இந்த மாதப் பாடலாசிரியர் சங்கீதகலாநிதி பாபநாசம் சிவன்
ராதே உனக்கு கோபம் ஆகாதடி,
மன்மத லீலையை வென்றார் உண்டோ,
வதனமே சந்திர பிம்பமோ,
உனைக் கண்டு மயங்காத பேர்கள் உண்டோ,
என்றெல்லாம் , 40 களில் வெளிவந்த காதல் பாடல்கள் , மற்றும்,
அம்பா மனம் கனிந்து மனம் கனிந்து,
பூமியில் மானிட ஜென்மம்,
சத்வ குண போதன்,
தீன கருணாகரனே நடராஜா,
போன்ற பக்திப் பாடல்களும் , தலைமுறை கடந்தும், இன்றும் ரசிக்கப்படுகின்றன. இப்படி, இசை மற்றும் பாடல் என இரண்டு பொறுப்புக்களிலும், மஹா மேதமை பெற்றவர்தான் திரு பாபநாசம் சிவன் அவர்கள்.
ஏறத்தாழ 70 திரைப்படங்களுக்கு மேலாக,மொத்தமாக 800 பாடல்களை எழுதியுள்ளார்.
கண்ணதாசன் கூறுவார் – ஆண்டாள், மாணிக்கவாசகர், வள்ளலார் ஆகியோரின் பக்திப் பாடல்கள் காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு இடம் பெற்றதற்குக் காரணம் பக்திச் சுவையின் உருக்கமே. உருக்கமான எந்தப் பாடலும் நம்மை மெய் மறக்கச் செய்கின்றன. அந்த வரிசையில் அழியா இடம் பெற்றவர் பாபநாசம் சிவன்” என்று . பாபநாசம் சிவனுக்கு மிக ஒல்லியான சரீரம் மற்றும் வசதி குறைந்த வாழ்க்கை இந்த விதமான வாழ்க்கைச் சூழலை அனுபவித்தவர்கள் கவிஞர்கள் ஆவார்கள். ஆனால், இவையே மிகுந்திருந்த சிவன், குரல் வளத்துடன் பாடுவது மட்டுமல்லாது, கவி வளத்துடன் பாடல்களைத் தாமே இயற்றிப் பாடியிருக்கிறார். எனவே தான், நூற்றாண்டு கண்ட கர்னாடக இசையுலக அதிசயம் , சிவன் என்று பாராட்டப் படுகிறார்.
தமிழ்நாட்டில், ஒரே திரை அரங்கில் 3 தீபாவளகளைக்கண்ட ஹரிதாஸ் என்ற எம் கே தியாகராஜ பாகவதர் நடித்துப் பாடிய அத்தனை பாடல்களையும் எழுதிய பெருமை திரு சிவன் அவர்களைச் சார்ந்தது.
தஞ்சை மாவட்டம் நன்னிலம் தாலுகாவில், போலகம் என்னும் கிராமத்தில் 1890 ஆம் வருடம், ராமாமிருதம்-யோகாம்பாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். ராமையா என்ற பெயர். (இவரின் சகோதரர் தான், எம்.ஜி.ஆரின் வாழ்க்கைத் துணைவியான ஜானகியின் தந்தை), பாபநாசத்தில் சகோதரருடன் வசித்த ராமையா, கோயிலில் மனம் உருகிப் பாடுவதைப் பார்த்தவர்கள், சிவன் போல இருந்து பாடுகிறார் என்று கூற, ராமைய்யா என்ற பெயர் மறைந்து, பாபநாசம சிவன் என்று மாறிவிட்டது.
திருவனந்தபுரம் , பாலக்காடு என்று சென்றுவிட்டு, அப்புறம், சென்னையில் குடியேறினார். வீணை எஸ் பாலச்சந்தரின் தகப்பனார் சுந்தரம் அய்யர மற்றும், அவரின் மகன்கள் , மகள் ஆகியோர் நடித்த ‘சீதா கல்யாணம்’ என்கிற திரைப்படத்திற்கு தன் முதல் பாடல் இயற்றினார் பாபநாசம் சிவன். ஆனால், இவர் பாடல் எழுதி முதன் முதலில் வெளிவந்த திரைப்படம் ரத்நாவளி.
பாடலாசிரியராக, இசையமைப்பாளராக, ஒரு நடிகராகவும் தமிழ்த் திரையுலகிற்கு , தனது பங்களிப்பினைத் தந்துள்ளார் சிவன்.
1934ல் சினிமாவுக்குப் பாடல் எழுத ஆரம்பித்த பாபநாசம் சிவன் 1950 வரையிலும் தீவிரமாக இயங்கியிருக்கிறார். எம் கே தியாகராஜ பாகவதர், பி யூ சின்னப்பா, ஹொன்னப்ப பாகவதர், டி ஆர் மகாலிங்கம் போன்றோரின் பல படங்களுக்கு பாடல்கள் இயற்றி அவை, மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. 1936ல் வெளிவந்த எம் கே தியாகராஜ பாகவதர் நடித்த ‘சத்திய சீலன்’ உள்ளிட்ட படங்களுக்கும், இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.
உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ – அசோக்குமார்
பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர் – அசோக்குமார்
மன்மத லீலையை வென்றார் உண்டோ – ஹரிதாஸ்
அன்னையும் தந்தையும் தானே – ஹரிதாஸ்
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி – சிந்தாமணி
மனமே கணமும் மறவாதே – சாவித்திரி
வதனமே சந்திரபிம்பமோ – சிவகவி
மறைவாய் புதைத்த ஓடு – திருநீலகண்டர்
இவற்றைப்போல் இன்னும் எண்ணற்ற பாடல்கள் – இப் பாடல்களெல்லாம் அக்காலத்தில் தமிழகத்தில் ஒலிக்காத இடமே கிடையாது.
பாயில் கீழே அமர்ந்து கண்களை மூடியபடி பாடிப்பாடி பல்லவியை அமைப்பார். அதற்கேற்ற படி வரிகளை அமைப்பாராம்.
கண் இழந்தால் என்ன
கடவுட்கும் என்ன
கண் இல்லையோ நம்மைக்
காக்கும் தயாளன் என்றும்,
மனமே ஈசன் நாமத்தை
வாழ்த்துவாய் – தினம் வாழ்த்துவாய்
கனவென்னும் வாழ்வில்
கலங்கி விடாதே ,
காதலை மாதரை புகழ்ந்து பாடாதே, என்றும்,
அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்
அறிவில்லாமலே நன்றி மறந்தேன்
அன்னையும் தந்தையும் தானே
பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்
தாயினும் கோயில் இங்கே – ஈன்ற
தந்தை சொல் மிக்கதோர் மந்திரம் ஏது. என்றும், எழுதி இருப்பது அழகு.
வதனமே சந்திர பிம்பமோ
மலர்ந்த சரோஜமோ
மின்னும் மோனத் துடி இடையாள
அன்னமோ மடப்பிடி நடையாள
புன்னகை தவள பூங்கொடியாள்
புவன சுந்தரியாள் என்றும்
கவலையை தீர்ப்பது நாட்டியக் கலையே
கணிகையர் கண்களே
மதன்விடும் வலையே
புஜமிரண்டும் மூங்கில் – தளர் நடை அஞ்சி
புருவம் இடையுடன் வளையுமே அஞ்சி என்றும்,
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என் மதி மயங்கினேன் – மூன்று உலகிலும்
மன்மத லீலையை வென்றார் உண்டோ ! என்று எழுதுவார்.
சாரசம் வசீகரக் கண்கள் – சீர் தரும்
முகம் சந்திர பிம்பம் என்றும்
நடை அலங்காரம் கண்டேன்
அன்னப் பெடையும் பின் அடையும்
பொற்கொடியிவள மலரடி என்றும் காதலில் விளையாடி எழுதி இருக்கிறார்.
பாபநாசம் சிவனின் பாடல்கள் இடம் பெற்ற சில முக்கியமான படங்கள்:
அசோக்குமார் – 1941
சாவித்திரி – 1941
மதனகாமராஜன் – 1941
நந்தனார் – 1942
சிவகவி – 1943
ஜகதலப்பிரதாபன் – 1944
மீரா – 1945
வால்மீகி – 1946
குண்டலகேசி – 1947
அபிமன்யு – 1948
ஞானசௌந்தரி – 1948
சக்ரதாரி – 1948
தேவமனோகரி – 1949
ரத்னகுமார் – 1949
அம்பிகாபதி
புதுவாழ்வு
செஞ்சுலட்சுமி – 1958
சீதா கல்யாணம் படத்தில், 22 பாடல்கள், பவளக்கொடி படத்தில் 60 பாடல்கள், அசோக் குமார் படத்தில், 19 பாடல்கள், ஹரிதாஸ் படத்தில் 29 பாடல்கள் என பாடல்கள் தந்தவர் பாபநாசம் சிவன் அவர்கள்..
தன்னுடைய தாயாரைத் தெய்வமாகப் போற்றியவர் பாபநாசம் சிவன். அட்சரம்கூட எழுதவோ படிக்கவோ தெரியாத தன் அன்னை, எப்படி ஆயிரக்கணக்கான பாடல்களைக் கற்றுக்கொண்டார் என்ற வியப்பு சிவனிடம் கடைசிவரை இருந்திருக்கிறது. சங்கீத மும்மூர்த்திகளின் கீர்த்தனைகள் முந்நூறுவரை பாடமாகியிருந்தது அம்மாவுக்கு. க்ஷேத்ரக்ஞர் பதங்களும், கோபாலகிருஷ்ண பாரதி போன்ற பக்த கவிகள் பலரின் பாடல்களும் அவருக்குத் தெரிந்திருந்தன. இவை தவிர, அந்தக் காலத்துப் பெண்களுக்கே உரித்தான கல்யாணப் பரிகாசப் பாடல்களும், நலங்கு, ஊஞ்சல், ஓடம், கும்மி, கோலாட்டம் போன்ற குதித்துப் பாடும் பாடல்களும் அவருக்கு அத்துப்படி!
தனக்கு வாய்த்த இசையறிவுக்கும், ஒருவகைக் குரல் இனிமைக்கும் காரணம், இத்தகைய தாயிடம் கர்ப்பவாசம் செய்யக் கிடைத்த பாக்கியமும் அவருடைய ஆசியும்தான் என்று பூரிப்புடன் கூறிக்கொள்வார் பாபநாசம் சிவன். சிவன் அவர்களின் இரண்டு மகள்கள் – திருமதி நீலா ராமமூர்த்தி மற்றும் திருமதி ருக்மினி ரமணி , இவர்களும் இசை மற்றும் பாடல்கள் என தொடர் பரம்பரையானது.
திருவையாறு ஸப்த ஸ்தான விழாவில் 1912 முதல் 1957 வரையில், 45 ஆண்டுகள் விடாமல் பஜனை நடத்தியிருக்கிறார் சிவன். 19 ஆண்டுகள் நாகையில் ஆடிப்பூர பஜனை நிகழ்த்தியிருக்கிறார் . சென்னையில் நிரந்தரமாகக் குடியேறிய பிறகு தனது இறுதிக் காலம் வரையில் மயிலையில் மார்கழி மாதத்திலும், பங்குனி உத்திரத் திருவிழாவிலும், மகாசிவராத்திரியின் போதும், அறுபத்து மூவர் உற்சவத்திலும் சிவன் நடத்திவந்த பஜனையில் கலந்துகொண்டு மகிழாத வித்வான்களும், ரசிகப் பெருமக்களும் இல்லை. ஆண்டவன் அளித்த திருவருள் அன்றி வேறில்லை’’ என்பார் . மியூசிக் அகாடமியில் ‘சங்கீத கலாநிதி’ விருது பெற்ற வருடம் நிகழ்த்திய தலைமை உரையின் போது, தற்போது சங்கீதம், சம்பாதிக்கும், சாதனமாகிவிட்டது. ஈசுவரார்ப்பணம் என்பது மறைந்துவிட்டது. அதனால் குருபக்தி குறைந்துவிட்டது. முன்காலத்தில் நடைமுறையிலிருந்த குருகுல வாசம் தற்போது அரிதாகிவிட்டது. பலருக்குப் பொறுமையில்லை! எனவே, நல்ல சங்கீதம் மற்றும் இசைப் பாரம்பரியம் வளரவேண்டும் என்றார்.
இவரின் கீர்த்தனைகள் புத்தக உருவில் வெளிவந்திருக்கிறது. சிந்து பைரவி ராகத்தில் இவர் இயற்றி, ஆலத்தூர் சகோதர்களால் பாடப்பட்டு, இசைத்தட்டாக வெளிவந்த பாடல் ‘சந்திரசேகரா ஈசா’. இப்பாடல் இன்றும் கூட பல மேடைகளில் கர்நாடக இசைக் கலைஞர்களால் பாடப்படுகிறது. அதேபோல,
என்ன தவம் செய்தனை யசோதா – காபி
நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா – நவரச கானடா
கண்ணனை பணி மனமே தினமே
காணக்கண் கோடி வேண்டும்… – காம்போதி
கா வாவா கந்தா வாவா… – வராளி
ஸ்ரீ வள்ளி தேவ சேனாதிபதே… – நடபைரவி
தாமதமேன்… – தோடி
கடைக்கண்… – தோடி
பாமாலைக்கு இணையுண்டோ – சுப்ரமணிய பாரதியே நீ பக்தியுடன் தொடுத்த
கார்த்திகேயா காங்கேயா… – தோடி,
இப்படி, பல பாடல்கள் , இசை உலகம் இருக்கும் வரை , இவர் பெயர் கூறும். திரை உலகில் பாபநாசம் சிவனின் காலம், நினைவில் அகலாத ஒரு பொன் வீடு.
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேண்டும் என்ற வரிகள், இவருக்கும் பொருந்தும்.
கீழே தந்துள்ள இரண்டு காணொளிகளையும் பாருங்கள். பாநாசம் சிவன் அவர்களின் பெருமை புலப்படும்.
அடுத்த மாதம் மற்றொரு கவிஞருடன் சந்திப்போம்.