தியானம் பற்றி துக்ளக் சத்யா -உபயம் வாட்ஸ் அப்

எவ்வளவோ பேர் தினமும் தியானம் செய்வதாகக் கூறுகிறார்களே, நாமும்தான் செய்து பார்ப்போமே என்ற நல்லெண்ணம் ஒரு நாள் திடீரென்று எழுந்தது.

கூடவே, ‘உன்னால் முடியுமா…?’ என்று உள் மனம் கேள்வி கேட்டது.

‘அதிகமில்லை ஜென்டில்மேன்!- ஜஸ்ட் ஐந்தே நிமிடம் பண்ணித்தான் பார்க்கறேனே… என்று அதற்குச் சவால் விட்டு விட்டுக் காரியத்தில் இறங்கினேன்.

கண்கள் திறந்திருந்தால், கண் வழியே மனம் சென்று விடுகிறது. எனவே, கண்களை இறுக மூடிக்கொண்டு மனத்தைக் கட்டிப் போட்டேன். சனியனே! எங்கும் நகராதே. இங்கேயே நில்.

“மாநில செய்திகள் வாசிப்பது ஜெயாபாலாஜி. சட்டசபையில் நேற்று மீண்டும் அமளி ஏற்பட்டது. மத்திய அரசின் மீது முதல்வர் புகார் கூறியிருக்கிறார்…”

“அட சட்! கமலா அந்த ரேடியோவைக் கொஞ்சம் ஆ·ப் பண்ணேன். ஒரே நியூஸை எத்தனை வருஷமாகக் கேக்கறது? ஒரு அஞ்சு நிமிஷமாவது தியானம் பண்ண விடு!”
ரேடியோ அணைக்கப்பட்டது. ஏன் கடவுள் காதுகளுக்குக் கதவு வைக்கவில்லை? உஸ்ஸ்… மனக் குரங்கே தேவையற்ற சிந்தனை வேண்டாம். ஒழுங்காகத் தியானம் செய்.

அமைதி. மின் விசிறியின் சப்தம் மட்டும் தான் கேட்கிறது. வாங்கிப் பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. மாற்றவேண்டும். ஐந்நூறு ரூபாயாவது ஆகும்.

தியானம்… தியானம்… எங்கேயோ போகுதே.

கமலா வெங்காய சாம்பார் வைக்கிறாள் போலிருக்கிறது. சூடாக இட்லியும் இருந்தால் நன்றாக இருக்கும்.

சீ! தியானம் செய்யும் போது இட்லி சாம்பாரைப் பற்றி என்ன நினைப்பு! இந்த அல்பமான மனத்தை வைத்துக் கொண்டு எப்படி நான் மகானாவது?

தியானம் செய்வது ஒன்றும் கஷ்டமான காரியம் இல்லை.

அந்தக் காலத்தில் விஸ்வாமித்திரர் நூற்றுக் கணக்கான வருடங்கள் தவம் செய்திருக்கிறாரே.
அவரால் எப்படி முடிந்தது. பசியே எடுத்திருக்காதா? மனம் தவம் செய்தாலும் வயிறு சும்மா இருந்திருக்குமா? தவத்தைக் கெடுத்திருக்குமே! மடையா! முனிவருக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லை? நீ ஐந்து நிமிடங்கள் மனத்தைக் கட்டுப்படுத்தினால் ஐம்பது வருடங்கள் தவம் செய்ததற்குச் சமம். எதைப் பற்றியும் நினைக்காதே. தியானம் செய்.

“ஸார் தியானம் பண்றார் போலிருக்கு. சரி, நான் அப்புறம் வரேன்!”
எதிர்வீட்டு ஆசாமியின் குரல் கேட்டது.
“இருங்க, பேப்பர்தானே? நான் எடுத்துத் தரேன். ஏங்க?… கொஞ்சம் எழுந்திருங்களேன். பேப்பர் மேலே உட்கார்ந்து தியானம் பண்றீங்களே?”

கண்களைத் திறக்காமலேயே நகர்ந்து கொண்டேன். திறந்தால் தியானம் கெட்டுவிடும். கமலா பேப்பரை எடுத்து அவரிடம் கொடுத்து அனுப்பினாள்.
நானே இன்னும் பேப்பர் படிக்கவில்லை. லீவு நாள் தானே, தியானத்தை முடித்து விட்டுச் சாவகாசமாகப் படிக்கலாம் என்றிருந்தேன். அதற்குள் பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டான் அந்த ஆள்.

சரி சரி… மனத்தைத் திருப்பு. தியான மார்க்கத்தில் போ.

தியானம் செய்தால் மனம் அமைதி பெறும்.

அமைதியான நதியினிலே ஓடம்… அருமையான பாட்டு.
சிவாஜி என்னமாய் நடித்திருந்தார்? அநாவசியமாய் அரசியலில் நுழைந்து வேண்டாத மனக் கஷ்டங்களை ஏற்படுத்திக் கொண்டார். சிவாஜி கணேசன் இல்லாத திரை உலகம் என்னவோ போலிருக்கிறது. ஏன் அவர் ஒரு படத்தை டைரக்ட் செய்யக்கூடாது? அடாடா தியானத்தை விட்டு விலகி விட்டோமே. மனமே…

ஏன் இப்படிச் சோதிக்கிறாய்? அலையாமல் ஒரு இடத்தில் நில்லேன்!

ரமண மஹரிஷி மயக்க மருந்து போட்டுக் கொள்ளாமலேயே ஆபரேஷன் செய்து கொண்டாராம். அது அந்தக் காலம். இப்போது, மாத்திரை போட்டுக் கொண்டால் தான் பலருக்குத் தூக்கமே வருகிறது. உடல் வலிமை உணராமல் இருக்க ரமணரால் மட்டும் எப்படி முடிந்தது?

உடல் வேறு, மனம் வேறு என்றால், உடல் அழிந்த பிறகு மனம் என்ன ஆகிறது, எங்கே போகிறது?

அடடச்சீ! நமக்கு எதற்கு இந்த தத்துவ விசாரம்? கமலாவுக்கும் அம்மாவுக்கும் நடக்கிற சண்டைகளுக்கே தீர்வு சொல்ல முடியாத நமக்கு இவ்வளவு பெரிய தத்துவங்கள் எல்லாம் எப்படிப் புரியும்? போதும் மனமே சும்மா இரு-

தியானம் முடிந்த பிறகு எதைப் பற்றி வேண்டுமானாலும் நினை. ப்ளீஸ்… கொஞ்சம் ஒத்துழையேன்.

அலைபாய்ந்து கழுத்தறுக்காதே.
‘அலை பாயுதே கண்ணே…!
என் மனம் அலை பாயுதே!’ கமலாவைப் பெண் பார்க்கப் போனபோது அவள் இந்தப் பாட்டைத்தான் பாடினாள். அப்படியும் நான் அவளையே கல்யாணம் செய்து கொண்டுவிட்டேன். ஒரு பாட்டுக்காக ஒரு பெண்ணை நிராகரிப்பது எனக்குச் சரியானதாகப்படவில்லை.

அட, அடங்காப்பிடாரி மனமே! ஏன் இப்படி சண்டித்தனம் செய்கிறாய்?

ஒரு ஐந்து நிமிடம் அசையாமல் இரு. அப்புறம் எங்கே வேண்டுமானாலும் போய்த் தொலை.

இப்போதுதான் புரிகிறது. மனம் என்பது விலைவாசி மாதிரி. யாராலும் கட்டுப்படுத்த முடியாதது. தறிகெட்டு செல்லக் கூடியது. அதன் இஷ்டத்திற்கு விட்டு விட வேண்டியதுதான். ஆட்சிக்கு வருபவர்கள் அப்படித்தான் செயல்படுகிறார்கள். அதுதான் மரபு.

முடியாது. என்னுடைய மனம் என் பேச்சைக் கேட்க மறுப்பதா? எவ்வளவு நேரமானாலும் சரி,

ஒரு நிமிடமாவது மனத்தை அடக்காமல் விடுவதில்லை. அட்டென்ஷன். பல்லைக் கடித்து மனத்தை நிறுத்தினேன்.
ஆபீஸரின் முகம் தேவையில்லாமல் நினைவுக்கு வந்தது.

இந்த ஆள் இங்கே ஏன் வருகிறார்? போய்யா…

நாளைக்கு ஆபீஸுக்கு வந்து பார்த்துக் கொள்கிறேன்.
லீவு நாள்ல கூட முகம் காட்டி எரிச்சலூட்டாதே!

திடீரென்று நான் என்னை மறக்க ஆரம்பித்தேன் ஓஹோ… இதுதான் தியானமா?

எவ்வளவு நேரம் அப்படி இருந்தேனோ தெரியவில்லை.

யாரோ என்னை உலுக்கி எழுப்பினார்கள். கமலாதான்.
“ஏங்க… எழுந்திருங்க! தியானம் பண்ணும்போது குறட்டை என்ன குறட்டை?”

பபி…
-துக்ளக் சத்யா படித்ததில் பிடித்தது😀

 

Advertisements

பட்டாசில்லாத தீபாவளி- பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்

Image result for தீபாவளி

மலர் மெத்தையில் நாம் புரள

மண்தரையில் சுகம் இழந்து

நாளும் துன்பத்தில் வீழ்ந்து

துவளும் குடும்பங்கள் இங்கே!

 

பலவித பட்டாடை அணிந்து

அறுசுவையோடு உண்ண

ஒருசுவையும் அறியா மக்கள்

தெருவில் திரிவதும் இங்கே!  

 

துடிப்புள்ள சிறுவர் சிறுமிகளும்

படிக்க பள்ளிக்குச் செல்லாமல்

நாளும் வெடிமருந்தில் கலந்து

வாழ்வை தொலைப்பது இங்கே!

 

அனைத்தும் அறிந்த நாமும்

ஆர்ப்பாட்டமின்றி விழிப்புணர்வோடு

அன்போடு சிறுவர் சிறுமியர்  

பள்ளி செல்ல துணைபுரிவோம் !

 

பட்டாசில்லா தீபாவளி

குடிசைவாழ் மக்களோடு கலந்து

கட்டுப்பாட்டோடு கொண்டாடி

தீப ஒளியில் மகிழ்வோம்!

இராவண காவியம் – நன்றி விக்கிபீடியா

(நன்றி: https://ta.wikipedia.org/s/ch3)

Image result for இலங்கேஸ்வரன் நாடகம்

இராவணனை நாடகத் தலைவனாக அமைத்து  இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தை நாடகக் காவலர் மனோகர் நடித்தார் என்பது அனவரும் அறிந்த்து.

Image result for இராவண காவியம்

ஆனால் கம்ப ராமாயணத்தை  அடியொற்றி அதேபோல ஐந்து காண்டங்களுடன் இராவணனைக் காவியத் தலைவனாக்கி இராமனைக் கெட்டவனாக்கி அமைக்கப்பட்ட நூல்  இராவண காவியம்.  முடிவில் இராவணன் துன்பியல் தலைவனாக அழிந்து படுகிறான்.

இந்த    இராவண காவியம் எனும் நூல், இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. பெரியார் அவர்களின் பெருந் தொண்டரும்,  அண்ணா அவர்களின் தோழரும் ஆகிய புலவர் குழந்தை அவர்களின் புரட்சிக் காப்பியம் இராவணகாவியம்.

திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் இயற்றப்பட்ட இன்னூல்  1946 இல் வெளிவந்தது.

 

எந்தமிழன் செந்தமிழ்க்காக வாழ்ந்தஇரா
வணன்பெருஞ்சீர் இனிது பேசும்
செந்தமிழின் பூங்காவாம் இராவணகா
வியம்எனும்இத் தேம்பா நூலைத்
தந்தமிழின் பண்பாட்டை அறிந்துநடைப்
பிடித்தினிது தகவே வாழப்
பைந்தமிழின் பேரேடா வருங்காலத்
தமிழர்க்குப் படைக்கின் றேனே

இந்த நூல் சென்னை மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் 1948 – ஆம் ஆண்டு ஜூன் 2 – ஆம் தேதி தடைசெய்யப்பட்டு பிறகு 1971ம் ஆண்டு  (தி மு க ஆட்சியில்)   அரசின் தடை நீக்கப்பட்டது.

இக்காப்பியம் தமிழ்க் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம். பழிபுரி காண்டம், போர்க் காண்டம் என ஐந்து காண்டங்களையும் 57 படலங்களையும் 3100 பாடல்களையும் கொண்டுள்ளது. .

இராவண காவியம் படிப்போர் இராவணனையும் அவனைச் சார்ந்தோரையும் போற்றும் படியும், இராம, இலக்குவர்களையும் மற்றவர்களையும் வெறுக்கும் படியும் புலவர் குழந்தை  பாடியுள்ளார். இக்காவியம்  வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணனைத் தமிழ்க் கதாநாயகனாகச் சித்தரிக்கிறது.

இது கூறும் கதை இங்கே: 

இராவணனின் இல்லறம்

இரண்டாம் கடல்கோளுக்குப் பின்னர்த் தோன்றிய இலங்கையில் விச்சிரவாவு என்ற மன்னர், தமிழகத்தினை ஆண்டுவந்தார். அவருடைய மனைவியின் பெயர் கேகசி. இவர்கள் இருவருக்கும் இராவணன், கும்பகன்னன், பீடணன் என மூன்று ஆண் குழந்தைகளும், காமவல்லி என்ற பெண் பிள்ளையும் பிறந்தனர். விச்சிரவாவின் மரணத்திற்கு பிறகு இராவணன் தமிழகத்தினை ஆண்டார்.முல்லை நாட்டு மன்னன் மாயோனின் மகள் வண்டார் குழலியை இராவணன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் சேயோன் என்ற மகன் பிறந்தான்.

ஆரியர் வருகை

வடநாட்டில் இருந்து தமிழகத்தின் வடக்குப்பகுதியில் ஆரியர்கள் குடியேறினார்கள். அங்கு கோசிகன் (விசுவாமித்திரர்) போன்ற முனிவர்கள் உயிர்பலி கொடுத்து யாகம் செய்தார்கள். அதனை தடுப்பதற்காக இடைவள நாட்டை ஆண்டு வந்த தமிழரசியான தாடகை என்பவர் இராவணனுக்கு கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று இராவணன் சுவாகு என்னும் படைத்தலைவனுடன் தன் சேனையை அனுப்பினார். கோசிக முனிவரின் யாகம் தடைப்பெற்றது.

இராம சகோதரர்களின் கொலைகள்

வேள்வி தடைப்பட்டதால் கோசிக முனிவர் (விசுவாமித்திரர்) அயோத்தி சென்று இராம இலக்குவனை அழைத்து வந்து மீண்டும் யாகம் செய்தார். அதனை தடுத்த தாடகை, சுவாகு, மாரீசன் மூவரும் இராம சகோதரர்களால் கொல்லப்பட்டார்கள். படைத்தலைவன் கொல்லப்பட்டதால் இராவணன் தன்னுடைய தங்கையை பாதுகாக்க கரன் எனும் படைத்தலைவனை விந்தக நாட்டுக்கு அனுப்பி வைத்தார்.

காமவல்லியை கண்ட இராமன் அவளிடம் காமமுற்று, அவளை வற்புருத்தினார். இராமரின் விருப்பத்திற்கு இனங்காததால், இலக்குவன் காமவல்லியின் உறுப்புகளை அறுத்து கொன்றார். இராவணன் தங்கையின் பாதுகாப்பிற்காக அனுப்பிய கரனும் அழிக்கப்பெற்றார்.

சீதையை இராவணன் கவர்தல்

படைத்தலைவனும்,தங்கையும் கொல்லப்பட்ட செய்தியை தூதர்கள் மூலம் அறிந்த இராவணன், விந்தகம் வந்தார். அங்கே தங்கை வளர்த்த மானை அனுப்பி இராம சகோதர்களை சீதையிடமிருந்து பிரித்தார். பின்பு சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் தன் தங்கையாக போற்றினார்.

பீடணன் வெளியேறல்

இராவணன் அரசவையில் இராமனை எதிர்த்து போர்புரிவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதற்கு பீடணன் எதிர்ப்பு தெரிவித்தார். சீதை இராமனிடம் அனுப்பிவைத்து பகையின்றி வாழ்வது என்றார். பீடணனின் கருத்தினை ஏற்காமல் இராவணன் அவரை வெளியேற்றினார். அதானால் பீடணன் தன்படைகளுடன் இராமனிடம் சேர்ந்தார். இலங்கையை எளிதில் வெல்லும் வழிகளை இராமனுக்கு கூறினார்.

கும்பகன்னன், சேயோன், இராவணன் வீர மரணம்

இராமனுக்கும் இராவணுக்கும் இடையே போர் மூண்டது. கும்பகன்னன் போரில் வீர மரணமடைந்தார். அதனை கேள்வியுற்று வருத்தமடைந்திருந்த இராவணன் அவருடைய மகன் சேயோன் தேற்றினார். அதன் பின் சேயோனும் போரில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தார். தமயனும், மகனும் இறந்ததை அடுத்து இராவணன் போரில் ஈடுபட்டார்.

இராமனால் இராவணனின் தேர்ப்பாகன் கொல்லப்பட்டார், பீடணனால் இராவணனின் தேர்க் குதிரைகள் கொல்லப்பட்டன. 

மாதலி என்பவர் கொடுத்த அம்பினை இராமன் எய்தார். அதன் மூலம் இராவணனும் வீரமரணம் அடைந்தார்.

 

எப்படி இருக்கிறது இந்தத் திராவிட இராவணாயணம் ?

 

 

ஏன் இறைவன் கொடுத்தான் .. ! – கோவை சங்கர்

Related image

அன்னநடை யென்பார் மின்னலிடை யென்பார்
செந்நுதல் கருங்கூந்தல் கயல்விழி யென்பார்
கன்னமோ தித்திக்கும் மாம்பழக் கதுப்பென்பார்
மனங்கவர் கொவ்வைப் பழமே யதரமென்பார்!

நாவென்பார் இன்சுவை யளிக்கும் என்பார்
கவர்கின்ற பற்களோ முத்துக்கள் என்பார்
பூவொத்த மென்மையுடை மெய்தா னென்பார்
செவ்விய கதுப்புக்கள் பெண்ணழகே யென்பார்!

ஆசையைத் தூண்டிவிடும் வாய்தா னென்பார்
பேச்சின்றி மயக்கிவிடும் மலரிதழ் என்பார்
இச்சைதனை யுருவாக்கும் மென்துடை யென்பார்
அச்சமொடு நடைபயிலும் தளிர்பாத மென்பார்!

தேன்குரலே பெண்குரலாம் நாணமே முகவழகாம்
மன்னருமே ஆடிவிடும் மருள்கின்ற கண்வீச்சாம்
தன்னழகால் வரும்மமதை எழில்தனையே கூட்டிடுமாம்
இன்னெழில் வதனமுமே கெஞ்சலொடு கொஞ்சிடுமாம்!

பண்பாடும் புலவருமே இவையெல்லாம் கூறியபின்
பெண்ணிற்கு கற்புமிக மிகமிகவே வேண்டும்
ஆண்களுமே பிறபெண்ணை சோதரியாய் கொளவேண்டும்
புண்ணாக்கும் வார்த்தைகளை சொல்வதுதான் சரியாமோ!

பருவத்தை ஏன்கொடுத்தான் பெண்ணெழிலை ஏன்படைத்தான்
உருவத்தை படமாக்கும் விழிதனையே ஏனளித்தான்
மருட்டிடும் சலனமுடை மனந்தனையே ஏன்கொடுத்தான்
வெருட்டுகின்ற ஆசைதனை ஏனிறைவன் அளித்திட்டான்!

 

 

 

அம்மா கை உணவு (20) – சுண்டல் -சதுர்புஜன்

Image result for சுண்டல்நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.

 1. கொழுக்கட்டை மஹாத்மியம் – மார்ச் 2018
 2. இட்லி மகிமை – ஏப்ரல் 2018
 3. தோசை ஒரு தொடர்கதை – மே 2018
 4. அடைந்திடு சீசேம் – ஜூன் 2018
 5. ரசமாயம் – ஜூலை 2018
 6. போளி புராணம் – ஆகஸ்ட் 2018
 7. அன்னை கைமணக் குறள்கள் – செப்டம்பர் 2௦18
 8. கலந்த சாதக் கவிதை – அக்டோபர் 2018   
 9. கூட்டுக்களி கொண்டாட்டம் – நவம்பர் 2018
 10. சேவை செய்வோம் – டிசம்பர் 2018
 11. பஜ்ஜி பஜனை – ஜனவரி 2019
 12. பருப்புசிலி பாசுரம் – பிப்ரவரி 2019
 13. வெண்பொங்கல் வேண்டுதல் – மார்ச் 2019
 14. பாயசப் பாமாலை – ஏப்ரல் 2019
 15. ஊறுகாய் உற்சாகம் – மே 2019
 16. பூரி ப்ரேயர் – ஜூன் 2019
 17. இனிக்கும் வரிகள் – ஜூலை 2019
 18. வடை வருது ! வடை வருது ! – ஆகஸ்ட் 2019
 19. வதக்கல் வாழ்த்து -செப்டம்பர் 2019
 • சுண்டலோ சுண்டல் !

 

நண்பர்கள் நால்வர் சேர்ந்து விட்டால்

நிறையவே அங்கே இருக்கும் கிண்டல் !

நவராத்திரி கொலு வந்தது என்றால்

நிச்சயம் நமக்கெலாம் கிடைக்கும் சுண்டல் !

 

ஒன்றா இரண்டா சுண்டலின் வகைகள் !

விதம் விதமாக எத்தனை சுவைகள் !

கொலு வைத்த வீட்டில் மணக்கும் மணக்கும் –

மனதைக் கொள்ளை அடிக்கும் சுண்டல் !

 

சாமிகள் படியில் கொலு வீற்றிருப்பர் !

மாமிகள் ரெடியாய் சுண்டலை வைப்பர் !

மற்றவர்க்கெல்லாம் ஒற்றைக் குறிக்கோள் –

“ஒரு கை பார்ப்போம் இன்றைய சுண்டல் !”

 

எத்தனை சுண்டல் வந்து விட்டாலும்

சுண்டலின் ராணி பட்டாணி சுண்டல் !

அலுக்காது சலிக்காது அசை போடுவோம் நாம் –

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் !

 

வெள்ளையும் கருப்புமாய் காராமணி சுண்டல் !

அதேபோல் இருவிதம் கொண்டை சுண்டல் !

உப்பும் காரமும் சரியாய் இருந்தால்

சற்றும் சளையாது தின்போம் சுண்டல் !

 

பழகிய நட்பு போல் பாசமாய் இருக்கும்

கரையும் பாசிப் பருப்பு சுண்டல் !

அளவாய்த் தேங்காய் துருவிச் சேர்த்தால்

அள்ளித் தின்போம் கடலைச் சுண்டல் !

 

நெஞ்சு நிமிர்த்திடும் நிலக் கடலைச் சுண்டல் !

நிறுத்த முடியாத சுவைதரும் சுண்டல் !

அனைவரும் வந்து அன்புடன் சுவைக்கும்

நம நம நாவிற்கு நல்லதொரு சுண்டல் !

 

எத்தனை வகைகள் ! எத்தனை சுவைகள் !

அம்மா கைமண அதிசய சுண்டல் !

என்றும் நினைவினில் தங்கிடும் அன்னை

என்னை நினைத்து செய்திட்ட சுண்டல் !

 

பிடிக்கும்- தில்லைவேந்தன்

 

Image result for instagram free nature HD photos

காலையில் தூவும்  மழைபிடிக்கும்
காரிருள் மேவும் மதிபிடிக்கும்
மாலையில் மயங்கும் ஒளிபிடிக்கும்
மார்கழி வழங்கும் பனிபிடிக்கும்
சோலையில் சிரிக்கும் மலர்பிடிக்கும்
தோகையை விரிக்கும் மயில்பிடிக்கும்
வேலையில் வீசும் அலைபிடிக்கும்
வீணையில் பேசும் கலைபிடிக்கும்.

( வேலை — கடல்)

கோட்டையில் பறக்கும் கொடிபிடிக்கும்
கோடையில் மரத்தின் அடிபிடிக்கும்
ஈட்டிய பொருளில் கொடைபிடிக்கும்
ஏட்டினில்  கம்பன் நடைபிடிக்கும்
கேட்டிலும் சிறக்கும் மனம்பிடிக்கும்
கீழ்மையை வெறுக்கும் குணம்பிடிக்கும்
பாட்டினில் எழுந்த பண்பிடிக்கும்
பாரினில் பிறந்த மண்பிடிக்கும்.

முகத்தினில்  மகிழும்  நகைபிடிக்கும்
மொய்மலை  முகிலின் புகைபிடிக்கும்
அகத்தினில் அன்பின் ஒளிபிடிக்கும்
ஆற்றலில் அடங்கும் நிலைபிடிக்கும்
தொகுத்ததில் என்றும் புறம்பிடிக்கும்
தொலைந்திடும் கதிரின் நிறம்பிடிக்கும்
வகுத்ததில் குறளின் அறம்பிடிக்கும்
வாழ்வெனும் தெய்வ வரம்பிடிக்கும்

கீழடி

Image

தஞ்சாவூரில் சிந்தனை மேடை என்ற அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்று ‘கீழடி – தமிழர் வாழ்வும் வரலாறும்’ என்ற தலைப்பில் பேசினார் அமர்நாத் ராமகிருஷ்ணா.

அமர்நாத் ராமகிருஷ்ணா பேசுகையில், “கடந்த செப்டம்பர் மாதம் சிந்து சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியப் பழங்குடிகள் என்றும், கீழடியின் வயது கி.மு 600 என்றும் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளிவந்தன. கீழடியில் செய்யப்படும் ஆய்வு அரைகுறையானவை. இதை முழுமையாகச் செய்தால்தான் தமிழர் வரலாற்றுக் கால அளவை முழுமையாக அறிய முடியும். அவை இன்னும் பின்னோக்கிச் செல்லும். அதற்குக் கீழடியில் முழுமையான அகழாய்வு செய்யப்பட வேண்டும். கீழடி இன்னும் பல பொக்கிஷங்களை கொண்டுள்ளது. இதுபோன்று தமிழ்நாட்டில் இன்னும் பல இடங்கள் உள்ளன. அவற்றையும் அகழாய்வு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விரிந்த அகழாய்வு இதுவரை நடைபெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், ஆதிச்சநல்லூர் போன்ற மூன்று இடங்களில் தான் ஓரளவுக்குப் பெரிய அளவில் அகழாய்வுகள் செய்யப்பட்டன. மதுரை ஒரு பழைமையான நகரம். சங்க காலத்தில் தலைநகரமாக இருந்துள்ளது. வைகை நதிக்கரையின் இரண்டு புறமும் எட்டு கிலோ மீட்டர் பரப்பளவில் முழுமையாகச் செய்யப்பட்ட ஆய்வில் 293 இடங்களில் பழைமையான தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன. தமிழ்நாட்டில் மக்கள் வாழ்ந்த பகுதியே இல்லை எனக் கூறப்பட்டு வந்தது. அதைக் கண்டுபிடிக்கும் நோக்கத்திலேயே இந்த ஆய்வைச் செய்தோம். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை கண்டுபிடித்தோம்.

அந்த நூறு இடங்களில் ஒரு இடம்தான் கீழடி. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தென்னை மரங்கள்தான் கீழடி மேட்டுப் பகுதியைக் காப்பாற்றியுள்ளன. இல்லை என்றால் அந்த இடம் பிளாட்டாக மாறியிருக்கும். 110 ஏக்கர் கொண்ட பரப்பளவில் 5 கிலோ மீட்டர் அளவிற்கே அகழாய்வு செய்யப்படுகிறது.

இதையும் படிக்கலாம்.. கீழடி ஸ்பெஷல்: கீழடி-முசிறிப்பட்டிணம் தொடர்புகள்!

இன்னும் ஆழமாக ஆய்வு செய்தால்தான் முழுமையான வரலாறு தெரியவரும். போதிய கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு செய்யவேண்டும். குறைந்தது பத்து ஆண்டுகளாவது அகழாய்வு செய்யவேண்டும். ஹரப்பா, மொகஞ்சதாரோ பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். அங்கெல்லாம் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் அகழாய்வு நடைபெற்றன. அதுபோல் கீழடியிலும் ஆய்வுசெய்யவேண்டும்.

கீழடியில்தான் அதிக அளவில் செங்கல் கட்டடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, இதை நகர நாகரிகம் இல்லை எனக் கூற முடியாது. இந்தக் கூற்றை மாற்றியது இரண்டாம் கட்ட அகழாய்வுதான். நகர மக்கள்தான் அதிநவீன வாழ்க்கையை விரும்புவர். கீழடியில் எங்களுடைய ஆய்வில் ஏறக்குறைய 15 உறை கிணறுகள் கண்டறியப்பட்டன. அங்குள்ள உறை கிணறுகள், வடிகால் முறை போன்றவற்றை காணும்போது, அது நகர வாழ்க்கைதான் என்பது உறுதியாகிறது.

மேலும், 1,800 தொல்பொருள்கள் கிடைத்தன. ஆனால், அங்கு பொருள்கள் உற்பத்தி செய்யப்படவில்லை என்பது ஆய்வில் தெரிய வருகிறது. பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தால், அதற்கான மூலப்பொருள்களின் தடயம் இருந்திருக்கும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அப்படி எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. மேலும், அரைகுறைப் பொருள்களாக அல்லாமல், முழுமையான பொருள்களாகவே கிடைத்துள்ளன. எனவே, வெளியிலிருந்துதான் பொருள்களை வாங்கியிருக்க வேண்டும். நகர நாகரிகத்தில்தான் பொருள்களை வெளியில் வாங்கும் பழக்கம் இருக்கும்.

யானை தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, தாயக்கட்டை, அணிகலன்கள் போன்றவையும் கிடைத்தன. இதன் மூலம், கீழடியில் நகர நாகரிகம் என்பது மட்டுமல்லாமல், முழுமையான நாகரிக வாழ்க்கை இருந்தது உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் அகழாய்வில்தான் பானை ஓடுகளில் கிறுக்கல்கள் காணப்படுகின்றன. இந்தியாவில் இதுபோல வேறு எங்கும் இல்லை. சிந்துவெளியில் கூட வரைபட எழுத்துகள்தான் கிடைத்தன. வரைபடம் மூலம் தகவலை வெளிப்படுத்தும் முறை இருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் பானை ஓடுகளில் காணப்படும் கிறுக்கல்கள் தமிழ் பிராமி எழுத்து என்பதை அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த எழுத்து வடிவங்கள்தான் பின்னர் அசோகர் காலத்துக்குச் சென்றிருக்கும்.

பானையில் எழுதும் பழக்கம் சாமானிய மக்களிடம்தான் இருந்திருக்கிறது. அவர்கள்தான் எழுதியுள்ளனர். பானையில் அரசன் எழுத வாய்ப்பில்லை. எனவே, அக்காலத்திலேயே தமிழர் நாகரிகத்தில் சாமானிய மக்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பது அறிய முடிகிறது. இப்போதும் கூட எவர்சில்வர் பாத்திரத்தில் பெயர் எழுதும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. இந்தப் பழக்கம் இந்தியாவில் வேறும் எங்கும் கிடையாது. எனவே, கீழடி வளமைமிக்க நாகரிகமாகத்தான் இருந்திருக்கும்.

இன்னும் அங்கு நிறைய பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன. வெறும் 3 அல்லது 4 மாதங்களுக்கு மட்டும் செய்யப்படும் அகழாய்வு மூலம் முழுமையான தகவல்கள் கிடைக்காது. பத்து வருடங்களாவது அகழாய்வு செய்ய வேண்டும். மேலும் இன்னும் ஆழமாக அகழாய்வு செய்ய வேண்டும்.

அப்படிச் செய்தால் தமிழர்களின் நாகரிக வரலாற்றுக் காலம் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. அதற்குத் தொடர்ச்சியாக 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு மேலாக அகழாய்வு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் தமிழர் வரலாற்றை மறுகட்டமைப்பு செய்ய முடியும். மேலும் காவிரி, தாமிரபரணி போன்ற நதிகளின் ஓரங்களிலும் அகழாய்வு செய்யப்பட வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் – பதிவு இலவசம்!