மூன்று இட்லி -ரேவதி ராமச்சந்திரன்

Drama in the court

குற்றவாளிக் கூண்டில் கூனிக் குறுகி நின்று கொண்டிருந்தார்  குமரேசன். தலை எல்லாம் கலைந்து, அலங்கோலமாக, உறக்கமின்றி சிவந்த கண்களோட, அவமானத்தில் தலை குனிந்து நின்று கொண்டிருந்தார். இருந்தும் அவரது பணக்காரத்தன்மை அவரது செழிப்பான  உடல் வாகில் தெரிந்தது. 

சின்ன வயதில் சாப்பாட்டிற்கேக் கஷ்டப்பட்ட குடும்பம். ஆதலால் நன்கு படித்து, கஷ்டப்பட்டு படிப்படியாக முன்னேறி இப்போது ஒரு மிகப் பெரிய சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். கார், பங்களா, வேலை செய்ய ஆட்கள் என்று பந்தாவாக வாழ்க்கையை நடத்துகிறார். பணம் சேரச் சேர அதன் மீது மோகம் அதிகமாக, ஆரம்பித்த கையாடல் இப்போது நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக நீதிபதி சிவராமன் முன் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். சிவராமனுக்கு அவரது அலங்கோலமான நிலையைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. ஆனால் அவருக்கு உண்மை நிலையைப் புரிய வைக்க எண்ணினார். சின்னச் சின்ன உதாரணங்களால் வாழ்க்கையின் அறிய நிலையைப் புரிய வைப்பதில் சமர்த்தர் சிவராமன். 

சிவராமன் குமரேசனிடம் மெதுவாக ‘காலையில் உங்களுக்கு உணவு ஏதாவது கொடுத்தார்களா’ என்று வினவினார். குனிந்த தலை நிமிராமல், பசியின் உத்வேகத்தால் ‘இல்லை’ என்று மெதுவேத் தலை அசைத்தார் குமரேசன். எண் சாண் உடம்பிற்கு வயிரே பிரதானம். சிவராமன் ஓர் ஊழியரிடம் நான்கு இட்லி வாங்கி வருமாறு ஆணையிட்டார்.  அவரும் கொஞ்சம் தூரம் போய் சின்ன கடையாய் இருந்தாலும் மிருதுவாக இருக்கும் நான்கு இட்லியும் சட்னியும் வாங்கி வந்தார். குமரேசனின்  கையில் இட்லி பொட்டலம் கொடுக்கப்பட்டது. பசிக்கொடுமையினால் அவமானப்பட்டுக்கொண்டே அதை வாங்கிக் கொண்டார் குமரேசன். சிறிது தள்ளி நின்று சாப்பிடுவதற்காக திரும்பும் போது சிவராமன் குமரேசனைத் தடுத்து ‘பரவாயில்லை. நீங்கள் இங்கேயே அமர்ந்து நிதானமாக சாப்பிடுங்கள். அதற்குள் நான் இன்னொரு வழக்கு விசாரணையை முடித்து விடுகிறேன்’ என்று மனிதாபிமானம் பாதி, மனசுக்குள் ஒரு யோசனை பாதியுமாகக் கூறினார்.

கவலையினால் இரண்டு நாட்கள் சாப்பிடாத குமரேசன் பசி பொறுக்க முடியாமல் இட்லியை சாப்பிட ஆரம்பித்தார். ஆனால் அவரால் மூன்று இட்லிக்கு மேல் சாப்பிடவே முடியவில்லை. பேந்தப் பேந்த விழித்தபடி நின்று கொண்டிருந்தார். ‘என்ன ஓர் இட்லியை வைத்து விட்டீர்கள்? சாப்பிடுங்கள்’ என்று பரிவோடும், ஓர் அர்த்தத்தோடும் சொன்னார் சிவராமன். ‘என்னால் சாப்பிட முடியவில்லை. போறும்’ என்றார் குமரேசன். போறும் என்ற வார்த்தையைத் தான் எதிர்ப்பார்த்தார் சிவராமன்.

சிரித்துக்கொண்டே ‘அவ்வளவுதான் வாழ்க்கை. பார்த்தீர்களா? உங்களால் மூன்று இட்லி தான் சாப்பிட முடிந்தது. அதற்கு மேல் உங்கள் வயிற்றில் இடமில்லை. இதற்காகவா நீங்கள் நான்காயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தீர்கள்? மனிதனின் அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைவானவை. ஆடம்பரத் தேவைகள் தான் அதிகம். உங்கள் வயிற்றுக்குத் தீனி போடுவது எளிது. அதற்கு நான்கு இட்லியே அதிகம். ஆனால் உங்கள் ஆடம்பரத் தேவைகளுக்கு நான்காயிரம் கோடி என்ன, நாற்பதாயிரம் கோடி கூடப் போதாது’ என்று சொல்லி அவரையேப் பார்த்தார். குமரேசன் பெரிதாகக் குலுங்கி ஆழ ஆரம்பித்தார். அந்த நான்காவது இட்லி அவருக்கு மட்டுமல்ல, நமக்கும்தான்.

கல்யாணமாகாமல், சந்தோஷமான குடும்ப வாழ்க்கை அமையாமல் மனவேதனையிலிருக்கும் நம் குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்யத் தடையாயிருப்பது இந்த ஆடம்பரத்தினால்தான். வசதி வாய்ப்புகள் இல்லாத நெருங்கிய உறவுகளை ஒதுக்குவது, வசதிக்கு ஏற்ப வேறு இடத்தில் சொந்தம் கொண்டாடுவது போன்ற பல வழிகளில் பாவங்களைச் செய்து விட்டு புண்ய ஷேத்திரங்களுக்குச் சென்று பரிகாரம் செய்ய  முயற்சிப்பது கடப்பாரையை முழுங்கி விட்டு சுக்கு கஷாயம் குடிக்கிற மாதிரி.

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பது தான். நாம் யாரும் இந்த உலகத்தில் நிரந்தரம் இல்லை. அடுத்த நொடி நமக்குச் சொந்தமில்லை. இங்கிருந்து ஒரு பைசா கூட நம்மோடு எடுத்து செல்ல முடியாது. எதையும் இங்கு கொண்டு வரவில்லை, எதையும் எடுத்துப் போக முடியாது. பின் ஏன் இந்த பேராசை! காக்கையைப் போல பகிர்ந்து உண்போம்.

இப்படி மூன்று இட்லி முன்னூறு தத்துவங்களை முத்தாகத் தந்தது மகிழ்ச்சிக்குரிய விஷயமல்லவா!

                                          

அந்த மூன்று நாட்கள் – S L நாணு

அன்புடன் அந்தரங்கம்! | Dinamalar

ஹேமா இடிந்து போய் உட்கார்ந்திருந்தாள்.  மாதர் சங்க கலா வந்து விஷயத்தைச் சொன்னதிலிருந்து அவளுக்கு எதுவுமே ஓடவில்லை. ஏன்.. எதற்காக.. என்ற கேள்விகளே அவள் மனதில் திரும்பத் திரும்ப விஸ்வரூபம் எடுத்து குழப்பத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தன

மாலையில் ஆபீஸிலிருந்து திரும்பிய விக்னேஷ் அம்மாவின் முகம் வாடியிருப்பதை கவனித்தான்.  ஆனால் எதுவும் கேட்கவில்லை. அம்மா கொடுத்த காப்பியை உறிஞ்சியபடி செல்லை மேய்ந்தபடி ஓரக் கண்ணால் அம்மாவைப் பார்த்தான்..

ஹேமா அதிகபட்சமான டென்ஷனுடன் சோபாவில் தவித்துக் கொண்டிருந்தாள்.. வழக்கமாக இது அவள் டிவியில் சீரியல் பார்க்கும் நேரம். ஆனால் இன்று டி.வி. அதிசயமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. நிச்சயமாக ஏதோ முக்கியமான விஷயம் தான் அம்மாவின் மனதைக் குடைந்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தான் விக்னேஷ்.

காப்பியைக் குடித்து முடித்தவன் எழுந்து சென்று அம்மாவின் அருகில் அமர்ந்தான்.

“என்னம்மா?”

யாராவது கேட்க மாட்டார்களா என்று காத்துக் கொண்டிருந்த ஹேமா படபடவென்று ஆரம்பித்தாள்.

“விக்னேஷ்.. இத்தனை வருஷமா நான் ஏமாந்து மோசம் போயிட்டேனோன்னு எனக்கு பயமா இருக்குடா..”

விக்னேஷுக்குப் புரியவில்லை. அம்மா என்ன சொலிறாள்?

”உங்கப்பா எங்க?”

”என்னம்மா தெரியாத மாதிரி கேட்கறே? அதான் மூணு மாசத்துக்கு ஒரு தடவை சேவாலயா குரூப்போட அப்பா ஊர் ஊராப் போய் மூணு நாள் சோஷியல் சர்வீஸ் பண்ணிட்டு வரார்.. இந்தத் தடவை ஜெய்பூர் மேளாவுல ஹெல்ப் பண்ணப் போயிருக்கார்”

“அப்படின்னு தான் நானும் நம்பிண்டிருந்தேன்.  ஆனா உங்கப்பா ஜெய்பூர் போகலை.. மதுரைல ஒரு பொம்பளையோட சுத்திண்டிருக்கார்”

விக்னேஷ் அதிர்ந்து போனான்.

“என்னம்மா சொல்றே?..”

”கலா வந்து உங்கப்பாவை ஒரு பொம்பளையோட மதுரைல பார்த்தேன்னு சொன்ன போது தலைல இடி விழுந்த மாதிரி இருந்தது..”

விக்னேஷால் இதை ஏற்க முடியவில்லை.

”அம்மா.. அபத்தமாப் பேசாதே.. அப்பா அப்படி..”

என்று அவன் முடிப்பதற்குள் ஹேமா ஆரம்பித்தாள்.

“அப்படியெல்லாம் இல்லைன்னு தான் நானும் நம்பினேன்.. அதனால தான் போன தடவை உங்கப்பாவை குருவாயூர்ல ஒரு பொம்பளையோட பார்த்தேன்னு ரமா சொன்ன போது.. அதெல்லாம் இருக்காது. அவர் மும்பை போயிருக்கார்.. நீ வேற யாரையாவது பார்த்திருப்பேன்னு சொல்லிட்டேன்.. ஆனா இந்தத் தடவை உங்கப்பாவை மதுரைல பார்த்தேன்னு கலா அடிச்சு சொன்னா..  அவ போய் பேசறதுகுள்ள உங்கப்பாவும் அந்தப் பொம்பளையும் ஆட்டோவுல ஏறிப் போயிட்டாங்களாம்.. என்னால நம்பாம இருக்க முடியலை.. டேய் நிஜமாவே நான் மோசம் போயிட்டேன்.. உங்கப்பா எனக்கு துரோகம் பண்ணிட்டார்”

ஹேமா தீர்மானமாகப் புலம்பினாள்.  ஆனால் விக்னேஷால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

“அம்மா.. பதட்டப் படாதே.. அப்பா ஊருலேர்ந்து வரட்டும்.. விசாரிப்போம்.. ஆ.. அப்பா வந்த உடனேயே அவசரப்பட்டு விஷயத்தை ஆரம்பிக்காதே.. பக்குவமா நான் கேட்கறேன்”

அன்றிரவு ஹேமாவுக்கு தூக்கம் வரவில்லை. எப்படிப் புரண்டு படுத்தாலும் கலாவின் குரல் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.. தலையைப் பிய்த்துக் கொண்டு அலறி அழ வேண்டும் போலிருந்தது.

மறு நாள் காலையில் ராஜன் ஊரிலிருந்து வந்தார். வழக்கமாக சந்தோஷமாக அவரை வரவேற்கும் ஹேமா இன்று கனத்த முகத்துடன் சமயலறைக்குள் போனது ஏன் என்று புரியாமல் குழம்பினார். எதுவும் கேட்காமல் பல் துலக்கி முகம் அலம்பி துடைத்துக் கொண்டே வந்தவரை

“ஹாய் பா.. எப்ப வந்தீங்க?”

என்று வரவேற்றான் விக்னேஷ்.

“இப்பத் தாண்டா” என்று டைனிங் டேபிள் நாற்காலியில் உட்கார்ந்தவர்..

”என்ன இன்னிக்கு சீக்கீரம் எழுந்துட்டே?”

”ஆபீஸ்ல மீட்டிங் இருக்கு.. சீக்கிரம் போகணும்.. அது சரி.. ட்ரிப் எப்படி இருந்தது” என்று மெதுவாக ஆரம்பித்தான் விக்னேஷ்.

“அதுக்கென்ன.. வழக்கம் போல மனசுக்குத் திருப்தியா இருந்தது”

என்று அவர் முடிப்பதற்குள் காப்பி டம்ளரை அவர் முன்  வைத்து விட்டுப் போனாள் ஹேமா.  அவள் காப்பி டம்ளரை வைத்த விதமே அவள் கோபத்தின் தீவிரத்தைக் காட்டியது.  ராஜன் மகனைப் பார்த்தார்.  விக்னேஷ் அவர் பார்வையை தவிர்த்தான்.

“ஜெய்பூர்ல இப்ப நல்ல குளிர் இருக்குமே?”

இதைக் கேட்டு அப்பா பதில் சொல்லத் தயங்குவார் என்று விக்னேஷ் எதிர்பார்த்தான். ஆனால் ராஜன் பதட்டப் படாமல் சொன்னார்.

”குளிர் இன்னும் செட் ஆகலை.. சொல்லப் போனா நல்ல வெயில்.. கிட்டத் தட்ட முப்பது டிகிரி..”

சமயலறை வாசலில் சுட்டெறிக்கும் பார்வையுடன் ஹேமா நின்றிருப்பதை விக்னேஷ் கவனித்தான்.

“மேளாவுல நல்ல கூட்டமா?”

“கூட்டமா? கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேர். சமாளிக்கறது குள்ள ரொம்பக் கஷ்டமாப் போச்சு.. அதுவும்..”

பேசிக் கொண்டே போனார் ராஜன். அதற்கு மேல் ஹேமாவால் பொறுக்க முடியவில்லை.

“போதும் நிறுத்துங்க.. இதுக்கு மேல பொய் பேச வேண்டாம்” என்று கர்ஜித்தாள்.

ராஜன் எதுவும் புரியாமல் அவளைப் பார்த்தார்.

“நீங்க ஜெய்பூர் போகலை.. எவளோ ஒருத்தியோட மதுரைல கூத்தடிச்சிட்டிருந்தீங்க”

இதைக் கேட்டதும் முதல் முறையாக ராஜனின் முகத்தில் கொஞ்சம் அதிர்ச்சி தெரிந்தது.

”வந்து.. என்ன சொல்றே?.. நான்..”

“நீங்க மதுரைல எவளோ ஒருத்தியோட கூத்தடிச்சதை கலா பார்த்திட்டா.. அது மட்டுமில்லை.. போன தடவை மும்பை போறேன்னு பொய் சொல்லிட்டு குருவாயூர்ல சுத்தினதும் எனக்குத் தெரியும்”

இதைக் கேட்டு ராஜன் எதுவும் பேசாமல் மௌனமானார்.

ஹேமா தொடர்ந்து புலம்பினாள்.

“பார்த்தியா விக்னேஷ்.. குட்டு வெளிப்பட்ட உடனே வாயடைச்சுப் போயிட்டார்.. நான் மோசம் போயிட்டேண்டா..”

விக்னேஷ் அப்பாவைப் பார்த்தான்.

“என்னப்பா.. அம்மா சொல்றது நிஜமா?”

ராஜன் தலை குனிந்து கொஞ்ச நேரம் யோசித்தார். பின் மெதுவாக நிமிர்ந்து பார்த்தார்.

“ஆமாம்.. உங்கம்மா சொல்றது நிஜம். நான் ஜெய்பூர் போகலை.. மதுரை தான் போயிருந்தேன்.. இது மட்டுமில்லை.. இது வரை நான் சேவாலயாவோட போய் சமூக சேவை பண்ணினேன்னு சொன்னதும் பொய் தான்”

“ஐயோ.. ஐயோ.. எப்படிக் கூசாம சொல்றார் பாரு” என்று கத்திய ஹேமாவை அடக்கினான் விக்னேஷ்.

”அம்மா.. கொஞ்சம் சும்மா இரு.. அப்பா என்ன இதெல்லாம்? சேவாலயாவோட போகலைன்னா அப்ப வேற எதுக்கு..”

”எவளோ ஒருத்தியோட கூத்தடிக்கத் தான்”

“அம்மா.. ப்ளீஸ்..”

இப்போது ராஜன் மகனை அடக்கினார்.

“விக்னேஷ்.. அவளை அடக்காதே.. உங்கம்மா கோபப் படறது நியாயம் தானே? அவளுக்கு உண்மை தெரியாதுலியா?”

விக்னேஷ் அப்பாவை புதிராகப் பார்த்தான்.

“உண்மையா?.. என்ன?..”

ராஜன் நிதானமாகச் சொன்னார்.

“விக்னேஷ்.. நான், எங்கண்ணா.. அதான் உன் பெரியப்பா, உன் அத்தை.. நாங்க மூணுபேருமே சின்ன வயசுலேர்ந்து ஒத்துமையா பாசமா இருப்போம்.  ஆனா எங்களுக்குக் கல்யாணமானதுக்கு அப்புறம் உன் பெரியம்மாவுக்கும் உங்கம்மாவுக்கும் நடுவுல முளைச்ச தேவையில்லாத பிரச்சனைனால எங்க மூணு குடும்பமுமே முகப் பார்வை கூட இல்லாம பிரிஞ்சு போச்சு.. ஆனா இது எங்க மூணு பேர் மனசுலயும் உருத்திக் கிட்டே இருந்தது.”

பேசிக் கொண்டே வந்தவர் சற்று நிறுத்தினார். ஹேமாவின் முகத்தில் சின்ன குழப்பம். ராஜன் தொடர்ந்தார்.

“ஒருநாள் திடீர்னு எங்கண்னா கிட்டேர்ந்து கால் வந்தது. அவன் சொன்ன இடத்துக்குப் போனேன். அங்க என் தங்கை உமாவும் வந்திருந்தா.. அண்ணாவையையும் தங்கையையும் ரொம்ப வருஷம் கழிச்சுப் பார்த்த உடனே ரொம்ப உணர்ச்சி வசப் பட்டேன்.. அப்ப எங்க அண்ணா சொன்னான்.. பொம்பளைங்க பிரச்சனைனால நாம பிளவு பட்டு நிக்கறோம்.. இதுல யாரு சரி யாரு தப்புன்னு விவாதிக்க நாம இங்க வரலை.. இவங்களுக்காக நாம ஏன் நம்ம பாசத்தையும் சந்தோஷத்தையும் அனுபவிக்காம இருக்கணும்?.. அண்ணா அப்படிக் கேட்ட உடனே எங்களுக்கு ஒண்ணும் புரியலை.. அப்ப அவன் சஜஸ்ட் பண்ணினான்.. மூணு மாசத்துக்கு ஒரு தடவை மூணு நாள்.. நாம கிளம்பி ஏதாவது ஊருக்குப் போவோம்.. கோயில் குளம்னு சுத்துவோம்.. ஆசை தீர பேசுவோம்.. சின்ன வயசுலேர்ந்து நாம வளர்ந்த மாதிரியே சந்தோஷமா பொழுதைக் கழிப்போம்.. வீட்டுல ஏதாவது சொல்லி சமாளிப்போம்னு சொன்னான்.. எனக்கும் மீனாவுக்கும் அது சரியாப் பட்டது.. அதுலேர்ந்து சேவாலயா கூட சமூக சேவை பண்ணப் போறதா உங்ககிட்டச் சொல்லிட்டு குருவாயூர், கோயம்பத்தூர், மதுரை, திருச்சின்னு ஒவ்வொரு தடவை ஒவ்வொரு இடத்துக்கு பிளான் பண்ணி போயிட்டிருக்கோம்.. ஹேமா.. மதுரைல கலா எங்கூட பார்த்தது என் தங்கை மீனாவை..”

இதைக் கேட்டு ஹேமா உண்மைலயே வாயடைத்துப் போயிருந்தாள்.

“விக்னேஷ்.. உப்புச் சப்பில்லாத பொம்பளைங்க பிரச்சனைகளுக்காக உறவுகளை அவ்வளவு சுலபமா வெட்டி விட்டுர முடியாது.. அப்புறம் ஒரு கட்டத்துக்கு மேல சொந்த அண்ணா தம்பியையே அறிமுகப் படுத்தித் தான் தெரிஞ்சுக்கணுங்கற நிலமை வந்துரும். அதனால தான் இந்தத் தடவை நாங்க பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கோம்.. இனிமே நாங்க சந்திக்கறது மட்டுமில்லை.. எங்க வாரிசுகளையும் அடிக்கடி சந்திக்க வெச்சு அவங்களுக்குள்ள ஒரு அந்யோன்யத்தை ஏற்படுத்தறதுன்னு.. விக்னேஷ்.. இதுக்கு நீ ஒத்துப்பியா? இல்லை உங்கம்மாவுக்குப் பிடிக்காதுன்னு நீயும்..”

ராஜன் முடிப்பதற்குள் விக்னேஷ் சொன்னான்.

“Why not? இதைக் கேட்கவே ரொம்ப த்ரிலிங்கா இருக்கு.. அப்பா.. நாங்க சந்திக்கறது மட்டுமில்லை.. கூடிய சீக்கிரம் அம்மாவையும் பெரியம்மாவையும் சந்திக்க வெச்சு அவங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனையையும் சரி பண்ணி.. நீங்க ஆசைப் படர மாதிரியே எல்லாரையும் ஒரே குடும்பமாக்கறோம்.. என்ன ஓகே தானே?”

ராஜன் உண்மையிலேயே உணர்ச்சி வசப்பட்டு விக்னேஷைக் கட்டிக் கொண்டார். எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் ஹேமா தர்ம சங்கடத்துடன் நின்றாள்.

 

கம்பன் கவி நயம் – சுரேஷ் ராஜகோபால்

sundara kandam / சுந்தர காண்டம்

கம்ப ராமாயணம் – சுந்தர காண்டம்

காட்சி படலம்

அசோகவனத்துள் அனுமன் புகுதல்:

 

மாடு நின்ற அம் மணி மலர்ச் சோலையை மருவி,

‘தேடி, இவ் வழிக் காண்பெனேல், தீரும் என் சிறுமை;

ஊடு கண்டிலென்என்னின், பின், உரியது ஒன்று இல்லை;

வீடுவேன், மற்று இவ் விலங்கல்மேல் இலங்கையை வீட்டி.’

 

ஹனுமான் சூளுரைத்தல் :

தாய்க்கு ஒப்பான தன் தலைவரின் மனையாள், எப்படி இருப்பார் என்பது தெரியாத போதும் துணிந்து, முனைந்து இலக்கை வந்தடைந்தார். இலங்கையை வந்தடைந்தார்.  இலங்கையிலுள்ள . அசோக வனத்திலிருக்கிறார் என்ற செய்தி மட்டுமே அவர் மனதில் கொண்டு அங்குப் புயலெனப் புகுந்தார்,  இலங்கையை  அடைந்தவுடன் தன் இலக்கு  இதுதானென்று உணர்ந்து பயணப்பட்டார் ஸ்ரீ ராம தூதன்,  பக்கத்திலுள்ள அழகிய மலர்ச் சோலையைக் கடந்து, தேடி இவ்வழியில் சீதாபிராட்டியைக்  கண்டுவிட்டால் என் சிறுமை தீரும், என் குறை நீங்கும் (ஊடு கண்டிலென்என்னின்) . அப்படி இல்லாவிட்டால்  இலங்கை நகரத்தை, இங்குள்ள மலை கொண்டு  அழித்து, பின்னே யானும் இறப்பேன். என்று சூளுரைக்கிறார் ஹனுமான்.

 

இந்தப் பாடல், செய்யுள், சுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தில் முதல் பாடல். இராவணன் சிறையில் இருக்கும் சீதாபிராட்டியைக்  கண்டு அவர் நலம், நிலை  பற்றிய செய்திதனை பெறவும்,   தன் தலைவன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி நலம், நிலை பற்றிக்  கூறவும், அவர் கொடுத்த கணையாழிதனை கொடுக்கவும் ஹனுமான் பயணம் ஏற்பாடு செய்யப் பட்டது.

அன்று சர்வ வல்லமை பொருந்தியநிலையில் இருந்த  இராவணன் வைத்துள்ள சிறைக்குச் சென்று இச்செயல்தனை செய்ய முன் வந்த போது இத்தனை துயர்கள் இருக்குமென்று எண்ணவில்லை,  இருந்தாலும் வந்த துயர்களை வென்று அசோகவனம் வந்த போது, மனதில் ஒரு சஞ்சலம் ஒன்று வந்த போது ,  (இச்செயல் நம்மால் முடியுமா, எனவும் முடியாதெனில் உயிர் துறக்கவும்  தயார் நிலைக்கு தள்ளப்பட்டார்.)  அந்த நிலையை விளக்குகிறார் கம்பர்.

 

அடுத்தது அயோத்திக் காண்டம் – கங்கை படலம்

14 ஆண்டுகள் இலட்சுமணன் உறங்காத அதியசம் - இராமாயணம் தரும் ஆச்சர்ய தகவல்கள்.!

வெய்யோனொளி தன்மேனியி(ன்) விரிசோதியி(ன்) மறையப்

பொய்யோவெனு மிடையாளடு மிளையாளடு போனான்

மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ

ஐயோவிவ(ன்) வடிவென்பதொ ரழியாவழ குடையான்

 

சூரியனின் சுட்டெரிக்கும் ஒளி, ஸ்ரீ ராமபிரானின் மேனியிலிருந்து வரும், கதிர் வீச்சு போல  விரிகின்ற சோதியில் மங்கிப் போய்விட, அவர் கூட வரும் சீதாபிராட்டிக்கு இடுப்பு என்று ஒன்றிருக்கிறதா  (பொய்யோ எனும் இடையாளோடும்) இல்லையா… அது பொய்யா இல்லை உண்மையா  என்று தோன்றும் அளவுக்கு உள்ள இடையாளோடும்.. அவள் அழகை  வியந்து வர்ணிக்கிறார் கம்பர்.

மூத்தவர் பின்னே, இளைய பெருமாளான லக்ஷ்மணன் உடன் போகிறார் .

ஸ்ரீ ராமன்  நிறம் மை போன்ற கருமையோ,  மழை மேகம் போல் கருப்போ,  மரகத மணி போன்ற பச்சை நிறமோ,  கடல் போல நீலமோ, ஐயோ எப்படிச் சொல்லுவது… (ஸ்ரீ ராமனை வர்ணிக்கையில் ஆகா  கம்பரின் தடுமாற்றம் தெரிகிறது ), இப்படிப்பட்ட நிறத்தவன்  என்று நிர்ணயிக்க முடியாமல் இருப்பதே இவன் வடிவழகு என்பது என்றும் , எப்போதும் அழியாத அழகு உடையவன் என்றும்  தன்  தடுமாற்றத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறார் இங்கே.

 “ஐயோ” என்ற பதம் தமிழ் இலக்கியத்தில் அதன் சொல்லாட்சி  மிகவும் சொற்பமாகவே பெற்றது குறிப்பிடத்தக்கது

 

 

 

 

இடமாற்றம் – ஆ.கிருஷ்ணதாஸ்

Set Of 2 - Heritage Collection Gold Cobra Rollerball & Ballpoint Pen Black Designer Pens: Buy Online at Best Price in India - Snapdeal

எஸ்.டி என்கிற தனியார் கொரியர் அலுவலகம் ஒன்றில் டெலிவரி பாயாக வேலைசெய்து வருகிறான் ராமு. பணம் சம்பாதிக்க போராடும் பலகோடி இளைஞர்களுள் அவனும் ஒருவன். அவனுக்கு பேனா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் தனது சூழ்நிலை உணர்ந்து, குறைந்த விலைமதிப்புடைய பேனாக்களையே வாங்கி உபயோகித்து வந்தான். ஒருமுறை பேனா ஒன்றை வாங்க கடைக்குச் சென்றான். அங்கே,

அண்ணா, அந்த கருப்பு கலரு பேனா எவ்வளவுணா?

அதுவா… அஞ்சு ரூபா வரும் தம்பி

அப்போ, அந்த நீல கலரு எவ்வளவுணா?

அதுவும் அஞ்சு ரூபாதான் தம்பி

சரி, எனக்கு அந்த நீல கலரு பேனாவ குடுங்க

இந்தாங்க தம்பி, இந்த பேப்பர்ல கூட எழுதி பாத்துக்கோங்க

சரிங்கண்ணா, ரொம்ப தேங்க்ஸ்… என தனக்கு பிடித்த பேனா ஒன்றை கடைக்காரரிடமிருந்து வாங்கிக் கொண்டு புறப்பட்டான். புதியபேனா அவனது சட்டைப்பையில் ஜம்மென்று அமர்ந்துகொள்ள, வீட்டிற்கு சந்தோச நடைபோட்டான் ராமு.

மறுநாள் காலை,

அம்மா எங்கமா இருக்க…டிபன் ரெடி பண்ணிட்டியா?

கொஞ்சம் பொறுடா, எடுத்து வச்சுட்டு இருக்கேன்ல

சீக்கிரம் வாம்மா… நேரமாகுதுல

இவனொருத்தன் எப்ப பாத்தாலும் சீக்கிரம் சீக்கிரமுனு சொல்லிக்கிட்டு, கொஞ்சம் சாப்டு போனாதான் என்னடா?

நான் அங்க போய் சாப்டுக்குறேன்…நீ டிபன் பாக்ஸ குடு

இந்தா டிபன் பாக்ஸு… கூட இதையும் புடி

என்ன இது?

ஒனக்கு தான், பேனா ஒன்னு வாங்குனேன்

எவ்வளவுமா இது?

அம்பது ரூபாடா…கொஞ்சம் டிசைனாவும் இருக்குல

யம்மா, நேத்து தான நான் ஒரு புதுபேனா வாங்குனேன்

ஆமா, எப்ப பாத்தாலும் மூணு ரூபா, அஞ்சு ரூபா பேனாவயே வாங்கிட்டு இருக்க…ஒரு நல்ல பேனாவ வாங்கி வச்சுருக்கியா நீ?

நீ ஏம்மா இப்டிலாம் பண்ற? அடுத்த மாசத்துல இருந்து சம்பளம் ஜாஸ்தியா கெடைக்கும், நான் அப்போ வாங்கிருப்பேன்ல

மொதல்ல பேனாவ பாக்கெட்டுல வச்சிட்டு, வேலைக்கு கெளம்பு

கெளம்புறேன், கெளம்புறேன்… என அம்மாவிடம் சலித்துக் கொண்டு வீட்டின் வெளியே வந்தான். தான் வாங்கிய ஐந்து ரூபாய் பேனாவை காற்சட்டைக்குள் பத்திரப்படுத்திவிட்டு, தன் அம்மா வழங்கிய பேனாவை ஆசை ஆசையாய் கையிலேந்தி, தன் இதயத்தின் அருகே அமர்த்தினான். பேனாவின் ஒற்றைக்கரம் சட்டைப்பையை நன்றாக பற்றிக் கொள்ள, அலுவலகத்தை நோக்கிய அவனது பயணம் ஆனந்தமாக தொடங்கியது.

எலே சௌந்தரு…லயினுக்கு போகயில, அந்த ராசப்பன் டீ கடக்கி அஞ்சு தண்ணி கேனு போட்டுட்டு வந்துருலே

சரிங்க அண்ணாச்சி, பைசா ஒடனே வாங்கனுமா?

அத பெறவு பாத்துக்கலாம்…நமக்கு தெரிஞ்ச ஆளுதானலே

சரி, நான் லயினுக்கு போயிட்டு வார்றேன் அண்ணாச்சி…

மகாலட்சுமி மினரல் வாட்டர் சப்ளை கம்பெனியிலிருந்து 20லிட்டர் கொள்ளளவு கொண்ட, நிறைய தண்ணீர் கேன்களை ஏற்றிக்கொண்டு வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க புறப்பட்டது, அந்த நான்குச் சக்கர சின்ன யானை.

பயணியர் நிழற்குடையில் பேருந்தின் வருகைக்காக காத்திருந்தான் ராமு. அங்கே கூட்டம் சற்று அதிகமாக இருக்க, அச்சமயத்தில் அவனுக்கொரு அலைபேசி அழைப்பு வந்தது.

சார்! கிளம்பிட்டேன் சார்… பஸ் ஸ்டாப்புல தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.

ஓகே ராமு, இன்னைக்கு உங்களுக்கு ஆறு டெலிவரி தான். சீக்கிரமா முடிச்சிட்டு வீட்டுக்கு போங்க. சம்பளத்த பத்தி நாளைக்கு நான் ஆஃபீஸ் வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம்.

சரிங்க சார், தேங்க்யூ… என சொல்லிவிட்டு அலைபேசி அழைப்பைத் துண்டித்தான்.

சிறிது நேரத்தில் பேருந்து வரப்போகும் சத்தம் அவனது காதில் வந்தடைய, தயார் நிலையில் இருந்தான் ராமு. ஏற்கனவே பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், நிறுத்தத்தில் நில்லாமல் சென்றது அந்த பேருந்து. வேகம் அவ்வளவாக இல்லை என்ற காரணத்தினால் அவன் படிக்கட்டின் உள்ளே தாவிக் குதித்தான். அவன் உள்ளே குதித்த வேளையில், அவனது சட்டைப் பையிலிருந்த பேனா வெளியே குதித்தது. வெளியே குதித்த பேனா உருண்டுகொண்டே தார்சாலையின் ஓரமாக ஐக்கியமானது. பாவம் ராமு! தன் அம்மா வழங்கிய பேனா, கீழே விழுந்தது கூட தெரியாமல் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டான்.

ட்ரிங்…ட்ரிங்…ட்ரிங்…ட்ரிங்…

ஹலோ…ஈ2 போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நாராயணகுமார் பேசுறேன், சொல்லுங்க…

சார், டிஜிபி ஆபீஸ்ல இருந்து பேசுறோம் சார். இங்க ஃபேக்ஸ் வேல செய்யல, அதனால உங்களோட டிரான்ஸ்ஃபர் ஆர்டர நேத்தே கொரியர்ல அனுப்பிட்டோம். இன்னைக்கு உங்க கைக்கு வந்துரும், நீங்க கேட்ட மாதிரியே மதுரைக்கு உங்கள மாத்தியிருக்கோம் சார், வாழ்த்துகள்!

ஓ தேங்க்யூ சார்! நான் பாத்துக்குறேன், தேங்க்யூ சோ மச்… என்றதும் தொலைபேசி மீண்டும் தன் இருப்பிடத்தை வந்தடைய, காவல் ஆய்வாளர் நாராயணகுமார் தனது பணியிடமாற்ற ஆணை வருவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தார்.

அலுவலக நிறுத்தம் வந்ததும் பேருந்திலிருந்து இறங்கினான் ராமு. கீழே இறங்கியதும் அவனது சட்டைப் பையை தொட்ட அவனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஐய்யய்யோ பேனாவ காணோமே! பஸ்ல ஏதும் விழுந்திருக்குமோ…? அம்பது ரூபா ஆச்சே…! அதுவும் அம்மா குடுத்ததாச்சே…! என்று புலம்பிக் கொண்டிருந்தான். பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் தன் காற்சட்டையில் இருந்த ஐந்துரூபாய் பேனாவை எடுத்து, தனது சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அலுவலகத்தை நோக்கி நடந்தான். அங்கே அவனுக்கு வழங்கப்பட்ட ஆறு டெலிவரிகளை குறித்து, எடுத்துக்கொண்டு அலுவலக இருசக்கர வாகனத்திலிருந்து புறப்பட்டான் ராமு.

வாடிக்கையாளர்களிடம் மினரல் வாட்டர் கேன்களை இறக்கிக் கொண்டிருந்த சௌந்தர், அடுத்த கடையை நோக்கி சின்ன யானையில் சவாரி செய்ய தொடங்கினான். அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் கேன்களும் புதுயிடம் நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தன.

அடுத்தகடை வந்ததும், சின்ன யானையின் வேகத்தை குறைத்தான் சௌந்தர். பேருந்து நிறுத்தம் ஒன்றின் ஓரமாக நின்றது, அந்த வாகனம். அவன் வெளியில் இறங்கி வாகனத்தில் இருந்த கேன்களை ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருக்க, அப்போது அவனது கால்பட்டு நகர்ந்த பேனா ஒன்றைக் கண்டான். கையிலெடுத்து அதன் அழகை உற்றுப் பார்த்து விட்டு, உடனே தனது வலது காதில் அதனை சொருகிக் கொண்டான். பின் கேன்களை இறக்கிவிட்டு, மீண்டும் சின்ன யானையை அடுத்த இடம் நோக்கி நகர்த்தினான்.

பேனாவை இழந்த வருத்தத்திலேயே தனது கொரியர் டெலிவரிகளை பார்த்துக்கொண்டிருந்தான் ராமு. இன்னும் இரண்டு டெலிவரிகள்தான் மீதமிருந்தது.

ஹலோ, ஈ2 போலீஸ் ஸ்டேஷனா சார்?

ஆமா ஈ2 போலிஸ் ஸ்டேஷன் தான், நான் இன்ஸ்பெக்டர் நாராயணகுமார் பேசறேன்…

சார் என் பேரு ராமு, நான் எஸ்.டி கொரியர்ல இருந்து பேசுறேன். உங்களுக்கு கொரியர் ஒன்னு வந்துருக்கு. ஒரு அரைமணி நேரத்துல வந்துடுறேன் சார்.

ஓகே மிஸ்டர்.ராமு வாங்க…

 

ராசப்பன் டீக்கடைக்கு அருகில் வந்ததும் சின்ன யானையை நிறுத்தினான், சௌந்தர்.

வணக்கம்ணே! அண்ணாச்சி கேன் போடச் சொன்னாங்க

ஆமா தம்பி, ஒரு அஞ்சு கேன் போடுங்க

சரிங்கண்ணே…

சௌந்தர் கேன்களை இறக்கிக் கொண்டிருக்கையில், அவனது காதில் அமர்ந்திருந்த பேனா கீழே இறங்கிவிட்டது. கேன்களை இறக்கும் கவனத்தில், கீழே விழுந்த அந்த பேனாவை அவன் கவனிக்கவில்லை. பின் கேன்களை இறக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

டேய் முத்து…!

சொல்லுங்கண்ணே…

இந்தா…ஸ்டேஷனுக்கு போயி இந்த டீய குடுத்துட்டு வா…

சரிங்கண்ணே… என்று சொல்லி தேநீர் கோப்பைகளை தூக்கிக்கொண்டு, அவன் நான்கு எட்டுவைக்க, முன்னே ஓடிய பேனாவைக் கண்டான். அதனை தூக்கியெடுத்து தனது இடுப்பில் சொருகிக்கொண்டு, காவல் நிலையத்தை நோக்கிச் சென்றான்.

 

வணக்கம் சார்…

வணக்கம், சொல்லுங்க…

சார், நான் எஸ்.டி கொரியர்ல இருந்து வர்றேன், உங்களுக்கு கொரியரொன்னு வந்துருக்கு, இந்தாங்க சார்.

ஓ! நீங்க தான போன்ல பேசுனது…? ரொம்ப நன்றி தம்பி, ரொம்ப நாளா டிரான்ஸ்ஃபர் ஆர்டருக்காகத் தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இன்னைக்குதான் அந்த ஆர்டர் கைக்கு வருது…

ரொம்ப சந்தோஷம் சார், வாழ்த்துக்கள்!

நன்றி தம்பி, டீ குடிச்சிட்டு போலாம். ஒரு நல்ல செய்தியோட வந்துருக்கீங்க, உங்கள சும்மா அனுப்புனா எனக்கு மனசு கேக்காது.

பரவாயில்ல சார்…

அட இருங்க தம்பி… “தம்பி முத்து! இங்க வாப்பா, இவருக்கும் ஒரு டீ குடு…”

சார், இந்த பேப்பருல ஒரு கையெழுத்து போடுங்க சார்…

ம்…குடுங்க என ஆய்வாளர் நாராயணகுமார் கையெழுத்திட பேனாவை எடுத்து எழுத நினைக்கையில், அந்த பேனா எழுதவில்லை. மீண்டும் எழுதிப் பார்த்தார் ஆனால் மறுமுறையும் அது எழுதவில்லை. ச்சே…என்ன இது எழுத மாட்டேங்குது…

அண்ணே, இந்தாங்க டீ… என தனது காதில் பேனாவை வைத்து குடைந்துகொண்டே ராமுவிற்கு தேநீரை வழங்கினான், முத்து.

டேய்…என்னடா அது? காதுல வச்சி கொடஞ்சிட்டு இருக்க…

இது ஒரு பேனா சார்… கீழ கெடந்துச்சு, காது கொடைய சூப்பரா இருக்கு அதான் வச்சிருக்கேன்…

அடேய்! அத குடுறா இங்க…

சார், அப்போ எனக்கு காது கொடைய?

இந்தா இத வச்சுக்கோ… என தனது பழைய பேனாவை கொடுத்துவிட்டு, அந்த பேனாவை வாங்கினார் ஆய்வாளர் நாராயணகுமார்.

ராமு அதை கவனித்துக் கொண்டிருக்கையில், சிறிது உற்றுப் பார்த்தான். “இது நம்ம பேனா மாதிரியே இருக்கே…? அவர்கிட்ட கேக்கலாமா இல்ல வேணாமா? எதுக்கு வம்பு…வேண்டாம்! வேண்டாம்!” என அவனது மனம் முனுமுனுத்தது.

அந்தப் பேனாவை வைத்து ஆனந்தமாக கையெழுத்திட்டார், ஆய்வாளர் நாராயணகுமார்.

இந்தாங்க தம்பி உங்க பேப்பரு, இந்த பேனாவுல எழுதுறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு.

சரிங்க சார், நான் கெளம்பறேன்…

தம்பி ஒரு நிமிஷம், இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். உங்க கையால நல்ல செய்தி வந்திருக்குறதால, உங்களுக்கு ஏதாவது குடுக்கனுமே! இந்தாங்க இந்த 200ரூபாய வச்சுக்கோங்க…

சார், காசுலாம் வேணாம் சார்…

அட சும்மா வாங்கிக்கோங்க தம்பி…

இல்ல, வேண்டாம் சார்…

அப்போ, வேற என்ன குடுக்கலாம்…? என யோசிக்கையில் திடீரென்று, இந்தாங்க பேனா! நீங்க கொரியர் ஆபீஸ்ல வேல செய்யுறதுனால உங்களுக்கு இது அடிக்கடி தேவப்படும். அதனால இத புடிங்க…

பரவாயில்ல சார்…

அட இதயாச்சும் வாங்கிக்கோங்க தம்பி… என அவனிடம் வழங்கினார்.

மனதில் உற்சாகம் பொங்க, தன்னுடைய பேனாவை பெற்றுக் கொண்டு அங்கிருந்து சந்தோஷமாக புறப்பட்டான் ராமு. தனது அம்மாவையே இதயமருகில் வைப்பதுபோல், அந்த பேனாவை சட்டைப் பையில் அமர்த்தினான். மீண்டும் அந்தப் பேனா, தனது ஒற்றைக் கரத்தால் அவனது சட்டைப் பையை இறுக பற்றிக்கொண்டது.

 

குதூகலம் தரும் குழந்தை பாடல்கள் -ஜி.பி.சதுர்புஜன்-

  குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.

  “குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.

  எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

  பார்த்து, கேட்டு மகிழுங்கள் !

 

இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:

 

 1. பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
 2. அம்மா அப்பா ! –  ஜூலை 2020
 3. ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
 4. இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
 5. எனது நாடு – செப்டம்பர் 2020
 6. காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
 7. செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
 8. மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
 9. நானும் செய்வேன் ! – நவம்பர் 2020
 10. அணிலே ! அணிலே ! –  நவம்பர் 2020
 11. எல்லையில் வீரர் ! – டிசம்பர் 2020
 12. பலூன் ! பலூன் ! பலூன் ! – டிசம்பர் 2020
 13. ஜன கண மன ! – ஜனவரி 2021
 14. ஊருக்குப் போகலாமா ? – ஜனவரி 2021
 15. எங்கள் வீட்டு மொட்டை மாடி ! – பிப்ரவரி 2021
 16. பட்டம் விடலாமா ? – பிப்ரவரி 2021
 17. சாமி என்னை காப்பாத்து ! – மார்ச் 2021
 18. கடற்கரை போகலாம் ! – மார்ச் 2021
 19. பிறந்த நாள் ! – ஏப்ரல் 2021
 20. வேப்ப மரம் !    – ஏப்ரல் 2021

           

 1. பஸ்ஸில் போகலாம் !

 

பாம் பாம் பாம் ! பாம் பாம் பாம் !

பாம் பாம் பாம் ! பாம் பாம் பாம் !

 

பஸ்ஸில் போகலாம் பாம் பாம் பாம் !

பராக்கு பார்க்கலாம் பாம் பாம் பாம் !

பயணம் போகலாம் பாம் பாம் பாம் !

பல இடம் பார்க்கலாம் பாம் பாம் பாம் !

 

ஊருக்குப் போகலாம் பாம் பாம் பாம் !

ஊர் சுற்றி பார்க்கலாம் பாம் பாம் பாம் !

ஜன்னல் பக்கம் அமர்ந்தே பாம் பாம் பாம் !

ஜாலியாய் போகலாம் பாம் பாம் பாம் !

 

பெரியவர்கள் வந்தாலே பாம் பாம் பாம் !

எழுந்து இடத்தைக் கொடுக்கணும் பாம் பாம் பாம் !

ஊனமுற்றோர் என்றாலே பாம் பாம் பாம் !

உடனே எழுந்திடனும் பாம் பாம் பாம் !

 

நடத்துனர் ரைட்டென்றால் பாம் பாம் பாம் !

ஓட்டுனர் ஓட்டிடுவார் பாம் பாம் பாம் !

கதவு கிட்டே தொங்காமல் பாம் பாம் பாம் !

பத்திரமாய் போகலாம் பாம் பாம் பாம் !

 

எல்லோர்க்கும் ஏற்றதிந்த பாம் பாம் பாம் !

எளிமையான பயணவழி பாம் பாம் பாம் !

நீயும் நானும் போகலாம் பாம் பாம் பாம் !

நாள் முழுக்க பஸ்ஸிலே பாம் பாம் பாம் !

 

 

                 ********************************************************

  

 1. சிட்டுக் குருவி !

 

 சிட்டுக் குருவி ! சிட்டுக் குருவி !

எங்கே போறே நீ ?

சிறகடித்துப் பறந்து பறந்து

எங்கே போறே நீ ?

இங்கும் அங்கும் மேலும் கீழும்

எங்கே போறே நீ ?

சின்ன சின்ன சத்தம் போட்டு

எங்கே போறே நீ ?

 

வாயில் ஒரு குச்சி கவ்வி

எங்கே போறே நீ ?

மும்முரமா எதனைத் தேடி

எங்கே போறே நீ ?

கூடு கட்ட இடத்தைத் தேடி

எங்கே போறே நீ ?

என் வீட்டிலேயே இடமிருக்கு

எங்கே போறே நீ ?

 

எங்க வீட்டு ஜன்னலிலே

கூடு கட்ட வா !

கூடு கட்டி அழகாய் அதில்

முட்டை இட வா !

முட்டையிட்ட கூட்டினிலே

குஞ்சு பொரிக்க வா !

குஞ்சு கூட சேர்ந்து நீயும்

குதூகலிக்க வா !

 

குருவி உன்னைப் பார்த்துவிட்டால்

குஷி பிறந்திடும் !

நீ பறக்கும் அழகைப் பார்த்துவிட்டால்

பிறக்கும் உற்சாகம் !

சிட்டுக் குருவி ! சிட்டுக் குருவி !

சீக்கிரமாய் வா ! – உன்

சிறகைத் தொட்டு பார்க்கணும் நான்

சீக்கிரமாய் வா !

 

 

நட்பாராய்தல் – முனைவர் கிட்டு முருகேசன்

இடியட் பாக்ஸ் - 33 : ஏஞ்சலின் வீட்டில் மார்க்ஸ்... உப்புமா எப்படி?! | Idiot Box Part 33: Marx visits Angel's house... Later confronts Divya

அம்மா… யம்மோ… எங்கே மா… இருக்கே! அம்மா நான் பாஸ் ஆகிட்டேன். துள்ளிக் குதித்தோடி வந்தவன் சற்றே சந்தமடைந்து நின்றான்.

அவனது கண்களில் நீர் தேங்கி, கன்னத்தில் வழிந்தோடியது. ஆம்! அவன் கண்ட காட்சி அப்படி.

அம்மா தனியார் மில் கம்பெனியில் வேலை பார்க்கிறாள். அப்பாவும் தனியார் மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். தினமும் இவனைப் பள்ளிக்கு  இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று விட்டுவிட்டு அதன் பிறகு தான் வேலைக்குப் போவது அவரது வழக்கம். அம்மா தினமும் ஷேர் ஆட்டோவில் மில்லுக்கு வேலைக்குச் செல்வாள். இப்படிப்பட்ட நடுத்தர குடும்பத்தில் பிறந்த கார்த்திக் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதைச் சொல்வதற்காக வேகமாக ஓடி வந்தவன்; அப்பாவுக்கு வேலை செய்யும் போது கையில் அடிபட்டதில் ஒரு விரல் துண்டாக்கிப் போனதை பார்த்தவுடன் அமைதியாக வந்து அருகில் உக்கார்ந்தான். அவனைப் பார்த்தவுடனே மல்லிகா அழுது புலம்பினாள். இங்கே வாடா கார்த்தி, என்று அப்பா அழைத்ததும் அருகில் சென்றான்.

என்னடா தம்பி பண்றது. கடவுள் இப்படி செஞ்சுட்டாரு என வருந்திக் கொண்டார்.

அந்த சம்பவத்திற்குப் பின்னர்; அவர் வேலைக்குச் செல்லவில்லை. சுமையான எந்த பொருளையும் கையில் தூக்கக் கூடாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அதனால் வீட்டிலேயே முடங்கும் நிலை உருவானது.

கம்பெனி முதலாளி விபத்து நடந்த அன்று மட்டும் மருத்துவமனைச் செலவுகளைப் பார்த்துக்கொண்டார். பின்னர் கையில் கட்டுப் போட்டு வீட்டிற்கு வந்த பிறகு மல்லிகாவின் உழைப்பில் கிடைத்த பணத்தை வைத்து அரசு மருத்துவ மனையில் வைத்தியம் பார்த்து வந்தனர்.

இதற்கிடையில் கார்த்தியின் மருத்துவ படிப்புக் கனவும் தகர்ந்தது. மகன் இன்ஜினியர் ஆகவேண்டும் என்ற அப்பாவின் கனவும் காற்றோடு கலந்தது.

மல்லிகா ஆங்காங்கே கடனை ஒடனே வாங்கி ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கார்த்திக்கை சேர்த்துவிட்டாள். அதற்கே அவள் எத்தனை நாள் இரவு பகல் வேலைக்குப் போகனுமோ!.

அவன் ஆசை பட்டதுதான் கிடைக்கல கிடச்சதையாவது நல்லா படிக்கணும் என்று சுந்தரத்திடம் சொல்லி நொந்து கொண்டாள் மல்லிகா.

முதல் நாள் கல்லூரிக்கு கிளம்பிப் போனான். அங்கு பிற மாணவர்களிடம் பழக்கம் ஏற்பட்டது. இவன் படித்த பி.காம்., வகுப்பில் பெரிய பெரிய தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களும் படித்துக் கொண்டிருந்தனர். இவனோ அரசுப் பள்ளியில் படித்தவன். மற்ற மாணவர்களுக்கு ஈடாக படிக்க முடியவில்லை என்றாலும் சிறிது கவனம் செலுத்த முடிந்தது.

கார்த்திகுடன் படிக்கும் மாணவர்கள் பலர் விலை உயர்ந்த செல்போன்களை வைத்திருந்தனர். இவனிடம் செல்போனே இல்லை.

உடன் படிக்கும்  நண்பன் ஒருவன். டே…! கார்த்திக் உங்க அம்மாட்ட செல்போன் வாங்கித்தா; அப்பதான் காலேஜ்க்கு போவேன்னு சொல்லுடா, அப்பதான் உனக்கு மொபைல் கிடைக்கும் நானெல்லாம் அப்டிதான் பொய் சொல்லி வாங்கினேன் என்று சொன்னான்.

அவனோ வீட்டின் பொருளாதார நிலையை சற்று நினைவு கூர்ந்தான். பின்னர் கல்லூரியில் மாணவர்கள் பாடத்திற்கான அனைத்துக் குறிப்புகளையும் வாட்ஸாப், இ-மெயில் மூலம் பரிமாறிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். இவனிடம் செல்போன் இல்லாததால் சற்றே வருத்தமடைந்தான்.

பாடத்தின் அனைத்துக் குறிப்புகளையும் நூலகத்திலுள்ள புத்தகத்தில் இருந்தோ அல்லது அதனை நகலெடுத்தோ படிக்கும் பழக்கம் இன்றைய மாணவர்களுக்கு இல்லாமல் போனது நவீன அறிவியல் யுகத்தின் உச்சம்.

ஒருநாள் அம்மாவிடம் அதிகாரமாகவே கேட்டான். அம்மாவும் படிப்புக்குத் தானே என்று லோன் போட்டு (இ.எம்.ஐ யில்) மாதத் தவனையில் செல்போன் வாங்கிக் கொடுத்தாள்.

கார்த்திக் இப்பெல்லாம் முன்ன மாதிரி இல்லை. நண்பர்களோடு புகை பிடிப்பது, விடுமுறை நாட்களில் மது அருந்துவது என தன்னிலை மறந்து நடைபோடத் தொடங்கிவிட்டான். அவன் சேர்த்துக்கொண்ட நண்பர்கள் அதுமாதிரி.

முதலாமாண்டு நிறைவு பெற்றது. நான்கு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. அப்படியே இரண்டாம் ஆண்டு தொடர்ந்ததால்; மகன் பெயில் ஆகியிருப்பது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாது. அவன்தான் இரண்டாம் ஆண்டு படிக்கத் தொடங்கிவிட்டானே என்ற மகிழ்ச்சி மட்டும் அவர்கள் முகத்தில் தெரிந்தது.

ஒரு நாள் போதை அதிகமானதால் ஒயின் ஷாப் அருகிலேயே விழுந்து கிடந்தான். அவனது நண்பர்கள் அப்படியே போட்டுவிடுக் கிளம்பிவிட்டனர். கல்லூரி முடிந்து வெகுநேரமாகியும் இவனைக் காணவில்லையே என்று சுந்தரம் தன் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார்.

Both Abstinence and High Alcohol Use Linked to Dementia - Psychiatry Advisor

மல்லிகாவோ!… அவன் எங்கே போப்போறான் எங்காவது நூலகத்தில் புத்தகத்தை எடுத்துப் படிக்கலாம்னு போயிருப்பான். இப்பத்தான் ஒவ்வொரு பஞ்சாயத்துலயும் ஒரு நூலகம் இருக்கே; என்று தன் மகன் மீது கொண்ட பாசத்தாலும் நம்பிக்கையாலும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பாவம்! மல்லிகாவுக்கு எப்படித் தெரியும்?

அந்த நூலகம் படிப்பதற்கு யாரும் வராமல் எப்போதாவதுதான் திறப்பார்கள் என்று. அவளோ! வீடு, மகன், மில்லு இதைத் தவிர வேறெதுவும் தெரியாது.

அவனுக்குப் போதை தெளிவதற்கு வெகு நேரமானது. இரவு ஏழு மணி இருக்கும். சட்டை முழுவதும் சேரும் சகதியுமாக வீடு வந்து சேர்ந்தான். கார்த்திக்கைப் பார்த்த மல்லிகா ஒரு நிமிடம் பயந்து போனாள்.

என்னடா ஆச்சு. இப்புடி வந்து நிக்குற?

ஒண்ணும் இல்லம்மா. நான் குளிக்கணும்.

சொல்லுடா?  லாரி, பஸ் ஏதாச்சும் சேத்தை வாரி இறைச்சிருச்சா?.

இல்லம்மா… போ! போ.. சோத்தைப் போட்டு வையி, நான் குளிச்சிட்டு வர்றேன்.

சரிடா என்னமோ சொல்லுற… என்று முணகியவாறு சமையல் அறைக்குள் சென்றாள்.

சுந்தரம் மட்டும் அவன் முகத்தைக் கவனித்தார். ஆனால் ஒன்னும் பேசல. அவனும் அவரைப் பார்த்ததும் வாயைத் துடைத்தபடி சட்டையை இழுத்துவிட்டுக் கொண்டு குளிக்கச் சென்றான்.

மறுநாள் காலையில் சற்று நேராமாகவேத் தூங்கிவிட்டான். மல்லிகா வந்து எழுப்பினாள். ஏண்டா! காலேஜ்க்குப் போகலையா? இவ்வளவு நேரமாகியும் தூங்கிட்டே இருக்கியே… என்று சத்தமாகவே பேசினாள்.

அவன் எதையுமே காதில் வாங்காதவனாய் பாம்பைப் போல நெளிந்தபடி கிடந்தான்.

யாண்டா … ஒடம்புக்கு ஏதாச்சும் சரியில்லையாட? என்றவாறே அவனது நெற்றியில் கையை வைத்துத் தொட்டுப் பார்த்தாள். காய்ச்சல் அதிகமாகவே இருந்தது கண்டு பதறிப்போனாள். உடனே! என்னங்க… இங்கே வாங்க. இவனுக்கு ஒடம்பெல்லாம் காயுது. டாக்டருகிட்டே கூட்டிக்குப் போகலாம் வங்க; என்றபடியே வெளியில் வந்தாள்.

வீட்டு வாசலின் கட்டிலில் உக்காந்திருந்த சுந்தரம்; அதெல்லாம் ஒண்ணுமில்லை. சரியாகிவிடும் என்பதைப் போன்ற பாவனையில் பாத்துக்கலாம் என்றார்.

அவனை எழுந்திருச்சி மூஞ்சைக் கழுவி சாப்புட சொல்லு எல்லாம் சரியகிரும் என்று எதார்த்தமாகக் கூறினார்.

சுந்தரத்திற்குப் புரிந்துவிட்டது. அவன் மது குடிச்சிருந்தது. அவனிடம் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.  

அன்று ஒருநாள் மட்டும் கல்லூரிக்குப் போகவில்லை. அடுத்த நாள் கல்லூரிக்குப் போனான். அவனது நண்பர்கள் என்னடா? கார்த்தி நேத்து காலேஜ்க்கு வரல. முந்தானேத்து அடிச்ச சரக்கு எரங்களையா? என்றவாறு அருகில் இருந்த மற்றொரு நண்பனிடம் சொல்லிச் சிரித்தான். அங்கிருந்த மற்ற மாணவர்களும் கேலி செய்து சிரித்தார்கள். அன்று மதியமே வீட்டுக்கு வந்துவிட்டான்.

சுந்தரம் வீட்டிலுள்ள திண்ணையில் உக்கார்ந்திருந்தார். மல்லிகா மில்வேலைக்குப் போயிருந்தாள். அவளுக்கு மாலை ஐந்து மணிக்குத்தான் வேலை முடியும். கார்த்திக் வருவதைப் பார்த்த சுந்தரம்; கண்டு கொள்ளாதபடி இருந்தார். அருகில் வந்த கார்த்திக் அப்பா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, அதான் காலேஜ்ல இருந்து வந்துட்டேன் என்றான்.

ஏண்டா! உன் நண்பர்கள்தானே உன்னோட உலகம். அவங்க கிட்டே இருந்தாதானே உனக்கு சந்தோசம். அதவிட்டுட்டு இங்கே வந்திருக்க.

இல்லப்பா… அவங்களப் பத்தி இப்பதான் தெருஞ்சிக்கிட்டேன்.

என்னடா பண்ணுனானுக? அவங்களோடு சவகாசம் வச்சித்தானே இப்புடி வளந்து நிக்குற என்று பல்லைக் கடித்துக்கொண்டார்.

அப்பாவின் பேச்சில் இருந்த சூசகம் அவனுக்குப் புரிந்தது. தப்பு செய்தவன் தன்னுடைய நிலையை உணர்ந்து கொண்டான் என்றால் அப்போதுதான் எவை உண்மை என்பது புரியவரும். அதனால்தானே ‘திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்று சொல்லி வைத்தனர்.

சுந்தரத்தின் முன்னே நின்று கொண்டு அழுதான் தேம்பினான். அப்பா… இனிமேல் நான் எந்தத் தப்பும் பண்ணமாட்டேன் அப்பா… என்று புலம்பினான்.

டேய்…! ஏண்டா அழுவுற இனிமேயவது ஊர் ஒலகத்த புரிஞ்சி நடந்துக்கோ. கண்டவனை எல்லாம் நம்பி ஏமாந்து போகாதே. ஒனக்குன்னு ஒரு இடத்த இலக்கா நிர்ணயிச்சிக்கோ அதை மட்டும் நம்பி உன் பயணத்தத் தொடங்கு ஒருநாள் நிச்சயம் ஒண்ணப் பாத்து சிரிச்ச பயலுக நிமிந்து பொறாமையோடப் பாப்பானுங்க என்று நம்பிக்கையான வார்த்தைகளைச் சொல்லிப்; போ… போயிட்டு சாப்புட்டுத் தூங்கு எல்லாம் சரியாகிவிடும் என்றார்.

அவனுக்கு இப்போதுதான் புரிந்தது. பள்ளிப் பருவத்தில் படித்த திருக்குறள் ஒன்று நினைவில் வந்தது. ‘உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு’.

பொருளைத்தேடி அலைகின்ற இந்த உலகத்தில் உண்மையான நட்பினை காண்பது அவ்வளவு எளிதான காரியமில்லை;

தாய், தந்தை இவர்கள்தான் உலகம். அவர்களின் கண்களில் கண்ணீர் வந்தால்; தாம் நிம்மதியாக வாழமுடியாது என்பதை உணர்ந்தான். தொடர்ந்து கல்லூரிக்குப் போனான். மூன்றாண்டு படிப்பு நிறைவு பெற்றது. அனைத்துப் பாடங்களிலும் நல்ல தேர்ச்சி அடைந்தான்.  பணியை நோக்கிய பயணத்திலும் பெற்றோரைப் பேணிக் காப்பதிலும் நாட்கள் நகர்கின்றன.

நட்பாராய்தல் நாளைய தலைமுறைக்கு தலையாய கடமை.

குண்டலகேசியின் கதை -10 – தில்லை வேந்தன்

குண்டலகேசி (புதிய காப்பியச் சுருக்கம்)- Dinamani

 

முன்கதைச் சுருக்கம்

 

பூம்புகார் வணிகன் மகள் பத்திரை, கொடிய கள்வன் காளனைக் காதலித்து மணந்து கொண்டாள்.

ஒருநாள் ஊடலின் போது.  அவனைத் ,’திருடன்’என்று சொன்னதால் கடும் சினம் கொண்ட காளன் அவளைப் பழிவாங்க நினைத்தான்.

அங்கொரு மலை உச்சியில்  குலதெய்வக் கோயில் இருப்பதாகக் கூறி அவளை அழைத்துச் செல்கிறான்……

 

    இருவரும் மலையேறுதல்

 

புலியைத் தொடரும் மானாக, — தூண்டில்

     பொன்னை விழுங்கும் மீனாக,

வலையை விரிக்க வருவேடன் — இரையில்

     மயங்கிச் சிக்கும் புறவாக, 

கொலையில் கொடிய வெறியான்பின்– தாவிக்

     குதிக்கும் ஆட்டு மறியாக,

மலையில் ஏறும் காளன்பின், — அந்தோ

     மங்கை சென்றாள் பேதைமையால்!

 

   தன் உள்ளக் கருத்துத் தோன்றுமாறு காளன் பாடுதல்

 

அலையலையென விளைபிறவிகள் அவைதுயர்கொடு வரவும்

வலைபுகுந்திடும் கயல்நிரையென மடிந்திறுதியைத் தரவும்

நிலையிழந்திடும் வகைகலந்திடும் நினைவழிந்திடும் உலகில்

கலையுணர்ந்தவர் சுகம்பெறுவதில் கழியுவகையை  விழைவர்

 

அறமெனவொரு வழிநெறியினை அறிவுரையென அளிப்பர்

சிறுமயலெனச் சுகக்கடலதைச் சிடுசிடுமுகம் சுளிப்பர்

திறமறிந்தவர் உளம்மகிழ்ந்திடத் திளைத்திடுவரச் சுகத்தில்

மறமிகுந்தவர் மதுமையல்களில் மனங்களித்திட நினைப்பர்

 

இதுநாள்வரை முறையேயென  எமையேய்த்திடச் சிலபேர்

இதுதீதென, அதுதீதென இழிவாய்மொழி புகன்றார்

விதிதானொரு கொடுவாளென வெறும்வாதமும் புரிந்தார்

மதுவூறிடும் சுகம்தேடிடும் வழிபோவதெம் தொழிலே

 

நரைகூடிடும் திரைமூடிடும் நமன்கூவிடும் புவிமேல்

உரைநீதிகள் உதவாதவை ஒருபோதிலும் மதியேன்

விரைவாயினிச் சுகம்மேவிட விளையாடுதல் முனைவேன்

தரைவாழ்வினில் மகிழ்வேனெனைத் தடுப்போரிவண் உளரோ?

 

  பத்திரையின் வேண்டுகோள்

 

 கருத்தில் ஊறிக் கலந்திருந்த — பழைய

      கள்ள நச்சுக் கொள்கைகளை

வருத்தம் சிறிதும் இல்லாமல் — இசையில்

     வடித்தான் காளன். பத்திரையாள்,

பெருத்த வணிகக் குலப்பெண்ணை — மணந்து

     பெருமை பெற்ற தகவுடையாய்!

பொருத்தம் இல்லாப் புன்மொழிகள் — விடுத்துப்

      புகழ்வாய் இறையின் பெயரென்றாள்.

 

.       காளன் மறுமொழி

 

சரியென் கண்ணே விளையாட்டைத்

     தவறாய் எண்ணிக் கலங்காதே

விரிவெண் முகிலின் விண்ணுலக

      மேன்மை முத்தி நிலையளிக்கும்

அரிய அருள்செய் குலதெய்வம்

       ஆங்குக் கொண்ட கோயில்காண்!

விரைவில் சென்று படையலிட்டு

         வேண்டும்  வரத்தைப்  பெறுவோம்வா!

     

       குலதெய்வம் காண அழைத்தல்

 

கொடுக்கின்ற கையினையும் கொடுக்கால் கொட்டும்

   கொடுந்தேளின் மிகக்கொடியோன் கூறும் யாவும்

விடுக்கின்ற வெங்கணைகள் ஆகித் துன்பம்

     விளைக்கின்ற தன்மையினை  அறியா மங்கை

நடுக்கின்றி நம்பியவன் கையைக் கோத்து

     நாமுடனே குலதெய்வம் காண்போம் என்றாள்

வெடுக்கென்று முன்சொன்ன சொல்லால் நெஞ்சில்

        வெறுப்பென்ற கனல்வளர்த்தோன் புன்ன கைத்தான்!

 

 

(தொடரும்)

நாட்டிய மங்கையின் வழிபாடு-9 – கவியரசர் தாகூர்-    தமிழில் மீனாக்ஷி பாலகணேஷ்  

                   

          முன்கதைச்சுருக்கம்: புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்ட மகத நாட்டரசன் பிம்பிசாரன் தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரானுக்காக ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான். இளவரசன் அஜாதசத்ரு கேட்டுக்கொண்டபடி அவனுக்கு அரசைக் கொடுத்துவிட்டு பிம்பிசாரன் நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான். அரசி லோகேஸ்வரி  இதனை விரும்பவில்லை. அவளுடைய மகன் சித்ராவும் பிட்சுவாகிவிட்டதில் மிகவும் நொந்து போயிருக்கிறாள்.

          அரசிக்கு புத்தமதத்தில் நம்பிக்கை தளருகின்றது; அதனைப் பலவாறு நிந்திக்கிறாள். நகரில் புத்தருக்கெதிராகக் கலகம் மூள்கிறது. வழிபாட்டுமேடை உடைத்தெறியப் படுகிறது. பிட்சுணி உத்பலா கொலை செய்யப்படுகிறாள். புத்தரின் எதிரியான தேவதத்தன் அரசன் அஜாதசத்ருவைத் தன்வயப்படுத்த முயல்கிறான். அரண்மனை நாட்டியமங்கையான ஸ்ரீமதியை புத்தரின் வழிபாட்டு மேடையில் நடனமாடச் செய்ய இளவரசிகள் முனைகின்றனர்.

          இனித் தொடர்ந்து படிக்கவும்:  

                                         ————————————

                                                   அங்கம் – 3

                                         காட்சியிடம்- மாற்றமில்லை.

                               ஸ்ரீமதியும் மாலதியும் நுழைகின்றனர்.

 

          மாலதி: சகோதரி, எனக்கு அமைதியில்லை.

          ஸ்ரீமதி: உனது மனதை எது பாரமாக்கிக் கொண்டுள்ளது?

          மாலதி: அவர்கள் உங்களை நாட்டியத்திற்கு அலங்கரித்துக் கொண்டிருந்தபோது, நான் யாருக்கும் தெரியாமல் சுவர்மீதேறி, பின்புறமிருந்த சாலையை எட்டிப்பார்த்தேன். பிட்சுணி உத்பலாவின் உடலை அவர்கள் அடக்கம் செய்ய எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்கள்; அதன் பின்னால்……

          ஸ்ரீமதி: உம்.. சொல்….

          மாலதி: சகோதரி, நீ என்னிடம் கோபம்கொள்ள மாட்டாயல்லவா? என் உடல் தளர்கிறது……

          ஸ்ரீமதி: எல்லாவற்றையும் சொல்!

          மாலதி: நான் அவரை அந்த உடலருகில் கண்டேன். ஈமச்சடங்குக்கான மந்திரங்களை அவர் உச்சரித்துக் கொண்டிருந்தார்.

          ஸ்ரீமதி: நீ யாரைப்பற்றி என்ன சொல்கிறாய்?

          மாலதி: நான் இருந்த இடத்திலிருந்து பார்த்தபோது அது அவரைப்போலவே- என் காதலரைப் போலவே இருந்தது.

          ஸ்ரீமதி: அது உண்மையிலேயே அவராக இருந்தாலும் இருக்கக்கூடும்.

          மாலதி: நான் எனது விடுதலையைப் பெறும்வரை அவரைக் கண்ணால்கூடத் தொலைவிலிருந்தும் பார்க்கமாட்டேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளேன்.

          ஸ்ரீமதி: உனது உறுதிமொழியைக் காப்பாற்று. ஏக்கத்துடன் கடலை உற்றுநோக்கினால் எதிர்க்கரையை அடைந்து விடலாம் என எண்ணாதே! நிறைவேறவே முடியாத கனவுகளால் உன் சிந்தையைக் குழப்பிக்கொள்ளாதே!

          மாலதி: என்னக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் நான் அவரைக் காண ஆசைப்படவில்லை. அவர்கள் அவரையும் கொன்றுவிடுவார்களோ என்று பயப்படுகிறேன்; அதனால் அவரருகே இருக்க ஆசைப்படுகிறேன். எனது உறுதியிலிருந்து நான் தவறினால் என்மீது சினம் கொள்ளாதே!

          ஸ்ரீமதி: உனது இதயத்தின் தாபக்குரலை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

          மாலதி: என்னால் அவரைக் காப்பாற்ற முடியாது என்று எனக்குத் தெரியும்; ஆனால் இறக்கும்போதிலாவது அவருடன் சேர்ந்து நானும் இறப்பேன் அல்லவா? ஓ சகோதரி! என்னால் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. எனக்கு இந்த ஜன்மத்தில் விடுதலைக்கான உதவி ஒன்றுமே இல்லை!

          ஸ்ரீமதி: நீ இறுதியில் யாரிடம் சென்று சேர்வாயோ அவரே உனக்கு விடுதலையை அளிப்பார்; ஏனெனில் அவர் சுதந்திரமானவர். எனது இதயத்தின் வலியை உனது சொற்கள் எனக்கு நினைவுபடுத்துகின்றன.

          மாலதி: என்ன வலி அது, சகோதரி?

          ஸ்ரீமதி: ஒரு பழைய காயத்தின் வலி, இன்னமும் மாறாமல் என் இதயத்தில் உள்ளது. எனது வெளிப்புற உறவுகளை நான் எவ்வளவு அறுத்துக்கொள்ள முயற்சித்தாலும், அவை இன்னும் ஆழமாகச் சென்று வேரூன்றி மறைந்துகொள்கின்றன.

          மாலதி: இந்த அரண்மனையிலேயே உன்னைவிடத் தனிமையானவர் வேறு யார் இருக்கிறார்கள்? ஆனால் நான் செல்லவேண்டும் சகோதரி. எனக்காகச் சில சமயங்களில் மன்னிப்புக்கான பாடல்களை நீ கூறுவாயா?

          ஸ்ரீமதி: (இசைக்கிறாள்)

                     ஓ புத்தரே! பாவங்களிலிருந்து விடுதலை பெற்ற நீர்

                     எங்களது அத்துமீறல்களை மன்னிப்பீராக!

          மாலதி: (திரும்பத் திரும்ப நமஸ்கரித்த வண்ணம்)

                     ஓ புத்தரே! எனது அத்துமீறல்களை மன்னிப்பீராக!

                     சகோதரி! கேட்டாயா? திரும்பவும் அந்தக் கூச்சல்கள்! அவர்கள் ஒவ்வொருவருமே கொடியவர்கள், இரக்கமற்றவர்கள். புத்தபிரான் தமது ஈடற்ற கருணையால் இப்பூமிக்கு வந்துள்ளார்; இருப்பினும் நரகத்தின் நெருப்பு அணைக்கப்படவில்லையே. நான் இனியும் தாமதிக்கலாகாது. சகோதரி, விடைபெறுகிறேன். நீ உனது விடுதலையை அடைந்தபின்பு எனக்கு அழைப்பு அனுப்பு, எனக்குக் கடைசியாக ஒரு வாய்ப்பினைக் கொடு.

          ஸ்ரீமதி: வா, நான் உன்னுடன் வாயில்வரை வருகிறேன்.

                     அவர்கள் வெளியே செல்கிறார்கள். ரத்னாவளியும் மல்லிகாவும் நுழைகிறார்கள்.

          ரத்னாவளி: தேவதத்தனின் சீடர்கள் பிட்சுணியைக் கொலைசெய்து விட்டனரா? இதைச் செய்ய என்னதான் காரணம்? அவள் ஒரு விவசாயியின் மகள்தானே?

          மல்லிகா: ஆனால் இன்று அவள் இந்தப் புண்ணிய மதத்தைச் சேர்ந்தவளல்லவா?

          ரத்னாவளி: புனிதமான நூல்கள் அவளுடைய ரத்தநாளங்களில் ஓடும் ரத்தத்தை மாற்ற முடியுமா?

          மல்லிகா: மதக் கோட்பாடுகளின் மாற்றங்கள் ரத்தத்தின் மாற்றத்தைவிடப் பெரிதென்று இன்று நாம் காணவில்லையா?

          ரத்னாவளி: போதும் இந்தப் பைத்தியக்காரத்தனம்! தனது குடிமக்களின் ஆத்திரத்தால் அரசன் பெரிய கஷ்டத்தில் இருக்கிறான்- என்ன நிலை! இந்தப் பிச்சைக்காரனுடைய மதம் பேரரசின் பெருமையை மொத்தமாக உறிஞ்சிவிட்டதே!

          மல்லிகா: குடிமக்களின் சினத்திற்கு வேறொரு காரணமுமுண்டு. மகாராஜா பிம்பிசாரர் தனது ஆசிரமத்திலிருந்து கிளம்பி இந்த வழிபாட்டு மேடைக்கு வந்து வழிபாடு செய்யப் புறப்பட்டுள்ளார். ஆனால் அவர் இன்னும் அரண்மனையை வந்து சேரவில்லை. அவர்கள், மக்கள் ஏதோ சந்தேகப்படுகிறார்கள்.

          ரத்னாவளி: நானும் அவர்களின் ரகசியமான சொற்களைக் கேட்டேன். அது கெடுதலையே தெரிவிக்கிறது என்று வருத்தத்துடன் கூறுகிறேன். ஆனால் இது, கடந்தகாலத்து முறையற்ற செயல்களின் பலன்தான்.

          மல்லிகா: என்ன முறையற்ற செய்கை?

          ரத்னாவளி: மகாராஜா பிம்பிசாரர் தனது தந்தை காலத்திலிருந்த வேத மதத்தைக் கொலைசெய்தார்- உண்மையில் அது தனது பெற்றோரையே கொலைசெய்வதற்குச் சமமல்லவா? அல்லது அதற்கு மேலும் கூட? அப்போது அணைக்கப்பட்ட யாகத்தீ பழிவாங்குமென்றும், அவனையே (அரசனையே) எரித்துவிடும் என்றும் பிராமணர்களால் வரப்போவது பற்றி கூறப்பட்டது.

          மல்லிகா: உஷ்! மெல்லப்பேசு! இந்த சாபம் நிறைவேறப் போகிறதோ என்று எத்தகைய மனவருத்தம் அவருக்கு, அரசருக்கு உண்டாகி இருக்கிறதென்று நீ அறிவாயா?

          ரத்னாவளி: யாருடைய சாபத்தைக் கண்டு அவர் அஞ்சுகிறார்?

          மல்லிகா: புத்தருடைய சாபம்தான். தனது மனத்தில், மகாராஜா, புத்தரைக்கண்டு மிகவும் பயப்படுகிறார்.

          ரத்னாவளி: ஆனால் புத்தர் யாரையும் சபிப்பதில்லை. தேவதத்தர் ஒருவருக்கே சாபம் கொடுக்கத் தெரியும்.

          மல்லிகா: அதனால்தான் தேவதத்தருக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தங்கள் விலையுயர்ந்த காணிக்கைகளைப் பழிவாங்கும் தெய்வங்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துள்ள மனிதர்கள் கருணையுள்ள கடவுள்களை ஏமாற்றுகிறார்கள்.

          ரத்னாவளி: பற்களும், நகங்களும் போன கிழட்டுச் சிங்கம்போல, தாக்கத் தெரியாத கடவுள்கள் பட்டினிதான் கிடக்க வேண்டும்.

          மல்லிகா: எது எப்படியாக இருந்தாலும், இன்று மாலை, புத்தருக்கான வழிபாடு கட்டாயமாக அந்த அசோகமரத்தடியே நடைபெறப் போகிறது என நான் கூறுகிறேன்.

          ரத்னாவளி: அவ்வாறு நடைபெறுவதாயின், நடக்கட்டும். இன்னுமொன்று சொல்வேன்- அதற்குமுன்பு இந்தப்பெண் தனது நாட்டியத்தை அந்த வழிபாட்டுத்தலத்தில் ஆடி முடித்திருப்பாள்.

                     மல்லிகா வெளியேற, வாசவி உள்ளே நுழைகிறாள்.

          வாசவி: நான் ஆயுதங்களுடன் வந்துள்ளேன்.

          ரத்னாவளி: எதற்காக?

          வாசவி: பழிவாங்க! அந்தப்பெண் என்னைப் பல சமயங்களில் அவமதித்திருக்கிறாள்.

          ரத்னாவளி: அவளுடைய நீதிபோதனைகளாலா?

          வாசவி: இல்லை. எனது மரியாதையைப் பலவந்தமாகப் பிடுங்கியெடுத்து….

          ரத்னாவளி: அதனால்தான் நீ இந்த வாளை வைத்திருக்கிறாயா?

          வாசவி: அதற்கு மட்டுமல்ல. ஒரு புரட்சிக்கும் வாய்ப்புள்ளது; அது நிகழுமானால் நான் பதிலடி கொடுக்காமல் சாகமாட்டேன்.

          ரத்னாவளி: அப்படியானால் உனது பழிவாங்குதல் எப்படி நிகழும்?

          வாசவி: இந்த கழுத்து ஆபரணம் அதனை நிறைவேற்றும் (காட்டுகிறாள்).

          ரத்னாவளி: இந்த வைரமாலையா?

          வாசவி: இந்த அரசகுடும்பத்துக்கேற்ற விலையுயர்ந்த அவமதிப்பு. இந்தப் பரிசை நான் அவள்மீது வீசியெறிவேன்.

          ரத்னாவளி: ஆனால் அவள் அதனை மறுத்துத் திரும்ப உன்னிடமே வீசினால்?

          வாசவி: அப்போது என்னிடம் இது இருக்கிறதே (வாளைக் காட்டுகிறாள்).

          ரத்னாவளி: நாம் மகாராணி லோகேஸ்வரியை அழைத்து வரலாம்- இந்தக் காட்சி அவளை மகிழ்வடையச் செய்யும்.

          வாசவி: நான் அவளைத் தேடினேன்; ஆனால் அவள் தனது அறைக்குள் தாளிட்டுக்கொண்டு இருக்கிறாள் என்றார்கள். அது இப்புரட்சி பற்றிய பயத்தாலா அல்லது தனது கணவன்மீது கொண்ட சினத்தாலா என்று யாரால் கூற இயலும்?

          ரத்னாவளி: ஆனால் இன்று அந்த நாட்டியக்காரி அவமானப்படுத்தப்படும்போது மகாராணி கட்டாயமாக இங்கிருக்க வேண்டும்.

          வாசவி: ஒரு நாட்டியப்பெண்ணின் அவமதிப்பு!  ஒரு நாடகத்திற்கான நல்லதொரு பெயர்.

          மல்லிகா: நான் நினைத்தபடியே அது நடந்திருக்கிறது. மகாராஜா அஜாதசத்ரு, தனது நாட்டிலுள்ள புத்தரின் எல்லாச் சீடர்களையும் வரவழைக்கக் கூறியுள்ளார்.

          ரத்னாவளி: மிகவும் நல்லது! அவர்களின் கதையை முடிப்பதற்காக பிறகு அவர்களை அவர் தேவதத்தரின் சீடர்களிடம் ஒப்படைக்கலாம்.

          மல்லிகா: அதுவல்ல அவருடைய எண்ணம்.  புனிதப்படுத்தும் பாடல்களை அவர்கள் அரசருக்காக இசைக்க வேண்டும். அவர் தனது உயிருக்கு ஆபத்து விளைந்துவிடும் பயத்தில் இருக்கிறார்.    

          வாசவி: ஏன்? என்னவாயிற்று?

          மல்லிகா: நீ கேள்விப்படவில்லையா? தலைநகருக்கு வரும்வழியில் மகாராஜா பிம்பிசாரர் படுகொலை செய்யப்பட்டார் என ஜனங்கள் பேசிக்கொள்கிறார்கள்.

          வாசவி: ஓ! என்ன கொடூரம்! நிச்சயமாக இது உண்மையாக இருக்குமா?

          மல்லிகா: நிச்சயமாக, ஒரு ரகசியமான வலி, அல்லது மன வியாகூலம் அரசரின் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கிறது.

                                                                                  (தொடரும்)

                    

 

“யாழின் துயரம்” – டி வி ராதாகிருஷ்ணன்

கோவலன் | Tamil and Vedas

ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர்…ஒரு அதிகாலைப் பொழுது..

புகார் நகரில்…

மாசாத்துவான் எனும் வணிகரின் மகன் கோவலனுக்கும் ,மாநாயகன் மகள் கண்ணகிக்கும் இரு வீட்டு பெற்றோர்களாலும் நிச்சயக்கப்பட்டு அனைத்து ஊர்  பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் கோலாகலமாக அன்று நடந்தேறியது. அப்போது கோவலனின் வயது பதினாறு. கண்ணகியின் வயதோ பன்னிரெண்டு.பெற்றோருடன் சேர்ந்து சில ஆண்டுகள் வாழ்ந்த அவர்களைப் பின் தனிக்குடித்தனம் வைக்கப்பட்டனர்.

அவர்கள் மகிழ்ச்சியுடன் இல்லறமே நல்லறமாக தங்கள் வாழ்க்கையைத்  தொடங்கினர்.

இப்படி சில ஆண்டுகள் கழிந்து ஒரு நாள்..

கணிகையர் குலத்தில் பிறந்த மாதவி என்ற பெண் மயிலாளின் நடனம், சோழ மன்னன் முன்னிலையில் அரங்கேற்றம் ஆனது. நடனத்தைக் கண்டு ரசித்த மன்னன், மன்னர்குல வழக்கப்படி   மரகதமாலை ஒன்றினையும், அவளுக்கு “தலைக்கோலி” என்ற பட்டத்தையும் வழங்கிக் கௌரவித்தான்.

ஒருநாள் மன்னர் கொடுத்த மாலையை, மாதவியின் வேலைக்காரி கூனி என்பவள் விற்பனை செய்வதற்காக பெரிய தெருவினுக்குச் சென்றாள்.

அம்மாலையைப் பார்த்த கோவலன்,அதை ஆயிரம் பொன்களைத் தந்து வாங்கியதுடன்,அவளுடனேயே மாதவியின் இல்லத்திற்கும் சென்றான். மாதவியைக் கண்டவன் அவளது பேரழகில் மயங்கி , தன் மனையாள் கண்ணகியை மறந்து , அவள் இல்லத்திலேயே தங்கினான்.

கோவலனின் அருகாமை மாதவிக்கு மகிழ்வையும்..அவனின் விலகல் கண்ணகிக்குத் துயரையும் தந்தது.

இந்நிலையில்…புகாரில் இந்திரவிழா துவங்கியது..

விழா அன்று காலை

புகார்நகர்..

மிகவும் அழகுடன் திகழ்ந்தது.காலை கதிரவனின் ஒளிக் கிரணங்களால் அதன் மாடங்களும்,கோபுரங்களும்,கோயில் தலங்களும் மற்றும் உள்ள மன்றங்களும் அழகுப் பெற்று பிரகாசமாகத் திகழ்ந்தன.

..
மாடி வீடுகளும், மாளிகைகளும்,பொய்கைக் கரையில் யவனர்கள் இல்லங்களும், நீர் நிலையில் கட்டியிருந்த வீடுகளும்..அந்நகரை வளப்படுத்தி அழகுடன் வைத்திருந்தன.

நறுமணப் பொருள்கள் விற்போர் ஒரு தெரு,நூல் நெய்வோர் ஒரு தெரு,பட்டும் பொன்னும் அணிகலன்களும் விற்போர் ஒரு தெரு,அப்பம் விற்போர்கள் விற்போர், மீன் விலை பேசுவோர், இறைச்சி,எண்ணெய்,பொன் வெள்ளி செம்புப் பாத்திரங்கள் விற்போர், பொம்மை விற்போர், தச்சர்,கம்மாளர்,இசை
வல்லுநர்கள், சிறு தொழில் செய்வோர் ஆகியோர் நிறைந்த பகுதி
மருவூர்ப்பாக்கம் எனப்பட்டது. 

அடுத்து, பட்டினப்பாக்கம்.

அரச வீதி,தேர் வீதி,கடைத்தெரு,மருத்துவர்,ஜோதிடர், மணி கோத்து
விற்பவர்கள் என தனித்தனியே வசித்துவரும் உயர்நிலை மக்கள் வாழும் பகுதியாகும்.

அரசன்,அரண்மனை சுற்றி படைவீரர் குடி இருக்குகள், யானை..குதிரை..தேர்..காலாள் படை வீரர்கள் எனப் பலர் குடி
இருப்புப் பகுதி. கடற்கரையை ஒட்டியப் பகுதி என்பதால் பட்டினப்பாக்கம் எனப்படுகிறது.

இதை வைத்துதான், புகார் நகருக்கு,பூம்பட்டினம், பூம்புகார் என்றெல்லாம் பெயர் வழங்கப்பட்டு வருகிறது

மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் இரண்டிற்கும் இடைப்பட்டப்
பகுதிகளில்தான் கடைகள் சூழ்ந்த பகுதியாகும்.அங்கு எப்போதும் விற்பவர் குரல்களும், வாங்குவோர் குரல்களும் பலத்த சப்தத்துடன் ஒலித்துக்கொண்டிருக்கும்.

இந்த இடத்தில் காவல் பூதத்திற்கு ஒரு பீடிகை அமைந்திருந்தது. சித்திரைத் திங்கள் சித்திரை முழுநிலவு அன்று இந்திர விழா புகாரில் கொண்டாடப்படும்.மக்கள் குறிப்பாக இந்த பலிப்பூடத்திற்கு பூவும், பொங்கலும்,விலங்குகளையும் பலி இடுவர். பின் “சோழ அரசன் வெற்றி பெறுக” எனக் கூவி மன்னனுக்கு வாழ்த்தினைக் கூறுவர்.

வச்சிரக் கோட்டம் எனும் இந்திரன் கோயிலில் இருக்கும் முரசத்தை எடுத்து யானை ஒன்றின் பிடரியில் ஏற்றி அதன் மீது இருந்து விழாச் செய்தினை அறிவிப்பார்கள்.

நகரத்து மாளிகைமுன் எங்கும் தோரணங்கள்.பூரண குடத்தில் பொலிந்த முளைப்பாலிகையை எடுத்துச் சென்றனர் பாவை விளக்கும், கொடிச்சீலையும்,வெண்சாமரமும் ,சுண்ணமும் ஏந்தி மக்கள் வீதியில் பொலிவு ஊட்டினர்.

ஊரே கூடி எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து, வேண்டுமோ… வேண்டாமோ அனைத்துப் பொருள்களையும் வாங்கிக் குவிப்பர். வீதிகளில் ஆங்காங்கே இசை நிகழ்ச்சிகளும், பட்டி மன்றங்களும் நடக்கும்.

கண்ணகியிடம் இருந்து பிரிந்து நடன மங்கை மாதவியை நாடி வந்த கோவலன், மாதவியுடன் சேற்ந்து இந்த இந்திரவிழா காட்சிகளை மகிழ்வுடன் சுற்றிப் பார்த்தான்.மாதவிக்கு பொன்னும், பொருளும் வாங்கிக் கொடுத்தான்.

அவர்கள் வரும் வழியில் தெருக்களில் பல விலைமகளிரைக் கண்டனர்.பல ஆடவர்கள் அவர்களை நாடிச் சென்று உடற்பசியைத் தீர்த்துக் கொண்டதையும் கண்டனர். அவர்களைப் பார்த்த கோவலன், மாதவியையும் குறிப்பாகப் பார்த்தான்.அதில் சற்றே எள்ளல் இருந்தது போல இருந்தது. மாதவி தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

இந்திரவிழாவில் மாதவியின் நடனமும் இடை பெற்றிருந்தது.அந்த இடத்திற்கு வந்தனர் இருவரும்.மாதவியைக் காண மக்கள் ஆர்வத்துடன் காத்து இருந்தனர்.அவர்களை மாதவி தனது பதினோரு வகை நடனங்களால் பரவசப்படுத்தினாள்.

அன்று இரவு மாதவியும், கோவலனும் இணைந்தனர். இரவு கழிகிறதே! இன்னமும் சற்று நேரம் இருக்கக் கூடாதா? என எண்ணினர்.

விடியலில்..காவிரி கடலில் கலக்கும் சங்கமத்துறைக்குச் சென்று நீராடி, புத்தம் புது ஆடைகளை அணிந்தனர். தங்கியிருந்த இடம் வந்த போது மாதவியின் தோழி யாழ் ஒன்றினை மாதவியிடம் தர..அவள் அதை மீட்டி கோவலனிடம் கொடுத்தாள்.அதை வாங்கிக் கொண்ட தலைவன் அந்த யாழினை வாங்கி இசையினைக்
கூட்டிப் பாட ஆரம்பித்தான்.

“சோழ அரசனின் ஆட்சி கங்கை வரை பரவியுள்ளது.சோழன் கங்கையை அடைந்து உறவு கொண்டாலும்  வெறுப்பதில்லை. அடுத்து அவன் குமரியை அடைந்தாலும் காவிரி
பிணக்குக் கொள்ள வில்லை. இவை பெண்ணின் கற்புக்கு எடுத்துக்காட்டு.மகளிர் ஆண்களின் தவறுகளை பொறுத்துக் கொள்வது அவர்களது கடமையாகும்” எனப் பாடுகிறான்.

உடன் யாழினைத் தன் கைகளில் வாங்கிக் கொண்ட மாதவி..” பெண்கள் பெருமை அடைய வேண்டுமானால் அதற்கு ஆண்களின் செயல்கள் தூய்மையாய் இருக்க வேண்டும். ஆண்கள் செம்மையாகவும், மகளிரிடம் நேயம் மிக்கவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும்” என்று பொருள்பட பாடினாள்.

அடுத்து கோவலன் பாடுகிறான், “என் கண்கள் செய்த பாவம் இவளைக் கண்டது. இவள் பெண்ணல்ல எமன். வானத்து நிலவல்ல..அரவம்.அது தெரியாது பெண் எனப்
பழகிவிட்டேன். கண்டவர்களைப் படுத்துபவள். இவளது
மொழி,மார்பகம்,முகம்,புருவம்,மின்னல் இடை ஆகியவை என்னை
வருத்தியதுடன்,இவளது கண்களாகிய வலையில்  புகுந்து மாட்டிக்
கொண்டுவிட்டேன்” என பொதுவாகப் பாடுவது போல மாதவியை மறைமுகமாகச் சாடுகிறான்.

இதை உணர்ந்து மாதவி யாழினை தன் கைகளில் வாங்கிக் கொண்டு, அவனுக்கு பதிலுரைப்பது போலப் பாடுகிறாள்…

“ஆண்கள் சீரோடு இருந்தால், அவர்களைச் சார்ந்த பெண்களுக்கு மதிப்பு.ஆனால், அவர்கள் இரக்கமற்றவர்கள்.பெண்களின் உணர்வினையும்,துன்பத்தினையும் அறியாதவர்கள்.பெண்களை விட்டு ஆண்கள் பிரிந்து செல்கின்றனர்.ஆனாலும், அவர்கள் சொன்னவற்றை உண்மை என நம்பி பெண்கள் உயிர் வாழ்கின்றனர்”என்று பொருள்படும்படி பாடினாள்.

“உன் பவள வாயில் முத்துப் பற்கள் இல்லை.கண்கள் குவளை மலர்கள் அல்ல..கொடியவை”என்கிறான்.”அன்ன நடை என்பார்கள்..ஆனால் அன்னமே! இவளது பின்னே செல்லாதே! இவளது நடை உலகை மிதித்து துவட்டும் நடை”

இப்படிப் பாடும் கோவலனின் பாடலைக் கேட்ட மாதவி,இவன் பாடலில் ஏதோ குறிப்பு இருப்பதாக உணர்ந்து,அதனால் இவன் நிலை மயங்கிப் பாடுவதாக எண்ணி, அவன் கைகளில்  இருந்த யாழினை வாங்கி..

“பூ ஆடை உடுத்தி பெருமிதமாக காவிரி நடப்பதற்கு எங்கள் சோழமன்னனின் செங்கோல் வளையாமையேக் காரணம்” என்றும்,”கோவலன் ஒழுக்கம் தவறாமல் இருக்க வேண்டும்” எனவும் உணர்த்துகிறாள் .

கோவலன் பாடிய பாடல்கள் பெண்கள் கொடியவர்கள் என்பது போல மாதவிக்கும், மாதவிப் பாடியவை , ஆண்கள் இரக்கமற்றவர்கள்… ஒழுக்கம் தவறியவர்கள் என்பது போல கோவலனுக்கும் பட்டது ஊழ்வினை என்றே எண்ண வேண்டும்.

மாதவி..மறைமுகமாக தன்னை நிந்திப்பதாய் எண்ணிக் கொண்டு, கோபத்துடன் வெளியேறினான் கோவலன்.

“பொழுது ஆகிறது..புறப்படுவோம்” என்று கூறி அவளை அழைக்க வேண்டியவன் அவ்வாறு கூறாது ,அவளை தனியே விட்டு இவன் மட்டும் ஏவலாளர்கள் உடன்வர அவளை விட்டு நீங்கினான்.

தோழியர் பேச வாய் எடுத்தனர்..அவர்களைத் தடுத்த  மாதவி..

ஓசைப்படாமல் எழுந்து தன் வண்டியினுள் புகுந்து வீடு வந்து சேர்ந்தாள்.

நடந்த நிகழ்வுகளைக் கண்டு யாழ் வருத்தத்துடன் மூலையில் தஞ்சம் அடைந்தது.

கீழ்வானில் கதிரவன் மறைந்தான்.மெல்ல இருள் பரந்தது.மீண்டும் …கோவலன் வருவான் என எண்ணியவள் ஏமாந்தாள். “அவன் என்னைப் பிரியலாம்..என்னை மறக்கலாம்.ஆனால் என்னால் அவனை மறக்கமுடியவில்லையே1” என கண்ணீர் உகுத்தாள்.

பிரிவுத் துயரால் உயிர் வாழ முடியாது தவித்தாள் மாதவி..கோவலன் தன்னை பிரிந்தாலும், அதனால் அவன் மீது ஏதேனும் தவறு இருந்தால் அவனை மன்னித்துவிடு என இறைவனை வேண்டினாள்.

கணிகையர் குலத்தாள் ஆனாலும் அவள் இறுதி வரை அவனையே எண்ணி வாழ்ந்தது போற்றத்தக்கது.பின்னாளில் தன் தாயின் காதல் கதையைக் கேட்ட மகள் மணீமேகலை…தன் வாழ்நாட்களை துறவியாகவே கழித்தாள்.

 கோவலனும், மாதவியும்  பிரிந்தது அவர்களுக்குள் இருந்த “தான்” எனும் அகந்தை.

தலைவன் தன்னைப் பிரிந்து செல்லமாட்டார் என எண்ணி மாதவி அலட்சியமாக இருந்து விட்டாள்.கோவலனும் பிரிவை சொல்லாமல் சென்று விட்டான். அச்சமயம், இருவரிடம் விட்டுக் கொடுத்தல் இல்லா அகந்தை.

மாதவி கணிகைதானே! என கோவலன் எண்ணி விட்டான் போலும்.. ஆனால்.. மாதவி தானும் கற்புடைவள் என்பதை நிரூபித்தாள்.

இவர்களால்  நமக்குக் கிடைத்தது சிலப்பதிகாரமும்..பின் மாதவிப்
பெற்றெடுத்த மணிமேகலைப் பற்றிய மணிமேகலை காப்பியமும்.

 

யார் தந்த விளக்கு எஸ் எஸ்

விளக்கு ஏற்றும் முறை | vilakku-etrum-murai

யார் தந்த விளக்கு ?

ஆசை நெய்யிட்டு வேட்கைத்  திரியிட்டு

காமத்தீ  இட்ட செம்பொன் விளக்கே!  

தீயவை பயக்காது பாயினில் தீவைக்கும்

பெண் பாவை விளக்கல்லவோ நீ 

முகத்தில் மலர்ந்து நெய்யில் தோய்ந்து

திரியால் ஒளிரும் புதுவிளக்கம் நீ

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினால் நீ தந்த சுடு முத்தம்

விழித்தீயில் மடியும் விட்டிலல்ல நான்

தீக்குள் விரல் வைக்கும் நந்தலாலா!

 

யார் தந்த விளக்கடி நீ ?

 

இமவான் பெற்றெடுத்த  குன்றிலிட்ட ஒளிவிளக்கா?

காமதேனு சுரந்திட்ட குடத்திலிட்ட குலவிளக்கா?

பாற்கடலில் அமிழ்ந்துவந்த அலைமகளின் அகவிளக்கா?

பெரியவர் பெற்றெடுத்த சுடர்ப்பாவைத்  திருவிளக்கா?

ஜனகமுனி  கண்டெடுத்த ஸ்ரீதேவி விடிவிளக்கா?

யமுனைத்துறை அருகினிலே கோபித்த சரவிளக்கா?

கலைமகள்  நாவுதித்த காப்பியக்  கலைவிளக்கா?

காஞ்சியிலே கொஞ்சிவரும் காமாட்சிக் கைவிளக்கா

சபரியில் கண்சிமிட்டும் மகரஜோதி திருவிளக்கா?

அண்ணாமலை உச்சியில் கார்த்திகைத் திரு விளக்கா?  

அம்மனுக்குப் படைத்துவிட்ட பச்சை  மாவிளக்கா?

விளக்கோ திருவிளக்கோ ஜோதி மணி விளக்கோ

அந்தியிலே ஏந்திழையாள் ஏந்திவரும் அகல்விளக்கோ

முக்கூடல் சங்கமத்தில் முன்வந்த சிறுவிளக்கோ?

குங்குமத்தில் குழைந்திட்ட செஞ்சுடரின் பொன்விளக்கோ ?

 

ஓமத்தீ நீயென்றால் பெய்யும்நெய் நான் உனக்கு

காட்டுத்தீ நீயென்றால் தேவதாரு நான் உனக்கு  

எரிமலை நீயென்றால் செங்குழம்பு நான் உனக்கு    

எரிவாயு நீயென்றால் ஜ்வாலையடி  நான் உனக்கு

 

யார் தந்த விளக்கடி நீ ?

 

மோகத்தீ பொங்கிவரும் தீபாவளித் திருநாளில்

கொள்ளிக்கண் தீபட்டு பட்டாடை பற்றியதே   

தீயே தீக்குளிக்கும் கொடுமையினைக் கண்டேனே!

அனலே அனலாக  கண்முன்னே கண்டேனே     

உன்னுடன் எரிந்துவிட ஓடிவந்த உன்உயிரை  

கொஞ்சமும் கருணையின்றி உதறிவிட்டுச்  சென்றாயே  

புதையலைப் புகையாய் சிதைத்த பாவிமுன்

சிதையிலே வரைந்த ஓவியமாய் மறைந்தாயோ?

 

எங்கே என் பூம்பாவை விளக்கு?

 

அகண்ட குங்குமத்தில் அமைதி கொண்டு

ஓவியச் சுடராய் பூஜையில் எரிகின்றாய்!

அன்பே தகழியாய் அமைதியே நெய்யாய்

காவியத் திரியாய் எரியும்சுடர் விளக்கே! 

என் நெஞ்சின் அழல் நீயம்மா!

உன் நெஞ்சின் நிழல் நானம்மா!

கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.

“அகம்” காட்டும் சாலமன் பாப்பையா!

(குவிகம் கடைசி பக்கம் – மே 2021.)

‘அகம்’ என்பதற்கு “காதலைப் பற்றிக் கூறும் தமிழ் இலக்கியப் பொருள் பாகுபாடு;” என்றதொரு பொருளைத் தருகிறது க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி – மேலும், ‘பழைய தமிழ் இலக்கணங்கள் அகப்பொருளையும், புறப்பொருளையும் விரிவாகக் கூறுகின்றன. நானூறு அகப் பாடல்கள் கொண்டது ‘அகநானூறு’ என்றும் விளக்குகிறது.

‘சங்க இலக்கியம்’ என்பவை பழந்தமிழர் வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம் பற்றிய பாட்டும் தொகையும் அடங்கிய பழைய நூல்களே. இதையே,

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்துங் கலியோடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை”.

என்னும் பழம்பாடல் சங்க இலக்கியங்களைச் சொல்கிறது!

முகநூலில் திரு மாலன் அவர்கள், தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் தொகுத்துள்ள அகநானூறு புத்தகம் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தார்கள். புறம் பேசுகின்ற அளவில், அகம் பேசப்படுவதில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு (நான் புத்தகத்தைச் சொல்கிறேன்!).

பட்டிமன்றங்களைத் தாண்டி, சாலமன் பாப்பையா அவர்களின் தமிழும், அவரது நேர்படப் பேசும் தன்மையும், மொழி, மதங்கள் தாண்டிய மனிதநேயமும், ‘இளைஞர்களுக்கு கல்வி கொடுத்த அளவிற்கு கலாச்சாரமும், பண்பாடும் கொடுக்கவில்லையே’ என்ற சமூக அக்கறையும் என்றுமே என்னை வசீகரித்துள்ளன. அவர் தொகுத்துள்ள அகம், புறம் இரண்டையும் வாங்கினேன் – கொஞ்சம் வாசித்தேன் – அகநானூற்றின் முன்னுரையில், ‘எளிமையாக எல்லோரும் வாசிக்கும் வண்ணம் தொகுத்திருக்கிறேன்’ என்ற அவரது அறிமுகம், அது பற்றி சிறிது எழுதலாம் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது! – தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய புத்தகம் இது என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை.

முன்னமேயே சாலமன் பாப்பையா அவர்கள் தொகுத்த ‘புறநானூறு’ – புதிய வரிசை வகை என்ற தொகுப்பினை வெளியிட்டுள்ள கவிதா பதிப்பகம், ‘அகநானூறு’ – குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் நெய்தல் திணைகளை மூன்று பாகங்களாக வெளியிட்டுள்ளது. ”இளையோரும், தொடக்க நிலையில் உள்ளோரும் எளிமையான தமிழ் நடையில் புரிந்து கொள்ளும்படி எழுதியுள்ளார் அறிஞர் சாலமன் பாப்பையா” என்கிறார் ம.பெ.சீனிவாசன் (மேனாள் பேராசிரியர்) தனது அறிமுக உரையில்.

அகநானூறு என்பதற்கு சாலமன் பாப்பையா கூறும் எளிய விளக்கம்:

நானூறு என்றால் நன்றாகவே தெரிகிறது. ‘அகம்’ என்றால் என்ன? பழைய விளக்கத்தை எளிமைப் படுத்தித் தருகிறார் இப்படி:

“என் மனம் இப்போது இவளோடு:
நான், எனது என்பதே இல்லை;
இருமனமும் ஒருமனமே ஆக,
இரண்டு உடலும் ஓர் உடலாய்த்
தனிமையில் இணைந்து பெற்ற
பேரின்ப வெள்ளம் என்மனம் எல்லாம்”

“அவளுக்கும் அப்படியே! ஆனால் அது எப்படி என்று சொல்லச் சொன்னால் சொல்லத்தான் தெரியவில்லை. இந்தப் பேரின்ப வெள்ளமே – உள்ளத்தே உணர்ந்து இன்புறுதல் – ‘அகம்’ எனப்படும் என்று விளக்குகிறார்.

13 அடிகள் முதல் 31 அடிகள் வரை உள்ள 400 பாடல்கள் – 145 புலவர்களால் பாடப் பெற்றவை – அகநானூற்றில் தொகுக்கப் பட்டுள்ளன. சாலமன் பாப்பையா அவர்கள், தனது 220க்கும் மேற்பட்ட பக்கங்களில் இப்பாடல்களைத் தொகுத்துள்ள முறை பற்றிக் குறிப்பிடுகிறார். பொருளுக்கேற்ற பாடலை எளிதில் தேர்ந்தெடுக்கும் வகையில் எளிமையாகத் தொகுத்திருக்கும் சாலமன் பாப்பையா அவர்கள் பாராட்டுக்குரியவர்.

இத்தொகுப்பின் சில சிறப்பு அம்சங்களைப் பருந்துப் பார்வையாகப் பார்க்கலாம்.

காலம் – உறுதியாகத் தெரியவில்லை கி.மு 300க்குப் பின் என்று உறுதியாகக் கூறலாம்.

பிற அகத்திணை நூல்களுக்கில்லாத சிறப்பு அகநானூற்றுக்கு உண்டு. முதல் 120 பாடல்களுக்குக் ‘களிற்றியானை நிரை’ என்றும், அடுத்த180 பாடல்களுக்கு ‘மணிமிடைபவளம்’ என்றும், அடுத்த 100 பாடல்களுக்கு ‘நித்திலக் கோவை’ என்றும் பெயர் சூட்டி மூன்று பிரிவாக வைத்துள்ளனர்.

ஒவ்வொரு பாடலுக்கும் பொருள் சீராக விளங்கும்படி, எண்கள் போட்டிருக்கிறார் சாலமன் பாப்பையா. எந்த அடியில் பொருள் துவங்குகிறதோ அங்கு 1 என்றும், பின்னர் பொருள் விளங்க எந்த அடி உள்ளதோ அங்கு 2 என்றும் இப்படி எண்களை இட்டிருப்பதால், அந்த எண்கள் வரிசையில் படிக்கும்போது, பாடலின் பொருள் துலக்கமாக விளங்கிவிடுகிறது! இந்த உத்தியில் வாசிப்பது, பாடலின் பொருளை உடனே அறிந்துகொள்ள உதவுகிறது.

‘கிரேக்கத் தொன்மக் கதைகள் கணவர்களைக் கோடரியால் கொல்லும், விஷமிட்டுக் கொல்லும் மனைவியர் பற்றியும், அண்ணனைக் கொல்லும் தங்கை, தந்தையைக் கொல்லும் மகள் என நல்ல குடும்பத்தைப் படைக்கும் திசையில் பயணிக்காமல், பாலியல் தேடலில் ஆணும் பெண்ணும் விலங்கு நிலையில் உள்ளதைக் காண்கிறோம்’. இப்படியே இலத்தீன் இலக்கியம், எபிரேயர்களின் இலக்கியம், சமஸ்கிருத இலக்கியம் ஆகியவற்றின் குறை நிறைகளோடு ஒப்பிட்டு அகநானூறு பற்றி எழுதுகிறார்.

காதலும் தமிழ் மக்களும்:

காதல் வாழ்க்கையைத் தமிழ் மக்கள் களவு,கற்பு என இரண்டு பிரிவாகக் கண்டனர். உறவுக்கும் தெரியாமலேயே மணம் செய்துகொள்வது களவு வாழ்க்கை (1086 தொல்). உறவும் ஊரும் அறிய மணம் செய்து வாழ்ந்தால் அது கற்பு வாழ்க்கை (1088). கற்பு வாழ்க்கை வாழ்வதையே தமிழ் மக்கள் சிறப்பாகக் கருதினர். இது இன்றைய இளைஞர்களுக்கான நல்ல செய்தியாகவே நான் பார்க்கிறேன்!

அன்றைய நாடுகளின் சில பெயர்கள் – எருமை நாடு (253), குட நாடு (91, 115), துளு நாடு (15), தொண்டை நாடு (213) – போன்ற இடங்களின் இன்றைய பெயர்கள், பெயர்க் காரணம் என விவரணைகள் சுவாரஸ்யம்.

இப்படியே மலைகள், ஆறுகள் (அயிரி ஆறு, கான்யாறு, காவிரியாறு…), ஊர்கள் (கிட்டத்தட்ட 90 ஊர்கள்), மரங்கள் (அரச மரம், ஆல மரம், இலவ மரம், உகா மரம், கமுகு, கரும்பு….), செடிகள், கொடிகள், பறவைகள் (அன்றில், அன்னம், ஆந்தை, கிளி, குயில், நாரை, பருந்து….), விலங்குகள் என ஒவ்வொன்றைப் பற்றியும் சிறு விளக்கத்துடன் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. அடைப்புக் குறியுள் பாடலின் எண் கொடுக்கப் பட்டுள்ளது – எளிதாகப் பாடலை அறிவதற்கு!

நிலம் சார்ந்த மக்களையும், தொழில் சார்ந்த மக்களையும் பற்றிப் பேசுகிறார். விழாக்கள், நம்பிக்கைகள், ஆட்சியாளர், ஆட்சி முறை, மக்கள் செழுமையும் வறுமையும், கடவுள் சிந்தனை என அன்றைய தமிழர் வாழ்வினைக் குறிக்கும் ஓர் ஆவணமாக அகநானூற்றுப் பாடல்களில் செய்திகள் உள்ளன!

மகளிர் அணிகள் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன – காதணிகள் ‘குழை’ என அழைக்கப்படுகின்றன. கழுத்தணிகள் (மகளிர் ஆரந்தாங்கும் அலர் முலை – 206), தொடி (ஆண்கள் அணியும் வீரவளை), சங்கில் செய்யப்பட்ட கை வளையல்கள் (இலங்கு வளை – 328, இறை வளை – 200, விளங்கு தொடி முன்கை – 58), சிலம்பு, சதங்கை, பொன்னில் தாலி, கையில் காப்பு எனப் பலவித அணிகலன்கள். முகம் பார்க்கத் தோலில் பதித்த கண்ணாடியும், ஒப்பனைக் கலையும் வழக்கத்தில் இருந்ததாக அகப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன என்பது வியப்பு!

சாலமன் பாப்பையா அவர்களின் எளிய நடைக்கு சில வரிகள்….

“காலப் புழுதிக்குள் உண்மை ஒளிந்து கிடக்கலாம்”

“வேனில் வெயில் வீறு கொண்டு கொளுத்துகிறது:
அந்த வெயிலிலும் தன் சிறகுகள் கரிந்த் போகப்
பறந்து போகிறதே ஆண் பருந்து…”

“கடல்மேல் கொண்ட நீரைத் தரையின் தலைமேல்
கொட்டி மேகங்கள் ஆரவாரம் செய்தன”

ஐம்பதுக்கும் மேற்பட்ட துணை நூல் பட்டியல் – மிகவும் நுணுக்கமாக தொகுக்கப் பட்டுள்ள நல்ல நூல் என்றால் அது மிகையில்லை. எல்லோரும் வாசிக்கும் வகையில் தொகுத்து, எளிமையாகவும் சுவாரஸ்யமாகவும் சுவையாகவும் படைத்திருக்கிறார் சாலமன் பாப்பையா அவர்கள்.

வீட்டில் இருக்க வேண்டிய ஒரு தொகுப்பு!

(அகநானூறு – எளிய உரையுடன். பதிப்பாசிரியர்: சாலமன் பாப்பையா. கவிதா பப்ள்கேஷன், சென்னை. 600017. போன்: 044-24364243, +91-7402222787)

 

 

 

 

அட்டைப்படம் -ஏப்ரல் 2021

 

          (அட்டைப்படம் வடிவமைப்பு: ஸீன் )

 

எப்படி இருக்கிறது இந்தப் புத்தகச் சாலை ?

சாலை அல்ல நூலகம்! 

அம்மாடியோவ் ! எத்தனை எத்தனை புத்தகங்கள்?

குவிகம் குறும் புதினம்

குவிகம்  குறும் புதினம் திட்டம்  

 

குவிகம் அமைப்பு மின்னிதழ் , பதிப்பகம் , அளவளாவல் என்ற கிளைகளில்  படர்ந்து   வருவது அனைவருக்கும் தெரிந்ததே! 

தற்போது குறு நாவல்களை அச்சில்  சிறப்புப் பதிப்பு வகையில்  ( Limited Edition)  குறும் புதினமாக மாதந்தோறும் கொண்டு வரலாம் என்று திட்டமிட்டுள்ளோம்

சிறுகதை, புதினம் இரண்டிற்கும் தளங்கள் நிறைய உள்ளன. ஆனால்  குறும்  புதினம்  என்கிற குறு நாவலுக்குக்கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு!  அந்த வெற்றிடத்தை நிரப்பவே  இந்தத் திட்டம்!

இந்தத் திட்டத்தை எப்படிச் செயலாற்றப்  போகிறோம்? 

இது அங்கத்தினர்களுக்கு மட்டும் வழங்கப்படும்  திட்டம்.

அதன்படி 100 -120 பக்கங்களில் இரு  குறு   நாவல்களை ஓர்   அழகான  புத்தகமாக  அச்சடித்து  மாதா மாதம் அங்கத்தினர்களுக்கு    வழங்க இருக்கிறோம்.

எப்படிப்பட்ட குறு நாவல்கள்?

  1. பிரபல ஆசிரியர்கள் எழுதியவை

  2. குறு நாவல் போட்டிகளில் பரிசு பெற்றவை 

  3. பிரபல நாவல்களைச் சுருக்கி குறு நாவலாக மாற்றப்பட்டவை

 4. புதியதாக நாமே போட்டி வைத்துத் தேர்ந்தெடுத்தவை 

 5. அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கும் / எழுதும் குறு நாவல்கள்             

எந்தக் குறு நாவல்களை வெளியிடலாம் என்பதை அதற்கென்று அமைக்கப்பட  குவிகம் குழு தீர்மானிக்கும்.

சமூகம்  சரித்திரம், நகைச்சுவை, விஞ்ஞானம் , பெண்ணியம் போன்ற வகைகளில் (genre) அமைந்த குறு நாவல்களைத் தர இருக்கிறோம்.  

போற்றிப் பாதுகாக்க  வேண்டிய   தரமான இலக்கியத்தை  அங்கத்தினர்களுக்குத்  தருவதே எங்கள் நோக்கம். 

ஒவ்வொரு மாதமும் இரண்டு குறுநாவல்கள் வெளியாகும்.அதில் ஒன்று பிரபலமான குறு நாவல்களை அனுமதியுடன் பிரசுரிக்க உள்ளோம்.

மற்றொன்று எழுத்தாளர்கள்  குவிகத்திற்காக எழுதப்பட்ட புதிய  படைப்பு!

இந்தப் புதிய குறு நாவல்ளைகளைத் தேர்ந்தெடுக்க ஒரு பரிசுப் போட்டியும் அமைத்திருக்கிறோம்.

பரிசுகள்:மூன்று சிறந்த குறு நாவல்களுக்கு Rs.5000/- Rs.3000/- Rs. 2000/-என்று  சிறப்புப் பரிசுகள் வழங்க உள்ளோம்.அவற்றைத் தவிர பிரசுரிக்கப்படும் அனைத்துப்  படைப்புகளுக்கும் சன்மானம் வழங்கப்படும்.

போட்டிக்கான  விதிமுறைகள்:

இலக்கியத் தரமிக்க புதிய கதைக்களம் கொண்ட குறு நாவல்களை வாசர்களுக்குத் தருவதே எங்கள் நோக்கம்!

குறு நாவல்  5000 முதல் 9000 சொற்கள் அளவில் இருக்கவேண்டும்

இதுவரை அச்சிலோ இணையதளத்திலோ வெளிவராத படைப்பாக இருக்கவேண்டும்.

சமூகம், சரித்திரம். நகைச்சுவை, பெண்ணியம் போன்ற எந்த வகையிலும் இருக்கலாம்.

ஒருவர் மூன்று படைப்புக்களுக்கு மேல் அனுப்பவேண்டாம்.

ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை குவிகம் குறும் புதினத்தில் பிரசுரிக்கப்பட்ட 12 குறு நாவல்களிருந்து சிறந்த மூன்றைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மேலே குறிப்பிட்ட பரிசுத் தொகைகள் வழங்கப்படும் .ஏப்ரல் 22 புத்தாண்டில் முந்திய வருடத்திற்கான பரிசுகள் வழங்கப்படும்.

படைப்புகள் kurumpudhinam@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு ‘word’ கோப்பாக அனுப்பிவைக்க வேண்டும்

இந்த ஆண்டுக்கான போட்டிக்கு படைப்புகள் அனுப்ப கடைசித் தேதி 30/06/2021.

ஒவ்வொரு ஆண்டும் இது போன்று போட்டிகள் நடத்தி குறு நாவல்களைத் தேர்ந்தெடுக்க உள்ளோம்.

வாருங்கள் புதிய இலக்கியம் படைப்போம் !

———————————————————————

இத்திட்டம்பற்றி உங்கள்  ஆலோசனைகள்

( எந்த வகை குறுநாவல்கள் படிக்க விரும்புகிறீர்கள் என்பதையும் எழுதலாம் ) 

1.

2.

3.

 

நண்பர்களே!   படைப்பாளிகளே!

தமிழ்ப் புத்தாண்டு முதல் (14.04.2021)  குவிகம் குறும் புதினம் மாத இதழ் தொடங்கி விட்டது  என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

பூம்புனலும் கரையோரமும் – ஸிந்துஜா 

மாமியாரிடம் மருமகள் எதிர்பார்க்கும் விடயங்கள்.. - Visar News

“பாட்டி, நா கண்ணாடி போட்டுண்டு இருக்கேன். அப்பா போட்டுண்டு இருக்கா. அம்மா போட்டுண்டு இருக்கா . நீ மட்டும் ஏன் கண்ணாடி போட்டுக்கலே?” என்று கேட்டான் சுந்தா.

“நீங்கள்லாம் போட்டுண்டா ஷ்டெயிலா இருக்கே! பாட்டிக்கு ஷ்டெயில் எல்லாம் வேண்டாம்னு  வச்சுட்டார் அவர்” என்றாள் அபயம்.

“அவர்னா யாரு? உங்க டீச்சரா?” 

“ஆமா.அங்கேர்ந்து என்னைப் பாத்துண்டு இருக்கற டீச்சர்தான்” என்று மேலே கையைக் காட்டிப் பாட்டி சிரித்தாள்.

“உங்க சார் ரொம்ப உசரமா? எங்க டீச்சர் குட்டச்சி.”

“அப்பிடியே வாயிலே போடுவேன்” என்று சமையல் உள்ளிலிருந்து கத்தினாள் சாலா. “அப்படீல்லாம்  பெரியவாளைப் பேசக் கூடாதுடா” என்றாள் பாட்டி.

“எங்க டீச்சர் மட்டும் என்னை  டேய் கண்ணாடின்னு கூப்பிடறா?” என்று முறையிட்டான்.

பாட்டி கூடத்தில் உட்கார்ந்து கொண்டு மடித்த இடதுகாலைத் தடுப்பாக வைத்து மார்பு மேல் பலகையை சாய்த்து வைத்துக் கொண்டிருந்தாள். நார்மடிப் புடவை உடம்பையும் முண்டனம் செய்யப்பட்ட தலையையும் இழுத்து மூடியிருந்தது. இடது கை பாட்டிற்கு பருப்பைப் பலகை மேலிருந்து கீழாகத் தள்ளி விட வலது கை அதைப் பிடித்துப் பிடித்துத் தடவியபடி நீள அகலமாய்த் தள்ளி விட்டுக் கொண்டிருந்தது. தரையில் விரித்து வைத்திருந்த நியூஸ் பேப்பரில் ராகுல் காந்தி மீது துகள்களும் தூசிகளும் ஓரத்தில் விழுந்து கிடக்க மீதி இடத்தில் பருப்பு முத்துக்கள் ஓடி நின்றன.

“பாட்டி எதுக்கு டாலை இப்படிப் பண்றே?” என்று சுந்தா கேட்டான்.

“எனக்குப் பொழுது போகணுமோன்னோ” என்றாள் பாட்டி. “டால்னா என்னடா அது  இங்கிலீஷா?”

“ஐயோ பாட்டி!” என்று சிரித்தான் பேரன். “அது இந்தி!  உனக்குத் தெரியாதா? எங்கப்பாக்கும் தெரியாது.”

“ஆமா. நரசி என்ன பண்ணுவன் பாவம்! அவன் படிக்கறச்சே புஸ்தகத்தையே தீ வெச்சு படிக்காதேன்னு  ஆர்ப்பாட்டம்னா செஞ்சா! ஊரே பத்தி எரிஞ்சதே” என்றாள் பாட்டி.

“எங்கம்மாக்கு இந்தி நன்னா தெரியும்” என்றான் சுந்தா.

“அவ பம்பாய்க்காரியாச்சே!”

பேரன் பாட்டியை நெருங்கி வந்தான். 

“ஒதுங்கி உக்காரு. நீ என் மேலே பட்டா நா மறுபடியும் கெணத்தங்கரைக்குப் போகணும்.”

சுந்தா அவள் மேல் படாத அளவுக்கு நெருங்கி “நீ கிராமமா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

“யார் சொன்னா?”

அவன் சமையலறையைச் சுட்டிக் காட்டினான். 

உயிர் தேடும் உறவு! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements

தீடீரென்று சத்தத்தைக் காணோமே என்று சமையல் உள்ளிருந்து வெளியே வந்தாள் சாலா. சுந்தா கனகாரியமாய்ப்  பருப்புக் குமியலில் கையை விட்டு அளைந்து கொண்டிருந்தான்..பிறகு  அவளைப் பார்த்துச் சிரித்தான். குறுகுறுவென்ற சிறிய முகத்தில் வரிசைப் பற்களின் ஒளி பாய்ந்து ஆளை மயக்கும் புன்னகை.

“இன்னக்கி ஹோம் ஒர்க்குக்கு ஸ்நானத்தைப் பண்ணிட்டியா? எழுந்திருடா. பாட்டியோட ராயசம் பண்ணினது போறும். போய் ரெயின்போவையும் தாமஸ் ஆல்வா எடிசனையும் நெட்ருப் பண்ணு. போன தடவையே ஒரே ஸ்பெல்லிங் மிஸ்டேக்” என்று சாலா விரட்டினாள்.

சுந்தா முனகிக் கொண்டே எழுந்து போனான்.

“எதுக்கு அவனை ஏதோ ஐ ஏ எஸ் பரிட்சைக்குத் தயார் பண்ணற மாதிரி படுத்தறே?” என்றாள் மாமியார் மெல்லிய குரலில்.

“ஏன் அவனும் அப்பா மாதிரி படிச்சா போறும்ன்னு  உங்க நினைப்பா?” என்று இழுத்து விட்டாள். பழுக்கக் காய்ச்சிய கரண்டியின் நெடியடிக்கும் வார்த்தைகள்.   

வேலை முடிந்து பலகையைப் பக்கத்திலிருந்த சுவர் ஓரமாகச் சார்த்தினாள் பாட்டி. நியூஸ் பேப்பருக்கு அருகே வைத்திருந்த சம்புடத்தை  எடுத்து அதில் சுத்தப்படுத்தப்பட்ட பருப்பைப் போட்டு மூடினாள். நியூஸ் பேப்பரோடு குப்பையையும் தூசியையும்  கட்டித் தனியே வைத்தாள். சுவரில் இருந்த கடிகாரம் எட்டு தடவை ‘கர் கர்’ என்று காறிற்று. நரசி குளிக்கப் போயிருந்தான்.  

இவ்வளவு நேரம் மடித்து வைத்திருந்த கால் மரத்துப் போயிருந்ததால் அவள் காலை நீட்ட சிரமப்பட்டாள். நாலைந்து நிமிஷம் ஆகும் ரத்தம் ஓடியாடி சரிப்பட்டு  வர.  அவள் பார்வை கூடத்தைத் தடவிற்று. சாய்வு நாற்காலியில் பேப்பர் படித்து விட்டு அதை அங்கேயே  எறிந்து விட்டு நரசி போயிருந்தான். பேப்பரிலிருந்து இரண்டு தாள்கள் நாற்காலியின்  கீழ் பரத்திக் கிடந்தன. முன்தினம் விளையாடி விட்டு சுந்தா கொண்டு வந்து போட்ட கிரிக்கெட் பேட்டும் பந்தும் மூலையில் கிடந்தன. டெலிபோன் ஸ்டாண்டுக்குப் பக்கத்திலிருந்த ஸ்டூல் மல்லாக்கக் கிடந்தது.

கால் நிலைக்கு வந்தவுடன் மெதுவாக எழுந்து போய் எல்லாவற்றையும் எடுத்து ஒழுங்கு படுத்தலாம் என்று பாட்டி நினைத்தாள். அப்போது அவனுடைய ஸ்டடி ரூமிலிருந்து தலை தெறிக்க ஓடி வந்தான் சுந்தா.

“எதுக்குடா இந்த ஓட்டம்?” என்றாள் பாட்டி.

குடிக்க வேண்டும் என்று வாயருகில் விரலை வைத்துச்  சைகை காட்டியபடி கூடத்தின் ஒரு மூலையில் இருந்த பானையை நோக்கிச் சென்றான். பானையின் மீது வைத்திருந்த டம்ளரை எடுக்கும் போது அது கை தவறிக் கீழே விழுந்து அவனைக் காட்டிக் கொடுத்து விட்டது.

“என்ன சத்தம்?” என்று கேட்டுக் கொண்டே சாலா அங்கே வந்து விட்டாள். அவனைப் பார்த்ததும் “ஓஹோ, ராஜாவுக்குத் தாகம் எடுத்துடுத்தோ? கழிச்சால போறவன் எப்படியெல்லாம் ஏமாத்தறான்” என்று திட்டிக்  கொண்டே. வேலைக்காரி வருகிறாளா என்று பார்க்க    வாசலுக்குச் சென்றாள். திரும்பி வரும்போது அவள் பார்வை கூடத்தைச் சுற்றியது. தரையில் கிடந்தவைகளைத்  திட்டிக் கொண்டே எடுத்து வைத்தாள். “எனக்கும் உக்காந்துண்டு பேசாம பாத்துண்டு இருக்க முடியறதில்லே. ஒழிச்சு ஒழிச்சே நான் தேஞ்சு போயிடுவேன்” என்று கிரிக்கெட் பேட் இருக்கும் இடத்திற்குப் போனாள். உட்கார்ந்திருந்த கிழவி சிரமப்பட்டு எழுந்து தரையில் கிடந்த பேப்பர் பக்கங்களை எடுத்தாள்.

“நீங்க எதுக்கு எழுந்தேள்? தேமேன்னு உக்காருங்கோ. அவர் வேறே குளிச்சிட்டு வரப்போ நீங்க குனிஞ்சு நின்னேள்னா என்னைப் பாத்துக் கத்துவார். இதெல்லாம் எனக்குத் தேவையா?” என்றாள் சாலா. சுந்தா அவன் தாயையும் பாட்டியையும் பார்த்துக் கொண்டே நின்றான். 

பாட்டி கையில் எடுத்த பேப்பர் தாள்களைச் சாய்வு நாற்காலி மேல் வைத்து விட்டு ஒன்றும் பேசாமல் மீண்டும் தரையில் உட்கார்ந்து கொண்டாள். 

“இந்த வேலைக்காரியை ஒழிச்சுக் கட்டிடணும். முக்காவாசி வேலையை நான் முடிச்சதுக்கப்பறம் மஹாராணி பூவும் கொண்டையுமா சினிமாக்காரி மாதிரி அசைஞ்சு அசைஞ்சு வருவா” என்றபடி சாலா டெலிபோன் அருகே குப்புறக் கிடந்த ஸ்டூலை எடுத்து நிமிர்த்தி வைத்தாள்.அப்போது வேலைக்காரி சுந்தரி வீட்டுக்குள் வந்தாள். சாலா திட்டியது அவள் காதில் விழுந்திருக்கக் கூடும். ஆனால் அதைத் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளாமல் சாலாவைப் பார்த்து “எதுக்கும்மா நீ இதெல்லாம் பண்ணுறே? விடு, நான் பாத்துக்கறேன். உனக்குதான் ஆயிரம் வேலை சமையக்கட்டுலே இருக்கே.பாவம்!” என்றாள்.

“நீ ஒருத்தி இருக்கியோ, நான் பொழைச்சேனோ” என்று சாலா அங்கிருந்து நகர்ந்தாள்.

சுந்தா வாய் விட்டுச் சிரித்தான்.

“என்னடா இளிப்பு வேண்டியிருக்கு? போ. படிக்கிற வழியைப் பாரு” என்று அவனைப் பார்த்துக் கத்தினாள் சாலா. பிறகு அவள் பாட்டியைப் பார்த்தாள்.  பாட்டி தரையில் கிடந்த ஒரு ஈர்க்குச்சியைப் பொறுக்க முயன்று கொண்டிருந்தாள்.

டிரஸ் செய்து கொண்டு கூடத்துக்கு  வந்த நரசிக்கு சாலா டிபன் எடுத்துக் கொண்டு வந்தாள். 

“கொல்லையிலே ஓணத்திருக்கற அம்மாவோட புடவையை நீ பாத்தியோ?” என்று மனைவியிடம் கேட்டான்.

“அது காஞ்சீவரம் பட்டா என்ன? நார்மடிப் புடவையைப் போய் சாலா திடீர்னு எதுக்குப் பாக்கணும்?” என்று பாட்டி சிரித்தாள்.

சாலா “எதுக்குக் கேக்கறேள்?” என்றாள்.

“கிழிஞ்சு கிடக்கு” என்றான். 

சாலாவின் முகம் மாறுவதையும் உதட்டைக் கடித்துக் கொண்டு நிற்பதையும் பாட்டி பார்த்தாள்.

“நன்னாயிருக்குடா நீ சொல்றது” என்று பிள்ளையைப் பார்த்துச் சொன்னாள் பாட்டி. “எதோ ஒரு ஓரத்திலே கிழிஞ்சு இருக்கு. அதுக்காகக் கல்லு மாதிரி இருக்கற புடவையைத் தூக்கி எறிஞ்சுடுங்கிறாயா?” 

“சாலா , நீ காமதேனு செட்டியாருக்குப் போன் பண்ணி ஒரு ஜோடி நார்மடி இன்னிக்கே அனுப்பச் சொல்லு. திடீர்னு அண்ணா அம்மாவைப் பாக்கறேன்னு வந்து நிப்பான். ‘நா வாங்கிக் கொடுத்த  புடவையையே எங்கம்மா கிழிசலாக் கட்டிண்டு நிக்கறா. எந்தம்பிக்கு ரெண்டு புடவை அம்மாவுக்கு வாங்கித் தரக் கூட  நேரமில்லே’ன்னு ஊர் பூரா சொல்லிண்டு அலைவான். அப்பப்போ நீயும் இதெல்லாம் பாத்து வச்சுக்கணும்” என்று சொல்லியபடி ஒரு யுத்த களத்தை ஏற்படுத்திக் கொடுத்து விட்டு ஆபீசுக்குக் கிளம்பிப் போனான். சாலா மாமியாரை முறைத்துப் பார்த்து விட்டு உள்ளே போனாள். 

பத்து நிமிஷம் போயிருக்கும்.சமையலறையில் சாலாவின் உரத்த குரல் கேட்டது. சமையல் கட்டிலிருந்து  வாசல் வரை நடந்து போகும் குரல்.

“நானென்னமோ வாங்கிக் குடுக்கறதுக்கு நடுவிலே நிக்கற மாதிரின்னா இந்த மனுஷன் கத்திட்டுப் போறது. தெனைக்கும் ஒவ்வொருத்தர் துணிலேயும்  ஓட்டை இருக்கா கிழிசல் இருக்கான்னு நான் போய்ப் பாத்துண்டுஇருக்கணுமா?  கிழிஞ்சுடுத்து, புதுசு வாங்கிக் கொடுன்னு என்கிட்டே சொல்ல வேண்டாம். நான் மூணாம் மனுஷி. வெளியே இருந்து வந்தவ. பெத்த பிள்ளைகிட்டே சொல்றத்துக்கு என்ன?  ஊமைக் கோட்டானா இருந்து நல்லவ, பாவம்னு பேர் வாங்கிக்குங்கோ எல்லாரும்  நான் ஒரு பைத்தியம். கத்திண்டு கிடக்கறேன்.” 

சாலாவுக்கு சாதாரணமாகவே கீச்சுக் குரல். அது கோபத்தின் உக்கிரத்தில் பெரிதாக எழும்பும் போது ஏதோ தகரத்தட்டில் ஆணியை வைத்துக் கீச்சுவது போல இருக்கும். “இதுக்காகவே சின்னவன் பொண்டாட்டிக்கு கோபம் வராம நாமெல்லாம் பாத்துக்கணும்” என்று ஒரு தடவை சாலா ஊரிலில்லாத போது நரசியின் அண்ணா சொல்லிச் சிரித்தான். 

“எதுக்கும்மா இப்பிடிக் கஷ்டப்படறீங்க?” என்று சுந்தரி அவளைச் சமாதானப்படுத்தும் குரல் கேட்டது.

“இந்த குடும்பத்துக்கு வந்ததுலேந்து கஷ்டத்தைத் தவிர வேற என்னத்தை நான் கண்டேன்? வந்து மொதல் பத்து வருஷம் நான் படாத பாடா? ரெண்டு புடவை ரெண்டு ரவிக்கை வாங்குவா. அதுவும் ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை. சம்பளம் கொடுக்க வேண்டாத சமையக்காரிக்கு இதுவே ஜாஸ்திதானே. கல்யாணத்துக்கு எங்கப்பாம்மா வாங்கிக் கொடுத்த கூரைப் புடவையைத்தான் நான் எந்த ஊர்லே, எந்த சொந்தக்காராளாத்திலே விசேஷம் நடந்தாலும் கட்டிண்டு போகணும். ரெண்டாவது பட்டுப்புடவைன்னு ஒண்ணு கிடையாது. ‘பச்சை நீலத்திலே உடம்பு, அதுக்கு மாங்கா போட்ட விராலி மஞ்சள் பார்டர் வச்சு ஒரு புடவையை எங்காத்து விசேஷத்திலே யாராவது பாத்தேள்னா அது சாலாதான்’ன்னு என் ஒண்ணுவிட்ட நாத்தனார் ஒருத்தி என்னையும் வச்சுண்டு எல்லார் கிட்டேயும் சொல்லுவா. மானம் போகும்.  அப்போ புடவையும், நகையுமா உடம்பு பூரா போட்டுண்டு ஆத்து நிர்வாகம் பண்ணின பெரியவாளுக்கு இதெல்லாம் கண்ணிலேயே படலையே . அப்போ இந்தப் புருஷர் எங்கே புத்தியை கடன் கொடுத்திருந்தார்?”

தன் காதில் விழட்டும் என்றுதான் சாலா பெரிய குரலில் சொல்லுகிறாள்;  ஏற்கெனவே ஊமைக்கோட்டான் என்று சாடி விட்டாள். இன்னும் வேறு வம்பை விலைக்கு வாங்க வேண்டுமா?

அபயம் பெங்களூருக்கு பிள்ளையுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வரவில்லை. பெரியவன்  திருச்சியில். சின்னவன் பெங்களூரில். யாரையும் உபத்திரப்படுத்தக் கூடாது என்றுதான்  அபயம் திருவையாற்றில் தனியாக இருந்தாள். நடுத்தெருவில் வீடு. இந்தத் தெருவில் வீட்டு வாசல் என்று ஆரம்பித்து அடுத்த தெருவில்கொல்லைப்புறம் அமைந்த வீடுகளை உள்ளடக்கிய தெருவுக்கு நடுத்தெரு என்று பெயர் வைத்தவன் குசும்புக்காரனாக இருக்க வேண்டும். நிலத்திலிருந்து அரிசியும், பருப்பும்,  வருஷா வருஷம் கொண்டு வந்து கொடுத்து விடும் ஒரு ஏமாற்றாத குத்தகைக்காரன் அவளுக்கு இருந்தான். ஒரு ஆத்மாவுக்கு, அதுவும் வயதானவளுக்கு எவ்வளவு வேண்டும்? எனவே அரிசியையும் பருப்பையும் மூட்டைகளில் ஏற்றி முத்துக் கோனார் தனது லாரிகளில் திருச்சிக்கும்  பெங்களூருக்கும்  அனுப்பி விடுவான். மாடுகளை விட லாரிகளில் அதிகம் பணம் கறக்க முடிகிறது என்று அவனும் வியாபாரத்தை மாற்றி விட்டான்.

இரண்டு மூன்று வருஷங்களுக்கு ஒரு முறை அவள் தங்களுடன் சில காலமாவது தங்க வேண்டும் என்று இரு பிள்ளைகளும் அவளைக் கூட்டிச் செல்லுவார்கள். பெரியவன் வீட்டில் அவள் ஆறு மாதம் இருந்தால், சின்னவன் தன்  வீட்டிலும் அதே காலம் அவள் இருக்க வேண்டும் என்பான். இது சாலாவுக்கு உடன்பாடாக இல்லா விட்டாலும் கூட. பெரியவனின் மனைவி சாரதா அவள் வயது தந்த முதிர்ச்சியினாலும், வயதுக்கு வந்து விட்ட இரண்டு பெண்களை  வைத்துக் கொண்டிருந்ததாலும் அபயத்திடம் அனுசரணையாக இருப்பாள். இதை சாலாவால் பொறுத்துக் கொள்ள முடியாது. சாரதா தன் பெண்கள் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் நகை நட்டு எல்லாவற்றையும் அபயத்திடமிருந்து அபகரிக்கவே மாமியாரை மயக்குகிறாள் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். ஆரம்பத்தில் பெரியவனும் அவன் மனைவியும் எரிச்சலுற்றாலும், நாளாவட்டத்தில் சாலாவைப் பொருட்படுத்தாமலிருக்கப் பழகி விட்டார்கள். அகண்ட காவேரியின் கம்பீரத்தையும், அலை புரளலையும், இளம் நங்கையின் நாட்டியம் போன்ற பூம்புனலின் அழகையும் பார்த்துக் கொண்டிருக்கும் கண்களை எதற்குப் பிய்த்தெடுத்து  கரையோரமாக மிதந்து செல்லும் கழிவுகளைக்  காண உபயோகிக்க வேண்டும் என்று கணவனும் மனைவியும் தீர்மானித்து விட்டவர்கள் போலிருந்தனர்.  

இப்போதும் அபயம் பெங்களூருக்கு வந்து இரண்டு மாதமாகிறது.அவ்வப்போது மறைமுகமாகவும், நேரடியாகவும் தாக்குவதற்கு சாலா சளைக்காமல்தான் இருக்கிறாள். 

ஆறு மணி இருக்கும். அபயம் நன்றாக இருட்டும் முன் கோயிலுக்குப் போய்விட்டு வந்து விடலாம் என்று கிளம்பிக் கொண்டிருந்தாள். அப்போது வெளியில் போய் விளையாடி விட்டு வீட்டுக்குள் ஓடி வந்தான் சுந்தா. அவளைப் பார்த்ததும் “பாட்டி இரு. நான் போய் மூஞ்சி அலம்பிண்டு வந்து உன்னைக் கோயிலுக்குக் கூட்டிண்டு போறேன்” என்று சிரித்தபடி உள்ளே ஓடினான்.

அப்போது சாலா அங்கே வந்தாள். “எங்கேடா கிளம்பியாறது? நாலு மணிக்கு விளையாடறேன்னு போயிட்டு ஆறு மணிக்குத்தான் உள்ளே நுழைஞ்சே. இப்ப கோயிலுக்குக் கிளம்பியாச்சா? இப்போ ஊரெல்லாம் சுத்திட்டு ஏழு மணி எட்டு மணிக்கு வருவே. வந்ததும் உனக்குப் பசிச்சிடும் ” என்று பொரிந்தாள்.

“கோயிலுக்குப் போயிட்டு சீக்கிரம் வந்து படிக்கிறேம்மா” என்று சுந்தா கெஞ்சினான்.

“அதெல்லாம் எங்கையும் போக வேண்டாம்.போய்ப் புஸ்தகத்தை எடு” என்று அதட்டினாள்.

“நா கோயிலுக்குப் போகக் கூடாதுன்னா நா படிக்க மாட்டேன் போ” என்றான் கெஞ்சல் மறுக்கப்பட்ட கோபத்தில்.

“என்னடா நாயே? எதுத்துப் பேசற அளவுக்கு அவ்வளவு கொழுப்பு ஏறிடுத்தா உனக்கு? பெரியவான்னு ஒரு மட்டு மரியாதை கிடையாதா? துரை படிக்க மாட்டாரோ?” என்று அவனருகே சென்று கன்னத்தில் ‘பளா’ரென்று அறைந்தாள். வலியில் சுந்தா ஓவென்று கதறி அழ ஆரம்பித்தான்.

“வாயை மூடு” என்று சாலா அவனை மறுபடியும் அடிப்பதற்குக் கையை ஓங்கினாள்.        

“அடிக்காதே சாலா. குழந்தைக்கு சமாதானமா ரெண்டு வார்த்தை சொன்னாப் போச்சு. அடிச்சா இன்னும் பிடிவாதம்தான் ஜாஸ்தியாகும்” என்றாள் பாட்டி.

“நீங்க சித்தே பேசாம இருக்கேளா? ரெண்டு மாசமா செல்லம் கொடுத்துக் கொடுத்துதான் சீரழிஞ்சு போயிருக்கான்” என்றாள். சுந்தா அழுது கொண்டே அவனுடைய அறைக்குள் ஓடினான். அபயத்துக்கு வெளியே போக மனதில்லாமல் போய்விட்டது. குழந்தை உள்ளறையில் விசும்புவது அவள் மனதைக் கரைத்தது. 

ஆறரைக்கு நரசி ஆபிசிலிருந்து வந்தான். சாலா அவனுக்குக் காப்பி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.  நரசி சாலாவிடம் “பொடியன் எங்கே? விளையாடப் போனவன் இன்னும் வரலையா?” என்று கேட்டான்.

வாசல் ரூமிலிருந்து இருமும் சத்தம் கேட்டது!

“அவன் படிச்சிண்டிருக்கான்” என்றாள் சாலா. 

காப்பியைக் குடித்து விட்டு “செட்டியார் புடவைக்கு என்ன சொன்னார்?” என்று கேட்டான்.

“கடைப்பையன் இன்னிக்கி லீவாம். நாளைக்கி அனுப்பறேன்னார்.”

“நாளைக்கு வேணும்னுதானே இன்னிக்கிக் கேட்டது?” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தான். “ஏழுதானே ஆறது. வா. ஒரு வாக் மாதிரி போயிட்டு வாங்கிண்டு வந்துடலாம். எய்ட்த் கிராஸ்தானே?” என்று எழுந்தான். பிறகு நினைவுக்கு வந்தவன் போல”அம்மாவுக்குப் பலகாரம்?” என்று கேட்டான்.

 “உப்புமா கிண்டி வச்சிருக்கு” என்றாள் சாலா.

அவர்கள் இருவரும் வாசல் ரூமை நெருங்கும் போது சுந்தா வெளியே வந்து நின்றான். “நீயும் வரியாடா?” என்று நரசி அவன் கையைப் பிடித்துக் கொண்டான். மூவரும் வெளியே வந்து நடந்தார்கள்.

“ஏண்டா ஒண்ணும் பேசாம என்னவோ மாதிரி இருக்கே?” என்று நரசி சுந்தாவிடம் கேட்டான். பதில் வராததால்  மனைவியைப் பார்த்தான்.

“ஒண்ணுமில்லே” என்றாள் சாலா.

“என்னை அடிச்சிட்டா” என்று லேசாக விசும்பினான் சுந்தா.

“ஆமா.படிக்காம ஊர் சுத்தினா கொஞ்சுவாளாக்கும்!” என்றாள் சாலா 

“கோயிலுக்குத்தானே போறேன்னேன்” என்றான் சுந்தா.

“எதுக்குக் குழந்தைகிட்டே கைநீட்டறே?” என்று மனைவியைக் கடிந்து கொண்டான் நரசி.

“ஆமா. என்னைத் தூத்திண்டே இருக்கணும் உங்களுக்கு”” என்றாள் சாலா கோபத்துடன்.

நரசி மேலும் பேசினால் பிரச்சனை என்று மௌனமாக நடந்து வந்தான்.

“எல்லாம் உங்க அம்மாவால வர்ற வினை. வயசான காலத்திலே தேமேன்னு ஆத்துலே கிடக்காம கோயில் என்ன வேண்டிக் கிடக்கு கோயில்?  அன்னிக்கிப் பண்ணின அக்கிரமங்களுக்கு எல்லாம் இப்ப ஸ்வாமி கால்லே போய் விழுந்தா சரியாப் போயிடுமா என்ன?” என்றாள் சாலா விடாமல்..

“ஏய் சாலா, இப்ப எதுக்கு இந்த அனாவசியப் பேச்சு எல்லாம்?” என்று நரசி அவளை அடக்க முயன்றான்.

“ஓ உங்களுக்கு அனாவசியமா ஆயிடுத்தா?. அது சரி.  நான்னா வலிக்க வலிக்க அடி  வாங்கிண்டேன். அதுவும் வருஷக்கணக்கா. அதெல்லாம் மறக்குமா எனக்கு?”

“சரி, மறக்காம ஆயுசு பரியந்தம் மனசிலே வச்சு பூஜை பண்ணிண்டிரு.  எங்கம்மா வந்து ரெண்டு மாசம்தான் ஆறது. அதுக்குள்ளே அவளைக் கழுத்தைப் பிடிச்சு வெளியிலே தள்ளணுமா? இன்னும் ரெண்டு மூணு மாசம் பல்லைக் கடிச்சிண்டு பொறுத்துக்கோ. அவளைக் கொண்டு போய் விட்டுடறேன்.”

அதற்குப் பிறகு யாரும் பேசவில்லை. செட்டியார் கடையில் புடவைகளை வாங்கிக் கொண்டு, வீடு திரும்ப ஒரு ஆட்டோ பிடித்து விட்டான் நரசி.

மறுநாள் காலையில் வழக்கம் போல எட்டரைக்கு  நரசி ஆபீசுக்குக் கிளம்பிப் போய் விட்டான். ஹாப்காம்ஸில் காய் வாங்கிக் கொண்டு வர சாலா சென்று விட்டாள். பாட்டி கூடத்தில் இருந்த சாய்வு நாற்காலியில்சாய்ந்திருந்தாள். சுந்தா அவளருகில்  வந்து “பாட்டி, நீ ஊருக்குப் போயிடுவியா?” என்று கேட்டான்.

“இல்லியே. நா இங்கே தான் இருக்கப் போறேன். என்னோட ராஜா பரீட்சை பாஸ் பண்ணப்பறம் சொக்கட்டான் பிள்ளையாருக்குப் பாட்டிதானே  சக்கரைப் பொங்கல் நெய்வேத்யம் பண்ணி உனக்கு சாப்பிடக் கொடுக்கணும்?” என்றாள்.

“இல்லே, நீ போயிடுவே!”

பாட்டி பதில் எதுவும் தராமல் மறுபடியும் கண்களை மூடிக் கொண்டாள்.

“பாட்டி, எங்கம்மாக்கு உன்னை ஏன் பிடிக்கலே?” என்றான் சுந்தா திடீரென்று.

“யார் சொன்னா? அவளுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். நேத்திக்கு ராத்திரி கூட எனக்குப் பிடிச்ச உப்புமா அவதானே பண்ணிக் கொடுத்தா?”

அவன் அவளை உற்றுப் பார்த்து “இல்லே நீ பொய் சொல்றே” என்றான்.

அந்த அம்பின் நேரடித் தாக்குதலை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.

“சொல்லு, ஏன் எங்கம்மா எப்பப் பாத்தாலும் உன்னோட சண்டை போடறா?” என்றான் மறுபடியும் பேரன்.

“உனக்குச் சொன்னா புரியாதுடா குழந்தை” என்றாள் பாட்டி.

ஆனால் சுந்தா விடவில்லை.”ஏன் பாட்டி எங்கம்மா நீ இங்கே இருக்க வேண்டாங்கறா? எப்பப் பாரு உன்னைத் திட்டிண்டே இருக்காளே?” 

பாட்டி பெருமூச்சு விட்டபடி “நான் அன்னிக்கி செஞ்சதை அவ இன்னிக்கிச் செய்யறாடா” என்றாள்.  

 

நிஜந்தனின் புதிய வெயிலும் நீலக் கடலும் – அழகியசிங்கர்

          அழகியசிங்கர் : வணக்கம்.

          மோகினியும், ஜெகனும் : வணக்கம்.

          அழகியசிங்கர் : நாம் இப்போது நிஜந்தன் நாவலான புதிய வெயிலும் நீலக் கடலும் என்பதைப் பற்றிப் பேசப் போகிறோம்.

          மோகினி : அந்த நாவல் 2008ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

          அழகியசிங்கர் ; ஆமாம்.

          ஜெகன் : இந்தக் கதை அசோகராஜன் என்ற 40வயதுக்காரன் லதா என்கிற 20 வயதுக்காரியை காதலிக்கிற கதை.

          அழகியசிங்கர் : ஆனா லதாவை அசோக் காதலிப்பதாக எந்த இடத்திலும் நாவலில்  கூறவில்லை.

          மோகினி : அசோகராஜன் லதா என்ற வண்ணாத்தியை காதலிக்கிறான்.  அவள் அழகாக இருக்கிறாள்.

          ஜெகன் : அவள் அம்மா இறந்து விடுகிறாள்.  அந்த ஊர்வலத்தில் அசோக் ராஜா லதாவைப் பார்க்கிறான்.  வளர்ந்த பெண்ணாக அவன் கண்களுக்கு அப்போதுதான் அவள் தென்படுகிறாள்.

          மோகினி : அசோகராஜா குறும்படம் எடுப்பவன். நாடகம் அல்லது நதிக்கரை என்ற குறும்படம் முடித்தபோதுதான் லதாவின் அம்மா இறந்து விடுகிறாள்.

          அழகியசிங்கர் : இந்த நாவல் முழுவதும் ஒரே பேச்சு.  அதுவும் லதாவுடன்.

          ஜெகன் : ஒரு இடத்தில் அசோகராஜா இப்படிக் குறிப்பிடுகிறான். 

          ஜெகன் படிக்கிறான். . ‘இதோ இந்தக் கணம் கூட நாம் ஒரு அறைக்குச் சென்று உடலுறவு கொண்டு விடலாம்.  ஆனால் அது வேண்டாம்.’

          மோகினி : லதாவை வண்ணாத்தி என்று கூறும் அசோகராஜா தான் எந்த வகுப்பைச் சேர்ந்தவன் என்று எங்கும் கூறவில்லை. ஏனோ நாவலாசிரியர் இதைத் தெரியப்படுத்தவில்லை.

அழகியசிங்கர் : அவனுக்குச் சோரன் கீர்க்கிகார்ட் புத்தகத்தை தோழி கண்ணகிதான் அறிமுகப்படுத்தினாள்.  அசோகராஜாவிற்கு கீர்க்கிகார்ட் புத்தகம் பிடித்திருந்தது.  கொஞ்ச நாட்களாய் கற்பனையில் மார்க்ஸ் என்ற பாத்திரத்தில் உலாவிக்கொண்டிருந்த அவன் திரும்பவும் அசோகராஜா ஆகிவிட்டான்.

          ஜெகன் : அசோகராஜன் தன் வீட்டைவிட்டு வந்தது பற்றிச் சிறப்பாக நாவலில்  குறிப்பிட்டிருக்கிறார். அசோகராஜா அக்கா அந்த வீட்டை எடுத்துக்கொண்டிருப்பதாகக் குறிப்பிடப் பட்டிருக்கும். இது குறித்து அசோகராஜாவிற்கு எந்த வருத்தமும் இல்லை.அமைந்தகரை குடியிருப்பில் ஒரு சிறிய குடியிருப்பை எடுத்துக்கொண்டு தங்கியிருக்கிறான்.பக்கத்தில் மாடர்ன் லான்டிரி இருந்தது.அங்குச் சலவைக்குத் துணிப்போட்ட 3ஆம் நாள் மூன்று வயதுக் குழந்தை லதாவைப் பார்க்கிறான்.

          மோகினி : லதாவின் அப்பா சோமு  அசோகராஜ்ஜைப் பார்த்து தான் முன்புபோல் என் மனைவியிடம் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்று குறைபட்டுக்கொள்கிறான்.

          ஜெகன் : கல்யாணம் ஆகாத அசோகராஜாவிடம் அவன் இதைக்  கூறியிருக்கிறான்.

          மோகினி : சோமு பைத்தியமாகக் காரணமாக அவனுடைய அப்பா வேலுதான் காரணமாக இருப்பார் என்பதை  அசோகராஜா கண்டுபிடித்து விடுகிறான்.

          ஜெகன் : ஒரு உறவு மீறல் வாழ்க்கை முழுவதும் சிதைத்து விட்டது என்கிறாள் லதா. 

          அழகியசிங்கர் : ஒரு கிழவர் தன் மருமகளுடன் உறவு கொள்வது  ஒரு சமூக அவலம் என்கிறார் கதாசிரியர். 

          மோகினி : சோமுவின் பைத்தியம் முற்றி விடுகிறது.  அதற்குக் காரணம் அவன் மனைவியும் அப்பாவும் வைத்துக்கொண்டிருந்த தகாத உறவு. 

          ஜெகன் : கூனி குறுகிப் போய் வேலு வீட்டிலேயே கிடந்திருக்கிறார்.   சோமு தற்கொலை செய்து கொண்டு விட்டான்.

          மோகினி : ஒரு குடும்பம் எல்லாவிதங்களிலும் கெட்டுப் போய் விடுகிறது என்பதற்கு உதாரணமாகச் சோமு, சேகர்,  வேலு போன்றவர்களில் தகாத உறவுகள் ஒரு காரணமாக அமைகிறது. 

          அழகியசிங்கர் : இந்த நாவல் எழுதும்போது எய்ட்ஸ் நோய் உலகம்  முழுவதும்  பரவி எல்லோரையும் அச்சப்பட வைத்திருக்கிறது.

          மோகினி : ஆமாம்.  சேகருக்கு எய்ட்ஸ் நோய் வந்து இறந்தான் என்று நாவலில் வருகிறது

          ஜெகன் : அசோகராஜனுக்கு ஏன் லதா அம்மாவிற்கு  எய்ட்ஸ் நோய் வரவில்லை என்று சந்தேகம் வருகிறது.  சேகருடன் அவளும் தொடர்பு வைத்துக்கொண்டிருந்தாள் என்றும் அவனுக்குத் தோன்றுகிறது. உண்மையில் அவள் அம்மா புற்று நோயால்தான் இறந்தாள்.

          அழகியசிங்கர் : கல்லூரியில் படிக்கும்போது கோபால் என்ற பையனுடன் தொடர்பு ஏற்படுகிறது. அவன் பிடியில் சிக்கித் தவிக்கிறாள். 

          மோகினி : இந்த நாவல் சமுதாயத்தில் சீரழிந்து  போனவர்களின் வாழ்க்கையைச் சுற்றிச் சுற்றி வருகிறது

          ஜெகன் : கோபாலுக்கும் அசோகராஜாவிற்கும்   சண்டை வருகிறது.  கோபால் சண்டை போடுகிறான்.  வயதான அசோக ராஜா ஏன் லதாவுடன் அடிக்கடி சுற்றுகிறான் என்பதுதான் வாதம்.

          மோகினி : அவள் விரும்பினால் கோபால் திருமணம் செய்து கொள்ளலாம்.  தனக்கும் அதுதான் விருப்பம் என்கிறான்  அசோகராஜா.

          அழகியசிங்கர் : அசோகராஜனின் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை.  அவன் அக்கா ராஜஸ்தானுக்கு ஒரு திருமணத்திற்குப் போகவேண்டுமென்று போகிறாள்.  அப்பாவைத் தனியாக விட்டுவிட்டு.  அசோகராஜாவை வீட்டிற்கு வந்திருந்து  பார்த்துக்கொள்ளச் சொல்கிறாள்.  அவன் மறுத்து விடுகிறான். அந்தத் தருணத்தில் அப்பா இறந்து விடுகிறார்.  இருத்தஙூயல் கொள்கைப் படி பாசம் என்று எதுவும் கிடையாது போலிருக்கிறது. 

          ஜெகன் : இந்த நாவலின் அடுத்த கட்டம். கோபால் பற்றியது.  ஏற்கனவே கோபால் திருமணமானவன்.  அவன் லதாவைத்  திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான்.  அவனைத் திருமணம் செய்து கொண்ட பெண் கோபாலை மிரட்டுகிறாள்.  அவனை அவளுடன் வந்து இருக்கச் சொல்கிறாள்.  அவன் முடியாது என்கிறான்.  தன் உடல் மீது தீ வைத்துக்கொள்கிறாள்.  உடனே கோபாலையும் கட்டிப்பிடிக்கிறாள்.  தீக்காயத்தால் அவள் இறந்து விடுகிறாள்.  அவன் தீக்காயங்களுடன்  மருத்துவமனையில் சேர்ந்து பிழைத்து விடுகிறான். கோபால் எப்போதுமே அசோகராஜாவை எரிச்சலுடன் பார்க்கிறான். தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்தபோதும் அப்படித்தான் பார்க்கிறான்.  

          மோகினி : தொடர்ந்து பல பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறாள்  லதா.

          அழகியசிங்கர் : இந்த நாவல் முழுவதும் லதா – அசோகராஜா  பற்றித்தான்.  அடிக்கடி லதா அசோகராஜாவைப் பார்க்க வருகிறாள். அவளுடைய துன்பத்தையெல்லாம் அவனிடம் சொல்கிறாள்.

          மோகினி : நிறைய உபகதைகள்.  இசை ஆசிரியர் செல்வம் வீட்டில் கருக்கலைப்பு செய்துவிட்டுத் தங்குகிறாள் லதா. அங்கு இசை ஆசிரியர் செல்வம் பற்றி செய்தி வருகிறது.

          ஜெகன் : முன்பே சொன்னதுபோல் இந்த நாவல் எய்ட்ஸ் பற்றிப் பேசுகிறது.

          அழகியசிங்கர் : ஆமாம். சிவலிங்கம் என்ற கதாபாத்திரம்.  பல பெண்களுடன் அவருக்குத் தொடர்பு உண்டு.  அவருக்கு  எய்ட்ஸ் நோய் வந்துவிட்டது.  அவர் மனைவிக்கு அது பரவியிருக்கும் என்று நம்புகிறார்.

          மோகினி : லதாவிற்கு அசோகராஜா மீது வெறியான காதல்.  அதுதான் அவளை கோபாலை நாடவிடாமல் தடுத்துவிட்டது.  கண்ணகி அவள் கணவனைக் கொன்றது.  அசோகராஜானின்  பால்ய கால நக்ஸலைட் நண்பன் அய்யாவு போன்றோரால்   என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப் படுகிறார்  முதலில் சிவலிங்கம் மனைவி இறந்து போகிறாள்.  பின் அந்த அதிர்ச்சியில் அவர் இறந்து விடுகிறார்.  அடுக்கடுக்காக மரணங்கள். எத்தனையோ நிகழ்ச்சிகள் இந்த நாவலில்.

          ஜெகன் :  இந்த நாவலைப் பற்றி கடைசியாக என்ன சொல்ல வருகிறீர்கள்? 

          அழகியசிங்கர் : இந்த நாவல் ஒரே மரண ஓலமாகஒலிக்கிறது . லதா அசோகராஜாவிடம் அளவற்ற அன்பு வைத்திருக்கிறாள்.  அவனும் அவளிடம்.  அந்த அன்பு கடைசிவரை வரம்பு மீறவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.  கோபாலுக்கு அசோகராஜாவின்  மீது ஒரே சந்தேகம். லதாவை கோபால் சீரழித்தும்  அவன் அவளை விட முடியாமல் இருக்கிறான்.  பலரிடம் அவன் தொடர்பு வைத்திருந்தாலும் அவன் லதாவை விட முடியவில்லை.  அவனால் அவளிடம் உள்ள தாபத்தைத் தணிக்க முடியவில்லை இதற்குக் காரணம் அசோகராஜாவும் அவளும் பழகிய விதம்.  

          இந்தக் கதையின் இறுதிப் பகுதியில் கோபாலைத் தள்ளிவிட அவன் இறந்துவிடுகிறான்.  இது தற்செயலாக நடந்த நிகழ்ச்சிதான்.  கோபால்தான் மூர்க்கமாக அவனைத் தாக்குகிறான். கோபாலைத் தடுத்துத் தள்ளிவிடுவதால் தடுமாறி தலையில் அடிப்பட்டு இறந்து விடுகிறான்.  இந்த இடத்தில் நாவல் ஆல்பெர் கம்யூவின் நாவலான அந்நியனை ஞாபகமூட்டுகிறது.  காரணமில்லாமல் ஏற்படுகிற கொலையில் அதில் வரும் கதாபாத்திரம் ஜெயிலுக்குப் போகிறது.  இங்கு போலீஸ் ஸ்டேஷன்  போகிறான் 

அசோகராஜா. 

          இறுதியில் வன்முறையில் முடிந்து விடுகிற இந்த நாவல், முதலிலிருந்து கடைசிவரை துயரத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.