கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்

‘கோல்டன்’ மீட் !

வருடம் 1972 – எண்ணை தடவி படிய வாரிய தலை, அந்தக்கால ‘டைட்ஸ்’ பேண்ட், அரைக்கை சட்டை, காலில் ஷூ, அரும்பியும் அரும்பாத மீசை, கையில் அல்லது தோளில் வெள்ளை ‘கோட்’ – மனம் முழுதும் அச்சம், எதிர்பார்ப்பு! இந்த மன நிலையில்தான் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்த ஞாபகம்! என்னைப் போலவே மிரட்சியுடன் மற்ற மாணவர்கள். அன்றைய நிலையில் மாணவிகள் சிறிது ‘பரவாயில்லை’ மன நிலையில் இருந்திருக்கக் கூடும் – அவர்கள் சின்னச் சின்ன குழுக்களாக, முகம் மலர்ந்தபடி வலம் வந்துகொண்டிருந்தார்கள்!

மெட்ராஸ் மெடிகல் காலேஜில் அன்று சேர்ந்த சுமார் 150 மாணவ மாணவிகள், ஆறரை வருடங்கள் ஒன்றாகப் படித்து, மருத்துவர்களாகி, பேராசிரியர்களாய், கல்லூரி முதல்வர்களாய், உலகம் போற்றும் ஸ்பெஷலிஸ்டுகளாய், மக்களின் பிணி தீர்க்கும் பொது மருத்துவர்களாய் – மனைவியாய், கணவணாய், தந்தையாய், தாயாய், தாத்தாவாய், பாட்டியாய்ப் பல்வேறு அவதாரங்களைத் தாண்டி, 2022 ல் – 50 வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்தோம்!

“Meeting someone dear after a long time takes us down memory lane” – கோல்டன் ஜூபிளி மீட் MMC 1972 Batch இந்த வாக்கியத்தை முழுமையாக உணர வைத்தது!

டிசம்பர் 6,7,8 தேதிகளில் ஏற்காடு கிராண்ட் பேலஸ் ஓட்டலில் சுமார் 110 நண்பர்கள் ஒன்று கூடினோம்! ஆறு மாதமாக இதற்கான ஏற்பாடுகளில் 10 பேர் கொண்ட கமிட்டி மிகச் சிறப்பாக செயல்பட்டு, மறக்க முடியாத சந்திப்பாக நிகழ்த்தினார்கள். நெகிழ்ச்சியான நிகழ்வு!

யூஎஸ், யூகே, மலேசியா, ஆஸ்திரேலியா என உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும், இந்தியாவின் பல மாகாணங்களிலிருந்தும் இதற்காக வந்திருந்த நண்பர்கள் எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி. கல்லூரி நாட்களை ‘ரீவைண்ட்’ செய்து பார்த்து, அதே குதூகலத்துடன் கொண்டாடியது, இடையில் விழுந்த 50 ஆண்டுகால வாழ்வானுபவங்களைச் சற்றே ஒதுக்கிவைத்தாற்போலத் தோன்றியது! பேரன், பெயத்தி என வந்தபிறகும், நண்பர்களைக் கண்டவுடன், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னான காலவெளியில் எல்லோராலும் பயணிக்க முடிந்தது என்பது வியக்க வைத்தது!

மிக அருமையான அறைகள், விழா நடத்த மிகச் சிறப்பாக அமைக்கப்பட்ட அரங்கம், வெளியே பசேலென்ற புல்வெளி, காலையும் மாலையும் டீ, காபி, ஸ்நாக்ஸ் சாப்பிட்டபடி இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காடின் அழகை ரசிக்கத் தக்க இடங்கள், ஸ்விம்மிங் பூல் என, பெயருக்கேற்றார்போல, உண்மையிலேயே ‘கிராண்ட் பேலஸ்’தான்! அரங்கத்திலும் புல்வெளியிலும் எம் எம் சி யில் நாங்கள் பயின்ற அனாடமி, ஃபிஸியாலஜி கட்டடங்கள், கீழே நின்றுகொண்டு அரட்டையடித்து மகிழ்ந்த பெரிய மரமும் அதன் நிழலும் எனப் பெரிய ஃப்ளக்ஸ் போர்டுகள், ஏற்காடில் எம் எம் சி யைக் கொண்டுவந்திருந்தன! அரங்கத்திலேயே மதிய உணவு, இரவு உணவு எல்லாம் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் யோசித்து மிகச் சிறப்பாக விழாவினை அமைத்திருந்தார்கள்.

ஒவ்வொருவரையும், அன்றைய, இன்றைய புகைப்படங்களுடனும், குடும்பப் புகைப்படங்களுடனும் அறிமுகப் படுத்தியது சிறப்பு. இடைப்பட்ட காலத்தில் படிப்பு, பதவி, ஸ்பெஷாலிடி, குடும்பம் என அவரவர் வாழ்க்கைக் குறிப்பு, ஐம்பது வருட பயணத்தைக் காட்டின. அகாலத்தில் மறைந்து விட்ட நண்பர்களின் புகைப்படங்களும், அவர்களது வாழ்க்கைக் குறிப்புகளும் மனதை கனக்கச் செய்தன.

பழைய பாடல்கள், ஃபேன்ஸி டிரஸ்ஸில் ஆட்டமும் பாட்டும், மிமிக்ரி, ஸ்டாண்டப் காமெடி, தம்பதிகளாக வந்திருந்தவர்களிடம் ஒரு நேர்காணல் என கல்சுரல் நிகழ்ச்சிகள் அன்றைய ‘Break up’ social நாட்களை நினைவுபடுத்தின.

மரத்தடி நிழலில் சிமெண்ட் கட்டையில் அமர்ந்துகொண்டும், நின்றுகொண்டும் அடித்த அரட்டைகள், சிரிப்புகள், மெளனங்கள், தயக்கத்தால் தொண்டைக்குள் நின்றுகொண்ட காதல் கற்பனைகள், உதவிகள், உன்னதங்கள் – மறக்க முடியாத நினைவுகள் ஆழ்மனதிலிருந்து வெளியே வந்து கண்களுக்குத் தெரியாமல் சுற்றி வந்தன!

50 வருடங்கள். திசைக்கொருவராய் சிதறி இருந்த நண்பர்கள், சந்தித்தபோது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை! யாரும் யாரையும் எதையும் மறக்கவில்லை. 50 வருடக் கதைகளை 40 மணி நேரத்தில் பேசித் தீர்த்தோம்! கல்லூரி நாட்கள் நினைவுகளில், ஆட்டமும் பாட்டும் 50 வருட முதுமையைச் சட்டென்று மறைத்துவிட்டன.

தலை நரைத்து, பேரன் பெயர்த்திகள் எடுத்து, வாழ்க்கையில் வெகு தூரம் வந்து விட்டோம் என்பதை அனைவரின் பண்பட்ட பேச்சும், கண்களில் தெரியும் அன்பும் பாசமும் தெரிவித்தன.

செல் போன்கள் ஓய்வின்றி க்ளிக்கியபடி இருந்தன. அனைவரையும் ஒருசேர நிற்கவைத்து, க்ரூப் போட்டோ எடுத்து, நினைவுகளை உறைய வைத்துக் கொண்டோம்.

8 ஆம் தேதி காலை சிற்றுண்டிக்குப் பிறகு, எல்லோரும் பிரியும் தருணம் இனம்தெரியாத ஏதோ ஒரு சோகம் மனதைக் கவ்வியது.

‘மீண்டும் சந்திப்போம்’ என்று சொல்லியபடி, அவரவர் கூட்டை நோக்கிப் புறப்பட்டோம். “பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே, பறந்து செல்கின்றோம், நாம் பறந்து செல்கின்றோம்” – யாருடைய செல்லிலோ டி எம் எஸ்ஸும் சுசீலாவும் பாடிக்கொண்டிருந்தார்கள்!