கடந்து போய்விட்டு மீண்டும் ஒரு வளைவு எடுத்து வந்து கதவு திறந்து நிற்கும் அந்தக் கார்……

 

 

கம்பன் கவிநயம் – சினம் கொள்ளான்

குகனின் குணம் சொல்லும் மாண்பு - விஜய பாரதம்

ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ
ஏழமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ (999)

 

கங்கைக் கரையின் காவலனாகிய குகன், பரதனது பரந்த சேனையைக் கண்டபோது, அவன் இராமனை வெல்லக் கருதி வந்தான் என்று எண்ணித் தன்னுயிரையும் ஒரு பொருளாகக் கருதாது போர்க் கோலம் புனைந்து கூறுவதாகப் படைத்த பாடல். 

 அவனுடைய சினம் எல்லை மீறுகின்றது.

“இந்த ஆழமான கங்கையாற்றினை இவர்கள் கடந்துசெல்ல என் துணை வேண்டுமல்லவா? எப்படிச் செல்கிறார்கள் எனப் பார்த்துவிடுகிறேன்.

“இவர்களுடைய பெரிய யானைப்படையைக் கண்டு அஞ்சி ஓடுபவனோ நான்? இல்லை இல்லை!

“நீ என் தோழன் என்று ராமன் சொல்லியது ஒரு அரிய உயர்வான சொல் அல்லவா? அதற்கு நான் எவ்வளவு மதிப்புக் கொடுக்கிறேன் தெரியுமா? அதனை மிஞ்சிய சொல் கிடையாது.

“அந்த நட்பின் காரணத்தால் நான் ராமனுக்குத்துணை போகாவிட்டால் இவ்வுலகம் இந்த அற்பவேடன் இன்னும் எதற்காக உயிரை வைத்துக்கொண்டு இருக்கிறான் என்று என்மீது பழிதூற்றாதா?” இவ்வாறெல்லாம் தானே உரத்த சிந்தனையில் கூறிக்கொள்கிறான் குகன்.

குகனோடு ஐவரானோம் என்று ராமன் எண்ணிய எண்ணத்திற்கு ஏற்ப செயல்படும் குகனின் பெருமை கூறும் பாடல் இது. 

 

அதே குகன் பரதனைக் கண்ட பின் ஆயிரம் ராமர் உனக்கு சமமாவார்களா என்று கேட்கிறான் என்றால் அதற்குசி சரியான  காரணம் இருக்க வேண்டுமல்லவா?  

பரதன் – குகன் சந்திப்பு! – மு.திருஞானம் | Dinamalar

இவனையும் இவன் படைகளையும் இப்போதே கொல்வேன்”என்று மனம் கொண்ட மட்டும் பரதனை இகழ்ந்து, போருக்குத் தயாரான குகன் தன் படைகளைத்  தயாராக இருக்கச்சொல்லி விட்டு, தனி ஆளாகப் படகில் ஏறிப் பரதனைக் காண வருகிறான். 

 வந்த குகனிடம், “ராமரை அழைத்துப்போய், அவரிடம் அரசை  ஒப்படைப்பதற்காகவே வந்தேன் நான்” எனக் கூறுகிறார் பரதன். பரதனுடைய தோற்றத்தைக் கண்டும்,  வார்த்தைகளையும் கேட்ட குகன் அந்த ஒரு கணத்தில் , பரதனின் மனதைப்  புரிந்து கொண்டான். 

இப்படிப்பட்ட பரதனை சந்தேகித்த பாவியாகி விட்டேனே என்று மனத்துள் குமுறி அவன் கூறிய வாரத்தைதான் ‘ஆயிரம் ராமர் உனக்கு இணையாக மாட்டார் ” என்ற சொல்.

அதனால் அவன்  கூறுகிறான். 

தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னை தீவினை என்ன நீத்து, சிந்தனை முகத்தில் தேக்கி, போயினை என்றபோழ்து, புகழினோய்! தன்மைகண்டால்  ஆயிரம் ராமர் நின்கேழ் ஆவரோ? தெரியின் அம்மா! (1019) 

பரதனின் அன்பில் தன்னை முழுமையாகக் கரைத்துக் கொண்ட குகனின் வார்த்தைகள் இவை.

“தாய் சொல் கேட்டு, தந்தை கொடுத்த அரச பதவியைத் ‘தீயது  இது’ என்று விட்டுவிட்டு வந்து விட்டாய். வருத்தத்துடன் இருக்கும் உன் முகத்தைப் பார்த்தால்,பரதா! புகழ் படைத்தவனே! உன் தன்மைக்கு ஆயிரம் ராமர்  சமமாவார்களா ? தெரிய வில்லையே!” என்று புகழ்கிறான்  குகன்.

இதைப் படிக்கும் போதும் எழுதும் போதும் என்  கண்கள் பரதனையும் குகனையும் நினைத்துக் குளமானதைத் தவிர்க்க முடியவில்லை.  

சரித்திரம் பேசுகிறது! –யாரோ – இராஜாதித்தன்

 

இராஜாதித்ய சோழன் வரலாறு | Rajaditya Cholan History | சோழர் வரலாறு பகுதி - 4  | History of Comrade - YouTube

 

பிற்காலச் சோழச் சரித்திரம் படித்தவர்களுக்கு (அல்லது ‘பொன்னியின் செல்வன்’ படித்தவர்களுக்கு), ‘இராஜாதித்தன்’ என்ற பெயரைக் கேட்டாலே மனத்தில் என்னமோ சற்று நெருடும். வீரமும், விதியும் ஒன்றையொன்று எதிர்த்து விளையாடிய காவியம் அது.

‘இராஜாதித்தன் சபதம்’ – என்ற பெயரில் ‘அமுதசுரபி விக்கிரமன்’ எழுதிய சரித்திரக் காவியத்துக்கு இராஜாதித்தனின் இந்தச் சரித்திரம் வித்தானது. அந்த நாவலிலிருந்து சிலவற்றையும் (நன்றி தெரிவித்து) இடையிடையே தெளித்து, இங்கு நினைவு கூர்கிறோம். மேலும், கிடைத்த பல சரித்திர ஆய்வுகளைக் கொண்டு, ஒரு காலக்கோடு (timeline) புனைந்துள்ளோம்.

900: பராந்தகனின் முதல் மனைவியின் பெயர் ‘கோக்கிழான் அடிகள்’. பின்னாளில் பராந்தகன் பட்டம் சூடும்போது, இவள் பட்டத்தரசியானாள். இவர்களுக்குப் பிறந்த மகனுக்கு இராஜாதித்தன் என்று பெயரிட்டனர்.

901- பராந்தகனுக்கு கண்டராதித்தன் பிறந்தான்.

902-. பராந்தகனின் மற்றொரு அரசி பழுவேட்டரையரின் மகள். அவள் வயிற்றில் அரிஞ்சயன் பிறந்தான்.

907: பராந்தகன் சோழ மன்னனாகப் பட்டமேற்றான். அன்று, இராஜாதித்தன் வயது 8. கண்டராதித்தன் வயது 7. அரிஞ்சயன் வயது 5.

910: பராந்தகன் – பாண்டியன் முதல் போர். (முன்பே பார்த்தோமே)

  1. பராந்தகன் வாணர் நாட்டுக்குப் படையெடுத்துச் சென்றான். வைதும்ப நாடும், வாணர்களுடன் சேர்ந்து சோழனை எதிர்த்துப் போர் புரிந்தது, பராந்தகன் வாணர்களது நாட்டை வென்றான். வாணர் அரசன் இரண்டாம் விஜயாதித்தன் போரில் கொல்லப்பட்டான். அவன் மகன் இரண்டாம் விக்கிரமாதித்தன், மற்றும் வைதும்ப அரசனும் இராட்டிரகூட இளவரசன் ‘மூன்றாம் கிருஷ்ணதேவனிடம்’ அடைக்கலம் புகுந்து சரியான நேரத்துக்குக் காத்திருந்தனர். இராட்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன் – ஆதித்த சோழனுடைய மாமனார் – பராந்தகனுடன் முதலில் தன் மக்கள் வயிற்றுப் பேரனுக்காகச் சோழ ராஜ்யம் வேண்டும் என்று சண்டைக்கு வந்தாலும், பின்னர் பராந்தகனுடன் நட்புடன் இருந்தான்.

913: இராட்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன் இறந்தான். அவன் பேரன் இந்திரன் அரசனானான். இந்திரனின் தம்பி மூன்றாம் அமோகவர்ஷன். அவன் மகன் மூன்றாம் கிருஷ்ணன். (கொஞ்சம் மெதுவாகப் படியுங்கள்.. சரித்திரத்தில் பலப்பல பாத்திரங்கள்).  ‘மூன்றாம் கிருஷ்ணன்’ தான் இனி வரும் கதைகளுக்கு ஒரு ஐம்பது வருடத்திற்கு – வில்லன். அவன் கதைக்கு விரைவில் வருவோம்.

918: இந்திரன் மகன் நான்காம் கோவிந்தன் (இந்த இரண்டாம், மூன்றாம், நான்காம் என்று எழுதி எழுதி நமது கை சளைத்து விட்டது. உங்கள் பொறுமை சோதிக்கப்பட்டால் அதற்கு யாரோ பொறுப்பு?). நான்காம் கோவிந்தனுக்கு இளவரசுப்பட்டம் கட்டினான். கோவிந்தன், வனப்பில் மன்மதன் போல அழகுடன் இருந்தான்.
‘பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே’ என்பார்கள். அது போல, அழகும், அதிகாரமும் சேர, கோவிந்தனிடம் குணம் குன்றியிருந்தது. பல பெண்களிடம் தொடர்பு கொண்டு மன்மதலீலைகள் நடத்தினான். கோபம் அதிகம் கொண்டு – நண்பர்களை விரோதித்துக் கொண்டிருந்தான்.

பராந்தகன் ஒருமுறை கோவிந்தனை தஞ்சைக்கு அழைத்து விருந்தளித்தான். பராந்தகன் மகள் வீரமாதேவி – கோவிந்தனைக் கண்டதும் அவன் அழகில் மயங்கினாள். சோழ இளவரசர்கள், கோவிந்தனின் ஒழுக்கக் குறைவை எண்ணித் தயங்கினார். வீரம், விவேகம் இரண்டும் குறைந்த கோவிந்தனை சகோதரிக்கு மணமுடிப்பது பற்றி யோசித்தனர். பராந்தகனும் சற்று யோசித்தான். இருந்தாலும் இப்படி எண்ணினான்:

“நமக்கே 12 மனைவிகள்.. ஆக, கோவிந்தனின் பெண் மோகம் ஒரு பெரிய பிரச்சினையே அல்ல. மேலும், கோவிந்தன் இராட்டிரக்கூடத்திற்கு விரைவில் அரசனாகி விடுவான். நமது மகள் வீரமா தேவி கோவிந்தனை மணம் செய்து கொண்டால் அவள் தான் பட்டத்தரசியாக வருவாள். இப்படி ஒரு பலமான ராஜ்யத்தை இந்தப் பந்தத்தின் மூலம் ஒரு கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டால், வடக்கே நமக்குப் பகை இல்லை. கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதி நமது உற்ற நண்பன் – கூட்டாளி. ஆக, இந்த இரு பெரு ராஜ்யங்கள் நமக்கு அமைதியைத் தந்தால் – இந்தகப் பாண்டியர், ஈழர் கொட்டத்தை முழுமையாக அடக்கி, பாண்டிய நாட்டை சோழநாடாக்கி, தந்தை ஆரம்பித்த திருப்பணிகள் செய்து காலத்தைக் கழிக்கலாம். நமது வீர மகன் இராஜாதித்தன், அவன் காலத்தில் சோழ நாட்டைப் பாதுகாத்துப் பெரிதாக்குவான். விஜயாலயன், ஆதித்தன் கண்ட கனவுகள் நனவாகும்” -என்று திட்டமிட்டான்.

திருமணம் நடந்தது. வீரமா தேவி இராட்டிரகூட அரியணையில் அமர்ந்து மகாராணியானாள்.

சுபம் என்று போட்டு படத்தை முடிக்கலாமென்றால் அங்கு தான் இன்னொரு கதை திருப்பங்களுடன் தொடங்குகிறது. பராந்தகன் மேற்படி நினைத்தது எல்லாம் நடந்திருந்தால் – நம் கதை உப்பு-சப்பின்றி போயிருக்கும். இந்தக் கணிப்புகளெல்லாம் புரட்டிப் போடப்பட்டு, தமிழகமே தத்தளிக்கும் நிலை உருவானது. அது என்ன என்பதைப் பார்ப்போம்.

922: திருக்கோவலூர், மலையமான்களின் தலை நகரம். வைதும்பராயன், தன் நாடிழந்து, திருக்கோவலூரில் வந்து சேர்ந்தான். வைதும்பராயனின் அழகு மகள் கல்யாணியை அரிஞ்சயன் திருமணம் செய்திருந்தான். அரிஞ்சயன் வயது 20 தான் இருக்கும். கல்யாணியின் அழகு அன்று தென்னிந்தியாவில் பெரிதும் பேசப்பட்டது. (கல்கியும் அதை எழுதினார்). அந்த வருடமே அவர்களுக்கு ஒரு அழகான குழந்தை பிறந்தது. அந்த மகனுக்கு பராந்தகன் என்றே பெயரிட்டான். தாயைப் போல பிள்ளை. மன்மதன் போல அழகாய் இருந்தது. அந்த அழகின் காரணத்தால் , பின்னாளில் அவனுக்கு சுந்தர சோழன் என்ற பெயர் நிலைத்தது.

இப்படி சோழ இளவரசனுக்கு மகளைத் திருமணம் செய்து கொடுத்த பின்னரும், வைதும்பராயன் சோழனின் பகையைச் சம்பாதித்தது விசித்திரமாகும். வைதும்பராயன், சோழனுக்குப் பல ஆண்டுகளாகச் செலுத்த வேண்டிய திறையைச் செலுத்தவில்லை. வைதும்பராயன் ராஜ தந்திரம் மிகுந்தவன். இராட்டிர கூட நாட்டு அசோக வர்ஷனும், மூன்றாம் கிருஷ்ணனும் அவனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். கங்க நாட்டிற்குச் செல்வதற்கு முன்பு பூதூகன் (கங்க மன்னன் பிரீதிவிபதியின் பங்காளி, எதிரி) வைதும்பனிடம் வந்து அவனுடன் ரகசியமாகக் கலந்தாலோசித்த பிறகே, கங்க நாட்டில் தன் கை வரிசையைக் காட்டச் சென்றான். பூதூகனுக்கு வைதும்பன் உதவினான். திருவலத்தைச் சுற்றியுள்ள நாட்டைக் கொடுப்பதாக பூதூகன் அவனுக்கு வாக்களித்திருந்தான்.

935:

கீழைச்சாளுக்கிய அரசு இரண்டாகப் பிரிந்திருந்தது. வடதிசையை யுத்தமல்லன் ஆண்டான். தென் திசையை இரண்டாம் வீமன் ஆண்டான். இருவருக்கும் போர் மூண்டது. இராட்டிரக்கூட மன்னன் நான்காம் கோவிந்தன் இதில் தலையிட்டான். யுத்தமல்லனுக்கு ஆதரவாக வீமனிடம் போர் தொடுத்தான். கோவிந்தன் கூட்டணி ‘கோவிந்தா’ ஆனது! ஏற்கனவே நான்காம் கோவிந்தன் இராட்டிரக்கூடப் பொதுமக்களிடமும் மதிப்பிழந்திருந்தான். இந்த தோல்வி அவர்களது வெறுப்பை அதிகப்படுத்தியது. அவனது சித்தப்பன் மகன் மூன்றாம் கிருஷ்ணன் அவனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றினான். தன் தந்தை அமோகவர்ஷனை மான்ய கேடாவில் மன்னனாக்கி ஆண்டான். நான்காம் கோவிந்தன் மனைவி வீரமாதேவியுடன் மாமனான சோழன் வீட்டில் தஞ்சம் புகுந்தான்.

936: பராந்தகன், இராஜாதித்தனை திருநாவலூருக்கு (திருக்கோவிலூர்) அனுப்பி வட எல்லையைப் பாதுகாத்தான். தளபதி வெள்ளங்குமரன் மற்றும் அரிஞ்சயனும் அருகில் படையுடன் இருந்தனர். இந்தக் கதையைச் சற்று விவரிப்போம்.

மதுரைப் போருக்குப் பிறகு, ஈழத்துப் போர் என்று பராந்தகனுக்குப் போர் மீது கவனம் சென்றது. ஈழத்தை வென்றாலும் பாண்டிய அரசுச்சின்னங்களை அடையமுடியாத தோல்வி பராந்தகனை உறுத்தியது. இந்த நிலையில் நமது கதை ஆரம்பமாகிறது.

சோழன் பராந்தகன், விண் வரையிலும் சோழ நாட்டை உயர வைக்கும் ஆசையில், ராஜ தூரிகை எடுத்து சோழ ஓவியம் வரைந்தவன். பராந்தகனுக்கு நான்கு புதல்வர்கள், இரு பெண்கள். அவர்களுள் தலைப்பிள்ளை, இன்று நமது கதாநாயகன் இராஜாதித்தன். மற்ற இளவல்கள் கண்டராதித்தன், அரிஞ்சயன். வீரமாதேவி, அநுபமா இருவரும் பெண்மக்கள். வீரமாதேவியை இராட்டிரகூட மன்னனான நான்காம் கோவிந்த வல்லவரையனுக்கு மணம் செய்து கொடுத்திருந்தான். இராட்டிரகூட நாட்டில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக கோவிந்த வல்லவரையன் பட்டமிழந்து, தன் மனைவி வீரமாதேவியுடன், ‘மான்ய கேட’ விலிருந்தது சோழ நாட்டிற்கே வந்து சேர்ந்தான். இந்த நிகழ்வுகளைச் சற்று முன்பு பார்த்தோம். இராஷ்டிரகூட நாட்டுத் தலைநகரம் ‘மான்ய கேட’ நகர். இராஜாதித்தன், தன் சகோதரிக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்தெறிந்து – சகோதரியையும், சகோதரியின் கணவன் கோவிந்தனையும் எழுச்சியுற வைத்து, மீண்டும் இராட்டிரகூட நாட்டு மன்னராகவும், அரசியாகவும் ஆக்கிக்காட்ட வீர சபதம் எடுக்கிறான்.

அரிஞ்சயனும், அநுபமாவும் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள். பராந்தகனின் மற்றொரு அரசியான பழுவேட்டரையர் மகள் வயிற்றில் உதித்தவர்கள். பட்டத்தரசி கோக்கிழான் அடிகளுக்கு, முன்னதாகவே இராஜாதித்தன் பிறந்துவிட்டதால், அவனுக்குத்தான் அடுத்துப் பட்டத்துரிமை என்று முடிவாகியிருந்தது. அது காரணம், பழுவேட்டரையருக்குச் சற்று உற்சாகம் குறைந்தது. எனினும், தன் பேரன் அரிஞ்சயனை, இராஜாதித்தனுக்கு இணையாக வீரமுடையவனாக்க, அவர் தம் சொந்த மேற்பார்வையில் வளர்க்கலானர். பேத்தி அனுபமாவை கொடும்பாளூர் இளவரசனுக்கு மணமுடித்தார்.

களம் தயாரானது.
அரசியல் களம், போர்க்களம் என்று பல களங்கள்.
இரத்தம், கண்ணீர் பல சிந்தப்பட்டது.
தக்கோலம் என்ற ஊர் பயங்கரத்தைக் காண உள்ளது.
இராஜாதித்தன் சரித்திரத்தில் கலந்த நாள் வந்தது.

இந்தக்கதைகள் விரைவில்.

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
2. அம்மா அப்பா ! – ஜூலை 2020
3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
5. எனது நாடு – செப்டம்பர் 2020
6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
10. அணிலே ! அணிலே ! – நவம்பர் 2020
11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
13. ஜன கண மன ! – ஜனவரி 2021
14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
20. வேப்ப மரம் ! – ஏப்ரல் 2021
21. பஸ்ஸில் போகலாம் – மே 2021
22. சிட்டுக் குருவி – மே 2021
23. ஆகாய விமானம் – ஜூன் 2021
24. எங்கள் வீட்டுத் தென்னை மரம் – ஜூன் 2021
25. பாட்டி – கதை சொல்லு – ஜூலை 2021
26. வீட்டுக்கு வா ! – ஜூலை 2021

27. தா தீ தோம் நம் !

மிருதங்கம் | Keerthanaiin Mahimai Trust

தா தீ தோம் நம் மிருதங்கம் !
தட்டினால் எனக்கு ஆனந்தம் !
சரிகமபதநி பாடுகிறார் !
பாட்டுக்குத் தாளம் போடுகிறார் !

எந்தப் பக்கம் இடித்தாலும் –
தருமே இனிய தாள லயம் !
எங்கள் வீட்டு மிருதங்கம் !
நானும் கற்பேன் மிருதங்கம் !

வாத்தியார் சொல்லித் தருகையிலே
கவனமாய் நானும் கேட்டிடுவேன் !
சொன்னபடியே செய்திடுவேன் !
வித்வானாக வளர்ந்திடுவேன் !

தக்கத் தக்கத் தக தக தா !
தா தை தை தை தக தக தா !
பாப்பா பக்கம் பக்கம் வா !
பாடம் கேட்கவே புறப்பட்டு வா !

தா தீ தோம் நம் மிருதங்கம் !
தட்டினால் எனக்கு ஆனந்தம் !
சரிகமபதநி பாடுகிறார் !
பாட்டுக்குத் தாளம் போடுகிறார் !

*************************************

28. விளையாடலாம் !

தினுசு தினுசா விளையாட்டு: கோழிக் குஞ்சைத் தூக்கி வா! | தினுசு தினுசா விளையாட்டு: கோழிக் குஞ்சைத் தூக்கி வா! - hindutamil.in

ஓடிப் பிடித்து விளையாடலாம் – நாம்
ஒளிந்து பிடித்து விளையாடலாம் !
கண்ணாமூச்சி விளையாடலாம் – நாம்
கோகோ, கிரிக்கெட் விளையாடலாம் !

தவ்வித் தாவி விளையாடலாம் – நாம்
தாண்டிக் குதித்து விளையாடலாம் !
நீச்சல் அடித்து விளையாடலாம் !
கால் பந்தும் நாம் விளையாடலாம் !

மாலை முழுதும் விளையாடலாம் !
பாரதி சொல் போல் விளையாடலாம் !
விடுமுறை என்றால் விளையாடலாம் – நம்
வீடுகளுக்குள்ளும் விளையாடலாம் !

கேரம், செஸ், ஸ்க்ராபிள் என்று –
ஆயிரம் இருக்கு- விளையாடலாம் !
அறிவை வளர்க்கும் ஆனந்தம் சேர்க்கும்
அனைத்தையும் நாம் விளையாடலாம் !

சைமன், சங்கர், ஜவகர், ஜானகி –
அனைவரும் வாங்க விளையாடலாம் !
குஷியாய் இருப்போம் கும்மாளம் அடிப்போம் –
ஆடிடலாம் ! விளயாடிடலாம் !

*****************************************************

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நாட்டிய மங்கையின் வழிபாடு-12 – கவியரசர் தாகூர் –   தமிழில் : மீனாக்ஷி பாலகணேஷ்  

Rabindra Jayanti 2021: Here Are Some Of The Most Famous Works Of  Rabindranath Tagore

Natir Puja (নটীর পূজা) | Rabindranath Tagore | Dance Drama 2019 | Rabindra  mela | Kashishwari Girls - YouTube       

    முன்கதைச்சுருக்கம்: புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்ட மகத நாட்டரசன் பிம்பிசாரன் தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரானுக்காக ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான். இளவரசன் அஜாதசத்ரு கேட்டுக்கொண்டபடி அவனுக்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் அரசன் வசித்துவந்தான். பல காரணங்களால் அரசி லோகேஸ்வரிக்கு புத்தமதத்தில் நம்பிக்கை தளருகின்றது; நகரில் புத்தருக்கெதிராகக் கலகம் மூள்கிறது. வழிபாட்டுமேடை உடைத்தெறியப்படுகிறது.  அரசன் பிம்பிசாரனையும் படுகொலை செய்ததாகப் பேசிக்கொள்கிறர்கள். புத்தரின் எதிரியான தேவதத்தன் அரசன் அஜாதசத்ருவைத் தன்வயப்படுத்த முயல்கிறான். அரண்மனை நாட்டியமங்கையான ஸ்ரீமதியை புத்தரின் வழிபாட்டு மேடையில் நடனமாடச் செய்து  புத்தமதத்தை அவமதிக்க இளவரசிகள் முனைகின்றனர். நகரெங்கும் கலவரம் தலைவிரித்தாடுகின்றது. ஸ்ரீமதியின் பொருட்டு இளவரசிகள் தமக்குள் சண்டையிடுகிறார்கள்.

           புத்தரை வழிபடுபவர்களைக் கொல்ல அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு மேடைமுன்பு நடனமாட வருகிறாள் ஸ்ரீமதி. அவள் பாடியாடத் தொடங்குகிறாள். அவள் கொல்லப்படும் தருணத்தை எதிர்பார்த்து இளவரசிகள் காத்திருக்கின்றனர். அரசி லோகேஸ்வரி முன்னேற்பாடாக விஷத்தைக் கொடுத்து அவளை முன்னமேயே தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுகிறாள். ஸ்ரீமதி அதனை மறுக்கிறாள். நடனமாடத் தொடங்குகிறாள்.

           அனைவரும் பீதியுடன் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

                                இனித் தொடர்ந்து படிக்கவும்:  

                           

           ஸ்ரீமதி: எனது இதயம் தெய்வீகமானதொரு வலியில் துடிக்கின்றது; எனது

                      உடல்முழுவதிலும் ஒரு சிலிர்ப்பைச் செலுத்துகிறது.

                      இந்த இணைப்பின் அலைகளினூடே அமைதி ஒரு கடலெனப்

                      பொங்குகிறது; அதன் இதயத்தில்            பேரழகு பிறக்கிறது.

                     எனது புலன்கள், எனது துயரங்கள் அனைத்தும் தங்களது கடைசி

                     வழிபாட்டைத் தொடங்குகின்றன.

                     எனது காணிக்கைகளை மறுத்து என்னை அவமதிக்காதீர்.

                      தங்கள் மீதான எனது அன்பு எனது அசைவுகளில் எழும் இசையில்          

                      பிரவகிக்கின்றது.

           ரத்னாவளி: (திரும்பவும் குறுக்கிட்டு) இதனை நிறுத்து! அவள் தனது ஆபரணங்களை ஒவ்வொன்றாக சிதைந்த வழிபாட்டு மேடையின் மீது எறிகிறாள். அதோ, அவளுடைய வளையல்கள், அடுத்து கழுத்தாபரணம் என எறிகிறாள். அந்த நகைகள் அரண்னைக்குச் சொந்தமானவை, மகாராணி. இது அதிகப்படியான அவமரியாதை. அவற்றைத் திரும்ப எடுத்துக்கொண்டு வா ஸ்ரீமதி, அவற்றை உரிய மரியாதையுடன் வணங்கு!

           அரசி: அமைதி! அவளைக் குற்றம் கூறாதே. அவளுடைய நடன அசைவுகளுக்கு அச்செய்கை தேவையானதே. எனது உடலே இந்த அதீதமான மகிழ்ச்சியில் துடிக்கின்றது. (அரசி தனது கழுத்தணியைக் கழற்றியெடுத்து வழிபாட்டு மேடைமுன்பு வீசுகிறாள்).

ஸ்ரீமதி! நிறுத்தாதே! தொடர்ந்து நடத்துவாய்!

                     (ஸ்ரீமதி தொடர்ந்து பாடி ஆடுகிறாள்)

           ஸ்ரீமதி: நான் தோட்டத்திலிருந்து மலர்களைத் தரவில்லை,

                       நான் காட்டிலிருந்து பழங்களைக் கொண்டு வரவில்லை,

                        புனித நீரை எனது பாத்திரங்களில் நிரப்பவில்லை.

                       அன்பின் ஊற்று என்னுள் பெருகிப் பீறிடுகிறது.

                       எனது கைகால்களுக்கு அதனைத்தாங்கத் திராணியில்லை:

                       அது தங்கள் திருவடிகளை இளைப்பாறும் இடமாகக் கொள்ளட்டும்

                       ஒரு கடைசி வழிபாட்டில் அது ஏற்றுக்கொள்ளப்படட்டும்.

                       தங்கள் மீதான எனது அன்பு எனது அசைவுகளில் எழும் இசையில்

                     பிரவகிக்கின்றது.

           ரத்னாவளி: ஆனால் இது ஒரு போலித்தனமான நடனம். அவள் இப்போது தனது ஆடைகளை ஒவ்வொன்றாகக் களைகிறாள், மகாராணி, பாருங்கள்! கீழே தெரிவது பிட்சுக்கள் அணியும் மஞ்சள் நிற ஆடை. இது அவளுடைய வழிபாட்டு முறையல்லவா? காவலாளிகளே! நீங்கள் இதைப் பார்த்தீர்களா? மகாராஜாவின் ஆணை உங்களுக்கு நினைவிருக்கிறதா?

           முதல் காவலாளி: ஆனால் அவள் புனிதப் பாடல்களை உச்சரிக்கவில்லை.

           ஸ்ரீமதி: (முழங்காலிட்டு உச்சரிக்கிறாள்)

                       புத்தரிடமே எனது அடைக்கலம் …….

           இரண்டாம் காவலாளி: (அவளுடைய வாயை மூடியவாறே) அசட்டுத்தைரியம் கொண்ட பெண்ணே! நிறுத்து. இப்போதாவது இதை நிறுத்து, பின்வாங்கு!

           ரத்னாவளி: அரசருடைய ஆணை நிறைவேற்றப்படட்டும்.

           ஸ்ரீமதி: (தனது பாடலைத் தொடர்கிறாள்)

                       எனது அடைக்கலம் புத்தபிரானிடமே!

                       எனது அடைக்கலம் தர்மத்திடமே!

           அரண்மனைச் சேவகிகள்: இத்தனை மூர்க்கமாக இருக்காதே ஸ்ரீமதி, பின்வாங்கு!

           முதலாம் காவலாளி: பைத்தியக்காரப்பெண்ணே! நிறுத்து! சாவின் கோரப்பற்களுக்கு உன்னைக் கொடுத்துக்கொள்ளாதே.

           இரண்டாம் காவலாளி: உன்னிடம் மன்றாடுகிறோம், எங்களிடம் இரக்கம் கொண்டு இதை நிறுத்திக் கைவிடு!

           மற்ற தாதியர்: இது பார்ப்பதற்கு மிகுந்த பயத்தை உண்டாக்குகிறது. நாம் இங்கிருந்து ஓடிவிடலாம்.

                                                     (அவர்கள் ஓடி வெளியேறுகிறார்கள்)

           ரத்னாவளி: அரசருடைய ஆணை நிறைவேற்றப்படட்டும்.

           ஸ்ரீமதி: எனது அடைக்கலம் புத்தரிடமே

                       எனது அடைக்கலம் தர்மத்திடமே.

                       எனது அடைக்கலம் சங்கத்திடமே.

           அரசி: (மண்டியிட்டவாறு)

                       எனது அடைக்கலம் புத்தரிடமே

                       எனது அடைக்கலம் தர்மத்திடமே.

                       எனது அடைக்கலம் சங்கத்திடமே.

                      முதலாம் காவலாளி ஸ்ரீமதிமீது வாளை வீசுகிறான்;

                     அவள் கீழே விழுந்து இறக்கிறாள்.

           அனைத்துக் காவலாளிகளும்: எங்களை மன்னிப்பீர், எங்களை மன்னிப்பீர்! (அவர்கள் அவளுடைய பாதங்களைத் தொட்டு வணங்குகின்றனர்)

           அரசி: (அவளுடைய தலையைத் தன் மடிமீது வைத்துக் கொள்கிறாள்) ஓ நாட்டிய மங்கையே, உன்னிடமிருந்து இந்த பிட்சுணியின் ஆடையை உனது இறுதிப் பரிசாக எடுத்துக் கொள்கிறேன். அதுவே எனது அடைக்கலமாகும். (அவள் பணிந்து வணங்குகிறாள்).

           ரத்னாவளி தன் நிலையிழந்து தரையில் விழுகிறாள்.

           மல்லிகா: (ரத்னாவளியிடம் சென்று) நீ இதைப்பற்றி என்ன நினைக்கிறாய்?

           ரத்னாவளி: (தனது முகத்தை மறைத்தபடி) இப்போது நான் உண்மையாகவே பயப்படுகிறேன்.

                                ஒரு தூதுவன் உள்ளே நுழைகிறான்.

           தூதுவன்: மகாராஜா அஜாதசத்ரு தாம் உள்ளேவர அரசத்தாயாரின் உத்தரவை எதிர்பார்த்தபடி வாயிலில் காத்துக் கொண்டிருக்கிறார்.

           மல்லிகா: நான் சென்று உங்கள் பெயரால் அவரை உள்ளேவரக் கூறுகிறேன்.

                     (மல்லிகா செல்கிறாள்)

           அரசி: எல்லாரும் என்னுடன் சேர்ந்து பாடுங்கள்:

                     (அரசி லோகேஸ்வரி பாடுகிறாள்; அனைவரும் உடன் இணைகின்றனர், ரத்னாவளியைத் தவிர)

                      எனது அடைக்கலம் புத்தரிடமே

                       எனது அடைக்கலம் தர்மத்திடமே.

                       எனது அடைக்கலம் சங்கத்திடமே.

                                (மல்லிகா உள்ளே நுழைகிறாள்)

           மல்லிகா: மகாராஜா திரும்பிச் சென்றுவிட்டார்.

           அரசி: ஏன்?

           மல்லிகா: இங்கு நடந்தவற்றைப்பற்றி அறிந்து கொண்டதும் அவர் பயத்தில் நடுநடுங்கினார்.

           அரசி: யாரைக்கண்டு அவர் பயந்தார்?

           மல்லிகா: இறந்துவிட்ட நாட்டியமங்கையிடம்.

           அரசி: நாம் ஒரு பாடை கொண்டுவந்து அவளை எடுத்துச் செல்வோம்.

                     (ரத்னாவளியைத் தவிர அனைவரும் வெளியேறுகிறார்கள். ரத்னாவளி ஸ்ரீமதியின் கால்களில் மண்டியிட்டுப் பணிந்தபடி பாடுகிறாள்)

           ரத்னாவளி:

                      எனது அடைக்கலம் புத்தரிடமே

                       எனது அடைக்கலம் தர்மத்திடமே.

                       எனது அடைக்கலம் சங்கத்திடமே.

                                                                           (நிறைந்தது)

                                —————————————

                               

எனது குறிப்பு: தாகூரின் நாடகங்களில் மத சம்பந்தமான தத்துவங்களையும் கருத்துக்களையும் அவர் சங்கேதமாகவும் வெளிப்படையாகவும் குறிப்பிடுவதனைக் காணலாம். இவற்றை மனித உள்ளங்களின் நுட்பமான உணர்வுகளுடன் பின்னிப்பிணைந்து அவர் புனையும் எழுத்தோவியங்கள் நம்மைச் சிந்திக்க வைக்கும். வாழ்க்கையையும், அதில் நாம் பெரிதெனக் கருதும் அழகு, செல்வம், பதவி ஆகியனவற்றின் நிலையாமையையும் அழகான கவித்துவம் மிகுந்த நுட்பமான கண்ணோட்டத்தில் வழங்குவதில் தாகூருக்கு இணை அவரே.

                      படித்து ரசித்தமைக்கு நன்றி!

 

 

பெண் என்னும் பிரபஞ்சம் ! கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

                                                                                                         பெண்ணே நீ

மஞ்சத்தில் ஆடவர்

கொஞ்சி விளையாடும்

பொம்மை அல்ல!

 

பெண்ணே நீ

மஞ்சத்தில் மயங்கி

உணர்வில் உறவாடி

உயிரில் கலந்து 

கருவைத் தாங்கும்

பிரபஞ்சம் என்னும்  

பொன் மகள்!               

 

பெண்ணே நீ

வீட்டில் அடைகாக்கும்

பெட்டைக் கோழி அல்ல

பிரபஞ்சம் வியக்கும்

ஆடும் மயில் !

 

பெண்ணே நீ

நிற்கும் சிலையோ  

ரசிக்கும் கலையோ அல்ல

பிரபஞ்சம் வியக்கும்

வான்புகழ் மழை !

 

பெண்ணே நீ

மனது வைத்தால்

மனித இதயங்களை

புனிதமாக்கும்

இனிய பிரபஞ்சம் !

 

                                    

 ‘சித்தார்த்தா’  – ஹெர்மன் ஹெஸ் – அழகியசிங்கர்  

Siddhartha: illustrated edition by Hermann Hesse, Paperback | Barnes &  Noble®

முதலில் ஒரு புத்தகத்தை எடுத்துப்படிப்பதற்கு முன் பக்கங்களை எண்ணிப் பார்க்கிறேன்.  இந்தப் புத்தகத்தை எத்தனை நாட்களில் படிக்க முடியும்? இதைப் பற்றி எதாவது எழுத முடியுமா என்றெல்லாம் பார்க்கிறேன்.  என் மனசில் எப்படிப் படுகிறதோ அப்படியே புத்தகம் பற்றிச் சொல்கிறேன்.  இதில் எந்தத் தியரியையும் இணைக்கவில்லை.  உண்மையில் தியரி புத்தகத்தையும் படித்துக் குறிப்பிட விரும்புகிறேன்.

இரண்டு நாட்களாகப் படித்த புத்தகம் ‘சித்தார்த்தா’  என்ற புத்தகம்.  ஹெர்மன் ஹெஸ்ஸின் புகழ்பெற்ற நாவல் இது.  தமிழில் மொழி பெயர்த்தவர் ஜெகதா.   பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலத்தில் இந்த நாவலைப் படித்திருக்கிறேன்.  எல்லாம் மறந்து விட்டது.  சில நாவல்களை நாம் பலமுறை படித்துக்கொண்டிருக்க வேண்டும்.  அது மாதிரியான நாவல்களில் இது ஒன்று.

ஜெகதா நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியிருக்கிறார், சிறுகதை, நாவல், கவிதை, சினிமா, வரலாறு, ஆன்மிக ஆய்வு என்று பல துறைகளில் புத்தகங்கள் எழுதி உள்ளார்.

பிரபஞ்ச ரகசியங்களை அதன் அடையாளங்களை நதியிடமிருந்து கற்றுக்கொள்ளும் படகோட்டியாய் இந்த நாவல் எல்லையற்ற ஞானவெளியில் நம்மையெல்லாம் மாணவ நிலையில் அமரச் செய்கிறது.

சித்தார்த்தாகவும் கோவிந்தனும் நண்பர்கள்.  பக்கத்துப் பக்கத்து வீடுகளில் இருவரும் வசிக்கிறார்கள்.  சித்தார்த்தனுக்குக் கடவுளுக்கு ஹோமம் செய்வது நைவேத்தியம் படைப்பது வணங்குவது எதுவும் பிடிக்கவில்லை.  மனோவலிமை பெற்றவனே ஆத்ம தரிசனம் பெறுவான் என்று நம்புகிறான் சித்தார்த்தா.  அப்பாவிடம் வலுக்கட்டாயமாக அனுமதி பெற்று பைராகிகளுடன் ஞானத்தைப் பெறப் பயணம் செய்கிறான்.  அவனுடன் கோவிந்தனும் வருகிறான்.

உலகம் மாயையாகத் தோன்றியது.  எல்லாவற்றிலும் போலித்தன்மை தெரிந்தது.  வாழ்க்கையின் சகலத்திலும் வஞ்சம் நிறைந்திருப்பது போல் தோன்றியது.  அழிவும் வேதனையும் வாழ்க்கை அவதாரமாகக்  கொண்டதாக சித்தார்த்தன் நினைத்தான்

.                    பைராகிகளோடு திரியும் வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருந்தது.  ஓய்வு என்பதே இல்லாது ஒரே அலைச்சலாக இருந்தது. ‘நான்’ என்ற உணர்வைத் துறப்பதற்கு மிருகத்தைப் போலவும் மரக்கட்டை போலவும்  நீண்ட காலத்தைச் செலவழித்த பின்னரும் மீண்டும் அந்த “நான்” என்ற வாழ்க்கை வளையத்திற்குள்தான் வரவேண்டியுள்ளது.

 

சித்தார்தாவிற்கு பைராகிகளோடு சுற்றுவதும் பிடிக்கவில்லை. கோவிந்தனும் அவனும் 3 வருடங்கள் மேல் ஆகிவிட்டது.  பைராகிகளிடமிருந்து விடுதலை பெற நினைக்கிறார்கள் சித்தார்தாவும் கோவித்தும்.

பிறகு அவர்கள் புத்தரைச் சந்திக்கச் செல்கிறார்கள்.  புத்தர் முன்பாகப் போய் நின்று, üஉங்களது உபதேசங்களை முழு மனதுடன் ஏற்று தங்களது சீடனாக நான் விரும்புகிறேன்.ý என்கிறான் கோவிந்தன். புத்தரும் அவன்  விருப்பப்படி அவனைச் சீடனாக ஏற்றுக் கொள்கிறார்.  சித்தார்த்தனுக்கு அப்படிச் சேர விருப்பமில்லை.  தனியாக வந்து விடுகிறான்.

ஆற்றின் மறுகரைக்குக் கொண்டு சென்று விட்டுவிடுமாறு வேண்டிக் கொண்டான் சித்தார்த்தன் படகோட்டியிடம்.

படகோட்டி சித்தார்த்தனிடம் சொல்கிறான் : “இந்த நதி அழகுடையதுதான் இந்த உலகத்தில் யாவற்றையும் விட இந்த நதியை நான் மிகவும் விரும்புவேன்.  அலைகள் ஒவ்வொன்றும் புதிய புதிய செய்தியை எனக்குச் சொல்லியிருக்கிறது.  மனித வாழ்வின் துயரப் போராட்டங்களுக்குத் தீர்வு சொல்லக்கூடிய ஞானத் திரவியங்கள் இந்த நதியின் ஆழத்தில் உள்ளது,” என்கிறான் படகோட்டி.

‘நான் ஒரு பைராகி.  படகுப் பயணம் வந்ததற்கு என்னால் எதுவுமே கொடுக்க இயலாது,’ என்கிறான் சித்தார்த்தா.

மூன்றாவதாகத் தேவதாசி கமலாவைச் சந்திக்கிறான்.   பைராகி தோற்றத்தைத் துறந்து ஷேவ் செய்துகொண்டு புத்தம் புதிய தோற்றத்துடன் போய்ப் பார்க்கிறான் சித்தார்த்தா.

“எனக்குக் கவிதை எழுதத் தெரியும்.  நான் கவிதை சொன்னால் நீங்கள் எனக்கு முத்தம் தருவீர்களா?” என்று சித்தார்த்தன் தேவதாசி கமலாவிடம் கேட்கிறான்.

“நீங்கள் சொல்கிற கவிதை எனக்குப் பிடிக்க வேண்டும்.  பிடித்திருந்தால் முத்தம் தர ஆட்சேபனை இல்லை,”என்கிறார் கமலா.

கவிதை அவளுக்குப் பிடித்துப் போகிறது.  உதட்டில் முத்தமும் கிடைக்கிறது சித்ததார்தனுக்கு.

சித்தார்த்தாவை காமசாமி என்கிற பணக்கார வியாபாரியைப் பார்க்கச் சொல்கிறாள்.

‘காமசாமிக்கு இணையாகப் பார்க்க ஆசைப்படுகிறேன்.  பணமும் செல்வாக்கும் உள்ள அவரை அடிமை கொள்ளுங்கள்,’ என்கிறாள் கமலா.

“வசீகர சக்தி உங்களிடம் ஏதும் உள்ளதா சித்தார்த்தா?”என்று கேட்கிறாள் கமலா.

“எனக்குக் காத்திருக்கவும், சிந்திக்கவும், உபவாசம் இருக்கவும் தெரியும்,” என்கிறான் சித்தார்த்தா.

தேவதாசி கமலாவுடன் லௌகீக வாழ்க்கையில் முற்றிலுமாய் கரைந்து சித்தார்த்தான் அனுபவித்துத்தான் வந்தான்.  ஆனாலும் அவனுள் ஒரு நிம்மதியற்ற தவிப்பு  தொடர்ந்து இருந்துகொண்டேயிருந்தது.

வியாபாரத்தில் சித்தார்த்தன் நிறையா சம்பாதித்தான்.  மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறி அவனுக்குள் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் சூதாட்டத்தில் பணத்தைச் சம்பாதிப்பதும் இழப்பதும் வழக்கமாக இருந்தது.  பணம் சம்பாதிப்பதே ஒரே நோக்கமாகக் கொண்ட அவன், மிகச் சராசரி மனிதனாக மாறிவிட்டான்.

ஒருநாள் மாடமாளிகைகள், நகருக்குள் இருந்த ஆடம்பர மாளிகை வாசனைத் திரவியங்கள் தெளிக்கப்பட்ட படுக்கை அறையும்  விதவிதமான உணவுப்பொருட்களையும் விட்டுவிட்டு சித்தார்த்தன் பட்டணத்தை விட்டுக் கிளம்பி விட்டான்.

சித்தார்த்தன் காணாமல் போய்விட்டான் என்பதை அறிந்தவுடன் மறுநாளிலிருந்து தனது தாசித்தொழிலை விட்டுவிட்டாள்.  அதற்காகப் பயன்படுத்திய அறையையும் பூட்டி விட்டாள்.  கடைசி முறையாகச் சித்தார்த்தனுடன் கொண்ட உடலுறவில் அவள் கர்ப்பமுற்றிருந்தாள்.

காட்டில் சித்தார்த்தன்  சுற்றிக் கொண்டிருக்கும்போது அவனுடைய நண்பன் கோவிந்தனைச் சந்திக்கிறான்.  கோவிந்தனோ புத்தரோடு ஐக்கியமாகிவிட்டான்.  திரும்பவும் முன்னே சென்ற ஆற்றங்கரைக்கு வருகிறான்.  எஞ்சியுள்ள தன்னுடைய வாழ்நாளை  இந்த ஆற்றங்கரையிலேயே முடித்துக்கொள்ள வேண்டியதுதான் என்று சித்தார்த்தன் நினைக்கிறான்.

ஆற்று நீரின் சலசலப்புச் சத்தம் சித்தார்த்தனின் அந்தராத்மாவின் மீண்டும் ஓங்கார நாதத்தின் மந்திர தொனியை மீட்டுகிறது.

நதி ஒரு  ரகசியத்தை   மட்டும் சித்தார்த்தனுக்குச் சொல்கிறது.

இந்த ஆற்று வெள்ளம் நிரந்தரமானது என்றாலும் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு துளியும் புதியது என்ற உண்மையை புரிந்து கொண்டான்  சித்தார்த்தன்.

 

ஏற்கனவே அந்த ஆற்றில் இருக்கும் படகோட்டியைத் திரும்பவும் பார்க்கிறான் சித்தார்த்தன்.  ஆடம்பரமாய் தரித்திருக்கும் தன் உடைகளைப் படகோட்டியிடம் கொடுத்து விடுகிறேன் என்கிறான் சித்தார்த்தன்.  அவனை ஆச்சரியத்தோடு பார்த்த  படகோட்டி அவனைச் சித்தார்த்தன் என்று அடையாளம் காண்கிறான்.  படகோட்டி தன்னை அறிமுகப்படுத்துகிறான் வாசுதேவன் என்று.

கடைசி வரை சித்தார்த்தன் எதிலும் திருப்தி இல்லாமல் இருக்கிறான் சித்தார்த்தன்.  தன்னுடைய பழைய கதைகளை எல்லாம் சித்தார்த்தன் வாசுதேவனிடம் சொல்கிறான்.  பின் வாசுதேவன் சித்தார்த்தைப் பார்த்துச் சொல்கிறான்.”நதி உங்களிடம் பேசியிருக்கிறது. உங்கள் மீது அன்பு காட்டியிருக்கிறது.  நீங்கள் என்னுடன் தங்கலாம்.  என்னுடைய மனைவி இறந்து பல ஆண்டுகளாகி விட்டது.  இந்தக் குடிசையில் நான் மட்டும் இருக்கிறேன்.  நீங்களும் என்னுடன் தங்கலாம்”என்கிறான் வாசுதேவன்.

வாசுதேவனுடன் சேர்ந்து படகு கட்டுவதைக் கற்றுக்கொள்கிறான்.  தோட்டத்தில் செடிகொடிகள் போடுகிறான். காட்டுக்குப் போகிறான். இப்படி எல்லா விதங்களிலும் உதவியாய் இரூக்கிறான் வாசுதேவனுக்கு.

எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்கிறது நதி.  எல்லாவற்றையும் மறந்து கூர்ந்து கவனிக்கும் ஆற்றலையும் மனம் சஞ்சலமடையாதத் தன்மையும் நதி சொல்லிக் கொடுக்கத்தான் செய்கிறது.  ஒருமுறை புத்தர் பிரான் நோய்வாய்ப்பட்டுப் படுத்தப் படுக்கையாக இருக்கிறார்.  அவரைப் பார்க்கப் புத்த பிட்சுகள் மஞ்சள் உடை அணிந்து சாரி சாரியாக வருகிறார்கள்.

அவர்களுடன் தேவதாசி கமலாவும் அவள் பையனை அழைத்துக்கொண்டு வருகிறாள்.  புத்தர் பிரானைப் பார்க்க.  தேவதாசி கமலா அவளுடைய எல்லா செல்வத்தையும் புத்தர்  பிரானுக்கு அர்ப்பணித்து விடுகிறாள்.  அவளுடைய பையனுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை.  ஏன் இந்தக் கிழவனைப் பார்க்க இவ்வளவு தூரம் வருகிறாய் என்று திட்டுகிறான் அம்மாவை.

சித்தார்த்தனும் மரணப்படுக்கையில் இருக்கும் புத்தர் பிரானைப் பார்க்க வருகிறான்.  அவன் கமலாவையும் தன் மகனையும் பார்க்கிறான்.

தன் பையனின் தொந்தரவு தாங்கமுடியாமல் போகிற வழியில் ஒரு இடத்தில் தங்குகிறாள்.  ஒரு புல்தரையில் அவளை அறியாமல் தூங்கி விடுகிறாள்.  அப்போது ஒரு கரும்பாம்பு அவளைத் தீண்டி விடுகிறது.  ஓ என்று கத்துகிறாள்.  அவள் பையன் துடித்துவிடுகிறான்.  அந்த இடத்தில் யாருமே இல்லை.  படகுக்காரன் வாசுதேவன் வேற வழியில்லாமல் அவளைத் தூக்கிக்கொண்டு வந்து படகில் கிடத்துகிறான். அவளை தன் குடிசைக்கு அழைத்து வருகிறான்.

கமலாவைச் சித்தார்த்தன் சந்திக்கிறான்.  கமலாவிற்கு  ஆச்சரியம் சித்தார்த்தனைச் சந்திப்போம் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.  பால சித்தார்த்தனைச் சித்தார்த்தனிடம் விட்டுவிட்டு கமலா இறந்து விடுகிறாள்.

அம்மாவின் மரணம் பால சித்தார்த்தனுக்குப் பேரிழப்பாக இருக்கிறது.  அவளைச் சிதை மூட்டிய குன்றுப் பகுதிக்குச் சென்று ஓவென இடைவிடாது அழுதான்.

சித்தார்த்தனை இதுவரை பார்த்ததில்லையாதலால் பால சித்தார்த்தனுக்குத் தந்தை பாசம் என்று எதுவும் ஏற்படுவதில்லை.   அவனைச் சரியாகக் கமலா வளர்க்கவில்லை என்பதை சித்தார்த்தன் உணர்ந்தான்.  அவனுக்கு எந்தக் காரியம் செய்வதற்கும் உதவியாள் தேவைப்பட்டது.

ஒருமுறை சித்தார்த்தனைப் பார்த்து பால சித்தார்த்தன் சொல்கிறான் : “உங்களைப் பழி வாங்க ஒரு கொலைகாரனாக மாறி நான் நரகத்திற்குப் போவேன்.  நீங்கள் என் அம்மாவுடைய காதலன் மட்டுமே.  நீங்கள் ஒரு போதும் என் அப்பாவாக முடியாது.”

மறுநாள் காலை பால சித்தார்த்தான் அங்கிருந்த படகை எடுத்துக்கொண்டு அக்கறைக்குப் போய்விட்டான்.  படகில் உள்ள துடுப்புகளை நாசம் செய்து விட்டுப் போய்விட்டான்.  தன் பையன் தன்னை விட்டுப் போனதைச் சித்தார்த்தனால் மறக்க முடியவில்லை.  அவனையொத்த பையன்களைப் பார்க்கும்போது அவன் பையன் ஞாபகம் வருகிறது

‘இப்போது நதி பேசுகிறது.  முடிவு மற்றும் தொடக்கம் என நதி கருதுவதெல்லாம் நிஜமாகவே நிகழ்கிறது.  சந்தோஷம், துயரம் எல்லாமே ஒன்றுதான் என்று நதி தீர்மானித்தது.’

சின்ன வயதில் தன் அப்பாவை விட்டுவிட்டு வந்ததைச் சித்தார்த்தன் ஞாபகப்படுத்திக்கொள்கிறார் .  அவன் முழுவதும் மாறி விடுகிறான்.  வாசுதேவன் அவனை விட்டு, குடிசையை விட்டுவிட்டு, ஓட்டிவந்த படகை விட்டு விட்டு காட்டுக்குப் போய் விடுகிறான் இன்னும் ஞானத்தைத் தேடி.

ஆற்றங்கரையில் படகோட்டியாக  அருளொளி ததும்பிய யோகீஸ்வரர் ஒருவர் இருப்பதாகக் கோவிந்தனிடம் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.  கோவிந்தன் அந்த யோகீசுவரரைப் பார்க்க  வந்திருக்கிறான்.

சித்தார்த்தனுக்கு அவன் கோவிந்தன் என்று அடையாளம் தெரிந்து விடுகிறது.  கோவிந்தனுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை.

கோவிந்தனைப் பார்த்துச் சொல்கிறான் சித்தார்த்தன். ‘தேடுபவர்கள் எல்லாம் தாங்கள் தேடுவதை மட்டும் தேடிக் கொண்டிருப்பார்கள்.  அதனை மட்டுமே உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பவர்கள் மற்றவற்றைப் பார்க்கவும் புரிந்துகொள்ளலுமான தங்களது வலிமையை இழந்து விடுகிறார்கள்.’

 

கோவிந்தன் சித்தார்த்தனுடன் குடிசையில் தங்குகிறான்.  வாசுதேவன் விட்டுச் சென்ற கட்டிலில் படுத்துக்கொள்கிறான்.  காலையில் எழுந்து விடை பெறும்போது, சித்தார்த்தன் அவன் நெற்றியில் முத்தம் இடச் சொல்கிறான்.

தான் முத்தமிட்ட அந்தக் கருணை பொங்கும் முகத்தைக் கோவிந்தன் அசைவற்று பார்த்தபடி அவன் பாதம் தொட்டான்.

ஹெர்மன் ஹெஸ்ஸியின் இந்த நாவல் உலகப் பிரசித்துப் பெற்ற நாவல்.  ஒவ்வொருவரும் இதை அவசியம் படிக்க வேண்டும்.  ஒரு முறை மட்டுமல்ல பல முறை படித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் சித்தார்த்தின் அலைச்சல் நமக்குப் புரியும்.  நம்மிடம் கூட சித்தார்த்தின் தன்மை இருக்கிறது.  இது ஒரு ஆன்மிக நாவல். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த நாவல் பல விஷயங்கள் மூலம் பலவற்றைத் தெரிந்து கொள்ளலாம். படிப்பவரையே புரட்டிப் போடக் கூடிய நாவல் இது.

 

 

 

 

 

 

 

 

 

 

அடைக்காத தாழ் – அன்புதாசன்

File:Yellow dog.jpg - Wikipedia

ஒரு நாய் அவன் மேல் பாய்ந்து, அவன் குரல்வளையைக் கடித்தது. பிறகு  அவனது தொப்பையில் லிபோசச்ஷன் செய்யத் தொடங்கியது. அந்த சமயத்தில் தான், அவன் விழித்துக்கொண்டான்.

‘சீ! இப்படியும் ஒரு கனவா வரவேண்டும்? கனவில் நாயா வரவேண்டும்?’ நொந்துகொண்டான். அவனுக்கு சின்ன வயதிலிருந்தே நாய் என்றால் அலர்ஜி. நாயைக் கண்டால் கல்லைத் தேடுவான்.

““““““அடுத்த கவலை: ‘காலையில் காணும் கனவு வேறு பலிக்கும் என்று சொல்வார்களே? அப்படி ஒரு வேளை பலித்துவிட்டால்?’ நினைத்துப் பார்க்கவே அவனுக்குத் தாங்கவில்லை. அவனுடைய தூக்கம் இன்னும் முழுமையாகக் கலையவில்லை. சரி, அப்படியே தூங்க முயற்சி செய்யலாமென்றால், அதே கனவு மறுபடியும் தொடர்ந்து – ‘இந்த நாய்களின் அட்டகாசம் இடைவேளைக்குப் பின் தொடரும் சினிமா மாதிரி வந்து விடுமோ’ என்ற பயம் அவனது தூக்கத்தை முழுவதுமாக அழித்தது!

காலை வெயில் – திறந்த ஜன்னலில் நுழைந்து, அவன் முகத்தைச் சுட்டது.
‘என் கால் மட்டும் ஏன் நனைந்திருக்கிறது? ஒருவேளை, காலையில் பார்த்த கனவு பலித்து விட்டதோ?’. கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்த்தவனுக்கு, தூக்கிவாரிப்போட்டது. கால்மாட்டில் நிஜமாகவே ஒரு நாய் இருந்தது.  ‘எச் எம் வி ரெகார்ட் நாய்’ போல கம்பீரமாக உட்கார்ந்து இருந்தது. அதன் முகத்தில், அவனைப் பார்த்து சிரிப்பது போல ஒரு பாவம்.

கிள்ளிப் பார்த்துக் கொண்டான். இது சத்தியமாக கனவு இல்லை. மறுபடியும் அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. கதவு திறந்திருந்தது. திறந்த வீட்டில் தெரு நாய் நுழைந்திருக்கிறது. நுழைந்தது மட்டுமல்லாமல் உடனே மளமள வென்று காலைக் கடன் முழுமையாக -அசலுடன், வட்டியும் சேர்த்து கழித்து விட்டது.

இது என்ன? நாய்களுக்கான கட்டணமில்லாக் கழிவறையா?’
“சூ…” என்று நாயைத் துரத்தினான். பேஷன் ஷோவில் நடக்கும் கவர்ச்சிப் பாவை போல, மெல்ல மெல்ல ஆடி, அசைந்து வெளியே சென்றது.

‘இந்த தெரு நாய்களைச் சுட்டுக் கொல்லவேண்டும். அப்ப தான் நிம்மதியா மூச்சு விட முடியும்’ – நினைத்தான். அந்த நேரம் பார்த்து போன் பெரிதாக அலறியது. அதை எடுக்க எழுந்தவன், வழுக்கி தடாலென்று விழுந்தான்.
“அய்யோ அம்மா” என்று அலறினான். மெல்ல எழுந்து போனை எடுத்தான்.
“ஹலோ” -என்றான்.
“….”
“யாரு?”- என்றான்.
“…….”
தூக்கக் கலக்கத்தில் யாரென்பது சரியாக விளங்கவில்லை.
“யாரு? நாய் மகனா?” -என்றான்.
“யோவ்..என் பெயர் நாயகன்” –போனில் பேசிய அந்தக் குரல் சூடாயிற்று.

“சரி சரி ..ராங் நம்பர்” –என்றான்.

“ராங் நம்பரா இருந்தா என்னடா? எங்கம்மாவை திட்டுவியா? சாவு கிராக்கி… போனை வைடா நாயே!”-போன் குரல் எகிறியது. அத்துடன் இதுவரைக் கேட்டிராத கெட்டவார்த்தைகள் சரமாரியாக வந்தது. அட, தமிழில் இத்தனை வசவு வார்த்தைகளா? 

இன்றைக்கு நாய்கள் தினமா என்ன – தொட்ட இடங்களெல்லாம் நாயா?
போனை வைத்தான்.
‘நரி முகத்தில் முழித்தால் நல்லதாமே!’
‘நாய் முகத்தில் விழித்தால் என்ன பலனோ?’ என்று ஒரு கணம் யோசித்தான்.
பல்லி மேலே விழுந்தால் பலன் என்பது போல நாய்க்கும் யாராவது பஞ்சாங்கம் எழுதியிருந்தால் அதைப் படிக்கவேண்டும் – என்று தோன்றியது.

‘இனி அடுத்து என்ன நடக்கப்போகிறதோ?’ என்று யோசித்தவன், ஒரு வழியாக வீட்டைச் சுத்தம் செய்து, குளித்து விட்டு சோபாவில் அமர்ந்தான்.

‘அடடா.. குளிக்கப்போகும் போது, கதவை மீண்டும் மூடாமல் போனோமே.. அந்த நாய் மறுபடி வந்து விட்டதோ என்று பயந்தான். நல்லவேளை அப்படி ஒன்றும் நடக்கவில்லை. 

வாசலில் ஒரு சலசலப்பு கேட்டது. “குட் மார்னிங், என்ன இவ்வளவு சீக்கிரமே ரெடி ஆயிட்டீங்க” – பக்கத்துக்கு வீட்டு மாமா ஆஜரில்லாமல், திறந்த வாசலில் நுழைந்து, அருகில் வந்து அமர்ந்தார்.

“அது வந்து… வேறொன்றுமில்லை… திறந்த வீட்டிலே நாய்” என்று தன் கதையை ஆரம்பித்த உடன் நாக்கைக் கடித்துக் கொண்டான். மாமா, அவரைத்தான் சொன்னோமென்று நினைத்துக்கொண்டால்?’
அதில் தவறு ஒன்றும் இல்லை தான் -என்றாலும் அவர் பெரியவர்- அவரை அப்படிச் சொல்லக்கூடாது..

மாமா ஒரு பெஸ்ட். அதாவது.. அட்டை போல் ஒட்டிக்கொள்வார். காது பிரச்சனை காரணமாக, வெகு உரக்கப் பேசுவார். சொன்னதையே மறுபடியும் சொல்வார். ஒரு நிமிடப் பேச்சு பத்து நிமிடமாகும். ஜோக் அடிப்பதாக நினைத்துக் கொண்டு அவரே ராக்ஷச சிரிப்பு சிரிப்பார். அவருடைய சிரிப்புக் கொடுமைக்கு பயந்து, அவன் அவரிடம் ஜோக் அடிப்பதில்லை.

பொதுவாகவே ஒரு பிரச்னையோடு தான் வருவார். இன்றைக்கு என்ன விஷயமோ?
“நான் நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்” – என்றார் மாமா.
‘அப்பாடா’ – அவன் பெருமூச்சு விட்டான்.
“சொல்லுங்க மாமா”
“நம் தெருக்கோடியில் ஒரு நாய் இருந்ததே?” என்று மாமா இழுத்தார்.
‘என்னது மறுபடியும் நாயா?’ – அவன் உஷாரானான்.

மாமா தொடர்ந்தார்: “இன்றைக்கு காலங்கார்த்தாலே, அது, மூணு குட்டி போட்டது. அதில் இரண்டு குட்டிகள் ரோட்டில் தவழ்ந்த போது, கார் ஒன்றில் அடி பட்டு…” மாமாவின் குரல் சற்றே தழுதழுத்தது.
தொடர்ந்தார்.
“இது ஒன்று தான் தப்பியது”
“     “ -அவன் ‘ஞே’ என்று விழித்தான்.
மாமா என்ன சொல்ல வரார்?
smiling woman in white crew neck t-shirt holding brown and white short  coated puppy photo – Free Puppy Image on Unsplash
“தப்பித்த நாய்க்குட்டி இது ஒன்றுதான். அநாதை போல அலைந்து கொண்டிருந்தது. இதை நீ வளர்த்துக் காப்பாற்ற முடியுமா” என்றார்.
அவரது கையில் ஒரு சிறு கூடை.
அதைத் திறந்தார்.
அதில், ஒரு அழகிய நாய்க்குட்டி – அவனைப் பார்த்தது.
தன் பெரிய கரு விழிகளைச் சிமிட்டியது.
‘பார்வை ஒன்றே போதுமே’ என்னும் ஒரு பார்வை.
அதன் வாலாடியது.
“வாலைக் குழைத்து வரும் நாய் தான் – அது மனிதர்க்குத் தோழனடி பாப்பா’- என்ற பாரதியின் வரிகள் அவன் மனத்தில் ஓடியது.

மனத்தில் யாரிடம் எப்பொழுது எப்படி காதல் பிறக்கும் என்பது யாரே அறிவர்?
அந்தக் கரியவிழிப் பார்வையில், அந்த ஒரு நொடியில், அன்று நடந்த நாய்த் தொல்லைகள் அனைத்தும் அவன் மனதில் இருந்து மறைந்தது.

அது அவனை ஆசையுடன் பார்த்தது.
அவனும் அதை ஆசையோடு பார்த்தான்.
‘அவளும் நோக்கினாள்… அண்ணலும் நோக்கினான்‘ – மொமென்ட் அது.
‘உன்னை மாமா அநாதை என்று சொன்னாரே. நீ இனி அநாதை இல்லை. உனக்கு நான் இருக்கிறேன்”- என்று எண்ணினான்.
‘இன்றிலிருந்து நானும் அநாதை இல்லை’ -தீர்மானித்தான் .
அந்த நாய்க்குட்டியை ஆசையுடன் கையில் எடுத்து அணைத்துக்கொண்டான்.
அவன் கண்ணில் ஏன் அந்த ஒரு சிறு துளி வரவேண்டும்?
அன்பு வருவதற்குக்  காரணம் ஏதாவது இருக்க வேண்டுமா என்ன?.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

 

 

“களங்கமற்ற உறவு” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

வியப்பூட்டும் இந்தியா: கும்ஹார் மண்பாண்டங்கள் | வியப்பூட்டும் இந்தியா:  கும்ஹார் மண்பாண்டங்கள் - hindutamil.in

அலாதியான அலங்காரம்! விதவிதமான மண்பாண்டங்கள். பல சிறு தொழில் நிறுவனங்கள் பங்கு பெறும் கலைக் கண்காட்சி. குறிப்பாக இளம் கலைஞர்கள், அவர்கள் உருவாக்கியதற்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக அறிவிப்பு. இதுதான் எங்களது ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அருகிலிருந்தால் ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுடன் நாலைந்து ஆசிரியர் நாங்களும் சென்று இருந்தோம்.

நுழைந்ததிலிருந்தே பல மண் பொருட்களைப் பார்த்ததும், அவை எனக்கு முன்னாள் க்ளையண்ட் சுநீத்தீயை ஞாபகப் படுத்தியது.. பத்து வருடத்திற்கு முன்பு பார்த்தவள். அவள் கைவிரலின் ஜாலம் அப்படி.

நினைவலைகளில் மூழ்கி இருந்த என்னை திடீரென்று பின்னாலிருந்து இரு கரங்கள் அணைத்தன. கலகலவென கைகளில் குலுங்கின வளையல்கள். திடுக்கிட்டுப் பார்த்தேன். அவளே!! ஸாக்க்ஷாத் சுநீத்தீ! இருவரும் திகைத்தோம். எப்போதும் நான் பார்த்த க்ளையண்டை பொது இடங்களில் கண்டால், தெரிந்தார் போல் காட்டிக் கொள்ள மாட்டேன். இங்கு தலைகீழாக ….

நாங்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் மற்றும் பலர் கூடி வந்தார்கள். அவர்கள் எல்லோரும் மராட்டியில் ஒரே குரலில் குசலம் கேட்க, மறுபடியும் திகைத்துப் போனேன். எங்கள் நிறுவனம் நடத்தும் கம்யூனிடீ செயல்திட்டத்தில் இணைந்த பெண்கள். ஆச்சரியப் பட்டேன். சுநீத்தி அவர்களை எல்லாம் தன்னுடன் அணைத்து “என்னுடைய நிறுவனத்தில் எனக்குச் சகாயம் செய்கிறார்கள்” என்றாள். தான் முதலாளி என்றதை இவ்வாறு விவரித்தாள். ஆமாம் சுநீத்தி யாரையும் தாழ்வாகப் பேச மாட்டாள்.

சட்டென்று சுநீத்தீ ஒருவனின் கையை இழுத்து, “அவிநாஷ், என் கணவர்” என்று அறிமுகம் செய்த வாரே, “இவங்க தான் நான் சொன்ன மேடம்” என்றதும் அவரும் “ஓ” என்று வியப்புடன் கூறும் போதே, பக்கத்தில் சிறுவன் ஒருவன் எட்டிப் பார்க்க, அவனையும் தன் மகன் மதுசூதனன் என்று அறிமுகப் படுத்தினாள்.

இதையெல்லாம் உள்வாங்கிக் கொள்வதற்குள் இன்னொரு அதிர்ச்சி! “பிங்க்கீ” என்று அழைத்துக் கொண்டே வந்தவனைப் பார்த்தால், கான்ஹா!! ஒரு பெண் அவனுடன் கையைக் கோர்த்து, கையில் சிறுமி ஒன்றைத் தூக்கியவாறு ஓடோடி வந்தாள். தன் மனைவி மிருதுளா என்று கான்ஹா அவளை அறிமுகப் படுத்தினான்.

மிருதுளா அவனிடம் ஏதோ கேட்க, அவன் தலையை ஆட்டி, பெருமையுடன் சுநீத்தீயை ஜாடை காட்டினான்,அன்றும் இன்றும் அதேபோல.  மிருதுளாவிடம் அவன் ஏதோ பதில் சொல்ல, அவள் என் கையை அழுத்தி நன்றி கூறினாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் அருகில் சுநீத்தீயின் முரளி மாமா. சங்கடம் நிறைந்த குரலில், “மேடம் பார்த்தீங்களா, இப்பவும்..” என்று இழுத்தார். சுநீத்தீ-கான்ஹாவின் தர்மசங்கடமான நிலையைக் கண்டு கொண்ட மிருதுளா, கண்சிமிட்டும் நேரத்தில்  கணவனின் முதுகைத் தட்டி, எல்லோரையும் பார்த்து “நண்பேன்டா” எனச் சொல்லிச் சுதாரித்து விட்டாள்.  உறவுகளின் வண்ணங்கள் வித விதமானவை!!

ஒரு விதத்தில் இதற்கெல்லாம் முரளி மாமா தான் காரணம். வாருங்கள் கொஞ்சம் ப்ஃளாஷ் பேக் செய்யலாம்.

மாலை ஐந்தரை மணி, கிளம்பும் நேரம். அப்போது

ஒரு கான்ஸ்டபிள் அழு கொண்டிருந்த பதினைந்து-பதினாறு வயதுள்ள பெண்ணை (சுநீத்தீ) அழைத்து வந்தார். அவளை இரும்புப் பிடியாகப் பிடித்திருந்தவர் (முரளி மாமா), விவரங்களைக் கூறினார். சுநீத்தீ காதலிக்கிறாளாம், அதை முறியடிக்க முரளி மாமா அவளைக் காவல்துறையினர் கண்டிப்பதற்காக அழைத்து வந்ததாக கான்ஸ்டபிள் கூறினார்.

எங்களது நிறுவனம் காவல் நிலையத்தில் இருப்பதால் எங்களது அணுகுமுறையை அறிந்தவர்கள் காவல்துறையினர். நாங்கள் எல்லோரும் மனநலன் படித்தவர்கள், ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்றும் தெரியும்.

முரளி மாமா ஆரம்பித்தார், சுநீத்தீ தன்னுடைய தம்பி மகள். அவர்கள் ஊரில் வசதிகள் குறைவாக இருந்ததாலும் தம்பியின் சம்பாத்தியம் முறிந்ததாலும் இவளைத் தன்னுடன் இருக்க அழைத்து வந்தாராம். வந்ததிலிருந்து, வீட்டு வேலையில் கைகொடுத்து, பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டதில் ஒத்தாசையாக இருக்கிறாள் என்று ஒப்புக்கொண்டார்.

இதை விவரிக்கும் போது சுநீத்தீ அழுதவாறே இருந்தாள். முகமெல்லாம் கைவிரல்களின் தடயங்கள். அதைக் குறித்துக் கேட்க, தயக்கமோ பயமோ இல்லாமல், மாமா உடனே தான் அடித்ததாக ஒப்புக் கொண்டார். எவ்வாறு இது தகாத வன்முறை என்றும், அது எந்த அளவிற்கு ஒருவரைப் பாதிக்கும் என்றும் விளக்கினேன்.

தன்னுடைய பொறுப்பில் இருக்கும் போது காதல் ஏற்பட்டு விட்டதால்தான் அடித்ததாகக் கூறினார். அவமானம் எனத் தோன்றியது. காதலை முறிக்க இன்னொரு உறவினர் வீட்டில் அவளை விடப் போவதாகத் தெரிவித்தார்.

என்னுடைய  சமிக்ஞையைப் புரிந்து கொண்டு, எங்களுக்கு உதவும் மங்களா சுடச்சுட நிறையச் சர்க்கரை போட்ட தேநீர் கோப்பையை சுநீத்திக்கு வழங்கினாள். இந்த சூடு, தித்திப்பு, உடலுக்கும் மனதுக்கும் ஆறுதல் பாணம். விரல்கள் நடுங்க, பருகினாள் சுநீத்தி. அவளிடம், பருகும் வரை காத்திருப்பேன் என்றேன்.

முரளி மாமாவுக்கும் காப்பி தந்துவிட்டு எங்களது அணுகுமுறையை விளக்கினேன். அவருடைய விவரிப்பிலிருந்து உணர்வு, உறவில் சிக்கல்கள் தென்பட்டது. அதைச் சுதாரிக்க இருவரும் முழுமையான

ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றேன். குறிப்பாகக் காதலை முறிப்பதோ, வளர்ப்பதோ எங்களது கண்ணோட்டம் அல்ல என்று கேட்டதும் மாமா அதிர்ச்சி அடைந்தார். விளக்கம் அளிக்க, ஒப்புக்கொண்டார்.

இவையெல்லாம் சுநீத்தியின் முன்னரே நடந்தது. அவளுடன் சில ஸெஷன்கள் தேவை என்று சொல்லி, நாள்-நேரத்தைக் குறித்துக் கொண்டோம். வர ஆரம்பித்தாள். மாமாவும்.

முதல் ஸெஷனில், அவளுடைய விவரங்கள் அறிந்து கொள்வதிலிருந்து ஆரம்பமானது. வீட்டின் முதல் குழந்தை சுநீத்தி. பிள்ளைக்கு ஏங்கி, பெண்ணாக இவள் பிறந்ததால் பெற்றோர்கள் இதை எப்போதும் சொல்லிக் காட்டுவதுண்டு. அவளைச் சுமையாக நினைத்தார்கள். அடுத்த இருவரும் ஆண் குழந்தை. தம்பிகளுக்குப் பல சலுகைகள் உண்டு. ஒரே ஒரு விஷயத்தில் இவளைப் புகழ்வது, அவளது நிறம் ரோஜாப்பூ போன்றதாக என்று மட்டுமே.

அடுத்த பல ஸெஷனில் புரிந்தது, அதனாலேயே அக்கம்பக்கத்துப் பசங்களால் அவளுக்கு “பிங்க்கீ” என்ற புனை பெயர் சூட்டப்பட்டது. பெயரை முடிவு செய்தது கான்ஹா. இந்த பருவ வயதினர்களில் இது சகஜம்தான். வீட்டில் இதை நிந்தனை செய்தார்கள். பிங்க்கீ சட்டை செய்யவில்லை. ஸோவாட் என்று இருந்தாள். மாமாவிற்கு வியப்பு. அன்றிலிருந்து அங்குள்ளவர்கள் இந்தப் பெயராலேயே அவளை அழைத்தார்கள்.

பள்ளிக்குப் போகும் வழியில் கான்ஹாவின் பள்ளிக்கூடமும் இருந்ததால் பிங்க்கீ, கான்ஹா மற்றும் ஆறு ஏழு நண்பர்கள் குழுவாகப்  போய் வரும் பழக்கம் ஏற்பட்டது. சுநீத்தி வர்ணிப்பின் படி இந்த  “க்ளிக்” (clique) நல்ல நெருக்கமானதாக இருந்தது. ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து கொடுப்பது, பகிர்வது, மனச் சஞ்சலங்களைச் சுதாரிப்பது எல்லாம் உண்டு.

பல உரையாடலில் சுநீத்தீ புன்முறுவலுடன் சொன்னாள், வீட்டில் தான் சொன்னால் செய்ய மாட்டார்கள் அதையே இந்தக் கூடத்தில் கூறினால், உடனே எடுத்துக் கொள்ளப் படும். அந்த வயதிற்கு அப்படித் தான். நட்பின் கெத்து!!

அவர்களில், கான்ஹா சற்று வித்தியாசமான பழக்கம் உள்ளவனாக இருந்தானாம். அவன் ஓட்டப் பந்தயத்தில் பயிற்சி பெறப் பல மாலைநேரம் போய் விடுவான். அவன் வர முடியாத இந்நாட்களில் ஒவ்வொருவருக்கும் நாலைந்து வரியில் ஒரு பகிருதல் எழுதி அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடத்தில் விட்டுச் செல்வான். இது, பலமுறை முரளி மாமா கையில் அகப்பட்டுப் போய்விட்டது. இந்த முறை சந்தேகம் அதிகமாக, சுநீத்தியின் விளக்கம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. அடித்து அழைத்து வந்து விட்டார்.

மாமாவின் ஒத்துழைப்பு குறைவாக இருந்ததால், நாங்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர் மனப்பான்மை அவ்வாறே இருந்தது.

சுநீத்தி மனநிலையை அவளும் அறிந்து கொள்ள, அடுத்த சில ஸெஷனில் தன் மனக்குமுறலை விவரிக்கச் சொன்னேன். பல காரணங்கள். அவற்றில் ஒன்று தோழமையுடன் கூட்டத்தில் எந்த வித எதிர்பார்ப்பு இல்லாமல் கிடைக்கும் பாசம், அங்கீகாரம். இது அவளுடைய மனோபலத்தை ஊக்குவித்து விட்டதாகக் கூறினாள். அவளுடைய பெற்றோர்கள் பெண்ணாக இருப்பதால் எப்போதும் பாரமாக, இடைஞ்சலாக இருக்கிறாள் என்று சொல்லச் சொல்ல, அவர்களிடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. தன்னை நிராதரவாக நினைத்த குறையை, இங்கே நண்பர்கள் கூட்டம் போக்கி விட்டது மனதுக்குப் பிடித்தது.

இந்த நிலையில் மாமாவின் சொற்கள் தேள் கடி போல இருந்தது. மாமி ஆதரவை, ஆசையை மாமாவுக்குப் பயந்து காட்ட மாட்டாளாம். சுநீத்தி வளரும் பிராயம், பாசம் அன்பு காட்டினால் அது சரியான வளர்ப்பு இல்லை என்றது மாமாவின் கணக்கு. எனவே கண்டிப்பான வளர்ப்பு.

இங்கு, முரளி மாமா வீட்டில் பாதுகாப்புக்குக் குறையில்லை. பாசமான தோழர்கள். படிப்பில் கவனம் அதிகரித்தது. 90-95 மதிப்பெண் எடுத்தாள். அப்படியும், மாமா-மாமி இருவரும், சுநீத்தி அவளுடைய ஸ்நேக கூடத்தாலேயே மீதி மதிப்பெண்ணைக் கோட்டை விட்டாள் என்று குறை படுவார்களாம். கவனம் குறைவதற்கு நண்பர்களுடன் பேச்சு, சிரிப்பினால் தான் எனச் சொல்வது பழக்கமாகியது. மாமா-மாமி ஏன் இந்த வகை நடத்தை, புரியவில்லை என்றார்கள். ஏனோ அவர்கள் தங்களது பருவநிலை மறந்துவிட்டார்களோ எனச் சொல்லியது என் மைன்ட் வாய்ஸ்.

சுநீத்தி வரவில்லை என்றால் கான்ஹா வீட்டிற்கு வந்துவிடுவான். க்ளிக்கில் உள்ளவர்கள் எல்லோருக்கும் சூத்திரதாரி என்று தாமே நியமித்துக் கொண்ட பதவி என்பதால், இவளிடம் நேரடியாக அனைத்து விஷயங்களையும் சொல்லவே. ஒரு நாள் அவளை மாமா அடிப்பதைப் பார்த்துத் தடுக்க வந்தவனை மாமா அடித்துத் துரத்தி விட்டார். சுநீத்தி மிக வெட்கத்தில் மூழ்கினாள்.

நண்பர்கள் குழு அவள் மேல் இன்னும் கவனிப்பை அதிகமாகிக் கொண்டனர்.

ஒரு மாதமாக கான்ஹாவின் காகிதங்களை மாமா படித்து, அந்த அளவுக்குப் பாசம், விசாரிப்பது, அன்புக் கலவை இருப்பதால், காதல் கடிதம் என முடிவு செய்து கொண்டார். எது நடக்கக் கூடாது என நினைத்தாரோ அதுவே ஆகிறது என்று நினைத்தார். முரளி மாமா இவர்கள் உறவைக் காதல் எனக் கொச்சைப் படுத்தியதில், சுநீத்தி வேதனை அடைந்தாள், வெட்கப் பட்டாள்.

இந்த பருவநிலையில் தன் வயதினரோடு பேசத் தோன்றும். ஆனால் சுநீத்தீயை தவறான கண்ணோட்டத்தில் மாமா மனம் பார்த்தது.

மாமாவின் கட்டளையின் படி, நண்பர்கள் வட்டம் கான்ஹாவின் சகவாசம் ரத்து ஆனது. பள்ளிக்குப் போகும் வழியிலும் தான். இது சுநீத்தி மனதைப் பாதித்தது.

அவர்கள் குழு வட்டம், நண்பர்கள் தான், காதல் அல்ல, மாமா சொல்வது வேதனை அளிக்கிறது எனப் புரிய வைக்க முயன்றாள். வியந்தேன், இந்த இளம் மனதின் பக்குவத்தை உணர்ந்து! மாமா ஏற்க மறுத்தார். விளைவு மாமா காவல்துறை உதவி நாடியதே.

களங்கமற்ற உறவு, ஆனால் ஒரு சந்தேகம் சுநீத்தீயை வாட்டியது. அவள் கான்ஹாவிடம் மனம் விட்டுப் பேசும் போது, அவர்களது குழுவில் இருக்கும் போது ஒரு வித சிலிர்த்து விடுவதாக. இது நேரும் போது கூச்சமாக இருப்பதாகக் கூறினாள்.

அவர்களது உயிரியல் படிப்பில் உடல் உணர்வு பற்றிய நிலையை எடுத்துக் கொண்டு பல ஸெஷனில் இதை ஆராய்ந்தோம். வளரும் போது பல உடல் நிலை ஏற்படுகிறது. அதனால் நேரும் சுரப்பிகள் விளைவாக நேரும் உணர்ச்சியைப் பற்றி உரையாடினோம்.

அதே அனுபவமே வேறு எந்த இடத்தில் உணருகிறாய் எனக் கண்டு கொள்வது பல நாட்களின் ஹோம்வர்க் ஆனது. அது வீட்டிலோ, பள்ளியிலோ, சுநீத்தீ தான் செய்வதைக் கூர்ந்து கவனிக்கப் பரிந்துரைத்தேன்.

சமையல் செய்ததை மற்றவர் ருசித்துச் சாப்பிடுவதைப் பார்க்கையில், தான் பாடம் சொல்லித் தந்தவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்த தருணம், மாமா மாமிக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே சகாயம் செய்யும் போதுது என ஒரு நீளப் பட்டியலை சுநீத்தீ போட்டாள். அப்போது தான் இவளின் தையல், சித்திரக் கலை, மண்பாண்டம் கைகளால் செய்யும் மாயாஜாலம் என்ற திறமைகள் எல்லாம் வெளிவந்தது. இத்தனை talents, ஆனால் தன்னடக்கம் மிக அதிகமாக இருந்தது!!

இந்த சமயத்தில் மாமா ஒத்துழைப்பு இல்லாததால் மாமியை ஸெஷன்களில் வரவழைத்தேன். மிகப் பொருத்தமாக இருந்தது. அவர்கள் சுநீத்தியின் உதவும் தன்மையைப் பாராட்டினார். ஆனால் பெண்களைப் பாராட்டும் பழக்கம் அவர்கள் கலாச்சாரத்தில் குறைவாக இருப்பதால், வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை என்று விவரித்தாள்.

அவர்களின் கடும் கண்டிப்பிற்கு வேறொரு காரணமும் உண்டு என்பதைப் புரிந்து கொண்டேன். சுநீத்தி பெற்றோர் இவர்களுக்கு இரண்டும் ஆண் குழந்தை என்பதால் அவளை தாரைவார்த்துக் கொடுத்து விட்டார்கள். முரளி மாமா தன் வளர்ப்பில் தப்பு எதுவும் இருக்கக் கூடாது எனப் பல கட்டுப்பாடு விதித்தார். சுநீத்தி பொறுமையின் சின்னம் என்றதால் எல்லாம் ஏற்றுக்கொண்டாளாம்.

மாமிக்கு சுநீத்தியின் நண்பர்கள் கூட்டத்து நெருக்கம் புரியவில்லை என்றாள். தான் சொல்வதை விட அவர்கள் சொன்னால் செய்வாளாம். மாமிக்கு இந்த பருவநிலையைப் புரியவைக்க சுநீத்தி வயதுடைய எங்களது கம்யூனிடீ ப்ராஜெக்ட் பெண்களுக்கு, சுநீத்தியை தன்னுடைய கைவண்ணம் கற்றுத் தரும் வகையில் அமைத்தேன். கூடவே மாமியும் அவர்களுக்குத் தையல் பயிற்சிப்பதில் ஈடு படச் செய்தோம்.

மாமியிடம் அங்கு நடப்பதைக் கவனிக்கப் பரிந்துரைத்தேன். செய்தாள். அந்த பருவநிலையில் உள்ளவர்களின் நெருக்கம், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பது, ஒத்தாசை செய்யும் வகை, உணர்ந்தாள். சுநீத்தி அவர்களுடன் கோந்து போல் ஒட்டிக் கொண்டது, இணைந்த வண்ணம் பார்த்து, அந்த வயதினரின் நடத்தையைப் புரிந்து கொண்டாள்.

இதை சுநீத்தீ-கான்ஹா குழுவினருடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொன்னேன். மாமி மனம் தெளிவானது. மாமி-சுநீத்தி பந்தம் நெருக்கமாகியது.

ப்ராஜெக்டில் பண்டங்களைச் செய்வதுடன் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் ஊக்குவித்தாள் சுநீத்தி. விற்பனை செய்முறையை மாமி கற்றுக் கொடுக்க, பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இப்போதும் அவள் அந்த ஆனந்த நிலையை அனுபவிப்பதாகச் சொன்னாள்.

பள்ளிக்குச் செல்வதுடன் இப்போது இந்த கலையை கற்றுக் கொள்வது, கற்றுத் தருவது என நாட்கள் ஓடின. அவளை கான்ஹா,  நண்பர்கள் கேலியாக “மிஸ் உத்ஸாகம்” என அழைத்தனர். இந்த நண்பர்கள் கூட்டம் இவளுடைய திறமையைப் பார்த்து வியந்தது. மேலும் உற்சாகம் செய்தனர்.

காவல்துறை அதிகாரிகள், நாங்கள் எல்லாம் மாமாவிடம் பல முறை எடுத்துச் சொல்லி, மாமியும் விவரித்ததால் இந்த விஷயத்தை விட்டு விடுவதாகக் கூறினார். சுநீத்தி நிலை நன்றாகச் சுதாரித்ததாலும் ஸெஷன்கள் முடிவடைந்தது.

அந் காலகட்டத்திற்குப் பிறகு இப்போது தான் சுநீத்தியை சந்தித்தேன்.

முரளி மாமா ஏனோ இந்த தோழமையை இன்னும் தவறான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தார். அதனால் தான் இவ்வாறு ஒரு கமெண்ட். சில சமயங்களில் இவ்வாறு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மேலோட்டமாக இருக்குமே தவிர, க்ளையண்ட் நிலைமையைச் சுதாரிக்க உதவாமல் இருக்கும். முரளி மாமா இன்றும் தன்னுடைய தவறான மனப்பான்மையுடன் இருப்பது பலருக்கு வேதனை தருவதால் அவரை தனியாக அழைத்துப் பேசினேன். ஒரு நாலைந்து ஸெஷன்களுக்கு வர ஒப்புக்கொண்டார். ஆரம்பித்தேன்.

 

 

 

வடுஇருக்கிறதே – – வளவதுரையன்

சத்துப்பேழை” பலாப்பழம் - மருத்துவ குணங்கள் ஏராளம்!

உன்னை ஒரு

பலாப்பழமாக உணர்கிறேன்.

 

அணுகுவதற்குச் சற்று

கடினம்தான்.

சற்றுக் கவனம் பிசகினும்

முள் குத்தும்.

வலித்துக் கொண்டே இருக்கும்

 

காயம் இல்லையெனினும்

வடு இருக்குமன்றோ?

 

ஆனால்

உள்ளிருப்பதை எண்ணி

உவகையுடன்

பழகுகிறேன்.

 

பிளந்து வெயிலில்

வைக்கும் துன்பம்

எனக்கும்தான்

ஏற்படுகிறது.

 

இருந்துமென்ன?

 

எல்லாச் சுளைகளும்

எப்போதும்

இனிப்பதில்லையே!

 

கவ்வும் சூது – ஜனநேசன்  

Banned online rummy after complaints of bankruptcy and suicide, Telangana  tells Hyd HC | The News Minute

   அவனைப் பற்றிய ஆச்சரியம் அடங்கு முன்னே அதிர்ச்சியான  செய்தி வந்தது. அவன் என்னோடு  கட்டுமானப்  பொறியல் படித்துவிட்டு  வேலை தேடிக் கொண்டு இருந்தான் . நான்   எனது தந்தைக்கு தெரிந்த கட்டுமான‌ ஒப்பந்ததாரரிடம் வேலையில் தொற்றிக் கொண்டேன் .  நானும்  அவனும் அரசுத்தேர்வுக்கு விண்ணப்பித்து  இருவரும் இரவுகளில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தோம். அவன் பல நாட்கள் என்னோடு படிக்கச் செல்வதாகச்  சொல்லி விட்டு தெரு நண்பர்களோடு சினிமா  ,  குடி ,சீட்டாட்டம் என்று திரிந்து  விட்டு  போதை இறங்கிய நேரம் வீட்டுக்குள் போவான்.

   அவனது நடத்தையைக் கண்டு அவனது அம்மாவும் அப்பாவும் முகஞ்சுளித்து முனங்கினர். அவன் அக்கறையோடு படித்து வாழ்க்கையில் தனக்கான இடத்தை அமைத்துக்  கொள்வான் என்ற நம்பிக்கையை இழந்தனர். ஊர் சுற்றி மாட்டுக்கு கால்கட்டை போட்டால் அடங்குவான்.   வீடு தங்கி ஒழுங்காவான் என்ற நம்பிக்கை தான் அவர்களிடம் எஞ்சி நின்றது.

    அவன் ஆள் வாட்ட சாட்டமா ஓங்கு தாங்காய் இருப்பான். பிரபல  அரசு கட்டிட ஒப்பந்ததாரர்  கவனத்திலும் வலையிலும்  விழுந்தான்.  யார்  வலையில் யார் என்று தீர்மானமாகாத நிலையில் திருமணம் நடந்தது.    பொண்ணும் லட்சணமான பெண்தான்.     கல்யாண ஜோர் கலையாத நிலையில் நடந்த அரசு  போட்டித் தேர்வில்  அவன்  தேர்வாகி விட்டான்!  .படிக்கையில்  கூடவே  இருந்து  சிக்கலான  வினாக்களை  எளிதாக  விளக்கிய  நான்  விளிம்பில் தேர்ச்சி பெற்றேன். அவன் எப்படி எழுபது சதம் மதிப்பெண் பெற்று  தேர்வானான் என்ற  புதிர் விடுபடு முன்னே அவனுக்கு இளநிலை பொறியாளர் பணி  பக்கத்து மாவட்டத்திலியே மாமனார் வாங்கிக் கொடுத்தார். அவன் குடும்பத்தோடு அரசுகுடியிருப்பில் குடியேறினான். அரசுகுடியிருப்பு மகளுக்கும்  மருமகனுக்கும் வசதியாக இல்லை என்று மாமனார் அவ்வூரில் ஓர் அழகான வீடும்  வாங்கிக் கொடுத்தார்.

     அவன் இரண்டு மாதங்கள் வரை அவ்வப்போது என்னிடம் கைப்பேசியில் நன்றி தொனிக்கப் பேசினான். அப்புறம் நான்தான்  ஓய்விருக்கும் போது  பேசுவேன்.  அவன் வேலை மும்முரம் என்று பேச்சைக் குறைத்தான்.  ஒருநாள் அவனது அம்மாவையும் அப்பாவையும்  மாரியம்மன் கோயில் அருகே பார்த்தேன். ஆட்டோவில் ஏறப் போன அவனது   அம்மா முகமெல்லாம் பூரிப்பாக எனது வேலை விவரங்களை விசாரித்தாள்.                                           “தனக்கு இன்னும் பணியமர்வு ஆணை வர வில்லை . இந்த மாதக் கடைசியில்  வந்துரும் . வந்ததும் பணியில் சேரும் போது சொல்கிறேன்..  அவன் எப்படி இருக்கிறான், போனில் பேசினால் இரண்டொரு வார்த்தையில் முடித்துக் கொள்கிறான்;      நல்லா இருக்கான்ல்ல?  “ என்று கேட்டேன்.”

      “ரொம்ப நல்லா இருக்கான்ப்பா!    அவனுண்டு வேலை உண்டு;    ஆபிஸ் விட்டா வீடு!  வீடு விட்டா ஆபிஸுன்னு இருக்கான்!  மருமகக்கூட மூனுமாசம்! இப்பத்தான் மாரியம்மனுக்கு நேர்த்திக் கடன் முடிச்சிட்டு வாறோம்.  இந்தா திருநீறு எடுத்துக்கோ.    அவனை போன் போட்டு தொந்தரவு பண்ணாதேப்பா!    இப்பத்தான் பிள்ளை திருந்தி இருக்கான்!“  என்று  சொல்லிக் கொண்டே ஆட்டோவில் ஏறினாள்.  அப்பா தலையசைத்து ஆமோதித்து ஆட்டோவில் ஏறினார்.    அவன் நல்லா இருக்கிறது எனக்கும் பெருமை  தான் என்ற எனது பதிலை ஆட்டோவின்  உறுமல் விழுங்கிக் கிளம்பியது.

  ‘குடிகாரன் ,ஊதாரி ,பொறுப்பில்லாதவன், சாமக்கோடாங்கி ’      இப்படியான பட்டங்களை வாங்கியவன் நிஜமாகவே திருந்திட்டானா  ,எப்படி இருக்கிறான் என்றறிய அவனிருக்கும் ஊருக்கு நான்  போக வாய்த்தபோது அவனது  வீட்டுக்குப் போனேன.  மாலை நேரம் .அவனுமிருந்தான்.    மனைவி உற்சாகமாக வரவேற்றாள். நான் துணை  மாப்பிள்ளை போலிருந்து மாப்பிள்ளைக் கோலத்திலிருந்த அவனை நான்  கலாய்த்தை மணப்பெண்ணாக இருந்த அவள் ரசித்தாள்.    இவர்களது நட்பின் நெருக்கத்தை அங்கீகரித்தாள்.

   நான் உரிமையோடு எப்படிம்மா பார்த்துக்கிறான் என்று கேட்டதுக்கு நல்லாவே பார்த்துக்கிறார் அண்ணே என்று வெட்கம் பூசிய வார்த்தைகளைப்  பொழிந்தாள். அவனும் கண்ரெப்பைகளில் இருந்த சுருக்கம் நீங்கி முகத்தில் பொலிவும் உடம்பு ஒரு சுற்று பெருத்தும்  காணப்பட்டான் .இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு  தான் போகணும்! என்று  என்னைக்  கட்டாயப்படுத்தினர் .இரவுணவு தடபுடலாக செய்திருந்தாள். நான்   மனம் மகிழ்ந்து விடைபெற்றேன்  .காலாகாலத்தில் கல்யாணச் சாப்பாடு போடுங்கண்ணே என்று என்னிடம் அவள் சொன்னதை  அவனும் ஆமோதித்தான்..

   ஆறு  மாதம் தான் கடந்திருக்கும்.    அவன்  தூக்க மாத்திரைகள் நிறைய விழுங்கி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.   நான்  விடுப்பு எடுத்துக் கொண்டு பறந்தேன்.      அவன் தற்கொலை செய்து கொள்ளக் காரணமில்லை. நல்ல மரியாதையான வேலை  ; அன்பான அழகான மனைவி;    அமைதியான குடும்பம்; அனுசரணையான அம்மா அப்பா ; தலையில் வைத்துக் கொண்டாடும் மாமனார்,  மாமியார். உத்தியோகத்திலும் எவர் தொல்லை ,நெருக்கடி   இல்லை!    பழைய கெட்ட பழக்கங்களுக்கும் வாய்ப்பில்லை ! ஆனால் ஏன்  தற்கொலைக்கு முயன்றான் என்பது  தான் புதிராக இருந்தது!.  எனது சிந்தனை எல்லைக்கு , காரணம் ஏதும் எட்டவில்லை.!

    அவன் தீவிர  சிகிச்சை கண்காணிப்புபிரிவில் கிடத்தப்பட்டு இருந்தான் .அறைக்கு வெளியே நிறைமாதக் கர்ப்பிணி மனைவி,    மாமனார்  ,  மாமியார் ஒருபுறம் .அம்மா அப்பா இன்னொருபுறம் சோகம் கவிந்த  முகங்களுடன் நின்றிருந்தனர் .எதிர்ப்புறம் சிலர் இழப்பை எதிர்நோக்கிய சோர்வுடன் இருந்தனர்.  என்னைப் பார்த்ததும் அவனது அம்மா கைகளைப் பற்றிக்கொண்டு “யார் கண்ணு பட்டதோ எம்பிள்ளைக்கு இப்படியானதே… தளதளன்னு உலை கொதிச்சு.    வரும் போது அடுப்பை அமர்த்தினது  மாதிரி அவன் பொழப்பை  அணைச்சுட்டாகளே…அவன்.  வேகமா முன்னேறி வளர்ந்தது  இப்படி வழுக்கி விழுகிறதுக்கா…“ அம்மா  அரற்றி விம்மினாள்!

.      என்னைப்.  பார்த்ததும்    அவனது     மனைவி: ”அண்ணே  , உங்க ஃபிரண்டு இப்படி என்னை நட்டாத்தில்  விட்டுட்டுப் போவாருன்னு கனவுல  கூட நினைக்கலையே…  “    என்று இவனது கைகளைப் பற்றிக் கொண்டு குமுறினாள்.  அவளது அம்மா நனைந்த மணல் போல் பொதுபொதுத்து வீங்கிய.முகத்தோடு,

   “ தம்பி பிள்ளைத்தாய்ச்சி காலையிலிருந்து பச்சைத் தண்ணிகூட குடிக்காம வெறும் வயித்தோடு அழுதுகிட்டு நிற்கிறாளே  ,  இவளை சமாதானப்படுத்தி கேண்டீனுக்கு  கூட்டிட்டுப்.  போயி சாப்பிடவை தம்பி.  வயித்துப் பிள்ளைக்காரிக்கு  ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சுன்னா  என்ன செய்யிறது….!“

     அவனது குடும்பத்தாரை கேண்டீனுக்கு அழைத்தேன்;  அவர்கள் வர‌ மறுத்தார்கள். அவனது மனைவியை அழைத்து போகச் சொன்னார்கள். அவளை அழைத்தேன். அவளும் மறுத்தாள். வயிற்றில் சுமக்கும் சிசுக்காவது.  எதாவது சாப்பிட வேண்டும் என்று கெஞ்சினேன் ; அவள் கண்ணீர் பொங்க  நத்தை போல மெல்ல ஊர்ந்தாள்.  ரெண்டு இட்டலியும் காபியும் மட்டும் போதும் என்றாள்.    அழுது வீங்கிய முகத்தினள் இட்டலியை சிரமப்பட்டு விழுங்குவது பார்க்க பரிதாபமாக இருந்தது . காபியின் சூடு  வயிற்று சிசுவுவை சுட்டு விடுமோ என்றஞ்சி நன்றாக ஆற்றி சிறுசிறு  மிடறுகளில் விழுங்கினாள். அவளது ஒவ்வொரு அசைவிலும் தாய்மை  மிளிர்ந்தது.

     சாப்பிட்டபின் கைகழுவி வந்தவளை ஒர் ஓரமாக காற்றாடிக்கு கீழ் உட்கார வைத்து சற்று ஆசுவாசப்பட்ட பின் இவன் ஆதங்கம் தொனிக்கக் கேட்டேன் ;

 “தங்கச்சி என்ன நடந்தது?  அவன்  இந்த முடிவுக்கு போகிற ஆளில்லையே…!”

மென்மையான குரலில் அவள் சொன்னாள்;    “அவருக்கு என்ன பிரச்சினைனு தெரியலைண்ணே.      ஆனால் இந்த மூனுநாளா அவரு சோர்ந்து போய் இருந்தார் .உடம்புக்கு முடியலையாங்க  ,    ஏன் சோர்ந்திருக்கீங்கன்னு ரெண்டுமூனு தடவை கேட்டேன்.    ஒன்னுமில்லை    .நான்  நல்லாத்தான் இருக்கேன்.    கட்டட.  வேலை நடக்கிற ரெண்டு மூனு இடங்களுக்கு போய் வர்ற அலைச்சல் என்றார். ஆனால் சாப்பிடும் போது பார்வை சாப்பாட்டில் இல்லாமல் வடக்கும் தெற்குமாய் கண்கள் உருண்டுருண்டு நிலைகொள்ளாமல் உழன்றன.    அதேசமயம் அவரது இடதுகை ஆள்காட்டி விரலும் நடுவிரலும் வடக்கும் தெற்குமாய் அசைந்து ஆகாயத்தில் எழுதி கணக்கு போடுவது போலிருந்தது! என்னங்க விவரம்னு  கேட்டதுக்கு அவர் பதில் பேசவில்லை .கட்டட பிளான் குறித்து யோசிக்கிறாருன்னு இருந்துட்டேன். சரியாக சாப்பிடுவதுமில்லை  ! கட்டட இடத்தில் எதுவும் பிரச்சினையான்னு  அப்பா மூலம் தெரிஞ்சுக்கலாமுன்னு யோசிச்சேன். அவர் தப்பா நினைச்சுட்டா பெரும் பிரச்சினை ஆயிருமேன்னு  பயம் . உங்க ஃப்ரண்டுகிட்டேயே கேட்டேன்.

    ஒன்னுமில்லை.    தானும் சில நண்பர்களோடு சேர்ந்து உன் பேர்ல ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு ஒரு யோசனை!  அதுக்கு நாற்பது லட்சம் பணம் தேவைப்படுது என்றார். அவர் எங்கப்பாவிடம்  பணம் கேட்கத்தான் நாடகம் ஆடுகிறார் என்றுணர்ந்து சும்மா  இருந்து விட்டேன்.    அப்பா, இவரு வேலைக்கும் எங்க. புது  வீட்டுக்குமாக ஒருகோடி  வரை செலவு செஞ்சிருக்கார்.    அவருகிட்ட எப்படி கேட்கமுடியும்னு பேசாமல் இருந்து விட்டேன்.    ஆனால் இப்படி செய்வாருன்னு  நினைச்சு  கூட  பார்க்கலை! 

       இன்னிக்கு  பக்கத்து  வீட்டுக்காரங்க  மூனு  பேரு  வந்து  அரசு  வேலை வாங்கித் தர்றேன்னு  மூனு  பேரு  கிட்ட  பவ்வத்து  லட்சம்  வாங்கி  இருக்காராம். கொடுத்தவங்களும்  ஐசியு வார்டு முன்னால்தான்   காத்துகிட்டு  இருக்காங்க. அந்தப்   பணத்தை  என்ன  செஞ்சாரு? யாரு  கிட்ட  கொடுத்தாருன்னு  தெரியலை“    என்று விம்மினள்.                                                எனக்குள்  கேள்விகளாக  மின்னல் வெட்டியது.              பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட பணத்தை வாங்கி   அரசியல்  புரோக்கர்கள் கிட்ட கொடுத்து ஏமாந்துட்டானா ,இல்லை பழையபடி சீட்டு விளையாடுறதில இறங்கிட்டானா…?இருக்கிற போலீஸ் கெடுபிடியில் சீட்டுவிளையாடும் நண்பர்களோடு சேர நேரமும் காலமும் ஒத்துவராதே!  அதுவுமில்லாமல் அவனோட மாமனாரு அவன் யாராருகிட்ட பழகுறான் .எப்படி   பழகுறான்.  என்னென்ன  செய்கிறான்  என்று கண்காணிக்க அங்கங்கே  ஆளுக வச்சிருக்காரே!      அவன் எந்த தப்பும் பண்ண முடியாதே! அவனை பொறுத்தவரை அவன் இருபத்துநாலுமணி நேரமும் மாமனாரின் கண்காணிப்பு வலைப்  பின்னலில் இருக்கிறான் என்பது அவனும் உணர்ந்து இருக்கலாம்!

      ஆனால் அவன் முப்பது லட்சத்தை என்ன செய்தான்.?  இந்தப் பணம் தான் அவனது தற்கொலை முயற்சிக்கு காரணமோ…? என்  நெற்றியில் சிந்தனை  நீர்க்குமிழ்களாக திரண்டன . அவளை மெல்ல நடத்தி, தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு முன்னே இருந்த இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர‌ வைத்தேன் .

      தலைமை மருத்துவரைப்  பார்த்து அவனது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள முயன்றேன் .    மருத்துவர் பொதுவார்டில் நோயாளிகளை பார்வையிட சென்றுள்ளார்  அவர் வர அரை மணிக்கு மேலாகும் என்றனர்.

      நான் அவனது மனைவியிடம் அவனது கைப்பேசியை  வாங்கி,  எதாவது தகவல் தெரியுமானு பார்ப்போம்  என்று முயன்றேன் ; கைப்பேசியைக் கொடுக்கும் போது,  “வீட்டில் இருக்கும் போது என்கிட்ட  பேசுறது  கூட  இல்லண்னே ! எந்தநேரமும் செல்லை நோண்டிகிட்டே இருப்பாருண்ணே ,இந்த செல்லைப்.      பார்த்தாலே எரிச்சலாக இருக்கும்“ என்றாள்.

     அந்தக்  கைப்பேசியை வாங்கிக் கொண்டு ஒர் ஓரமாக உட்கார்ந்து அவனது கைபேசியின் கடவுச்சொல் அவனது பிறந்ததேதி என்பதை நினைவில் கொண்டு திறந்தேன்  . குறுஞ்செய்திகளைப் பார்த்தேன.ஒன்னும் புலப்படவில்லை. புழக்கத்தில் இருக்கும்    செயலிகளை நோட்டம்  விட்டேன்  . ரம்மி எனும்  செயலி  இருந்தது. அதைத் திறந்தேன்.

     ‘வாங்க ரம்மி விளையாடலாம்.  உங்களுக்காக இரண்டாயிரம் ரூபாய் போனஸ் காத்திருக்கிறது’ என்ற அறிவிப்பு கண்ணைச்   சிமிட்டியது.  ரம்மி செயலியை  திறந்தேன் ; ப  வெவ்வேறு தரத்தில் பணம் கட்டி விளையாடும் ரம்மி குழுக்கள் புழக்கத்தில் இருப்பது தெரிய  வந்தது !  அதிர்ச்சியாக இருந்தது.

      ‘ சிரங்கு வந்தவன் கையும் , சீட்டு விளையாடியவன் கையும் சும்மா இருக்காது!    கட்டிப் போட்டாலும் தடுக்க முடியாது ’ என்ற  சொலவடை நினைவுக்கு வந்தது. மூலை  முடுக்குகளில் ஒளிந்து சீட்டு விளையாடுபவர்களை தேடிப்பிடித்து கைது செய்யும் காவல்துறை இப்படி வெளிப்படையாக இணையதளம் மூலமாக சூதாட்டம் நடத்துபவர்களையும்,  சூதாடுபவர்களையும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனென்று புரியவில்லை என்ற சிந்தனை இவனைக்  கடைந்தது.

       இந்த சமயத்தில் தலைமை  மருத்துவர் வரும் பரபரப்புகள் தென்படவே  ,  கைப்பேசியை அணைத்து விட்டு தலைமை மருத்துவர் அறைக்குப் போனேன்; .தலைமை மருத்துவரிடம் என்னை  அறிமுகம் செய்து கொண்டு அவனது  பெயரைச்  சொல்லி உடல்நிலை  குறித்து கேட்டேன் .

       தலைமை மருத்துவர் அவனது மருத்துவக். குறிப்புகளைக் கொண்டு வரச்சொல்லி பார்த்துவிட்டு சொன்னார் :”அந்நோயாளி ஐந்துக்கு மேற்பட்ட தூக்கமாத்திரைகளை விழுங்கி இருக்கிறார். ஆல்கஹாலிக். குடல்புண் இருக்கிறது .செயின் ஸ்மோக்கர் போல .நுரையீரல் முழுக்க புகையால் கருத்திருக்கிறது .சளிப்படலத்தால் மூச்சுத்திணறல் இருக்கிறது.  இதயத் துடிப்பு நிலை  இல்லாமல் இருக்கிறது.    இந்த மாதிரி இடர்பாடுகளால் அவரது நிலையை இன்னும்  இருபத்துநாலு மணிநேரத்திற்கு பின்தான் சொல்ல இயலும்! நோயாளியை காப்பாத்த எல்லா முயற்சிகளையும் செய்துகிட்டு  இருக்கிறோம்  …“

    அவன் இணையத்தில் சூதாடி தோற்றதால் தற்கொலைக்கு முயன்றதையும், அவனது உடல்நிலை பற்றி மருத்துவரின் மதிப்பீட்டையும் எப்படி அவனது குடும்பத்தாரிடம் சொல்வது?

 

குண்டலகேசியின் கதை-13 – தில்லைவேந்தன்

.முன் கதைச் சுருக்கம்

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.

ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,’திருடன்’என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளைப் பழிவாங்க நினைத்தான்.

இருவரும், அங்கொரு மலையில் குலதெய்வக் கோயிலில் படையிலிட்டு வழிபட்டனர்.

பிறகு இயற்கை அழகைக் காணலாம் என்று கூறி மலை உச்சிக்கு அழைத்துச் சென்றவன்,அவளைக் கீழே தள்ளிக் கொல்லப் போவதாகவும்.நகைகளைக் கழற்றித் தருமாறும் கூறுகிறான்……..

 

Kundalakesi Full Story in Tamil | குண்டலகேசி கதை | Aimperum Kappiyangal |  Gokulakrishnan - YouTube

.         பத்திரையின் எண்ணம்

 

காதலித்துக் கைப்பிடித்த கணவன் காளன்

     கறைமனத்துக் கயவனெனக் கண்டாள் அந்தோ!

வாதுசெயும் நேரமிலை வன்ம னத்தான்

    வஞ்சகத்தைத் தந்திரம்தான் வெல்லும் அன்றோ?

பேதையர்கள் யாருமவன் வலையில் வீழ்ந்து

     பெருந்துயரம் இனியடைதல் தடுக்க எண்ணிக்

கோதுநெறிக்  கொடியவனாம்  முள்ளை வேறோர்

    கூர்முள்ளால் களைந்தெறிய உறுதி கொண்டாள்.

 

                (கோதுநெறி — குற்ற வழி )

 

.       கவிக்கூற்று

 

பொறுத்திடும் பூமித் தாயும்

      பொறுமையின் எல்லை மீறி

வெறுத்திடும் போது பொங்கி

      வெடித்துயிர் விழுங்கல் உண்டு.

முறத்தினால் புலியைத் தாக்கும்

      மொய்வரைப் பெண்ணும் உண்டு

கறுத்தவன் இன்னா செய்தால்

      காரிகை  பூவா கொய்வாள்?

 

    ( கறுத்து- சினந்து/ வெறுத்து)

        (இன்னா – துன்பம்)

 

        பத்திரை நிலை

 

இடிக்கும் உரலில் விட்டதலை,

        இருப்பு லக்கை தப்பிடுமோ?

கெடுக்கும் கீழ்மைக் குணமுடையோன்

       கேள்வன் என்றால் மங்கையவள்

உடுக்கும் புடைவை பாம்பன்றோ?

       உண்ணும் கீரை நஞ்சன்றோ?

தடுக்க    இயலாத்    துயரத்தாள்

       தளர்ந்தாள், நொந்தாள், சினமுற்றாள்

          ( கேள்வன் – கணவன் )     

 

புகைந்திடும் உளச்சி னத்தைப்

     பூமுகம் மறைக்க, வேங்கைக்

குகையினில் சென்ற மானாய்க்

      குமைந்தனள் பத்தி ரையாள்.

நகைகளைக் கழற்றிப் போட்டாள்;

       நாயக, உனக்கே! என்றாள்.

தகவிலான் கொடுமை  தீர்க்கத்

      சடுதியில் வகுத்தாள் திட்டம்.

 

( தகவிலான்- தகுதி இல்லாதவன்/ நல்லொழுக்கம் அற்றவன்)

 

        ( சடுதியில் – விரைவில்)

 

      கணவனிடம் வரம் கேட்டல்.

 

மெல்லியலார் என்றெண்ணிப் பெண்க ளுக்கு

     மெய்வருத்தம், மனவருத்தம் கொடுக்கும் தீயக்

கல்லியல்புக் காளையர்க்குப் பாடம் சொல்லக்

   காரிகையாள் திடம்கொண்டாள், பிறகு சொன்னாள்,

“வல்லவனே நான்வணங்கும் தெய்வம் நீயே,

      வலம்வருவேன் மூன்றுமுறை இறக்கும் முன்னே.

இல்லறத்தாள் நான்விரும்பும் இவ்வ ரத்தை

     எனக்களித்தால் என்பயணம் இனிதாய் ஆகும்”.

 

          காளனின்  ஆணவப் பேச்சு

 

மேலாடை தனில்நகைகள் கட்டிக் கொண்டான்.

 “மேலுலகம் செலும்பெண்ணே வரத்தைத் தந்தேன்

காலாலே கணவன்மார்  இட்ட வேலை

    காரிகையார் தலையாலே செய்தல் வேண்டும்

நூலோர்கள் சொல்நெறியை இன்று ணர்ந்தாய்

    நுனிமலையில் மூன்றுமுறை என்னைச் சுற்றி

மேலான கதியடைவாய்” என்றான், மங்கை

    விரைவாகச் சுற்றியவன் பின்னே நின்றாள்.

    

. பத்திரை அவனைக் கீழே தள்ளுதல்

     

ஊன்றக் கொடுத்த தடியாலே

     உச்சி மண்டை பிளப்பானை,

ஈன்ற தாயின் நல்லாளாம்,

      இல்லாள் கொல்லத் துடிப்பானை,

சான்றோர் பழிக்கும் வினைசெய்யச்

      சற்றும் தயங்கா மனத்தானை,

ஆன்ற  பள்ளம் தனில்வீழ

      ஆங்கோர் நொடியில் தள்ளினளே

        ( ஆன்ற – வாய் அகன்ற)

 

 

.               கவிக்கூற்று

 

தற்கொல்லி எனவந்த தன்கணவன் தனைத்தள்ளி,

முற்கொல்லி எனவுலகோர் மொழிகின்ற பெயர்பெற்றாள்,

இற்செல்வி, எழிற்செல்வி் இழுவிதியின் கைச்செல்வி,

கற்சிலையாய் நின்றவளின் கையறவை என்சொல்வேன்!

 

(கையறவை-கணவனை இழந்த நிலை/ துன்பம்/ இயலாமை)

 

(தொடரும்)

அருவி – பொன் குலேந்திரன்

அருவி - ஏனைய கவிதைகள்

சின்னஞ் சிறு மழைத்துளிகள் ஒன்று ஓடுகின்றன நதியைத் தேடி.

வளைந்தோடும் நதி, அதன் நுரைந்தோடும் ஆற்றல்

அதில் வழிந்தோடும் நீர், அது தழுவிய குன்றுகள்.

அதனால் தோன்றிய சுழிவுகள்

போகும் வழித் துணையாய் இணைந்த  சிற்றாறுகள்.

நதியோடு கலந்த கரையோர மண்ணினால் 

பூசப்பட்ட செந்நிற அரிதாரம்.,

பூக்களின் சேர்க்கையால் அதன் தனி அழகு

அதோடு கூடிய கட்டுக்கடங்கா இயக்கம்

சக்தியின் வெளிக்காட்டு. 

அதன் வேகத்தில் ஒரு கம்பீர ஓட்டம்

பெரும் மழையில் பெருக்கெடுத்தது நதி.

மரங்கள் விழுந்தன கிராமங்கள் அழிந்தன.

வயல்கள் குளமாயின மக்கள் அழுதனர்

நதி தன் சக்தியை நினைத்து பெருமைப்பட்டது.

.

அதன் ஓட்டத்தின் சந்திப்பில் மிக ஆழமான பள்ளம.;

அதன் சக்திக்கு, அகங்காரத்திற்கு பெருமைக்கு ஒரு சவால்.

தடுக்கி கீழே விழுந்தது நதி., ஓ வென்று கதறியது. 

என்னை காப்பாற்று என்றது இயற்கை அன்னையிடம்.

உன் தோற்றத்தை போக்கை மாற்றுகிறாய்

உன் சக்தியையும் பிறருக்காக உதவுகிறாய.;

அதன் முடிவைப் பார் என்றாள் இயற்கையன்னை

வெண்ணிற ஆடையாய் மாறி அமைதியானது நதி.

ஆடைக்குப் பின்னால், குன்றின் கரு மேனி. 

சிதறிய நீர் துளிகளின் பிண்ணனியில்

வானவில்லின் தோற்றம். நதி அருவியானது.

அருவியின் அழகை இரசித்தன ஆயிரம் கண்கள். 

அதனை அரவணைத்து தங்களைத் துய்மையாக்கினார்கள் பலர். 

அருவியின் சக்தி மின்சாரமாகி நதி அருவியாகி ஒளியாகியது

தனக்கென வாழாமல் பிறருக்காக வாழக் கற்றுக்கொண்டது

கல்லான பெண் – மலையாளத்தில்   :  கே. பி . ஸ்ரீதேவி- தமிழில் தி.இரா.மீனா

கணவனால் கல்லாக சபிக்கப்பட்ட அகல்யா தேவியின் கதை தெரியுமா? | Story of Gautam Muni and Ahalya Devi - Tamil BoldSky

எப்போது கடைசியாக நான் இந்த வழியில் வந்தேன்? பல காலங்களுக்குமுன்னாலிருக்கலாம்.

அப்போது அப்பா என்னுடனிருந்தார்.

வானம் வழியாகப் பறந்த போது பூமியின் முழு அழகு இவ்வளவு விஸ்தாரமாகத் தெரியவில்லை. ஆசிரமோ அல்லது ஆறோ வரும் போது என் முகக்குறிப்பை அறிந்து விமானியிடம் வேகத்தைக் குறைக்கும்படி சொல்வார். முனிவர்கள் யாகம்செய்த குழிகளிலிருந்து கிளம்பும் நெய்,நெல் வாசனையை என்னால் சுவாசிக்க முடியும்.

எப்போது இதெல்லாம் நடந்தது ?

ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ? அதற்குப் பிறகு அவள் மாறிவிட்டாள். அவள் வாழ்க்கைப் பாதையே மாறிவிட்டது. காலம் மாறிவிட்டது. ஆனால் அயோத்தி மாறவில்லை. அவள் மேலே நடந்தாள். காடு பூக்களைச் சொரிந்து நின்றது. கிளைகளைச் சுற்றிக் கம்பளம் வளைத்திருப்பது போல பூக்கள் பரவிக் கிடந்தன. பூ மழையின் ஊடே சூரியனின் கதிர்கள் பாய்வது போலிருந்தது.

வால்மீகி ரிஷி தன் தவத்தை முடித்துக் கொள்ளும் வைபவத்தில் கலந்து கொள்ள விரும்புவதாக அவள் கேட்டபோது கணவர் எந்த மறுப்பும் சொல்லவில்லை. தன் வணக்கத்தை ரிஷியிடம் தெரிவிக்கச் சொன்னார். பழைய நாட்களில் இது போலத் தனியாக அவள் காட்டில் சுற்றித் திரியஅனுமதி கிடைத்திருக்காது. அப்படிச் செய்ய அவளுக்கும் தைரியம்இருந்திருக்காது.

ஆனால் இன்று அவள் கணவர்  அவளைச் சந்தேகப்படவில்லை. அவளுக்கும் பயமில்லை. இந்தப் பயணத்திற்காக அவரிடம் அனுமதிகேட்கப் போயிருந்த போது தன் கைகளை அவள் தலையில் வைத்து’அமைதி உன்னுடனிருக்கட்டும்’ என்று ஆசீர்வதித்தார். அவருடைய இந்தமாற்றம் காலம் ஏற்படுத்தியதா ?

ஸ்ரீராமன் வனத்தை அசுரர்களிடமிருந்து மீட்டான்.கரன், தூஷனன், திரிசரன் ஆகியோர் சில நாழிகை  அழிந்ததைக் கண்டு அவள் ஆச்சர்யமாகப் பேசிய  போது மனிதர்கள் எதைக் கண்டும் பயப்பட வேண்டியதில்லை. தன் கடமையை ஒழுங்காகச் செய்ய முடியாத போதுதான் பயம் வரும் என்று  சொன்னவன்.

உடல் பலத்தை விட மனபலம் ஆழமானது. மனபலமிருந்தால் பதினாயிரம் தீய சக்திகளை ஒரு நிமிடத்தில் கொன்று விடலாம். ஆலயமணியின் ஒலி போல இருக்கும் அந்தக் குரலைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.அவனைப் பார்த்த அந்த நொடியில் தன் நீண்ட காலத் தவம் வீணாகவில்லை என்று அவளுக்குப் புரிந்தது.அவனுடைய அந்த மென்மைத் தனிமையில் மூழ்கிப் போனாள்.

“அகல்யா, உன் உண்மையான ஆத்மாவை நான் பார்க்கிறேன்.  அந்த உலக உறக்கத்திலிருந்து விழித்தெழு.”

ஏன் ஒரு ரிஷி அந்த மாதிரியான சொற்களைச் சொல்லக் கூடாதா? இது, அழிவுக்கான சாபக் கலையை மட்டும் அவர்கள் சிறந்த பயிற்சியாகப் பெற்றிருப்பதாலா?

அகல்யா ஒரு கணம் நடுங்கினாள். அவள் எப்படி ஒழுக்கம் நிறைந்தவர்களைப் பழிக்க முடியும் ? அவள் உடனடியாகத் தன்னைத்திருத்திக் கொண்டாள்.

வால்மீகியும் முனிவர்தானே ? சொல்ல முடியாத ,விவரிக்க முடியாதபரிவால்தான் அவரும் சக்தி வாய்ந்த அந்த சாபத்தைத் தந்தார். அதுஅவருடைய தற்காலிக வெளிப்பாடுதானே ?

அகல்யா அந்த இடத்தில் ஒரு கணம் நின்றாள். உண்மையில் அதுசாபமில்லை. அது முன்யோசனையுள்ள பார்வைதான்.அந்த நேரத்திலும் அவர் சீதையைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். உலகத்தின் அவமானங்களில் இருந்தும், வேறுபாடுகளிலிருந்தும் அந்தத் தீயைப் பாதுகாப்பது அவசியமானது. மானுடத்தைப் பாதுகாக்க அந்தத்தீ வேண்டும்…அதனால்தான் அவர்..

அகல்யா தன் இரண்டு கைகளையும் அசைத்துப் பார்த்தாள்.உற்சாகத்தில்கைகள் ஆடின. இது வியப்பளிக்கிறதா? சீதையை நினைத்தால் எந்தப் பெண்ணுக்குத்தான் பெருமையும் ,உற்சாகமும் வராது.  அகல்யா மேலே நடந்தாள். காட்டுப் பறவைகளின் அழைப்பு இனிமையாக இருந்தது. அவளுடைய கடந்த கால வாழ்க்கை அவள் மனதைத் திறந்து வெளியே பார்க்க வைத்தது .பருவ மாற்றங்கள், பார்த்தவையும் கேட்டவையுமாக எல்லாவற்றையும் அவள் உணர்ந்திருக்கிறாள். எந்தத் திரையால் மறைக்கப்பட்டாலும்எல்லாப் பிறப்பும், இறப்பும் நிர்வாணமாய் விழிகளில் படுவதுதானே?யார் அதிகமாய்ப் பரிவு காட்டியவர்கள் என்று கடந்த காலங்களில் அவள்யோசித்திருக்கிறாள். தனக்கு அந்த விதமான அனுபவங்களுக்கு வாய்ப்புத் தந்த கணவன் ..அல்லது …?

அகல்யாவின் நினைவில் ஒன்று தெளிவாய் நின்றது. அந்த நேரத்தில் அவள் கௌதமரிஷியின் ஆசிரமத்தில் இயற்கையின் அழகையும்,கொடூரத்தையும் சந்தித்திருக்கிறாள்.

ஒரு நாள் தலையைக் குனிந்த நமஸ்கரித்துக் கொண்டிருந்த போதுஓர் உரையாடலைக் கேட்க நேர்ந்தது.அந்தக் குரல்கள் பெண்களுடையவை. பேசும் விதத்திலிருந்து அவர்கள் மிதிலையைச் சேர்ந்தவர்களென்று தெரிந்தது. கௌதம முனிவரின் ஆசிரமத்தில் கிடைக்கும் லவண்யகம் என்ற அபூர்வமான பூக்களைப் பறிக்க வந்தவர்கள்.

“ஏன் நம்முடைய இளவரசிக்கு இந்த பூக்கள் மேலே அத்தனை பிரியம்?”என்று  இளம்பெண் கேட்டாள்.

“உனக்குத் தெரியாதா ? இந்தப் பூவை வைத்து பூஜித்தால் கணவனின்அன்பு கிடைக்கும். அகல்யா தேவியால் தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டது இந்தச் செடி. ”மற்றொருத்தி பதில் சொன்னாள்.

“இந்த நாட்களில் இளவரசி மிக அதிக நேரம் பூஜை செய்கிறாள்.”“இயற்கைதானே அது ? தசரதனின் மகன் ஸ்ரீராமன் சீதையை மணக்கப்போகிறான் என்று ஒரு ஜோடி கிரௌஞ்சப் பறவைகள் குறி சொல்லியதைநீ கேட்கவில்லையா? “

“ஓ,அப்படியா ? எத்தனை அதிர்ஷ்டம்! இது மிதிலை முழுவதற்குமான் அதிர்ஷ்டம். அவள் மனம் முழுவதும் ஸ்ரீராமன்தான். அவருடைய வருகைக்காக அவள் காத்திருக்கிறாள்,“ சொல்லிவிட்டு அவள் கூடையைக் கீழே வைத்துவிட்டு  வணங்கினாள்.

“நீ இன்னமும் பூக்களைச் சேகரிக்கவில்லையா ?”“ வா, நாம் போகலாம். இப்போதும் கூட இங்கே நிற்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது.”

“ஏன் ,இந்த அழகான இடத்திலும் நீ வருத்தமாக இருக்கிறாய் ?”

“அகல்யா தேவியில்லாமல் இந்த ஆசிரமம் வெறுமையாக இருக்கிறது.”அதற்குப் பிறகு அவர்கள் எதுவும் பேசவில்லை.

“ஏன் அகல்யாதேவி அப்படியொரு சிக்கலில் மாட்டிக் கொண்டாள் ?அவள் மிகவும் ஒழுக்கமானவள் அல்லவா? ” என்று சிறிது நேரத்திற்குப் பிறகுஇளம்பெண் கேட்டாள்.

“வாயை மூடு . நீ என்ன பேசுகிறாய் ?மற்றொரு பெண்ணின்  குரல் கோபமாக ஒலித்தது. அகல்யாதேவி கருவிலிருந்து பிறந்தவளில்லை.  அவள் இரக்கத்திற்குப் பெயர் போனவள். உண்மையில் யாருடைய தவறு என்று நமக்குத் தெரியுமா ? ”

“வா, இங்கிருந்து போகலாம். நாம் பூஜைக்கு வேண்டிய பூக்களைக்கையில் வைத்திருக்கிறோம். நம்முடைய எண்ணங்களால், வார்த்தைகளால்  அவை புனிதம் இழந்து விடக்கூடாது .ஞாபகம் வைத்துக் கொள் .”அவர்கள் போய் விட்டனர் .

அந்த இரண்டு பெண்களும் பேசியது அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.தன் கணவனோடு விரைவில் இணைய வேண்டுமென்பதற்காக அகல்யாவால் வளர்க்கப்பட்ட பூக்களை வைத்து சீதை பூஜை செய்யும்காட்சி மனதில் நிறைந்தது. அதற்குப் பிறகு சீதையின் மூலமாகவே ராமனை வழிபட்டாள். கடைசியாக அந்தக் கணம் வந்தே விட்டது. அவன் ,அந்த அழகான மனிதன், விருப்பு வெறுப்பற்ற அவள் முன்னால் நின்று அந்த கல்லான நிலையிலிருந்து அவளை விடுவித்தான்.அந்த நிலையிலும் அவள் பிராத்தனை “ தேவி,உன் காத்திருப்புக்கு விரைவில் பதில் கிடைக்கும் என்பதுதான்.”

அகல்யாவிற்கு புதிய வாழ்க்கை தந்த பிறகு ராமன் சீதையின் முன் நின்றான்

யார் அதிகப் பரிவானவர் ?அகல்யா கேட்டுக் கொண்டாள்.விருப்பு வெறுப்புகளற்ற ,எந்த விதப் பரிவும் இல்லாத முனிவரான கணவர்உள்மனதை உலகிற்குக் காட்டும் வகையில் “அகல்யா ,உனக்கு இந்தப்பொய்யான உலகம் பற்றித் தெரியாது” என்று சொல்லி விட்டார்.அல்லது…

அதற்குள் அவள் காட்டின் எல்லையைக் கடந்து விட்டாள்.அவள் சுற்றுமுற்றும் எல்லாத் திசைகளிலும் பார்த்தாள். இவ்வளவுசீக்கிரம் தமசா ஆற்றின் கரையருகே  வந்துவிட்டோமா ?தமசா எவ்வளவு அழகாக இருக்கிறது ! நல்ல மனிதர்களின் மனம் போல.சிறிது நேரம் அவள் அங்கிருக்க விரும்பினாள்.

பயமுறுத்தும் ஒரு சத்தம் ! யாரோ அழுது கொண்டிருந்தார்கள். அவள் அந்த இடத்தை நோக்கிப்  போனாள். மரப்பட்டையை ஆடையாக உடுத்தியிருந்த ஓர் ஏழைப் பெண் நின்றிருந்தாள். அவள் வால்மீகியின் ஆசிரமத்தைச் சேர்ந்தவளாக  இருக்கவேண்டும். அகல்யா அவளருகே போய் “அம்மா ! “ என்று அழைத்தாள்.

குரலைக் கேட்டதும் அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அகல்யாவைப் பார்த்தாள். “ இந்த ஆசிரமத்தில் நீங்கள் இவ்வளவுவருத்தமாக இருப்பதற்குக் காரணம் என்ன ?”

“நான் எப்படிச் சொல்வேன் ?இந்த உலகமே முடிவுக்கு வரப் போகிறதுஎன்று தோன்றுகிறது.” விம்மிக் கொண்டே அவள் சொன்னாள்.“என்ன விஷயம்?” அகலயா அவளருகே உட்கார்ந்து சமாதானம் செய்ய முயன்றாள்.

ஸ்ரீராமன் தன் கர்ப்பமான மனைவியைக் கைவிட்டு விட்டாராம்.”“என்ன?” அகல்யா அதிர்ச்சியில் உறைந்தாள். “நான் கேட்பது உண்மையா ?”அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.

“ஆமாம் .. சிறிது நேரத்திற்கு முன்பு வால்மீகி ரிஷி தமசா ஆற்றிற்கு பூஜை செய்ய வந்தாராம். சீதை ஆற்றின் கரையில் இருந்தாளாம். வால்மீகி சீதையைப் பாதுகாப்பதாகச் சொல்லியிருக்கிறார். நான் அவளுக்கு வேண்டிய பழங்களைத் தேடி வந்தேன்.” அவள் தன் வார்த்தைகளை முடிப்பதற்கு முன்பே ,அகல்யாவின் சோகம் அவலக் குரலாக வானத்தைத் துளைத்தது. ’தீ தன் ஜூவாலையையே கைவிட்டு விட்டதே’

தன் பாதுகாப்பாளனாலேயே இயற்கை ஒதுக்கப்பட்டு விட்டது.இந்தக் கொடுமையான அனுபவம்…இந்த அவமானம்…இந்த வெறுப்பு…

அகல்யாவின் அருகில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கு அகல்யாவின் குரல் மிக தீனமாகிப் போனது தெரிந்தது. ’ தாயே ’என்று கூப்பிட்டாள்.

எந்த பதிலுமில்லை.

அந்தப் பெண் அகல்யா நின்றிருந்த இடத்திற்குப் போனாள். அவள் தோளில் கையை வைத்தாள். பயத்தில் உறைந்து நின்றாள்.

ஐயோ ! இது என்ன ?  வெறும் கல் உருவமா ?”

அந்த வார்த்தைகள் தமசா ஆற்றின் கரையில் எதிரொலித்து, மீண்டும்எதிரொலித்து.. அந்தச் சத்தத்தைக் கேட்டு ஆற்றில் குளித்துக் கொண்டுஇருந்த பெண்கள் ஓடி வந்தனர். அழகான ,அசையாத அந்த உருவத்தைக்கண்ணிமைக்காமல் பார்த்தனர்.

அவன் ஆயிரம் கண்களால் பார்த்தும் ,வேட்கை தணிக்கப்படாத குழப்பம்தந்த பேரழகு…

அந்தக் கல்லின் தலையின் மேல் மின்னலின் ஒளியும் மீனும் பொறித்திருப்பதைப் பார்த்தனர்.பாதங்களைப் பார்த்த போது ராமனின் கை அடையாளமிருப்பதும் தெரிந்தது. கடைசியாக அவர்கள் நிமிர்ந்து பார்த்தனர்.

அகலிகை - தமிழ் விக்கிப்பீடியா

நீண்ட கால தவத்தால் மெருகு கூடிய இயற்கையான ஒளி முகத்தில்வெளிப்பட்டது. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.“ஓ..இது கௌதமனின் மனைவி ,“ என்று ஒத்த குரலில் சொன்னார்கள்.“ஆமாம். இப்போது அகல்யா வெறும் கல்தான்,” வால்மீகி ரிஷியின்ஆசிரமத்தில் சீதையின் தோழியாக இருந்த பெண் உறுதியான குரலில் சொன்னாள்.     

               

————————————————————————

அம்ரிதா கீர்த்தி ,சாகித்ய அகாதெமி உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற கே.பி. ஸ்ரீதேவி சிறந்த நாவல் மற்றும் சிறுகதை ஆசிரியர்.  யக்ஞம், ,அக்னி ஹோத்ரம்,  மூன்றாம்  தலைமுறை உள்ளிட்ட நாவல்களும், வல்லோன், கதைகள்  உள்ளிட்ட  சிறுகதைத் தொகுப்புகளும் இவர் படைப்புகளில் சிலவாகும்.

 

 

உனக்கும் விருது கிடைக்கும் – செவல்குளம் செல்வராசு

முகநூல் நட்பெல்லாம் நட்பல்ல! | Navam K. Navaratnam

எல்லா சமூக ஊடகங்களையும் பயன்படுத்து
எல்லாம் தெரிந்தவனாய்க் காட்டிக்கொள்
கிறுக்கன்போல போல பேசு
கிடைத்ததையெல்லாம் காணொளியாக்கு

கோமாளி போல பேசு
இயல்பாய் பேசுவதாக நடி
சிரிக்க வை, சிரிக்க வை, சிரிக்க வை
அதுபோதும் ஆரம்ப நாட்களில்

உன் போன்றோரைக் கூட்டு வைத்துக்கொள்
சில கேடுகெட்டவர்களைப் பழக்கம்பிடி
கெட்ட வார்த்தைகள் பேசு
சிலரை கேவலமாய்ப் பேசு

விரசமான பாடல்களுக்கு உதடசை
ஆபாச அங்க அசைவுகள் மிக முக்கியம்

அவ்வப்போது ரசிகர்களுக்கு நன்றி சொல்
பயன்படுத்திய உள்ளாடைகள், ஆணுறை, பிஞ்ச செருப்பு,
விளக்கமாறு, விடாய்க்கால அணையாடைகள்
உனக்கு நீயே தூதஞ்சல் அனுப்பு
யார் யாரோ அனுப்பியிருப்பதாய் பொய்யுரை

அவற்றையெல்லாம் நேரலையில் பிரி
அனுப்பியவர்களைத் திட்டுவதாய் பாவனை செய்
உன் செய்கைகள் பிடிக்காத இணையரோ
ஒன்றுமறியாத குழந்தைகளோ
ஒத்தாசைக்கு இருந்தால் கூடுதல் விளம்பரம்

நேரலையில் நாராசமாய்ப் பேசு
அவமானங்களுக்கு அஞ்சாமல்
அத்தனையும் பேசு

தொடர்ந்து செயல்படு இப்படியே
அதுதான் மிக முக்கியம்
நீ பிரபலமாவதற்கு

வேலையற்ற வீணர்கள்
நிறைய இருக்கிறார்கள்
உன்னையும் பேட்டி எடுப்பார்கள்

மனவுளைச்சல் என்று பதிவுபோடு
உனக்கும் ஆறுதல் சொல்ல
ஆயிரம் பேர் வருவார்கள்

உன்னைக் கேலி செய்து
திட்டித் தீர்த்து
உன் பிரபலத்தில் கொஞ்சம்
திருடிக்கொள்ள சிலர் வருவார்கள்

உன்னைக் கழுவி ஊற்றி
அவர்களும் பிரபலமடைவார்கள்
கலங்காதே…
அட அதுவும் கூட விளம்பரம்தான்

அவ்வளவுதான் நீ பிரபலம் ஆகிவிட்டாய்
உனக்கும் ஒருநாள்
விருது கிடைக்கும்

 

 

 

 

 

தொட்டுதொரு தொடுவானம்! = கவிஞர் இரஜகை நிலவன்,

 

 நீளமாகப் போய்க்கொண்டிருந்தது     

நீல வானின் தொடு வானம்…

நீண்டு கொண்டு போகும் பாதையில்

நீர்ப்பதையில் தொட்டு விட்ட தொடுவானம்….

 

தேடிப்பார்த்த பாதைகள் பிரிந்து பிரிவுகளாய்

தேர்வு செய்யும் முடிவுக்குள் சிந்தையில்

தேர்ந்த வழியினைத் தெரிந்தெடுத்து சிறகு

தேய்ந்த முன்னேற்றத்தில் ஓடி ஓடி….

 

நீல வானின் அடி வானம்- இதோ தொடுவானம்

நீரோடையின் சலசலப்பில் சிலுசிலுப்பாய்- இங்கே

நீர்க்கோடாய் வெண்மேகக் கூட்டமாய் சிதறியோட

நீந்தி வரும் நீர்த்திவலைகளில் மூழ்கி எழ முயல…

 

தொட்டு விட்ட தொடுவானம் கானல் நீராய்

தொடத்தொட நீண்டு விரிந்து கொண்டே போக..

தொலைவானம்  தொடாமல் விட்டு விட்டு எங்கே

தொலைந்து போனதோ கைகளை விட்டகன்று…

 

விடிந்து விட்ட விடியலின் கன்னம் சிவ்ந்த

விடியலின் தொடுவானம் கைகளில் வந்தது போல்

விரிந்து விரைந்து நெஞ்சம் தொட்டது பிரமை

விரைவாய் சென்று தொட்டதென்னவோ தொடுவானமே தான்…

கடைசிப் பக்கம்- டாக்டர் ஜெ பாஸ்கரன்

ஆற்காட்டில் ஒரு ’டெல்லி கேட்’ !

 

சென்னை பங்களூரு நெடுஞ்சாலையில், பாலாறு மேம்பாபாலம் தாண்டியவுடன், நேராக ஆற்காடு செல்லாமல், இடது பக்கம் திரும்பி திருவண்ணாமலை செல்லும் சாலையில் கொஞ்ச தூரம் சென்றால், ஒரு கிராமத்து பேருந்து நிறுத்தம் வரும். தென்னங்கீத்து வேய்ந்த கூரையடியில் டீக் கடை, சின்ன பெட்டிக்கடை, குத்துக்காலிட்டு அமர்ந்து, வெற்றிலை மென்றபடி காத்திருக்கும் பெண், பீடி வலித்தபடி, லுங்கியில் நிற்கும் ஆண், நரை முடியுடன், வெற்றுத் தோளில் துண்டுடன் காந்தி வேட்டி கட்டியிருக்கும் முதியவர் என ஒரு கிராமத்து ஓவியமாய்த் தெரியும் அந்த இடம் – சாலைக்கு எதிரில், தங்க முலாம் பூசிய அம்பேத்கார், கையில் சட்டப் புத்தகங்களுடன் ஓரமாய் நீல வண்ணக் கம்பிகளாலான கூண்டுக்குள் நின்று கொண்டிருந்தார். அவரைக் கடந்து வலது புற சாலையில் இரண்டு கி.மீ சென்றால் வரும் இடம் ‘கலவை’ – அங்கிருக்கும் ‘கமலக்கண்ணி அம்மன்’ திருக்கோயிலுக்குச் சென்றதையும், தவத்திரு சச்சிதானந்த மெளன சுவாமிகளை சந்தித்ததையும் இன்னொரு வியாசத்தில் சொல்கிறேன்! இப்போது சொல்ல வந்தது அதுவல்ல….

திருவண்ணாமலை போகின்ற சாலையில், இடது பக்கத்தில் அந்தக் கால கட்டிடம் ஒன்று – ட்ரபீசியத்தின் பீடத்தை வெட்டி உட்கார வைத்தாற்போல – வித்தியாசமான ‘லுக்’குடன் நின்றுகொண்டிருக்கும். ‘ஆற்காடு நவாபுகளின் மனைவிகள் குளிக்கும் இடத்தின் முக வாயில் இது’ என்கிற தொனியில் யாரோ சொல்லி வைக்க, ஒவ்வொரு முறையும் வாசனாதித் திரவியங்களில் குளித்து, ஜிகினா உடைகளுடன், தலையில் வெள்ளை டர்க்கி டவலுடன் ‘கை’ ஆட்டும் ஈஸ்ட்மென் கலர் நாயகிகள் அங்கு நிற்பதாக நினைத்தவாறு கடந்து சென்றிருக்கிறேன். எப்படி ஆற்காட்டிலிருந்து இவ்வளவு தூரம் வந்து குளிப்பார்கள் – குதிரை வண்டியில்…, பல்லக்கில்…, அந்தக் கால மோட்டாரில் ….

இந்த முறை இறங்கிப் பார்த்து விடுவோம் – எதோ ’தொல்பொருள் ஆராய்ச்சி’ சாயலில் ஒரு போர்டு வேறு இருக்கிறதே என்று எதிர்ப் பக்கம் காரை நிறுத்தி விட்டு, அதி வேகமாக வந்த கார்கள், டூ வீலர்களுக்கு வழி விட்டு, கட்டிடத்துக்கு அருகில் வந்தேன். சந்தேகமே இல்லை, ’இந்திய தொல்லியல் துறை’ போர்டுதான் – நீலக் கலரில் வெள்ளை எழுத்துக்கள்! முதலில் தமிழில், பின்னர் இந்தியில், அதன் பின்னர் ஆங்கிலத்தில் எழுதியிருந்தது –

இந்த இடம் ’1958 (?53) ஆம் ஆண்டு பழங்கால நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் ஆய்வு இடங்கள் மற்றும் எஞ்சிய பகுதிகள் சட்டத்தின்’ கீழ் தேசீய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது – இதை சிதைப்பவர்கள், அகற்றுபவர்கள், தோற்றப் பொலிவை மாற்றுகிறவர்கள் ……. தண்டிக்கப் படுவர். (இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூபாய் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்கப் படுவர்) என்பதாக எழுதப்பட்டிருந்தது. மற்றபடி வேறு விபரம் ஒன்றும் கொடுக்கப் படவில்லை – பெயர், கட்டியவர், எதற்காக, ஏன் என்ற விபரங்கள் அந்த அறிவிப்பிலோ, அருகில் வேறு இடத்திலோ இல்லை.

கோபி நிறப் பூச்சுடன், சுற்றிலும் புல்லும் செடிகளும் மண்டியிருக்க, இரண்டு பக்கமும் பத்து அல்லது பதினைந்து அதிக உயரமில்லாத படிகளுடன் நின்று கொண்டிருந்தது அந்தக் கட்டிடம். படிகளில் எல்லாம் சிறு செடிகள்! ஒரு ஆர்ச் வளைவுடன் வாயில் – உள்ளே செல்ல முடியாதபடி, கருங்கற் குட்டைத் தூண்கள். மேல் தளம் அந்தக் கால மூன்று ஜன்னல்கள் கொண்ட அறை போல இருந்தது. நான்கு மூலைகளிலும் சிறு மண்டபங்கள் கொண்ட கல் தளம். கட்டிடத்தைச் சுற்றி இரும்புக் கம்பிகளாலான தடுப்பு வேலி. அதை ஒட்டி, மர நிழலில் காலி பாட்டில்களும், பிளாஸ்டிக் கவர்களும் முந்தைய இரவுகளின் கதை சொல்லின!

இது நிச்சயமாகக் குளிப்பதற்கான இடம் அல்ல – வேறு என்ன? சிறிது கூகிள் சாமியிடம் வேண்டியதில் கிடைத்த தகவல்கள் சுவாரஸ்யமானவை:

ஆற்காட் கோட்டை – ஆற்காட் ‘டெல்லி கேட்’ எனப்படும் இந்தக் கட்டிடம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஆற்காட் நவாப் பதவிக்குப் போட்டி – சண்டையிட்ட இருவர் சந்தாசாஹிப், மொஹமத் அலி

ஒரு தட்டச்சராக கிழக்கிந்தியக் கம்பெனியில் சேர்ந்த ராபர்ட் கிளைவ், சென்னை வந்து, பின்னர் ரானுவப் பயிற்சியோ, அனுபவமோ இல்லாத படையுடன் தனது தந்திரத்தால் மட்டுமே, உள்ளே புகுந்து, சந்தாசாஹிப்பை விரட்டியடித்ததாக (1751) வரலாறு! இந்த வெற்றியைக் கொண்டாடக் கட்டப்பட்டதுதான் இந்த ‘டெல்லி கேட்’ . இந்த முதல் வெற்றியே இந்தியா முழுவதும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் ஏற்பட முதல் படியானது.

தரைதளம் – இராணுவ தளவாடங்களைப் பாதுகாத்து வைப்பதற்கும், முதல் தளம் (மாடி) வீரர்கள் தங்குவதற்கும், ஆற்காடு எல்லையிலிருந்து எதிரிகளைக் கண்காணிக்கவும், பீரங்கித் தாக்குதல் நடத்தவும் கட்டப்பட்டன. மிக உறுதியான கட்டிடம். இதில் கிளைவ் தங்குவதற்கான அறையும் இருந்ததாம். ‘Hero of Arcot’ என்று கொண்டாடப் பட்டவன் கிளைவ். (கல்கத்தாவில் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக அவன் மீது பிரிட்டிஷ் அரசு வழக்கு தொடுக்க, மன உளைச்சலில் தன் 49 ஆவது வயதில் லண்டனில் தற்கொலை செய்துகொண்டான்!).

பிரிட்டிஷாரின் தென்னிந்திய நுழைவாயில்தான் இந்த ஆற்காடு ‘டெல்லி கேட்’. சரித்திரத்தின் மிக முக்கியமான நிகழ்வின் சின்னமான இந்தக் கட்டிடம் கேட்பாரற்று, சாலையோரமாக நின்றுகொண்டிருக்கிறது.

பார்த்தபடியே திரும்பினேன் – பிரித்தாளும் சூழ்ச்சியின் முதல் பீரங்கி வானை நோக்கி வெடித்ததைப் போன்ற பிரமை. கேளிக்கைகளுக்கும், கும்மாளங்களுக்கும், பொறாமைக்கும், பகையுணர்ச்சிக்கும் இடையே புகுந்த பீரங்கியின் வெற்றிச் சின்னம் – நாம் இதிலிருந்து ஏதாவது கற்றுக்கொண்டோமா?

ஈஸ்ட்மென் கலர் பொம்மைகள் மேல் தளத்திலிருந்து தலைகுப்புற கீழே விழுவதைப் போலத் தோன்றியது!